பொய்களையே மெய் என்றும் அதுதான் அறிவு என்றும் நம்பி ஒரு கூட்டம் வளர்ந்து கொண்டு இருந்தது.

பொய்களைக்  கொண்டாடிக் கொண்டிருக்கும் இடத்தில் தனித்து விடப்பட்ட உண்மையோ தன் குரலாக யாரேனும் வருவார்கள் என்று அமைதியாக காத்துகொண்டு இருந்தது. அப்படியான நிலையில், ஒருவரில் ஆரம்பித்து ஒவ்வொருவராய் உண்மையின் குரலாக மாறத் தொடங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் பொய்தான் மெய்யென அந்தக் கூட்டத்தின் காதுகளில் போதித்த கும்பல், உண்மையின் பக்கம் உண்மையாக சேர்ந்தவர்களை எல்லாம் சமூகத்தின் பெரும் அசச்சுறுத்தல் என்றது.

உண்மைக்கும் பொய்க்கும் இடையே பெரும் போர் ஒன்று மூளத் தொடங்கியது. போரின் போக்கில், கூட்டத்தில் இருந்தவர்கள் தங்களை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையின் பக்கம் சாயத் தொடங்கினார்கள். சமூகத்தின் பெரும் அசச்சுறுத்தலாக இருந்த பொய்களைத் தான் நாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருந்தோம் என்று அப்போது அந்தக் கூட்டம் உணரத் தொடங்கியது.

இங்கே நம் நாட்டிலும் இப்போது இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

திராவிட கூட்டம் பொய்களை உண்மைகளாய் எடுத்து வைத்து அதையே நம் மக்களை நம்ப செய்தது; அவர்களை நாம் எதிர்த்தாலும் கூட அவர்கள் பரப்பிய பொய்களை ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருந்தோம். அந்த சாயம் இப்பொழுது வெளுக்கத்  தொடங்கியிருக்கிறது.

இந்த திராவிட கூடாரம் எடுத்து வைக்கும் பொய்களே தான் இங்கு பா...விற்கு சாதகமாக அமைகிறது. இந்த திராவிட கூடாரம் எப்படி பா...விற்கு ஆள் சேர்க்கிறது என்பதைத் தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

தமிழன் என்பவன் திராவிடன் என்று சமஸ்கிருத சொல்லால் தமிழனை குறித்து, அவன் இந்து இல்லை என்றார்கள். இங்கே அழிந்து போன சமணம் தான் தமிழர்கர்கள் மதம் என்றெல்லாம் பரப்பினார்கள். திராவிட கூடாரத்தின் தாக்கம் கல்வியிலும் ஊடகத்திலும் இருந்ததால் பெருபாலானோர் இதை அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தமிழர்கள் கிறிஸ்துவர்களா? தமிழர்கள் முஸ்லிம்களா? இந்த இரண்டு தத்துவங்கள் பாரத தேசத்தில் பிறந்தது இல்லை தானே என்று சிந்திக்கிறவன் இந்த வாதத்தில் பா... பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைப்பான் தானே?! உண்மையில் உண்மையை உண்மையாக தேடுகிறவன் நிச்சயம் நினைப்பான்.

இராமன் தமிழன் இல்லை, இராவணன் தான் தமிழன்  என்கிறார்கள். ஒரு பக்கம் பிராமணர்கள் ஆரியர்கள் என்கிறார்கள். இராமனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார்கள். ராமாயணம் கட்டுக் கதை என்கிறார்கள்.

இந்த கட்டுக்கதை பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பு இருக்கிறதே எப்படி?!

தமிழர்கள் கட்டிய கோவில்களில் ராமாயணம் பற்றிய குறிப்பு தொடர்ந்து இருந்து வந்து இருக்கிறதே ஏன்?

புறநானூற்று பாடலில் ராமன் பற்றிய குறிப்பு இருக்கிறதே ! அதுவும் இவர்கள் எந்த சாட்சியும் இல்லாமல் இடைச்சொருகல் என்பார்களே அந்த ரகமா?

 

 இப்படியாக பகுத்தறிவின் துணையோடு எது உண்மை, எது பொய்யென சிந்திக்கிறவன் அறிவாளியா  இல்லை இந்த பொய்களை அப்படியே ஏற்கிறவன் அறிவாளியா? இவர்களில் யார் உண்மையிலேயே பகுத்தறிவாளர்.

இராவணனின் தந்தை ஒரு பிராமணர், தாய் அரச குடும்பத்தை சேர்ந்தவள். ராவணன் நான்கு வேதங்களை கற்று இருந்தான். லிங்கா படத்தில், கோவிலில் திருடச்  சென்று மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க ரஜினி கோவிலில் இறைவனை வணங்குவது போல காண்பிக்கப்படும் காட்சியில், நம்மை தட்டி எழுப்புவது போன்று ஒரு சம்ஸ்கிருத பாடல் ஒலிக்கும், அதை எழுதி இசைமைத்தது .ஆர். ரகுமான் இல்லை, இராவணன்.

அவனைப் பற்றிய நற்செய்திகளை எல்லாம் பதிந்து, திறமை, தகுதி என எல்லாம் இருந்தும் அறம் தவறியதால் அவன் வீழ்ந்தான் என்று தமிழ் சமூகம் பக்தி இலக்கியங்களில் பதிவு செய்து வைத்து இருக்கிறதே! அப்படி ஒருவனை இந்த திராவிடக்கூட்டம் தூக்கி கொண்டாடுகிறதே என்றெல்லாம் சிந்திக்கிறவன்;  இராவணன் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறியுள்ள விசயங்களைத்  தெரிந்தவன். யார் இந்த திராவிட கோமாளிகள், சமஸ்கிருதத்தில், சிவ தாண்டவ சாஸ்த்ரம் இயற்றிய, இவர்கள் வெறுக்கும் நான்கு வேதங்கள் கற்ற பிராமணனின் மகனை தமிழன் என்கிறார்களே என்று திராவிட கூட்டத்தை எள்ளி நகையாட மாட்டான்?

சமீபத்தில் கொல்லிமலை சென்றிருந்தேன். எழுபது கொண்டை ஊசி வளைவுகள், உதகை கொடைக்கானல் போல அல்லாமல் மிகவும் குறுகலான சவாலான வளைவுகள், இன்றைய வாகனங்களின் வசதியோடு மலையேறுவதே சிரமமாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் உட்பட மற்ற படையெடுப்பாளர்கள் யாரும் அந்த மலையை ஏறியதாக தெரியவில்லை. சுதந்திரத்திற்கு பின்னர் தான் சாலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.அங்கே மலையில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. சிவனின் பெயர் அறப்பளீஸ்வரர், அம்மனின் பெயர் அறம் வளர்த்த நாயகி.

(இந்த திராவிடக் கூட்டம் வைத்த சாலை வழிகாட்டிப் பலகைகளில் அரப்பளீஸ்வரர் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இவர்கள் தமிழை காக்கும் லட்சணம் இப்படி இருக்கிறது. அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.)

மிகவும் சவாலான அந்த மலைக்காட்டு பகுதியை, நமக்கு கிடைத்திருக்கும் வரலாற்று தகவல் படி, இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்து வல்வில் ஓரி என்கிற மன்னன் ஆண்டு வந்து இருக்கிறான். அந்த கோவில் கல்வெட்டுகளில்  சோழர்கள் முதல் விஜய நகர பேரரசு வரை அந்த கோவிலுக்கு திருப்பணி செய்ததாக குறிப்புகள் இருக்கின்றன.

நிச்சயமாக ஒற்றை அரசன் மலைக்காட்டில் இப்படியொரு சிவாலயத்தை தனியாக அமைத்து விட முடியாது.

தமிழர்கள் தெலுங்கர்கள் என்று இந்திய அரசர்களும்  அவர்கள் சார்ந்த மக்களும் பண்நெடுங்காலமாக அந்தக் கோவிலை  சவாலான அந்த இடத்தில் கட்டியெழுப்பி பராமரித்து வந்து இருக்கிறார்கள்.

அத்தனை கடினமான மலைப்பாதை தந்த மலைப்பில் இருந்து மீள்வதற்குள் இங்கு வந்து இப்படியொரு கோவிலை எப்படியடா எழுப்பினீர்கள் என்று அதை விட பெரிய மலைப்பை தந்தது அந்த கோவில். 1196 படிகளை மலை பாறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.ஒரு அருவியை காணும் வழி செய்து இருக்கிறார்கள்.

சவாலாக இல்லாமல் எளிதில் சென்று சேரும் வகையிலான மலைக்காடாக அது இருந்திருந்தால், அந்தக் கோவிலை, சர்வே கல் நட வந்த அதிகாரிகளின் கேம்ப் என்று அவர்கள் கூறினாலும் கூறியிருப்பார்கள்.

ஆம். அவர்கள் அப்படி செய்யக்கூடியவர்கள்  தான்.

சிவனின் சீடரான பிருங்கி முனிவர் தவம் புரிந்ததாக அறியப்படும் பிருங்கி மலை தான் இன்று புனித தோமையர் மலையாக அறியப்படும் பரங்கிமலை.

16ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் நம்மை படையெடுத்து வந்ததும், இந்த மலையில் தான் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த இயேசுவின் சீடர் மரித்தார் என்றார்கள். பின்னர் அவர்களாகவே அங்கே ஒரு சிலுவையை கண்டெடுத்தார்கள். அது தோமையர் மலையாக ஆகிவிட்டது.

நான் ஒரு கிருத்துவனாகவே இருந்தாலும் என் நாட்டை படையெடுத்து வந்தவர்கள் விட்டுச்சென்ற அவர்களின் அடையாளமாகத் தானே அதை நான் பார்க்க வேண்டும்.

இயேசுவை ஏற்பதும், படையெடுப்பின் எச்சங்களை ஏற்பதும் எப்படி ஒன்றாகும்?!

மனிதர்கள் செல்வதற்கு சவாலான இடத்தில் சிவனையும் முருகனையும் பெருமாளையும் தானே எம் முன்னோர்கள் கோவில் கட்டி வழிபட்டிருக்கிறார்கள் என்று கேட்கிற ஒருவன் தானே நடுநிலையானவன்.

கேட்டால் சைவம், வைணவம் என்பார்கள். வைணவம் ராமரை போற்றுகிறதே என்றால், சமணத்திற்கு சென்று விடுவார்கள். ஸ்ரீ ரங்கம் கோவில் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பு இருக்கிறது என்றால், ஒருவர் சமணர் கோவில்களை இந்து கோவில்களாக மாற்றி விட்டார் என்று சண்டைக்கு வருகிறார். இதெல்லாம் திராவிட சித்தாந்தம் செய்த மூளைச் சலவை.

பிருங்கி மலையை தோமையர் மலையாக மாற்றியதையும், திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்ற திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலையாக மாற்றியதையும் இப்போது நாம் பேசக்கூடாது, பேசினால், மத வெறி பிடித்தவர்கள் பட்டியலில் நம்மை சேர்த்துவிடுவார்கள். இந்த அச்சமும் தயக்கமும் தான் திராவிட கூடாரத்தின் பலம். அதையெல்லாம் பேசக் கூடாது. ஆனால், அயோத்தி பற்றி மீண்டும் மீண்டும் பேசலாம்.

ஒரு நாள் ஒரு விளக்கு ஏற்றிக்கொள்ளுங்கள் என்று முடிந்து இருக்க வேண்டிய பிரச்சனையை, ஐயோ கொல்றாங்க கூட்டம், ஐயோ இதை அயோத்தி ஆக்கப் பார்க்கிறார்கள் என்றதும். இதை ஆராய்ந்தால், நம்மை மத வெறி பிடித்தவன் என்று சொல்லிவிடுவார்கள் என்று, இங்கு அநேகம் பேர், தி.மு. வீழ்த்தப்பட்ட வேண்டிய கட்சி என்பதற்காக பா..வை உள்ளே விடக்கூடாது என்கிற மனநிலையோடு மறைமுகமாக தி.மு.கவை ஆதரிக்கிறார்கள். 

இதுவே தி.மு.கவின் வெற்றி தான், திராவிட கூட்டத்தின் பொய்களுக்கு எதிரிகளாக இருக்கும் பா... விற்கு எதிராக மக்களின் மனநிலையை வைத்து இருப்பதே திராவிட கூடாரத்தின் வெற்றி தான்.

சரிப்பா! பா.. எது செய்தாலும் ஏன் வெறுக்கிறீர்கள்?” என்று கேட்டால், அவர்கள் வந்தால் மதக் கலவரம் வரும் என்கிறார்கள்.அவர்கள் திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்கப்  பார்க்கிறார்கள் என்கிறார்கள். “சரிப்பா! அயோத்தியில் என்ன நடந்தது?” என்று கேட்டால்? பா... மசூதியை இடித்து விட்டது என்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் பிரச்னையும் அயோத்தி பிரச்சனையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்குவதற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. 16ம் நூற்றாண்டில், பாபர் மசூதி கட்டப்படுகிறது. படையெடுப்புகளின் பொழுது தமிழகத்திலும் சில கோவில்கள் தாக்கப்பட்டது தான் என்பதெல்லாம் மறுப்பதற்கில்லை. அந்த மசூதியும் கோவிலை  இருந்த இடத்தில் கட்டப்பட்டது தான் என்பதும் நிறுவப்பட்டு இருக்கிறது.  அது கட்டப்பட்டு ஒரு 80 ஆண்டுகளுக்குள் கிழக்கு இந்திய கம்பெனி உள்ளே வருகிறது. அவர்கள் வந்த பின்னர் தான் பல விஷயங்கள் ஆவணப்படுத்தப்பட்டது. அப்படி அயோத்தியில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் கலவரம் 1853இல் நடந்து இருக்கிறது. மசூதி கட்டப்பட்ட ஆண்டில் இருந்து தோராயமாக  300 ஆண்டுகளில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் கலவரம் நடக்கிறது.

நான்கு தலைமுறையாக அங்கிருந்த மக்களுக்கு அது  சொல்லப்பட்டு அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கலாம்; நம்முடைய கோவில் இடிக்கப்பட்டு தான் மசூதி கட்டப்பட்டு இருக்கிறது என்று. ஆவணப்படுத்தப்படாத கலவரம் அதற்கு முன்னரும் நிகழ்ந்து இருக்கலாம்? பிரிட்டிஷ்காரர்கள் மசூதி இடத்தை பிரித்து வெளியில் ஒரு மேடையில் ஹிந்துக்களை வழிபாடு நடத்திகொள்ளச் சொல்கிறார்கள். சரி! அந்த மேடையில் ஒரு கூரை போட்டுக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைக்கிறார்கள், அந்த கோரிக்கையை ஆங்கிலேயே அரசின் நீதிமன்றம் நிராகரிக்கிறது.அதன் பின் அங்கு யாரோ ஒரு சிலையை கொண்டு வைக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து  சர்ச்சைக்குரிய சொத்து என்று  மசூதி மூடப்படுகிறது.

அதன் பின் பல்வேறு வழக்குகள் நடக்கிறது. ஆங்கிலேயே அரசின் காலத்திலேயே அங்கே ஒரு கூரை போட்டு வழிபாடு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தால், இது அப்போதே கூட முடிந்து இருக்கும். ஒரு கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுக்கொண்டே வரும் பொழுது அது விஸ்வரூபம் எடுக்கிறது.கோவில் கட்ட வேண்டும் என்பதை இந்து அமைப்பினர் தேசம் தழுவிய பிரச்சாரமாக எடுத்துச்செல்லுகிறார்கள். மசூதி அருகே கோவில் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்கள்.1990 இல் பா... ரத யாத்திரை மேற்கொள்கிறது. 1992இல் கர சேவகர்கள்  கூட்டம் அங்கே கூடி  மசூதி இடிக்கப்படுகிறது. பெரும் கலவரம் வெடிக்கிறது. அங்கே கூடியவர்கள் நிச்சயமாக காசு கொடுத்து அழைக்கப்பட்டு வந்தவர்கள் இல்லை. அவர்களை மூடர்கள் என்றும் கூட சொல்லாம். அவர்கள் எப்படி மூடர்கள் ஆனார்கள். திருப்பரங்குன்றத்தில், யார் கேட்டுக்கொண்டும் வியாபாரிகள் கடையடைக்கவில்லை என்கிறார்கள். யாரோ ஒருவர் தூண்டினாலும்  கூட அத்தனை பெரிய கூட்டம் எப்படி கூடி மசூதியை இடித்தது. பா... ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூட அந்த நிகழ்வை பெரும் பிழையாக நினைத்து வருந்துகிறார்கள் என்கிற பொழுது. யாரோ சிலர் உந்தினாலும் கூட எப்படி அத்தனை பெரிய கூட்டம் கூடும்.சாதாரண கடையடைப்புக்கே ஒரு கூட்டத்தை ஒப்புக்கொள்ள வைக்க முடியாத பொழுது இது எப்படி சாத்தியமாகி இருக்கும்?

காரணம், அங்கே ஒரு கூட்டத்தின் கோரிக்கை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்த கோணத்தில் யாரும் இதை சிந்திக்க மாட்டார்கள். சிந்தித்தால் அவன் சங்கி, மத வெறி பிடித்தவன்.வன்முறை கண்டிக்க பட வேண்டியது தான். அதே வேளையில் உணர்வுகளுக்கு எதிரான வன்முறைகளும் தவிர்க்கப்பட வேண்டும் தானே, அந்த இடத்தில் கோவில் இருந்தது என்பதும் பல கோவில்கள் படையெடுப்பின் பொழுது இடிக்கப்பட்டது என்பதும் உண்மை தானே.

1992-ல் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி, கோவில் இருந்ததற்கான சான்றுகளை நிறுவுகிறது. ஒரு பக்கம் வழக்கு நடந்து கொண்டே இருக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றம். ஆளுக்கொரு பங்காக இடத்தை பிரித்துக்கொள்ளுங்கள் என்று சட்டப்படி இல்லாமல் ஒரு சமரசமான தீர்ப்பை தருகிறது. இந்த தீர்ப்பு அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டு இருந்தால், பின்னால் பல சட்ட சிக்கலுக்கு காரணமாக, ஒரு தவறான முன்னுதாரணமாக அது அமைந்திருக்கும்.

பா.. ஆட்சிக்கு வந்ததும் 2019 இல் பல நூறு வருடமாக இருந்து வரும் சிக்கலை முடித்து வைக்க வேண்டும் என்று அந்த வழக்கு விசாரணையை தினந்தோறும் நடக்கச் செய்கிறது.

 வழக்கு முடித்து வைக்கப்பட்டு, மசூதி கட்ட அயோத்தியிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. மசூதி கட்ட முன்மொழியப்பட்ட வடிவத்தை இஸ்லாமியர்கள் ஏற்கவில்லை என்று புதிய வடிவம் கொடுத்து, அதற்கு அனுமதி பெறுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதோடு, பணம் திரட்டுவதிலும் கொஞ்சம் சிக்கல் இருப்பதாக தெரிகிறது.இல்லையேல் இந்நேரம் மசூதியும் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்.

இதை உள்ளபடியே அணுகுகிறவர்கள், ஒரு நானூறு வருட சிக்கல் தீர்த்துவைக்கப்பட்டிருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்வார்கள். கோவில் இடிக்கப்பட்டதை சகித்துக்கொண்டு வழிபாடு நடத்த அனுமதி கேட்டு பல தலைமுறையாக கோரிக்கை வைத்துக்கொண்டவர்களை பற்றி இங்கே யாரும் பேசுவதில்லை தான். காரணம் இது திராவிட நாடு ஒரு நீண்ட நெடிய வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் எடுத்துக்கொள்வது. எப்படி அறிவாகும்?!  

வரலாறு என்றதும் இந்த திராவிட கூடாரம் திரித்த வரலாறை தான் இங்கே பலர் வரலாறு என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.ஆம்! திராவிட கூடாரம் தான் வரலாற்றை அதிகம் திரித்துக்கொண்டு இருக்கிறது. இரண்டு பேர் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அங்கே ஒருவன்  ஒருவனை அறைந்துவிடுகிறான். இரண்டாமவன், சத்தமிட்டபடி அறைந்தவனை அடிக்க பாயும் பொழுது அங்கே கூட்டம் கூடுகிறது. கூட்டம் என்ன நினைக்கிறது. இரண்டாமவன் தான் சண்டையை ஆரம்பித்தான் என்று நினைக்கிறது. இங்கு இப்படியான பிரச்சனைகளில் பா... இரண்டாமவனாக தான் இருக்கிறது.

இந்திய மண்ணை தாய் மண்ணாக கருதுகிறவனும், புண்ணிய பூமியாக கருதுகிறவனும் ஹிந்து என்ற சாவர்க்கரை ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர் என்று சொல்லி, ஆங்கிலேயர்கள் காலை நக்கிய கூட்டம் என்ற கருத்தை திராவிட கூட்டம் பரப்பும் பொழுது,  ஆங்கிலேயே அரசை எதிர்த்து போராடியவன் தானே கொடுமையான தண்டனை பெறுவான், தண்டனை பெறுகிற ஒருவன் தானே மன்னிப்பு கடிதம் எழுதுவான் என்று சிந்திக்கிறவன் எதை தேடுவான். ஏன் காந்திக்கோ நேருவுக்கோ மரண தண்டனை விதிக்கப்படவில்லை,அவர்களை எல்லாம் ஏன் மன்னிப்பு கடிதம் எழுதிய  சாவர்க்கர் அடைக்கப்பட்ட அந்தமான் சிறையில் அடைக்கவில்லை. நம் பாடப்புத்தகத்தில் படித்த .வே.ராவும்  அண்ணாவும் சுதந்திர போராட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால்,எல்லோரும் சமம் என்று பேசியதாக அறியப்படும் .வே.ரா ஆங்கிலேயர்கள் தான் உசத்தி நீங்கலாம் ஒரு குண்டூசி செய்ய கூட லாயக்கில்லை என்று பேசிக்கொண்டு திரிந்து இருக்கிறார்.நேருவும் காந்தியும் உயர் ரக கைதிகளாகவே தான் நடத்தப்பட்டு இருக்கிறார்கள். இப்போதைய அரசியல்வாதிகளை மண்டபத்தில் வைத்து அனுப்புவதற்கு ஒப்பான கைதிகளாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தமட்டில், நாம் புத்தங்கங்களில் படித்த சுதந்திர போராட்டம் என்பதே ஒரு மாயை தான். சுபாஷ் தலைமறைவாக இருந்தார் என்பதற்காக அவர் ஆங்கிலேயர்களை கண்டு பயந்தார் என்று சொல்ல முடியுமா? டாடாவும் விவேகானந்தரும் தேச விடுதலைக்காக போராடவில்லை என்று அவர்களை தேசாபிமானிகள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ஆங்கிலேர்களுக்கு முன் முகலாயர்களின் அடிவருடிகளாக யாரும் இருந்திருக்கவில்லையா?  ..சி. அவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனை பெற்றதும் அவரும் அவர் ஆதரவாளர்களும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறார்கள், தண்டனை கொடுத்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தான் மேல் முறையீடு செய்தார்கள். வீரமாக போராடினேன், கைது செய்தால் செய்து கொள்ளுங்கள் என்று அவர் இருக்கவில்லை. பகத் சிங் கொலை செய்துவிட்டு தப்பித்துச் செல்லுகிறார். அதன் பின் எதற்காக கொன்றோம் என்பது தெரிய வேண்டும் என்பதால் அவரும் அவர் கூட்டாளிகளும் அதை  பிரபலப்படுத்துகிறார்கள். அவர் முதலில் தப்பி ஓடியது கோழைத்தனம் என்றாகிவிடுமா?வரலாறு நமக்கு வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அர்த்தங்களை கொடுக்கும். ஆனால், உண்மை ஒன்று தான்.

நேருவை விடவும், காந்தியை விடவும் தீவிரமான தண்டனை பெற்ற ..சி.போன்றவர்களில் ஒருவர் தான் சாவர்க்கர்.

நம்ம தான் உயர் சாதி என்று நினைத்தால் இந்த பிராமணன் நம்மையே மதிக்க மாட்டுறான் என்று பிராமணர்களை எதிர்த்து கிளம்பியவர் தான் பெரியார். 1927-ல் ஹிந்தி பயிற்சிக்கு வீட்டை கொடுத்த பெரியாரை வைத்துக்கொண்டு தான் ஹிந்தி எதிர்ப்பு பேசுகிறார்கள்.

ஆங்கிலேயேர் தான் உசத்தி நீயெல்லாம் முட்டாள் என்று தாழ்த்தி பேசியவரை வைத்துக்கொண்டு தான் இவர்கள் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். மூடநம்பிக்கையை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இஸ்லாமை மட்டும் ஆதரித்து, இவர்களின் தனி நாடு கோரிக்கைக்கு ஜின்னா ஆதரிக்கவில்லை என்று பிற்காலத்தில் இஸ்லாத்தையும் தூற்றியவரை வைத்துக்கொண்டு தான் சிறுபான்மையின காவலர்கள் என்று மார்த்தட்டிக்கொள்கிறார்கள்.

இந்த பாதுகாவலர்கள் அயோத்தியில் மசூதி கட்ட பெரியார் சொத்துக்களால் வளர்ந்து நிற்கும் கல்வி நிறுவனங்களின் ஒரு வருட வருமானத்தை கொடுத்திருக்கலாம். இங்கே இவர்கள் பெரியாரை தூக்கி பிடிக்கிறார்கள். ஆனால், அண்ணாவோ  பெரியாரின் வாரிசு அரசியலை எதிர்த்து தி.மு.கவை தொடங்கினார். என் சொத்தை அபகரிக்கத் தான் இந்த கூட்டம் இப்படி செய்கிறது என்று பெரியார் விமர்சித்தார்.

தி.மு. பெரியாரை விமர்சித்தது. தி.மு.. வை எதிர்க்க பெரியார் அவர் எதிர்த்த பிராமண கூட்டத்தை சேர்ந்த ராஜாஜியோடு சேர்ந்துகொண்டார். தி.மு.கவை எதிர்க்க அவர் எதிர்த்த காங்கிரசை சேர்ந்த காமராஜரை ஆதரித்தார். இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?

தனி நாடு கோரிக்கை என்பது அவர்களின் அரசியல் ஊறுகாய் மட்டுமே தான் என்பது அண்ணாவிற்கும் தெரிந்தே தான் இருந்தது.

திராவிடக் கூடாரம் இங்கே பல பொய்களை கட்டமைத்து வைத்திருக்கிறது.அந்த பொய்களைத் தான் சமூகம் உண்மை என்று நம்பிக்கொண்டிருந்தது.

பாஜக வுடனான சண்டையில் திராவிட கூடாரத்தின் பொய்கள் தற்போது வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த பொய்களும் ஹிந்து விரோத போக்கும், வரலாற்று உண்மைகளை லாவகமாக தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் திராவிட கூடாரத்தின் போக்கும்  பா..கவின் கைகளை தான் ஒங்கச் செய்துகொண்டிருக்கிறது.எப்படி என்று கேட்பீர்கள் என்றால்? திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார்கள் என்கிற இவர்களின் கோஷத்தை நாம் ஆராயப் போனால், திருவள்ளுவர் நெற்றியில் இருந்த பட்டைய எடுத்துவிட்டு அவருக்கு வெள்ளை துணி போர்த்திவிட்டது திராவிடக் கூடாரத்தின் வேலையாக இருக்கிறது.

வள்ளலார் நெற்றியில் இருந்த பட்டையை நீக்கி விட்டார்கள். திருமந்திரத்தில் இருந்த விநாயகர் வணக்க பாடலை நீக்கிவிட்டார்கள். எப்படி இங்கே பரங்கி மலை தோமையர் மலை ஆனதோ அப்படி மண் சார்ந்த அடையாளங்கள் எல்லாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறவன் பா.. பக்கம் நியாயம் இருப்பதாக தான் நினைப்பான்.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியர், முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும், மண்ணின் அடையாளங்களான பழம்பெரும் கோவில்களை தங்களுடையதாக நினைத்து கொண்டாடி காப்பாற்ற வேண்டும்.மண்ணின் மொழிகளை போற்ற வேண்டும், அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, சமஸ்கிருதமும் தமிழும் மண்ணின் மொழி என்று ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல் வேண்டும். கீதை திருமந்திரம் எல்லாம் படிக்க வேண்டும். இறைவன் உருவமற்றவர் என்பதை தான் இரண்டும் சொல்கிறது.  ரமணர் போன்று உடலை விட ஆன்மாவை பெரிதாக கருதியவராகத் தான் இயேசுவை பார்க்க வேண்டும் என்று அவை நமக்கு கற்று தருகிறது.

உண்மையான ஒரு பகுத்தறிவாளி பொய்களாலும் சந்தர்பவாதங்களாலும் கட்டமைக்கப்பட்ட திராவிட கூடாரத்தின் பக்கம் சாய மாட்டான். அந்த கூடாரம் கட்டமைத்த பொய்களை அறிவென்று நம்பவும் மாட்டான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *