இந்த இராவண அரசியல் பகுதியை நாம் தொடங்கிய பொழுது, தமிழ் சமூகம் ஏன் இராவணனைக் கொண்டாடாமல் இராமனை முன்நிறுத்திக் கொண்டாடியது என்பதையும்; அரசியல் காரணங்களுக்காக இராவணனை நாயகனாக முன்னிறுத்துவது சமூகப் பிழை என்பதையும்; தமிழ் சமூகம் கொண்டாடிய இராமனை இந்த திராவிட அரசியல்வாதிகள் வில்லனாக்கியது போல இன்னும் எதையெல்லாம் திரித்தார்கள், திரித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று இவையெல்லாம் பற்றி எழுதுவது தான் நம் நோக்கமாக இருந்தது.
இந்தத் தொடரின் கடைசிப் பகுதியாக நாம் எழுத நினைத்தது, சீதையை ஏன் இராமன் ஒதுக்கினான் என்பதைப்பற்றி. தொடர், நின்று நீண்டு தொடர்ந்து கொண்டே இருந்தது. பிரபஞ்சத்தில் எதற்குத் தான் முடிவு என்று ஒன்று இருக்கிறது, முடிவுகள் எல்லாமே மற்றொன்றின் தொடக்கமாகத் தானே இருக்கிறது!
பல நேரங்களில், எந்தக் கட்டுரையை எப்போது எழுதலாம் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை, காலமே தான் தீர்மானிக்கிறது. எழுத உட்கார்ந்த பின் நம்மைக் கொண்டு காலமே தான் அதை எழுதியும் முடிக்கிறது.
போர் முடிந்ததும் சீதையை இராமனின் கட்டளையின் பேரில் இராமன் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
இராமன், அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தையும், அவன் வம்சத்திற்கு ஏற்பட்ட களங்கத்தையும் நீக்கவே தான் போரிட்டு சீதையை மீட்டதாக அறிவித்து, பேரழகான ஒரு பெண், நீண்டகாலம் மற்றொரு ஆடவனின் (இராவணன்) மாளிகையில் தங்கியிருக்கும்போது, அவளைத் தீண்டாமல் இருக்க அந்த இராவணனால் எப்படி முடியும்? என்று பொதுவில் அனைவர் முன்னிலையிலும் சந்தேகத்தை எழுப்புகிறான். அவளை ஏற்றுக்கொள்ள முடியாது, அவள், அவளின் விருப்பம் போல் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம், யாரிடம் வேண்டுமென்றாலும் அடைக்கலம் பெறலாம் என்கிறான்.
இன்றைய சூழலில், வெளி உலக அனுபவங்களை ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கொண்டிருந்தாலும் கூட, ஆண்கள் புரிந்துகொள்கின்ற சில விஷயங்களைப் பெண்களால் அதே போன்று புரிந்து கொள்ள முடிவதில்லை. சில கடினமான சந்தர்ப்பங்களில், ஆண்கள் பேசும் வார்த்தைகள், செய்யும் செயல்கள் இவற்றையும்கூட சரியாகப் பெண்கள் புரிந்து கொள்வதில்லை.
மஹாலக்ஷ்மியின் அவதாரமாகக் கருதப்பட்டு இளவரசியாக வளர்ந்த சீதைக்கும், இராமன் ஏன் பொதுவில் எல்லோர் முன்னிலையிலும் இப்படி செய்ய வேண்டும் என்று புரியவில்லை. அவளுக்கு உடனே கோபம் வருகிறது.
“இப்போது ஏன் யாரோ ஒருவருடன் பேசுவது போலப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்கிறாள். கணவன் மனைவிக்குள் நடக்கும் ஊடல்களின் பொழுது இப்போதும் இது நடக்கும், பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு இருவருமே யாரோ ஒருவருடன் பேசுவது போலப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
இந்தக் கோபத்தின் நீட்சியாக அவள் இலக்குமணனைத் தீ மூட்டச் சொல்கிறாள். “எங்கேயாவது, எங்கே செல்வது? இராமனை விட்டால் நெருப்பு தான் எனக்கு அடைக்கலம் தரவேண்டும்” என்று நெருப்பில் இறங்குகிற முடிவை அவளே தான் எடுக்கிறாள்.
புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு இடையில் இருக்கிறவர்கள் நிலைமை தான் இலக்குமணன் நிலை. அவனுக்கு இரண்டு பேர் பேரிலும் கோபம், ஆனால் இரண்டு பேரையும் ஒன்றும் சொல்ல முடியாமல், இராமன் ஏதாவது சொல்லமாட்டானா என்று அவன் அண்ணனைப் பார்க்கிறான். இராமன் மௌனமாக இருக்கவும் அண்ணி சொன்னதை அப்படியே செய்கிறான். அத்தனை கோபத்திலும், இலக்குமணன் எப்படி இரண்டு பேருக்கும் அப்படிக் கீழ்ப்படிந்து இருக்கிறான் பாருங்கள். அண்ணி நெருப்பு மூட்டச் சொல்கிறாள் மீற முடியாது, மீறவேண்டும் என்றால் அண்ணன் அதை மறுக்க வேண்டும். அண்ணன் மறுக்கவில்லை. அவனுக்கு இராமன் பேசியதிலும் வருத்தம், சீதையின் முடிவிலும் வருத்தம். இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்கள் இருவரையும் எப்படி மதித்து இருக்கிறான் பாருங்கள். ஏன் டா நெருப்பு வைக்கச் சொன்ன உடனே வைக்கிறது மதிக்கிறதா?
சில சமயங்களில், நம்மை விட அனுபவத்தில் சிறந்த சிறியவர்கள் அல்லது முதிர்ந்த அனுபவம் கொண்ட பெரியவர்கள் சில விஷயங்களைத் தீர்க்கமாகச் சொல்லும் பொழுது, அதில் நமக்கு விருப்பம் இல்லை என்றாலும் அதை அப்படியே கேட்டு நடப்பது தான் நன்மையைச் செய்யும். மிக எளிமையான உதாரணம், படிக்கச் சொல்லி எல்லோர் வீடுகளிலும் நிர்பந்திக்கிறார்கள், கண்டிக்கிறார்கள், எனக்குப் பிடிக்கவில்லை என்னை சுதந்திரமாக இருக்க விடுங்கள் என்று இருந்தவர்கள் தறுதலைகள் என்று பட்டம் பெற்றார்கள், கீழ்ப்படிந்து கேட்டவர்கள் படித்துப் பட்டம் பெற்றார்கள்.
இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும், நமக்குப் பல நல்ல விஷயங்களைச் சொல்கிறது.என்னைக்கேட்டால், லக்ஷ்மணனிடம் இராமனை விட அதிக நல்ல குணங்கள் இருந்தது என்று நான் சொல்வேன்.
இலக்குமணன் தீ மூட்டி விட்டான். சீதை, நெருப்பில் இறங்குவதற்கு முன் இராமனை சுற்றிவந்து, என்னுடைய இதயம் ராமனிடம் மட்டுமே இருந்தது உண்மை என்றால், உலகத்திற்கு சாட்சியாக இருக்கும் அக்னி என்னைக் காப்பாற்றட்டும் என்று இறங்குகிறாள். அதில் இறங்கி நடந்து தன் உடைக்குக் கூட பங்கம் நேராமல் வெளியே வருகிறாள்.
இது வானரர்கள், அரக்கர்கள் என்று இன்னும் பலர் முன்னிலையில் நடக்கிறது. அக்னியில் இருந்து வந்த சீதையை ஏற்றுக்கொண்ட ராமன் எல்லோர்க்கும் அறிவித்தது: உண்மையில் எனக்குச் சீதை மீது எந்தச் சந்தேகமும் இல்லை, அவளின் மனஉறுதியே அவளைக் களங்கமற்றவளாக வைத்திருக்கும், அதுவே அவளைக் காக்கும், உலகர் அனைவருக்கும் அது தெரிய வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தோம் என்று அறிவிக்கிறார்.
பருத்தி வீரன் திரைப்பட வசனத்தில் வருவது போல, அந்த வெண்ணெய்களுக்குத் தெரிஞ்சா என்ன தெரியலன்னா என்ன?
இராமன், அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். பொதுநலத்திற்காகவும் தர்மத்திற்காகவும் மட்டும் ஆயுதம் ஏந்த வேண்டிய சத்திரியன். இப்போது அவன் பாதுகாப்பில் இருந்த அவனுடைய மனைவியை வேற்று நாட்டு அரசன் ஒருவன் கடத்திச் சென்றுவிட்டான் என்றால், அவன் நாடகமாடிக் கடத்திச் சென்றுவிட்டான் என்று சப்பைக்கட்டினாலும்
கதையாகாது. அந்த நேரத்தில் அவன் அரசன் இல்லை என்றாலும் கூட அது அவன் சார்ந்த மொத்த தேசத்திற்கும் இழுக்கு தான்.
மன்மோகன் சிங் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் எழுப்பப்படவில்லை. காங்கிரஸ் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு எப்படி மொத்த ஆட்சியின் மீது ஒரு ஊழல் கறையை ஏற்படுத்தியது, அது போல, அந்த சமயத்தில் அரசனாக இருந்த பரதனையும் அவன் மக்களையும் மற்ற தேசத்தினர் பழித்துப் பேச வாய்ப்பிருந்தது. நீங்கள் எல்லாம் எப்படி நாட்டைக் காப்பாற்றுவீர்கள், குடும்பத்தில் இருக்கின்ற பெண்ணையே ஒருவன் கடத்திச் சென்றுவிட்டான் என்கிற பேச்சுக்களுக்கு இடமிருந்தது.
அதன் பொருட்டே, போரில் வெற்றி பெற்றதும், என் காதல் மனைவி எங்கே, உடனே அவளிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள் என இராமன் அவசரம் காட்டவில்லை. யுத்தத்திற்குக் காதலும் ஒரு காரணமாக இருந்தாலும் கூட, வெற்றி பெற்றதும் தனக்கும் தன் ரகு வம்சத்திற்கும் ஏற்பட்ட களங்கத்தைப் போக்கவே யுத்தம் செய்து சீதையை மீட்டோம் என்கிறான் இராமன்.
நம் நாட்டின் மீது ஏதோ ஒரு தாக்குதல் நடக்கிறது. ராணுவம் பதிலடி கொடுக்காமல் இருந்தால், என்ன நடக்கும்? அந்த நாட்டின் ராணுவத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படாது? உடனடியாகவோ மெதுவாகவோ ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படியான பதிலடி தான் இது என்பது இராமனின் முதல் அறிவிப்பு.
வானரர்களிலும் அரக்கர்களிலும் வரைமுறைகள் ஏதும் கிடையாது. வாலிக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த சண்டைக்கும் அது தான் காரணம். சத்திரியர்களிலும் கூட ஆண்களுக்கு எந்த வரைமுறையும் இருக்கவில்லை. சீதைக்காக இந்த போர் நடக்கவில்லை என்ற இராமன் சீதையைப் பிரிந்திருந்த பொழுதும் யாரையும் மணந்து கொள்ளவில்லை.சீதையை ஒதுக்கி பின் ஏற்றுக்கொண்டது, சீதையை தவிர யாரையும் மணக்காமல் இருந்தது என்று ராமன் எல்லா தரப்பினருக்கும் அங்கே ஒரு வாழ்வியல் எடுத்துக்காட்டை முன்வைக்கிறான்.ஆண்களில் இராமன் கிடையாது என்கிற வாலியின் வரிகளை நாமே கூட ஆமோதித்து எழுதியிருக்கிறோம். இங்கே குறிப்பிடுவது நாம் குறிப்பிடுவது, தலைவன் தன் மீது இருக்கின்ற களங்கத்தை பொதுவெளியில் நீக்க வேண்டிய கட்டயத்தைப்பற்றி
ராமன் சீதையை நிராகரித்து, அக்னியில் இறங்கி அவள் களங்கமற்றவள் என்று எல்லோர் முன்னிலையிலும் நிரூபணம் ஆன பின் ஏற்றுக்கொண்டு, சீதையின் மனஉறுதியைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளத் தான் அப்படி செய்தேன் என்றது தான் அவனுடைய இரண்டாவது அறிவிப்பு.
தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணை (சீதையை) குற்றவாளிக்கூண்டில் ஏற்றி அவமானப்படுத்துவது தர்மமாகுமா? இது தனி மனித அறமா? சமூக அறமா? என்ற முரண்பாடு இங்கே எழலாம். ஆனால், தனிமனிதர்கள் சேர்ந்ததே சமூகம். சமூக ஒழுங்கு சிதைந்தால் அது ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும். எனவே, மக்கள் தலைவர்களாக இருப்பவர்கள் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதைச் சமூகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.இங்கே வெளிப்படை தன்மை இருந்தால் அதுவே தூய்மை தான்.
ஏன் இப்படி செய்ய வேண்டும்? அதுவும் சீதையைப் பார்த்த உடனே ஏன் அப்படி செய்ய வேண்டும்? (அதைச் சொல்லத்தானே கட்டுரை ஆரம்பித்தாய் சீக்கிரம் சொல்லடா என்று திட்டாதீர்கள்).
சமூகத்தில் எல்லா மக்களும் தெரிகிற உயர்ந்த இடத்தில் இருக்கிறவர்களின் வாழ்க்கையின் தனிப்பட்ட ஒழுக்கங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. முக்கியமாக அரசப்பொறுப்பில் இருக்கிறவர்களின் சுய ஒழுக்கம் எந்த நிலையிலும் தவறான முன்னுதாரணமாகிவிடக்கூடாது.
ராமன் சீதையை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இராமனும் சீதையும் ஆட்சி செய்கிற நாட்டில், ஏதோ ஒரு வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே பிணக்கு ஏற்பட்டு ஒரு விவாதம் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அங்கே பெண்ணின் வாதங்கள் என்னவாக இருக்கும்? ஆளானப்பட்ட மகாராஜா ராமனே இராவணன் இடத்தில் இருந்த சீதையை ஒரு கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு ராணியாக்கி விட்டார். நீ என்னை அத்தனைக் கேள்விகள் கேட்கிறாயா? என்பதாக இருக்கும்.
அரசப்பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் இல்லை, பொதுவெளியில் எல்லோருக்கும் தெரிகிற இடத்தில் இருக்கிற பணக்காரர்கள் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் கூட சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் இருப்பது நியாயம் என்கிற மனநிலை பெருவாரியான இந்தியர்களிடையே உருவாகிக் கொண்டு வருகிறது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் கடன்களைத் திரும்பச் செலுத்தினார்களா என்று சினிமா, ஊடகம் என்று பல இடங்களில் பல பேர் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கடன்கள் திரும்பப்பெறப்படுவது பற்றி சமூகம் தெரிந்து வைத்திருக்கவில்லை.
சமூக ஒழுங்கைக் கருதி, அரசுப் பொறுப்பில் இருக்கிறவர்கள் மீது பொதுவெளியில் ஏற்படுத்தப்படும் சந்தேகங்கள், குற்றச்சாட்டுகளை அவர்கள் பொதுவெளியில் இல்லை என்று நிரூபிக்கவேண்டும். அது தான் சரி. அதைத்தான் ராமன் செய்தான்.
அரசியல்வாதிகள் அப்படித் தான் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கட்சி அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால், மத்திய அரசாங்கம் பழி வாங்குக்குகிறது என்பது. எதிர்க்கட்சி அமைச்சராக இருந்தால், மத்திய அரசு சார்ந்த துறைகளிடம் அதே அமைச்சர் பற்றி புகார் வாசிப்பது, பின்னாளில் கட்சி மாறிவிட்டால் அவர்களை உத்தமர்கள் என்று போற்றுவது. இப்படிச் செய்து இந்த அரசியல்வாதிகள் ஊழலைச் சமூகப் பழக்கம் ஆக்கிவிட்டார்கள். சிந்தித்துப் பாருங்கள் ஊழல் உங்களிடமும் என்னிடமும் கூட இருக்கிறது.
ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டால், பிரதமர் அல்லது முதலமைச்சர், ராமன் எப்படி சீதையிடம் தனிமையில் பேசாமல், பொதுவில் விலக்கி வைத்தானோ அப்படிச் செய்ய வேண்டும். தனிமையில் பேசிக்கொண்ட பின் சீதையை ஒதுக்கியிருந்தால், பேசிவைத்து இப்படி செய்கிறார்கள் என்று இந்த உலகம் சொல்லும் தானே!அந்த அமைச்சர் தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபித்த பின் அவரைச் சேர்த்துக்கொள்ளலாம். இதெல்லாம் பின்பற்றக் கடினமாக இருக்கிறது என்று தான் திராவிடக் கூட்டம் ராமனை எதிரியாக்கிவிட்டது.
பொது வாழ்க்கையில் இருக்கிறவர்களில் தலைவனாக நினைக்கிறவர்கள், இராமனைப் போன்று சில விஷயங்களில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கவே தான் செய்கிறது.
தற்போது, பேசுபொருளாகியிருக்கும், விஜய்யின் விவாகரத்து குறித்தான செய்தி வருவதற்கு முன்னதாகவே அரசியல் கட்சிகளின் அடிநிலை நிர்வாகிகள், சில ஊடகங்கள்(முக்கியமாக முக்தார்), ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் வரை அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பலவாறாக இணைத்துப் பேசி இன்பம் கண்டார்கள்.
எல்லோரும் அவரவர் விருப்பத்தின் பெயரில் இருக்கலாம், ஒரு பெண் தான் விரும்பியதைப் போல இருக்கலாம் என்கிற பெரியாரிய திராவிடச் சித்தாந்தப் பெருமை பேசுகிற தமிழகம், அது அதிகமாகப் பேசும் கொள்கையில் முரண்பட்டு அம்பலப்படுவது இப்படித் தான்.
ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் எப்போதும், அரசியல் பேசுபொருளாகக் கூடாது என்கிற நிலையில் நாம் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். கணவன் மனைவிக்குள் இருக்கிற பிரச்சனையை அரசியலுக்குள் கொண்டு வரக்கூடாது என்பது தான் நம்முடைய வாதமும் கூட.
ஒருமுறை கலைஞர், மனோரமா ஆட்சிக்கு நடத்திய விழா ஒன்றில், தன் இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல், மூன்றாவது மனைவியோடு வாழ்ந்துகொண்டிருந்ததைப் பற்றி ஒரு கடினமான சூழலில், ஆச்சி தான் இரண்டாவது மனைவியிடம் அந்த உண்மையை உடைத்தார் என்று பேசியதை எல்லோரும் சிலாகித்துக் கேட்டுச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு மட்டும் என்ன டா இது? சட்டப்படி, ஒரு தவறான செயலைத் தான் செய்ததை ஒருவர் ஒப்புக்கொள்கிறார் எல்லோரும் ரசிக்கிறார்கள் என்று தோன்றியது. கலைஞரை வெறுப்பவர்களும் கூட அந்தப் பேச்சை ரசிக்கவே தான் செய்தார்கள். ஒருவகையில் இது ஒரு ஆளுமைத்திறன் என்றாலும் கூட, ஒருவர் மீதிருக்கும் அதீத ஈர்ப்பு அவர் மீது இருக்கும் சில குற்றங்களை நம் கண்களில் இருந்து மறைத்துவிடுகிறது.
இது இரண்டு பேரின் தனிப்பட்ட விஷயம் என்று பேசுகிற விஜய் ரசிகர்களே கூட, சங்கீதா என்கிற தனிநபர் முடிவை அரசியலோடு இணைத்துப் பேசுவது தான் முரண்பாட்டின் உச்சம்.
இன்னும் சிலர் விஜய் மீது எய்யப்படும் அம்புகளில் இருந்து அவரைக் காக்க இதையெல்லாம் பேசவே கூடாது, பிழைப்பில்லாமல் இதைப் பேசாதீர்கள் என்கிறார்கள். பொது வாழ்வில் இருக்கிறவர்களுக்கென்று தனியுரிமை இருக்கிறது. ஆனாலும், அவர்கள் சார்ந்த எதையெல்லாம் பொதுவில் வைக்கிறார்கள், எப்படியெல்லாம் அவர்களை நம்மிடம் புகுத்துகிறார்கள் என்பது குறித்து சில விஷயங்கள் மாறுபடுகிறது. நயன்தாராவின் திருமணம் நெட்பிளிக்ஸில் கோடிகளில் விற்கப்படுகிறது என்றால் நாளை அவர் தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்த மற்ற விஷயங்களும் பேசுபொருளாகவே தான் செய்யும். பிழைப்பு இல்லாத நேரங்களில் தான் நாம் திரைப்படங்களுக்கான நேரங்களை ஒதுக்குகிறோம். இன்ஸ்டாவில் உலவுகிறோம். அங்கே, விஜய் த்ரிஷாவுடன் சுற்றியதை நண்பர்கள் உறவினர்கள் வட்டத்திற்கு மட்டும் தெரியும்படி பதிவு செய்யாமல், பொதுவில் எல்லோரும் பார்க்கும்படி பதிவு செய்கிறார். அதை அவரும் அனுமதித்தார் என்கிற பொழுது, அதைத்தாண்டி அதுவே அவரின் மனைவியால் பிரச்சனையாகச் சொல்லப்படும் பொழுது, மக்கள் பேசத்தான் செய்வார்கள்.
இப்படிப் பொதுவெளியில் பிரபலங்கள் அவர்கள் குறித்து வைக்கிற விஷயங்கள் எல்லாம் அவர்களின் Selling Point ஆக இருக்கிறது. சமீபத்தில் ஐயா நல்லகண்ணு இறந்து போனார் அவரின் பெற்றோர் பெயரை தேடிப் பார்க்காமல் நம்மில் யாராவது சொல்ல முடியுமா? ஏனென்றால், அவர் அதைத் தன் அரசியலுக்கான கருவியாகப் பொதுவெளியில் வைக்கவில்லை. ஆனால், அவர் கம்யூனிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரிந்து இருந்தது. மாறாக, விஜய் த்ரிஷாவுடன் பொதுவெளியில் சுற்றியதை, த்ரிஷா விஜய்யின் அனுமதியோடு பொதுவெளியில் புகைப்படமாகப் பகிரும்போதே அது பொதுவிவாதத்திற்கு வந்துவிடுகிறது.இங்கே யாரும் எட்டி பார்க்கவில்லை. அவர்களே எட்டி நீட்டுகிறார்கள்.
என்னுடைய மனைவி யார், என் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் ஒரு அளவிற்கும் மேல் பொது வாழ்வில் இருப்பவர்களால் தங்கள் அளவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஊடகங்களுக்கு இந்தச் செய்திகள் தேவை. பிரபலங்களுக்கு ஊடக வெளிச்சம் தேவை. இந்தப் புரிதலோடு தான் குடும்ப விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார்கள். விதிவிலக்காக ஊடகங்களை அழைத்து எனக்குத் திருமணம் நடக்கப்போகிறது, இது என் தனிப்பட்ட விஷயம், ஊடகங்களில் இருந்து யாரும் வரக்கூடாது என்று அறிவிக்கின்ற பிரபலங்கள் சிலர் தான். ஆனால் அவர்களாலும் கூட குடும்ப விஷயங்களைச் சுவர்களுக்குள் வைத்துக்கொள்ள இயலுவதில்லை.
இதில் விஜய் ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்? யார் யாரையோ காரணம் சொல்லாமல், விஜய்யின் PR குழு மற்றவர்கள் மீது தனிநபர் தாக்குதல் நடத்திய பொழுது கண்டுகொள்ளாமல் இருந்ததைப் போன்று கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். விஜய்க்காகப் பேசுகிறோம் என்று நீங்கள் பேசும் எந்த ஒரு சொல்லும் விஜய்க்கு எதிரான சூழலைத் தான் உருவாக்கும். சுய விருப்பத்தின் பெயரில் நட்பு பாராட்டிய நடிகை, விஜய் மீது பழி சொன்னால் அதை நாம் அரசியல் என்று பேசுவதில் நியாயம் இருக்கிறது. அப்போது நாம் விஜய்யின் தரப்பு நியாயங்களை பேசலாம்.மனைவி கணவர் மீது சொன்ன புகார்களை அரசியல்படுத்தி விஜய் ரசிகர்கள் பேசுவது விஜய்க்குத் தான் பின்னடைவைத் தரும்.
தன்னுடைய குடும்ப விசுவாசம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது, விஜய் மௌனம் காப்பது, தன் தொண்டர்களைத் தன் மனைவியின் மீதே தார்மீகத் தாக்குதல் நடத்த அனுமதிக்கிறதோ என்கிற கேள்வியை எழுப்புகிறது. மேலும், இது ஒரு அரசியல் சதி என்று தொண்டர்களை நினைக்க வைத்து, அதிலிருந்து அவர் அரசியல் அனுதாபம் தேட முனைகிறாரா என்ற சந்தேகத்தையும் பொதுவெளியில் உருவாக்குகிறது. இலக்குமணன் இராமன் ஏதாவது சொல்லமாட்டானா என்றிருந்ததை போலவே தான். விஜய் ஏதாவது சொல்ல மாட்டாரா என்று பலர் இருக்கிறார்கள்.
விஜய்யைப் பொறுத்தவரையில், அரசியலில் அவருக்கு யாரும் கன்னி வெடி வைக்க வேண்டியதில்லை, அவருக்கான வெடிகளை அவரே அவருடைய கக்கத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் விஜய் என்ன செய்யலாம்? விஜய் வெளிப்படையாக முன்வந்து, “ஆம், எனக்கு அந்தத் தொடர்பு இருக்கிறது” என்றோ அல்லது “இல்லை, எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, ஆனால் குடும்பத்திற்குள் சில புரிதலின்மைகள் உள்ளன, அவை சரிசெய்யப்படும்” என்றோ தைரியமாகக் கூற வேண்டும். “ஆம்! எங்கள் இருவருக்குள் சில பிணக்குகள் இருக்கிறது அதை பேச்சுவார்த்தை மூலமாகவோ சட்டபூர்வமாகவோ தீர்த்துப் பிரிவது குறித்தோ சேர்ந்து வாழ்வது குறித்தோ தீர்மானிப்போம்! நடிகையுடன் நட்பில் இருந்தது யதார்த்தமானது” என்று சொல்லி முடித்துவைக்கலாம். நம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நாம் இப்படித் தான் எதிர்கொள்ள வேண்டும்.
வெற்றிடம் இருக்கிறது அதனால் வருகிறாரா? என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம், ஆம்! வெற்றிடம் இருக்கிறது, நல்ல தலைவர் இல்லை நான் வருகிறேன் என்றதும் வெற்றிடம் ஒன்றும் இல்லை என்று பேசினார்கள். அது போல, விஜய் “ஆம்! நடிகையோடு தொடர்புபடுத்தி என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையென்றே வைத்துக்கொள்ளுங்கள் இது என் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயம். இதில் அரசியலைக் கலக்க வேண்டியதில்லை” என்றால், அதன் பிறகு விஜய்க்கு எதிராகப் பேச ஒன்றும் இருக்காது.
விஜய்யின் குடும்ப விவகாரங்களும் நடிகைகளுடனான நட்பும் தனியுரிமையே தான். ஒரு தலைவராக அவரிடம் நாம் எதிர்பார்ப்பது நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் தான். இங்கே அமைச்சர்கள் நடிகர்கள் பலர் விவகாரத்து பெற்றவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு திருமணத்தில் இருந்தவர்கள். பொது வெளியில் பேசப்பட்ட பொழுது பலர் அதை ஏற்றுக்கொண்டார்கள்.அதைத்ததான் நாம் எதிர்பார்க்க வேண்டும். அவர் பக்க கருத்தை அவரை பேச சொல்லி கேட்பதை தவிர அவருக்காக நிற்கிறோம் என்று பேசுவதிலும் எல்லாம் ஒரு நியாயமும் இல்லை.