எல்லாமே என் ராசா தான்.
நம்ம அண்ணன் வடிவேல், “எட்டணா இருந்தா எட்டு ஊர் என் பாட்டு கேட்கும் பத்தணா இருந்தா பத்து ஊர் என் பாட்டு பாடும் ” என்கிற பாடலை பாடி ஆடியிருப்பாரே அந்த படம்பெயர் தான் எல்லாமே என் ராசா தான்.
அந்த பாடல் போன்றது தான் அரசியல்.அந்த அரசியல் தான் வாழ்க்கை. அரசியலையும் வாழ்க்கையும் வெவ்வேறாக பார்த்து அரசியலை ஒதுக்கவது அறியாமையின் ஒரு படி நிலை. அந்த நிலையை நம்மில் அநேகம் பேர் தாண்டுவதில்லை.
நம் ஊர் அரசியல்வாதிகள், எட்டு ஊருக்கு நிகராக அசையும் அசையா சொத்துக்கள் வைத்து இருக்கும் பொழுது அவர்களுக்கு என்ன குறை? எது சொன்னாலும் அதை ஒரு ஊரே கேட்கும்; கேட்க வைப்பார்கள்.அது சரியென ஊரே பேசும் பேச வைப்பார்கள்.
காற்றுவாக்கில் நட்பு வட்டத்தில் இருந்து தி.மு.க. 500 ரூபாய் காசு கொடுக்கின்றது அதற்காக தான் அவர்கள் கருத்துக்களை பகிர்கிறேன் என்கிற சேதிகள் எல்லாம் காதில் விழுகிறது.
“காசு இருந்தால், உண்மையை பொய்யாக்கலாம், பொய்யை உண்மையாக்கலாம், இப்படியே செய்து, இன்னும் காசு சம்பாதிக்கலாம்.”
இதை படித்த மாத்திரத்தில், ஆமா! அப்படி தான நடக்குது! என்ன செய்ய முடியும் என்று உங்கள் மனம் கேட்கிறது தானே?
இது போன்று சகித்து கொண்டு, ‘என்ன செய்து விட முடியும்!’ என்கிற இயலாமையோடு உச்சு கொட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்கும் மனப்பாங்கு ஒரு collective thought இன் விளைவு.
இந்த collective thought மாற வேண்டும். எப்படி மாறும்?அது நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். மறுபடி மறுபடி இவர்களே தான் ஜெயிப்பார்கள், என்கிற collective thought உடன் ஓட்டு போட வரிசையில் நிற்பதற்கு வீட்டில் இருந்து விடலாம் தானே?.
‘இது இப்படி தான் இருக்கும். மாறாது’ என்று யார் சொன்னாலும்; ஏன்! உங்களுடைய உள்ளுணர்வே சொன்னாலும்; அதை கேள்வி கேளுங்கள்.
“ஏன் மாறாது? எப்படி மாறாம இருக்கும்?” இப்படியான கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் வந்து விட்டால். மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து அதை வைத்தே மீண்டும் மக்களை ஏமாற்றும் போக்கு முடிவுக்கு வரும்.
இல்லை. இது மாறவே மாறாது என்று இருந்தீர்கள் என்றால். கருணாநிதியும், ராமசாமியும் தான் நமக்கு ஜட்டி போட்டுவிட்டார்கள் என்றும் கூட பேசுவார்கள். எட்டு ஊர்; பத்து சேனல் வைத்திருக்கும் கூட்டம், ஒரு மைக் வாங்க வழியில்லாமலா இருக்கும்! மைக் வாங்கி, 90ஸ் கிட்ஸை ஜட்டி போட வைக்க அதில் பொம்மை படம் வரைய சொன்னதே பெரியார் தான், அதை நிறைவேற்றியது கலைஞர் தான் என்று பேசுவார்கள்.
அப்படித்தான், பெண்ணுரிமையும் சமூகநீதியும் இவர்களின் கண்டுபிடிப்பு போன்று பேசிக்கொண்டு, நம் கலாச்சாரத்தை இழிவுபடுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
உண்மையில் இவர்கள் வந்து தான் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்ததா?
ஒரு எடுத்துக்காட்டுக்கு சொத்தில் சம உரிமை என்பதை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது நம் வாழ்வியல் முறையில் இருந்திருக்கவே இல்லையா? யோசித்து பாருங்கள்.
இன்று கிட்டத்தட்ட கெட்ட வார்த்தையாக மாறிவிட்ட வரதட்சணை என்பது தான், பெண்களுக்கு நம் சமூகம் எப்போதும் சம உரிமை கொடுத்து இருக்கின்றது என்பதற்கு சான்று.
ஆனால், இன்று இந்த வரதட்சணை என்பது, கொடுமை என்கிற வார்த்தையோடு சேர்த்தே தான் பார்க்கப்படுகிறது. பெண்களின் உரிமையாக பார்க்கப்படுவதில்லை.
கால ஓட்டத்தில், ஒரு சமூகம் பின்பற்றி வந்த ஒரு முறைமையோ, சட்டமோ அதன் பயன்பாட்டில் இருந்தும், இலக்கில் இருந்தும் மாறுப்பட்டுவிட்டது என்பதற்காக அந்த சட்டமும் முறைமையும் முட்டாளத்தனமானதாக ஆகி விடாது.
அதன் பயன்பாட்டில் ஏற்பட்ட மாறுபாட்டிற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். காரணங்களை கண்டறிந்து அதனை மேம்படுத்த வேண்டும்.நாம் அதை செய்வதே இல்லை.
இன்றைய இந்த கட்டுரையில், நம் சமூகம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதை எப்படி கையாண்டு இருக்கின்றது என்று பார்க்கலாம்.
யார் ஒருவருடைய சொத்தையும், அசையும் சொத்து; அசையா சொத்து என்று வகைப்படுத்திவிடலாம். ஒருவரின் வீடு, நிலம் எல்லாம் அசையா சொத்து. மற்ற அனைத்துமே அசையும் சொத்து. வீட்டில் உள்ள சட்டி பாத்திரம் முதற்கொண்டு அந்த பாத்திரம் கழுவம் தேங்காய் நார் வரை அனைத்துமே அசையும் சொத்து தான்.
இந்த அசையும் அசையா சொத்துக்களில், அசையா சொத்து ஆண் பிள்ளைக்கும், அசையும் அத்தனை சொத்துக்களும் பெண்களுக்கென்று வகுத்து வைத்து இருந்தார்கள்.
இந்த முறைமை தான் திருமணத்தின் பொழுது பெண் பிள்ளைகளுக்கு பாத்திரம் பண்டம் தட்டு முட்டு சாமான் என்று சீர் வரிசைகளாக அடுக்கும் வழக்கமாக மாறியிருக்கின்றது. நீங்கள் சற்றே சிந்தியுங்கள், நம் பாட்டி காலத்திலும், அதற்கு முன்னரும், கல்யாணத்திற்கு என்று shopping செய்யும் வழக்கமோ எதையும் சேர்த்து வைக்கும் வழக்கமோ இருந்திருக்கவில்லை.மூன்று தலைமுறைகளாக ஒவ்வொரு தலைமுறையின் திருமணத்திற்கும் ஒரே அண்டா சீர் வரிசையில் இடம் பெற்று இருந்திருக்கும்.
ஏன் ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அசையா சொத்து?
ஒரு எடுத்துக்காட்டிற்கு, பாண்டிய மன்னன் ஒருவனுக்கு, ஒரு ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் அந்த பெண்ணை சோழ நாட்டு இளவரசனுக்கு மணம் முடித்து வைக்கிறான் என்று கொள்ளுங்கள். இப்போது அந்த பெண்ணிற்கு அசையா சொத்துக்களில் உரிமை கொடுத்தால், பாண்டிய நாட்டின் ஒரு பாதி அதிகாரத்தை சோழ தேசத்திற்கு கொடுத்ததாக ஆகி விடும். இது நாடுகளை ஆண்ட அரசர்கள் தொடங்கி குடிசையில் வாழும் குடும்ப அரசர்கள் வரை எல்லோருக்கும் பொருத்தும்.
இந்த அதிகார உரிமையின் பரிணாம வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் இன்றும் கூட பல இடங்களில் நீங்கள் கண்டு இருப்பீர்கள். ஆனால், உணர்ந்து இருக்க மாட்டீர்கள்.
ஆண் பிள்ளைகள் இல்லாத வீடுகளில், நிலங்களை, தங்கள் பங்காளி உறவுகளுக்கு விற்று பொருளாக கொடுக்கும் வழக்கும் இன்றும் பல மரபினரிடையே இருக்கத்தான் செய்கிறது.
எல்லாம் சரி! இது எப்படி சரி பாதி உரிமையாகும் என்று கேட்பீர்கள் என்றால்? நிச்சயமாக சரி பாதி இல்லை தான். அதன் காரணமாகவே தொடர்ச்சியாக அந்த பெண் பிள்ளைகளுக்கு gst compensation போல, சில compensation களை ஆண் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்கிற முறைமையை ஏற்படுத்தி வைத்து இருந்தார்கள்.
இது பொருளாதார ரீதியில் ஆண் வாரிசுகளுக்கு தான் அநியாயமான(unfair ) ஒரு முறைமை. இவன் நிலத்தில் விளைச்சலே இல்லை என்றாலும் அவன் தான் செய்ய வேண்டிய முறைகளை செய்தே ஆக வேண்டும்.
இத்தனை organised ஆக முறைமைகளை(system) ஏற்படுத்தி வைத்திருந்த சமூகம், ஏன் சற்றே அநியாயமாக பெண் வாரிசுகளுக்கு சாதகமான வகையில் இதை வடிவமைத்திருக்கும்.
ஒரு மரம் அதற்கேற்ற ஒரு மண்ணில் தன்னை வியாபித்து வைத்து இருக்கும் பொழுது, அதை பிடுங்கி அதற்கு பழக்கப்படாத மண்ணில் நட்டு வைப்பதை போன்றதற்கு ஈடான ஒன்றை தான் சமூகம் பெண்களுக்கும் செய்கிறது. அவை எல்லாவற்றிக்குமான compensation தான் இந்த முறைமைகள்.
இது எங்கே தவறானது, எப்படி கொடுமையில் முடிந்தது. ஒருவர் தன்னுடன் இருக்கும் அசையும் அசையா சொத்துக்களை பெண் வாரிசிற்கும் ஆண் வாரிசிற்கும் பிரித்து கொடுத்த வரையில் எந்த பிரச்சன்னையும் இல்லை. ஆனால், இந்த சமூகம், கால ஓட்டத்தில், இந்த முறைமைகளில் நிர்பந்தங்களை புகுத்தியதன் விளைவு தான் கொடுமையில் முடிந்தது.
சைக்கிள்க்கூட இல்லாத ஒருவர், தன் பெண்ணை திருமணம் செய்து வைக்க கார் வாங்க வேண்டிய நிர்பந்தத்தை இந்த சமூகம் தனக்கு தானே புகுத்தி கொள்ள ஆரம்பித்த பின்னரே பெண்களுக்கான சொத்து உரிமையாக இருந்த வரதட்சணை வேறு வடிவம் பெற தொடங்கியது.
முகலாயர்கள் காலத்திற்கு பின்னரும், ஆங்கிலேயர் வரவிற்கு பின்னரும், நம் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்ட பல மாற்றங்கள் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப இயல்பாகவே நடைமுறைப் படுத்தப்பட்ட சட்டங்கள் எல்லாம், கால சூழலில் தானாகவே, யார் ஆட்சி செய்து இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும்.
ஆங்கிலேயர் வரவிற்கு பின்னர், சட்டங்களாக இயற்றப்பட்ட முறைமைகளின் தொடர்ச்சியாக, பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்க வித்திட்டது திராவிட இயக்கம் தான் என மார்தட்டி கொள்ளும் அளவிற்கு, இது சமூகத்தில் எந்த ஒரு சமநிலையையும் ஏற்படுத்திவிட வில்லை.
இன்னமும் கூட, நம் பாரத சமூகம், பெண்களுக்கு சீர் செய்யும் வழக்கத்தை கைவிடவில்லை. கைவிட வேண்டியதும் இல்லை. இங்கே சட்ட ரீதியாக, அசையா சொத்தில் சம உரிமை என்று வரும் பொழுது, அங்கே அசையும் சொத்து பற்றிய பேச்சு எழுவதே இல்லை.ஒருவர் தன் பெண் வாரிசிற்கு அசையும் சொத்துக்களாக குறிப்பிட்ட அளவிற்கு பிரித்து கொடுத்த பின்னும், அசையா சொத்திலும் உரிமை கொடுப்பது என்னும் நிலை ஒரு ஆண் வாரிசை மட்டும் பாதிப்பதில்லை அங்கே ஒரு பெண்ணும் கூட பாதிக்கப்படுகிறாள்.
நம்மைபற்றியும் நம் சமூக முறைமைகள் பற்றியும் முழுதும் விளங்கிக்கொள்ளாமல்,அவைகளை குறை கூறி, நமக்காக ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய சட்டங்களின் தொடர்ச்சியாகவே அநேகமான குடிமையியல் சட்டங்கள் இருக்கின்றது. இங்கே இராவண அரசியலை கையில் எடுத்து இருக்கும் கூட்டம். இந்த சமூகத்தின் மரபுகளை சரிவர ஆராய்ந்து; அது பின்பற்பற்றி வந்த முறைமைகளுக்கான காரணங்களை ஆய்ந்து எந்த ஒரு சட்டத்தையும் இயற்றவில்லை. அதை விடுத்து அரைவேக்காட்டுத் தனமான பரப்புரைகளில் ஈடுபடுவதையும். வெற்று பெருமிதம் பேசுவதிலுமே தான் காலம் கழிக்கின்றது.
இந்த இராவண அரசியலின் அடுத்த பகுதிகளில், தேவதாசி முறை, பெண்களுக்கான கல்வி முறை, பெண் சுதந்திரம் பாரத சமூகத்தில் எப்படி இருந்தது. வரதட்சணை வேறு ஒரு பரிணாமத்தை அடைந்தது போல அவை எல்லாம் எப்படி மாறியது என்றும் அலசுவோம்.
அதுவரையில் வாய் இருக்கிறது என்பதற்காக இந்தியா ஒரே நாடு இல்லை என்று பேசும் கோமாளித்தனகளையும்; பகுத்தறிவை பயன்படுத்தி விஞ்ஞான ரீதியில் சம்பாதித்த காசு இருக்கின்றது, அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக, குழந்தைகளை ஜட்டி போட வைக்க ஒரு பெரியவர் தான் அதில் பொம்மை வரைய சொல்லி யோசனை சொன்னார் அதை ஒரு கலைஞர் தான் வரைந்தார் என்று பேசும் கூத்துக்களையும் எப்போதும் போல் எந்த சீற்றமும் இல்லாமல், சகித்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் கண்டு களியுங்கள்.
அப்போது தான் இந்த இயக்கங்கள், 100 கோடி செலவில் 135 அடி சிலை வைப்பதற்கும் தெருவெங்கும் அவர்கள் கூட்டத்தின் தலைமைகளின் பேர் வைப்பதற்கும் பணமும் அதிகாரமும் சம்பாதிக்க ஏதுவாக இருக்கும். தமிழகத்திற்கு எத்தனை நன்மைகளை செய்து இருக்கின்றார்கள். கக்கன், காமராஜர், உ.வே.சா., பாரதியார், இவர்களை வசதியில் மேம்பட்ட இயக்கத்தை நடத்திக்கொண்டு இருப்பவர்கள் வெற்றிகரமாக அதனை தொடர நாம் அவர்களை சகித்துக்கொண்டு ஆதரிக்க தான் வேண்டும்.