இந்த பகுதி கதிர்விஜயம் வாசகர்கள் , மின்னஞ்சல், அல்லது முகநூல் பக்கம் மூலம், பகிர்ந்துகொள்ளும் அவர்களின் கருத்துக்களும் எண்ணங்களையும் பிரசுரிக்கும் பகுதியாக இருக்கும்.
ஒவ்வொவருவரும் அவர்கள் வாழ்ந்த காலங்களில் அவர் அவருக்கு என்று ஒரு பெயரை சம்பாதித்து கொள்கிறார்கள்.அவர்களின் காலத்திற்கு பிறகும் கூட அவர்கள் சம்பாதித்த அந்த பெயரும் மரியாதையும் நிலைத்து இருக்கும்.அது யாரும் அழிக்க முடியதாக இருப்பதோடு அவரின் குடும்பத்திற்கு அரணாகவும் இருந்து உதவும்.
அந்த மரியாதையை, அந்த பெயரை அவர்களுக்கு சம்பாதித்து கொடுப்பது எது?
அவர்களின் ஜாதியா? மதமா? இரண்டும் இல்லை அவர்களின் செயல்கள்.
கடின உழைப்பால் குடும்பத்தை நிலைநிறுத்தி, தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதோடு, மற்றவர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து,மனதளவிலும் வன்மம் இல்லாமல் வாழ்பவர்கள் அவர்களின் நற்செயல்களால் சம்பாதிக்கும் பெயரை யாராலும் அழித்து விட முடிவதில்லை. அது தான் அவர்களின் அடையாளமும் கூட.
ஜாதியோ மதமோ அல்ல.
ஒரு கல்யாண வீடு, நிறைய சொந்தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். எல்லோரும் ஒரே ஜாதி தான். மணப்பெண், தான் அணிந்து இருந்த வளையலை கழட்டி வைக்க, அதற்கு பின் அந்த அறைக்கு சென்ற அதே ஜாதியை சேர்ந்த ஒரு உறவினர் எடுத்து மறைத்துவிடுகிறார். மரியாதை குறைவான வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், திருடிவிட்டார்.
இன்னொரு வீடு, அந்த வீட்டின் குடும்பத் தலைவர் மறைந்து ஒரு வருடம் கழித்து உறவினர் ஒருவர் துக்கம் விசாரிக்க வருகிறார்.அவரை மதித்து வீட்டில் தனியறை தந்து தங்க வைத்தற்கு அபராதமாக ,வீட்டில் இருந்த ரூபாய் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்.
இந்த இரண்டு இடங்களில், அந்த நபர்களின் மோசமான செயல்களே, அவர்களின் அடையாளமாக அறியப்படும். நிச்சயமாக ஜாதியோ மதமோ அடையாளமாக அறியப்படுவதில்லை.
ஒரே ஜாதிக்குள், ஒரே மதத்துக்குள், ஒருவர் தவறு செய்யும் பொழுது, அங்கே நாம் யாரையும் பொதுமைப்படுத்துவதில்லை.
ஆனால், வெளியுலுகில் அந்த பொதுமைப்படுத்தும் தவறை அதிகம் செய்கிறோம்.
குஷி படத்துல ஜோதிகா சொல்ற மாதிரி, “என்ன பத்தி பேசும் போது என்ன பத்தி மட்டும் பேசு எல்லா பொண்ணுங்கள பத்தியும் பேசாத”
ஒருவர் ஒரு நல்லது செய்யும் பொழுது நாம் அங்கே பொதுமைப்படுத்துவதில்லை, தவறு செய்துவிட்டால் மட்டுமே தான், குடும்பத்தை, ஜாதியை,மதத்தை சேர்த்து பொதுமைப்படுத்துகிறோம்.
இரண்டு விஷயங்கள்:
1. பொதுமைப்படுத்துவது தவறு.
2.செயல்கள் தான் நம்முடைய அடையாளம்.
நல்ல செயல்களும், எண்ணங்களும், நாம் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதமும் தான் நம்மை உயர்த்தும் , நமக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்கும்.
மற்றவர்கள் என்ன செய்தாலும், என்ன தீங்கு செய்தாலும், நன்மை மட்டுமே செய்து நல்லது மட்டுமே நினைப்பவர்களுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் எப்போதும் நன்மை மட்டுமே தான் நடக்கும். அவர்கள் வாழ்வில் நிச்சயம் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
நன்மையை செய்கிறவன் தீமையை அடைவதே இல்லை-பகவத் கீதை.
-ப்ரியங்கா பாலசுப்பிரமணி
நம்முடைய மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் தொடரின் செயல்களின் பெருமை பகுதியை படித்துவிட்டு வாசகர் ப்ரியங்கா நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்தை தான் படித்தீர்கள். உங்களுடைய எண்ணங்களும் எங்கள் வலைத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினால், எங்கள் முகநூல் பக்கத்திற்கு message அல்லது “editor@kathirvijayam.com “என்கிற முகவரிக்கு மின்னஞ்சலோ அனுப்புங்கள்.