காலம் மனிதர்களில் எல்லோரையும் திருடர்களாக்கிவிட்டது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெரிய திருடர்களான அரசியல்வாதிகள் மக்களை சின்னச் சின்ன திருட்டுக்கு பழக்கப்படுத்திவிட்டார்கள். அப்படிப் பழக்கப்படுத்தினால் ஒழிய அவர்களால் மக்களிடம் இருந்து திருட முடியாது.
நாம் ஒவ்வொரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஒன்றை யாரிடமிருந்தேனும் திருடிக்கொண்டு தான் இருக்கிறோம். குறைந்தபட்சமோ அதிகபட்சமோ அம்மா அப்பா அண்ணன் என்று இவர்களில் யாரேனும் ஒருவரின் உழைப்பையேனும் திருடியிருப்போம். அல்லது இன்னமும் நம்மை அறியாமல் திருடிக்கொண்டிருப்போம்
பிரச்சனை என்னவென்றால், நம்முடைய செயல்களையும் அணுகுமுறைகளையும் வகைப்படுத்தினால், அதில் எதெல்லாம் திருட்டு என்று வகைப்படுத்தலாம் என்பதே நமக்கு தெரியவில்லை. அதாவது, “இதெல்லாம் திருடற லிஸ்ட்டுலை யா வருது?” என்கிற அளவில் எதெல்லாம் திருட்டு என்று தெரியாமல் திருடிக் கொண்டிருக்கின்றோம்.
இப்படியான சிக்கல் இருப்பதை தெரியாமல் இருக்கின்ற நம் சமூகத்தில் இருந்து வருகின்ற வியாபாரிகள் எப்படி திருடாமல் இருப்பார்கள்!
சரி! சின்ன சின்ன திருட்டுகளை நாம் ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம். ஆனால், சின்னதாக திருடுவதிலேயே பெரிதாக எப்படி திருடுவது? கவனமாக படியுங்கள். உங்களின் நேர்மை மீது உங்களுக்கு தீர்க்கமான நம்பிக்கை இல்லாமல் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம்.
நகை வாங்கும் வழக்கம் உண்டா? “என்னடா லுச்சா தனமா கேள்வி கேட்கிற” என்று வடிவேல் பாணியில் உங்களுக்குள் ஒரு அசிரீரி ஒலிக்கலாம்.
இந்தியர்களும் நகையும் சிவாஜியும் திருவிளையாடுலும் மாதிரி பிரிக்க முடியாதது.
நகை விற்பனையில் எத்தனை ஏமாற்று வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது.
ஹால்மார்க் முத்திரைகளை கட்டாயமாக்குவதற்கு முன்பு வரை, இந்த நகை வியாபாரிகளின் அநேகமானவர்கள் 916 நகைகளுக்கு என்று தனி விலை சொல்லுவார்கள் KDM நகைகளுக்கு தனி விலை சொல்லுவார்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலை என்று நாம் அன்றாடம் செய்திகளில் பார்ப்பது 91.6 சதவீதம் தங்கமும் மீதம் செம்பும் கலக்கப்பட்ட தங்கத்தின் விலை. 99.9 தங்கத்தின் விலை தனியாக நிர்ணியப்பார்கள். ஹால்மார்க் முத்திரை கட்டாயப்படுத்துவதற்கு முன்பு, 916 நகைக்கு தனி விலை என்றால் 91.6 சதவீதத்தை விடவும் குறைவான தங்கத்தை கொண்ட நகைகளை 916 தங்கத்தின் விலைக்கு நம் தலையில் கட்டி விடுவார்கள். நீங்கள் திரும்பி அதே நகையை அதே கடைக்கு எடுத்துச் சென்றால் ஆயிரம் நொட்டை சொல்லி அதில் எவ்வவளவு தங்கம் இருக்கிறதோ அதற்கு மட்டும் விலை பேசி வாங்கிக்கொள்வார்கள்.
இந்த மத்திய சங்கீ அரசாங்கம் என்ன செய்தது, 2020ம் வருடம் வாக்கில், நகைகளுக்கு BIS ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்கிற அரசாணையை பிறப்பித்துவிட்டது.சில விஷயங்களை நெறிப்படுத்தும் பொழுது, அதுவரை அதில் சுகம் கண்டவர்கள் அதை எதிர்க்கத்தானே செய்வார்கள் அப்படியான எதிர்ப்புகளும் கிளம்பவே செய்தது. நீங்கள் சிந்தியுங்கள், 2020க்கும் இந்தியாவில் எத்தனை கோடி பேர் 22காரட் தங்கத்திற்கான விலையை கொடுத்து 20 காரட் 18 காரட் 14 காரட் நகைகளை வாங்கியிருப்பார்கள். இதில் கொஞ்சம் கொஞ்சமாக நகை வாங்கி சேர்க்கும் பொருளாதார ரீதியில் அடித்தட்டில் இருக்கும் மக்களும் நடுத்தர மக்களும் தான் பெரிய சந்தை இருந்தார்கள், அத்தனை கோடி பேரின் உழைப்பு சமூகத்தின் ஒரு சிறு கூட்டமான நேர்மையில்லாத நகை வியாபாரிகளால் எத்தனை சுரண்டப்பட்டு இருக்கும். சுரண்டப்பட்டதா என்று ஆச்சரியமாக கேட்பீர்கள் என்றால், ஆம் நிச்சயமாக.2020 க்கு முன்பு வரை நீங்கள் செலுத்திய ஒரு கிராம் தங்கத்திற்கான விலைக்கு ஒரு கிராம் செம்பு வழங்கப்பட்டு இருக்கும். 100 கிராம் 916 நகையில் 91.6 கிராம் தங்கம் இருக்க வேண்டும் அதில் 83.3 சதவீதம் மட்டும் இருந்தாலே அது எத்தனை பெரிய திருட்டு. மன்னிக்கவும் white collar robbery.
தங்கம் ஒரு வகையில் சொத்து அதில் நடக்கும் வியாபாரம், வாங்குகிறவ ர் விற்கின்றவர் என்று இருவருக்கும் லாபகரமானதாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு நகை வியாபாரியிடம் மக்கள் நகை வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் நஷ்டமடையவே தான் செய்து இருக்கின்றார்கள்.
நாம் யாருமே 2020 வரையில் கேள்வி கேட்டதே இல்லை? “உன்கிட்ட வாங்கின நகையை உன்கிட்ட திரும்ப கொடுக்கிறேன் செய்கூலி சேதாரம் எல்லாம் வேண்டாம் எத்தனை கிராம் நகையோ அதற்கான நிகரான தங்கத்தின் விலையை கொடு” என்று. அதெப்படி தருவாங்க என்கிற மனநிலையில் தான் இருந்தோம்.
சரி! 2020க்கு நிலைமை சரியாகி விட்டதா? நிச்சயமாக இல்லை.
இன்னுமும் தங்க விற்பனையில் என்ன ஊழல் நடக்கிறதோ தெரியாது, ஆனால்,Bis ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பின் தங்கத்தின் வியாபாரத்தில் நடந்து வந்து முறைகேடுகள் பெரும் அளவில் குறைந்து இருக்கின்றது.
ஆனால், வெள்ளியை வைத்து, இன்னுமும் திருடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள், நேர்மையற்ற வியாபாரிகள்.எப்படி!எப்படி!எப்படி?
ஒரு கதை.வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்று. வேண்டாம்! வேண்டாம்! கொலுசு என்று வைத்துக்கொள்வோம்.ஹா! ஹா!
வீட்டில் ஒரு வெள்ளி கொலுசு வாங்கினார்கள், அந்த கொலுசு கொஞ்சம் பழசாகி போனது,கடைக்கு எடுத்துக்கொண்டு போய் மாற்றிக்கொண்டு வரலாம் என்று சென்றால், 100 கிராமில் 20 கிராம் கழித்து கொண்டு அதற்கு நிகரான பணமோ வெள்ளி நகையோ பாத்திரமோ நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். சிவாஜி ரஜினி மாதிரி “இந்த பஜார் ல எதாவது ஒரு மூலையில் நேர்மை கொஞ்சம் பாக்கி இருக்காது அதை தேடுறேன்” என்று ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். எல்லா கடைகளிலும் அதே பதில்.
“வாங்கின கடைக்கே எடுத்து போகலாம்” என்று மனைவி சொன்னவுடன் அங்கே சென்றோம்.கூடுமான வரையில் எந்த ஒரு விமர்சனத்தை வைக்கும் பொழுதும் பண்புடனும் வரம்பு மீறாமலும் இருக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடு இருப்பதால், கெட்ட வார்த்தைகள் இங்கே தவிர்க்கிறேன். அங்கும் அதே பதில், நான் என் மனைவியைப் பார்த்தேன், அதை அவர் அங்கே வாங்கிய தேதியில் வெள்ளியின் விலை என்னவாக இருந்ததோ அதை விட அதிக விலைக்கு விற்று, இதை நீங்கள் திருப்பி கொண்டு வந்தால், அன்றைய தேதியில் வெள்ளி விலை என்னவோ அதற்கே எடுத்துக்கொள்வதாக உத்தரவாதம் அளித்து இருந்தார்கள்.
என்னுடைய கோபம் அந்த கடை முழுதும் நிறைந்து இருந்தது. ‘அந்த ஒரு கடையில் மட்டும் தான் இது நடக்கிறதா?’ என்றால் நிச்சயமாக இல்லை.
பட்டத்திற்கு பறந்து கொண்டிருக்கும் நடிகர் விளம்பரப்படுத்திய பெரிய கடை ஒன்றுக்கு,நம்முடைய உறவுக்காரர் ஒருவரின் குழந்தைக்கு ஏதேனும் வாங்க வேண்டும் என்று சமீபத்தில் சென்றிருந்தேன். என்ன வாங்குவது என்று தீர்மானிக்காமல், முடிவாக வெள்ளியில் ஒரு கிண்ணம் வாங்கினோம். செய்கூலி சேதாரம் எல்லாம் இல்லை. எத்தனை பெரிய மனசு! இல்லை? இல்லை.
வெள்ளியும் தங்கமும் வியாபாரம் செய்யும் இடங்களில் சுரண்டல்களே தான் அதிகம் நடந்து இருக்கிறது.
பில் போட ஆயத்தமானார்கள், மூளையின் அடியில் இருந்த ஒரு கேள்வி மேலெழுந்து வந்தது, “நான் இதை திருப்பி கொண்டுவந்தா அன்னைக்கு வெள்ளி விலை என்னவோ அதே விலைக்கு எடுத்துக்குவீங்களா?” கேட்டும் விட்டேன்.
20 சதவீதம் கழித்துவிட்டு எடுத்துக்கொள்வோம் என்றார்கள். அன்று நான் சண்டை போடுகிற மனநிலையில் இல்லை. அதோடு, அவர்கள் சம்பளத்திற்கு வேலைப் பார்க்கிறவர்கள். அவர்களிடம் விவாதித்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
“சரி! வெள்ளி பொருளுக்கெல்லாம் ஹால்மார்க் கிடையாதா? ” அடுத்த கேள்வியை கேட்டேன். “இருக்கு சார்!”
“சரி! அங்க வெள்ளி விலை போட்டு இருக்கீங்களே, அதெப்படி 916, அந்த மாதிரி வெள்ளியில் என்ன grade வெள்ளியோட விலை” என்று கேட்டேன்.
“வெள்ளி ல அதை யாரும் பார்க்க மாட்டாங்க சார்!” என்றார்.
“சரி! விடுங்கண்ணே இதுக்கும் எதாவது சட்டம் கொண்டு வந்தா தான் கொஞ்சம் திருந்துவாய்ங்க” என்று சலித்துக்கொண்டு 80 சதவீதம் மட்டுமே வெள்ளி கலந்திருக்கும் ஒரு கிண்ணத்திற்கு 100 சதவீத வெள்ளிக்கான விலையை கொடுத்து வாங்கி வந்தேன்.
இதை அன்றே அந்த சில நிமிடங்களிலேயே என்னால் மாற்றி விட முடியாது.என்ன செய்யலாம்? வாங்க எல்லோரும் சேர்ந்து சண்டை போடலாம்.
ஒரு வெள்ளி நகையோ பாத்திரமோ, அதற்கும் BIS hallmark முத்திரை இருக்கிறது தான். அதில், அந்த வெள்ளி நகையின் தரம் குறிக்கப்பெற்றிருக்கும் நாம் யாரும் அதை கவனிப்பதில்லை. 80 சதவீதம் வெள்ளி கலந்த பொருள்கள், 92.5 சதவீதம் வெள்ளி கலந்த பொருள்கள் என்று வெள்ளி பொருள்களுக்கும் தரம் இருக்கின்றது.
நாம் வாங்கும் வெள்ளி நகை பொருள் எல்லாவற்றிலும் 80 சதவீதம் மட்டுமே தான் வெள்ளி இருக்கும். நீங்கள் 100 கிராம் வெள்ளி பொருள் ஒன்றை இன்றைய விலையான 84 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால்,ஒரு வியாபாரி அதற்கான விலையை நிர்ணயிக்கும் பொழுது, 80 X 84=6720 என்று 80 கிராம் வெள்ளிக்கான மதிப்போடு அவர்களின் செய்கூலி சேதாரம் நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை சர்வீஸ் சார்ஜ் என்றெல்லாம் கூட சேர்த்துக்கொள்ளலாம் அது தான் முறையாக இருக்கும்.
ஆனால், என்ன நடக்கிறது? 100 X 84= 8400 ரூபாய் பிளஸ் gst யோடு நம் தலையில் கட்டி விடுகிறார்கள்.
இதில் இன்னொரு அநீதி அல்லது ஆலோசிக்கப்படாத சிக்கல் என்னவென்றால்? ஒரு நகை வியாபாரி, வெள்ளியோ தங்கமோ கொள்முதல் செய்யும் பொழுது அங்கே ஒரு gst விதிக்கப்படும், 100 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் , அதை அவர் விற்பனை செய்யும் பொழுது வாங்குபவரிடம் 200 ரூபாய் gst விதிக்கப்படுகிறது என்றால், அந்த வியாபாரி அரசாங்கத்திற்கு 100 ரூபாய் செலுத்தினால் போதும். அதை input tax credit என்கிறார்கள்.
மக்களுக்கு இந்த input tax credit கிடைக்கிறதா? நிச்சயமாக இல்லை.சட்ட்டத்தில் அதற்கு வழியும் இல்லை. பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு மட்டுமே தான் அந்த input tax credit கிடைக்கிறது. பழைய நகையை கொடுத்து புதிய நகையை நாம் வாங்கும் பொழுதோ பழைய நகையை விற்கும் பொழுதோ அங்கே ஒரு வர்த்தகம் நடக்கிறது. ஒரு வியாபாரிக்கு கிடைக்கும் input tax credit ஏன் தனிநபருக்கு கிடைக்க கூடாது?
இந்த input tax credit விவகாரம் ஒரு பெரிய கலந்துரையாடலுக்கு உட்பட்டது.ஆனால், உடனடியாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் மாற வேண்டியது, வெள்ளி விலை நிர்ணயம். அடுத்த முறை நீங்கள் வெள்ளி வாங்கச்சென்றால், செய்கூலி சேதாரம் சேர்த்துகொள்ளச் சொல்லுங்கள். ஆனால், வெள்ளியின் தரத்தை கவனித்து நீங்கள் வாங்கும் பொருளில் எத்தனை சதவீதம் வெள்ளி இருக்கிறதோ அதற்கான வெள்ளி விலையையும் செய்கூலி சேதாரத்தையும் கொடுத்து வாங்குங்கள்.
மில்லிகிராம் அளவில் எனாமல் பெயிண்ட் என்று என்ன இருந்தாலும் வாங்காதீர்கள்.
பொது நலன் கருதி இந்த கட்டுரையை இந்த தளத்தில் வெளியிடுவோர், தலைவர் ரஜினியின் அன்புத்தம்பி பிரபுவின் ரசிகர்கள்.
உங்கள் தங்கம்! உங்கள் உரிமை!
உங்கள் வெள்ளி! உங்கள் உரிமை! உங்கள் காசு! உங்கள் உழைப்பு!.