2019ம் வருடம்.

முழுதும் கண்ணாடி கதவுகளால் அடைக்கப்பட்ட வாயில், இரண்டு படிகள் ஏறி, அந்த கண்ணாடி கதவுகளைத் தாண்டி உள்ளே சென்றால், நம் முகங்களை பிரதிபலித்து நம் கவனத்தை ஈர்க்கும் பளிங்குத் தரை. உருவம் காட்டும் பளிங்கு தரையில் முகத்தைத் தேடிவிட்டு நிமிர்ந்து நான்கு அடி வைத்ததும் வரும் இன்னும் ஒரு கண்ணாடி கதவுகளைத் தாண்டி உள்ளே சென்று இடது பக்கம் திரும்பினால், பத்தடி தூரத்தில், சின்னதாய் ஒரு புன்னகையுடன் நீல நிற முழுக்கை சட்டையுடன் வலது கையை மேசை மீது வைத்துக்கொண்டு நின்றபடி ஜெஸ்ஸியிடம் பேசிக்கொண்டிருந்தான் வீரா.

ஜெஸ்ஸியென்றதும் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில், திரிஷா நடித்த கதாப்பாத்திரம் உங்கள் நினைவிற்கு வந்து; அதே மாதிரியான அழகான ஒரு பெண்ணை நீங்கள் அங்கே எதிர்பார்ப்பார்த்தது போலவே தான், வீராவும் முதல் நாள் அந்த அலுவலகத்தில் அந்த பெயரை கேட்டதும் திரிஷா மாதிரி இல்லையென்றாலும் கூட ஒரு அங்கே பெண்ணை எதிர்பார்த்தான்.அந்த எதிர்பார்ப்பின் முடிவில் அவன் கண்டது ஒரு ஆணை. அவருடன் தான் பேசிக்கொண்டிருக்கின்றான் வீரா.

பேசிவிட்டு திரும்பியவன் அவனுக்கு வலது புறம் இருந்த மேசையின் அருகே இருந்த இருக்கையை இழுத்து அதில் உட்கார்ந்தான்.

“என்ன படிச்சோம்மோ அது சமந்தமா இல்லாம ஏதோ ஒரு வேலைக்குன்னு போய்ட்டா நம்முடைய அடையாளம் எது ன்னு ஒரு தடுமாற்றம் வந்திரும்” வேலை தேடிக்கொண்டு இருக்கும் காலங்களில் வீரா அவன் நண்பர்களிடம் சொல்வது.

கல்லூரியை விட்டு வெளியில் வந்த வீராவிற்கு கிடைத்த சில நல்ல விஷயங்களில் ஒன்று, அவன் உட்கார்ந்திருக்கும் அந்த இருக்கை; அவனுடைய அந்த மேசை.அது தான் வீராவின் அலுவலகம்.வீரா அங்கே ஒரு பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கின்றான்.

வீரா அந்த இடத்தை அடைந்து மூன்று வருடங்கள் ஆகிறது.அப்படியொரு இடத்தில் வீராவை காண வேண்டுமென்பதற்காகவே முழுதும் கண்களை மூடாத வீராவின் தந்தை வீராவை பிரிந்து நான்கு வருடங்கள் ஆகிறது ; ஷாராவின் திருமணம் முடிந்து அந்த ஐந்து வருடங்கள் ஆகிறது. கடைசியாக ஷாரா அவனிடம் பேசி ஏழு வருடம் எட்டு மாதம் ஆகியிருந்தது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு வீரா இயங்கிக்கொண்டிருப்பது அந்த அலுவலகத்தில் தான்.அந்த இருக்கையில் இருக்கும் வரை வீராவின் உலகத்தில் இருக்கும் எந்த சோகங்களும் அவனை நெருங்கவதில்லை.

உணவு இடைவெளி முடிந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்த சமயம்.மூத்த பொறியாளர் ஜெஸ்ஸி சொன்னதன்படி, அலுவல் சம்மந்தமாக வீரா ஒருவரிடம் பேச வேண்டியிருந்தது. அவனுக்கு இடது பக்கம் இருந்த வெள்ளை நிற தொலைபேசியை பார்த்தவன், “நம்பர்????” என்று யோசித்துவிட்டு, அவனுடைய மேசையில் அவனுக்கு வலது பக்கம் இருந்த அவனுடைய கைபேசியை கையில் எடுத்து அந்த கையை மேசையில் வைத்த படியே போனை தூரமாக பிடித்து பெரு விரல் கொண்டு திரையை ‘ஆன்’ செய்தான்.

அந்த தொடுதிரையில் வெளிச்சம் வந்த அந்த நொடியில்,வீரா சட்டென்று மொத்தமாக அவன் அமர்ந்திருந்த நாற்காலியை சுழற்றி வலது பக்கம் திரும்பினான். அவன் இரண்டு கைகளும் வேகமாக அந்த போனை பற்றிக்கொண்டது.அந்த கைகள் அந்த போனை அவனுக்கு இன்னும் பக்கமாக கொண்டு வந்தது. கொண்டுவந்த வேகத்தில், வேக வேகமாக அந்த தொடுதிரையை தொட்டு திறந்தான். அந்த போனில் வந்திருந்த அறிவிக்கைகளில் முதன்மையாக ஷாராவின் பெயர் இருந்தது. அது தான் அத்தனை வேகத்திற்கும் காரணம்.

அந்த பெயரை அவனுடைய போனில், அவன் பார்த்த அந்த நொடியில் மொத்தமாக அவன் மேல் மகிழ்ச்சியை மட்டும் யாரோ கொட்டி அவனை மூச்சு திணறச் செய்தது போல இருந்தது.அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு நொடி எதிர்ப்பாராத நொடியில் வந்ததும்; அவளுடைய பெயரை அவன் போனில் கண்டதும்; சட்டென்று முகத்தை இடது பக்கம் திருப்பி யாரும் கவனிக்கிறார்களாக என்று வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு; மூச்சை இழுத்துப்பிடித்து மேலே பார்த்து; கொஞ்சமாய் சிரித்து போனை மேசையில் போட்டு விட்டு; வலது கையை கண்களின் அருகே கொண்டு சென்று இடது கண் மட்டும் தெரியும் படி விரல்களுக்கு இடையில் இடைவெளிவிட்டு அந்த போனைப் பார்த்து , திணறிக்கொண்டு பெரு மூச்சு விட்டான். அவன் விட்ட அந்த மூச்சோடு திணறிக்கொண்டு வழிந்தது அவன் அடக்க நினைத்த புன்னைகைகள்.

எத்தனையோ வருடம் ஆகிவிட்டது. இருவரின் வாழ்க்கையிலும் எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டது. ஷாரா என்றதுமே வீரா கொள்ளும் இந்த மகிழ்ச்சி மட்டும் மாறவேயில்லை.

மீண்டும் இரு கைகளால் அந்த போனை எடுத்து, புன்னைகைகளை அந்த போனின் மீது கொட்டிக்கொண்டே,அவன் மனம், Thank god என்று அழுத்தமாகச் சொல்லி; you replied என்பதை மென்மையாக சொல்ல அவன் விரல்கள் “Thank God you replied” என்று தட்டிக்கொண்டிருந்தது. வார்த்தைகளுக்கு வழிவிடாத அந்த மகிழ்ச்சியில் அவன் மனம் வேறு என்ன தான் சொல்லும்.

அவன் அது வரையில் ஷாரா என்ன மெசேஜ் அனுப்பியிருந்தாள் என்பதை கூட பெரிதும் லட்சியம் செய்யவில்லை. அவள் மெசேஜ் அனுப்பிவிட்டாள் அது மட்டுமே தான் அவன் மனம் முழுதும்; அவன் வெளி முழுதும் நிறைந்து இருந்தது.
வீராவின் உலகத்தில் இப்போது சுவர்களும் கண்ணாடி கதவுகளும் இல்லை. அங்கே ஜெஸ்ஸி முதற்கொண்டு ஒருவரும் இல்லை.அங்கே வீரா மட்டுமே தான் இருந்தான். ஷாரா மீண்டும் பேசிவிட்டாள் என்கிற மகிழ்ச்சி மட்டுமே தான் அவனோடு இருந்தது.

“Thank God you replied” என்பதை தொடர்ந்து வீரா அனுப்பிய பதில்களை கண்டு ஷாரா வேகமாக பதிலனுப்பினாள். அப்போது தான், அவள் முதலில் அனுப்பிய மெசேஜை படித்தான் வீரா.
“hi daa! how are you? congratulations!!!” வெறும் வார்த்தைகள், இந்த வெற்று வார்த்தைகள் எப்போதும் யாரிடம் இருந்து வருகிறது என்பதில் வாழ்வின் அத்தனை சுவாரசியங்களும் அடங்கியிருக்கிறது.

“இந்த அப்பளிகேஷன் என்கிட்ட இல்லை. இப்ப தான் இன்ஸ்டால் பண்ணேன்.” முகதாட்சண்யத்திற்காக சொல்லப்படுகின்ற பொய்கள், பொய்களாகவே இருந்தாலும் அவை பேசாத மெய்களை பேசாமலேயே கடத்திவிடுவதுண்டு. இத்தனை நாளும் வீராவிற்கு அவள் பதில் அனுப்பாமல் இருந்ததற்கு அவள் தேடாமல் சொன்ன காரணம். இதற்கு முன்னரும் கூட,2012ம் வருடம் தொடங்கி ஒவ்வொரு வருடமும் வீரா அனுப்பும் பிறந்த நாள் வாழ்த்துச்செய்திக்கு 2015 வருடம் ” thanks டா இப்ப தான் பாத்தேன்” என்று பதில் அனுப்பியிருந்தாள் ஷாரா.

முகநூல் போன்ற எல்லா செயலிகளும், மெசேஜ் ஐ பார்த்துவிட்டால், அதற்கான குறிகளை காட்டிவிடும் என்பது இருவருக்கும் தெரியும். தெரிந்தும் கூட ஷாரா அப்படிச் சொன்னாள். வீரா இருக்கும் நிலையில், அன்று அவன் இருந்த நிலையில் உரிமையாக ஷாராவிடம் “அதெல்லாம் பாத்தும் தான் பதில் அனுப்பலை ” என்று கேட்க தோன்றினாலும் அவன் கேட்கவில்லை.”no issues ” என்று பதிலனுப்பி முடித்தான். 2011க்கும் 2019க்கும் இடையில் அவர்கள் இருவருக்கும் நடந்த மிக சிறிய அந்த உரையாடல் வார்த்தைகளால் பொய்களை சுமந்து உண்மைகளை இருவருக்கு இடையிலும் கடத்திக்கொண்டு இருந்தது.

முகதாட்சண்யத்திற்காக 2015 இல் அவள் அனுப்பிய பொய் போன்றது தான் “இந்த அப்பளிகேஷன் என்கிட்ட இல்லை. இப்ப தான் இன்ஸ்டால் பண்ணேன்.” என்பதை வீரா அறிந்திருந்தும் இப்போது அவன் எல்லைகளற்ற மகிழ்ச்சியில் இருந்தான். 2015இல் ஷாரா விடம் இருந்து வந்த மெசேஜ் இல்லாத ஒன்று இப்போது அவள் மெசேஜ் களில் இருப்பதாக உணர்ந்தான்.

 

இந்த முறை அவன் இருந்த எல்லையற்ற மகிழ்ச்சியில் அவன் எதையும் யோசிக்கவில்லை. “அதெல்லாம் எனக்கு தெரியாது. நிறைய தரம் நீங்க என் மெசேஜ் பாத்தும் எந்த பதிலும் அனுப்பாம தான் இருந்தீங்க” உரிமையாக கடிந்துகொண்டான் பொய்யான கோபத்துடன்.
“இன்னும் அந்த நம்பர் வச்சு இருக்கீங்களா? இல்லை புது நம்பர் மாத்திடீங்களா?” வீரா கேட்டான்.
ஷாரா அவளுடைய புதிய தொடர்பு எண்ணை வீராவிற்கு அனுப்பினாள்.
போனை கீழே வைத்தான். அவன் யாருக்கு பேச வேண்டுமென்று நினைத்தானோ அதை மறந்தே போனான். அதே அந்த கோப்புகளை எடுத்து திருப்பிய பக்கங்களை மீண்டும் திருப்பினான். அவன் இருப்பில் இருக்க கொள்ளாமல் எழுந்து ஒய்வறைக்கு சென்றான். அங்கே இருந்த நீளமான கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்திற்கு கூட அவன் புன்னகைப்பது தெரியக்கூடாதென்று கொஞ்சமாய் நாக்கை கடித்துக்கொண்டான். ஆனாலும் அவன் கண்கள் விரிய நிரம்பியிருந்த அந்த மகிழ்ச்சிய அவனால் அந்த கண்ணாடியிடம் இருந்தும் அவன் பிம்பத்திடமும் இருந்தும் மறைக்க முடியவில்லை.

இருக்கைக்கு வந்து அமர்ந்தவன், மீண்டும் அதே கோப்புகளை எடுத்தான். அதே பக்கங்களை புரட்டினான் அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. அத்தனை வருடங்கள் அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த கவிஞன் புத்துணர்ச்சி கொண்டு எழுந்தான்.

“நடந்த வழியே திரும்பி நடக்கிறேன்
கண்கள் திறந்தும் பார்க்க மறுக்கிறேன்
தரையில் நின்றும் காற்றில் பறக்கிறேன்
செய்த வேலையை திரும்பி செய்கிறேன்
நொடிகள் நகர்ந்தும் நகராமல்,
“இந்த நொடியில் இன்னும் சற்று இருந்து விட்டு வருகிறேன்” என்றேன்
பிரபஞ்சத்தில் அடுத்த நொடி நோக்கி நகரும் ஒவ்வொரு அணுக்களிடமும்”

ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தோடு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க ஷாரா மீண்டும் பேசிய அந்த நொடியில்; அந்த மகிழ்ச்சியில்; அப்படியே கொஞ்சம் நேரம் இருந்துவிட வேண்டும் போல இருந்தது வீராவிற்கு. அதையே தான்; ஷாரா எழுதிய அந்த தருணத்தையே தான் அவன் கவிதையாய் எழுதி வைத்தான்.

“நடந்த வழியே திரும்பி நடக்கிறேன்
கண்கள் திறந்தும் பார்க்க மறுக்கிறேன்
தரையில் நின்றும் காற்றில் பறக்கிறேன்
செய்த வேலையை திரும்பி செய்கிறேன்
நொடிகள் நகர்ந்தும் நகராமல்,
“இந்த நொடியில் இன்னும் சற்று இருந்து விட்டு வருகிறேன்” என்றேன்
பிரபஞ்சத்தில் அடுத்த நொடி நோக்கி நகரும் ஒவ்வொரு அணுக்களிடமும்”

படபடக்கும் அந்த மகிழ்ச்சியிலும், ஒரு விஷயத்தில் அவன் கவனமாக இருந்தான்.
“சாயந்திரம் பேசலாமா? ஒரு இந்தியா டைம் ஒரு அஞ்சு மணிக்கு?”அத்தனை வருடம் கழித்து அவளிடம் பேச போகும் அந்த போன் கால் ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிடக்கூடாது என்று தீர்மானமாக இருந்தான்.
இந்திய நேரப்படி மணி ஐந்து ஐ நெருங்கிக்கொண்டிருந்தது . வீரா அலுவலகத்தை விட்டு கிளம்பினான். தூங்கிக்கொண்டிருந்த தெருவிளக்குகள் எல்லாம் கண்விழித்துக்கொண்டிருந்தது.வீரா கொஞ்சம் தூரம் நடந்து அவன் போனை எடுத்துப்பார்த்தான் நேரம் எட்டு மணி ஆகியிருந்தது. இந்தியாவில் நேரம், மாலை ஐந்து ஆகியிருக்கும் “call பண்ணட்டா?” வீரா ஷாராவிற்கு மெசேஜ் அனுப்பினான். “சரி” என்று பதிலனுப்பினாள்.

அவன் நடந்து கொண்டிருந்த வேகத்திலேயே ஷாராவிற்கு அழைத்தான் “நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு” வேகமாக துண்டித்து விட்டு
“network கிடைக்கலை எங்க இருக்கீங்க?”

அவள் அழைத்தாள், அந்த அழைப்பை துண்டித்துவிட்டு அவன் அழைத்தான் டிரிர்! டிரிர்ர்ர்ர்!! டிரிர்! டிரிர்ர்ர்ர்!! இந்த மணி இன்னும் வேகமாக அடித்தால் என்ன? போனை எங்கே வைத்தால்? ஒவ்வொரு டிரிர்! டிரிர்ர்ர்ர்!!க்கும் வீராவின் மனதில் ஒவ்வொரு கேள்வி எழுந்தது.

“ஹலோ”
“ஹலோ” இருவரும் ஹலோ சொல்லிக்கொண்டதில் ஷாராவிற்கு என்ன கேட்டதோ! வீராவிற்கு அதே குரல் கேட்டது, “தூக்கம் களைத்தெழுந்த சிறுபிள்ளை போன்ற பேச்சு”

ஷாரா :”என்ன சார் பண்றீங்க?”
வீரா: என்ன மரியாதை எல்லாம்
ஷாரா: அப்பறம் பெரிய மனுஷனா ஆகிட்டீங்க! இப்ப எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க?
வீரா: “சும்மா இங்க ஒரு கம்பெனி சிவில் இன்ஜினீயரா வேலை பாத்துட்டு இருக்கேன்”
ஷாரா: ம்ம்
வீரா: குழந்தை இருக்கு ன்னு தெரியும். ஆனா, என்ன குழந்தை ன்னு தான் தெரியாது.
ஷாரா: பையன்!
வீரா:பேரு?
ஷாரா : விவேக்
வீரா: பொண்ணு பொறந்தா ஷாரான்னு பேரு வச்சிருப்பீங்கன்னு எல்லாம் நினைச்சேன்!
ஷாரா: ஏன்!சொன்னேன்னா அப்படி? மறந்துட்டேன்! அதான் பொண்ணு பொறக்கலையே. பையன் தான்.
ஷாராவிற்கு வீரா வைத்த பெயர் தான் ஷாரா. அது அவள் மனதில் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த வீராவிற்கு சின்ன ஏமாற்றம்.

வீரா: அப்படி சொல்லலை! ஆனா அந்த பேரை மறந்துடீங்க.

நடந்துகொண்டே ரயில் நிலையத்தை வந்தடைந்தான் வீரா.

ஷாரா : வீட்ல எல்லாம் என்ன பண்றாங்க ?
வீரா: எல்லாம் நல்லா இருக்காங்க ! அப்பா!… கொஞ்சம் வருஷம் முன்ன.. attack.
ஷாரா:இப்ப எல்லாம் நிறைய பேருக்கு..

சின்னதான ஒரு மௌனத்திற்கு பின் , ஷாரா கேட்டாள், “அப்பறம்?”

“கல்யாணத்துக்கு கூட சொல்லலை” ஷாரா மீண்டும் பேசினால் அவன் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கேள்விகளில் இந்த கேள்வி முந்திக்கொண்டு வீராவின் மனதில் இருந்து வந்தது.

“போன் தொலைஞ்சு போச்சு அதோட நம்பர் எல்லாம் போச்சு” என்று ஷாரா சொல்லிமுடிப்பதற்குள், அழுத்தமாக “nine nine eight four five three eight nine nine five “வீரா சொன்னான்.

“உங்க பழைய நம்பர் இன்னும ஞாபகம் இருக்கு.” புருவங்கள் உயர கண்களை விரித்து அழுத்தமாக சொன்னான் வீரா .
“உங்க காலேஜ் friends எல்லாம் வந்து இருந்தாங்க?” இதையெல்லாம் கேட்பதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றாலும் இதையெல்லாம் கேட்டுவிட வேண்டுமென்றும் பேசிவிட வேண்டுமென்று தான் வீரா காத்துக்கொண்டிருந்தான்.

“அவங்க contact எல்லாம் யார் மூலமாவது கிடைச்சருக்கும். சரி விடுங்க சார் . அப்பறம்! லவ் மேரேஜ் எல்லாம் பண்ணறீங்க?” ஷாரா இதைகேட்டதும் கொஞ்சம் வெட்கம் கொண்டு சிரித்துக்கொண்டே வீரா கேட்டான், “ஏன்? நீங்களும் லவ் மேரேஜ் ஆ இல்ல யாரையும் லவ் பண்ணீங்களா?”

ஷாரா காதலித்து திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிந்தும் வீரா இந்த கேள்வியை கேட்டான்.அந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொன்னாலும், சொல்லாத பதிலில் இருக்கும் இரண்டு உண்மைகளில் ஒன்றேனும் தெரியும் என்றே தான் அவன் அதை கேட்டான்.

“எங்க வீட்ல அதெல்லாம் முடியாது” என்று ஷாரா சொன்னதில் ஒரு சலிப்பு இருந்தது.அந்த பதில் வீராவிற்கு அவன் எழுதிய கவிதை ஒன்றை நினைவுபடுத்தியது.

கண்ணாடி மாளிகை

அங்கே என்ன இருக்கிறது!
புலன்களுக்கு புலப்படாத அந்த இடத்தில்.
‘அங்கே என்ன இருக்கிறது?’
கேள்விகளால் தெரிந்து கொள்ள முற்பட்டேன்.
என் கேள்விகளுக்கான விடைகளாய் வந்த கேள்விகள் சொன்னது,
“கருவிலேயே அழிக்கப்பட்ட வார்த்தைகளின் கல்லறைகள் இருப்பதாய்”.

அந்த இடம் எப்படி இருக்கும்?
என்னை ரசிகனாக்கிக் கொண்ட அந்த இடம்!
கருச்சிதைவு;
சிசு கொலை;
இவற்றில் இருந்து தப்பித்து வந்த வார்த்தைகள் சொன்னது,
“உள்ளே இருப்பதை வெளியே காட்டிக் கொள்ளாத கண்ணாடி மாளிகை போன்றது”.

சரி தான்!
கண்ணாடி மாளிகையில் இருந்து கை தட்டும் சத்தமோ
மகிழ்ச்சியில் கூச்சலிடும் சத்தமோ வெளியே கேட்பதில்லை தான்.

அங்கே
வார்த்தைகளின் கல்லறை மட்டும் தான் இருக்கிறதா?
பார்வையால் உணர முடியாத அழகை காண்பித்த அந்த இடத்தில்.

அந்த இடத்தின் பிரதிபலிப்பாய் இருந்த பார்வை உணர்த்தியது,
“அங்கே ஆசைகளின் கல்லறைகளும் அதன் நடுவே முதல் காதலின் கல்லறையும் கூட இருக்க கூடும்” என்று

அந்த முதல் காதலின் கல்லறையில்
என் பெயர் பொரிக்கப்பட்டிருக்குமா?
அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையில்
அந்த இடத்தை அடைய நினைத்தேன்.

என்னை அழைக்காத ஒரு அழைப்பிதழ் சொன்னது,
அங்கிருந்த அந்த ஒரு கல்லறை ஓர் சுபமூஹுர்த்த நாளில் இடிக்கப்பட்டு விட்டதென்று

ஷாராவின் திருமண அழைப்பிதழ் கண்ட நாளில் வீரா எழுதிய கவிதை. யாரிடமும் சொல்லாத ஒரு, ‘ஒரு தலை காதல்’ அவளுக்குள்ளும் இருந்திருக்குமோ? என்று வீரா நினைத்துக்கொண்டிருந்தது சரியாகவும் கூட இருக்கலாம். ஷாரா மட்டும் இல்லை  ஷாரா போன்ற எல்லா பெண்களுக்குள்ளும் யாருக்குமே சொல்லாத ஒரு காதல் இருந்திருக்கக்கூடும்அல்லது அப்படி ஒரு காதல் இருந்திருக்கலாம் என்கிற எண்ணமேனும் இருந்து கொண்டிருக்கும்.ஷாரா போன்ற பெண்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை தானே! அவர்களின் மனம் எதையும் வெளிகாட்டிகொள்ளாத கண்ணாடி மாளிகையாக தானே இருக்கிறது.

அப்படி ஒரு காதல் ஷாராவிற்குள் இருந்திருந்தால், அது யாருக்குமே தெரியாமல் இருந்தாலும் வீராவிற்கு தெரிய வேண்டும் என்கிற எண்ணம் வீராவிற்குள் எப்போதும் இருந்தது. ஆனால், அவன் அதைப் பற்றியெல்லாம் பேசவில்லை.

“நான் எங்க லவ் மேரேஜ் பண்றேன்! எனக்கு ஒரு பொண்ணு பிடிச்சுருந்துச்சு அது அந்த பொண்ணுக்கு தெரியவேயில்லாம போயிடுச்சு! என்னை ஒரு பொண்ணு லவ் பண்ணி அந்த பொண்ணு இப்ப என்ன கல்யாணம் பண்ண போகுது” இந்த வார்த்தைகளை மட்டும் வீரா பேசிய பொழுது அவன் பேசாத வார்த்தைகளும் ஷாராவிற்கு புரிந்திருக்கும் என்று நினைத்தான்.

அவன் அத்தனை நாள்; அத்தனை வருடம் உள்ளுக்குள் வைத்துக்கொண்டிருந்தது, இப்போதும் உள்ளுக்குள்ளேயே இருந்தது.ஆனால், வீராவின் கண்ணாடி மாளிகையின் திரைசீலைகளை அந்த வார்த்தைகள் விலக்கியது. வீரா ஆண் என்றாலும் கூட அவனுடைய மனமும் கண்ணாடி மாளிகை தான். அதில் இருந்த காதலும் அந்த காதல் தந்த மகிழ்ச்சி கூச்சலும் வெளியில் கேட்டதில்லை தான்.

அப்படியொரு மாளிகைக்குள் ஷாரா இருந்த இடத்தை; ஷாரா இன்னும் இருக்கும் இடத்தை ஷாராவிற்கு காண்பிக்க வேண்டும் என்பது தான் , இப்போதும் வீராவின் எண்ணமாக இருக்கிறது.

வீராவின் திருமணத்திற்கு ஷாரா வர வேண்டும் என்கிற எண்ணம் வீராவிற்கு தீவிரமாக இருந்தது.திருமணத்திற்கு ஷாராவை அழைத்து அவள் பதிலுக்கு காத்துக்கொண்டிருந்த வீராவிற்கு ஷாரா,”Hi டா congratulations” என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

“நீங்க வரேன் சொல்லுங்க மூணு பேருக்கும் flight டிக்கெட் போடுறேன்” எப்படியாச்சும் வாங்க என்கிற வீராவின் கெஞ்சல் தான் அந்த வார்த்தைகள்.
“டிக்கெட் எல்லாம் போட்டுறாத!பாக்குறேன்”என்று முடித்தாள் ஷாரா.

அவள் எப்படியும் திருமணத்திற்கு வரவப்போவதில்லை என்பதையே அந்த பதில் வீராவிற்கு உணர்த்தியது.

ஷாராவை மீண்டும் பார்க்க வீராவிற்கு இருந்த ஒரேயொரு காரணம் அவனுடைய திருமணம்.  திருமணத்திற்கு ஷாராவை எப்படியும் அழைத்துவிட வேண்டுமென்கிற வீராவின் தீவிரத்திற்கும் அதுவே தான் காரணம்.

வீராவிற்கு திருமணம் நடக்க போகிறது.ஷாராவிற்கு திருமணம் நடந்து அவள் தாயாகவும் ஆகிவிட்டாள். இதற்கு பின்னர், வீரா என்ன பேச போகிறான். அவளிடம் அவன் என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது? அவன் ஏன் ஷாராவிடம் எல்லாம் சொல்ல நினைக்கிறான்.ஷாரா அந்த திருமணத்திற்குச் சென்றாளா?

keep reading…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *