வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும் !
பாரதம் என்கிற இந்திய நாடு, அரசமைப்பு ரீதியிலாக மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அந்த ‘மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும்’ என்கிற ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொண்டு, “இந்தியா என்பது நாடே இல்லை” என்று கிளம்பியவர்கள் பல உண்மைகளை அவர்களின் அராஜக கருத்துக்களால் மறைத்தது போல் இப்போது புதிதாக அவர்களின் பழைய பாட்டு ஒன்றை பஜனைக்கு எடுத்து இருக்கின்றார்கள்.
இப்படியானவர்கள் எந்த ஒரு நூலையும் முழுமையாக படித்தறிந்து உணராமல், ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தங்களின் வெறுப்புணர்வுக்கு ஆதரவான ஆதாரங்களாக காட்டி பழகிவிட்டார்கள். இந்தியா என்பது ஒரு நாடு இல்லை ஒன்றியம் என்று பேசி நிறுவிய தி.மு.க. சைமன் என்றும் அறியப்படுகிற சீமான், செஸ் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய யேம்சு வசந்தன் என்று அத்தனை பேரும் ஹிந்து மதத்திற்கு தொடர்பில்லாதவர்களாகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காக அதை வெறுப்பவர்களாகவோ தான் இருக்கின்றார்கள்.இவர்கள் ஒன்றியம் என்கிற வார்த்தை எடுத்துக்கொண்டு ஒரு வருடம் ஓட்டினார்கள். மாநிலங்கள் இணைந்து இந்தியா உருவாகவில்லை இந்தியாவிற்குள் தான் மாநிலங்கள் இருந்தது. இன்னும் புதிதாக பத்து மாநிலங்கள் பிரிக்கும் உரிமையும் இந்தியாவிடம் தான் இருக்கிறதுஎன்பதை புரிந்து கொள்ளாத அவர்கள்இதைபற்றிய அத்தனை தெளிவும் அரசியலமைப்பில் இருக்கிறது என்பதையும் கவனிக்காமல் விட்டுவிட்டு ஒற்றை வாக்கியத்தை அவர்களுக்கு ஏற்றபடி அர்த்தம் கொண்டு கூத்து நடத்தினார்கள்.அரசியலமைப்பை முழுமையாக படித்திருந்தால் எங்கெல்லாம் இந்தியா ஒரு நாடு என்று நிறுவப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டு இருப்பார்கள்.
இதே அரைகுறை அணுகுமுறை தான் இவர்களின் சமய வெறுப்பிலும் வெளிப்படுகிறது .
சனாதன தர்மம் என்று அறியப்படும் ஹிந்து மதம் என்பது இயற்கையில் இயற்கையாக என்னவெல்லாம் இருக்கின்றதோ அவையெல்லாம் இப்படி இருக்கின்றது என்பதை மட்டுமே தான் நிறுவுகிறதே தவிர அது எங்கும் இவர்கள் உயர்ந்தவர்கள் இவர்கள் தாழ்ந்தவர்கள் என்றோ ஹிந்துக்களாக இருக்கின்றவர்கள் இந்த கடவுள்களை தான் வணங்க வேண்டும்; இந்த கடவுளர்களை மட்டும் தான் வணங்க வேண்டும் என்றெல்லாமோ சொல்லவில்லை.
மறைந்த பத்திரிகையாளர் சோ, ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார்,”ஒரு வகையில் உலகத்தில் பிறக்கும் எல்லோரும் ஹிந்துக்கள் தான், ஹிந்து மதம் எந்த கடவுளையும் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை அதற்கு தனியாக ஒரு பெயர் கூட தேவைப் பட்டிருக்கவில்லை ”
அவர் சொன்னது போல், சனாதன தர்மம் என்கிற ஹிந்து மதம், எந்த நம்பிக்கைகளையும் எந்த சடங்களையும் எந்த சட்டங்களையும் யார் மீதும் திணிக்கவில்லை. அதன் மீதும் வைக்கப்படும் முக்கிய குற்றசாட்டான சாதிய பாகுபாடுகளை அது எப்போதும் எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
இந்த குறள் என்ன சொல்லியிருக்கின்றதோ அதையே தான் சனாதனமும் சொல்கின்றது. எல்லோரும் பரமாத்மாவில் இருந்து தான் தோன்றுகிறார்கள். எல்லோரையும் சமமாக நடத்துகிறவனே தான் இறைவனுக்கு பிரியமானவன் என்கிறது சனாதனம்.
முன்னர் சொன்னது போல், இயற்கையில் இயற்கையாக என்ன இருக்கின்றதோ அதை தொகுத்து பதிவு செய்ப்பட்டிருப்பது தான் சனாதனம் என்று அறியப்படுகிறது.
சனாதன தர்மத்தில் இருக்கும் பகவத் கீதையில், “இயற்கையில் எல்லா மனிதர்களுக்குள்ளும் சாத்வீகம், ரஜோ, தமோ என்னும் மூன்று விதமான குணங்கள் இருக்கின்றது. எதிலும் எந்த பாகுபாடும் பார்க்காத எல்லாவற்றிலும் இறைவனை காணும் பக்குவத்தை கொண்ட சாந்த குணத்தை சாத்வீக குணம் என்றும்; பற்றுகளை தருவதும் அதை தொடர்ந்து வரும் கோபம் போன்ற உணர்வுகளை கொண்டது ரஜோ குணம் என்றும்; அறியாமை சோம்பல் இவையெல்லாம் தமோ குணம் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கின்றது” என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. அதவாது, இயற்கையில் என்ன இருக்கின்றதோ அது வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மிருகம் கொன்று
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க
பார்க்கின்றேன்ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே
இந்த பாடல் வரிகளில் இருக்கும் அதே கருத்தையும் கூட பகவத் கீதை பேசுகிறது. இந்த மூன்று குணங்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருந்து கொண்டு ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த போட்டியில் எந்த குணம் மிகுகிறதோ அதுவே ஒருவனின் செயல்களை தீர்மானிக்கிறது அந்த செயல்களின் அடிப்படையில் இந்த மனிதர்களை பிரிக்கலாம் என்பதை தான் வள்ளுவர் சொல்லியிருக்கின்றார் அதையே தான் சனாதனமும் பகவத் கீதையும் சொல்லியிருக்கின்றது. இது ஒரு நிர்வாக ரீதியிலான வகைப்படுத்தல் போன்றது தான். It is just a classification and not discrimination.
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
‘தொழில்’ என்பது உத்தியோகம் என்றில்லாமல் செயல்கள் என்று அர்த்தம் கொள்ளப்படவேண்டும் . அந்த செயல்களின் அடிப்படையில் உயிர்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் என்பதை தான் சனாதனம் சொல்கிறது. It is more like classification or hierarchy of society like an organizational chart of an institution.
மனிதர்களுக்குள் இருக்கும் இந்த மூன்று குணங்களில், அறியாமையும் கோபமும் அகங்காரமும் மமதையும் தான் வேற்றுமைக்கும் வெறுப்புணர்வுக்கும் காரணமேயன்றி சனாதனம் ஒரு போதும் வேற்றுமையை ஆதரித்ததில்லை என்பதை பகவத் கீதை படித்தாலே புரிந்த கொள்ளலாம். பகவத் கீதை, “நீ கடவுளை வணங்க வேண்டாம் உன் வேலையை பாரு அது கூட இறைவனை அடையும் வழி தான்” என்கிறது. மஹாபாரதம் மனிதனின் கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும் அந்த கற்பனைக்குள் இருக்கும் பகவத் கீதை தான் சமூக நீதியை பேசும் மனித சமூகத்தின் முதல் பதிவு.அது எல்லா நம்பிக்கைகளையும் ஏற்கிறது. உருவமற்ற வழிபாடுகளைப் பற்றி பேசுகிறது. சைவ நெறிகளும் கூட அதையே தான் சொல்கிறது. ஆனால், சைவ நூல்கள் அதிகமாகவும் புரிந்து கொள்ள கடினமானதாகவும் இருக்கின்றது.
சைவ நூல்கள் படித்திருக்க வேண்டாம்; பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதை படிக்கநேரம் ஒதுக்கியிருந்தால் கூட இவர்களுக்கு சனாதனத்தின் மீது; ஹிந்து மதத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டு இருக்காது.
கம்ப ராமாயணத்தை எரிக்கும் முட்டாள்தனத்தை இந்த ராவண அரசியல் கூட்டம் நிகழ்த்திய பொழுது, அந்த கூட்டத்தில் ஒருவராய் நாத்தீகராய் இருந்த கண்ணதாசன், எரிப்பதற்கு முன்னர் படிக்கலாம் என்று படித்திருக்கின்றார்; படிக்க தொடங்கியவர் அதை கீழே வைக்கவில்லை. இந்த நிகழ்வை ரஜினிகாந்த் ஒரு மேடையில் நினைவுகூறினார். இதே நிகழ்வைப் பற்றி என்னிடம் சொன்ன நண்பன் ஒருவன் இன்னும் நகைச்சுவையாக, “கண்ணதாசன் படிக்கலாம்ன்னு படிச்சுட்டு முட்டா பசங்களா இதை ஏன்டா எரிக்கிறீங்க?” என்று கேட்டது போல சொன்னான். கம்ப ராமாயண எரிப்பு; சனாதன ஒழிப்பு மாநாடு இவையெல்லாம் எதையும் படித்து உணராதவர்கள் செய்யும் செயல்கள் தான்.
அப்படி படித்து உணராத அனுபவமற்ற அமைச்சர்களை தான் தமிழகம் பெற்று இருக்கின்றது. இது என்னுடைய விமர்சனம் இல்லை, தி.மு.க அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா சொன்னது.
“உதயநிதி ஸ்டாலின் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. அதன் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். எல்லாரும் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்கிறோம். எனவே எந்த ஒரு பிரிவு மக்களின் உணர்வுகளையும் பாதிக்கும் செயல்களில் நாம் ஈடுபட கூடாது.உதயநிதி ஜூனியர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என நினைக்கிறன். அவரை கண்டிப்பதை விட மக்களின் உணர்வுகளை பாதிக்கும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.
On a lighter note அல்லது diplomatically, உதயநிதியின் முதிர்ச்சியின்மையை தான் மம்தா ஜூனியர் என்று குறிப்பிட்டு இருக்க கூடும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சருக்கு சனாதன ஒழிப்பு மாநாடு என்பது தேவையில்லாத ஆணி. அவருடைய வார்த்தைகள் ஹிந்து மதத்தின் மீதான நேரடி வெறுப்புணர்வின் வெளிப்பாடு. மக்களாட்சியில் அமைச்சர்களை விட அரசியலமைப்பே மிக பெரியது.அந்த அரசியலமைப்பில் உறுப்பு 25, மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும் சுதந்திரமாக சமயநெறி ஓம்புதலுக்கும் ஓதிப்பரப்புதலுக்கும் இடம் இருப்பதை உறுதிசெய்கிறது . உறுப்பு 26, சமயம் சார்ந்த காரியங்களை நிர்வகிப்பதற்கான சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால், ஹிந்து அறநிலையத்துறையையோ அரசு நிர்வகிக்கின்றது, அதில் கதிர்விஜயம் குழுவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பா.ஜ.க. வலியுறுத்துவது போல் கோவில்கள் அரசு அல்லாத அமைப்பிடம் சென்றால் இன்னும் சீர் கெட்டு போக வாய்ப்பிருக்கின்றது.
ஆனால், ஹிந்து அறநிலையத்துறையை நிர்வகிக்கும் அமைச்சர் சேகர் பாபும் கூட சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது இந்த அரசின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.
மக்களாட்சியில், எல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு எல்லோருக்கும் பொதுவானர்களாக, நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்கும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் அமைச்சர்கள், குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது வெறுப்பை உமிழும்படியான ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதோடு அல்லாமல் அந்த மத நம்பிக்கையை பின்பற்றுகிற அனேமானவர்கள் மனம் புண்படும் விதமாக பேசிவிட்டு அவர்கள் கட்சியின் அடிவருடிகளை கொண்டு அதை நியாயப்படுத்திக்கொண்டும் ஆட்சியே போனாலும் கவலையில்லை என்று அராஜகமாக கருத்து தெரிவிப்பதும் அரசியல் ரீதியிலாக கண்டித்தக்கதே. அதே வேளையில் அது வெறுக்கதல்ல என்பதையும் சனாதனமே தான் சொல்கிறது.
ஸத்த்வானுரூபா ஸர்வஸ்ய ஶ்ரத்தா பவதி பாரத |
ஶ்ரத்தாமயோஉயம் புருஷோ யோ யச்ச்ரத்தஃ ஸ ஏவ ஸஃ || பகவத் கீதை-17-3 ||பரதனின் மைந்தனே, பல்வேறு இயற்கை குணங்களுக்கு கீழான இருப்பிற்கு ஏற்பவே ஒருவன் குறிப்பிட்ட நம்பிக்கையை விருத்தி செய்கிறான். உயிர்வாழி அவனுடைய குணங்களுக்கு ஏற்பவே ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை உடையவனாக ஆகிறான்.
அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அல்லது ஒரு மதத்தின் மீதான வெறுப்பையோ அல்லது சனாதனத்தில் சொல்லப்படாததை சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி அரசியல் செய்யும் பழக்கத்தையோ ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.
அதனால் தான் ஆ.ராசா அவர் நம்பிக்கைக்கு ஏற்ப அவர் குணத்திற்கு ஏற்ப சனாதனத்தை எச்.ஐ.வியோடும்; உதய நிதி டெங்கு மலேரியாவோடும் ஒப்பிட்டு இருக்கின்றார்கள். அவர்களின் குணம் மாறும் பொழுது இந்த கருத்தில் இருந்து அவர்கள் வேறுபடலாம். அதை தனிப்பட்ட முறையில் பெரிதுபடுத்தி வெறுப்பை வளர்க்க வேண்டியதில்லை. ஆனால், சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சட்டத்திற்கு புறம்பான இந்த செயல்கள் மீது சட்டப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த நடவடிக்கையை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் கூட எடுக்காது. அது தான் அரசியல்.
2022இல் இந்தியாவின் வடமாநிலத்தில் என்றோ எப்போதோ நடந்த தொலைக்காட்சி விவாதத்தில்,தன்னுடைய மத நம்பிக்கை அவமதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது என்கிற எண்ணம் மேலோங்கி ஒருவர் மாற்று மதத்தின் மீது வைத்த எதிர்க்கருத்து, அந்த மத நம்பிக்கையுடயவர்களை புண்படுத்தும் விதத்தில் அமைய, சில மாதங்கள் கழித்து அது சமூகத்தில் அமைதியின்மையையும் சலசலப்பையும் உண்டாக்க, அதனைத்தொடர்ந்து அவர் மீது இ.பி.கோ. 295A , 153, 153A பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யததும் அதே அரசியல் தான்.
வரலாற்றில் இந்த இ.பி.கோ. 295A ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை உமிழும் தி.மு.கவிற்கு எதிராக செயல்பட்டு தண்டனை வாங்கி தந்ததாக தெரியவில்லை. கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம் சென்றால் நாங்கள் ஹிந்து மதத்தை சொல்லவில்லை என்று வந்து நிற்பார்கள். இது விஞ்ஞான உருட்டு.
இந்த கட்டுரையை இத்தனை தூரம் படித்தவர்களில் பலர் இதில் இருக்கும் உண்மைகளை ஜீரணிக்க முடியாமல் இது ஒரு சங்கியின் பதிவு என்று புளுங்குவார்களானால், அவர்களுக்கு சொல்லிக்கொள்வது, இன்னும் சத்தமாக சங்கி என்று சொல்லுங்கள் என்று துணியும் இடத்திற்கு இன்னும் பலரை நீங்களே தான் தள்ளிக்கொண்டு இருக்கிறீர்கள். அதை உணராமலேயே சொல்லுங்கள். DP இல் சாமி படம் வச்சிருக்கவன், கோவிலுக்கு போறவன். தி.மு.க. என்னும் அக்மார்க் அப்பழுக்கற்ற கட்சியின் தவறுகளை சுட்டி காட்டுறவன் இவர்களையெல்லாம் எல்லாம் சங்கி என்று எப்போதும் சொல்லுவது போலவே இன்னும் சத்தமாக சொல்லுங்கள்.உங்கள் சத்தம் தமிழகத்தில் சங்கிகளை அதிகரிக்கவே செய்யும் அது நீங்கள் ஆதரிக்கும் தி.மு.கவிற்கு பெரும் எதிர்வினையாய் முடியும்.
இந்த கட்டுரையை புரிந்துகொண்டவர்களுக்கு சொல்லிக்கொள்வது, யார் மீதும் எந்த வெறுப்பும் நீங்கள் பரப்ப தேவையில்லை. உலகின் எல்லா மதங்களை ஏற்றுக்கொண்ட கோட்பாடு தான் சனாதன தர்மம், நம் வேர்களோடு தொடர்பில் இருக்க கற்று தந்தது சனாதன தர்மம்.இந்த ப்ரபஞ்சத்தோடு தொடர்பில் இருக்க கற்று தந்தது சனாதன தர்மம்.நீங்கள் எந்த கட்சியை வேண்டுமென்றாலும் ஆதரியுங்கள். அவர்களின் எல்லா கருத்துக்களையும் ஆதரிக்காதீர்கள்.
இது ஒரு காலாச்சார படையெடுப்பு. இது மீண்டும் மீண்டும் இந்தியர்கள் முட்டாள்கள் என்று நிறுவும் அரசியல்.சீனர்கள் எந்த மதம் மாறினாலும் முன்னோர்களை வழிபடுவதை; அவர்கள் கலாச்சார சடங்குகளை பின்பற்றுவதை என்று எதையும் நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் வெட்கபடவும் இல்லை. ஜப்பானியர்களும் அவர்களின் தனித்துவத்தை இழந்துவிடவில்லை.ஆனால், இப்படியான பரப்புரைகளால் மதம் மாறிய எத்தனை இந்தியர்கள் இன்னும் முன்னோர் வழிபாட்டை பின்பற்றுகிறார்கள் என்பதை சிந்தியுங்கள் அவர்கள் அவர்களின் வேர்களுடனான தொடர்பை இழந்துவிட்டதை பற்றி சிந்தியுங்கள் . எத்தனை பேர் திருமந்திரம் கீதை போன்ற நூல்களில் இருக்கும் அறிய உண்மைகளை ஏற்று பெருமிதம் கொள்கிறார்கள் என்று சிந்தியுங்கள். தாஜ் மஹால் இந்தியாவின் அடையாளம் ஆகாது என்று சொன்னால் கோபம் கொள்ளத்தான் செய்கிறார்கள். தாஜ்மஹாலும் நம் நாட்டின் மீதான ஒரு படையெடுப்பின் அடையாளம் தானே! அதை வெறுக்க சொல்லவில்லை உண்மையை ஏற்றுக்கொள்ளலாம் தானே!
அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்க பொழுது நாம் உணர வேண்டியது இவையெல்லாம் மறைமுகமாக இந்தியர்கள் மீது திணிக்கப்படும் தாழ்வுமனப்பான்மை.பிரிட்டிஷ் ராணியை யாரும் தொடக்கூடாது, என்பது பாரம்பரியமாக அவர்களிடம் இருக்கும் தீண்டாமை. இந்திய கலாச்சாரத்தில் ராஜாவாக இருந்த விசுவாமித்திரர் அந்தணர் ஆகிறார். அந்தணராக இருந்த பரசுராமர் ஷத்ரியனாகிறார். அரசர்கள் வேறு இன பெண்களை மணந்து ராணி ஆகியிருக்கின்றார்கள்.ராமன் குகனோடு உறவு பாராட்டுகிறான். ஆனால், இந்த அரசியல் கூட்டம் நமக்கு கற்பிப்பது என்ன?
இந்த ராவண அரசியல் கூட்டம் நம் தனித்துவத்தின் மீது பரப்பும் பொய்யுரைகள் தான் இந்தியர்களுக்கு பொதுவாக இருக்கும் தாழ்வுமனப்பான்மைக்கு காரணமும் கூட என்பதை நாம் உணர வேண்டும். “நீ செய்யுற எல்லாமே தப்பு முட்டாள்தனமா எதையோ செய்ற” என்று நாம் நம்பும்படியாகவே ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது நமக்கே நம் மீது ஒரு அவநம்பிக்கை ஏற்படும் அதை தான் இந்த இராவண அரசியல் கூட்டம் காலம் காலமாக செய்து வருகிறது. நம் கலாச்சாரத்தில் உள்ள நூல்கள் சொல்லாத சமூகநீதியையும் சமத்துவத்தையும் விட பெரிதாய் வேறு எங்கும் யாரும் சொல்லிவிடவில்லை.
யார் உங்களை என்ன சொன்னாலும்; ‘சங்கி’ என்றே சொன்னாலும் நம்மை பற்றிய நம் கலாச்சாரம் பற்றிய பொய்யுரைகளை ஏற்காமல் அதற்கு எதிர்வினையாய் இன்னும் அதிகமாக அதை பின்பற்றுங்கள். மிக முக்கியமாக கீதை திருமந்திரம் போன்ற நூல்களில் சொல்லப்பட்டிருப்பதை படித்து உணர்ந்துகொள்ள முற்படுங்கள். நீங்கள் அதை செய்ய தொடங்கினாலே இவர்களின் இந்த அரசியல் கூத்து முடிவிற்கு வந்துவிடும்.உங்கள் கலாச்சாரம் சொல்லித்தந்த நெறிகளின் படி நீங்கள் யேசுவிற்கு விளக்கு ஏற்றி கும்பிடுவதற்கோ இறைவனின் உருவமற்ற தன்மையை வழிபடுவதற்கோ எந்த தடையும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இது தான் இயற்கை என்று சொல்கின்ற ஒன்று எப்படி அழியவோ ஒழியவோ செய்யும்.சனாதனம் அழியவோ ஒழியவோ போவதில்லை.எதுவுமே அழிவதில்லை என்பதையும் சனாதனமே தான் சொல்கிறது.பூமி உருவான பொழுது இருக்கும் மண் தான் இப்போதும் இருக்கிறது அதே தண்ணீர் தான் இப்போதும் இருக்கிறது இவைகள் எல்லாம் தான் தோன்றி மறையும் உயிர்களாக இருக்கின்றது என்பதை கீதை சொல்கிறது; திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
30. செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
பூமி உருவான பொழுது மண்ணாக இருந்த நான் தான் இன்று மாணிக்கவாசகராகவும் இருக்கின்றேன் என்கிற உணர்தலை தர வல்லதாய் சனாதனம் தான் இருக்கின்றது.
ராவண அரசியலின் ஜாலங்கள் மேலும் அம்பலப்படுத்தப்படும். இத்தனை தூரம் வாசித்ததற்கு நன்றி!!