இன்று வள்ளலார் மாநாடு தொடர்பாக முதல்வரின் எட்டு அறிவிப்புகள் என்கிற செய்தியைப் பார்த்தேன். அதில், வள்ளலார் நெற்றியில் வெறும் நெற்றியாக இருந்தது.
இங்கே வள்ளலார் திருவுருவம் எப்போதும் பட்டையோடுதான் இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த திராவிட அரசியல்வாதிகள் அந்தப் பட்டையை நீக்கியிருக்கிறார்கள். வள்ளலார் 200 என்கிற விழா எடுத்து அதில் அவர்கள் வெளியிட்ட படத்திலும் கூட வள்ளலார் நெற்றியில் விபூதி இல்லாமல் இருந்தது.
என்றேனும் வெறும் நெற்றியோடு சென்றால், என்னுடைய ஆசிரியர் “நெற்றியை நாய் நக்கிவிட்டதா?” என்று கேட்பார். திராவிடக் கூடாரம், வள்ளலார் நெற்றியில் இருந்த விபூதியை அவ்வாறாகவேதான் துடைத்து எடுத்து இருக்கிறது.உன் ஆசிரியர் ஆரிய வந்தேறியாக இருப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்று ஔவையார் பாடியிருக்கிறார்.
இதில் என்ன பிரச்சனை என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம். நெற்றியில் திலகமிடுவது என்பது பாரத தேசத்தின் பண்பாடு, தமிழ்க் குடிகள் பின்பற்றி வந்த கலாச்சாரம் தானே? இதை ஏன் இவர்கள் மாற்ற வேண்டும்? இதில் இவர்களுக்கு என்ன கிடைக்கிறது? இதையெல்லாம் மாற்றி ஒரு பொய்யான கலாச்சாரக் கட்டுமானத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள். அப்படி இவர்கள் செய்யும் பொழுது சில காலம் கழித்து, இந்த தேசத்தின் அடையாளமும் தனித்துவமும் பொய்களால் கட்டமைக்கப்பட்டதாக ஆகிவிடும். அது ஒரு மக்கள் காலப்போக்கில் தங்கள் தனித்துவத்தைத் தாங்களே கேலி செய்து, அவர்களின் தனித்துவத்தை இழக்கத் துணியும் நிலைக்குத் தள்ளும். ஏற்கனவே இங்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தத் திராவிடக் கூடாரம் ஏன் இதைச் செய்கிறது? காரணம், இவர்களின் அடிப்படிக் கொள்கையான பிராமண எதிர்ப்பு. அதைத் தொடர்ந்து உருவான திராவிட இயக்கம் எல்லாம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது
ஆங்கிலேயர்கள் காலத்தில், ஆங்கிலேயர்களின் அரசுப் பணிக்குத் தேவையான அலுவல் வேலைகளைச் செய்வதில், பிராமணர்களேதான் அதிகம் இருக்கிறார்கள் என்று, பிராமணரல்லாத உயர் வகுப்பினர் என்று வகைப்படுத்தப்பட்டவர்களால் உருவான இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் இவர்கள். இவர்களின் ஆதி ஒன்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கானதாக இருந்திருக்கவில்லை
இவர்களின் இந்தப் பிராமண எதிர்ப்பு, பிராமணர்களை எப்படிப் பலவீனப்படுத்தலாம் என்பதில் தொடங்கி அது மத வெறுப்பாக மாறியது.திராவிட இயக்கம் என்பது அடித்தட்டு மக்களின் இயக்கம் என்பதை விட, அதிகாரப் போட்டியின் காரணமாக உருவானது என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.
இவர்கள் எல்லோரும் அவர்களின் ஜாதியைப் பற்றிக்கொண்டே ஹிந்து மதமும் பிராமணர்களும்தான் ஜாதி அடிமைத்தனத்திற்குக் காரணம் என்று பரப்புரை செய்து, அவர்களுக்கான காலாட்படையாக; பகடையாக மக்களைச் சேர்க்கப் பல கதைகளைக் கட்டமைக்கத் தொடங்கினார்கள்.
அப்படியான கதைகளில் ஒன்றுதான் ஆரிய திராவிடக் கோட்பாடு, சமஸ்கிருத எதிர்ப்பு எல்லாம். திருக்குறளை மலம் என்று பேசிய கூடாரம், திருக்குறளைக் கிருஸ்துவ மத நூல் ஆக நிறுவ முற்பட்ட நூலை ஆதரித்த கருணாநிதியைத் தலைவராகக் கொண்டிருந்த கூடாரம், இன்று திருவள்ளுவருக்குச் சொந்தம் கொண்டாடுகிறது. கடவுள் உருவங்களுக்குச் செருப்பு மாலை அணிவித்த கூடாரம், இன்று முருகனைத் தமிழ்க் கடவுள் என்று கொடி பிடிக்கிறது.
கற்பனையான ஆரியப் படையெடுப்பை நம்பி சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கூட்டம், முகலாயப் படையெடுப்புப் பற்றிப் பேசினால் மதவாதி என்று முத்திரை குத்தி, அரபியையும், உருதுவையும் ஆதரிக்கிறது. இதில் மத அடிப்படைவாதமும், மத வெறுப்பும், சகிப்பின்மையும் யாரிடம் இருக்கிறது என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். பிழைகளைக் கவனிக்காமல், நம்மால் அதைத் திருத்திக்கொள்ள முடியாது. ஆரியப் படையெடுப்புக் கதைகளை அம்பேத்கர் போன்றவர்களே நிராகரிக்கிறார்கள்.
பொய்களால் கட்டமைக்கப்பட்டு வந்த இவர்களின் இயக்கத்தைக் காப்பாற்ற நிலத்தின் அடையாளங்களை இவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்கள் உட்பட பாரத தேசத்தின் மக்கள் எல்லோரும், நட்சத்திரம், திதி போன்றவற்றை அனுசரித்துத்தான் பிறந்தநாட்களைக் கொண்டாடி வந்தார்கள். வானியல் படியும் பூமி மீண்டும் ஒரு சுற்று முடித்து மீண்டும் நட்சத்திர மண்டலத்தில் அதே புள்ளியில் வரும் நாளைக் கணக்கிட அந்தந்த நாளில் வரும் நட்சத்திரத்தைத்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அப்படித் திருவள்ளுவரின் பிறந்த தினமாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்பட்டு வந்ததை, இவர்களாகத் தை இரண்டாம் தேதியாக மாற்றினார்கள். இப்படி மாற்றியதற்கு இவர்களிடம் ஆதாரபூர்வமான எந்த சான்றும் இல்லை.
நேர்கிழக்கில் சூரியன் உதிக்கும் சித்திரை ஒன்றை நாம் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த பொழுது, இது ஆரியத் திணிப்பு என்றார்கள். முதலில் யார் ஆரியர்கள்? தமிழ்ச் சமய நூல்களான சைவ நூல்கள் சிவனை ஆரியன் என்கிறது; ‘ஆரியம் கண்டாய் தமிழ் கண்டாய்’ என்கிறது
தமிழ்க் கடவுளான திருமாலின் அவதாரமாகக் கருதப்படுகிற, இந்த மேற்கத்திய ஆய்வாளர்கள் மற்றும் திராவிடக் கருத்துக்கள் படி திராவிட நிறமும் உருவமும் கொண்ட கிருஷ்ணன், அர்ஜுனனை ஒரு இடத்தில் ஆரியன் என்கிறார். ஆரியன் என்பது பெயரடையாக (பண்புப்பெயர்-அடைமொழியாக-adjective ஆக) தான் இருந்திருப்பதாக நமது பாரத தேச நூல்கள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. இதை இவர்கள் இனமாக உருவகம் செய்து நம்மையே நமக்கு எதிரியாகக் கட்டமைத்து இருக்கிறார்கள்.
புறநானூற்றுப் பாடல்களில் ராமனைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது. சிலப்பதிகாரத்தில், திருவரங்கம் கோவிலைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது; ராமாயணம் பற்றிக் குறிப்பு இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் நம் மக்களுக்கு அந்நியமாக இவர்கள் மாற்றி வைத்திருக்கிறார்கள். ராமனை எதிரியாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
வடமேற்கு இந்தியாவில் தோன்றிய சமணம்தான் தமிழ் மதம் என்பார்கள்.
தமிழர்களின் நிலம் சார்ந்த கடவுள்களில் முருகன், திருமால், இந்திரன், சக்தி அல்லது துர்க்கை, வருணன் என்று இருந்தது. சைவம், வைணவம் (திருமால்), சாக்தம் (சக்தி), கௌமாரம் (முருகன்) என்று இந்த நிலத்தில் இருந்த நிலம் சார்ந்த வழிபாட்டு முறை, முன்னோர் வழிபாட்டு முறை என்று எல்லாம் ஒரு வேரில் இருந்து பிரிந்து ஒன்றாக்கப்பட்டதேதான். சமணமும் கூட அதே வேரில் இருந்து பிறந்த தத்துவம்தான்.
தமிழகம் ஏற்றுக்கொண்ட சைவம், சமஸ்கிருதம் மற்றும் தமிழை சிவனே வழங்கினார் என்கிறது. இமயத்தில் இருந்து சிவனின் சீடர்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் பிரிந்து சென்று ஞானத்தைப் பரப்பியதாகச் சைவ நூல்கள் சொல்கிறது. பழனியில் முருகனுக்குச் சிலை அமைத்த போகர் மற்றும் அவருடைய குருவான காலாங்கி நாதர் இவர்களெல்லாம் சீனாவிற்குச் சென்றார்கள் என்று சொல்லப்படுகிறது.
அவரின் சீடர்கள் இரண்டு மொழிகளிலும் நூல்களை இயற்றி இருக்கிறார்கள்; அவர்கள் உலகம் முழுதும் பயணித்து இருக்கிறார்கள். உலகின் பல மொழிகளுக்கும் ஞானத்திற்கும் அதுவே மூலமாக இருக்கிறது. இப்படி உலகம் முழுவதற்குமான வாழ்வியல் ஞானங்களைச் சமயம் மூலம் எடுத்துச் சென்ற சமூகத்தை, அதன் அடையாளங்களில் இருந்து விலக்கி வைத்து, அவர்களுக்குள்ளாகவே “நீங்கள் ஆரியர், நீங்கள் திராவிடர்” என்று சண்டை மூட்டும் பிரிவினை வேலையைத்தான் திராவிடம் செய்து வருகிறது.
இந்த ஆரிய மொழி, திராவிட மொழி என்று இந்திய மொழிகள் இரண்டு குடும்பமாகப் பிரிக்கப்பட்டு இருப்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.
இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில், இவர்கள் திராவிட மொழி என்று பிரித்து வைத்திருக்கும் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் இவற்றில் தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் சம்ஸ்கிருத மூல வார்த்தைகள் அதிகம் இருக்கிறது. தமிழை விட மற்ற மூன்று மொழிகளில் சம்ஸ்கிருத மூல வார்த்தைகள் மிக அதிகமாக இருக்கிறது. திராவிட மொழி குடும்பம் என்று இவர்கள் தனியாகப் பிரித்து வைத்திருக்கும் மொழிக்குள் சம்மந்தமே இல்லாத மொழியின் மூலம் எப்படி வரும்? சம்ஸ்கிருத மூல வார்த்தைகளை நீக்கிவிட்டால், கன்னடம், மலையாளம், தெலுங்கு எல்லாம் இயங்க முடியாத அளவு அதில் சம்ஸ்கிருத மூல வார்த்தைகள் இருக்கின்றன.
நாம் எந்த மொழியையும் குறைத்து மதிப்பிடவில்லை. உண்மையை உள்ளபடி தர்க்கரீதியாக அணுகவேதான் கேட்கிறோம். தமிழ்க் கடவுள் முருகனுக்குப் பார்வதி வேல் கொடுத்த நாளைத்தான் நாம் தைப்பூசம் என்று கொண்டாடுகிறோம். தமிழ்க் கடவுளின் பெயரான ஷண்முகம் என்பது சம்ஸ்கிருதப் பெயர், ஆறுமுகம் என்பதுதான் அதன் தமிழ் அர்த்தம். அதிலும் முகம் என்பது சம்ஸ்கிருத மூலம்.
இன்னொரு சுவாரசியமான விஷயம், சரவணன் என்பது தமிழ்ப் பெயரா? முருகனை ஏன் சரவணன் என்கிறோம் என்று தெரியுமா? நாணல் (புல் வகையைச் சேர்ந்த தாவரம்) காடுகளில் இருந்த பொய்கையில் கண்டெடுக்கப்பட்டவன் என்பதால், சர-நாணல் வணன். இதில், வனம் என்கிற வார்த்தையில் இருந்து வணன் எப்படி வந்தது? அதாவது ‘ற’ன்னகரம் எப்படி ‘ட’ண் ணகரம் ஆனது?
தமிழ் இலக்கணத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறதா என்று பார்த்தால், சம்ஸ்கிருத மொழி இலக்கணப்படி (‘ர’கரத்தைத் தொடர்ந்து வரும் ‘ன’கரம் ‘ண’கரமாகும் – Rashaabhyam rule) ‘ற’ன்னகரம் எப்படி ‘ட’ண் ணகரம் ஆனதோ அதைத் தமிழ் ‘சரவணன்’ என்று எடுத்துக்கொண்டது. நாம் இதையெல்லாம் தாய்மொழியைச் சிறுமைப்படுத்த எடுத்துச் சொல்லவில்லை. தாய் மொழியைச் சிறுமைப்படுத்துவது என்பது தாயைச் சிறுமைப்படுத்துவது போன்றது. ஆனால், நாம் சில உண்மைகளை உள்ளபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும்
நம் தாத்தாவையும் பாட்டியையும் தாத்தா பாட்டி என்று நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். நம் தாயுடைய தாய் தந்தையரை அந்நியராகப் பார்ப்பது போன்றதுதான் ஆரிய திராவிடக் கோட்பாடும் அது பேசும் பிரிவினையும்
சமீபத்தில், ஒரு செய்தியில் எகிப்து பிரமிடுகளில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ்பிராமி எழுத்துக்கள் இருந்தது என்று நாம் பார்க்கிறோம். அதில் ‘சிகை’ என்பது சமஸ்கிருத வார்த்தை. அதோடு, அந்தத் தமிழ் பிராமி எழுத்துக்கள், இந்த ஆரிய திராவிட மொழி வேற்றுமைக் கதைகளை இன்னும் சிதைக்கிறது. எப்படி இன்று பல்வேறு ஐரோப்பிய அமெரிக்க மொழிகளுக்கு ஆங்கில எழுத்து உருவம் இருக்கிறதோ அப்படியாகத்தான் ஆசிய மொழிகளின் எழுத்துருவமும் இருந்திருக்கிறது.
நாம் தற்போது பயன்படுத்தும் ‘க’ என்கிற எழுத்தின் தமிழ் பிராமி எழுத்திற்கும், சம்ஸ்கிருத எழுத்திற்கும், ஹிந்தி எழுத்திற்கும், பெங்காலி எழுத்திற்கும் நிச்சயமாக ஒற்றுமை இருக்கிறது. இந்த நிலப்பரப்பின் மொத்த மக்களுக்கும் பொதுமையான மொழி பிரிந்து திரிந்து இருக்கிறது என்பதை அது சொல்கிறது.

இந்தியாவின் அனைத்து மொழிகளின் எழுத்துருக்களும் (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தேவநாகரி, வங்கம், குஜராத்தி) அனைத்தும் “பிராமி” (Brahmi) என்ற ஒரே தாய் எழுத்துருவில் இருந்துதான் பிறந்தன.
இவர்கள் இலக்கணக் கட்டமைப்பை குறித்து மொழிக்குடும்பங்கள் பிரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். கடந்த கால மொழி பற்றிய மனிதனின் ஆய்வுகளில் இது ஒரு அனுமானம்தான்.
மேற்கத்திய மொழியியலாளர்கள் (Western Linguists) உருவாக்கியதுதான் இந்த “Language Family Tree” கோட்பாடு. அவர்கள் ஒரு மொழியை “இலக்கணம்” என்ற கண்ணாடி அணிந்து பார்க்கிறார்கள். ஆய்வுகளை சுலபமாக்க இவர்கள் ஏற்படுத்திய கோட்பாட்டை நாம் ஏன் அப்படியே ஏற்க வேண்டும்?
மொழிகள் பிறந்து மக்களால் பேசத் தொடங்கிய பின்னர்தான் இலக்கணங்கள் உருவாக்கப்படுகிறது. ஒரு மூலத்தில் இருந்து கலந்து பிரிந்து திரிந்த மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட இலக்கணங்கள் வழக்கில் இருந்த சிலதை பதிவு செய்யாமல் விட்டு இருக்கலாம்.
மக்கள் பேசத் தொடங்கும்போது இலக்கணப் புத்தகம் கையில் இல்லை.” மக்கள் கலந்து வாழ்ந்தார்கள், சொற்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அப்படி இருக்கையில், பிற்காலத்தில் வந்த இலக்கண விதியை வைத்து, “நீ வேற குடும்பம், நான் வேற குடும்பம்” என்று பிரிப்பது ஒரு “Theoretical Assumption” தானே தவிர “Historical Fact” அல்ல.
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ” என்று வட சொற்களை எப்படித் தமிழ் படுத்துவது என்கிற தொல்காப்பியம் உருவாவதற்கும் முன்னமே வடசொற்கள் தமிழ் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது.
ஒரு மொழியை மக்கள் பேசத் தொடங்கிய பின்தான் இலக்கணம் தோன்றுகிறது, மொழிக்குடும்பம் என்று பிரிப்பதற்கு முன்னரே கலந்திருந்த மொழிகளாகவேதான் சமஸ்கிருதத்தையும் தமிழையும் நாம் பார்க்க வேண்டும்.
இவர்களின் கூற்றுப்படி இலக்கண வேறுபாடுகள் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும், மறுபக்கம், சமஸ்கிருதமும் தமிழும் ஒன்றிலிருந்து ஒன்று இலக்கணக் கூறுகளைக் கூடப் பரிமாறிக் கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்ததால், இந்திய மொழிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து, பொதுவான சிந்தனை முறை உருவாகியிருக்கிறது என்றும் நாம் கொள்ளலாம். இதை “இந்திய மொழியியல் பகுதி” (Indian Linguistic Area or Sprachbund) என்ற ஒரு கோட்பாடு என்கிறார்கள். இரண்டு மொழிகளும் பழைய பாரத தேசத்தில் பிறந்ததுதான் என்பதையேதான் இதெல்லாம் நிறுவுகிறது.
தமிழகம் ஏற்றுக்கொண்ட சைவம் சமஸ்கிருதம் மற்றும் தமிழை சிவனே வழங்கினார் என்கிறது, அவரின் சீடர்கள் இரண்டு மொழிகளிலும் நூல்களை இயற்றி இருக்கிறார்கள் அவர்கள் உலகம் முழுதும் பயணித்து இருக்கிறார்கள். உலகின் பல மொழிகளுக்கும் ஞானத்திற்கும் அதுவே மூலமாக இருக்கிறது.
வள்ளுவர் விஷயத்திற்கு வருவோம். சமணம் துறவறத்தை முன்னிலைப்படுத்துகிறது. இறைவன் இல்லை என்கிறது. அருள் என்கிற கோட்பாட்டை நிராகரிக்கிறது, இறைவன் இல்லை என்கிற பொழுது அருள் எங்கிருந்து வரும்? தண்டனைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. ஆனால் வள்ளுவர் இல்லறம் மேற்கொண்டு, கடவுள் வாழ்த்து பாடி, திருமால் பற்றி, திருமகள் பற்றி, இந்திரன் பற்றித் தன் குறளில் குறிப்பிட்டு, தண்டனைகள் பற்றி எழுதி, அருளுடைமை என்கிற அதிகாரம் வைத்துள்ளார்.
கற்ற மறைப் பொருளை (ஓத்து) மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக்கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்
மறப்பினும்ஓத்துகொளலாகும்பார்ப்பான்
பிறப்பொழுக்கம்குன்றக்கெடும்
இந்த கருத்தை எல்லாம் எழுதிய வள்ளுவரை இவர்கள் சமணராக ஆக்கியது போல, வள்ளலாரை மாற்றப்பார்க்கிறார்கள்.
இந்தக் குறளில் பிறப்பு ஒழுக்கம் என்பது பிறப்பால் ஜாதி என்கிற அர்த்தத்தில் கிடையாது, நல்ல குடும்பத்தில் பிறந்தவனின் நல்ல பெயர் என்கிற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் பிறப்பின் அடிப்படையில் எல்லோரும் சமம், செயல்கள்தான் வேறுபடுகிறது என்கிற கீதையில் வரும் கருத்தை வேறு குறளில் அவர் நிறுவியிருக்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
வள்ளுவர் கீதையைப் பார்த்து எழுதினார் என்று நாம் சொல்லவில்லை. இந்த நில முழுமைக்கும் இருந்த ஞானம் ஒரே மாதிரியானது என்பதையே நாம் சுட்டுகிறோம். திராவிடக் கட்சிகள் சொல்வது போல “கீதை ஜாதியை ஆதரிக்கிறது, குறள் எதிர்க்கிறது” என்பது பொய். இரண்டுமே “ஒழுக்கத்தையும் செயலையும்” தான் முதன்மைப்படுத்துகின்றன என்பதை நாம் மீண்டும் மீண்டும் நிறுவுகிறோம்.
வடமேற்கு இந்தியாவில் தோன்றிய சமணம் என்பதும் சனாதன தர்மத்தின் ஒரு கிளைதான். அப்படிப்பார்த்தால், திருவள்ளுவரும் பாரதியக் கலாச்சாரத்தின் அங்கம் என்பது அவர் இந்த ஆரிய திராவிடப் பகுப்புவாத பொய்களுக்குள் சிக்குவதில்லை. சமணமும் கூட வேதக் கருத்துக்களின் ஒருவகையான புரிதல்தான் என்பதை முன்னமே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்
வள்ளலாருக்கு வருவோம், அவர் சைவ வழியைப் பின்பற்றினார், சைவம் இறைவனை உருவம், அருவுருவம், அருவம் (சொரூபம்) என்கிற நிலையில் வைக்கிறது. இது வேத ஆகமங்களில் இருக்கின்ற அதே கருத்துதான். கீதை, சைவம் என்று இந்த மண்ணில் உருவான சமய ஞான நூல்கள் எல்லாம் ஒரே மூலத்தைப் பலவிதங்களில் நமக்கு எடுத்துச் சொன்னது.
நாதம் என்கிற ஒலியின் செறிவூட்டப்பட்ட நிலையில் ஒளியாக இருப்பதுதான் ஆன்மா. அது பரமாத்மாவாகிய சொரூபக் கடவுளிடம் இருந்து பிரிந்து தோன்றியது என்கிறது நம் ஞான நூல்கள். இந்த ஒளியின் அடிப்படை ஒலி (அதிர்வு). அதிலிருந்துதான் எல்லாம் தோன்றியது என்கிறார்கள். அதில் இறைவனின் சொரூப நிலையை வழிபடுவதுதான் சன்மார்க்கம் என்கிறது திருமந்திரம் போன்ற சைவ நூல்கள்.
வள்ளலார் பிற்காலத்தில் அடையாளங்களைக் கடந்திருக்கலாம், ஆனால் அவர் வந்தது சைவ மரபிலிருந்துதான். அவர் எழுதிய பாடல்கள் சிவனைப் போற்றுபவை. அவரது ‘மூலத்தை‘ (Roots) மறைத்து, அவரை ஒரு நாத்திகர் போலவோ அல்லது மதச்சார்பற்றவர் போலவோ காட்டுவது வரலாற்றுத் திரிபு
சைவ வழியில் சென்று படிப்படியாகச் சைவத்தில் சொல்லப்பட்ட சன்மார்க்க நிலையில் கடவுளைக் கண்டவராக அறியப்படும் வள்ளலாரை, சைவம் பற்றி ஒரு முடியும் அடியும் தெரியாமல்; சைவமும் தெரியாமல் சைவம் கூறிய சன்மார்க்கமும் தெரியாமல் பட்டையை அழித்து இருப்பது ஒரு தவறான வழிகாட்டுதல் இல்லையா? மனிதனாகப் பிறந்து ஒருவர் எப்படி எதைப் பின்பற்றி ஞானியானார், இறைவனைக் கண்டார் என்பதைத் தெரிந்து கொண்டால்தானே சமூகம் அந்த வழிகளைப் பின்பற்றி உண்மையைக் கண்டடையும்? அரசியல் தேவைகளுக்காகச் சில அடையாளங்களை அழித்து ஒரு சமய ஞானியை வைத்து அரசியல் செய்கிறது திராவிடக் கூடாரம். நாளை நம்மில் யாரேனும், வள்ளலாருக்குப் பட்டை பூசினால், ஐயோ இவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்று வந்து விடுவார்கள். இங்கே மதவெறி, மத வெறுப்பு கொண்டு நிலத்தின் அடையாளங்களை அழிக்கின்ற திராவிடக் கூடாரத்திற்கு, அதை ஆதரிப்பவர்களுக்குமேதான் மதவெறி இருக்கிறது. இதைச் சொல்கிறவர்களை எல்லாம் சங்கி என்பார்கள் என்றால், சொல்லிக்கொள்ளுங்கள் என்ற நிலைக்குப் பலர் வந்துவிட்டார்கள்.

ஏன்டா ஒரு உண்மையைச் சொன்னா ஆமான்னு ஏத்துக்க மாட்டிங்களா?? அப்ப போங்கடா நான் சங்கிதான்டா என்கிற நிலைக்கு நாமும் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.