உதயநிதி நடிப்பில் வெளிவந்த மனிதன் படத்தின் நீதிமன்ற காட்சி போன்ற ஒரு காட்சி சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் நிகழ்ந்திருக்கின்றது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தந்தை மகன் இறந்து போன நிகழ்வை மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வருடம் மீண்டும் ஜூன் 23ம் தேதி போலீசாரால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
ஜூன் 22ம் தேதி பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது கள்ளக்குறிச்சி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த முருகேசன் என்பவரது வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது.குடிபோதையில் இருந்ததாக அறியப்படும் முருகேசன் என்பவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து கோபமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி அவர்கள் முருகேசன் அவர்களை லத்தியால் அடித்துள்ளார். காயம்பட்ட முருகேசன் அவர்களை அவரது நண்பர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆத்துர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.அங்கிருந்து அவர் சேலம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஜூன் 23ம் தேதி காலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டனம் மற்றும் உறுதி
அதனை தொடர்ந்து தி.மு.கவின் மகளிரணி செயலாளர் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் காவல்துறையை எச்சரித்து தனது சுட்டுரை (Twitter) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது பின்வருமாறு,
“சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும்.
நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.”
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களுக்கு உறுதி அளித்தார்.
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் அவர்கள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரெஸ்க்கு தெரிவித்த தகவலில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
செய்திகளை நாம் அணுகும் விதம்
முன்னதாக சம்பவத்தை நேரில் படம்பிடித்த முருகேசன் அவர்களின் நண்பர் அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியேற்றிருக்கின்றார் அது பலரால் பகிரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஊடகங்கள் இந்த சம்பவத்தை பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தாலும் சாத்தான்குளம் வழக்கு அளவிற்கு இது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அல்லது ஊடகங்கள் செய்தியை கொண்டு சேர்க்கும் முறையில் காட்டிய வேறுபாட்டால் அத்தகைய தாக்கம் ஏற்படவில்லை என்றும் சொல்ல முடியும்.
செய்திகளை அல்லது குற்றங்களை உணர்வுபூர்வமாக நாம் அணுகும் விதத்தை தவிர்க்க வேண்டும் அப்படி தவிர்க்காத வரை செய்திகளில் எது முக்கியத்துவம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்படுவது தவிர்க்கப்படாது அல்லது நம்மிடம் எதை கொண்டு சேர்க்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிப்பதையும் மாற்றமுடியாது.லேபிளோடு இருக்கும் செய்திகளில் உணர்ச்சிகரமான விஷயங்கள் அதிகம் இருக்கும். அப்படியான செய்திகளை நாம் விரும்புவதால் செய்திகள் உண்மைகளை அலசுவதை விடுத்து உணர்ச்சிகளை தூண்டுவதாய் மாறிவிட்டது. மக்களாகிய நாமும் அதற்கு காரணமாகி விட்டோம். உணர்ச்சிவசப்பட்டு இருக்கும் யாரும் உண்மையையும் தேடுவதில்லை தீர்வுகளையும் அலசுவதில்லை.சாத்தான்குளம் நிகழ்வு நடந்த போது ஊடகங்கள் நம் உணர்ச்சியை கிளறச்செய்து பொய்களும் கலந்த போலீசார் சம்பந்தப்பட்ட பழைய குற்றங்களையும் நினைவு கூறியது.அத்தகைய போக்கு ஒரு சமூகத்தின் அரசியல் ஆரோக்கியத்தை கெடுக்க வல்லது.
நாம் நம்முடைய தளத்தில், நாம் எதை கவனிக்க மறந்தோம்; அரசியல்வாதிகள் செய்ய தவறியவைகள்; நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் என்று இவற்றையெல்லாம் பற்றி அலசியிருந்தோம்.இன்று வரை நிர்வாக அளவில் எந்த சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்ததிற்குரிய விசயம்.
அந்த கட்டுரைகளை படிக்க கிளிக் செய்யவும்
வாங்க சொல்லலாம், போலீஸ் அராஜகம் ஒழிக
காவல்துறை மீது பரப்பப்படும் வெறுப்பும் – குற்றங்களின் பெருக்கமும்
எதுவும் மாறவில்லை
சாத்தான்குளம் வழக்கின் போது இனி இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க அரசு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஒரு அறிவுரையாக மட்டுமே நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.நீதிமன்றம் அரசிற்கு ஆணை பிறப்பித்திருக்க முடியும் அல்லது சாத்தான்குளம் குற்றங்கள் போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க அரசு என்ன சீர்திருத்தங்கள் செய்யப்போகிறது என்பதை குறிப்பிட்ட தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்க முடியும்.அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.அரசும் எந்த ஒரு சீதிருத்தமும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
இந்த முறை கைது செய்யப்படாமல், காவல்நிலையம் கொண்டு செல்லப்படாமலேயே ஒரு குடும்பம் ஒரு உயிரை இழந்து இருக்கின்றது. நம் இந்த சமூகம் மீண்டும் அதே தவறை புது விதத்தில் செய்திருக்கின்றது. காரணம் இங்கு எதுவும் மாறவில்லை 1960களுக்கு பின் இங்கு எதுவும் மாறவில்லை.மாற்றம் கண்களுக்கு தெரியும் போது உதிரிக்கட்சிகள் நம்மை ஒன்று சேரவிடுவதில்லை நாமும் நரம்பு புடைக்க பேசி திரிந்து ஆளுக்கொரு பக்கமாய் நின்றிருப்போம். அதனால் இருப்பவர்களையே நம்ப வேண்டிய சூழலுக்குள் இருக்கின்றோம்.
நடந்த குற்ற சம்பவத்தில் நாம் கவனிக்க வேண்டியது
- “தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்” என்னும் நூலில் அரைநூற்றாண்டு ஆகியும் அவசர மருத்துவதேவைக்கான வசதிகள் கிராமங்களில் மேம்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியிருப்பார்கள்.
புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்
இந்த குற்ற சம்பவத்தை பொறுத்தவரையில் ஒரு வேளை சரியான நேரத்தில் சரியான முறையான சிகிச்சை அளிக்க கூடிய வசதி கொண்ட மருத்துவமனையில் முருகேசன் அவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அவர் இன்று உயிரோடிருந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது.(இங்கே நாம் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்). காரணம்,அவர் செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டு புதன் கிழமை உயிரிழந்ததற்கு இடையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி மூன்று மருத்துவமனைகள் மாற்றப்பட்டுள்ளார்.
2020ம் வருடம் தான் தமிழக அரசாங்கம் அம்மா கிளினிக் என்னும் திட்டம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற மருத்துவமனைகளை பரவலப்படுத்த முயற்சி எடுத்து இருக்கின்றது.இதை சுகாதார கட்டுமான மேம்பாட்டில் முதல் படியாக கூட சொல்ல முடியாது நாம் இன்னும் அத்தனை தூரம் பின்தங்கியிருந்து கொண்டு நமக்கு பின்னால் இருப்பவர்களோடு ஒப்பீடு செய்து பெருமிதம் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.
நடந்த குற்றத்தில் மதுவிற்கும் ஒரு பங்கு இல்லாமல் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.ஒரு வேளை முருகேசன் அவர்கள் மதுபோதையில் இல்லாமல் இருந்திருந்தால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருந்திருக்க கூடும் அல்லது மதுவின் காரணமாக ஏற்கனவே அவர் சோர்வுற்று இருந்து போதை அவரை பலவீனப்படுத்தி இருந்ததிருக்கும் மது அருந்தாமல் இருந்திருந்தால் தாக்குதலுக்கு பின்னான அவரது நிலைமை மிக மோசம் அடையாமல் இருந்திருக்கும்.
பூரண மதுவிலக்கு என்பது ஒரு இரவில் சாத்தியப்படுத்த முடியாது என்கிற போதும் அரசியல்கட்சிகள் அதனை முன்னிறுத்தி அரசியல் செய்ய தவறுவதில்லை. மதுவிலக்கு என்னும் நிலையை எட்டுவதற்கு முன் மது அருந்துபவர்களை கட்டுப்படுத்த வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும்.அதோடு காவல் துறையினர் மது போதையில் இருப்பவர்களை கையாள்வதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும்.
சமீப காலமாக காவல்துறையினர்க்கு எதிரான வாக்குவாதம் என்பது ஒரு வகை நாயகத்தன்மை என்பது போன்ற எண்ணம் உருவாகியிருக்கின்றதோ என்கிற அச்சம் எழுகிறது.அதோடு சட்டத்தின்படி சட்டத்தை மீறியவர்களை கைது செய்ய அதிகாரம் பெற்றிருக்கும் காவல்துறையினர் உணர்ச்சிவசப்படுவதும் அல்லது தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபடுவதுமாக இருப்பதற்கான காரணமும் புரியவில்லை.
வாக்குவாதங்களும் சட்டத்தின் படி நடக்கவேண்டியவர்களின் உணர்ச்சிவசப்படுதல்களும் உயிர்களை பலி கேட்கின்றது.
சமயங்களில் எல்லா தரப்புகளும் சட்டத்தை மீறுவது அல்லது சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதும் என்று இருப்பதே இத்தகைய பிரச்சனைகளின் மையமாக இருக்கின்றது.
சாத்தன்குளம் வழக்கு
சாத்தன்குளம் வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு, சி.பி,ஐ 9 காவல்துறை ஊழியர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் என்பவரின் ஜாமீன் விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்த வேளையில் அவர் உச்ச நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்திருந்தார்
சினிமா பாணி நீதிமன்ற காட்சி
உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சார்பாக வாதாடிய அஞ்சனா பிரகாஷ் சம்பவம் நடந்த போது ரகு கணேஷ் சம்பவ இடத்தில் இல்லை என்றும் சமீபத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கோவிட் தொற்றுக்கு ஆளாகி இறந்திருக்கின்றார் என்றும் கூறி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரகு கணேஷ்க்கு ஜாமீன் கேட்ட மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
“சுப்ரீம் கோர்ட் போங்க, ஜனாதிபதி கிட்ட போங்க, உங்க வசதிக்கு எங்க வேணுனாலும் போங்க ஆனா இன்னிக்கு ராகுல் திவான் ஜெயிலுக்கு போனும்” என்று மனிதன் படத்தின் நீதிமன்ற காட்சியில் வரும் இந்த வசனம் போலவே நீதியரசர் சரண் அவர்கள், இது மிகவும் மோசமான வழக்கு. இதற்காக ரகு கணேஷ் சிறிது காலமேனும் சிறையில் கழிக்க வேண்டும் என்று கூறியதோடு ரகு கணேஷ் குற்றத்தில் ஈடுபட்டதற்கு ஒரு சாட்சி இருப்பதாக பதிவுகள் காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டு ரகு கணேஷின் ஜாமீன் மனுவை அவசர விசாரைணக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நிராகரித்துவிட்டார். அத்தனை பெரிய குற்றம் இழைத்தவர்கள் ஜாமீன் மனுவை விசாரிக்க அவசரம் ஒன்றும் இல்லை என்னும் நிலைப்பாடையே வெளிப்படுத்தியிருக்கிறார் நீதியரசர். கோடை விடுமுறை காலம் முடிந்து ஜூன் 28க்கு பின் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
சாட்சியங்களும் ஆதாரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் குற்றம் செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தனியாக உறுதிமொழிகள் தேவைப்படுவதில்லை. அரசியல் தலையீடு இல்லாத விசாரணைகளும் சரியான சாட்சியங்களையும் கொண்ட வழக்குகளில் குற்றவாளிகள் இந்திய தண்டனை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்ததில்லை. கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுப்பது இதுவே அரசாங்கம் செய்ய வேண்டியது ஆகும்.
அது மட்டுமல்லாமல் சட்டத்திற்கு அஞ்சும் சமூகத்தையே நாம் உருவாக்க வேண்டும், மாறாக காவல்துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் அஞ்சும் சமூகத்தையே இன்னுமும் உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.ஆங்காங்கே காவல்துரையினருக்கு எதிராக நடக்கும் வாக்குவாதங்களும் வன்முறைகளும் கூட சட்டத்திற்கு அஞ்சாத சமூகத்தின் வெளிப்பாடே.
சமூகம் என்பது அரசியல்வாதிகள் காவல்துறையினர் என்று எல்லோரையும் உள்ளடக்கியதே.
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டாலும் கூட தேவைப்படுகின்ற நிர்வாக சீர்திருத்தங்களை அவ்வப்போது எடுக்க தவறும் வரை இது போன்ற குற்றங்கள் மீண்டும் தொடர வாய்ப்பிருக்கின்றது என்பதே கசப்பான உண்மை.அரைநூற்றாண்டாக பழைய ஆட்சியின் கீழ் தான் மாநில அரசாங்கம் இயங்குகிறது என்கிற ரீதியில் புதிய ஆட்சி பழைய ஆட்சி என்று வேறுபடுத்த வேண்டியதில்லை.சீர்திருத்தங்கள் இனியாவது மேற்கொள்ளப்படும் என நம்புவோம்
இது தொடர்பான மற்ற கட்டுரைகளை படிக்க கிளிக் செய்யவும்
வாங்க சொல்லலாம், போலீஸ் அராஜகம் ஒழிக
காவல்துறை மீது பரப்பப்படும் வெறுப்பும் – குற்றங்களின் பெருக்கமும்