ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம், கணக்குவழக்கு இல்லாமல் பொருட்களுக்கும், chocolate களும் அநேகத்துக்கும் அனேகமாக வாங்கிச் செல்வது வழக்கம். economy class ticket இல், 20 +7 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், ஊருக்குச் செல்லும் முன் வாங்கிக் குவிக்கும் பொருட்கள் இந்த 27 கிலோ எடைக்குள் அடங்கிவிடுவதில்லை.
இந்த முறை நான் எதுவும் வாங்கவில்லை. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஊருக்கு சென்றிருந்த பொழுதே 20+7+10 கிலோவிற்கு வாங்கி குவித்து கொண்டுச் சென்றேன். கூடுதல் 10 கிலோவிற்கு நாம் கட்டணம் செலுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நான் முறை எதையும் எடுத்துச் செல்லவில்லை. என்னுடைய தங்கை அவளின் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்துவிட்ட பொம்மைகளைத் தவிர.
கையில் நாம் வைத்துக்கொள்ளும் 7கிலோவை பெரிதாக சோதிக்க மாட்டார்கள். அன்று security check -in முடிந்து எல்லோரும் விமானத்திற்காக காத்திருந்தோம்.அங்கே வந்த ஒரு அதிகாரி, சிலரின் கையில் இருந்த பையின் எடையை சோதித்தார், அது 7 கிலோவிற்கு அதிகமாக இருந்தது. அவர் கொஞ்சமும் கருணை காட்டவில்லை. 7 கிலோவிற்கு மேல் வைத்துக்கொள்ளக்கூடாது என்று எதையெல்லாம் குப்பையில் வீசலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமையை மட்டும் அவர்களுக்கு கொடுத்தார்.
ஒரு பயணி, chocolate பாக்கெட், குழந்தைக்கு வாங்கி வைத்திருந்த சில உடைகள், இவற்றையெல்லாம் குப்பையில் வீசிக்கொண்டு இருந்தார். அது நிச்சயமாக அவரின் ஒரு வார சம்பளமாக இருந்திருக்கும். security check -in முடிந்த பிறகு உங்களை வழியனுப்ப வந்தவர்களிடம் கூட அந்த பொருட்களை கொடுத்தனுப்ப முடியாது. அந்த ஒரு நொடி, அந்த பயணியை தடுத்து என்னிடம் கொடுங்கள் நான் வைத்துக்கொள்கிறேன் என்று கேட்க தோன்றினாலும் நான் அதை செய்யவில்லை.அப்படியான முடிவுகள் சில சமயங்களில் ஆபத்தானதாக கூட அமைந்துவிடும்.
அந்த இடத்தில் இருந்த பலருக்கும் அந்த அதிகாரி ஒரு வில்லன் போல் தெரிந்து இருப்பார். அவர் விமானிகளையும் கூட சில காரணங்களுக்காக நிறுத்தி வைத்து இருந்தார்.
அவர் எந்த தவறும் செய்யவில்லை, ஆனாலும் அவர் அன்று எல்லோர் கண்களுக்கும் ஒரு வில்லனாகவே தோற்றமளித்து இருந்து இருப்பார். அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டவராக தெரியவில்லை. அவர் தினமும் அதே வேலையை இதே மாதிரியாக தான் செய்கிறார்.
தங்களுடைய வேலைகளை சரியாக செய்தாலும் இங்கே பலர், வில்லனாகத் தான் தெரிகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் எல்லோரும் பல சந்தர்ப்பங்களில் வில்லன்களாகவே தான் தோற்றமளிக்கின்றார்கள்.
ஒருநாள் காலையில் என் போன் க்கு ஒரு message வந்தது, “கோமளா miss expired ” . இது போன்ற செய்திகளை கேட்கும் பொழுது, அவர்களுக்கு என்ன வயது என்பது தான் நம் மனதில் எழும் முதல் கேள்வியாக இருக்கும். ஒருவரின் வாழ்க்கை என்பது, அவர்களின் செயலும் நேரமும் தான், அது மொத்தத்தையும் தான் செய்த ஆசிரியர் பணிக்காக மட்டுமே ஒதுக்கியவர் அவர் .
ஒரு படம் பார்க்கிறது, ஒரு பாட்டு கேட்கிறது இதெல்லாம் அவர் வாழ்க்கையில் இருந்திருக்குமா என்பது என்னுள் இருக்கும் ஆச்சரியமான கேள்வி.
இறைவனுடைய கருணையே பெருங்ககருணை என்கிறார்கள். இந்த இறைவனும் கூட இப்படிப் பல சந்தர்ப்பங்களில் வில்லத்தனமான வேலைகளை செய்துவிடுகிறான்.
ஒருவரின் இழப்பை யாரும் கொண்டாட மாட்டார்கள் என்றாலும் கூட, கோமளா மிஸ் இல்லாத வெறுமையில் நிச்சயம் பலர் ஆசுவாசம் கொள்ள வாய்ப்பிருக்கின்றது.
அவங்க சிரிச்சு நான் பார்த்தது இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் தான். அத்தனை கடுமை.
யார் ஒருவரின் மறைவும் இந்த உலகத்தின் இயக்கத்தை நிறுத்திவிட போவதில்லை. நாம் செய்துக் கொண்டு இருக்கின்ற வேலையை நிச்சயம் இன்னொருவர் வந்து செய்யத்தான் போகிறார். ஆனால், நாம் அதை எப்படி செய்கிறோம் என்பதில் தான்
நாமும் அந்த செயலின் விளைவும் வேறுபடுகிறது.
அந்த அதிகாரியின் இடத்தில் வேறு ஒரு அதிகாரி இருந்திருந்தாலும் அங்கே அந்த வேலைகள் நடந்து இருக்கும். ஆனால், அவர் யாரிடமும் பாரபட்சம் காட்டவில்லை.
கோபமும், கடுமையும் ரஜோ குணத்தில் வெளிப்பாடுகளாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த அதிகாரியிடமும் கோமளா மிஸ் இடமும் இருந்த கடுமை நிச்சயமாக சாத்திவீக குணத்தை சேர்ந்ததாக தான் இருக்க முடியும்,
ன த்வேஷ்ட்யகுஶலம் கர்ம குஶலே னானுஷஜ்ஜதே |
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சின்னஸம்ஶயஃ || பகவத் கீதை 18- 10 ||
சத்வ குணத்தில் நிலைப் பெற்றிருக்கும் புத்திசாலி துறவிகள், அமங்களமான செயல்களை வெறுப்பதில்லை மங்களமான செயல்களில் பற்றுக்கொள்வது இல்லை. செயல்களைப் பற்றிய ஐயங்களும் அவர்களிடம் இல்லை.
அந்த அதிகாரி போன்றவர்களும்; கோமளா மிஸ் போன்றவர்களும் ; என்னுடைய வேலை இப்படித்தான் செய்யவேண்டும் என்று அவர்களாக ஒரு தீர்மானத்தோடு செயல்பட்டார்கள்.அவர்கள் செய்த வேலையில் அவர்களுக்கு யார் மீதும் எந்த விருப்பும் வெறுப்பும் இருந்த்திருக்கவில்லை. ஆனால், அங்கே கடுமை இருந்தது.
அந்த பயணி பாவம்! அவனுடைய ஒரு வார சம்பளம் போய்ட்டு போகட்டும் என்று அதிகாரி நினைக்கவில்லை. அப்படி நினைப்பது தான் அன்பு என்று நினைத்தீர்கள் என்றால் அது அன்பும் இல்லை.இப்படியே எல்லா பயணிகளையும் அனுமதித்தால், விமானம் பறக்காமல் தரையில் தவழ வாய்ப்பு இருக்கின்றது. இவ்வாறாக தாங்கள் செய்யும் வேலையை பாகுபாடு காட்டாமல் சரியாக செய்வதே அன்பின் வெளிப்பாடு தான்.
பெருங்கருணை மிக்க இறைவன் இப்படியானவர்களின் உலக வாழ்க்கையும் சீக்கிரம் முடித்து வைத்துவிடுகிறான். நம்முடைய உறவுகள் யாரையாவது இழக்கும் தருணத்தில், இதை நினைத்து எத்தனை கோபம் வருகிறது இந்த இறைவன் மேல்.
எனக்கு தெரிந்த மட்டில்,தன் பணியைத் தவிர எதிலும் பெரிய ஈடுபாடு காட்டாத கோமளா மிஸ் இழப்பு ; எனக்கு ஒரு திரைப்பட காட்சியை நினைவுப்படுத்தியது.
அந்த காட்சியில் இளவரசியை அழைத்துக்கொண்டு வந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்த ஒரு குதிரை ஏதோ ஒரு வலியால் துடித்துக்கொண்டு இருக்கின்றது. வண்டியை நிறுத்தி அந்த குதிரைக்கு என்ன ஆனது என்று எல்லோரும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அந்த குதிரை தன் காலத்தின் கடைசி நொடிகளை கண்ணீரோடும் வலியோடும் செலவழித்துக் கொண்டு இருந்தது. அங்கே ஒரு வீரன் வருகிறான். அவன் அந்த குதிரையிடம் சென்று, அதை அன்பாக தடவிக்கொடுக்கின்றான், அடுத்த சில நொடிகளில், அந்த குதிரையை கொன்று விடுகிறான். உள்ளே இருந்த இளவரசி இதைப்பார்த்து, “He helped her ” என்கிறாள். பெரிதாக விவரம் அறியாத வயசு.
“என்னடா குதிரையை கொன்னுட்டான், helped ன்னு சொல்றா!” என்று எனக்கு அதிர்ச்சி.
இப்படித்தான் நாம் எல்லோரும் விவரம் அறியாதவர்களாக இருக்கின்றோம்.
இறைவனும் அந்த அதிகாரி மாதிரி அந்த வீரன் மாதிரி ரொம்ப கடுமையானவனா இருக்கான்! இல்லை!
இல்லை! ஒரு ஆன்மா, பலவீனமடைந்த ஒரு உடலில் இருந்து கொண்டு மேலும் சிரமம் கொள்ள வேண்டாம் என்று அவன் தீர்மானிக்கும் பொழுது, அவன் அந்த ஆன்மாவை வேறு உடலுக்கு கடத்துகிறான். இந்த விவரம் நமக்கு மட்டும் இல்லை அர்ஜூனுக்கும் கூட தெரியாமல் தான் இருந்தது. போரில் வந்து நின்று கொண்டு இவர்களை கொன்று விட்டு நான் எப்படி இவர்களை கொல்வேன் என்று புலம்பிக்கொண்டு இருக்க,கிருஷ்ணர் சொல்கிறார், “அறிஞர்கள் மாண்டவர்களுக்காக வருந்துவதில்லை”
இறைவன்,அந்த அதிகாரி, கோமளா மிஸ் இவர்கள் எல்லோரும் அவர்கள் வேலையை செய்ததற்காகவே பழிக்கப்பட்டு இருப்பார்கள். இறைவனை விட்டுத்தள்ளுங்கள் அவனுக்கு எல்லாம் ஒன்று தான்.
“ஏன் ஊர் வாய்ல இருக்கணும்?” எல்லார்கிட்டயும் ஒரு பழிச்சொல்லை வாங்கிக்கொண்டு இத்தனை கடுமையா இந்த வேலையை செய்வதற்கு, அநேகமானவர்களை போல சாதாரணமாக இருந்திருக்கலாமே!
சரி அதை விட்டுத்தள்ளுங்கள், கோமளா மிஸ் போன்றவர்கள் தங்கள் உடலை பேணிக்கொள்ள கொஞ்சம் சிரத்தை எடுத்து இருக்கலாம் தானே!
சொல்லியிருந்தாலும் கேட்டு இருக்க மாட்டார்கள்.
அப்பாவை மருத்துவரிடம் அழைத்து சென்ற பொழுதெல்லாம்; உங்களுக்கு ஒன்னும் இல்லை, சரியான நேரத்துக்கு தூங்கி சரியான நேரத்திற்கு சாப்பிடணும் என்றார்கள். எத்தனை சுலபமான வழி. அவர் கேட்கவில்லை, அவர் பார்த்துக்கொண்டு இருந்த பணியின் இயல்பு அப்படி. சரியான நேரத்துக்கு தூங்குவோ சாப்பிடவோ முடியாது.
உடலைப் பேணிக்கொள்வதை ஒரு பக்கம் வைத்துக்கொள்வோம். அந்த அதிகாரி எந்த தவறும் செய்யவில்லை. கோமளா மிஸ் ஒரு ஆசிரியரா கடுமை காட்டியதும் தவறு இல்லை. அவர்களை வில்லன்களாக பார்த்தவர்கள் மீது தவறு அவர்கள் தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
அவர்களும் அந்த அந்த நேரங்களில் அப்படித்தான் நடந்து கொள்வார்கள், அல்லது அப்படித்தான் எதிர்வினையாற்றுவார்கள்.
ன ஹி கஶ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்றுத் |
கார்யதே ஹ்யவஶஃ கர்ம ஸர்வஃ ப்ரக்றுதிஜைர்குணைஃ || பகவத் கீதை 3-5 |
அவர் அவர் பெற்ற குணங்களுக்கு தகுந்தாற் போல,
ஒவ்வொருவரும் சுதந்திரம் ஏதுமின்றி செயல்படுவதற்கு வற்புறுத்தப்படுகின்றனர்.
Everyone is forced to act helplessly according to the qualities they acquired, from the modes of material nature, therefore no one can refrain from doing something not even a moment.
இது எந்த மாதிரியானது என்றால், ஒரு பக்கம் ரஜினி போன்றவர்கள், இந்த அறிவியல் இத்தனை வளர்ந்தும், ஒரு சொட்டு இரத்ததை மனிதனால் உருவாக்க முடியாது, இதெல்லாம் தெரிந்தும் சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று நாத்தீர்களை நோக்கி பரிகாசமா ஒரு விமர்சனத்தை முன் வைத்தால்.
அந்த கருத்தின் ஆழத்தை புரிந்துகொள்ளாமல், அவர் ஏதோ அறிவியல் வளர்ச்சியை குறைபட்டுக் கொண்டது போல நினைத்துக்கொண்டு, அந்த அறிவியல் உதவியால் தான் சிறுநீரக மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டு நயன்தாரா வுடன் டூயட் பாடுகிறீர்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு மறுபக்கம் கிளர்ந்து எழுவார்கள்.
நான் சொல்லி இந்த புள்ளைங்க எல்லாம் படிச்சு என்ன பெருசா சாதிக்க போகிறது என்று கோமளா மிஸ் இருந்திருக்க மாட்டார். அந்த தருணத்தில் நம்ம நல்லதுக்கு தான் என்று மாணவர்களும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
வீட்டிற்கு சென்ற பின்னரும் கூட அந்த பயணி அந்த அதிகாரியை பழித்து இருப்பார்.
இவர்கள் எல்லார்க்குள்ளும் இறைவனே தான் இருக்கின்றான் இந்த கடுமைக்குள்ளும் இறைவனே தான் இருக்கின்றான்.
அஹமாத்மா கு³டா³கேஶ ஸர்வபூ⁴தாஶயஸ்தி²த: ।
அஹமாதி³ஶ்ச மத்⁴யம் ச பூ⁴தானாமன்த ஏவ ச ॥10- 2௦ ॥
அர்ஜுனா! எல்லா உயிர்களின் இதயங்களின் வீற்று இருக்கும் பரமாத்மா நானே!
ரஜினி மாதிரி நல்லது சொல்றவங்க; அறிவுரை சொல்றவங்க; பணியின் நிமித்தமாக கடுமை காட்டுகிறவர்கள் இவர்கள் எல்லாம் ஏன் தான் எல்லாத்தையும் மாற்ற போறோமா என்று உணராமல் தன்னை தானே பேணிக்கொள்வதில் மட்டும் பெரிதும் நேரத்தை செலவிடாமல் விடுகிறார்கள்.
இவர்கள் போன்றவர்களை பழிப்பவர்களுக்கு ஏன் உண்மை விளங்க மாட்டேன் என்கிறது. இது எல்லாவற்றிக்கும் காரணம்,
ன ஹி கஶ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்றுத் |
கார்யதே ஹ்யவஶஃ கர்ம ஸர்வஃ ப்ரக்றுதிஜைர்குணைஃ || பகவத் கீதை 3-5 |
அவர் அவர் பெற்ற குணங்களுக்கு தகுந்தாற் போல,
ஒவ்வொருவரும் சுதந்திரம் ஏதுமின்றி செயல்படுவதற்கு வற்புறுத்தப்படுகின்றனர்.
Everyone is forced to act helplessly according to the qualities they acquired, from the modes of material nature, therefore no one can refrain from doing something not even a moment.
நம் உடலை பேணிக்கொள்ள சிரத்தை எடுத்துக்கொள்ளாமல், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று நாம் ஒவ்வொரும் நம் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பதற்கும் அது தான் காரணம்.
இது இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்தும் கூட கீதை மாதிரி திருமந்திரம் மாதிரி வழிகாட்டிகளை இறைவன் நமக்கு ஏன் கொடுத்தான். எவனாவது ஒருத்தன் இரண்டு பேர், இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தேடி வருவான், அதுவும் அவனா வர மாட்டான் நான் வர வைப்பேன் அவனுக்கு இது உதவும் என்று வைத்து இருப்பாரோ!
அப்ப என்ன தான் பண்றது! செயல்களை நாம் தான் செய்து கொண்டு இருக்கின்றோம் என்கிற நினைப்பு இல்லாமல் இருந்தால் போதும், இங்கே நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. தர்மம் அதர்மம் இருக்கின்றது.தர்மம் என்பது நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒழுங்கு அல்லது இயற்கையாக இருக்கும் ஒழுங்கு; அதர்மம் என்பது ஒழுங்கின்மை.
இந்த இருவகை செயல்களில் செய்பவர்களில் நாம் எதை செய்பவர்களாக இருந்தாலும் அதை நாம் செய்யவில்லை என்கிற எண்ணம் இருந்தால் போதும்.It is just action of our nature we attained in this life. அதோடு தேன்வடிய பேசுவது தான் அன்பு என்று இல்லை. மாதா பிதா குரு தெய்வம் இவர்கள் காட்டும் கடுமையும் கூட அன்பு தான்.