வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!
சில நேரங்களில் மிகவும் தீவிரமான எண்ணங்களுடன் எப்படியும் இன்று இதை எழுதிவிட என்று ஏதேனும் கருத்தைப் பற்றி நினைத்தாலும், எழுத உட்கார்ந்ததும் இதை எங்கிருந்து தொடங்குவது என்கிற கேள்வி எழுந்துவிடுகிறது. அதனால் கேள்விகள் கொண்டே கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் மக்களே!
திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்கிற பெயரில் கட்சி ஆரம்பித்தவர்களுக்கே அதைப் பற்றி இன்று வரை தெரியாது. அதைவிட்டுவிட்டு வேறொருக்கு வருகிறேன் கேள்வி, கல்வி என்று எதை நினைக்கிறீர்கள்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நமக்கு தெளிவான பதில் தெரிந்திருந்தால், தி.மு. கழகம் என்கிற நாடக கம்பெனி நடத்தும் நாடகங்கள் தமிழகத்தில் பலிக்காமல் போயிருக்கும். ஒரு சொட்டு சாம்பாரை வாயில் ஊத்தி ஆகா ஓஹோ என்று அந்த கம்பெனி சமீபத்தில் நடத்திய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்கிற நாடகம் தான் இந்த கட்டுரையை எழுத உந்த சக்தியாக அமைந்தது. அந்த நாடகம் எப்போதும் போல் அவர்களை அவர்களே பாராட்டிக்கொள்ள நடத்தும் விழாக்களில் ஒன்று.
சினிமா உலகை கைக்குள் வைத்துக்கொண்டு எல்லோரையும் கட்டாயப்படுத்தாமல் கட்டாயப்படுத்தி கூட்டி வந்து அவர்களின் இல்லாத பெருமையை பேச வைப்பார்கள்.
இது போன்ற விளம்பரங்கள் எல்லா கட்சிகளும் செய்கிற ஒன்று தான் எனினும், எல்லா கட்சிகளும் அவர்கள் கொண்டு வந்த திட்டம் பற்றி பேசுவார்கள். எதிர்க்கட்சிகளின் குறைகள் பற்றி பேசுவார்கள். இவர்கள் மட்டுமே தான் எப்போதும் போல், இந்த மண்ணின், இந்த மக்களின் நாகரீகத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை கீழ்மைப்படுத்தி அதில் சுயஇன்பம் அடைபவர்களாக இருப்பார்கள்.
ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டை சரியாக புரிந்து கொள்ளாமல் அதை தொடர்ந்து கீழ்மைப்படுத்தி வந்ததால் தான் நம் சமூகம் பெரிதும் தாழ்வு மனப்பான்மை கொண்ட சமூகமாக இருக்கிறது. “ஐரோப்பாகாரன் என்ன பன்றான்? அமெரிக்காகாரன் என்ன பண்றான்? நீ இன்னும் காட்டுமிராண்டி மொழியை படிச்சு என்ன பண்ண போற?” இப்படியான பேச்சுக்கள் மூலம் நம்முள் தாழ்வுமனப்பான்மையை திராவிட இயக்கங்கள் நீரூற்றி உயிர்ப்புடன் வைக்க தொடங்காவதற்கு முன்னதாகவே முகலாயர்கள், ஆங்கிலேயேர்கள், டச்சுகாரர்கள் நம்முள் தாழ்வு மனப்பான்மையை விதைத்து வளர்த்து விருட்சமாக்கி விட்டார்கள். அதை இந்த நாடக கம்பெனி வாடாமல் வதங்கமால் இருக்கும்படி கவனமாக பார்த்துக்கொள்கிறது.
இந்த சமூக ஊடகங்கள் கொண்டாடும் அறிவாளி இயக்குனர்களில் ஒருவரான தியாகராஜ குமராஜா இந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில், இந்தியா குடியரசு ஆனதற்கு பின் குறிப்பாக திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த பின் அந்த இயக்கம் தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறது என்று பேசாமல் அல்லது அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல். “எல்லோரும் படிக்க வேண்டுமென்பது திராவிட கருத்தியல் ஆரிய கருத்தியல் அதற்கு நேரெதிரானது. கற்கவேண்டுமென்ற ஆசையுடைய மாணவன் துரோணாச்சாரியாரிடம் சென்ற பொழுது நீ என்ன ஆள் என்று கேட்டு கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டார். அவனே சென்று கற்றுக்கொண்டு வந்த பொழுது கட்டைவிரலை வாங்கிக்கொண்டார்.கர்ணன் கிருபாச்சாரியாரிடம் மேட்டுக்குடி ஆள் என்று பொய் சொல்லி தொழில் கற்றுக்கொண்டார். ஆனால், உண்மை தெரிந்ததும் நீ கற்றது உன்னை விட்டு போய்விடும் என்று சாபம் கொடுத்தார் இப்படி துரோணாச்சாரியார் ஆரம்பித்து ராஜகோபாலாச்சாரி வரை நாம் படிப்பதை தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.” என்று அந்த தியாகராஜா குமாரராஜா பேசியிருக்கிறார்.வியாசர் எழுதிய மஹாபாரதத்தில் இருந்து பாத்திரங்களின் பெயர்களை மட்டும் உருவிக்கொண்டு இவர் ஒரு கதை செய்து பேசியிருக்கிறார்.
இப்படியாக இந்த தேசிய இனக் குழு எப்படியிருந்தது எப்படி வாழ்ந்தது என்கிறது பற்றிய பொய்யான கீழ்மையான கருத்துக்களைப் பரப்பி இயல்பாகவே மேற்கத்தியர்களை விட நாம் தாழ்ந்தவர்கள் என்கிற மனநிலையை நமக்குள் உருவாக்கி வைத்துவிட்டார்கள். இவர்களைப் போன்ற இயக்குனர் எடுக்கும் மூன்று மணி நேர படத்தின் கதை வசனங்களை முக்கால் மணி நேரத்திற்கு எத்தனை பேர் எத்தனை முறை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், அதுவும் இவர்களைப் போன்றவர்கள் சமூகத்திற்கு பெரிய படம் கற்பித்து விட்டது போல.
கற்பனை கதை என்றே எடுத்துக்கொண்டாலும்,ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதிவைக்கப் பட்ட மகாபாரதமும் ராமாயணமும் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் வாழப்போகும் மனித சமூகத்திற்கு பல பாடங்களை சொல்லிவைத்திருக்கிறது .என்றைக்கும் மாறாத விஷயங்களை எடுத்து பேசியதால் தான் நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் ஒருங்கே என்றும் மாறாதது என்கிற அர்த்தத்தில் சனாதனம் எனப்பட்டது. நம் பாரத சமூகம் என்றைக்கும் பெருமைப் பட்டு கொள்ள வேண்டிய இலக்கிய சிறப்பு இந்த இரண்டு இதிகாசகங்கள் (LITERARY EXCELLENCE). அத்தனை வருடங்கள் முன்னர் எத்தனை சமூகம் எழுத கற்று கொண்டிருந்ததோ?!
அப்படியென்ன என்றைக்குமே மாறுபடாத கருத்துக்களை படிப்பினைகளை பாடங்களை அது தந்து விட்டது. இந்த குமாரராஜா தம்பி எடுத்துக்கொண்ட ஏகலைவன் கர்ணன் வைத்தே உங்களுக்கு அதை சொல்கிறேன்.
மஹாபாரதம் என்றாலே நமக்கு கிருஷ்ணன், திரௌபதி,அர்ஜுனன், துரியோதனன் நினைவுக்கு வந்து விடுவார்கள். தருமனை விட அர்ஜுனன் தான் நம் நினைவில் வந்து நிற்பார்.கதையின் நாயகன் அவன் தான், கதை அவனை சிறந்த வில்லாளன் என சொல்ல வருகிறது. நாயகனை தானே பெரிதாக காட்ட வேண்டும்! வியாசர் என்ன செய்திருக்க வேண்டும்? அர்ஜுனன் தான் சிறந்த வில்லாளன் அவனுக்கு நிகரான வில் வீரர்கள் எந்த உலகத்திலும் கிடையாது என்று எழுதியிருக்கலாம் தானே! திரைப்பட விமர்சனங்களின் பொழுது சில விமர்சகர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள்; ஒரு கதையில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துவிட்டால் அல்லது ஒரு காட்சியை எடுத்துவிட்டால், அது கதையை எந்த வகையிலும் பாதிக்காது என்றால், அது கதைக்கு தேவை இல்லாத ஆணி என்று. இந்த ஏகலைவன் பாத்திரத்தை அவன் கதையை மஹாபாரத கதையில் இருந்து நீக்கினாலும் கதை நகர்வில் ஒரு பிழையும் இருக்க போவதில்லை. எதற்காக ஏகலைவன் கதையை வைத்தார்கள் நடந்த உண்மை சம்பவமாக இருந்தாலும் கூட அர்ஜுனன் தானே நாயகன். ஜெயிக்கின்ற அரசியல்வாதிகள் பேசும் பொய்கள் போல ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றுக்கொடுத்தார் அவன் தேறவில்லை என்று எழுதியிருக்கலாமே?!
எல்லா அறிவும் ஞானமும் பெற்று கல்வியில் சிறந்து விளங்கினாலும், சாத்வீக குணத்தில் தன்னை நிறுத்திக்கொண்டவராக இருந்திருந்தும், துரோணர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் ஆளப்பட்டவராக இருந்தார். அவர், அவருடைய நண்பரை பழி வாங்க நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் குருவம்சத்தின் இளவரசர்களுக்கு பாடம் கற்பிக்கும் வேலை கிடைக்கிறது. அவருடைய கல்விச்ச்சாலையில் பல இளவரசர்களோடு கர்ணனும் கல்வி பயில்கிறான். யாருமே இதுவரை கர்ணன் யாரிடம் வில்வித்தை பயின்றான் என்கிற கேள்வியை கேட்டது இல்லை.சினிமாத் தன்மையோடு அவன் அவமானப்படுத்தப்பட்டதை மட்டுமே அறிந்து வைத்திருந்தோம்.
நம்முடைய கலாச்சாரத்தில், எந்த ஒரு பிள்ளைகள் மீதும் நீ இது படிக்க வேண்டும் என்று திணிக்கிற வழக்கமோ; இது படிக்க கூடாது என்று தடுக்கிற வழக்கமோ கிடையாது. அது மட்டுமில்லாமல், எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை அதனால் படித்தேன், பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை அதனால் படித்தேன் என்கிற இடத்திற்கு பிள்ளைகளை தள்ளுகிற வழக்கமும் இல்லை. இதற்கு காரணம் இருக்கிறது, தற்கால அரசியலில் எனக்கு ஒரு மொழி பிடித்தால் படிக்கிறேன் என்று பேசுகிறார்களே?! ஒரு மொழியை பற்றிய அறிமுகம் இல்லாமல் அந்த மொழி பற்றிய விருப்போ வெறுப்போ எப்படி ஏற்படும்? கல்வியில் எவர் ஒருவரும் நான் இதை படிக்க வேண்டும் அதை படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எல்லாம் புற உந்தலால் ஏற்படுவது. அதை நோக்கி செல்வது சரியும் கிடையாது, நம்மில் பலருக்கு சினிமாவில் நடிகனாகி விட்டால் நல்லா இருக்குமே! நல்லா சம்பாதிக்கலாம் வெளிநாடுகளை சுற்றி பார்க்கலாம் என்கிற எண்ணங்கள் ஒரேயொரு நாளேனும் எழுந்திருக்கும். கிரிக்கெட் வீரர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் இருந்திருக்கும். இதில் இருக்கும் வெற்றியாளர்களை எல்லாம் பார்த்து ஏற்படுகிற மோகத்தின் விளைவாய் நமக்கு வருகின்ற ஆசைகள் தான் இது.சினிமா பார்த்து தான் போலீஸ் ஆக வேண்டும் கலெக்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டிருப்போம். நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இப்படியான புற உந்தலால் வரும் ஆசைகள் தீர்மானிக்க கூடாது. நாம் இயல்பாக இதில் சிறந்து விளங்குகிறோம், நம் குணத்திற்கு ஏற்ற தொழில் எது என்று அறிந்து அந்த துறை சார்ந்த கல்வியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நானும் ஒரு கட்டத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு கொண்டு இருந்தேன், அதற்கான சரியான முயற்சியை நான் செய்யவில்லை. அதோடு பின்நாளில், கல்லூரியில் நிகழ்ந்த ஒரு சிறு விபத்து எனக்கு ஒன்றை உணர்த்தியது, ஒரு மருத்துவருக்கு தேவையான மனவலிமை என்னிடம் இல்லை நான் பொறியியல் பக்கம் வந்தது சரி தான் என்று. இது தான் ஆசைக்கும் இயல்பாக நம் ஆற்றல் மற்றும் குணத்திற்கும் இருக்கிற வேறுபாட்டை உணர்ந்து கொள்வது என்பது.
மஹாபாரத காலத்தில், பாண்டவர்கள் எல்லோரையும் நீங்கள் வில்வித்தை தான் பயில வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. எல்லா பிள்ளைகளைக்கும் எல்லா போர்கலைகளையும் பற்றிய அறிமுகத்தை கொடுக்கிறார்கள், ஒரே வீட்டின் நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் குணம் மற்றும் ஆற்றலை உணர்ந்து தெரிந்து கொண்டு அதற்கேற்ற ஒன்றில் அவர்களை நிபுணத்துவம் பெறச்செய்தார்கள்.அர்ஜுனன் கையில் கதாயுதத்தை கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
வில் வித்தைக்கு தேவையான நிதானம், கவனம் எல்லாம் அர்ஜுனனிடம் இருப்பதை அறிந்துகொண்டு அவனை சிறந்த வில்லாளனாக ஆக்குகிறேன் என்று துரோணர் வாக்கு கொடுக்கிறார். எல்லா ஞானங்களும் பெற்ற துரோணர் சுய விருப்புகளின் காரணமாய் தடுமாறியது இங்கு தான்.அவர் அப்படி செய்திருக்க கூடாது.
உலகத்தில், இவன் ஒருவன் தான் வல்லவன் என்கிற நிலை எப்போதும் இருந்ததில்லை, வேதம் அதைத் தான் சொல்கிறது. குரு வம்சம் துரோணருக்கு வேலை தருகிறது, அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி தந்து, நண்பரை பழி வாங்கலாம் என்று நினைத்திருந்த துரோணர்,அர்ஜுனனை சிறந்த வில்லாளனாக ஆக்குகிறேன் என்று வாக்கு கொடுத்து விடுகிறார். இப்பொழுது, ஏகலைவன் துரோணரிடம் வரும் பொழுது, துரோணர் அவனுடைய ஜாதியை பற்றியோ குலத்தைப் பற்றியோ இழிவாக நினைத்து அவனுக்கு பாடம் கற்று தர முடியாது என்று சொல்ல வில்லை.ஏகலைவனும் இளவரசன் தான். ஏகலைவன் யார் என்று அவன் குலம் பற்றிகேட்கிறார், மலை காடுகளில் வாழும் நிஷாத இனக்குழுவின் இளவரசன் என்று கேட்டு அறிந்ததும் துரோணருக்கு தெரிந்துவிடுகிறது, இயல்பில் வேட்டையிலும் வில்வித்தையிலும் சிறந்து விளங்க கூடிய ஏகலைவனுக்கு துரோணர் பாடம் கற்பித்தால் அவன் நிச்சயமாக அர்ஜுனனை விட பல மடங்கு பெரிய வில்வித்தைகாரனாக வருவான் என்று.
ஏகலைவனை வைத்து மஹாபாரதம் சொல்லும் முதல் கருத்து இது தான், இங்கு நாம் தான் சிறந்தவர் அல்லது இந்த துறையில் நாம் தான் ஏகச் சிறந்த ஆள் என்கிற எண்ணம் நமக்கு இருக்க கூடாது. நூற்றாண்டின் சிறந்த முதல்வர், சிறந்த பிரதமர் என்று மார்தட்டிக்கொள்கிற அரசியல்வாதிகளை விட அந்த பதவிக்கு தகுதியான ஒருவன் எங்கோ ஒரு தனித்தீவில், ஒரு சிறு அறையில் எதையோ செய்துகொண்டிருக்கலாம்.அர்ஜுனன் மட்டும் தான் சிறந்த வில்லாளன் என்கிற கருத்து உலக உண்மைக்கு மாறானது என்பதை சொல்லவே ஏகலைவன் வருகிறான்.
ஏகலைவன் தாழ்ந்த குலத்தை சேர்த்தவன் என்பதற்காக அவனுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பது பொய், அவன் முதலில் இளவரசன், அவனுக்கு கல்வி மறுக்கப்படவில்லை, துரோணர் கல்விசாலையில் அவனை சேர்த்துக்கொள்ளவில்லை. தேரோட்டியின் மகனாக அறியப்பட்ட கர்ணன் துரோணரிடம் தான் பாடம் படித்துக்கொண்டு இருந்தான். ஏன் கட்டை விரலை பெற வேண்டும்?நிஷாதர்கள் குரு வம்ச அரச குலத்திற்கு எதிரான அரசர்களோடு நட்பு பாராட்ட கூடியவர்கள். பாகிஸ்தானுக்கு ஒரு நட்பு நாடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோமே அந்த நட்பு நாட்டிற்கு இந்திய ராணுவம் ராணுவ பயற்சி அளிக்குமா? செய்யாது, துரோணர் ஏகலைவனை சேர்த்துக்கொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம். அவனை பள்ளியில் சேர்த்துக்கொள்ளவில்லை அதோடு கதையில் ஏகலைவனை கழட்டி விட்டிருக்கலாம் தானே.. மீண்டும் ஏன் அவன் குருவின் சிலையை வைத்தே கற்றுக்கொண்டான் என்று சொல்கிறார்கள்.அக்னி சிறகுகள் நூலில், ஒரு வாசகம், “ஒரு நல்ல ஆசிரியரிடம் இருந்து மோசமான மாணவன் கற்றுக்கொள்ள முடிவதை விட ஒரு மோசமான ஆசிரியரிடம் இருந்து நல்ல மாணவன் கற்றுக்கொள்ள முடியும்” என்று. கற்றுக்கொள்வதற்கு விடாப்பிடியான முயற்சி தேவை ஒரு ஆசிரியர் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதற்காக ஒருவன் சோர்ந்து விடக்கூடாது என்பதை சொல்லவும்,மிக முக்கியமாக சுய கற்றலை பற்றி சொல்லவும், குருபக்தியை பற்றி சொல்லவும் தான் ஏகலைவனை மீண்டும் கதையில் கொண்டுவருகிறார்கள்.
இயல்பில் அனைத்து உயிரினங்களும் எதையும் சுயமாக கற்று அறிந்து கொள்வதற்கெனவே வடிவமைக்கப்பட்டது, கல்விச் சாலைகள் இந்த சுய கற்றலைத் தான் தூண்ட வேண்டும்.
சுய கற்றலை சொல்வதோடு விட்டிருக்கலாம் கட்டை விரலை கேட்டு அவன் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள் என்று திராவிட கூட்டம் அனுதாபப்படலாம். துரோணர் அவனுடைய இரண்டு கைகளை வெட்டி தரச் சொல்லி கேட்டிருந்தாலும் சுய நினைவோடு முழு மனதோடு அதை ஏகலைவன் செய்திருப்பான். துரோணர் அதை செய்யவில்லை, இரண்டு கைகள் இல்லாமல் இருந்திருந்தாலும், ஏகலைவன் வில்வித்தையில் சிறந்து விளங்கியிருப்பான் தான். கட்டை விரல் இல்லாமலும் கூட ஏகலைவன் வில் வீரனாக தான் இருந்தான். துரோணரின் நோக்கம், அர்ஜுனன் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்பது தான்.
எல்லா மாணவர்களிடமும் என்ன இருந்தது என்று அறிந்து புரிந்து பாடம் கற்பித்த துரோணர், கர்ணனின் இயல்புக்கு அவனுக்கு பிரம்மாஸ்திரத்தை கற்று தருவது சரியாக இருக்காது என்று அவனுக்கு கற்று தராமல் இருந்ததை; கர்ணன், துரோணர் பாகுபாடு பார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டு வித்தை கற்றுக்கொடுத்த குருவை பற்றிய தவறான சந்தேகமான பார்வையோடு வெளியேறுகிறான். ஏன் கர்ணனுக்கு பிரம்மாஸ்திரத்தை பற்றிய கல்வியை தரவில்லை?
உணர்வுகளால் ஆளப்படுகிறவனால், எல்லா நேரங்களிலும் சிறந்த வீரனாக இருக்க முடியாது. எவன் ஒருவன் தன் உணர்வுகளை ஆள்கிறானோ அவனே எப்போதும் சிறந்த வீரனாக இருப்பான், பிரம்மாஸ்திரம் அணு ஆயுதம் போன்றது, கர்ணன் அதை தனிப்பட்ட பகைகளுக்காக பயன்படுத்தியிருக்க கூடும். ஒரு மாணவன் நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும், கர்ணன், அர்ஜுனனை தான் சிறந்த வில்லாளன் ஆக்குவேன் என்று சொல்லி அவனை மட்டும் துரோணர் சிறப்பாக கவனிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு அதில் கருத்தாக இருந்தான். நாம் எப்போதும் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடக் கூடாது. ஒரு காலத்திலும் அர்ஜுனன் தன்னை ஏகலைவனோடோ கர்ணனோடோ ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவில்லை. ஆனால், கர்ணனுக்கு அர்ஜுனனை விட தான் பெரியவன் என்று நிரூபிக்க வேண்டும் என்கிற எண்ணம். ஒரு வீரன் தன்னை யாரிடம் நிரூபித்துக்காட்ட துடித்திருக்க மாட்டான். கர்ணன் தன் வாழ்நாளின் கடைசி வரை தான் அர்ஜுனனை விட சிறந்த வீரன் என்று யாராவது சொல்லமாட்டார்களா என்று இருந்தான். இதில் முரண் என்னெவென்றால், கர்ணனின் பலம் பற்றி கர்ணனை தவிர எல்லோரும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார்கள். அர்ஜுனனை எதிர்க்க கர்ணன் போன்ற ஒரு வீரன் நம்மோடு இருக்க வேண்டும் என்று தான் துரியோதனன் கர்ணன் காரித்துப்பினாலும் துடைத்துக்கொண்டு அவனுக்கு சாமரம் வீச தயாராக இருந்தான். கர்ணனின் திறன் அறிந்து தான், குந்தியை அனுப்பி கிருஷ்ணர் வரம் கேட்டு வர சொல்கிறார்.
கர்ணன் தனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையோடு ஒரு பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கிறான். இப்படியிருக்கும் ஒருவனுக்கு பிரம்மாஸ்திரம் பயன்படுத்தும் முறையை கற்றுக்கொடுக்க கூடாது என்று துரோணர் கற்று தரவில்லை. உடனே, கர்ணன் எங்கு செல்லுகிறான்?
தர்மம் தவறிய க்ஷத்ரியர்களை அழித்துவிட்டு, தன்னுடைய போர்த்திறன் பற்றிய அறிவு தருமத்தில் இருந்து வழுவ கூடிய க்ஷத்ரியர்களுக்கு கிடைக்க கூடாது என்கிற எண்ணத்தில், பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டும் போர்திறன்களை கற்றுக்கொடுக்கிறார். அவர்கள் போரிடுவதற்காகவோ அதர்மத்தின் பொருட்டோ அதை பயன்படுத்த வாய்ப்பில்லை என்கிற காரணத்தால் அவர் அப்படியொரு ஒரு கொள்கையோடு இருந்தார். அவருடைய பாடசாலையில் பொய் சொல்லி கர்ணன் சேர்ந்துவிடுகிறான். அவன் பொய் சொன்னான் என்று தெரிந்தது, கர்ணன் அதர்மியாக இருக்கிறான் என்று அவன் கற்றது மறந்து போகட்டும் என்று சாபம் கொடுக்கிறார்.நீங்கள் ஒரு கல்லூரியில், போலியான பெயரையோ பள்ளி சான்றிதழ்களையோ காட்டி சேர்ந்து பட்டம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் அது தெரிய வரும் பொழுது, அந்த பல்கலைக்கழகம் என்ன செய்யும் உங்கள் பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் அதைத்தான் பரசுராமர் செய்தாரே தவிர ஜாதியின் பொருட்டு கர்ணனுக்கோ அல்லது ஏகலைவனுக்கோ யாரும் எந்த கல்வி உரிமையையும் மறுக்கவில்லை.
மேற்கத்தியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நாம்,அவர்களிடம் இருந்து தான் அடிமைப்படுத்துவதை கற்றுக்கொண்டோம். நம்முடைய கலாச்சாரத்தில், அரசனாக இருந்த விஸ்வாமித்ரர் அந்தணனாக முடிந்தது, இளவரசனாக இருந்த இளங்கோவடிகள் ஆசிரியராக முடிந்தது. தேரோட்டியாக இருந்த கர்ணன் அரசனாக முடிந்தது. அந்தணனாக இருந்த பரசுராமர், தர்மத்தின் பொருட்டு போர் புரிந்தார்.இவர்கள் இதைத்தான் செய்யவேண்டும், இதை மட்டும் தான் செய்ய வேண்டும் என்கிற நிலை நம் பண்பாட்டில் இருந்திருக்கவில்லை.ஏகலைவன் போல், ஒவ்வொவொரு பகுதி மக்களும் அவர் அவர்களுக்கான அரசர்களை கொண்டிருந்தார்கள்
பிற்காலத்தில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட தொடங்கியதும். அவர் அவர் பிள்ளைகளுக்கு அவரவர் தொழிலை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். இது எதைப்போன்றது என்றால், அப்பா முதல்வர், என்றால், மகனை துணை முதல்வர் ஆக்கி விட என்பது போன்றது. ஒரு மாதம் மட்டும் ஸ்டாலினை தன் கட்சியிலிருக்கும் யாரேனும் வேறு ஒருவருக்கு முதல்வர் பதவியை விட்டு தர சொல்லுங்கள் தர மாட்டார். மனிதனின் இப்படியான பாதுகாப்பற்ற உணர்வு தான். தான் சேர்த்து வைத்த செல்வமோ செல்வாக்கோ கல்வி சூழலோ பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தை உருவாக்கியது.சினிமாவில் காசு பார்த்த பிரபலங்களின் பிள்ளைகளுக்கு அது பற்றிய அறிமுகமும் வாய்ப்பும் இயல்பாக எளிதாக கிடைத்துவிடுகிறது. இப்படியாக தான் காலப்போக்கில், பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் தொழில் தீர்மானிக்கப்பட ஆரம்பித்தது. இதெல்லாம் இடைக்காலத்தில் இருந்து ஏற்பட்ட சமூக பிழை. சாதியை ஒழித்துவிட்டோம் என்கிறவர்கள் அதே பிழையை தான் செய்கிறார்கள். இயக்கத்திற்கும் சொத்திற்கும் வாரிசு வேண்டும் என்று தான் பெரியார் திருமணம் செய்கிறார், அண்ணா அதை எதிர்க்கிறார்.
மேற்கத்தியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நாம், காலையில் எட்டு மணிக்கு மணியடித்தால் ஒரு அறையில் உட்கார்ந்து மாலை வரை அந்த நான்கு சுவர்களே கதி என்று கற்றுக்கொள்வதை தான் கல்வி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சச்சின் படித்தாரா? இளையராஜா படித்தாரா? என்பது போன்ற கேள்விகளும் அறியாமையின் வெளிப்பாடு தான். இளையராஜா இசை படித்தார், அதில் அவர் திறனை வளர்த்துக்கொண்டார். சச்சின் கிரிக்கெட் கற்றுக்கொண்டார் அதில் அவர் திறனை வளர்த்துக்கொண்டார் இதெல்லாமே கல்வி தான். நம் பாரத பண்பாட்டில், எல்லா குழுக்களுக்கும் ஒரு அரசனோ தலைவனோ இருந்தான், எல்லா குழுக்களும் ஆபத்தை எதிர் கொள்ள கற்றுக்கொண்டிருந்தது, அடிப்படை மருத்துவம் தெரிந்துவைத்து இருந்தது, அந்த அந்த குழுக்களின் சட்ட ஒழுங்குகளைப் பற்றி தெரிந்து வைத்து இருந்தது, எல்லா குழுக்களிடமும் பிரத்தியேக இசை இருந்தது, கலை இருந்தது. ஒரு சமூகத்தில், மேட்டுக்குடியினர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தால், வடிவியல்(சிறப்புகளாக(EXCELLENC OF GEOMETRY) இருக்கும் அநேகமான கோவில்களை எப்படி நிர்மாணித்து இருக்க முடியும், மக்களில் பெரும்பான்மையினருக்கு கணிதம் தெரியாமல் வடிவியல் (GEOMETRY) தெரியாமல் இது சாத்தியமே இல்லை.
இந்த திராவிட கூட்டம், ஆங்கிலேயர் கொடுத்துவிட்டு போன, ஆங்கிலேயர்களுக்கு வேலைபார்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட கல்வி முறையை மட்டுமே கல்வி என்று நினைத்துக்கொண்டு அதை இவர்கள் தான் எல்லோருக்கும் கொடுத்தார்கள் என்று கூவிக்கொண்டிருக்கிறது. தி.மு.க.கல்வி என்கிற பெயரில் பெரியார் பற்றிய கதைகளை நம் மீது திணித்தது, அது அவர்களை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள செய்த ஏற்பாடு.சமச்சீர் கல்வி என்று ஒன்றை கொண்டு வருகிறேன் என்று அதில் கருணாநிதி பற்றியும் கனிமொழி பற்றியும் பாடம் வைத்தார்கள், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்று வாசிக்க தெரியாத மாணாக்கர்களை உருவாக்கினார்கள். தேர்வில் தோல்வி இல்லை என்று ஒரு திட்டத்தை கொண்டு வரலாம், அதை நாம் ஏற்கிறோம். கண்மூடித்தனமாக எல்லோரும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை நாம் எதிர்க்கிறோம். இப்படி கல்வி சார்ந்த இவர்களின் அணுகுமுறை தரமற்ற பட்டதாரிகளை அதிகமான அளவில் உருவாக்கியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. எட்டாம் வகுப்பு வரை பிள்ளைகளுக்கு எல்லா துறைகள் பற்றிய அறிமுகம் தந்து, யார் யார் எதில் சிறந்து விளங்குகிறார்கள் என்று அந்த பிள்ளைகளை அந்த அந்த துறை சார்ந்த நிபுணர் ஆக்கலாம், ஆங்கிலத்தில் ஒரு மாணவன் குறைவான மதிப்பெண் பெறுகிறான் என்றால், அவன் எதில் சிறந்து விளங்குகிறான் என்று கண்டறிந்து அதை நோக்கி அவனை செலுத்துவதை விட்டுவிட்டு, “நீ பாஸ், வா நா காலேஜ் திறந்து வச்சிருக்கேன்” என்று அரசியல்வாதிகள் திறந்து வைத்திருக்கும் கல்லூரிகளை நிரப்புகிற வண்ணம் தான் இந்த திராவிட அரசியலின் கல்வி அணுகுமுறை இருந்திருக்கிறதே தவிர இவர்கள், சிறப்பாக ஒன்றையும் சாதித்து விடவில்லை. ஒரு வருடத்தில், எத்தனை மாணவர்கள், கல்லூரியில் சேர்க்கிறார்கள் என்கிற எண்ணிக்கையாக இல்லாமல், வேறு காரணிகளை கொண்டு புள்ளயியலை அனுகினோமேயானால், தமிழகத்தை விட மற்ற மாநிலங்கள் சிறந்து விளங்குவதை புரிந்து கொள்ள முடியும்.
இது இன்னும் பெரிய கதை. ஆனால், இன்று இதோடு முடித்துக்கொள்வோம். நீங்களும் இன்று படித்த கருத்துக்களை பற்றி சிந்தித்து பாருங்கள்.