வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

கட்டுரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி.

உங்களைச் சுற்றி எத்தனை கெட்டவர்கள் இருக்கின்றார்கள் நல்லவர்கள் என்று சொல்லுமளவிற்கு எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

உங்களை சுற்றியிருக்கும் நல்லவர்களையும் கெட்டவர்களையும் எப்படி வரையறை செய்தீர்கள்? இதோடு இரண்டாவது கேள்வி ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம்.(எனக்கும் கூட எழுதும் போதே தோன்றியது)

தவறிழைப்பவர்கள் கெட்டவர்கள் என்று கொள்ளலாமா?எல்லோரும் தவறுகள் செய்கிறோம் தானே! அப்படியென்றால் எல்லோரும் கெட்டவர்களா? இல்லை.

இதற்கு மிக எளிமையாக பதில் சொல்ல வேண்டுமென்றால், நமக்கு பிடித்தவர்கள் எல்லாம் நல்லவர்கள், பிடிக்காதவர்கள் எல்லாம் கெட்டவர்கள்.இப்படியாக தான் நாம் நல்லவர்களையும் கெட்டவர்களையும் வரையறை செய்கின்றோம்.

இந்த மனநிலைக்கு காரணம், பிடித்தவர்கள் செய்யும் தவறுகள் பல நேரங்களில் தவுறுகளாக தெரிவதில்லை.

பிடித்தவர்கள் செய்யும் தவறுகள் நமக்கு தெரிந்தாலும் புரிந்தாலும், அதை ஒரு பெரிய தவறோடு ஒப்புமைப்படுத்தி அவர்கள் செய்த தவற்றை சிரியதாக்கி விடுகிறோம். பிடிக்காதவர்கள் செய்யும் சிறிய தவறுகளை அதைவிட பெரிய தவறுகளோடு ஒப்புமைப்படுத்தி பெரிதாக்கிறோம்.

இப்படி எதையும் தன்னளவில் நாம் தீர்மானித்துக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ ஒரு ஒப்பீடு தேவைப்படுகிறது அல்லது உவமை தேவைப்படுகிறது.

இராமனை விட இவன் நல்லவன்- ஒப்பீடு
இராமன் அளவிற்கு இவன் நல்லவன் -உவமை

எல்லோரும் எல்லோருக்கும் நன்மை மட்டும் செய்கிறவர்களாக இருந்தால்; எந்த தவறும் செய்யாதவர்களாக இருந்தால்;எல்லோரும் ராமனாக இருந்திருந்தால்; நன்மை என்ற ஒன்றை நாம் வரையறை செய்துகொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் கடினமாக இருந்திருக்கும்.

இவர் இப்படித்தான் என்கிற தீர்மானங்கள் கூடாது என்று நாம் பேசிவந்தாலும். நாம் மற்றவர்களை பற்றியும் நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை பற்றியும் சில தீர்மானங்களோடு தான் திரிகிறோம்.

“இவன் இப்படித்தான். இந்த கட்சி இப்படித்தான்.”

வாழ்க்கையில் நம்மை சுற்றியிருப்பவர்கள் மீதும் நம்மை சுற்றியிருப்பவைகள் மீதும் நாம் கொண்டிருக்கும் தீர்மானங்களுக்கே ஒரு உவமையோ ஒப்பீடோ தேவைப்படுகிறது.

நாம் பார்வையாளர்களாக இருந்து கொண்டு நம்முடைய வசதிக்காக செய்யும் எந்த ஒப்பீடும் உண்மை நிலையை மாற்றிவிட போவதில்லை.

சினிமாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

எம்.ஜி.ஆர். – சிவாஜி
ரஜினி-கமல்
விஜய்- அஜித்

இவையெல்லாம் சினமாவில், வியாபார வெற்றிக்கு பயன்பட்ட ஒப்புமைகள்.

கமல் ஒரு மேடையில், “ரஜினியின் வெற்றியில் எனக்கும் பங்கு இருக்கின்றது.ஒருமுறை, “அவர் நான் சினிமா விட்டு போறேன்” என்றார் ;அப்படிச் சொன்னவரை, நீங்க போனா என்னையும் போக சொல்லுவாங்க ன்னு அவரை பிடிச்சு வச்சுருக்கேன்” என்பார்.

நிதர்சனத்தை புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் வார்த்தைகள்.கமல் உடைய வெற்றி ஒரு உயரத்தில் இருக்கிறது என்றால் ரஜினியின் வெற்றி வேறு உயரத்தில் இருக்கின்றது. இந்த இருவரில் ஒருவர் இல்லாமல் இருந்தாலும் கூட மற்றவரின் வெற்றிக்கு எந்த மதிப்பும் இருந்திருக்காது.

ஒவ்வொருவரின் வெற்றியும் வெவ்வேறு நிலையில் இருப்பது என்றாலும் கூட அந்த வெற்றியின் அளவீடு செய்ய ஒப்புமை தேவைப்படுகிறது. அந்த வெற்றியை அடைவதற்கும் ஒரு ஒப்புமை தேவைப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர், முகநூலில் ஒருவர் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டு இருந்த ஒரு கருத்து என் மனதில் ஆழ பதிந்து போனது. உச்சி வானத்தில் சின்னதாக தெரியும் சூரியன், தொடுவனத்திற்கு வரும் பொழுது எப்படி பெரியதாக தெரிகிறது? காரணம், உச்சி வானத்தில், உங்கள் பார்வைக்கு சூரியனோடு ஒப்பீடு செய்ய ஒன்றும் இருப்பதில்லை.அதுவே தொடுவானத்தில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே தெரியும் சூரியன் பொழுது உங்கள் பார்வை ஒப்பீடு செய்துகொள்ள அங்கே கட்டிடங்கள் இருக்கின்றது. சூரியனை கட்டிடங்களோடு ஒப்பீடு செய்துகொள்ளும் பொழுது தொடுவானத்தில் சூரியன் நம் பார்வைக்கு பெரிதாக தெரிகிறது.இதில் சூரியனின் அளவில் எப்போதும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

ரஜினி, ரஜினியின் உயரத்திலும் கமல் கமலின் உயரத்திலுமே தான் இருக்கின்றார்கள். இப்போது புதிதாக, விஜய் தரப்பு நாங்கள் ரஜினியை விட பெரியவர்கள் ஆகிவிட்டோம் என்று பேச தொடங்கியிருக்கிறார்கள். விஜய் அடுத்த கட்டத்தை அடைந்தவிட்டதை எடுத்து சொல்ல அவர்கள் தங்கள் நாயகனின் வெற்றியை அதை விட ஒரு பெரிய வெற்றியோடு ஒப்புமைபடுத்த பார்க்கிறார்கள். தொடுவானத்தில் சூரியன் பெரியதாக தெரிந்தாலும் கட்டிடங்கள் அதைவிட பெரியதாகவே தான் தோன்றும். அப்படியாகவே தான் விஜய் தரப்பிற்கு விஜய் ரஜினியை விட பெரிய நாயகனாக தெரிவதும் கூட.அவர்கள் தங்களின் நாயகன் முன்பு இருந்ததை விட ஒரு அடி வளரந்துவிட்டதை எடுத்துக்கூற ரஜினியை எடுத்துக்கொள்கிறார்கள்.விஜய்யின் carreer இல் அவர் கடக்க மீதம் இருக்கும் milestone ரஜினி அடைந்திருக்கும் உயரம்.

இந்த கட்டுரைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? ஏன் இங்கும் இந்த சச்சரவுகளை பேச வேண்டும்.

சினிமா அளவில் இந்த ஒப்பீடுகள் நடக்கும் பொழுதும் அந்த ஒப்பீடுகளை ஒட்டி நடக்கும் சச்சரவுகளும்; ஒரு பெரும் வியாபாரத்திற்கு உதவியாகவே தான் எப்போதும் இருந்திருக்கின்றது. அந்த வியாபாரம் இந்த சமூகத்திற்கும் மறைமுகமான வழியில் பல நன்மைகள் தருகிறது.ஒரு தியேட்டரை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே pop corn விற்று கொண்டிருக்கும் பயனுக்கு; தியேட்டர்க்கு கூட்டம் வந்தால் தான் பிழைப்பு. இரண்டு நடிகர்களோ தனிநபர்களோ விளையாட்டு வீரர்களோ தன்னளவில் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் கூட அந்த ஒப்பீடுகளை வைத்து நடக்கும் சச்சரவுகள் சமூகத்திற்கு பல நன்மைகளையே தான் செய்கிறது.

இந்த இடத்தில்,சினிமா விளையாட்டு எல்லாம் சமூகத்திற்கு தேவையா? என்று சிலர் கிளம்புவார்கள். சமூகத்திற்கு எல்லாமே வேண்டும் தான் .சினிமா போன்ற  பொழுதுபோக்கு அம்ஸங்களும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு சமூகத்திற்குள் தான் இருக்கின்றது.

அரசியல் என்று வருகின்ற பொழுது, அதிகாரத்திற்காக போட்டியிடும் பொழுது, அந்த போட்டியில் இந்த சமூகம் எப்போதும், யார் கொஞ்சம் கெட்டவன், யார் அதிகம் கெட்டவன் என்று ஒப்பீடு செய்யும் இடத்திற்குள் தள்ளப்பட்டிருப்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.

முதலில், அரசியல் என்று வருகிற பொழுது, இந்த சமூகம் ஒருவரை பற்றியோ ஒரு கட்சியை பற்றியோ ஒரே மாதிரியான தீர்மானங்களுக்குள் சிக்கிக்கொண்டு அதில் வெளி வர மறுப்பது சமூகத்திற்கு இன்னும் ஆபத்தானது.

ரஜினியின் வெற்றி பெரியதா? விஜய்யின் வெற்றி பெரியதா என்கிற சச்சரவுகளில் இருக்கும் அறியாமை ரஜினியின் வெற்றியையோ விஜய்யின் வெற்றியையோ மாற்றிவிடப்போவதில்லை. அது வியாபார ரீதியில் ஒரு போட்டியை மட்டுமே தான் உருவாக்கிறது.

ஆனால், அரசியல் களத்தில்,அத்தகைய ஒப்பீடுகளும் சச்சரவுகளும் சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.

தமிழகத்தில், தோன்றிய திராவிட அரசியல் ஆனது, தங்களுடைய வெற்றிக்காக எப்போதும் ஒரு எதிரியை உருவாக்கி அந்த எதிரியை மக்களின் எதிரியாக நம்ப வைத்து பழக்கப்படுத்திவிட்டது.நாத்தீக கொள்கை என்கிற பெயரில் நம் பாரத சமூகத்தின் மீது ஒரு தாழ்வுமனப்பான்மையை உண்டு பண்ணிய திராவிட அரசியல், பாரத கலாச்சாரம் சார்ந்த இறைநம்பிக்கைகளை தனக்கான எதிரியாக (ஒப்பீடாக) ஆக்கி,அந்த இறைநம்பிக்கைகளை  மக்களுக்கும் எதிரியாக ஆக்கும் முயற்சியில் தான் இன்று வரை இருக்கின்றது. ஒரு கற்பனைக்க்காக அந்த முயற்சியில் அவர்கள் முழு வெற்றி அடைய முடியும் என்று கொண்டாலும் கூட அவர்கள் அந்த முழு வெற்றியை அடைய விரும்ப மாட்டார்கள். கடவுளை நம்புகிறவர்கள் இருந்து கொண்டே இருந்தால் தான் அவர்கள் எதிர்த்துக்கொண்டே இருக்க முடியும்.

கடவுளை நம்புகிறர்வர்கள் , நம்பாதவர்கள் என்று எல்லோருக்கும் பொதுவான தேர்தல் அரசியலில், அண்ணா அடியெடுத்து வைப்பதற்கு முன்னர், அவர் நாத்தீக கொள்கையில் இருந்து கொஞ்சம் இறங்கி வந்து,திருமூலரின்,”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற முழக்கத்தை முன் வைத்து எல்லா மக்களுக்கும் பொதுவானராக காட்டிக் கொண்டார்.

அதன் பின், தி.மு.க. சினிமா; நாடகம் போன்ற விளம்பர வஸ்துக்களின் உதவியோடு தேர்தலில் வெற்றியடைந்தது.ஆரம்பம் தொட்டே அவர்கள் நாங்கள் காமராஜரை விட நல்லவர்கள் என்று ஒப்பீடுகளை முன்வைக்கவில்லை.மக்களின் நம்பிக்கைகளையே மக்களின் எதிர்களாக்கி மக்களை குழப்பி, பிரித்து தங்களுக்கென்று ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டார்கள்.அவர்கள் பக்கம் நிற்பவர்கள் மட்டும் தான் அறிவாளிகள் என்கிற பிம்பத்தை உருவாக்கினார்கள்.

அண்ணா இருந்த வரை, அல்லது ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை, திமுக என்னும் கட்சிக்கு அண்ணா எடுத்துரைத்த ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற வாசகமும் மட்டுமேனும் நினைவில் இருந்திருக்கும். இன்று அதுவும் அவர்களுக்கு மறந்து போனது.

எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கிய பொழுதே அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சியை தொடங்கி, தி.மு.க. தலைவர்கள் ஒருவருக்கும் பயன்படாத படி அண்ணாவின் கிரெடிட் மொத்தத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போய்விட்டார்.

தி.மு.க. வினர்  செய்வதறியாமல் எம்.ஜி.ஆர். மலையாளி என்று கோஷமிட்டார்கள். திராவிடம் என்று முழங்கி தொடங்கப்பட்ட இயக்கம், எம்.ஜி.ஆர்.ஐ எந்த வகையிலும் தாழ்த்த முடியாமல் கையில் எடுத்த கோஷம்; எம்.ஜி.ஆர். மலையாளி என்பது. அப்போதே திராவிடம் என்னும் கோட்பாடு தோல்வியடைந்துவிட்டது.

அதன் பின்னர், ஜெயலலிதாவை எதிர்க்க தி.மு.க.விற்கு கிடைத்த பாணம், அதிகாரம்-அராஜகம்-சொத்துகுவிப்பு.

இப்போது ஜெயலலிதாவும் இல்லை. எம்.ஜி.ஆரும் இல்லை.

திராவிட இயக்கங்களை பொறுத்தவரையில், தங்களை நல்லவர்கள் என்று அவர்களால் கூட அவர்களை சொல்லிக்கொள்ள முடியாதளவில் தான் அவர்கள் இருக்கின்றார்கள். அவர்களைவிட மற்ற கட்சிகளை தாழ்த்திக்காட்ட வேண்டும்.அது தான் அவர்களின் STARTEGY. அது இன்று இந்திய மொத்தமும் பின்பற்றும் STARTEGY ஆகி விட்டது.

மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிக்குள் பல இடியாப்ப சிக்கல்கள் இருப்பதால். அவர்களோடு சண்டை செய்யது பலத்தை காண்பிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தீர்மானித்து தி.மு.க . பாஜக பக்கம் திரும்பிஇருக்கின்றது.

இங்கு பாஜகவை எதிர்க்கும் எந்த கட்சிகளும் பாஜகவை எதிர்க்க மதத்தை தவிர எதையும் பெரிதாக கையில் எடுத்ததாக தெரியவில்லை. பாஜகவை விட பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தான் மதவெறுப்பு அரசியலை அதிகம் கையிலெடுக்கின்றது.

காங்கிரஸ் ஐ பாஜக எதிர்த்த பொழுது அவர்கள் மதத்தை கையில் எடுக்கவில்லை. ஊழலை கையிலெடுத்தார்கள்.
ஒப்பீட்டளவில்,ஊழல் என்பது பாஜகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளின் பலவீனமாக இருக்கின்றது.

அதனால், “யார் கொஞ்சம் ஊழல் செய்தவர்கள்? யார் அதிகம் ஊழல் செய்தவர்கள்?” என்கிற ஒப்பீட்டை தி.மு.க போன்ற கட்சியால் மக்கள் முன்பு எடுத்துச் செல்ல முடியாது.அண்ணாவின் கிரெடிட்டை எம்.ஜி.ஆர். வாரிக்கொண்டு போய் விட்டார். என்ன செய்யலாம்! பெரியாரை முன்னிறுத்தலாம் என்று பெரியாரின் கிரெடிட்டை எடுத்துக்கொள்வதற்காகவே தான் இத்தனை வருடமும் தி.மு.க குட்டி கரணம் போடுகிறது. உண்மையில் பெரியாரை எதிர்த்து, உருவாக்கப்பட்ட இயக்கம்; பெரியாரால் எதிர்க்கப்பட்ட இயக்கம் தி.மு.க.

பெரியாருடைய கிரெடிட்டை எடுத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? கடவுள் இல்லை என்று முழங்க வேண்டும். கடவுள் இல்லை என்பவர்கள் தான் அறிவாளிகள் என்று முழங்க வேண்டும். அதைத்தான் இத்தனை வருடங்களாக செய்து கொண்டிருக்கின்றார்கள். அதில் அவர்களின் இறைவெறுப்பும் மத வெறுப்பும்; நம் நம்பிக்கைகளை நம் கலாச்சாரத்தை தாழ்மைப்படுத்தும் அவர்களின் பிரச்சாரமும் மீண்டும் செறிவடைய தொடங்கியிருக்கின்றது. அதற்கு காரணம், அவர்கள் எதிர்ப்பதற்கு என்று இருப்பது பாஜக மட்டும் தான்.மதமும் மத நம்பிக்கையும் கொடிது அதை எதிர்ப்பது தான் நன்மை என்று அவர்கள் நிறுவமுற்படுகிறார்களே தவிர நிர்வாக ரீதியிலான சீரமைப்பை பற்றி இன்னமும் கூட பேசுவதில்லை.

கடவுள் இருக்கின்றாரா? இருந்தால் காட்டுங்கள். அவர் இருப்பை நிரூபணம் செய்யுங்கள் என்கிறவர்கள்; இன்று வரை, கடவுள் இல்லை என்பதை  நிரூபணம் செய்யவில்லை.

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபணம் செய்யமுடியவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்கிற தீர்மானத்திற்குள் சிக்கிக்கொள்வது மட்டும் எப்படி பகுத்தறிவு ஆகும். உண்மையில் அது தான் மூட நம்பிக்கை. எனக்கு தெரியாது ஒன்று என் புலன்களால் அறிந்து கொள்ள முடியாத புரிந்து கொள்ள முடியாத ஒன்று இருக்கவே முடியாது என்பது கூட மூட நம்பிக்கை தானே.

இந்த மூட நம்பிக்கையை தான். பகுத்தறிவு என்று சொல்லி இத்தனை காலம் கடை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இறைவன் இல்லை என்கிற மூடநம்பிக்கையும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டதாக தானே இருக்க வேண்டும்!

(இந்த கட்டுரை மதம் சார்ந்தது இல்லை ஆன்மீகம் தொடரில் எழுத்துயிருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது)

கீதையும் திருவாசகமும் இறைவன் நம் அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்கின்றது. புரிதலுக்கு அப்பாற்பட்டவனை நாம் எப்படி புரிந்து கொள்வது?

“இறைவன் மிகப்பெரியவன்!”

எத்தனை பெரியவன்?

இறைவனை நுண்ணியன் என்கிறார் மாணிக்கவாசகர்.

எத்தனை நுணுக்கமானவன்?

இந்த கேள்விகளுக்கான விடைகளை கண்டுகொள்ள; இந்த உலகம் இறைவனை புரிந்து கொள்ள இறைவன் இந்த உலகத்திற்கு பல ஒப்பீடுகளையும் உவமைகளையும் கொடுத்து உள்ளான்.

இறைவன் மனிதர்களை கொண்டு மனிதர்களுக்கு ஏற்படுத்திய நம்பிக்கைகளை மனிதர்களை கொண்டே கேள்வியெழுப்பச் செய்கிறான். காரணம், புரிந்து கொள்ள முடியாத இறைவனை மனிதன் தன் சிற்றறிவினால் புரிந்து கொள்ள அவன் ஒன்றை தீர்மானமாக நம்ப வேண்டும்; நம்பியதை அவனே கேள்விக்குட்படுத்த வேண்டும்; அந்த கேள்விக்கான பதிலை அவன் தேட வேண்டும்; இப்படியே தேடி தேடி அவன் இறைவனை அடைய வேண்டும். இது தான் இறைவனுடைய ஏற்பாடு. இத்தனை தெளிவுகளும் நம் கலாச்சாரத்தில், நம் பின்பற்றி வந்த நம்பிக்கைகளில் சொல்லப்பட்டு இருக்கின்றது.

அரசியலில், தங்களை எந்த அளவிலும் நல்லவர்களாக முன்னிறுத்திக்கொள்ள முடியாதவர்கள். அந்த நம்பிக்கைகளின் ஆரம்பக்கல்வி புத்தங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார்கள். நாம் முன்னமே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது தான், தொடக்க கல்வியில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்றே தான் கற்றுக்கொடுக்கப்படும்.பின்னர் சூரியன் உதிப்பதில்லை என்று கற்று தருவார்கள்.

இந்த நம்பிக்கைகளுக்கும் நிர்வாக அரசியலுக்கு பெரிய இடைவெளி இருக்க; இந்த நம்பிக்கைகளை அவமதித்தே மட்டும் அரசியல் செய்து பழகிவிட்டது. ராவண அரசியல் கூட்டம்.

சமூகம், கட்சிகளின் இந்த வெளிப்பகட்டு பிரச்சாரங்களை வைத்துக்கொண்டு ஒரு கட்சியின் தரத்தை நிர்ணயிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக உலகத்திற்கே ஞானத்தை போதித்த சமூகத்தை மட்டுப்படுத்த நடக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.

அரசியல் கட்சிகளை பற்றிய உங்களுடைய ஒப்பீடுகளுக்கு, மதமோ அது சார் நம்பிக்கைகளோ காரணிகளாக எப்போதும் இருக்க கூடாது.

தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு கட்சியாக அவர்கள் ஸ்திரமாக இருக்க அவர்களுக்கு ஒரு எமோஷன் தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி அந்த கட்சியிடம் இருந்த தேசிய உணர்வை பிராந்திய கட்சிகளின் பிரிவினை கொள்கைகளுக்காக சமரசம் செய்துகொண்டதால் தான் இன்று பலவீனம் அடைந்து இருக்கின்றது. ஒரு சமூகமாக சில அரசியல் கட்சிகளின் அதிகார பசிக்காக செய்யப்பட்ட பிரச்சாரம் தான் நம்மை பலவீனப் படுத்தியிருக்கின்றது.எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துவது நம்மை ஒரு ஸ்திரமற்ற தன்மைக்குள் கொண்டுவிட்டு விடும். எல்லா கேள்விகளுக்கும் பதிலை தேடுவது தான், நம்மை ஸ்திரமான நிலையை எய்தச் செய்யும்.

அரசியல் சார்ந்த ஒப்பீடுகளுக்குள் நம் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் திணிக்கப்படும் பொழுது நாம் ஒரு சார்பு நிலைக்கு தள்ளப்படுகிறோம்.அப்படி தள்ளப்படும் பொழுது நமக்கு பிடித்தவர்கள் நல்லவர்களாகிவிடுகிறார்கள். பிடிக்காதவர்கள் கெட்டவர்கள் ஆகிவிடுகிறார்கள். இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் தி.மு.க செய்யும் தவறுகளை கண்டிக்க முடிந்தவர்களாக; இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் பாஜக செய்யும் தவறுகளை கண்டிக்க முடிந்தவர்களாக இந்த சமூகம் இருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்னவோ, பாஜக என்கிற காரணத்திற்காகவே, மாற்று மதத்தினரும் இறைநம்பிக்கை அற்றவர்களும் அந்த கட்சியின் நிர்வாக ரீதியிலான அத்தனை செயல்பாடுகள் மீதும் பரப்படும் பொய்களை உண்மை என்று நம்புவதும். தீவிரமான இறைநம்பிக்கையும் காலாச்சார பற்றும் கொண்டிருப்பவர்கள் தி.மு.கவின் நிர்வாகத்தை கண்ணைமூடிக்கொண்டு விமர்சிப்பதுமாகவே தான் இந்த சமூகம் இருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும். (அடே meme creators இது அது இல்லை.)

கட்சிகளை பற்றிய ஒப்பீட்டு சச்சரவுகளில் நம் சமூகத்தின் நம்பிக்கைகளை சடங்குகளை நாமே இழிவுப்படுத்த தேவையில்லை. மாறாக அதை புரிந்து கொள்ள முற்பட வேண்டும். அந்த முன்னெடுப்பு நம்மை நாமே புரிந்துகொள்ளும் முன்னெடுப்பு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ராவண அரசியல் தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *