புரை தீர்ந்த நன்மை விளையுமென்றால் பொய்மையும் வாய்மையிடத்து என்கிறது நமது தமிழ்மறை. நன்மை விளைவிக்கும் சொல்லும் செயலும் இல்லையென்றாலும் பரவாயில்லை தீங்கு செய்யும் சொல்லும் செயலும் இல்லாதிருந்தால் அதுவே போதுமானது என தோன்றுகிறது.

நச்சுக் கருத்துகளை நமக்கே தெரியாமல் நமக்குள் திணிக்கும் சினிமாக்கள், வீடியோ பதிவுகள், சமூக வலைத்தள கேளிக்கைகள் மலிந்து கிடக்கின்றன. சல்லடைப் போட்டு சலித்து நல்லதை மட்டும் கொள்வதென்பது சாமானியாரால் ஆகாத காரியம்.

தான் சந்திக்கும் எதனையும் கனம் பொருந்திய நீதிபதிகளாக தங்களை கருதிக்கொண்டு தனது அரைவேக்காட்டு விமர்சன புத்தியைக் கொண்டு அறிவாளித்தனமான மேதைமை வார்த்தைகளால் சகலத்தையும்  , விமர்சித்து வைக்கிறது ஒரு கூட்டம்.

ஒவ்வொரு so called பிரபல விமர்சகர் பின்னாலும் லைக் போடவும், ஹார்ட்டின் போடவும், ஹா ஹா போடவும் ஒரு கூட்டம்.

ஏதோவொன்றை உண்மை என நம்புகிறோம், பிறிதொன்றை பொய் என புறந்தள்ளுகிறோம். ஒன்றை ஏற்று மற்றதை நிராகரிக்கும் மனப்பான்மை நம்மை இப்படித்தான்   சிந்திக்க, செயல்பட , விவாதங்கள் என்ற பெயரில் சண்டைகள் செய்ய வைக்கிறது.

சரி, தவறு என்ற சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் பிரிவினைகள் கடந்து

உண்மை எப்போதும் முழுமையானதாகவே இருக்கிறது.

கவியோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவன் ஒரு கதை சொன்னான். 

அவனது கதையில் ஒரு காடு இருந்தது. 

அந்த காட்டை புரிந்துகொள்வதற்காக ஒரு அறிவாளி நபர் வருகிறார். இவர் தான் நமது கதையின் முதல் நாயகர். அவர் காட்டின் எல்லா திசைகளிலும் சுற்றித்திரிந்து அலசி ஆராய்ந்து காட்டைப் புரிந்து கொண்டதாக தனக்குத்தானே நினைத்துக் கொண்டு  அந்தக் காட்டைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார்.

காடு மிகவும் கொடூரமானது அடர்ந்த மரங்களைக் கொண்ட அதன் பரப்பில் பாதைகளைக் கண்டறிந்து நடப்பது சிரமமானது, காட்டு விலங்குகள் மிகவும் கொடூரமானவை மான்களை புலிகள் வேட்டையாடும் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. வலியவைகளுக்கு வலிவையும் , எளியவைகளுக்கு அச்சத்தையும் அளிக்கும் காடுகள் நமக்கு வேண்டாம். நாம் நாகரிகம் பயின்றவர்கள் காடுகளை நாடுகளாக்கிவிட்டு. புலிகளையும் மான்களையும் தனித்தனியாக்கி ஒன்றிடமிருந்து மற்றொன்றை காக்க வேண்டும் என அந்த புத்தகத்தில் பக்கம் பக்கமாக பல அரிய அறிவார்ந்த, யாரும் இதுவரையில் சிந்தித்தே இராத பல புதிய  கருத்துகளை எழுதி அந்த புத்தகத்தை புரட்சி நூலென புனைப்பெயர் இட்டு வெளியீடு செய்கிறார். அநேகர் அதனை புனித நூல் போல சிரமேற்கொண்டு கற்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் அவரோடு அவரது புரட்சிப்படையில் இணைந்து காடழித்து நாடு செய்யும் அவரது இயக்கத்தில்  இணைந்து செயல்படுகிறார்கள்.

புரட்சிப்படை காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இப்படியான .. இந்த..  நேரத்தில் காட்டை அழிப்பதை எதிர்த்து ஒருவர் எதிர் போராட்டம் செய்கிறார்.

இவர் தான் நம் கதையின் இரண்டாவது நாயகன்.

காடுகள் நாட்டிற்கு எந்த வகையில் அவசியம், காடுகள் அழிக்கப்படுவதால் என்னென்ன தீமைகள் வரும் என்றும் காடுகள் மோசமானவை அல்ல அவை முழுக்க முழுக்க நல்லவை, மக்களுக்கு காடுகள் முக்கியம், அவ்வப்போது நாடு மறந்து மக்கள் காடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிக்கொண்டிருந்தார் இரண்டாவது நாயகன்.

காட்டின் அழகை வர்ணித்து காடுகள் அழகானவை என்ற தலைப்பில் அவர்   கவிதை நூலொன்று  எழுதியிருப்பதாக ஊரார் பேசிக்கொண்டனர். 

காடுகள் நல்லவை என நம்பும்  கூட்டம் ஒன்று அவர் பின்னால் அணி திரண்டது.

காட்டுவாசிகள் போல இலைகளை உடுத்திக் கொண்டு ,

காட்டு வாழ்க்கைக்கு திரும்புவோம், நினைவில் காடுள்ள மிருகங்கள் நாம்.. காடு தான் நமது வீடு என அவர்கள் காது கிழிய கோஷங்கள் இட்டு போராடினார்கள்.

காட்டை அழிப்பதை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள். காடுகள் மோசமானவை தானே அவற்றை அழிப்பதில் தவறில்லையே என நினைத்திருந்த கூட்டத்தினர்,தங்கள் போராட்டத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தனர்.”புல் அறுப்பு போராட்டம்” , ” சிங்கம் புலி  உருவ பொம்மை எரிப்பு போராட்டம்”,  ” காடுகளின் நன்மையை கூறும் நூல்களை எரிக்கும் போராட்டம்” என நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்துகின்றனர்.

காட்டுக்குள் இருக்கும் ஒரு ஊரில் வசிக்கும்  பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் நாட்டுக்குள் நடக்கும் இந்த இரண்டு போராட்டங்களையும் பற்றிக் கேள்விப்படுகிறான்  அவன் தனது தாத்தாவிடம் சென்று அவைகளைப் பற்றி கேட்கிறான்.

அந்த தாத்தா சொல்கிறார் ” இந்த இரண்டு போராட்டங்களுமே தேவையற்றவை உண்மை என்பது சரி, தவறு இரண்டையுமே உள்ளடக்கிய மாபெரும் விசயம். காடு நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை, அதை அழிக்கவும் வேண்டாம், காக்கவும் வேண்டாம். இயற்கை மனிதர்களை விட பெரியது.காடுகள் அழகானவை, அதே நேரம் அவை மோசமானவையும் கூட. அழகும் ஆபத்தும் கலந்திருக்கும் அற்புதம் அவை. “

ஒரு ட்ரோன் ஷாட்-ல் இரண்டு போராட்டங்களையும், காட்டையும், மலையையும், காட்டின் ஊடாக வளைந்து நெளிந்து ஓடும் ஒரு நதிகீற்றையும் காட்டிவிட்டு இந்த கதை இப்படியாக நிறைவடைகிறது.

எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், விமர்சகர்களுக்கும் பொறுப்பு வேண்டும். ஒரு செய்தியை, கருத்தை அல்லது தகவலை கூறுவதற்கு முன்பு அதன் நன்மை தீமைகள், சாதக பாதகங்களை அக்குவேர் ஆணிவேராக அலசி ஆராய வேண்டும்.  வெளியிடப்படும் கருத்துகளும், தகவல்களும் எப்படிப்பட்ட தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என சிந்தித்து அதன் பின்பே அவற்றை பொதுவெளியில் பொதுசனங்கள் முன்பு படையல் வைக்க வேண்டும்.  

சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் ! தேவையற்ற விசயங்களை, பொய் செய்திகளை, வதந்திகளை மீடியா என்ற பெயரில் தயவு செய்து வெளியிடாதீர்கள்.

பொதுமக்களும் அவர்கள் கூறுவது, அதாவது, செய்தி மீடியாக்கள், மற்றும் இன்னபிற தகவல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகள் அவர்களது தனிப்பட்ட கருத்து தான் என்ற தெளிவோடு மெய்ப்பொருள் காணும் அறிவுடன் அவற்றை அணுகவேண்டும். ஊடகங்களில் வெளிவரும்  எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி, அக்கருத்துகளை நாமும் நம் பங்குக்கும் பரப்பி விடக் கூடாது.

அன்புடன் ,

அநாமிகா

19/11/2022

By Anamika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *