பொதுவாக மதுரையில் அரசியல் மாநாடு என்றாலே அது ஒரு தனி கவனத்தை பெற்று விடுகிறது. காரணம், மதுரைக்கும் அரசியல் மாநாடுகளும் தொன்று தொட்டு தொடரும் ஒரு பாரம்பரிய பந்தம் இருக்கிறது. அதற்காக மதுரையில் மாநாடு நடத்தியவர்கள், கட்சி  தொடங்கும் விழாவை நடத்தியவர்கள் எல்லோரும் தேர்தல் வெற்றி பெற்று இருக்கிறார்களா என்றால் இல்லை. ஆனால், எப்படியும் ராஜ்ஜிய சபா உறுப்பினராகவோ அல்லது எதிர்க்கட்சி தலைவராகவோ ஆகிவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர், விஜயகாந்த், சரத்குமார்,கமலஹாசன் வரிசையில்  தற்போது சினிமா பின்புலத்தில் இருந்து வந்து கட்சி தொடங்கிய விஜய் அவருடைய இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்தி முடித்து இருக்கின்றார்.

கூலி திரைப்படம் வெளியானதில் இருந்து சில நாட்கள் வரை அந்த திரைப்படம் பற்றிய செய்திகளாக செய்தி ஊட்டத்தின் (newsfeed)  மேற்பரப்பில் மிதந்து ஓய்ந்து மூழ்கிய பின், விஜய்யின் இரண்டாவது மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான செய்திகள் செய்தி ஊட்டத்தின் மேற்பரப்பில் மிதக்க தொடங்கியிருந்தது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த பொழுது கொடிக்கம்பம் சாய்ந்து ஒரு காரின் மீது விழுந்து கார் இரண்டாக பிளக்கப்பட்டது என்கிற செய்தியை அநேகம் பேர் கடந்து இருப்பீர்கள்.

அந்த காருக்காக அனுதாபப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து நிதி திரட்டியிருந்தால், கார் உரிமையாளருக்கு நூறாயிரம் கார்கள் வாங்கி கொடுத்திருக்கலாம். அந்த அனுதாபிகளில் அநேகம் பேர் ஐயோ கொல்றாங்களே கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்கிற  தகவலில் ஆச்சரியமில்லை. நம்மில் அணில் கூட்டத்தை சேராதோரும் கூட அந்த அனுதாபிகளுடன் சேர்ந்துகொண்டோம், அது தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய  விஷயம்..

பல ஆயிரம் பேர் அல்லது சில லட்சம் பேர் கூடும் ஒரு கட்சி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடக்கிறது, அப்போது அங்கே ஒரு விபத்து ஏற்படுகிறது. உடனே சில கோஷ்டிகள் அதை அந்த கட்சியின் தலைவர் கணக்கில் எழுதி நம் மனதில்  திணித்துவிடுகிறார்கள்.

“கொடிக்கம்பம் விழுந்துருச்சா! விஜய் தான் காரணம், இவன் கட்சி ஆரம்பிச்சு என்ன பண்ண போறான், அவன் நடத்துற மாநாட்டுக்கே பாதுகாப்பு இல்லை.” என்று தொடங்கி சோறு இல்லை, தண்ணி இல்லை என்கிற எல்லா குறைகளும் அங்கே தேடிக்கண்டுபிடிக்கிறோம்  . சோறு இல்லை தண்ணி இல்லை என்கிற குறைகள் எடப்பாடியின் கூட்டத்திலும் கூட கண்டுபிடிக்கப்பட்டது.

பா..கவையும் அவர்கள் சார்ந்தவர்களையும் எதிர்த்து தி.மு.கவை ஆதரித்தால் அது தான் நடுநிலை என்று நம்பிக்கொண்டிருக்கும் நிருபர்களில் ஒருவர் மாநாட்டிற்கு சென்று தண்ணி வராத குழாய்களை தேடி தண்ணி வரலை எல்லோரும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அக்கறைப்பட்டுக்கொண்டார். இப்படியான கூட்டங்களும் மாநாடுகளும் அத்தியாவசியமானது இல்லை. அங்கே செல்கிறவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் தான் செல்லுகிறார்கள். தண்ணீர் கிடைக்காமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த நிருபர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே நாங்க எப்போ தண்ணீர் கேட்டோம் என்பது போல தண்ணீருக்காக தவிக்கிறார்கள் என்று அவர் அனுதாபப்பட்ட அந்த  கூட்டம் அவருக்கு எதிராகவே திரும்பி விட்டது.

இந்த விஷயத்தில் தி.மு.. ஆதரவாளர்களும், அவர்களோடு சேர்ந்து மாநாடு விஷயத்தில் என்ன நடந்தாலும் விஜயை குறை சொல்லிக்கொண்டிருந்த நம்மில் சிலரும் சிந்திக்க தவறிய விஷயம் இருக்கிறது.

எந்த கட்சிக்காரர்களாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஒரு அரசாங்கத்தின் அதிகார நிலவரைவுக்குள் நடக்கும் எதற்கும் அந்த அரசாங்கமே தான் பொறுப்பு.

யாரோ ஒரு தனி நபரோ கட்சியோ இப்படியான கூட்டங்களுக்கு அனுமதி கேட்கும் பொழுது, அதை அனுமதிப்பது அரசாங்கமாக தான் இருக்கிறது. இப்படி கூட்டங்களை மாநாடுகளை அனுமதிக்கின்ற அரசாங்கம், பல விஷயங்களை கருத்தில் கொண்டாலும் சில விஷயங்களை தவற விடுகிறது. இப்படி கூட்டங்களை நடத்துகிறவர்களிடம், பார்க்கிங்க்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா, மற்ற வசதிகள் இருக்கிறதா போன்ற கேள்விகளை கேட்டாலும்,விழா அல்லது மாநாடு தொடங்குவதற்கு முன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அரசு குறையில்லாமல் ஆய்வு செய்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு மாநாட்டை நடத்துகிறவர்களிடம், எத்தனை வாகனங்கள் வருகிறது, அதிகமான வாகனங்கள் வராமல் இருப்பதை எப்படி தடுப்பீர்கள், கூட்டம் அதிகம் ஆகாமல் எப்படி கட்டுப்படுத்துவீர்கள் அதற்கான திட்டங்கள் என்ன என்பதை பற்றி கேட்டறிவதில்லை.

ஒரு இடத்தில், லட்சம் பேர் மட்டுமே தான் கூட முடியுமென்றால், அங்கே இரண்டு லட்சம் வராமல் எப்படி தடுப்பதை பற்றிய திட்டமும் அக்கறையும் செயல்முறைகளும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். அதுவும் இருப்பதில்லை. எப்போது எந்த கூட்டம் நடந்தாலும், இசை கச்சேரிகள் உட்பட எது நடந்தாலும், வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லாமல் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருப்பது, மாநாடோ கூட்டமோ நடந்து முடிகிறவரையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவது, என்று  இதையெல்லாம் நாம் கண் கூடாக பார்த்திருக்கின்றோம் அனுபவித்து இருக்கின்றோம்.

.ஆர். ரஹ்மான் கான்செர்ட், விமான சாகச நிகழ்ச்சி, இப்படி நிகழ்வுகளின் பொழுதெல்லாம் ஒரு இடத்தை நோக்கி பெருங்கூட்டம் படையெடுக்கும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்யலாம், என்பதை பற்றிய  முன்திட்டமிடலோ பாதுகாப்பு நெறிமுறைகளைப் விசாலப் பார்வையோ நம் அரசாங்க இயந்திரத்திற்கு இருப்பதில்லை. எல்லாம் நெறிமுறைகளை இருக்கிறதென்று யாரும் சப்பைகட்டிக்கொண்டு வருவார்களெனில் அந்த நெறிமுறைகள் இருந்தும் தவறுகள் நடக்கிறது என்றால் அது இன்னும் மேம்ப்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி! மாநாட்டிற்கு வந்தவர்களில் ஒரு கூட்டம் தான் விஜயை பார்த்தவுடன் கிளம்பி விட்டதே கொடிக் கம்பம் சாய்ந்தது தானே பிரச்சன்னை என்று நினைப்பீர்கள். சரி தான் அந்த விபத்து தான் அதிகம் பேசப்பட்ட பிரச்சனை. விஜய் மாநாட்டிற்கான ஏற்பாட்டில் கார் மீது விழுந்த கொடி கம்பம் மனிதர்கள் மீது விழுந்திருந்தால்? இப்படியொரு விபத்து நடக்கிறது என்றால், ஏற்கெனவே இருக்கும் அரசின் நெறிமுறைகள் இன்னும் மேம்படுத்தப் பட வேண்டும் என்று தானே அர்த்தம்.

இப்படியான விஷயங்களில்  நாம் எப்போதும், ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணை திறந்து வைத்துக்கொண்டுள்ளோம்.இப்போது நம்மிடம் விஜய் மாட்டிக்கொண்டார்.  ஒரு தவறு நிகழும் பொழுது, அங்கே நமக்கு குற்றம் சொல்வதற்கு ஒருவர் தேவைப்படுகிறார், குற்றம் சொல்ல ஆள் கிடைக்காத இடங்களில் இது இப்படித்தான் இருக்கும் என்று சலித்துக்கொண்டு கடந்து விடுகிறோம். அந்த தவறு ஏன் நிகழ்ந்தது இனி அப்படி நடக்காமல் இருக்க என்ன வழி என்பதை இந்திய அரசியல் சமூகம் ஆராய்வதே இல்லை.

இப்படியான மாநாடுகளில், கொடிக்கம்பம் நிறுவுவதென்பது வழக்கமாகி விட்டது. இப்படி உயரமான கொடிக்கம்பங்களோ அல்லது நடிகர்களின் கட் அவுட்களோ அல்லது கட்சி விளம்பர பதாகைகளோ வைக்கப்பட்டு அது உடைந்து விழுவது முதல் முறை கிடையாது. மீண்டும் மீண்டும் அந்த தவறு நிகழ்கிறது, ரசிகர்கள் வைக்கும் கட் அவுட்கள் விழுந்தால் குறிப்பிட்ட நடிகர் மீது இருக்கும் வன்மத்தை கொட்டித்தீர்த்துக்கொள்கிறோம். கட்சி பதாகைகள் விழுந்தால் மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் சேர்ந்து அந்த கட்சியை வசை பாடுவதை கேட்டு கடந்து விடுகிறோம்.  இப்படியே தான் நடக்கிறது. இப்போது  இந்த கொடிக்கம்பம் விழுந்ததற்கு விஜய் மீது வன்மத்தை இறக்கி கொண்டு இருந்தோம். அப்போது நம்முடைய இந்த அரசாங்கத்திற்கு என்ன தான் வேலை? ஒவ்வொரு வீட்டின் வாசலை தாண்டியும் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் அரசாங்கமே தான் பொறுப்பு, உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே நீங்களே குப்பை போட்டாலும் அதற்கு அரசாங்கம் தான் பொறுப்பு. உங்கள் வீட்டின் வாசல் அல்லது எல்லைக்கு வெளியே இருக்கும் பொது இடம் என்பது எல்லாருக்கும் பொதுவானது அங்கே ஒருவர் குப்பை போடுகிறார், கட் அவுட் வைக்கிறார் என்றால் அதனால் ஏற்படும் அசௌகரியங்களையும் விபத்துக்களையும் எப்படி தடுக்கலாம், முறையற்ற காரியங்களை யாரும் செய்யாமல் எப்படி எப்படி தடுப்பது அல்லது நெறிப்படுத்துவது என்பதெல்லாம்  தான் அரசாங்கத்தின் வேலை.

அரசின் அதிகார எல்லைக்குள் இருக்கும் வீட்டிற்குள் நடக்கும் சில விஷயங்களுக்கும் கூட அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.என் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கும் வீடுகளில் domestic violence  கிடையாது  என்கிற அளவிற்கு பொது விஷயங்களில் ஆளுமை செலுத்துகிற அரசாக இந்தியாவில் எந்த(மத்திய மாநில) அரசாங்கமும் இல்லை. உயரமான கொடி கம்பங்கள் நிறுவ சரியான திட்டமிடல் இருந்ததா அதை துறை சார் நிபுணர்கள் சரி பார்த்தார்களா அவர்கள் சரிபார்த்த திட்டத்தின் படி சரியாக தான் அது நிறுவப்பட்டிருந்தா என்று இத்தனையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு, ஆனால், தற்போது தி.மு.. தலைமையில் இருக்கும் அரசாங்கமோ பொறுப்பற்ற முறையில், நெடுஞ்சாலைகள் நெடுக அவர்களின் கொடி கம்பத்தை நட்டு வைத்துள்ளார்கள். அவர்களின் ஆதரவாளர்களோ இப்படியான விபத்துகளுக்கு நடக்காமல் இருப்பதை உறுதி செய்வது அரசின் வேலை என்பதைப் பற்றி துளியும் தெரியாமல், ஆகா!  வாங்க களம் எட்டில் விஜய்யை வைத்த செய்வோம் என்று செய்துகொண்டிருக்கிறார்கள்

எந்த ஒரு பணியிலும், பொது நிகழ்விலும் நம் அரசாங்கங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்தி அந்த நெறிமுறைகள்  கட்டாயமாக பின்பற்றப்படுத்துவதை உறுதிசெய்வதே இல்லை. அதற்காக நாம் யாரும் அறச்சீற்றம் கொண்டதில்லை, அதிகாரத்தின் கதவுகளை தட்டியதில்லை கொடி கம்பம் விழுந்ததற்கு விஜயை நொட்ட புறப்பட்டு விட்டோம். விஜயயை பிறகு  நொட்டலாம்.

இந்த ஜூன் மாதம் சென்னையில், மெட்ரோ பணிகளின் பொழுது, கான்கிரீட் விழுந்து இரு சக்கர வாகனத்தில்   சென்று கொண்டிருந்தவர் பலியானார். ஜூலை மாதம் செங்கல்பட்டு அரசு பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்து குழந்தைகள் காயம். செய்திகளின் படி 13 ஆண்டுகளில் 400 பேர் பட்டாசு ஆலை தீ விபத்தில் இறந்து இருக்கின்றார்கள், இந்த விஷயத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுகிறதில்லை.

இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக  தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தின்போது, பட்டாசு விபத்துகளை தடுப்பது குறித்து விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் கேள்வி எழுப்பினார். இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து பேசுகையில், ‘‘காற்றில், தண்ணீரில் இருப்பது போல மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. அது பட்டாசு தயாரிக்க உள்ள ரசாயனங்களில் கலக்கும்போது தீ பற்றி விபத்து ஏற்படுகிறது. ஒவ்வொரு பட்டாசு ஆலையிலும் துத்தநாக கல் வைத்திருப்பர். அதில் கையை வைக்கும் போது மனித உடலில் உள்ள மின்சாரம் டைவர்ட் ஆகிறது’’ என்று பதில் அளித்தார்.

சரி இப்படியான ஏற்பாடுகள் இருந்தும் இப்படி விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகிறதென்றால், அதை தவிர்க்க அரசு என்ன மாதிரியான நடைமுறை சீர்திருத்தங்களை  கொண்டு வந்தது என்று சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் கேட்டதாக தெரியவில்லை. இப்படியான கேள்விகளை அரசின் முன் வைக்க கடமைப்பட்டுள்ள அதே சமயம் இப்படி பிரச்சனைகளுக்கு அரசை கேள்வி கேட்க வக்கில்லாத பத்திரிகையாளர் ஒரு நாள் கூத்தாக நடக்கும் அரசியல் மாநாட்டில் எந்த குழாயில் தண்ணீர் வரவில்லை என்று தேடப்போகிறார். எனக்கு ஆத்திரங்கள் வருகிறது மக்களே.அதோடு இது போன்ற விபத்துகளுக்கெல்லாம் யாரை குறை சொல்ல முடியும் என்று நாம் சலித்துக்கொள்வதோடு கடந்துவிடுகிறோம். நெற்றிப்பொட்டில் அறைந்தாற் போல் குறை கூற அந்த செய்திகளில் நமக்கு ஆள் கிடைப்பதில்லை.

ஒருவர் புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்றால், அரசியல் சார்ந்து அவரின் அணுகுமுறைகளை கருத்துக்களை எதிர்த்து எந்தவொரு விமர்சனங்களையும் யார் ஒருவரும் வைக்கலாம். அப்படியான விமர்சனங்களை வைப்பதற்கு விஜய்யே இடம் தருகிறார். அவரின் அரசியல் கருத்துக்களும் அணுகுமுறைகளும் முதிர்ச்சியற்றதாகவும் வெள்ளத்தின் போக்கில் ஓடுவதாகவுமே தான் இருக்கிறது.

இத்தனை  நேரம் விஜய்யை விமர்சித்தவர்களை விமர்சித்து விட்டு நாமே இப்படி  விஜய்யை விமர்சிக்கிக்கலாமா என்று நினைக்கிறீர்கள் தானே? எதற்காக விமர்சிக்கிறோம் எதனை பேசுகிறோம்  என்பது தான் அரசியல் மாற்றத்தின் முதல் படி என்று நம்புகிறோம் நாம்.

நாம் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி ஆட்சி அமைக்காத என்று எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறோம் , அது எந்த கட்சியாயினும் தமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிற நம்பிக்கையை அது தரும். அப்படி ஒரு மாற்று தேர்வாக இருக்கும் கட்சிகளில் ஒன்றாக விஜய் வருவார் இருப்பார் என்று நினைத்தால், அவரோ எம்.ஜி.ஆர் எப்படி அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு இருப்பதோடு எல்லா மசாலாவிலும் ஒரு தேக்கரண்டி என்று அவர் goat படத்தை விட பெரிய reference மசாலாவை அரசியலில் கிண்டிக்கொண்டு இருக்கிறார். பள்ளிக்காலத்தில் கண்டு கேட்ட பேச்சு போட்டிகளையும் விடவும் செயற்கையாக இருந்தது நடந்த பேச்சு போட்டி போல் இருந்தது அந்த மாநாடு

ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்துகொண்டும், நாம் தமிழர்   சீமானின் அணுகுமுறைகளுக்கும் அவரின் பல கருத்துக்களுக்கும் நேர் எதிர் கருத்து கொண்டவனாக இருந்துகொண்டும் இதை எழுதுகிறேன், தமிழக வரலாற்றில் எம்.ஜி.ஆர் என்ன சிறப்பான ஆட்சி செய்தார் என்று கேட்கிற துணிவு ரஜினிக்கும் கூட இல்லை சீமானுக்கு மட்டுமே தான் இருந்தது. எம்.ஜி.ஆர் ரஜினி சொன்னது போல யுக புருஷர் தான், இன்றும் கடல் கடந்து எங்கெங்கோ இருக்கும் நாடுகளில் அவர் படத்தை மாட்டி வைத்து வழிபட்டு கொண்டிருக்கிறார்கள் தான், ஆனால்  அவரை தலை சிறந்த நிர்வாகி என்றோதமிழகத்தை அதிவேக வளர்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றார் என்றோ கேள்விகளுக்கு இடமின்றி வரையறுக்க  முடியாது..

எம்.ஜி.ஆர் சரியான தலைவராக இருந்திருந்தால், சிங்கப்பூர் போன்று எம்.ஜி.ஆரின் கட்சி எத்தனை துறை சார்ந்த வல்லுநர்களை அரசியலுக்குள் கொண்டு வந்திருக்கும். அப்படியொன்றும் நடக்கவில்லை.

 நிர்வாகத்தில் என்ன பெரிதாய் மாற்றம் கொண்டு வந்து இந்த மாநிலத்தை முன்னேற்றி விட்டார்?! இதை கேட்டதும்  திராவிட கட்சிகளால் தான் இன்று நீங்கள் ஜட்டி போடுகிறீர்கள் என்று விஜய் டிவி கோபிநாத் மாதிரி பேசிக்கொண்டு இருக்கும் ஒரு சாரார் கிளம்பிவிடுவார்கள்.

 அவர்களுக்கு பிஹாரோடு தமிழகத்தை ஒப்பிடாமல் பக்கத்தில் இருக்கும் கர்நாடக போன்ற தென் மாநிலங்களோடு நாம்  நம்மை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள். அந்த மாநிலங்கள் விவசாயம் தொழில்துறை என்று பல துறைகளில் சமமான வளர்ச்சி(balanced growth) கண்டிருப்பதையும், நம்மில் இருந்து பல நிலைகளில் அவர்கள் வேறுபட்டும்  மேம்பட்டும் இருப்பதையும் காட்டுங்கள்.

எல்லா கட்சிகளையும் போல கூட்டத்தோடு கோஷம் போடுவது, காலஞ்சென்ற தலைவர்கள் படங்களை எல்லாம் வைத்துக்கொண்டு அரசியல் செய்வது. பிரச்சனைகளின் ஆழம்  தெரிந்தோ தெரியாமலோ மேம்போக்காக தீர்மானங்கள் நிறைவேற்றுவது. கூட்டத்தை ஒரு பக்கம் கிளம்பிவிட்டு அதே பக்கம் தாங்களும் இருப்பதாக காட்டிக்கொள்வது, பினாமி பெயர்களில் நிறுவனங்கள் நடத்துவது, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசியல் கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்வது என்று இதையே தான்ஏற்கெனவே இருக்கும் கட்சிகளும் செய்கிறது. விஜய்யும் அதே தான் செய்துகொண்டு இருக்கிறார்.  அதனால், இப்படியான விமர்சனங்களை அந்த கட்சிகள் அவர் மேல் எப்போதும் வைக்க போவதில்லை.

தண்ணி வரலை,ஜன்னி வரலை என்கிற விமர்சனங்கள் தான் ஒவ்வொரு கட்சிகளும் அடுத்த அடுத்தடுத்த கட்சிகள் மீது வைத்துக்கொண்டிருக்கும்.

விஜய் வந்த பிறகும் அதுவே தான் நடந்துகொண்டு இருக்கிறது. நாம் சில பிரச்சனைகளுக்கு அரசிடம் கேள்விகளை முன் வைக்கவேண்டும், அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும் பொழுது அந்ததந்த கட்சிகளின் குறைகளை எதிர்க்கப் படவேண்டிய கருத்துக்களைப் பற்றி பேச வேண்டும். பொதுப்படையான வெற்று விமர்சனங்களும், பிடிக்காத கட்சி அல்லது ஆளுமை என்பதற்காக எதற்கெடுத்தாலும் விமர்சிப்பதும் சமூகத்தின் அரசியல் நிலைக்கு ஆரோக்கியமானது அல்ல.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *