வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

 

இந்த வாரம் இந்த நாளில் ரஜினியும் அரசியலும் பற்றி எழுதுவதாக தான் இருந்தது. வாசகர் ஒருவர் வைத்த வேண்டுகோளின் விளைவாக திட்டத்தில் சின்ன மாறுதல்.

மஹாபாரத கதையை சுட்டி, அதில் பாண்டவர்களின் பிறப்பை கிண்டல் செய்து ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது. இது இப்போதெல்லாம் சாதாரணமாக நடக்கும் ஒன்று தான். அந்த மீம் இல், சூரியனின் மகன் கர்ணன்,  யமதர்மரின் மகன் தர்மன்(யுதிஷ்டிரன்), ஆனால்,யமதர்மரே சூரியனின் மகன் என்று சுட்டி கிண்டல் செய்திருந்தார்கள். வாசகர் நமக்கு அதை அனுப்பி, அதற்கு விளக்கம் எழுதச் சொல்லி கேட்டு இருந்தார்.

சனாதன தர்மம் எனப்படும் இந்து மத தத்துவங்களின் அடிப்படையில் கடவுளுக்கு உடல் வடிவம் என்பதே கிடையாது, உருவம் கிடையாது. God does not have any physical form.

அழிவில்லாத எல்லையில்லாத அறிவிற்கு எட்டாத உருவமில்லாத உருவாக்க முடியாத அழிக்க முடியாத நிலையான ஒன்றே தான் கடவுள். சைவ தத்துவம் அதைத்தான் சொல்லுகிறது.பகவத் கீதையும் அதை தான் சொல்கிறது.

இதையெல்லாம் நாம் முன்னமே சில கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றோம்.

உருவமில்லாத இறைவனுக்கு ஏன் இத்தனை உருவங்களை இந்து தர்மம் கொடுத்து வைத்து இருக்கின்றது? பகவத் கீதையில்  ஜட அறிவை பெற்று இருக்கும் ஒருவருக்கு இறைவனின் உருவமற்ற தன்மை குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார் கிருஷ்ணர்.

நீங்கள் உங்கள் குழந்தையிடம் எதையுமே காட்டாமல் இது தான் கடவுள் என்று எப்படிச் சொல்லுவீர்கள்?! அப்படிச் சொன்னாலும் அந்த குழந்தை எப்படி புரிந்து கொள்ளும்?!

படைக்கப்பட்டிருக்கும் அத்தனையிலும் இறைவனின் அம்ஸம் இருக்கிறது. அப்படி,ஆற்றலின் வெவ்வேறு படிநிலைகள்  எல்லாவற்றிலும் இருக்கும் இறைவனின் அம்சத்தை உருவமாக உருவகப்படுத்தி வைத்து இருக்கின்றது இந்து தர்மம்.

இப்போது நானும் நீங்களும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். என் கையில் இருக்கும் என் மொபைல் போனை எடுத்து, சமமாக ஒரு மேஜையில் வைத்து, “என்  மொபைல் தான் அந்த கார் என்று வைத்துக்கொள்ளுங்கள், கார் இந்த திசையில் சென்று கொண்டிருந்தது, அப்போது நீங்கள் இப்போது இருக்கும் வலது பக்கத்தில் இருந்து ஒருவர் தீடீரென்று சாலையை கடக்க முற்பட்டார், நான் சட்டென்று காரை நிறுத்தினேன்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது என் கையில் இருக்கும் மொபைலை மறந்து, மேஜையை மறந்து ஒரு கார் சாலையில் போய்க்கொண்டிருப்பதை நீங்கள் மனக்கண்ணில் பார்த்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். இது தான் இந்து மதம் உருவங்களாக இறைவனை உருவகப்படுத்தி வைத்திருக்கும் தத்துவத்தின் அடிப்படை.

பூஜைகளின் பொழுது ஆவாஹனம் என்னும் முறை  இதன் அடிப்படையில் ஆனதே. ஒரு மஞ்சளை பிடித்துவந்து அதில் விநாயகர் ஆக்குவது. ஒரு குடத்தில் நீர் ஊற்றி தேங்காய் வைத்து கும்பமாக்கி அதை இஷ்ட தேவதைகளாக நவகிரங்களாக செய்வது இதெல்லாம் ஆவாஹனதிற்குள் அடங்கும். ஒரு பொருளில் குறிப்பிட்ட ஆற்றலை ஏற்றுவது. மஞ்சளை பிள்ளையார் என்று பிடித்துவைத்த தருணம் முதல் உங்கள் அறிவும் மனமும் அதை பிள்ளையாராகவே தான் பார்க்கும் அப்போதும் அந்த மஞ்சளில் இருக்கும் ஆற்றல் விநாயகராக இருக்கும். உருமற்ற இறைவனுக்கும் ஆற்றலுக்கும் இந்து தத்துவங்கள் உருவம் கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் இது தான்.

நம் மனதில் அறிவில் எது இருக்கின்றதோ அது மட்டுமே தான் இருப்பதாக நாம் கொள்வோம்.What exists in our mind exists outside.

சூரியனின் ஆற்றல் எத்தனை பெரியது, உலக உயிர்கள் உருவாவதற்கு உய்வதற்கு உணவு உண்பதற்கு என்று எல்லாவற்றிக்கும் காரணமாக இருக்கும் சூரியனில் இருக்கும் ஆற்றலை இறைவனின் அம்சத்தை வணங்க நாம் தான் சூரியனுக்கு உடல் கொடுத்தோம் உருவம் கொடுத்தோம்.

சூரியனின் மனைவியாக நாம் வணங்குவது எல்லாம் சூரியனால் கிடைக்கும் ஒளியின் வெவ்வேறு பரிணாமங்கள்.

உஷாவிடியல் ஒளி

சாயாநிழல்

ரஜனிஇரவு

27 நட்சத்திர கூட்டங்களை சந்திரனின் மனைவியாக உருவகப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு நிலா வானில் ஒரு நட்சத்திர கூட்டத்தில் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு வீடு என்பது போல்.

எல்லையற்ற இறைவனின் தன்மையை எப்படி மொத்தமாக புரிந்துகொள்வது, எப்படி மொத்தமாக வணங்குவது?

 

இந்த இடத்தில் கம்ப ராமாயண பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

தோள் கண்டார். தோளே கண்டார்.

   தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார். தாளே கண்டார்;

   தடக் கை கண்டாரும். அஃதே;

வாள் கொண்ட கண்ணார் யாரே.

   வடிவினை முடியக்கண்டார்?-

ஊழ் கொண்ட சமயத்து அன்னான்

   உருவு கண்டாரை ஒத்தார்.

ராமனின் அழகால் அவனைப் பார்த்தவர்கள், அவன் தோளை கண்டவர்கள் அதன் அழகால் வேறு ஒன்றையும் காணவில்லை. தாளை கண்டவர்கள் அதன் அழகால் வேறு ஒன்றையும் காணவில்லை என்று சொல்லிக்கொண்டே வந்து, கண் கொண்ட யாரும் அவனை முழுதாய் பார்த்து முடித்து இருக்க முடியாது. எப்படி ஒவ்வொரு மதமும் சமயமும் தாங்கள் அறிந்ததும் கண்டதும் புரிந்ததும் மட்டுமே தான் கடவுள் என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்களோ அப்படித்தான் ராமனின் தோள் கண்டவர்கள் அது தான் ராமன் என்றும். தாள் கண்டவர்கள் அது தான் ராமன் என்றும் இருந்தார்களாம்.

இந்த பாடல், ஒரு பெரிய தத்துவ உண்மையை சொல்கிறது. கடவுளை முழுமையாக வரையறுத்து அறிந்து கொள்ள யாராலும் முடியாது. கண் காது மூக்கு என்று தனித்தனியாக அறிந்து கொண்டு அதை வணங்குவது போல்.ஜட இயற்கையில் இருக்கும் இறைவனின் அத்தனை அம்சத்தையும் தனித்தனியாக சூரியன் சூரியனின் மனைவிகள் சந்திரன் சந்திரனின் மனைவிகள் யமன் யமனின் மனைவிகள் இந்திரன் இந்திரனின் மனைவிகள் உருவகப்படுத்தி உருவம் கொடுத்து இறைவனின் பிரிக்க முடியாத அம்சங்களை பிரித்து வணங்குகிறது வணங்குகிறது இந்து தர்மம் .

இப்போது இந்த மஹாபாரத சர்ச்சைக்கு வருவோம். சூரியன் எப்படி உடல் கொண்ட, உருவம் கொண்ட ஒரு மனிதன் இல்லையோ  அப்படியே தான்  சூரியனின் மகனாக கருதப்படும் யமதர்மராஜாவும். இந்த தர்ம ராஜாவை வேறு எப்படி அழைப்பார்கள்? காலன்.

காலமும் நேரமும் சூரியனை பூமி சுற்றுவதை அடிப்படையாக கொண்டு இருக்கிறது, உடல் பெற்ற ஓவ்வொரு உயிருக்கும் ஒரு உயிர் கடிகாரம்(biological clock) இருக்கிறது ஒரு கால வரையறை இருக்கிறது ஒரு உயிர் உடலை பெரும் பொழுதிலேயே ஒரு கால வரையறையை பெற்றுத்தான் பிறக்கிறது. காலத்தின் இந்த பரிணாமத்தை சுட்டுவது தான் யமதர்ம ராஜா.அவர் நரகத்தில் எல்லோரையும் தண்டிப்பார் என்கிறார்களே?

கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசத்தை ஆரம்பிக்கும் பொழுதே, ஆன்மாவை யாரும் ஏதும் செய்து விட முடியாது. துன்பங்கள் எல்லாம் உடலுக்குரியது என்கிறார்.அப்படியென்றால் வினைப்பயனை  நாம் பூமியில் தான் உடலை கொண்டிருக்கும் பொழுது தான் அனுபவித்து ஆக வேண்டும். சொர்க்கம் நரகம் எல்லாம் இந்த பூமியில் தான் இருக்கிறது. நாம் நம் வினைப்பயனுக்கு ஏற்ப எப்போது துன்பம் அனுபவிக்க வேண்டும் எப்போது இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதை காலமே தான் தீர்மானம் செய்கிறது. அதன் உருவகம் தான் யமதர்ம ராஜா.

சூரியன் தான் காலத்தின் அடிப்படை, அதன் காரணமாகவே தான் சூரியனின் மகனாக எமதர்மன் குறிக்கப் பெற்றார். உடலற்ற சூரியனும் காலனும் உடல் பெற்ற குந்தி தேவிக்கு எப்படி குழந்தை அளித்திருக்க முடியும்?!

நம் கலாச்சாரத்தில், ‘நியோகஎன்று ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட sperm donation போன்றது. இதற்கு பல வரையறைகள் வைத்திருந்தார்கள். சந்ததிகள் தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை இருந்தது.கணவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில், அல்லது கணவர் இல்லாத பட்சத்தில் ஒரு பெண் நியோக முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறையில் ஆண் பெண் இருவருக்கும், பாலியல் ரீதியிலான எந்த இச்சைகளுக்கு இடம் அளிக்க கூடாது.இடைக்கு மேலே ஒருவரை ஒருவர் தீண்டிக்கொள்ளக் கூடாது. இருவருக்கும் இடையில் ஒரு திரை இருக்க வேண்டும், ஆண் பெண் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள கூடாது.பாலியல் ரீதியிலான  இன்பம் எப்படியெல்லாம் தவிர்க்க பட வேண்டும் அப்படியாக தவிர்க்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே நாடாகும் கூடல் தான் நியோக. பாலியல் இச்சைகளுக்காக ஒருவர் பலருடன் உறவு வைத்துக்கொள்வது நியோகத்தில் வராது. அது எப்படி அப்படி எந்த எண்ணங்களும் இல்லாமல் இப்படி ஒரு கூடல் நிகழும் என்று நமக்கு தோன்றுகிறது எல்லாம் தோன்றும் என்று தான் இந்த முறை கலியுகத்தில் பின்பற்ற கூடாது என்று அப்போதே தடை செய்து வைத்து இருக்கின்றார்கள். (it is and it should be  intercourse without sexual desire)

பாண்டவர்களின் தந்தை பாண்டுவும் கௌரவர்களின் தந்தை திருதிராஷ்டிரரும் கூட நியோக முறையில் பிறந்தவர்களே. இந்த முறையில் குழந்தை பெற்றுகொள்ளச் சொல்லி கேட்ட பொழுது, பாண்டுவின் தாய் பயந்து முகம் வெளிரி போனதால் பாண்டு, பாண்டு நோயுடன் பிறந்ததாகவும். திருதிராஷ்டிரரின் தாய் கண்களை மூடிக்கொண்டதால், குழந்தை பார்வையற்று பிறந்ததாகவும் சொல்கிறார்கள். ஒரு கரு உருவாகும் பொழுது தாயின் மனம் அறிவு புத்தி எதைப்பற்றி இருக்கிறது அது படியே தான் கரு உருவாகும் என்பதே தான் நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டியது.

குந்திக்கு ஒரு முனிவர், ஒரு மந்திரத்தை கற்பிக்கிறார், அதை பிரயோகம் செய்தால், நியோக முறையில் எந்த தேவர்களை நினைத்து அந்த மந்திரம் பிரயோகம் செய்யப்பட்டதோ அவர்கள் அம்சத்தில் குழந்தை பிறக்கும் என்பதே வரம். பாண்டுவினால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போக, நியோக முறையில் சூரியனை மனதில் நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை தான் கர்ணன், தர்மனைகாலனை நினைத்து பெற்றுக்கொண்ட மகன் தான் யுதிஷ்டிரன்.

வானில் ஒளிரும் சூரியனே இறங்கி வந்து குந்தியோடு உடலுறவு கொண்டு கர்ணன் பிறந்ததாக நம்பிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் தான் சூரியனின் biological மகனாக காலனை நினைத்துக்கொண்டிருக்கும்.அவர்கள் தான்  மூட நம்பிக்கையை அழிக்க வந்த கூட்டம் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள்.ந்த கூட்டம் தான் இப்படியான மீம்களை உருவாக்கும்.

இது மிக நுட்பமான ஆழமான ஒன்று,கூடலின் பொழுது எதை நினைக்கிறோம் யாரைப் பற்றிய சிந்தனை இருக்கின்றது, ஆசை மிகுந்து இருக்கின்றதா? என்று இந்த காரணிகள்  எல்லாமுமே நமக்கு பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் அம்சங்களை தீர்மானிக்க வல்லது. நியோக முறை, பாரத கதை இதில் இருந்து நாம் எடுத்துக்கொள் வேண்டியது  இது தான்.இஸ்லாம் குழந்தைக்கு ஒரு தாய் பாலூட்டும் பொழுது கூட பாலுணர்வு அல்லாமல் நல்ல சிந்தனைகளோடு குரான் வாசிக்க சொல்கிறது.

ஏதுமற்றதாய் ஏதும் செய்யாமல் என்னெவென்று புரிந்து கொள்ள முடியாததாய் இருக்கும் பிரம்மத்தில் இருந்து தான் எல்லாம் தோன்றுகிறது, அந்த ப்ரம்மம் எல்லா திசைகளிலும்  விஸ்தரித்து இருக்கிறது.அதைத்தான் படைப்பின் கடவுளாக உருவகம் செய்து வைத்து இருக்கின்றார்கள். அவரில் இருந்து அறிவு தோன்றி அறிவில் இருந்து ஆசை தோன்றி ஆன்மா ஜட இயற்கையில் சிக்கியிருக்கிறது. அவரில் இருந்த தோன்றிய அறிவை கொண்டே ஆன்ம தெளிவை பெற அந்த அறிவை வணங்கவே தான் சரஸ்வதியை அறிவின் கடவுளாக செய்து வைத்து இருக்கிறார்கள். பிரம்மத்தில் இருந்து அறிவு தோன்றியதால் சரஸ்வதி சில இடங்களில் ப்ரம்மாவின் மகளாகவும், அந்த அறிவும் பிரம்மமும் ஜட உலகில் உயிர்கள் தோன்ற காரணமாக இருப்பதால் சில இடங்களில் மனைவியாகவும் சொல்லப்பட்டு இருக்கின்றது.இதையும் கூட தெரிந்து கொள்ள கூட முற்படாதவர்களே தான் அதை கேலி செய்வார்கள்.

எந்த ஒரு உண்மையயையும் தத்துவங்களையும் புரிந்து கொள்வதற்கு பல உவமைகளை பொய்களை படிநிலைகளை கடந்து வர வேண்டும். இறைவன் பற்றிய புரிதலில் வகுப்பிற்கு  வெளியே நின்று கொண்டே நம்பிக்கைகளை கேலி செய்பவர்களின் புரிதலை நாம் ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள் அது தான் அவர்களின் கர்மா.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.

ஒருவன் எத்தனை படித்தாலும் அவன் கர்ம வினைக்கேற்ப அவன் அறிவிற்கு என்ன புரியுமோ என்ன எட்டுமோ அந்த அளவில் தான் அவன் அறிவு வளரும் என்கிறார் வள்ளுவர். அதனால், விளக்கம் கேட்ட வாசகருக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது, நாம் எல்லோருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை அவர்கள் அந்த விளக்கங்களை விளங்கிக்கொள்ள போவதும் இல்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *