“நிலவு ஒன்று நடந்தது சுவடுகள் மனதிலே!… குயில்களும் மலர்களும் அதியசம் கனவுகள் கவிதைகள் ரகசியம்!” அந்த சாலை முழுதும் மழையில் நனைந்திருந்தது. கடலும் காற்றும் மழையில் நனைந்திருந்தது. அவன் சைக்கிளும் கூட மழையில் நனைத்திருந்தது. அந்த மழை நனைத்த சாலையில் வீரா மெதுவாக  சைக்கிளை மிதித்து மிதந்துகொண்டிருந்த போது, இந்த வரிகளை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

 

“குயில்களும் மலர்களும் அதியசம் கனவுகள் கவிதைகள் ரகசியம்!

நிலவு ஒன்று நடந்தது சுவடுகள் மனதிலே!.”

 

கனவுகள் கவிதைகள் ரகசியம் தான். இதை ஆழமாக வீரா புரிந்துகொண்டிருந்தான். அவன் எழுதும் கவிதைகளில் உள்ள ரகசியங்களை அவன் சொல்லாமல் அந்த கவிதைகள் யாருக்கும் சொல்ல போவதில்லை.ஒருவேளை ஷாராவுக்கு மட்டும் ரகசியங்கள் புலப்பட்டு இருக்கலாம். அந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே அவன் சைக்கிள் மிதித்துக்கொண்டிருந்த தருணத்தையும் கூட கவிதை செய்து வைத்தான். காரணம், அவனுக்கு எல்லாவற்றையும் ஷாராவிடம் சொல்லிவிட வேண்டும். அதற்கு அவனுக்கு தெரிந்த வழி கவிதைகள். கவிதைகளை எல்லோர்க்கும் சொன்னாலும், கவிதைகள் எல்லோர்க்கும் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதில்லை.

 

 

சிரித்துக்கொண்டே நனைந்தேன்

சிறுகச் சிந்தி

சிணுங்கச் செய்யும்

மேகம் மீறிய

துளிகள் அதிலே

 

முனகிக் கொண்டே வந்தேன்

மூளை மடிப்பில்

நினைவின் அடியில்

நின்று தூங்கிய

பாடல் வரிகளை

 

நிறைந்து நின்று மறந்தேன்

என்னை சூழ்ந்து

எண்ணம் நிறைத்து

ஓடச் செய்யும்

உலகம் அதனை

 

என்னவென்று பார்த்தேன்

உன்னையும் தாண்டி

உதிரா வார்த்தைகள்

சிந்திய நொடியே

சிரித்து நின்றது அங்கே

 

 

மேகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் துளிகள் மேகத்தை மீறி ஊசி போன்ற பனிக்கட்டி போல  நம் மேலே விழுந்து தெறித்தால்  எப்படி இருக்கும்! அப்படியே தான் வீராவிற்கு ஷாரா அளந்து அளவாக பேசும் வார்த்தைகளும். எத்தனையோ வருடங்கள் நினைவில் தூங்கிக்கொண்டிருக்கும் பாடல்களை சில தருணங்கள் சட்டென்று எழுப்பிவிடுவதுண்டு.அப்படித்தான் வீராவின் நினைவில் தூங்கிக்கொண்டிருந்த அந்த பாடல் எழுப்பட்டு  இருந்தது.

 

குழந்தைகள் பற்றி வீரா எழுதிய கவிதை தொகுப்பை அவளுக்கு அனுப்பி வைத்திருந்தான்.அதை தொட்டு அன்று அவர்களுடைய பேச்சு ஆரம்பித்தது.

 

வீரா: படிச்சீங்களா?

ஷாரா: எல்லா படமும் நல்லா இருந்தது.

வீரா: படம் மட்டும் தானா?

ஷாரா: நீ எழுதி இருந்ததும் நல்லா தான் இருந்தது.

வீரா:  ‘ஊமை வார்த்தைகள்’ படிச்சீங்களா?

ஷாரா : இல்லை

வீரா :நேத்து மெசேஜ் பண்ணதுக்கு ரொம்ப நன்றி! வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?

 

ஷாராவிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை.

வீரா: தப்பா எதுவும் கேட்டேன்னா? உங்கள்ட்ட பேசும் போது ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு. நல்லா இருக்காங்களா ன்னு கேட்டு இருக்கனுமா? எப்படி கேட்பாங்க இப்படி எல்லாம் கூட யோசிக்கிறேன். பேசுறது எதுவும் தப்பா ஆகிடக்கூடாது ன்னு.

ஷாரா : ஹா!ஹா! மூக்கு பெருசா இருந்தா இப்படியெல்லாம் ரொம்ப யோசிக்க தோணும். நன்றியெல்லாம் எதுக்கு?

வீரா: சொல்லிக்க வேண்டியது தான் எல்லாரும் எல்லாத்துக்கும். மறுபடி பேசாம இருந்திருவீங்களோன்னு பயம் தான்

ஷாரா: பேசாம எல்லாம் இருக்க மாட்டேன்

வீரா: உங்களுக்கு ஒன்னு அனுப்பட்டா?

ஷாரா: ம்ம்..என்ன?

வீரா: Hidden Picture

ஷாரா: ஹா!ஹா!

 

‘Hidden Picture’ என்று சொல்லி ஷாராவும் இருக்கும் புகைப்படம் ஒன்றை அனுப்பிவைத்தான். அந்த புகைப்படத்தில்  ஒரு மூலையில், கொஞ்சத்திலும் கொஞ்சமாக தெளிவில்லாமல் தெரியும் ஷாராவை சுட்டியே அவன் hidden picture என்று சொல்லி அனுப்பிவைத்தான். ஷாராவைத் தேடிக்கொண்டிருந்த பொழுது அவன் கண்ணில் பட்ட புகைப்படங்கள் அது.தெளிவாக பதிந்த நூறு முகங்கள் அல்லாமல் தெளிவில்லாமல் தூரமாய் இருந்த அந்த முகம் அவனுக்கு தெரிந்து இருந்தது.

அந்த உரையாடலில் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த அந்த பெரிய இடைவெளி, அந்த இடைவெளியோடு மீண்டும் தொடரும் அவர்களின் நட்பு. அது வீராவை ஏதோ செய்தது. அவளிடம் பேச எப்போதும் வீராவிடம் இருக்கும் தயக்கம்; அவளிடம் பேச அவளிடமே அனுமதி கேட்பது இதெல்லாம் வீராவிற்கு பிடித்தே இருந்தது. அவள் மீண்டும் பேசினால், அவளிடம் பேச வேண்டுமென்று அவன் நினைத்திருந்ததில் கொஞ்சம் பேசியும் விட்ட காரணத்தினால், வீரா உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருந்தான்..

“This distance is what I Love a lot” என்று பெரும் புன்னகையோடு முனகிக்கொண்டு அவன் அலுவலக கதவை திறந்து உள்ளே சென்றான். வீரா வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த தீவு முழுதும் பெரும் மழை. எல்லா வேலைகளும் நிறுத்தப்பட்டு எல்லோரும் ஓய்விடத்திற்கும் அலுவலகத்திற்கும் திரும்பியிருந்தார்கள் அப்போது நடந்த உரையாடல் தான் அது. வேகமாக facebook ஐ திறந்தான், அவனுடைய அந்த நிலையை அவளும் பார்க்கும் படியாய் அப்போதே எழுதிவிட வேண்டும்.

 

“The Moon She is

The Earth I am

This  distance is what

I love a lot.”

 

இப்படி அவள் தந்த மகிழ்ச்சி தருணங்களை கவிதைகளாக்கி கொண்டிருந்தான் என்பதை அவனும் அவன் கவிதைகள் மட்டுமே தானே அறியும். கவிதைகள் ரகசியமானது தானே!

மழை நின்றதும், பணிகள் தொடங்கிவிட்டதா என்பதைப் பார்க்க கிளம்பியவன் தான்,ஷாராவின் நினைவுகளால் கிளறப்பட்ட பாடல் வரிகளை பாடிய படி சீரான சாலையில் சீரில்லாமல் சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்தான்.

“நிலவு ஒன்று நடந்தது சுவடுகள் மனதிலே!”

அவனுக்கு அவள் நிலா தான். எப்போதும், அவர்கள் இருவருக்கும் இடையில் அத்தனை பெரிய தூரம் இருக்கவே தான் செய்தது. வீராவிற்கு இது இப்படியே தொடர்ந்தாலும் போதும். ஆனால், அப்படியே தொடருமா? என்கிற சந்தேகமும் பயமும் அவனுள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.

 

அடுத்த வாரம் அவளுக்கு பிறந்த நாள். அவளை போனில் அழைத்த வாழ்த்த வேண்டும். அதற்கும் அவளிடம் அனுமதி கேட்க வேண்டும்.  வீரா திருமணத்திற்கும் அவள் வரவும் இல்லை. தொலைபேசியில் அழைத்து வாழ்த்தவும் இல்லை. அவர்கள் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்ததா? அல்லது அவர்கள் தொலைபேசியிலாவது பேசிக்கொண்டார்களா?

 

தொடர்ந்து படியுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *