முதல் முறையாக ரஜினி படம் ஒன்றை பார்த்துவிட்டு வந்து அந்த திரைப்படத்தின் கதை விமர்சனத்தை எங்கு இருந்து தொடங்குவது என்று தெரியாமல் இருக்கிறேன். அத்தனை சிக்கலான கதை வடிவத்தை கொண்டிருக்கிறது இந்த திரைப்படம்.

கதை என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டுமே! கதை, நல்ல கதை என்று தெரிந்து கொண்டோ; இது நல்ல திரைப்படம் என்று உறுதிப்படுத்திக்கொண்டோ, நாம் யாரும் ரஜினி படத்துக்கு செல்வதில்லை.இன்றும் வளர்ந்த, வயது முதிர்ந்த எல்லா குழந்தைகளும் SUPER STAR-RAJNI என்கிற டைட்டில் கார்டை தவறவிட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

தேவாவின் இசையில் அந்த டைட்டில் கார்டு வந்து நம் மனம் முழுதையும் ஆட்கொண்டு பின் மறைந்து,
வெள்ளித்திரையை இருட்டாக்கி அந்த இருட்டில் ஒளிர் விடும் ஒரு பெயராய் ரஜினிகாந்த் என்கிற பெயர் வந்து மறைக்கிற வரைக்கும் நாம் யாரும் தன்னிலையில் இருப்பதில்லை. வெறும் பேரு! அதுவே நம்மை அப்படி கட்டியிழுத்து கட்டிப்போடுகிறது அதற்காகவே தான் இன்றும் ரஜினி படத்திற்கு அத்தனை பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த வரவேற்பு எத்தனை பெரிய வெற்றியாக மாறுகிறது என்பது திரைப்படத்தின் எழுத்தாக்கத்தையும் திரையாக்கத்தையும் சார்ந்து இருக்கிறது.

ஒரு கதை அல்லது ஒரு திரைப்படம் உருவாகும் பொழுது அதில் எல்லாமே சரியாக அமைந்துவிடும் என்பதை அதை எழுதுகிறவராலும் கூட சொல்ல முடியாது. இந்த திரைப்படத்தை முதல் முறை கண்ட பொழுது அப்படியான எண்ணமே தான் எனக்கும் எழுந்தது.வெறும் ஒரு பெரும்  கதை வரைவை(big story outline) மட்டும் வைத்துக்கொண்டு லோகேஷ் படம் எடுக்க துணித்துவிட்டாரோ என்று. ஆனால், சில பிசகுகளை தவிர்த்து முதல் முறை பார்த்த அனுபவத்திலும் இந்த கதை நம்மை கட்டிவைத்திருந்தது தான். ஒரு இரண்டு மணி நேர கதை ஓடியிருக்கும்; என்னருகே அமர்ந்திருந்த என்னுடைய நண்பர், ஆனா, கதை ஒரு மாதிரி போய்ட்டு இருக்கே என்று வியப்பாக சொன்னார். அந்த வியப்பு எனக்கும் இருந்தாலும்.அந்த இரண்டு மணி நேரத்தை கடந்திருந்த என்னுள் சிறு சிறு ஏமாற்றங்களும் இருந்தது.

ரஜினிகாந்த் என்னும் மந்திர பெயர் திரையில் தோன்றி மறைந்து நம் மயக்க நிலை தெளிந்ததும், காளி வெங்கட் நமக்கு ஒரு கதை சொல்லத்  தொடங்குகிறார். காளி வெங்கட்டின் தேர்ந்த நடிப்பும் அவர் சொல்லும் கதையும் நம்மை முதல் அந்த சில நிமிடங்களிலேயே கதையின் பிரம்மாண்டத்துக்குள் அழைத்துச் சென்று காளி வெங்கட் உடன் நம்மை பயணிக்கச் செய்கிறது. நானும் என் மாமாவும் திரைப்படங்களைப் பற்றி பேசிக்கொள்ளும் பொழுது காளி வெங்கட் அவர்களின் நடிப்பைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். ஏன் யாரும் இசை வெளியீட்டு விழாவில் அவரை குறிப்பிடவில்லை, அல்லது யாரும் குறிப்பிட்டு நான் கவனிக்கவில்லையா?

 புதிதாக நீங்கள் ஒரு வீட்டை காணச் செல்லுகிறீர்கள், உங்களை ஒருவர் அழைத்துச் சென்று ஒவ்வொரு அறை கதவுகளையும் திறந்து காண்பிக்கிறார்.  நீங்கள் அவரை பின் தொடர்ந்த படி வீட்டோடு ஒன்றி ஒரு கற்பனைக்கு செல்லுவீர்கள். அப்படியாக கதைக்குள் உங்களை அழைத்துச்  செல்லுகிறார் காளி வெங்கட்.ரஜினி இன்னும் வரவில்லையே என்பதையெல்லாம் மறந்து நாம் காளி வெங்கட் அருகில் இருந்தபடி கதையோடு கதையாக பயணித்துக்கொண்டிருப்போம். கதை அப்படியே நகர்ந்துகொண்டு இருந்திருக்க வேண்டும். அங்கே படத்தின் பெயரை போட்டார்கள். அது பார்வையாளர்களின் கவனத்தை சிதறடித்து கதையில் இருந்து நம்மை வெளியில் கொண்டு வருகிறது. இதே தவறை தானடா வீர தீர சூரன் படத்திலும் செய்தீர்கள் லகர பாண்டிகளா  என்று நினைத்துக்கொண்டேன்.

இரண்டாவது முறை திரைப்படத்தை கண்ட பொழுதுஅதுவும் சரியே தான் என்று தோன்றியது.  காரணம், அழுத்தமான கட்சிகளால் நகர்ந்து கொண்டிருக்கும் கதை, திரைப்படத் தலைப்பு வந்து மறைந்து பின்,மொத்தமாக மாறி  இலகுவான காட்சிகளால் மீண்டும் தொடங்குகிறது. இப்படி தொடங்கும் காட்சிகளில் இருந்து தான் காளி வெங்கட் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் கேள்விகளுக்கு பதில்களாக இந்த கதை விரியும் என்று பார்த்தால்.ரஜினியை காட்டுவதற்கு தான் இந்த மாற்றம். ஆனால், அதற்காக மட்டும் இல்லை.அதுவரை நடந்த கதையில் வில்லன் பக்கம் என்ன நடக்கிறது என்று சொன்னார்கள். இனி கதாநாயகன் எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என்று சொல்லவேண்டும்,  அதற்காகவும் தான் அந்த காட்சிகள் என்று கதையில் தேவையில்லாத ஆணி அதிகம் இருந்ததாக தோன்றவில்லை.

ரஜினியின் அறிமுக காட்சிக்கு முன்பு வரை, யாரேனும் ஒருவருக்கேனும் ஒருவேளை ரஜினி போலீஸ் அதிகாரியாக இருப்பாரோ என்று தோன்றியிருக்க கூடும்.

திணிக்கப்பட்டதும் போலவும் இருக்க கூடாது, ஆனால் ரஜினியின் முகத்தை திரையில் காண்பிக்கும் அந்த முதல் நொடி சாதாரணமாகவும் இருக்க கூடாது.என்ன செய்யலாம்? ஒரு வருடம் கதை எழுதியதில், கால் வருடம் இதை தான் லோகேஷ் யோசித்திருந்திருப்பார். 

முதல் முறை பார்த்த பொழுது ரஜினியின் அறிமுக காட்சிகளில் வரும் உரையாடல்கள் எல்லாம் இது அவசியமா என்கிற வகையில் இருந்தது. ஆனால், இரண்டாவது முறை படம் பார்த்த பொழுது அதற்கும் காரணம் வைத்திருக்கிறார் லோகேஷ் என்று புரிந்தது.சண்டை வேண்டாம், ஓடி வர வேண்டாம், நடந்து வர வேண்டாம், ரஜினியின் அறிமுக காட்சிக்கு அவரின் கண்களே போதுமானதாக இருக்கிறது. ஆனால், கத்தியை கையில் வைத்தபடி வியர்வை துடைப்பதாக மட்டும் காட்டியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. ஆனால், அந்த அறிமுக காட்சியில் நடந்த எல்லாம் அநேகம் பேர் ரசித்திருக்கவே செய்வார்கள்.

அறிமுக காட்சி முடிந்து கொண்டாட்டமான அறிமுக பாடல், எல்லாமே பாடலில் நன்றாகவே தான் இருந்தது, பாடலை இடைநிறுத்தி மீண்டும் ஆரம்பிக்கும் முன்பு வரை.முன்னிசை தொடங்கி ரஜினியை அந்த டெனிம் சட்டையில் பார்த்து பூரித்து அவர் நடனஅசைவுகளை கண்டு,எவன் பாடுன எனக்கென்ன!” என்று நாம் மெய்மறந்து இருப்போம்.

என்ன நீ மெய்மறந்து கிடக்க என்று அப்போது பாடலை நிறுத்துவார்கள்.பாடலை நிறுத்தி மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது அனிருத் பாடுகிறார் என்று நமக்கு அப்பட்டமாக தெரியும் படி செய்துவிடுவார்கள்.அதோடு அதன் பின் தொடங்குகிற வரிகள், “இப்போதெல்லாம் கதைக்கும் சூழலுக்கும் காட்சிக்கும் சம்மந்தம் இல்லாம என்னத்தையாவது எழுதி வைத்துவிடுகிறீர்களடா” என்று நினைக்க வைத்தது. இனி என்னத்தை  நாம் ரசித்தோம், என்று தலைவர் வாயசைக்கும் பொழுதெல்லாம் அந்த நரம்பனே தான் நினைவிற்கு வந்தார். (நகைச்சுவையையின் பொருட்டு உள் நோக்கம் இல்லாமல் என் தாத்தா என்னை எப்படி அழைப்பாரோ அந்த பெயர் இங்கு அனிருத்துக்கு சுட்டப்பட்டது, நிச்சயமாக body shaming இல்லை என்பதை சித்ரா அரவிந்தன்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்).

இந்த ஸ்விக்கி ஸ்மோடோ நிறுவனங்களில், உணவை கொண்டு சேர்க்கும் பணி புரியும் சகோதரர்களுக்கு இந்த விமர்சன கட்டுரை மூலம் நான் வைக்கும் அன்பான வேண்டுகோள் யாதென்றால், அனிருத் வீட்டில் இருந்தோ ஒலிப்பதிவு நிலையத்தில் இருந்தோ உங்களுக்கு ஆர்டர் வந்தால், அதை கொண்டு சேர்க்கும் பொழுது, மனோ இன்னும் உயிருடன் தான் இருக்கிறார், நேற்று கூட விஜய் டிவியில் வந்தார் என்கிற செய்தியையும் கொண்டு சேர்த்துவிடுங்கள். இல்லை என்றால், நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடலுக்கும் கார்த்திக்கும் தொடர்பில்லாமல் இளையராஜா பாடிக்கொண்டிருந்தது போல அனிருத்  குரலுக்கு தலைவர் வாயசைக்க வேண்டிய கொடுமையை நீங்களும் மீண்டும் காண நேரிடும். இளையராஜாவையே கூட பாட அழைத்திருக்கலாம். ரஜினியின் கண்கள் மட்டும் இல்லை, அவரின் குரலிலும் ஒரு ஈர்ப்பு, ஒரு கணம் இருக்கும் அதற்கு பொருந்தி போகிற குரல்களாக எஸ்.பி.பி, மனோ, மலேசியா வாசுதேவன், ஒரு வகையில் இளையராஜா என்று இவர்களின் குரல்களை தவிர யார் ஒருவரின் குரலும் ரஜினியின் முக ஆதர்சதுக்கு நியாயம் செய்ய இதுவரை முடிந்ததில்லை, சங்கர் மகாதேவன் குரல் உட்பட.

ஒரு கதைக்கு மிக முக்கியமானது வசனங்கள், கதைக்குள் ஒரு கதாபாத்திரத்தின் பின்கதையை சிறு சிறு வசனங்களால் கூட சொல்லிவிட முடியும்.இந்த கதையில் வசனங்கள் கொஞ்சம் பலவீனப்பட்டு இருக்கிறதோ என்று தோன்றியது. ஏன் ரஜினி இப்போது இதில் எல்லாம் தவுறுகிறார். ரஜினி எங்கே தவறுகிறார்?! பாட்ஷா, படையப்பா அண்ணாமலை அருணாச்சலம் போன்ற திரையாக்கத்தின் பொழுது, கதை விவாதங்களில் ரஜினியும் இருந்தார். அந்த கதைகளும் வசனங்களும் முழுமை பெற அதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டதுகிரேசி மோகன், பாலகுமாரன்,ரவிக்குமார், பாலச்சந்தர் போன்ற பல எழுத்தாளர்கள் அந்தந்த இயக்குனர் மற்றும் ரஜினியோடு கதை பற்றி விவாதித்து கதை வசனங்கள் உருவானது,இதில் படையப்பா தவிர்த்து மற்ற படங்கள், சில படங்களை தொட்டு அதிலிருந்து பல மாற்றங்களுக்கு உட்பட்டு கதையில் இருந்து எழுத்தில் ஒரு திரைப்படமாகி பின் திரைக்கு வந்தது. இந்த  செயல் முறை இப்போதுள்ள பல பெரிய ஹீரோக்களின் படங்களில் நடப்பதில்லை. இந்த படத்தில் அது தான் தவறுகிறதோ என்று முதல் முறை பார்த்த பொழுது நினைத்தேன்.

இப்படியான எண்ணங்களோடு எனக்கு ஜெயிலர் படம் நினைவுக்கு வந்தது, அந்த படத்தில் என்ன கதை இருக்கிறது என்று ரமேஷ் கண்ணா போன்ற சிலர் குறைப்பட்டு கொண்டதும் நினைவிற்கு வந்தது. என்னை கேட்டால் ஜெயிலர் நன்றாக எழுதப்பட்ட ஒரு வணிகப் படம், அதிலும் கதை இருந்தது, வளவள வென்று பெரிய கதையாக இல்லாமல் ஒரு சின்ன கதையை வைத்துக்கொண்டு அதற்குள் ரஜினியை வைத்து என்ன மாயங்கள் செய்யலாம் அதையும் எல்லோரும் ஏற்று ரசிக்கும்படி எப்படி செய்யவது என்கிற சரியான எழுத்தாக்கம் மற்றும் திட்டமிடலோடு நெல்சன் செய்த படம் அது.

இத்தனை எண்ணங்கள் என் மனதில் நிழலாடுவதற்கு  கூலி படத்தின் சில காட்சிகளும் ஜெயிலர் மாதிரியான படம் என் மனதிற்குள் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புகளும் தான் காரணம் என்பது இரண்டாவது முறை படம் பார்க்கும் பொழுது புரிந்தது.

அண்ணாத்தை திரைப்படத்தை கண்டுவிட்டு வெளியில் வந்த லோகேஷிடம் படம் எப்படியிருந்தது என்று கேட்டதற்கு எனக்கு இன்டெர்வல் பிளாக்  பிடித்திருந்தது என்று சொன்னார்.அண்ணாத்தை படத்தில் பல குறைகள் இருந்தாலும் அந்த இடைவெளிக்கு முன்பான காட்சி வேறு ஒரு நிலையில் இருக்கும். ஆனால், அந்த காட்சி அந்த கதைக்கு பொருத்தமானது, ஒரு கிராமத்தான் தன் தங்கையை குலசாமி மாதிரி இருந்து காக்கின்றான் என்பதை சொல்லும்படியாக வைக்கப்பட்ட பிரேம் அது.”அதை ஏன் சார் நீ இங்க கொண்டு வந்த? ரஜினி ஒருவனை வெட்டி சாய்க்கிறார் அதை எதிர்பார்க்காத நாகார்ஜூனா துப்பாக்கியை கையில் எடுக்கிறார். இதோடு ஆளுக்கொரு பக்கமாக நிறுத்தி இடைவெளி விட்டு இருக்கலாம், சரி அதோடு ரஜினி வெளியில் வந்தார் என்று  திரை மேல் பாதி ஒருவரையும் கீழ் பாதி ஒருவரையும் காட்டி இருக்கலாம், இடையில் இருவரையும் ஏன் பேசிக்கொள்ள வைத்தீர்கள் என்றெல்லாம் மனம் புலம்பியது“.மாநகரம் கைதி போன்ற படங்களில் இப்படியான பிரேம்கள் வைக்க வேண்டிய நிர்பந்தம் லோகேஷிற்கு இருந்திருக்கவில்லை.

இரண்டாவது முறை படம் பார்த்த பொழுது, அந்த இடத்தில் அவர்கள் பேசிக்கொள்ளவில்லையென்றால், இடைவெளிக்கு பின் மீண்டும் அதே இடத்தில் இருந்த காட்சியை தொடர்ந்து இருக்க வேண்டும். அது சரியாக இருந்திருக்காது என்று புரிந்தது. 

இப்படி படத்தை பற்றி யாரும் குறைபட்டு கொள்ளும் அத்தனை விஷயங்களுக்கு பின்னாலும் ஏதோ ஒரு காரணத்தை லோகேஷ் வைத்திருந்தார். பாட்ஷா படத்தை இந்த படத்தோடு ஒப்பீடு செய்வதென்பது சரியாக இருக்காது. வணிக சினிமா என்று அடையாளப்படுத்தப்படும் படங்களில் பாட்ஷா ஒரு ரகம் என்றால், கூலி ஒரு மாதிரியான ரகம். ஆனால், இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இன்றும் அந்த படத்தில்  ரஜினி ரகுவரன் மகளைத் தான் காதலித்தார் என்று சிலர் நம்பிக்கொண்டிருப்பதை போல, கூலி படத்தை ஒரு முறை மட்டும் பார்ப்பவர்களுக்கு இந்த படம் பல தவறான புரிதல்களை கொடுக்கிறது. காரணம், யூகிக்கும் படியாக கதை இருக்க கூடாது என்று, ஓவ்வொரு கதாபாத்திரத்தை பற்றியும் ஒரு தவறான யூகத்தை பார்வையாளருக்கு தெரியாமல் அவர்கள் மீது திணிக்கிறார் லோகேஷ்.  முதலில் ஒரு அறையை காட்டி அதில் ரஜினி இருக்க கூடும் என்று நம்மை நினைக்க வைத்து, கடைசியில் ரஜினி வேறு ஒரு அறையில் இருப்பதாக காட்டுகிறார். உபேந்திரா அதே மேன்ஷனில் தான் இருக்கிறார் என்பதை அநேக பேர் கவனிக்க தவறுகிற வகையில் ஆரம்பத்தில் காட்டி பின் கடைசியாக தான் அவரை காட்டுகிறார்.

ரஜினி ஒரு முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்னமே அது பற்றிய ஒரு குறிப்பை சோபின் ஒருவரிடம் பேசுவதன் மூலம் நமக்கு தருகிறார். ஆனாலும் நமக்கு அது முதலில் தெரியாமல் போகிறது.

மாநகரம் படம் போல் இந்த படத்திலும் , ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின் கதை வைத்து, எல்லா கதைகளும் ஒரு கதைக்குள் தான் இருக்கிறது என்று கொண்டு வருகிறார். இரண்டாவது முறை பார்த்த பொழுது,”brilliant writing டாஎன்று தோன்றியது.வீம்பாக நம்மை ஒன்றை நினைக்க வைத்து, அது இல்லை என்று சொல்லி கதையை அடுத்தடுத்து நகர்த்திக்கொண்டு போகிறார்.

இது 95 சதவீதம் லோகேஷ் படம் தான், மீதி 5 சதவீதம் இதில் ரஜினியை அவர் பொருத்தி ரசிகர்களை திருப்திப்படுத்த என்ன செய்வது என்று கொஞ்சமாய் சிரமப்பட்டது தான். லோகேஷின் இப்படியான கதைகளுக்கு நெல்சன் வைப்பது போன்ற பிரேம்கள் தேவைப்படுவதில்லை. அதோடு அதெல்லாம் நெல்சனின் தனித்துவம்,ஆனால், லோகேஷ் அதை ரஜினிக்காக வைக்க வேண்டுமே என்று சிரமப்பட்டு இருக்கிறார். காட்சிகளுக்கு தேவையான பிரேம்களுக்கு இடையில் வெகு சில இடங்களில் தலைவரை இப்படி காட்ட வேண்டும் என்று காட்டுகிறார், அதில் அந்த மஞ்சள் வெயில் பிரேம் சில நொடிகளில் கடந்து மறைந்தது.  இப்படியாக இந்த 5 சதவீதம் தான் நம்மில் பலரை ஏமாற்றுகிறது. “என்ன ரஜினி எல்லார் சொல்றதையும் கேக்குறார்! ஒன்னும் செய்யமுடியாம திணறுறார்!” என்று இந்த திரைப்படம் இப்படியெல்லாம் தான் நம்மை ஏமாற்றுகிறது. ஆனால், இந்த கதை இப்படி தான் இருக்கும், ரஜினியும் இதில் ஒரு கதாபாத்திரம். அடிதடி தண்ணி என்று சுற்றித்திரிந்த முரட்டு கூலி.He can fight but he is not a magic man.

இது எப்படியெல்லாம் ஒரு கமல்ஹாசன் ரசிகர் எடுத்த படம் என்றால், ரஜினி ஒரு சண்டையை முடித்துவிட்டு ஒரு இடத்துக்கு செல்கிறார், அவர் சட்டையில் வியர்வையின் ஈரம் அப்படியே இருக்கிறது அந்தளவு கமல் ரசிகரின் படம்.இந்தளவு தர்க்கம் பார்த்து ரஜினி படத்திற்கு  கதையும் திரைக்கதையும் அமைத்தது தான் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது.ரஜினி படத்தின் கதை என்பது கதையின் ஓட்டத்தில் தர்க்கங்களை மறந்து நம்மை கதையோடு பயணிக்க வைக்கும் கதைகள் அப்படியான கதைகள் ஒரு ரகம். அது இப்போது யாருக்கும் கை சரியாக வரவில்லை அவ்வப்போது வரும் ஒரு சில கதைகள் தவிர.இந்த கதையின் நடையில் பல விஷயங்கள் நமக்கு முதல் முறையில் புலப்படாமல் இருக்கிறது. அல்லது ரகுவரன் மகளை தான் பாட்ஷா மாணிக்கம் காதலித்தார் என்று நினைத்துக்கொள்வது போல நாமாக சில விஷயங்களை தவறாக புரிந்து கொள்கிறோம்.

மாநகரம் திரைப்படமும் கூட ஒரு வேகமான திரைக்கதை கொண்ட திரைப்படம் கிடையாது. ஆனாலும்,அந்த கதை நம்மை கட்டிவைத்திருந்தது. அதே தான் இந்த படம் ஆனால் இது ரஜினி படம்.ரஜினி படம் எப்படி இப்படி இருக்கலாம் என்பது தான் குறையே! இதே கதையை லோகேஷ் இயக்குனர் ஹரியிடம் கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லியிருந்தால் அது பயங்கரமான ஒரு  லோகேஷ் ரஜினி படமாக வந்திருக்கும்.

லாஜிக் ஓட்டைகள் என்று  சமூக ஊடக சித்தரா அரவிந்தன்களும் கலர் சட்டை விமர்சகர்களும் நினைத்துக்கொள்ளும் அத்தனைக்கும் படத்தில் சரியான ஒரு காரணத்தை வைத்து இருக்கின்றார். ஜெயிலர் படத்திற்கு முன்னதாக இந்த படம் வந்திருந்தால், இது மக்களால் வேறு விதமாக  அணுகப்பட்டிருக்கும்.

பார்வையாளர்கள் கொடுக்கின்ற இருநூறு ரூபாய்க்கு நியாயம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டதாக சில பதிவுகளை பார்க்கிறேன். உபேந்திரா, ரஜினி, அமீர் கான் மூவரும் ஒன்றாக திரையில் தோன்றும் ஒரு காட்சி; முதல் முறை கண்ட பொழுது சில காட்சிகளுக்காகவும் வசனங்களுக்காகவும் குறைபட்டு கொண்டு நானே  உணர்ச்சி மிகுதியில்போடு” என்று என்னை மீறி கத்த வேண்டும் போல் அமைந்திருந்தது.That frame, அதற்கே, அந்த பரவசத்திற்கே இரு நூறு ரூபாய் சரியாகி போனது என்று சொல்லலாம். .

 ஒரு  முறை பார்த்தால் சரியாக புரியாமல் போகலாம் என்பதை நமக்கெல்லாம் சூசகமாக சொல்லத்தான், கதை கேட்டா  இவர் நான் கமல் ரசிகர் ன்னு  சொல்றார் என்று தலைவர் சொல்லியிருக்கார் போல.

எல்லா வசனங்களிலும் ஏதோ ஒரு கதையை கடத்த வேண்டிய கட்டாயம் இந்த கதைக்கு இருந்ததால், வசனங்கள் ரஜினி பட வசனம் போல் அமையவில்லை.அத்தனை பெரிய கதை அத்தனையையும் 3மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும். இந்த திரைப்படத்தை பொறுத்தமட்டில். இது ஒரு சவாலான எழுத்தாக்கம்.

இரண்டரை மணி நேரம் படம் ஓடி முடிந்த பின் ரஜினி நாகர்ஜூனாவிற்கு தன் பின் கதையை சொல்ல தொடங்குகிறார். சில நிமிடங்களுக்கு ரஜினி மட்டும் தான் பேசுகிறார். “என்ன டா படம் முடிய போகிற நேரத்தில்” என்று ஒருவருக்கும் தோன்றாது. அது தான் ரஜினியின் நடிப்பும் லோகேஷின் எழுத்தும் வெற்றி பெற்ற இடம்.

நம் எல்லோருக்கும் நாம் பழகுகின்ற ஒவ்வொருவருடனும் ஒரு கதை இருக்கும் தானே! அதெல்லாம் சேர்ந்து ஒரு கதையாக உருவானால் எப்படி இருக்கும்! அப்படியொரு கதை தான் இந்த கூலி.

ஜெயிலர், பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா போன்ற ரஜினி படங்களை போன்று மீண்டும் மீண்டும் பார்க்க நினைக்கும் ரஜினி படங்களில் ஒன்றாக இது இல்லாமல் போகலாம். ஆனால், இந்த படத்தின் கதையமைப்பை பற்றிய ஒரு பேச்சு எப்போதும் இருந்துகொண்டு இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *