ரு இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஒரு செய்திக்குறிப்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் என்பவர்,  “The Greatest of all time என்பது சனாதன கருதில்லையா? காலமெல்லாம் பெரியது இது தான் என்றால் காலம் மாறினாலும் இது மாறாது  என்று தானே அர்த்தம்; என்றும் மாறாதது என்பது தானே சனாதனம் என்ற சொல்லின் பொருள்,இதைத்தெரிந்து தான் விஜய் படத்துக்கு தலைப்பு வைத்தார்களா?” என்று கேள்வியெழுப்பியிருந்ததை பார்க்க நேரிட்டது.

சனாதனம் என்றால் என்ன? சமஸ்கிருத அகராதியில் தேடினோம் , அது ஒரே மாதிரியான  பல அர்த்தங்களை காட்டியது, பழமையானது, நித்தியமானது, அழிவில்லாதது ,முடிவில்லாதது. மொத்தத்தில் என்றும் மாறாதது என்று பொருள் கொள்ளலாம் தான். தர்மம், என்றால் என்ன என்று பார்த்தால், இயல்பு(nature), ஒழுங்கு,பண்பு,முறை. விதி என்றும் வைத்துக்கொள்ளலாம்.

1600களில் நியூட்டன் நமக்கு மூன்று விதிகளை தந்தார்,இன்றளவும் அறிவியலின் அடிப்படையாக மாறாததாக அந்த மூன்று விதிகள் இருக்கிறது. நியூட்டன் கண்டறிந்தாக அறிவியல் உலகிற்கு சொன்னதனால், அது சனாதன தர்மம் என்று அழைக்கப்படாமல் நியூட்டனின் விதிகள் என்று அழைக்கப்பட்டது.  

எல்லா விசைக்கும் சமமான எதிர்விசை இருக்கும் என்கிற எல்லோருக்கும் எப்போதும் நினைவில் இருக்கும் நியூட்டனின் மூன்றாம் விதியை நியூட்டன் தான் முதலில் சொன்னாரா? நியூட்டன் அதை கணித மொழியில், இயற்பியல் மொழியில் சொன்னார். ஆதி காலம் தொட்டு பாரத பண்பாட்டில், அதையே தான் ஊழ் என்றும் வினைப்பயன் என்கிறார்கள் என்று சொல்லலாம் தானே.

இப்படியாக வைரமுத்து அவர்கள், எந்திரன் திரைப்படத்தில் எழுதிய  கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் அறிவில் பிறந்தது மரிப்பதில்லைபாடல் வரிகள் போல் மெய்யறிவு (knowledge) என்பது மாறாததாக அழியாததாக தான் இருக்கிறது.

மற்றொரு உதாரணம், 1800களில் ராபர்ட் என்கிறவர் ஆற்றல் பற்றிய தத்துவத்தை அல்லது விதியை அறிவியல் உலகிற்கு எடுத்துரைக்கிறார். ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாதுஆற்றல்  ஒரு வகையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படுகிறது. அப்படியென்றால், இங்கே எப்போதும் இருக்கின்ற ஆற்றல் எப்போதும் அப்படியே தான் இருக்கின்றது. ஆற்றல் பற்றிய இந்த தத்துவம் இந்த அறிவு இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மாறப்போவதில்லை.

இந்த விஞ்ஞானிகள் எல்லோரும் இயற்கையில் என்ன இருக்கிறதோ அதைத்தான் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இயற்கையின் இந்த  விதிகலானது  இப்படியே தான் இருக்க போகிறது. அந்த விதிகள் என்றும் மாறப்போவதில்லை.இந்த விதிகளை சனாதன விதிகள் என்றோ அல்லது சனாதன தர்மம் என்றோ சொல்வதில் ஒரு பிழையும் இல்லை. பகுத்தறிவாளர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்களும் கூட இதை ஒரு வகையில் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்வார், அவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளாதது இந்த விதிகள் பாரத தேசத்தில் தோன்றிய முன்னோர்களால் முன்னமே எடுத்துரைக்கப்பட்டது தான் என்பது தான் அது.

எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார், கம்ப ராமாயணம் பற்றியெல்லாம் பேசுவார், அப்படி ஒரு நாள் அவர் பேசிக்கொண்டிருந்த பொழுதில், “law of conservation of energy” பற்றி திருமந்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றார்.தவறாகவும் பொய்யாகவும்  கணக்கிட்டாலும்  ராபர்ட்க்கு இரண்டு தசாப்பதங்களேனும் முந்தைய திருமூலர்  law of conservation of energy பற்றி பேசியிருக்கின்றாரா? என்று எனக்கு பெரும் ஆச்சரியம். என்னுடைய பாடப் புத்தகத்தில், ராபர்ட் பற்றி இருந்தது,law of conservation of energy பற்றி இருந்தது திருமூலர் பற்றியும் திருமந்திரம் பற்றியும் ஒன்றும் இல்லை. அன்றிலிருந்து பெரியப்பா சொன்னது நிஜமா என்று தெரிந்து கொள்வதற்கேனும் திருமந்திரம் படித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். திருமந்திரம் படிக்க ஆரம்பித்து சில நூறு பாடல்கள் வாசித்தும்  குறிப்பிட்ட அந்த பாடல், அந்த மந்திரம், அந்த விதி என் கண்களில் சிக்கவில்லை.தேடியது தேடாமல் கிடைத்தது போல், மணிரத்தினம் என்கிற நண்பர் ஒருவர், ஒருநாள் அவரின் காலை வணக்கத்தோடு எனக்கு அந்த பாடலை அனுப்பி வைத்தார்.பெரியப்பா சொன்னது நிஜம் தான்..

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்ற தென்றிட்டு

அறைகின்றன மறை ஈறுகள் தாமே.

இரண்டாயிரத்தி முந்நூற்றியம்பதியெட்டாவது (2358) பாடல். இந்த பாடலை சுட்டி தான் பெரியப்பா அப்படி சொல்லியிருப்பாரா என்கிற ஒரு சந்தேகமும் எனக்கு எழவில்லை.காரணம் முன்னமே பகவத் கீதையில் ஆன்மா பற்றி படித்தது நினைவிற்கு வந்தது.

 பகவத் கீதையில், வைரமுத்து சொன்னதை சொல்லித் தான் அர்ஜுனனுக்கு உபதேசத்தை ஆரம்பிக்கின்றார் கிருஷ்ணர், இந்த உடலுக்கு தான் அழிவும் தோற்றமும், ஆன்மாவை யாரும் துன்புறுத்த முடியாது,அது அழிவில்லாதது என்கிறார். அதாவது, கருவில் தோன்றும் உடலுக்குத் தான் எல்லா நன்மை தீமைகளும் இந்த உடம்பில் உயிராக இருக்கும் ஆற்றலுக்கு ஆன்மாவிற்கு எந்த துன்பங்களும் இல்லை அது அழிவுதும் இல்லை தோன்றுவதும் இல்லை என்கிறார். எல்லா ஆன்மாக்களும் பரமாத்மாவில் இருந்து தோன்றுகிறது மீண்டும்  பரமாத்மாவை சேர்க்கிறது என்கிறார். இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற பெரும் ஆற்றல் அப்படியே தான் இருக்கிறது. உடல் இருக்கிறது, அது இயங்கும் பொழுது ஒரு ஆற்றல் அதில் இருக்கிறது, இயக்கம் நின்ற பின் அதிலிருக்கும் வெறும் நிறை (mass) எரியூட்டப் படும் பொழுது ஒளி மற்றும் வெப்பம் ஆற்றலாக மாறி இதே பிரபஞ்சத்தில் கலந்து விடுகிறது அந்த ஆற்றல் அழிந்துபோவதில்லை. எரியூட்டப்படாத நிறை ஏதோ ஓர் ஆற்றலால் நுகர்ப்படுகிறது. இப்படி ஒரு வகையில் ஆன்மாவானது, அதாவது ஆற்றலானது, அழியாமல், ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலிற்கு அதாவது ஒரு நிறையில் (mass) இருந்து மற்றொரு நிறைக்கு (mass) வேறு வேறு நிலைகளில் கடத்தப்படுகிறது. இது காலத்திற்கும் மாறாத எல்லா காலத்திற்கும் பொருந்துகிற விதி தானே?!

இயற்கையில் என்ன இருக்கிறதோ அது அப்படியே தான் இருக்கிறது. அது தோன்றவும் இல்லை அழியவும் இல்லை.

கீதையில் சொன்னதும், திருமந்திரத்தின் அந்த பாடலும் எப்படி ஒன்றாகும்? அறிவை சித்தம் என்றும் சொல்வதுண்டு, சித்தம் என்பதை ஆன்மா என்றும் சொல்லலாம். ஆன்மீகம் இறைவனை  ‘பேரறிவு’பரமாத்மா’ என்றும்  நம்மை, நம்முடைய அறிவை  சிற்றறிவுஎன்றும் நம்முடைய சித்தத்தைஆன்மாஎன்றும் குறிக்கிறது. இப்பொழுது அந்த பாடலை மீண்டும் படியுங்கள்

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்ற தென்றிட்டு

அறைகின்றன மறை ஈறுகள் தாமே.

 

விளக்கம் :அறிவுக்கு அழிவே இல்லை. அறிவுக்கென்று ஒரு தோற்றமும் இல்லை. அறிவுக்கு அறிவுதான் மூலமே தவிர வேறு எதுவுமில்லை அறிவை அறிவால்தான் அறிய இயலும் என்று மறைநூல்கள் எல்லாம் அறிவுறுத்துகின்றன.

கீதையும் சைவமும் இறைவனுக்கு அதாவதுபரசிவன்’ என்று குறிக்கப்படும் பரமாத்மாவிற்கு  தோற்றமும் இல்லை; அழிவில்லை; இறைவனை இறைவனாலேயே தான் அறிய முடியும் என்கிறது.  “Knowing self is knowing god” இதையும் திருமந்திரம் தான் சொல்கிறது. நாம் யார்? வெவ்வேறு படிநிலைகளை கடந்து கொண்டிருக்கின்ற வெவ்வேறு உடல்கள் பெற்றுக்கொண்டிருக்கின்ற ஆற்றல்கள்ஆன்மாக்கள்.அதை அறிவதே இறைவனை அறிவதில் முதல் நிலை.

கீதையில், இவர்களை நான் எப்படி கொல்வது என்று தன்னிலை தவறி தவிக்கும் அர்ஜுனனிடம், சாங்கிய யோகத்தின்பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில், நானோ நீயோ இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவும் இல்லை.நம்மில் எவரும் இல்லாமல் இருக்கப் போவதுமில்லை என்கிறார். ஆன்மாஆற்றல் அழிவதில்லை அது வேறு ஒரு நிறையை(mass) வேறு ஒரு உடலை அடைகிறது, இதற்கு ஏன் கலக்கம் அடைகிறாய் என்கிறார்.

  நானோ நீயோ இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவும் இல்லை; நம்மில் எவரும் இல்லாமல் இருக்கப் போவதுமில்லைஇந்த வாசகத்தை முதன்முதலில் படித்த பொழுது இருந்த பிரமிப்பு இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.  ஒரு DNA வில் இருந்து இன்னொரு DNA உருவாகிறது, ஒரு உடலில் இருந்து தான் மற்றொரு உடல் உருவாகிறது, உங்கள் பாட்டனில் இருந்து உங்கள் தாத்தா வந்தார், அவரில் இருந்து உங்கள் தந்தை வந்தார், அவரில் இருந்து நீங்கள் வந்தீர்கள்.  எத்தனையோ கோடி வருடங்களுக்கு முன்னர் தோன்றிய நுன்னுயிரிலிருந்து இருந்து இன்று மனிதனாக இருக்கும் வரையில் ஒன்றே பலவாகவும் வெவ்வேறாகவும் உருமாறியிருக்கின்றது. பில்லியன் ஆண்டுகளாக  நாம் இங்கு தான் இருக்கின்றோம், கிருஷ்ணர் மாணிக்கவாசகர் போன்ற ஞானிகள் அதை உணர்ந்து கொண்டிருந்தார்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

புல்லாகி புழுவாகி பரிணாம வளர்ச்சிபெற்று இத்தனை கோடி வருடங்களில் நாம் பெற்ற அத்தனை அறிவும் நம் DNA வின் ஏதோ ஒரு கூறுகளில் ஒளிந்து இருக்கலாம்.

யாரும் இங்கே அழிவதில்லை, ஒரு ஆன்மா வேறு ஒரு உடலை அடைகிறது. நாம் எல்லோரும் எப்போதும் இங்கே இருந்து கொண்டு தான் இருக்கின்றோம் என்றெல்லாம் கண்ணனிடம் பாடம் கேட்ட பின், நான்காவது அத்தியாமான ஞான கர்ம சந்யாச யோகத்தை எடுத்துரைக்கும் கண்ணன், இந்த யோகத்தை நான் விஸ்வானுக்கு சொன்னேன் அவன் மனுவுக்கு சொன்னான், மனு இஷ்வாகுவிற்கு சொன்னான் இப்படியே இந்த ஞானம் சந்ததிகள் வழியே கடத்தப்பட்டது என்றதும். அர்ஜுனன் நம்மை போலவே ஒரு கேள்வியை கேட்கிறான், “விஸ்வானுக்கு பின்னர் தோன்றிய நீங்கள் எப்படி விஸ்வானுக்கு உபதேசித்திருக்க முடியும்?”.

அதற்கு கிருஷ்ணர் சொல்கிறார், நாம் பல பிறவிகளை கடந்து வந்துள்ளோம், என்னால் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள முடியும் உன்னால் முடியாது என்று. இந்த நினைவைத் தான் மாணிக்கவாசகரும் எழுதி வைத்தார், “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்என்று.

நாம் எங்கு ஆரம்பித்து, எதையெல்லாம் கடந்து வந்தோம் என்கிற ஒரு யுக நினைவுகள் நம்முள்ளேயே தான் இருக்கிறது, அதை அறிய திருமந்திரத்தில், திருமூலர் சொன்னது போல் தன்னை அறிய வேண்டும், தன்னை எப்படி அறிவது?

அறிவால் தான் அறிவை அறிய இயலும்.

 

இறைவனின் துணைகொண்டு தான் இறைவனை அடைய முடிய, ஆன்மா பரமாத்மாவை சேர பரமாத்மா தான் வழி செய்ய வேண்டும். energy transformation க்கு ஒரு energy தான் தேவைப்படுது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

 

இத்தனை பெரிய ஞானம் எக்காலத்திற்கும் பொருந்துகின்ற ஒன்று தானே? எப்போதும் மாறாதது தானே! அதன் காரணமாகவே தான் இந்த ஞானங்களின் தொகுப்பு சனாதன தர்மம் எனப்பட்டது.

 

ஒரு வேளை  இதெல்லாம் தெரிந்த காரணத்தால் தான் ரவிக்குமார், அந்த கேள்வியெழுப்பியிருப்பாரோ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *