யிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தியேழு (1947) தொடங்கி 2024 வரை எத்தனை வருடங்கள் முடிந்திருக்கிறது? சரி! அது வேண்டாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதில் இருந்து இன்று வரை எத்தனை வருடங்கள் ஆகிறது?

எழுபத்தி ஐந்தாவது குடியரசு தினத்தை இந்த வருடம் நாம் கொண்டாடியிருக்கின்றோம். அதாவது இந்தியாவில் மக்களாட்சி தொடங்கி 75 வருடங்கள் ஆகிறது. நம்மை நாமே ஆட்சி செய்ய தொடங்கி 75 வருடங்கள் ஆகிறது. இன்னமும் கூட ஆங்கிலேயர்களையும் சேர்த்து நம்மை ஆண்ட அரசுகள் நம்மிடம் திணித்துவிட்டுச் சென்றது நம்மிடம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கின்றது.

 

அதில் ஒன்று, வெட்டி பெருமிதம் மற்றொன்று தாழ்வுமனப்பான்மை. முகலாயர்கள், டச்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என்று ஒவ்வொவொருவராக உள்ளே வந்து நம்மை ஆட்சி செய்ய தொடங்கிய பொழுது நாம், நம்முள் யார் அவனுக்கு A-கிளாஸ் அடிமை யார் அவனுக்கு E-கிளாஸ் அடிமை என்பதில் முண்டியடித்துக்கொண்டிருந்தோம்.

அந்த புள்ளியில் தான் தொழில் முறை ரீதியிலான வகைபாடுகளான ஜாதி வேறு வடிவம் பெற்று இருக்கும். காரணம், அந்த ஆங்கிலேர்களை நம் சமூகம் அண்ணாந்து பார்த்தது. சுதந்திர போராட்டங்கள் போர்கள் இதெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிடலாம்.சரி! அதுவுமே எப்போது பெரிய அளவில் வெடிக்கிறது, நம்மை ஆட்சி செய்துகொண்டிருந்த நம்முடைய மன்னர்களின் முகலாய மன்னர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட தொடங்கும் பொழுது தான் ஆரம்பிக்கிறது.

 

ஆங்கிலேயர்களை அண்ணாந்து பார்க்க பழகிவிட்ட நிலையில்.  அவர்கள் அதிகாரத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதை நமக்கு பழக்கினார்கள் நாம் பழகிக்கொண்டோம். அவர்கள், அவர்களின்  ‘அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் யாரும் சாதாரணமானவர்களை வெறுங்கையால் தொட்டுவிட கூடாது’ போன்ற protcol களில் பல இன்னமும் கூட பின் பற்றுகிறார்கள்.   இப்படி தீண்டாமை போன்ற விஷயங்கள் எல்லாம் மேற்கில் இருந்து தான் நம்மிடம் வந்திருந்தது. அவர்கள் எப்படி நிர்வாக ரீதியில் தொழில் முறை வகைப்படுத்தல் படி கீழ் நிலையில் இருப்பவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும் இதை செய்யக்கூடாது என்று வைத்திருந்தார்களோ அதையே நாமும் பின்பற்ற தொடங்கினோம்.

 

அவர்கள் வரலாற்று திரிபுகளையும் கூட நமக்குள் திணித்தார்கள். அவர்களுடைய தேவைகளுக்காக அவர்கள் முறையில் நமக்கு கல்வி அளிக்க தொடங்கினார்கள்.எல்லோரையும் அடிமைகளாக நடத்தியவர்கள் அதிலும் வேறுபாடுகள் காட்டினார்கள்.

இந்த சமூகத்தை நிர்வாக ரீதியில் எப்படியெல்லாம் பிரிக்க முடியுமோ அப்படியெல்லாம் பிரித்தார்கள். அப்படி பிரித்து எல்லா நிலைகளில் இருப்பவர்களுக்கும் ஏதோ நல்லது செய்தது போல காட்டிக்கொண்டார்கள். ஆட்டு மந்தை கூட்டங்களாக இருந்த, இப்போதும் அப்படியே இருக்கின்ற நாமோ ஆங்கிலேயர்கள் தான் கல்வி அளித்தார்கள்; அவர்களே கூட இன்னமும் ஆண்டு இருக்கலாம் என்று இன்னமும் பிதற்றிக்கொண்டிருக்கின்றோம். நம்முள் அத்தனை விஷயங்களை நாமே நம்பும் வகையில் திணித்து இருக்கின்றார்கள்.

 

வெட்டி பெருமிதம், தாழ்வுமனப்பான்மை இது அல்லாமல் அவர்கள் நம்முள் திணித்துவிட்டு சென்றது பிரித்தாளும் கொள்கை. இது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்திற்கு வர நினைக்கும் மேல் மட்ட வர்க்கத்தினருக்கும் மட்டுமே தான் எப்போதும் பயன்அளித்து இருக்கின்றது.

 

சுதந்திரத்துக்கு முன்னமே எதிர்க்கட்சி வேலை செய்து வந்து காங்கிரஸ் இயக்கம் நிச்சயமாக அங்கியேலர்களின் இதயக்கனியாக இருந்திருக்கும் என்றே தான் நான் நம்புகிறேன். பலகட்ட பேச்சு வார்த்தை நடக்கிறது. எப்படியும் சுதந்திரம் கிடைக்க போகிறது, எப்போது என்பது தான் கேள்வியாக இருந்தது.

அந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டுமென்றால் நாடுகளுக்கிடையிலான போர் முடிய வேண்டும். பிரிட்டிஷ்கார்கள் ஆளும்கட்சி என்றால் காங்கிரஸ் எதிர்க்கட்சி, தீர்மானமான வெற்றி காங்கிரஸ் இயக்கத்துடையது. அந்த நிலையில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு வாக்குறுதி அளிக்கிறது,” சுதந்திர இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்” என்பது தான் அந்த வாக்குறுதி.

 

‘இந்திய குடியரசு’ இந்திய குடியரசாக உருவானதில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததில், இரண்டிலுமே பிரிட்டிஷ்கார்களின் பங்கு இல்லாமல் இல்லை.

 

ஒரு அரசியல் ஆளுகைக்குட்டபட்ட எல்லையின் உட்கட்ட எல்லைகள் நிர்வாக சிரமங்களை தீர்ப்பதை நோக்கமாக கொண்டு பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்கு முன்னமே பற்றவைக்கப்பட்ட நெருப்பு, சுந்தந்திரத்திற்கு பின் எரிய தொடங்கி இந்தியா மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்படுகிறது. இந்தியா தான் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது மாநிலங்கள் சேர்ந்து இந்தியா உருவாகவில்லை.(அவர்கள் காதுகளில் சத்தமாக சொல்லுங்கள்).

 

ஆங்கிலேர்கள் வைத்த புள்ளி பிரித்தாளும் கொள்கை, அதில் காங்கிரஸ் போட்ட கோலம், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என்று சுதந்திரத்திற்கு முன்னமே கொடுத்த வாக்குறுதி. அதுவே பின்னாளில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணமானது. அதோடு அது அதிகார பசிக்கொண்டிருந்த அரசியல்வாதிகளை வளர்த்துக்கொண்டிருந்தது இன்னமும் வளர்த்துக்கொண்டிருக்கின்றது.

தேசியம் பேசிய இயக்கத்திற்கு, தேசத்திற்கு உள் இருந்தே எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியது. மாநில சுயாட்சி என்கிற பெயரில் தேசியத்திற்கு எதிரான முழுக்கங்கள் வலுப்பெற தொடங்கி, தேசிய இயக்கத்திற்கு எதிராக அங்கு அங்கு அந்த அந்த மாநிலங்களில் அதிகார பசிக்கொண்டிருந்த இயக்க தலைவர்களால் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது.என்னை நான் ஆட்சி செய்து கொள்கிறேன் என்று கிளம்பிய இடங்களில் எல்லாம் வாரிசு அரசியல் கோலோச்சுகிறது.மாநில உரிமை பேசிய இயக்கங்களும் அந்த இயக்கங்களின் இளவரசர்களும் சிற்றரசர்களுமே தான் வளர்ந்து வந்தார்கள். தேசிய உணர்வுகளுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்  அந்த மாநிலத்தை விட எங்கள் மாநிலத்தை பெரிதாக முன்னேற்றம் அடையச் செய்திருக்கிறோம் இந்த மாநிலத்தை விட எங்க மாநிலத்தை பெரிதாக முன்னேற்றம் அடையச் செய்திருக்கிறோம்  என்று போக்கு காட்டி நாடகங்கள் நடத்திக்கொண்டு இந்தியாவை தோல்வி  அடையச்செய்துகொண்டிருக்கின்றார்கள்.

 

மாநில உரிமை மொழி உரிமை என்று சொல்லிக்கொண்டு கிளம்பிய அரசியல் புழுக்கள் கிளம்பிய நாளில் இருந்தே  தேசிய உணர்வு இந்த அதிகார பசிக்கொண்ட புழுக்களால் புண்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்திய மக்களிடமும் கூட, ‘ஒரு இந்தியா’ ‘ஒரு மக்கள்’ என்கிற உணர்வு குறைந்து போயிருக்கின்றது.

 

தேசிய கட்சியான காங்கிரஸ் பலவீனம் அடைந்ததற்கு முக்கியமான காரணம் இது தான். இன்றோ காங்கிரஸானது பிரிவினை பேசி அவர்களை வீழ்த்திய அதே கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இன்னமும் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மாநில கட்சிகளே தான் காரணம்.

 

மாநில கட்சிகளும் ஓட்டை பிரிப்பதற்கு மாநில கட்சிகளால் வளர்த்துவிட பட்ட லெட்டர்பாட் *(letterpad) கட்சிகளும் செய்து கொண்டிருந்த வேலையை நேற்று வரை தேசியம் பேசிய கட்சி செய்வது கடுங்கோபத்தை ஏற்படுத்துகிறது. அடிமனதில் ஒரு பயத்தை தருகிறது.

 

ஒடிஷாவை எப்படி ஒரு தமிழர் ஆளலாம் என்று தேசிய கட்சியான பாஜகவின் முக்கிய தலைவர் பேசியிருக்கிறார். நானும் என் நண்பனும் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தோம்.(விவாதம் என்கிற பெயரில் முட்டிக்கொள்ளவில்லை)

 

தமிழகம் வரும் பொழுது தேசியம் பேசுகிறார்கள். ஒடிஷா சென்று மொழிப்பிரிவினையை தூண்டுகிறார்கள் என்றேன்.

 

அந்த அந்த மாநிலத்தில் அந்த அந்த மாநில மொழி பேசுகிறவர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர் தலைமையேற்றால் தானே அந்த அந்த மாநில பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியும் என்று நண்பர் கேட்டார்.

 

நியாயமாக தானே கேட்டுருக்கிறார் என்று தோன்றுகிறதா?

 

பாஜக குறிப்பிட்டு பேசிய அந்த தமிழர் ஒடிசாவில் I A S  அதிகாரியாக பணியாற்றியவர். இப்போது முதல்வர் நவீன் பட் நாயக்கின் கட்சியில் இருக்கின்றார்.அவருக்கு மொழி நிச்சயமாக ஒரு பிரச்சனையே இல்லை. அந்த மாநிலத்தின் பிரச்சனைகள் புரியாமல் ஒரு  I A S  அதிகாரியாக அவரால் அங்கு பணியாற்றி இருக்க முடியாது.

 

இப்போது எது நியாயமாகப்படுகிறது?

நண்பர் விடவில்லை. மொழி என்று மட்டும்  சொல்ல வரலை. கலாச்சார உணர்வுகள் மற்றும் அந்த மாநிலத்தோடு இருக்கும் பிணைப்பு இதெல்லாம் முக்கியம் என்றார்.

 

அப்படியென்றால், இந்தியா முழுதும், இந்தியாவின் அரசு இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் I A S  I E S  I P S IFS அதிகாரிகள் எல்லாம் அதே மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதில்லையே? பஞ்சாபில் பிறந்தவர் தமிழகத்தில் ஆட்சியராக இருக்கின்றார்.தமிழகத்தில் பிறந்தவர் ஒடிசாவில் ஆட்சியராக இருந்திருக்கின்றார். VK பாண்டியனுமே கூட முன்னாள் I A S அதிகாரி தானே?

 

பேச்சு இங்கும் முடியவில்லை. கட்டாயம் என்று சொல்லவில்லை. ஆனால், அந்த மண் சார்ந்த ஒருவர் அரசியல் தலைமை ஏற்றால் இன்னும் நல்லா இருக்கும் என்று தான் சொல்கிறேன் என்றார். மண் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறேன் என்றும் சொன்னார்.

 

கொடுக்கலாமா? சொல்லுங்க மக்களே!

 

அரசியல் என்று வருகிற பொழுது நிர்வாகம் என்று வருகிற பொழுது மொழி இனம் சார்ந்த பேச்சுக்களை எடுக்கவே கூடாது என்பது தான் என் எண்ணம். இடம் பெயர்தல் என்பது மனிதன் தோன்றிய காலம் முதலாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.

 

எங்களுக்கு இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் அவரின் பட்டப் பெயர் ராவ். அவர்க்கு சொந்த ஊர் தஞ்சாவூர். சிங் பட்டப்பெயர் கொண்ட நண்பரின் சொந்த ஊர் சிவகங்கை.ஒரு அரசியல் எல்லைக்குள்(territory) வாழ்கிற அந்த எல்லைக்குட்பட்ட  குடிகள் (citizen) யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்று அரசியலமைப்பு சொல்லும் பொழுது மொழிப் பிரிவினை தூண்டும் பேச்சு அரசியலமைப்புக்கு எதிரானது தானே?

இந்த தேர்தல் பிரச்சாரங்களின் இடையில்  தேர்தல் ஆணையம் பா.ஜ.க மத ரீதியாக பேச கூடாதென்றும், அரசியலமைப்புக்கு எதிராக காங்கிரஸ் பேச கூடாது என்று கேட்டுக்கொண்டும் அந்த அந்த கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவோ என்னவோ  மொழி பிரிவினையை கையில் எடுத்து அரசியலமைப்புக்கு எதிரான கருத்தை ஒரு வலிமையான தேசிய கட்சி பேசியிருக்கிறது. தேசிய கட்சியாக இருந்து கொண்டு இப்படி பேசியதற்கு இன்று வரை அந்த கட்சியில் இருந்து யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை.

 

தேச ஒற்றுமை உணர்வுகளுக்கு எதிரான கருத்துக்களை பொழுதும் பேசித்திரியும் சீமான் வாட்டாள் நாகராஜ் போன்றவர்களின் பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாத பாஜகவின் இந்த பேச்சு துளியளவிலும் கூட யாருமே நியாயப்படுத்தக்கூடாது.

 

நானுமே அதை தவறு என்று தான் சொல்கிறேன். ஆனால், காலாச்சார ரீதியிலாக பிணைப்பு உள்ள மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றார் நண்பர்.

இப்ப வாங்க!

 

யார் பூர்வ குடிகள்? எத்தனை வருடங்கள் நாம் பின்னே செல்ல வேண்டும்? மதம் மாறியவர்கள் அல்லாமல் படையெடுப்பின் பொழுது நாட்டுக்குள் வந்து இந்நாட்டவராகவே மாறிவிட்டவர்கள் இங்கையே தான் இருக்கின்றார்கள். நாடளுமன்றத்தில் ஆங்கிலோ இந்தியனுக்களுக்கு இரண்டு இடங்கள் இன்றும் ஒதுக்கப்படுகிறது. அவர்கள் இந்த மண் சார்ந்தவர்களாகவே ஆகிவிட்டார்கள்.நிலச்சுவான்தாரர்களாக இல்லாதவர்கள் தவிர்த்து நிலமில்லாத மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து கொண்டே தான் இருந்தார்கள்; இன்னமும் குடிபெயர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எங்களுடைய ராவ் நண்பர் மராத்தியர்கள் ஆட்சியின் இங்கே பொழுது இங்கே வந்திருப்பார்.  நாயக்கர்களின் ஆட்சியின் பொழுது தெலுங்கு பேசும் மக்கள் வந்திருப்பார்கள்.இதெல்லாம் நடந்து குறைந்தது ஒரு ஐந்நூறு வருடங்கள் இருக்காது?!

 

என் அறிவு கண்ணை திறந்துடீங்க என்றார் நண்பர் விளையாட்டாக?

 

நானும் ராவ் வும் தேர்தலில் நின்றால் எனக்கு முன்னுரிமை தர வேண்டும். மாறாக ராவ் ஜெயித்தாலும் தவறு இல்லை. எனக்கு மண்ணின் மைந்தன் என்கிற முறையில் ஒரு reservation தர வேண்டும் என்று விளையாட்டை தொடர்ந்தார் நண்பர்.

 

இது இன்று முடியாது என்று நினைக்க வேண்டாம்! இதோ முடியப் போகிறது.

 

தேர்தலில் இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ ஒரு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றால் தேர்தல் தேவையில்லையே!

 

காடுகளாகவோ பொட்டல் வெளிகளாகவோ இருக்கும் இடத்திற்கு எங்கு எங்கிருந்தோ வந்து சேரும் மனிதர்கள் காடுகளை வயல்களாக்கி வீடுகளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.எங்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்த இரண்டு பேர் எதிர் எதிரே வீடு கட்டியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பாதை பொதுவானது. அவர்கள் பயன்படுத்தும் நீர் ஆதாரம் பொதுவானது. சாக்கடை பொதுவானது. இப்படி மக்கள் வாழும் எல்லைகளுக்குள் அவர்களுக்கிருக்கும் தேவைகளில் உள்ள பொதுவான விஷயங்களை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றியதே தான் அரசியல். அந்த இடத்தில் நான் தான் முதலில் வீடு கட்டினேன் நான் தான் இந்த மண்ணின் மைந்தன் நான் தான் தலைவராகணும் நான் வச்சது தான் சட்டம் என்றெல்லாம் நினைப்பதும் பேசுவதும் ஒடுக்குமுறை தான்.

 

காலாச்சார பிணைப்பு என்றெல்லாம் பேசுகிறோம்.ஆதி திராவிடர்களில் அநேகர் இன்று மதம் மாறிவிட்டார்கள் இன்னும் அநேக சமூக கூட்டங்களில் உள்ள மக்கள் மதம் மாறிவிட்டார்கள். அப்படியென்றால் கலாச்சார பிணைப்புகளில் இருந்து அவர்கள்  தங்களை விடுவித்து கொண்டார்கள் என்று அர்த்தம். அவர்களின் முன்னோர்களை மறந்துவிட்டார்கள்; சிறுதெய்வ வழிபடு சூரிய வணக்கம் மாரித்திருவிழா எல்லாம் விட்டு வெகு தூரம் சென்று விட்டார்கள். இவர்கள் யாரும் கலாச்சாரங்களை பின்பற்றுவதில்லை. சமூகத்தில் கலாச்சாரத்தின் மிக அடிப்படையான சில விஷயங்கள் தவிர்த்து அநேகமான விஷயங்கள் மாறுபட்டுக்கொண்டே தான் வருகிறது.

 

இப்படியான சூழலில் மண்ணின் மைந்தர்களில் கலாச்சார பிணைப்பில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டவர்கள்,  இன்னமும் பிணைப்பில் இருப்பவர்கள் இவர்களில் யாருக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்?

 

நண்பர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை? யோசிக்க வச்சுட்டியே! கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு என்றார்.

 

எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. ஒரு  அப்பார்ட்மெண்ட் இருக்கு அந்த appartment குள் இருபவர்களுக்கான பாதுகாப்பு போன்ற பொது வசதிகளை நிர்வகிக்க அந்த அப்பார்ட்மெண்ட் குள் வாழும் யார் ஒருவருக்கும் உரிமை இருக்கிறது. காரணம், பொதுவான தேவைகள் எல்லோருக்கும் பொதுவானதாக தான் இருக்கிறது.

 

இந்த மண்ணின் மைந்தன் கதை பேசுகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அதுவும்  ஒரு வெட்டி பெருமிதத்தின் வெளிப்பாடு.அதோடு நிலமற்ற மக்கள் மட்டும் இல்லை மனிதன் மட்டும் இல்லை உயிர்கள் எப்போதும் இடம் பெயர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.சொந்தமாக ஒரு நிலம் இருக்கும் பொழுது அந்த இடப்பெயர்வு கால தாமதம் ஆகிறது அவ்வளவே.

 

இந்த தேர்தலிலும் பாஜக தான் ஜெயிக்க போகிறது என்பது தெரிந்த கதை தான். ஆனால், அடுத்த தேர்தலில் வெற்றி அவர்களுக்கு நிச்சயம் தூரமாகவே தான் இருக்கும். மோடிக்கு அடுத்த படியாக எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரதமர் வேட்பாளரை அவர்கள் இன்னுமும் முன்னிலைப்படுத்தியதாக தெரியவில்லை. முன்னிலையில் இருக்கும் தலைவர்களின் பேச்சுகளும் செயல்களும் எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை. தேசிய கட்சியாக இருந்து கொண்டு ஒடிஷாவை எப்படி தமிழரை  ஆள விடுவது என்பது போன்ற பேச்சுக்கள் அதிகார ருசியின் வெளிப்பாடு பாஜகவிற்கு பசி இல்லை. ருசி கண்டுவிட்டார்கள். இந்தியா முழுதும் எதிரிகள் இல்லாத நிலை எய்தப் பார்க்கிறார்கள். அடுத்த தேர்தல், அவர்களுக்கு தானாகவே ஒரு வீழ்ச்சியை தரும் என்பது என் கணிப்பு. ஆனால், அப்போதும் காங்கிரஸ், பிரிவினை பேசி தொடங்கப்பட்ட மாநில கட்சிகளின் முதுகில் சவாரி செய்ய நினைக்குமானால் காங்கிரஸால் எழுச்சி பெறவே முடியாது.

 

இரண்டு தேசிய கட்சிகளும் கூடுமான வரையில் சம பலம் பெற்று நிர்வாக பிரச்சனைகளை சரியான முறையில் பொய் பிரச்சாரங்கள் இன்றி விவாதிக்கும் சூழல் இருப்பது தான் நாட்டிற்கு நல்லது. காலம் இந்தியாவை அந்த புள்ளி நோக்கி நகர்த்தும் என்று நான் நம்புகிறேன் நீங்களும் நம்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *