2011 பொங்கல் விடுமுறை, அன்று அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லை. ஆனாலும், வெளிச்சமும் கூட உள்ளே புக முடியாத ஒரு அறைக்குள் இருந்து கொண்டு அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு காத்திருந்தான் வீரா.காதல் காதலிப்பவர்களை இப்படித்தான் தனிமைப் படுத்துகிறது.
அவன் காத்துக்கொண்டிருந்த பொழுது அந்த இரண்டு பாடல்கள் அவன் காதுகளோடு இருந்த ஹெட் செட்டில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
“ஒத்த சொல்லால என் உசுரு எடுத்து வச்சுக்கிட்டா”
“ஊரோடு வாழுற போதும் யாரோடும் சேரலை நான்..
அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி “
அவளிடம் இருந்த பதில் வந்தது. எப்போதும் போல், என்ன செய்துகொண்டிருக்கின்றாய் என்ற விசாரிப்புகளில் அவர்கள் பேச்சு தொடங்கியது.
“நான் பாட்டு கேட்டுட்டு இருந்தேன். அந்த இரண்டு பாட்டை ஒரு நூறு தரம் கேட்டு இருப்பேன்” என்று வீரா அனுப்பிய மெசேஜ்க்கு “ரசிகன் டா” என்று பதில் வந்தது. அந்த பதிலையும் அவன் அத்தனை ரசித்துக்கொண்டு இருந்தான்.
அவளுக்கு தெரியாது! அந்த இரண்டு பாடல்களை அவன் அத்தனை ரசிப்பதற்கு காரணம் அவள் தான் என்று அவளுக்கு தெரியாது. அவள் அனுப்பிய “special one” என்கிற மெசேஜ்; அந்த தருணத்திற்கு ஏற்றாற் போல் அமைந்த அந்த பாடல்;அது தான் காரணம் என்று அவளுக்கு தெரியாது.அப்போதே சொல்லியிருக்கலாம்,நீ அனுப்பின அந்த மெசேஜ் தான் நான் அந்த பாடலை விரும்ப அத்தனை காரணம் என்று. ஆனால், அவன் சொல்லவில்லை.
அவனுக்கு வேறு ஒரு பாடலின் வரிகள் நினைவிற்கு வந்தது.
சந்தனமும் சங்கத்தமிழும்
பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம்
தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
மலைபோல் சந்தனத்தை குவித்து வைத்து இருப்பார்கள். மாலைக்கோனார் கடையில் இருந்து பத்தடி தூரத்திற்கு சந்தனமும் பன்னீரும் மணக்கும். சிறு வயதில் இருந்து ஒரு ஆயிரம் முறை அந்த கடையை கடந்திருப்பான். ஒரு நாளும் அந்த சந்தனம் அவனை எதுவும் செய்ததில்லை. ஆனால், விரல் நுனி அளவில் அவள் நெற்றியில் இருக்கும் சந்தனம் அவனை எதுவும் செய்யாமல் இருந்ததில்லை. அது போலவே தான் இந்த பாடல்களும்.
இதையெல்லாம் அவளிடம் சொல்லி அவள் பேசாமல் இருந்துவிடுவாளோ என்கிற பயம் வீராவிற்கு.
“படத்துக்கு போறேன்,- ஆடுகளம். இதுக்கு முன்ன friends ஓட படத்துக்கு போனதில்லை.நீ போய்ருக்கியா?” அந்த பாடல்களுக்காகவே படத்துக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து இருந்த வீரா அவளைக்கேட்டான்.
“இரண்டு தடவை போய் இருக்கேன் ஆனா வீட்ல தெரியாது. சொன்ன விடமாட்டாங்க” இந்த பதில் வீராவிற்கு கொஞ்சம் ஆச்சரியம் கலந்த ஒரு குதூகலத்தை தந்தது. ஒரு குழந்தைய போல். “ஏ எப்படி வீட்டுக்கெல்லாம் தெரியாம!” என்பது போன்ற குதூகலம் அது. அவனுக்கு ஷாரா எப்பவும் நல்ல பொண்ணு,அவள் சொன்னதை கேட்ட பொழுது கதைகளில் வரும் கொஞ்சம் சேட்டைக்கார நல்ல பொண்ணு போல அவன் கண்களுக்கு அவள் தெரிந்தாள். இப்படி அவள் என்ன செய்தாலும் அவன் ரசிக்கவே செய்தான்.
“கீழே இருக்கேன் வா”
குட்டி மனோஜ் வீராவிற்கு மெசேஜ் அனுப்பியிருந்தான்.
படத்துக்கு யாரெல்லாம் வருகிறார்கள்; யாரை டிக்கெட் எடுக்க சொல்வது என்கிற பேச்சு போய் கொண்டு இருந்தது.
“ஆடுகளம் இரண்டாவது நாள் இரண்டாவது ஷோ டிக்கெட் தான் இருக்கு. வேறு படத்துக்கு போலாமா?”
“இல்ல! ஆடுகளம் தான் போறோம். இந்தா காசு. என் கணக்குல இரண்டு டிக்கெட் எடுத்து வை. என் கூட இன்னோரு பையன் வரான்”என்று வீரா கிளம்பிவிட்டான்.
மறுநாள் விடிந்தது. “ஹாப்பி பொங்கல்” எல்லோரும் பொங்கல் வைக்க நேரம் பார்த்து பொங்கல் பொங்க காத்திருந்தார்கள். வீரா அவள் இன்னுமா எழுந்திருக்கவில்லை என்று காத்திருந்தான்.
அந்த விடுமுறையில் வீராவும் ஷாராவும் அவ்வப்போது பேசிக்கொள்ளவும் செய்தார்கள்.
ஒருவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது, “ஆ..ஆஹ.ன் “என்று சொல்வது வீராவின் இயல்பாக இருந்தது. அதை கவனித்து வந்த ஷாரா அவனை போன்று அந்த “ஆ.அ …ஹ..ன்” சொல்லி அவனை கிண்டல் செய்துகொண்டு இருந்தாள்.
உங்களை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு இருக்கும் பொழுது உங்களால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க முடியுமா? வீராவால் முடிந்தது. அவனுக்கு சந்தோசம் தாளவில்லை.உரிமையாக அவள் அவனை கிண்டல் செய்ததை நினைத்து அவனுக்கு அத்தனை சந்தோசம். இருந்தாலும், “கிண்டல் பண்ண? போன் அ வச்சுருவேன்” வராத கோபத்தை வம்படியாக அவன் கொண்டு வர; அந்த கோபமும் கூட அவனைப் போன்று வெட்கத்தில் நெளிய; அது வெற்று பொய் கோபம் என்பதை ஷாராவிற்கு யாரும் சொல்லத் தேவையில்லை.
வேகமாக போனை துண்டித்தான்.
அவள் அந்த “ஆ..ஆஹ.ன் ” என்பதை டைப் செய்து குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தாள். அதே பொய் கோபத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவளை மீண்டும் அழைத்தான்.
“”போதும்!சரியா” சத்தமாக சொன்னான் வீரா. சத்தமாக சொல்வதெல்லாம் கோபமாக சொல்லப்படுவதில்லை. ஆனால், வீரா கோபமாக சொன்னதாக இருக்க வேண்டும் என்று சத்தமாக சொன்னான்..அதை சொல்லும் பொழுது அவனிடம் இருந்து வழிந்த சிரிப்பு அதில் கோபம் இல்லை என்பதை இன்னும் சத்தமாக சொல்லிவிடும். அதை உணர்ந்துகொண்ட ஷாரா அவனை வம்பிழுக்க வேண்டி , “அது நல்லா இருக்கு ல” என்று சொல்ல; வீராவின் உடல் முழுதும் ஒரு வெட்கம் பரவ தொடங்கியது. அவன் கன்னங்கள் குவிந்து இருந்தது. கொஞ்சமாய் வாய் திறந்தபடி சத்தமில்லாமல் அவன் சிரித்துக்கொண்டு இருந்தான்.அவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே தன்னை அறியாமல் வீரா மீண்டும் “ஆ..ஆஹ.ன் ” சொல்லிவிட்டு தன் வலது கையை நெற்றியில் வைத்தபடி கண்களை மூடிக்கொள்ள, அவன் இடது காதினில் அவள் சிரித்துக்கொண்டு இருந்தாள்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்த நெட்ஒர்க் இல் இருந்த அத்தனை வழித்தடங்களும் வெட்கமும் மகிழ்ச்சியும் நிறைந்து busy ஆகவே இருந்தது.காற்றெல்லாம் வீராவின் சந்தோசம் நிறைந்து இருந்தது.
போனை வைத்த பிறகும் அவள் அனுப்பிய அந்த “ஆ..ஆஹ.ன்” பார்த்து “நம்ம இப்படி தான் சொல்றோமா! ஆ..ஆஹ.ன் ” என்று சொல்லிப்பார்த்துக்கொண்டு “இய்யோ!….” குழந்தைகள் காற்றை பிடித்து கசக்குவது போல் விரல்களை இறுக மூடிக்கொண்டு என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான் வீரா.
நம்மைப்பற்றி நாம் கவனிக்காத விஷயங்களை நமக்கு பிடித்த ஒருவர், கவனித்து ரசிக்கும் பொழுது நாம் அதை நினைத்து நினைத்து மகிழ்வோம். அவ்வாறு நாம் கவனிக்க தொடங்கிய பின் அந்த இயல்பு நம்மில் இருந்து விலக தொடங்கும். வீராவின் இயல்பான அந்த “ஆ..ஆஹ.ன்” வை அன்றிலிருந்து வீராவும் கவனிக்க ஆரம்பித்தான். அவனை அறியாமல் அவன் “ஆ..ஆஹ.ன்” சொன்ன பொழுதுகளில் அவனே சிரித்துக்கொண்டான். அந்த “ஆ..ஆஹ.ன்” அவனை விட்டு விலக தொடங்கியிருந்தது.
அன்று மாலை அவர்கள் மீண்டும் பேசிக்கொள்ள ஆரம்பித்து இருந்தார்கள் .
வீரா: என்ன பண்ற
ஷாரா:கரும்பு சாப்பிட்டுட்டு இருக்கேன்
வீரா: நான் கரும்பெல்லாம் சாப்பிட மாட்டேன்.
ஷாரா: நல்லது.. நல்லா இருக்கும் சாப்பிட்டு பாரு
வீரா:அம்மா பொங்கல் அன்னிக்கு கரும்பு சாப்பிடலைன்னா கழுதையா பொறப்போம் சொல்லி பயம் காட்டினப்பவே சாப்பிடலை.
ஷாரா: நீ கழுதையா தான் பிறக்கப் போறா பாரு..ஹா! ஹா!
வீரா: எனக்கும் சேர்த்து நீ சாப்பிடு.
ஷாரா: ஏற்கனவே நிறைய சாப்பிட்டேன்!
ஷாரா : அம்மா கூப்பிடுறாங்க, அண்ணன் மாலை போட்டு இருக்கான். விளக்கேத்தனும் நான் அப்பறம் பேசுறேன்.
பொங்கலுக்கு மறுநாள் இரண்டாவது ஆட்டம். ஒரு வரிசை முழுதும் வீராவும் வீராவை விட வயதில் சிறியவர்களான அவனுடைய நண்பர்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள்.
ஒரு இரண்டு பாடல்களுக்காக படம் பார்க்க சென்ற வீரா அந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க ஆரம்பித்தான். அந்த ஒத்த சொல்லால பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம், அன்று ஷாரா “special one ” என்று சொன்ன பொழுது அவன் மனம் செய்ய நினைத்து செய்யாமல் விட்டதை திரையில் ஒருவன் செய்துகொண்டிருப்பதைப் பார்த்து வீரா இன்னும் குஷியானான்.அன்றிலிருந்து இயக்குனர் வெற்றிமாறன் வீராவிற்கு பிடித்தமான இயக்குநராகி போனார்.
படம் முடிந்து கூட்டமாக எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள், அங்கே ஒருவன் மட்டும் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் போல், எந்த கோடுகளும் இல்லாத வெறுமையான ஒரு முழுக்கை சட்டை போட்டு வந்து கொண்டு இருந்தான். அவனை யாருமே கவனித்து இருக்க மாட்டார்கள், அவன் கவனித்தான்,”என்ன நம்ம மட்டும் வித்தியாசமா இருக்கோம்!” என்று அவன் மனதில் தோன்றியது. அவன் தான் வீரா. சட்டையின் முதல் பொத்தனை அவிழ்த்துவிட்டான். பேண்ட்குள் அடக்கமாய் இருந்த சட்டையை வெளியில் எடுத்துவிட்டான், கைகளை மடக்கி விட்டான்.
“வித்தியாசமா இருந்தா என்ன இப்ப?” என்று அவன் நினைப்பதில்லை. இப்படியானவன் தான் வீரா வெளிப்புற சூழல்களும் எதிரில் இருப்பவர்களும் அவனுள் அவநம்பிக்கைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்த ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அவனே ஏற்படுத்திக் கொள்வான்.
இந்த சுபாவம் ஷாராவிடம் பேசும் பொழுது அவனிடம் அதிகம் வெளிப்பட்டது. அவனுக்கு ஷாராவை பிடிக்கும். ஷாராவிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதுவே அவனுக்கு போதும்.ஷாரா அவனை நேசிப்பதற்கான வாய்ப்பில்லை என்று அவன் நம்பிக்கொண்டு இருந்தான்.
“எனக்கு உன்னை பிடிக்கும்” என்று ஷாராவிடம் சொன்னால் கூட அவள் பேசாமல் இருந்து விடுவாள் என்கிற பயம் வீராவிற்கு.அவளிடம் பேசும் பொழுதுகளில் கிடைக்கும் சந்தோசத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவன் தயாராக இல்லை.
ஒரு நாள் அவன் ஊரில் இருந்து வந்து அவளுக்கு மெசேஜ் செய்தும் அவள் எந்த பதிலும் அனுப்பவில்லை. அவள் தோழியின் நிச்சயத்தார்த்திற்கு சென்றிருந்ததால், அவள் பேசவில்லை என்று மறுநாள் பதில் சொன்னாள்.
“நல்ல சாப்பாடு டா” என்றவளிடம் எப்போதும் அவளிடம் கொள்ளும் பொய் கோபத்துடன், “விட்டுட்டு போய் சாப்பிட்டு வெறுப்பேத்தாத” என்றான்.
“சரி! இனி அடுத்த ப்ரெண்டு கல்யாணத்துக்கு தனியா போக கூடாது என்னையும் கூட்டிட்டு போகனும்! சரியா” ஒரு அர்த்தத்தில் அவன் இதை கேட்கவில்லை. அவளும் அப்போதைக்கு சரி என்றாள்.
அந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளிடம் பேசும் பொழுதுகளை நினைத்து நினைத்து மகிழ்ந்திருந்த அவன், விஷேசங்களுக்கு ஒன்றாக செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டதை நினைத்து இன்னும் மகிழ்ச்சி கொண்டான்.
அது வெறும் பேச்சுக்காக செய்து கொண்ட தீர்மானமாக இருந்தாலும். அது அவனுள் தந்த மகிழ்ச்சியை அவனால் தடுத்துவிட முடியவில்லை.
இப்படி எல்லையில்லாத மகிழ்ச்சியில் இருக்கும் தருணங்களில் இது எத்தனை நாள் நீடிக்கும் என்கிற கேள்வியை உங்கள் மனம் எழுப்பும். வீராவுடைய மனது, அவள் உன்னிடம் பேசிக்கொண்டே இருக்க போவதில்லை என்று அவனுக்கு சொன்னது. அவளுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும்; அவளுக்கும் திருமணம் நடக்கும்; அதன் பின் அவள் உன்னுடன் பேச மாட்டாள் என்றெல்லாம் சொன்னது.
அவர்களுக்குள் இருந்த நட்பு அப்போது தான் ஒருவர் மேல் ஒருவர் ஒரு உரிமை கொண்டு பேசிக்கொள்ளும் அளவு வளர்ந்திருந்தது. ஒரு புள்ளியில் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தூரம் இன்னும் அதிகமாகும் என்பதை அவளிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதே உணர்ந்த வீராவின் மனதில் நிறைந்திருந்த அத்தனை சந்தோசமும், நொடியில் அவன் மனதை கனக்கச் செய்தது.அத்தனை கனத்துடன் கையிலிருந்த அந்த போனை இறுக பற்றிக்கொண்டு தடுமாற்றத்துடனும் தயக்கத்துடனும் 6(M) 444(i) 7777(s) 7777(s) 999(Y ) 666(o ) 88 (U) என்று தட்டி அனுப்பினான். “Miss you too” என்று அவளிடம் இருந்து பதில் வந்தது.வீராவிடம் இருந்த தடுமாற்றமும் தயக்கமும் அவளிடம் இல்லை. “how are you ” என்பவர்களிடம் “I am fine” என்று சொல்வதைப் போன்ற சாதாரண “miss you too ” அது.
ஆனால், வீராவிற்கு அப்படி தோன்றவில்லை. அந்த “Miss You too” பார்த்து அவன் மனம் இன்னும் கனத்தது. சட்டென்று அவன் மனம் அவனிடம், “miss u எல்லாம் சொல்ற நீ பேசுறதை வச்சு நீ அவளை காதலிக்கின்றாய் என்று நினைத்து அவள் உன்னிடம் பேசாமல் இருந்து விட போகிறாள்”என்றது.என்ன செய்வது என்று திகைத்து நின்ற வீராவிடம் அவன் மனது அவள் திருமணத்தைப் பற்றி பேச சொன்னது.
“உன் கல்யாணத்துக்கு எல்லாம் எனக்கு சொல்லுவே ல” இயல்பாகவே கேட்பது போல கேட்டான்.ஆனால், அதை கேட்ட அவன், அவனுடைய இயல்பில் இல்லை. அவன் அவளை காதலிக்கிறான் என்று நினைத்து அவள் பேசாமல் இருந்துவிடுவாளோ என்கிற பயத்தில் அவன் கேட்ட கேள்வி அது.
“கண்டிப்பா! உனக்கு சொல்லாம யா” என்று அவள் பதில் அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்த அவன், வலது கையில் போனை வைத்துக்கொண்டிருந்த படி, இடது பக்கம் திரும்பி கண்களை மூடி ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு,
“பார்ப்போம்! பேசுவீயா ன்னே தெரில” என்று மெசேஜ் அனுப்ப;
அவன் சந்தேகத்திற்கு, “பேசாம எங்க போறாங்க”என்றாள் அவள்.
“சரி பார்ப்போம்” என்பதோடு அவர்களின் அந்த பேச்சு முடிந்தது.
நாமும் காத்திருந்து பார்ப்போம். ஷாரா தன் வாழ்க்கையில் தொடர்ந்து வருவதற்கான வாய்ப்பில்லை என்பதை வீரா அவனாக ஏன் தீர்மானித்துக்கொண்டான்? “Miss you too” என்று அனுப்பிய பொழுது ஷாரா மனதில் ஒன்றும் இல்லையா? வீராவின் மனதில் இருந்த நேசத்தை அவள் உணர்ந்து கொள்ளவே இல்லையா?
இதையெல்லாம் தெரிந்து கொள்ள நீங்கள் இன்னும் பல பகுதிகள் வாசிக்க வேண்டி இருக்கிறது.