வீரா அவளுடைய பெயரை விரும்பவில்லையா என்ன?

 

ஒரு பெயர்; ஒரே ஒரு பெயர் – அந்த பெயரை யாரும் சொல்ல கேட்டாலோ; எங்கேனும் எழுதப்பட்டு இருப்பதை கண்டாலோ எல்லையில்லாத பரவசத்தை ஒருவரால்  அடைய முடியுமென்றால்; வீராவின் விஷயத்தில் அது அவளுடைய பெயராகத் தான் இருக்க முடியும்.

தினமும் அவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருக்கும் அவள் பெயர் கொண்ட அந்தப் புத்தகக்கடையை தவறாமல் பார்த்துவிடுவதில் அத்தனை சந்தோசம் அவனுக்கு. அன்றும் அதே சந்தோசத்துடன் அவன் பள்ளிக்குச் செல்ல, அங்கே அன்றைய தமிழ் வகுப்பில் கவிதைப்பற்றி பாடம்.தமிழ் தெரிந்த மாணவர்களுக்கு தமிழில் உரைநடை பகுதியை விளக்கிச் சொல்ல என்ன இருக்கின்றது!மாணவர்களை சுற்றி நடந்துகொண்டே சினிமாப்பாடல்களைப் பற்றி பேச தொடங்கினார்,ராஜேந்திரன்.

ராஜேந்திரனுக்கும் வீராவிற்கும் இடையிலும் கூட ஒரு காதல் இருந்தது.ராஜேந்திரன் வீராவுடைய தமிழ் ஆசிரியர். சினிமா பாடல்களைப்பற்றி பேசிக்கொண்டே அவர் கவிதைகளைப்பற்றி பேச ஆரம்பித்தார்.

 

“தமிழ் இலக்கணத்தில் வரிப்பாடல் என்று ஒரு வரையறை இருக்கு. சினிமா பாடலை நம்ம அதற்குள் அடக்கலாம்; சினிமாவில் இருக்கும் ராஜேந்திரரை நாம கிண்டல் பண்றோம்;

தமிழில் இல் பொருள் உவமையணின்னு ஒரு அணி இருக்கு. ஒரு பாடல் முழுதும் இல் பொருள் உவமையணியை பயன்படுத்திப் பாடல் எழுதியவர் T.R. தான்

 

இது குழந்தை பாடும் தாலாட்டு – குழந்தை எப்படி தாலாட்டு பாடும்!

இரவு நேர பூபாளம் – பூபாளம் காலையில் பாடப்படும் ராகத்திற்கு பெயர்.”

இப்படியே  பேசிக்கொண்டு இருந்தவர்.

“தமிழில் செய்யுள் வடிவ பாடல்களை முதலில் எளிமைப்படுத்தியவர் யார்?” என்று ஒரு கேள்வியை வைத்தார்.

“பாரதியார்”அந்த கேள்வியை அவர் கேட்டவுடன் வீரா மனதுக்குள் ஒலித்த பெயர்.

ஆனால், கம்பர் என்கிறார் ராஜேந்திரன். ஒரு மாணவன் தெரிந்து கொண்டு இருக்காத விஷயங்களை தெரிந்து வைத்து இருந்து, அவனுள் இருக்கும் கேள்விகளுக்கு அவன் வியப்படையும் வண்ணம் பதில்களை தரும் ஆசிரியர்களையே மலைத்து கவனிக்கிறான்.

“எப்படி கம்பர்!  பாரதியார் செய்யுள் படித்தாலே புரிந்துவிடும்”என்று மலைப்போடு வீரா அவரை கவனித்தான்.

 

“கவிதை எழுதறது பெரிய விஷயமில்லை, ‘இப்ப நான் நடந்து வந்தேன்’ இதை  ‘வந்தேன் நான் நடந்து’ இப்படி எழுதினா கவிதை! இவ்வளவு தான் கவிதை ” என்றவர் . இத்தனை எளிமையாக செய்யுள்களை அமைத்தவர் கம்பர் தான் என்றுச் சொல்லி தொடர்ந்தார்,

“கண்டனன் கற்பினுக்கினியை கண்களால்” சீதையை கண்ணால பார்த்தேன் அவளுக்கு ஒன்னும் இல்லை அவள் கற்புக்கு பாதிப்பு இல்லை என்பதை ராமனிடம் சொல்லுனும்.  அதான் ‘கண்டனன் கற்பினுக்கினியை கண்களால்’ இவ்வளவு தான் கவிதை. கம்பர் இத்தனை எளிமையாகத் தான் கவிதை செய்தார் ” என்றார்.

 

அந்த வகுப்புக்கு பின் “நாமளும் கவிதை எழுதறோம்” என்கிற எண்ணம் வீராவை பற்றிக்கொண்டது.

தற்கால கவிஞர்கள் எழுதும்  அநேகமான கவிதைகளுக்கு  இரண்டு வேலை தான் இருக்கின்றது. ஒன்று சமூகத்துக்கு புத்தி சொல்வது மற்றொன்று காதலிப்பது.இது இரண்டையும் விட்டால் அம்மா!மரம்!செடி!கொடி !

 

வீரா,நல்ல சோறு கிடைக்காத பொழுது அம்மாவையும் மற்ற நேரங்களில் சமூக சிந்தனைகளையும் கவிதைகள் என்று எழுதிக்கொண்டு இருந்தபொழுது அவளுக்காக ஒரு கவிதை கூட எழுதவில்லையே என்று நினைக்க தொடங்கினான்.

 

நாம் நிச்சயமாக அவளை காதலிக்கிறோமோ என்கிற சந்தேகம் கூட அவனுக்கு எழுந்தது. காதலிப்பவர்கள் எல்லாம் காதல் கவிதைகள் எழுதுகிறார்களே! நமக்கு ஒன்றும் தோன்றுவதில்லையே என்று நினைத்துக்கொண்டு இருந்த வீரா.

 

காதல் கவிதை எழுதியே தீர வேண்டும் என்று பலவந்தமாக ஒரு கவிதை எழுதுகிறான்.

“மலரே!ஏன் சிரித்து இருக்கின்றாய்

அவள் உன்னை சூடிக்கொள்ள போகிறாள் என்றா ?

மலரே ஏன் வாடியிருக்கின்றாய்

அவள் உன்னை சூடிக்கொள்ளவில்லை என்றா “

காதல் கவிதை எழுத முற்பட்டதில் அவன் ஆழ்மனதில் இருந்த வைரமுத்துவின் வரிகள் மறுஉருவாக்கம் பெற்று நகைச்சுவை கவிதையானது.

 

அவளை வர்ணித்து எழுதலாமா என்றெல்லாம் யோசிக்கின்றான். சிறுபிள்ளைத்தனமான காதலில் வெளித்தோற்றங்களை வர்ணித்து கவிதை எழுதுவது என்பது நடக்காத காரியம்.அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளை அவன் பார்த்ததேயில்லை என்கிற பொழுது எப்படி வர்ணிப்பான்? பலவந்தமாக அடுத்த கவிதையை எழுதுகிறான்.

“எதிரில் அவள்

அவள் விழிகளில் நான்

நான் மெச்சிக்கொண்டேன் என் அழகை”

‘அவளைப் பார்க்கும் கண்ணாடி என்ன நினைக்கும்?’ என்கிற கற்பனை.இந்த கற்பனை இந்த மூன்று வரிகளை தாண்டவில்லை. நிச்சயமாக வீராவின் உணர்வை பிரதிபலிக்கும் கவிதை இது இல்லை. அதனால், வீராவும் கூட இது அவளுக்காக எழுதியது போல் இல்லை என்று நினைக்கிறான்.

அவனால் அவன் உணர்வை வெளிப்படுத்தும் படியோ அவளுக்காகவோ ஒரு கவிதை கூட எழுத முடியவில்லை.

ஒருநாள் தொலைக்காட்சியில், அப்துல் கலாமும் நடிகர் விவேக்கும் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு நேர்காணலை எதேச்சையாக பார்த்த அவன், அந்த நேர்காணலை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினான்.

 

அதில் நடிகர் விவேக், கலாமிடம் அவர் எழுதிய நகைச்சுவையான ஒரு கவிதையை சொன்னார்,

“ஏ! பொண்ணே

நான் வாங்கி கொடுத்ததெல்லாம் திண்ணே

என்ன ஏன் வேணாம் ன்னு சொன்னே”

இப்படியெல்லாம் கூட கவிதை எழுதலாமா என்று வீராவின் கண்கள் விரிந்தது.

இப்படியாக கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று வீராவிற்கு கற்றுக்கொடுத்ததில், தமிழ் ஐயா ராஜேந்திரன், வைரமுத்து இவர்களைத் தாண்டி நடிகர் விவேக்கிற்கும்  பங்கு இருந்தது.

ஆனாலும், அன்று அவன்  உடனே எந்த காதல் கவிதைகளும் எழுதிவிடவில்லை.

 

வருடம் 2007, சேராமல் இருந்த இரண்டு பேர் முதல் முறையாக பிரிந்தது அந்த வருடத்தில் தான். ஒரே வழியில்; ஒரு இடைவெளி விட்டு பயணித்துக் கொண்டு இருந்த அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து வைத்து இருந்தார்கள். ஆனால், ஒருவரையொருவர் தெரிந்துவைத்து இருக்கவில்லை. They know each other but they don’t know each other. அந்த 8வருடங்களில் அவர்களின் நட்பு அந்த அளவிலேயே தான் இருந்தது. அந்த அளவில் இருந்தபடியே அவர்கள் பிரிந்தது அந்த வருடத்தில் தான்.

 

சேராத பழகாத  இரண்டு பேர் பிரிந்தார்கள் என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

 

அவர்கள் இருவரும் பெரிதும் பேசிக்கொண்டதில்லை என்றாலும். அவர்கள் மனம் பேசிக்கொள்ளாமல் இருந்ததில்லை என்று வீரா நம்பினான்.   ஷாரா மீது தான் கொண்டிருந்த நேசத்தை வீரா உணர்ந்த  2004ம் வருடத்தில் இருந்து வீரா இப்படியொரு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டான்.

 

உண்மை தான்! நாம் பேசத் தொடங்கும் முன்னர் நம்முடைய மனங்கள் பேசிக்கொள்ளும் தான்.

 

அவன் நம்பிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக, வீரா நினைக்கும் போதெல்லாம் அவளாக அவனிடம் வந்து பேசுவாள். அவர்கள் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களிலும் கூட வீரா நினைத்தால் அவள் அவன் முன் தோன்றுவாள்.

 

2004 வருடம் டிசம்பர் மாதம் முதல் வாரம், ஓரிரு நாட்களாக அவளை காண முடியவில்லை. “என்ன ஆச்சு? என்ன காரணம்?” வீராவால் யாரிடமும் கேட்க முடியாது. வீராவிற்கு அவளைக்  காண வேண்டும்.

 

அதே வருடம் அதே மாதம் 11ம் தேதி, அன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை வேறு. சூரியன் உச்சியில் இருந்து இறங்கி கொண்ட இருந்த பிற்பகல் வேளை. இரவு கண்விழித்து கொண்டிருந்தவர்களும் கூட அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.இரவிலும் இல்லாத அமைதியை தாங்கிக்கொண்டு இருந்த அந்த பிற்பகல் வேளையில், ஓரிரு வீடுகளில் இருந்து கூர்ந்து கவனித்தால் மட்டுமே கேட்க கூடிய அளவில் ரவிசாஸ்திரியின் கணீர் குரல் தூக்கங்கங்களை கலைக்காத வண்ணம் மெல்லிதாக ஒலித்துக்கொண்டு இருந்தது.

 

முதல் முறையாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் வர்ணனை தான் அது. தூங்குவதற்கு ஏதுவாக எல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருந்தது போலவே வீராவின் வீட்டு கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருந்தது.

 

வீராவும் அவன் பெரியாப்பாவும் இருந்த அந்த பெரிய  அறையில் படர்ந்திருந்த முக்கால் வெளிச்சத்தில் கால்வாசி வெளிச்சம் தொலைக்காட்சி  பெட்டியில் இருந்து வந்து கொண்டு இருந்தது. அவர்கள் கிரிக்கெட் பார்த்துக்  கொண்டிருந்தார்கள்

 

இப்படியொரு ஒரு நேரத்தில் யார் ஒருவரும் உங்கள் வீட்டுக் கதவுகளை தட்ட வாய்ப்பில்லை. அப்படி நடந்தால் யார் உங்கள் கதவுகளை தட்டுகிறார்கள் என்று நிச்சயம் உங்களால் யூகிக்க முடியாது.

 

“டிங்… ..டாங்ங்…” வீராவின் வலது பக்க காதில் ஓங்கி அடித்தது போல் இந்த சத்தம் ஒலிக்க, வீராவும் அவன் பெரியப்பாவும் ஒரே நேரத்தில் கதவைப் பார்த்தார்கள்.

 

வீரா எழுந்து வேகமாக நடந்து,”யாராக இருக்கும் என்கிற கேள்வியோடு” தாழ்ப்பாளை திறந்து கதவை திறக்க, கதவை முட்டிக்கொண்டிருந்த சூரிய வெளிச்சம் அவனை மோதுவதற்குள்,அவள் மோதாமல் அவன் ஆச்சரியத்தில்  கீழே விழுந்தான்.

 

வாசலுக்கு வெளியில் அத்தனை வெளிச்சம், அந்த வெளிச்சத்தை ஆக்கிரமித்தபடி,அவளே தான் அதே அந்த மெரூன் கலர் சுடிதாரில் வந்து நின்றுகொண்டு இருந்தாள்.கோவிலில் அவனுக்கு அவள் சந்தனமிட்ட போதும் இதே இந்த மெரூன் சுடிதாரில் தான் அவள் இருந்தாள்.அவள், வாசலை விட்டு இரண்டடி தள்ளி நின்று கொண்டிருந்தாள் . அத்தனை தூரம் தள்ளியிருந்தும் கூட அவனை தொடாமல் அவள் அவனை கீழே தள்ளியிருந்தாள்.

 

இரண்டு நாட்களாக அவளை காணாமல், அவனே எதிர்பார்க்காத அந்த சந்தர்ப்பத்தில் அவளை கண்ட அவனின் வாய், கண், செவி மூக்கு எதுவும் சில நொடிகள் வரை எந்த வேலையும் செய்யவில்லை.

 

“அவங்க இல்ல?” அவள் இதை கேட்டதும்.

 

கொஞ்சம் சிரித்தபடி கொஞ்சமாய் பெருமூச்சு விட்டு அவன் ஐம்புலன்கள் மீண்டும் அதன் பணிகளை தொடங்க, “இருக்காங்க தூங்குறாங்க போல?” என்றான்.

 

அவன் இருந்த அந்த வீடுகளின் வரிசையில் வேறு யாரையோ தேடி அவள் வந்திருந்தாள்.வீராவின் வீட்டில் யாரும் தூங்கவில்லை என்பதை வீராவின் வீட்டு வாசல் வரை ஒலித்துக்கொண்டு இருந்த ரவிசாஸ்திரியின் குரல் அவளுக்கு சொல்லியிருக்கலாம்.அவள் தேடிவந்த அந்த யாரோ ஒருவரின் வீட்டில் எந்த சத்தமும் இல்லை.அந்த வீட்டின் காலிங் பெல்லும் வேலை செய்யாது.

 

இப்படி வீரா அவளைப் பார்க்கவேண்டுமென்று நினைக்கும் போதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லாத சந்தர்பங்களில் கூட அவள் அவன் முன் தோன்றுவதற்கு அவர்கள் இருவரின் மனங்கள் பேசிக்கொள்வது தான் காரணமாக இருக்க முடியுமென்று வீரா நம்பினான்.

இப்படி பேசிக்கொண்டிருந்த மனங்கள் தூரமாகி விட்டதை பிரிவு என்றும் சொல்லலாம் தானே!

இந்த மனங்கள் பிரிந்த 2007 வருடத்தில் இருந்து, அவளிடம் மீண்டும் பேச வேண்டுமென்று எண்ணம் வீராவை ஆக்கிரமித்து இருந்தது.

அவளோடு எந்த தொடர்பிலும் இல்லாமல் இருந்த அந்த நாட்களில், அவள் பெயரை அவன் காணும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
அவளையே   கண்டது போல் அவனுக்கு ஒரு உற்சாகம் ஏற்படும்.அவள் பேச கூட வேண்டாம் FM ரேடியோவில் தீடிரென்று நம் மனதுக்கு நெருக்கமான பாடல் ஒலிப்பது போல், அவன் எதிர்பார்க்காத தருணங்களில் அந்த பெயரை அவன் கண்டுவிட்டால் போதும்.எங்கிருந்து அவனுக்கு அத்தனை சந்தோசம் வருமோ தெரியாது!

அவனின் இந்த உணர்வு பெருக்கு இந்த முறை கவிதையாக வடிவம் பெற்றது.நடிகர் விவேக்குடைய கவிதை போன்று கொஞ்சம் பேச்சு வழக்கிலேயே அவனின் அந்த உணர்ச்சி கவிதையானது.

 

“எங்க பார்த்தாலும் நிக்கிறேன்

எனக்குள்ள நானே சிரிக்கிறேன்

ஏன் ன்னு தெரில எனக்கு

உன் பேர் ல என்ன தான் இருக்கு!”

 

“உனக்காக நான் எழுதிய கவிதை” என்று அவளிடம் இவன் காண்பிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி வாய்ப்புகள் அமைந்தாலும் அதை அவன் செய்ய துணிய வாய்ப்பில்லை. இது இரண்டும் நடந்தாலும் அவள் இவன் கவிதைகளை வாசிப்பாள் என்பதற்கில்லை.

 

எப்படியும் அவள் வாசிக்கப் போவதில்லை என்பது தெரிந்தும், அவளுக்காக அவன் எழுதத் தொடங்கியது அன்று தான்.

வெளியில் தெரியாமல் அழுவது சோகத்தின் உச்சம் என்றால், வெளியில் தெரியாமல் மனதுக்குள் சிரிப்பது,சந்தோசத்தின் உச்சம்.அந்த பேர் ல என்ன தான் இருந்ததோ ஆனால், அது அவனுக்கு அத்தனை சந்தோஷத்தை தந்தது.

 

தன்னுடைய முதல் காதல் கவிதை எழுதுவதற்கு; முதல் காதலை கவிதையாக எழுதுவதற்கு; அவளுடைய பேச்சோ அழகோ பார்வையோ எதுவும் அவனுக்கு தேவைப்பட்டு இருக்கவில்லை. அவளின் அந்த பெயர் மட்டுமே போதுமானதாக இருந்தது.

 

அந்த பெயரை அவன் அத்தனை விரும்பினான்.அவளை அதிகம் ஏறெடுத்து பார்த்திடாத அவன் மனதில், அவள் உருவத்தையும் முகத்தையும் விட அவள் என்றாலே அந்த பெயர் தான் என்று பதிவாகி இருந்தது.

 

 

நம் மனம் ஒருவரை வெறுக்கும் பட்சத்தில், அவர்களும் நம்மை வெறுக்கத்தான் செய்வார்கள்.ஒருவரை நம் மனம் விரும்பும் பட்சத்தில் அவர்களும் நம்மை விரும்புவார்கள் என்று வீரா நம்பிக்கொண்டு இருந்தான்.

 

அவளிடம் பேச வேண்டும் என்று அவளை அவன் தேடிக்கொண்டிருந்த பொழுது, அவள் எப்படி நம்மை தேடாமல் இருக்கின்றாள் என்று கேள்விக்கும் விடைத் தேடிக்கொண்டு இருந்தான் வீரா.

 

வீராவிற்கு அவளைத்தெரியும் அவள் பெயரைத்தெரியும்.அதைத்தவிர்த்து அவள் சார்ந்த யாரையும் தெரியாது.

அவனுக்குத்தான் அவளின் வீடு தெரியுமே!?

தெரியும் தான்.ஆனால் , படிப்பதற்காக அவள் அழைத்த பொழுதே வர மறுத்த அவனுக்கு  என்ன காரணம் சொல்லி அவள் வீட்டிற்கு செல்வதென்று தெரியவில்லை.

 

“அவளைப்  பார்த்து விட மாட்டோமா! மீண்டும் பேசிவிட மாட்டமோ” என்று அவன் திருவிழாக்களுக்கும் , நூலகங்களுக்கும்  போவதும் வருவதுமாக இருந்து ஒன்றும் பயனளிக்கவில்லை.

 

அந்த வருடங்களில் facebookம் கூட அதிக புழக்கத்தில் இல்லை. ‘Orkut’-Facebook பிரபலமாகும் முன் மக்கள் இதைத்தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள். எப்போதெல்லாம் அவனுக்கு Browsing சென்டர் செல்ல வாய்ப்புக் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் அந்த பெயரை தட்டி ‘Orkut’ வலைத்தளத்தில் தேடத் தொடங்கினான்.  Orkut அவளைத் தவிர அதே பெயரில் இருந்த பல நூறு பேர்களை காண்பித்தது.’

“இதில் எப்படி அவளை கண்டுபிடிப்பது!”

“இவய்ங்கள எல்லாம் யார் இந்த பேரை வச்சுக்க சொன்னது” என்கிற கடுப்போடு orkut ஐ அவ்வப்போது மூடிவிட்டாலும் அவளைத்தேட அவனுக்கு இருந்த ஒரு வழி அது மட்டும் தான்.

 

அவள் என்றால் அந்த பெயர். அந்த பெயர் என்றால் அவள் என்று இருந்த அவனுக்கு 70 வயதில் ஒரு பாட்டி அந்த பெயரில் orkut account வைத்து இருந்தது எப்படி என்று ஒரு ஆச்சரியத்தை தந்தது. அவனுள் ஒரு கோபமும் கூட இருந்தது.அவளுக்கு  முன்னர் அந்த பெயரில் அவன் யாரையும் கண்டதில்லை. Orkut தேடலில் இத்தனை பேருக்கு எப்படி இந்த பேர் இருக்க முடியும் என்கிற கோபம். அந்த அளவிற்கு அந்த பெயரும் அவளும் அவன் மனதை ஆக்கிரமித்து இருந்தார்கள்.

 

“அதிசயமாய் அவள்  மட்டும் இருக்க

அத்தனை பேர் எப்படிக் கொண்டார்கள்

அதிசயமான அவள் பெயரை” 

 

அவன் இத்தனை நேசித்த அந்த பெயரை விட்டுவிட்டு அவன் அவளுக்கு புதிதாக ஒரு பெயர் சூட்டியதற்கு அந்த ஆர்குட் தேடல் காரணமாக அமைந்தது.

அவளுக்கு இன்னும் தனித்துவமா புதுசா ஒரு பேர் வைக்கணும் ன்னு அவன் வைத்த பெயர் தான் ஷாரா. She is unique so should be her name.

ஸ்ரீ யின் தயவில் அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்த பின், அவள் நம்பரை ஷாரா என்று பதிவு செய்து வைத்து இருப்பதாக அவன் சொன்னதற்கு. என் பேரை வச்சே புது பேர் வச்சிட்டியே ன்னு அவள் கேட்டதற்கு அவன் அவளுக்கு அளித்த பதில்,
“To me your name seems common and old”

 

இது உண்மையென்றாலும் மனப்பூர்வமான உண்மையில்லை. அவன் ஷாரா என்கிற பெயரை விட அவளின் நிஜப்பெயரையே தான் அதிகம் நேசித்தான். அவள் பெயரை யாரும் தெரிந்துக்கொள்ள கூடாது என்பதற்காக மட்டுமே தான் அவன் வேறு ஒரு பெயரில் அவள் நம்பரை பதிவு செய்து வைத்து இருந்தான். இவன் சூட்டிய இந்த புதுப் பெயரை அவளும் இரசிப்பாள் என்று நினைத்தே அந்த பெயரை அவளிடம் சொன்னான்.

சரி! அவள் பெயர் ஷாரா என்றே இருக்கட்டும். அவன் அவளிடம் தன் காதலை சொன்னானா?அவளாவது அதை சொன்னாளா? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *