ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்டுரை எழுதத் தொடங்கும் பொழுதும், இப்படித் தான் தொடங்க வேண்டும் என்கிற எந்த முன் முடிவுகளும் திட்டமிடத்தல்களும் நம்மிடம் இருப்பதில்லை. எழுதத் தொடங்கியதுமே தொடக்கம் நிகழ்ந்துவிடும். ஆனால், சில கட்டுரைகளை அப்படித் தொடங்கிவிட முடிவதில்லை. காரணம், எதைப் பற்றி எழுத நினைத்தோமோ அதைப் பற்றிய பல எண்ணங்கள் நம்முள் முட்டி மோதிக்கொண்டிருக்கும். ‘போட்’ திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதத் துவங்கும் பொழுதும் அத்தனை எண்ணங்கள் என்னுள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றது.
நடிகர்களுக்காக திரையரங்கு செல்லும் ரசிகர்கள் போலவே இயக்குநர்களுக்காக திரையரங்கு செல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அப்படியான ஒரு ரசிகர் கூட்டத்தை இயக்குனர் சிம்புதேவனும் சம்பாதித்து வைத்து இருக்கிறார்.
ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன், தம்பியை அழைத்துக்கொண்டு புலி திரைப்படத்திற்கு சென்று திரும்பிய பொழுது அவனிடம், படம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன், அவன் கண்கள் நிறைய உற்சாகத்தோடும் சந்தோசத்தோடும் சூப்பரா இருந்தது என்றான். அப்போது அவனுக்கு ஒரு பதினோரு வயது முடிந்திருக்கும். அவன் வயதில் இருப்பவர்களுக்கு அத்தனை மகிழ்சியை தந்த படைப்பு அது.
அந்த சமயத்தில்,குழந்தைங்களுக்கான ஒரு படத்தில் விஜய் நடிக்க எடுத்திருக்கும் முயற்சியை ரஜினி குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.
இதை ஏன் இங்கே குறிப்பிட வேண்டும்?! காரணம் இருக்கின்றது. நம் எல்லோருள்ளும் ஓராயிரம் ரசனை இருக்கும். நமக்குள் இருக்கும் நம் ரசனைகளுக்கு வெளியே பல கோடி பேர் இருக்கின்றார்கள். எல்லாம் சேர்த்து மொத்தமாக எத்தனை வேறுபட்ட ரசனைகள் இருக்கும். இப்பொழுதெல்லாம் இந்த வேறுபாடுகள் மதிக்கப்படுகிறதில்லையோ என்கிற எண்ணம் எனக்கு எழுவதுண்டு. ஒரு பெரிய நடிகர் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தால் அல்லது அப்படி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால், அது அதிகமான எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கிறது.குழந்தைகளுக்கான படம் என்று இல்லை அநேகமான திரைப்படங்களுக்கு இது தான் நிலை. அநேகமான விமர்சகர்கள் திரைப்படம் எடுப்பதற்கும் பார்ப்பதற்கும் அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்பது போலவே பேச கேட்டு இருக்கின்றேன்.அவர்கள் அப்படி ஒரு பிம்பத்தையும் சமூத்தில் ஏற்படுத்தி விட்டார்கள்.
அதோடு சில சினிமாகாரர்களே, கிளாஸ் சினிமாவை உயர்த்தி பேசுவதாக நினைத்து வெகு ஜனம் ரசிக்கும் படங்களை குப்பை படங்கள் என்று பேச கேட்டு இருக்கின்றேன். படிக்கவும் கற்காதவர்களுக்காகவே தானே நாடகங்களும் கூத்துக்களும் உருவாகியிருக்கும்! இவைகளின் பரிணாம வளர்ச்சியான சினிமா எல்லா நிலை பார்வையாளர்களுக்குமானது.
விமர்சனம் என்கிற பெயரில் சில படங்களை குறைத்து பேசுவது எப்படியும் சரியாகாது. நீங்கள் குறை சொல்ல வேண்டுமென்றாலும் நிறை சொல்ல வேண்டுமென்றாலும் எல்லாவற்றிக்கும் சேர்த்து எல்லா விதமான படங்களையும் சிம்புதேவன் கொடுத்து இருக்கின்றார்.
இயக்குனர் சிம்புதேவனை நீங்கள் ‘கிளாஸ்’ ‘மாஸ்’ என்கிற வட்டத்திற்குள் குறுக்கி விட முடியாது. அவர் எடுத்த படங்களை விக்கிப்பீடியாவில் தேடிப்பாருங்கள், ஒவ்வொன்று ஒவ்வொரு விதமான கதைக்களம். எனக்கு தெரிந்த மட்டில் அரசியல் நையாண்டி தவிர்த்து அவருடைய முந்தைய கதைக்கும் அடுத்த கதைக்கும் pattern template என்று எந்த ஒரு ஒற்றுமையையும் கண்டுவிட முடியாது.
அதில் புலி, 23ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படங்கள் எல்லாம் குழந்தைகளையும் மகிழ்வித்த படங்கள்.
தங்கையின் குழந்தைகளோடு அரண்மை-4திரைப்படத்திற்கு சென்றிருந்த பொழுது என் மனதில் தோன்றிய கேள்வி, “இப்போது வரும் அநேகமான நகைச்சுவை காட்சிகள் குழந்தைகளை சிரிக்க வைப்பது போல் இருப்பதில்லையே?” என்று. இது பெரிய வேலை. இந்த வேலையையே அனாயசமாக செய்தவர். இன்னொரு பெரிய வேலையை செய்து இருக்கின்றார். அது தான் ‘போட்’ திரைப்படம்.
நிச்சயமாக குழந்தைகளை பெரியவர்களை சிரிக்க வைக்கும் காட்சிகள் ஒன்றும் அதிகமாக இந்த கதையில் இல்லை. ஆனாலும், போட் திரைப்படத்தின் கதையமைப்பும் அது திரைப்படமாக்கப்பட்ட விதமும் பெரிய வேலை தான்.
ஏன்! ஏன்! ஏன்!
எந்த பெரிய ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் அதிவேகமாக ஓடும் கேமராவும் அதை விட வேகமாக ஓட வைக்கும் எடிட்டும் இல்லாமல்; மனதை பிசையும் தீவிரமான சோகமான காட்சிகள் இல்லாமல்; இரண்டரை மணி நேரம் உங்களை கதையோடு கதையாக பயணிக்க வைக்கும் ஒரு கதை. அப்படியொரு கதையை செய்வதும் படமாக்குவதும் எத்தனை பெரிய வேலை! அந்த கதை ஒரு இடத்தில் கூட யாரையும் நெளியச் செய்யவில்லை. கடிகாரத்தை தேடச் செய்யவில்லை. ஒரு தோணியில் மெதுவாக மிதந்தால் எப்படி இருக்கும்? ஒரு புத்தகம் வாசிப்பதற்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு கதை! அப்படி ஒரு படம் தான் இந்த ‘போட்’
வெள்ளிக்கிழமையே படம் பார்க்க நினைத்து உடல் நலம், வேலை, மற்றும் world wide ரிலீஸில் கொஞ்சம் குறுகிய ரிலீஸ் ஒரு ஸ்டேஷன் தள்ளிச்சென்று படம் பார்க்க வேண்டும் என்று பல காரணங்களை தாண்டி, “ஒரு போட் அதுல ஒரு நாலு கேரக்டர் ( நாலு கேரக்டரா என்று எண்ணாதீர்கள் ஒரு பேச்சுக்கு) படம் எப்படி இருக்கும்? இப்படியாக உடல் நலம், நேரம் ஒதுக்க இருந்த சிரமம் எல்லாம் தாண்டி போகணுமா?” என்கிற பல சிந்தனைகள் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.
வெளிநாடுகளில் சின்னப் படங்கள் ஒரு வாரத்திற்கு மேல் அதிகமான திரையரங்களில் ஓடுவது சிரமம். இயக்குனர் சிம்புதேவனுக்காக இந்த வாரமே சென்று விட வேண்டும் என்று முடிவு செய்தேன். உடன் இரண்டு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.வெளியே வந்த பொழுது, எனக்குள் ஒரு கேள்வி, “எந்த பெரிய விறுவிறுப்பும் இல்லாமல், எளிமையமான ஒரு திரைக்கதை இரண்டரைமணி நேரம் நம்மை எப்படி அந்த கதைக்குள் வைத்திருந்தது?”
அந்த கேள்விக்கு பதில் வேண்டுமென்றால் நீங்களும் படத்தைப் பாருங்கள்.
சொல்வதற்கு ஒன்றுமே இல்லாத கதைகளை இழுக்கும் பொழுது தான் சலிப்பு தட்டும், அந்த கதை ஏதோ சொல்லிக்கொண்டே வந்தால் நாம் கேட்டுக்கொண்டே இருப்போம் அடுத்து என்ன ஆச்சு? இந்த அடுத்து என்ன ஆச்சு என்பதில் கதையில் ஒரு இடத்தில் ரத்தம் கொட்டிக்கொண்டிருக்கும் பொழுதில், கதைக்குள் மூழ்கி இருக்கும் நாம், “என்னடா இப்படி ஆகிவிட்டதே!” என்று நினைக்கும் பொழுதிலேயே நம் மனதிற்குள் இருக்கும் சிம்புதேவன், “நான் அப்படி செய்வேனா?” என்று நம்மை தட்டிக்கொடுத்து திரையில் காட்சிகளை தலைகீழாக மாற்றுகிறார்.
இதை விவரிக்கும் பொழுது எங்களுடன் தங்கியிருந்த ஒரு நண்பரின் நினைவு வந்தது. அவரை நான், ‘ஹாலிவுட் பாய்’ என்று அழைப்பதுண்டு. அவர் ஆங்கில படங்களே தான் அதிகம் விரும்பி பார்ப்பார். ஒரு நாள், “ஏன் நீங்க நம் ஊர் படம் பார்ப்பதில்லை” என்று கேட்டதற்கு, “இவன் கெட்டவன்; அவன் கெட்டவன்; கொலை; பழி சாவு இது தானே பெரும்பாலும் இருக்கு” என்று பதில் சொல்லி நகர்ந்தார்.
“ஏன் இங்க நல்ல படமே இல்லையா?” என்று நான் அவரை கேட்கவில்லை.
இங்கே பெரும்பாலும் திரைப்படங்கள் அப்படித்தான் இருக்கிறது. ‘George of the jungle’ என்று ஒரு திரைப்படம் இதில் யாரையும் சாகடிக்க மாட்டோம் என்று சொல்லியே கதை ஆரம்பிக்கும். அதையும் அந்த நண்பர் சொன்னதையும் நினைத்த பொழுது அவர் சொன்னது சரி என்றே தோன்றியது. அந்த ஹாலிவுட் பாய் நண்பரும் கூட ரசிக்க தகுந்த மென்மையான சலிக்காத கதைகளை சிம்புதேவன் தந்து கொண்டு இருக்கின்றார்.
அதோடு எப்போதும் அவரிடம் நான் ரசிக்கும் அரசியல் நையாண்டிகள் இந்த திரைப்படத்திலும் ரசிக்கும் படியாக இருந்தது. அரசியல் நையாண்டிகள் கதைக்குள் எப்படி வைக்க வேண்டும் என்பதை மற்றவர்கள் நிச்சயமாக சிம்புதேவனிடம் கற்றுக்கொள்ளலாம்.
இது போன்ற நையாண்டிகள் திணிக்கப்படும் பொழுது, “இல்லை! அது costumer செய்த பிழை நாங்கள் வேண்டி விரும்பி வைக்கவில்லை” என்கிற விளக்கம் எல்லாம் கொடுக்க வேண்டி வரும். அதோடு ஒரு நையாண்டி சிலரை குதூகலப்படுத்துவதாகவும் சிலரை புண்படுத்துவதாகவும் அமைந்து விடக்கூடாது. யாரின் குறையை சுட்டுகிறோமோ அவர்களும் கூட சிரிக்க வேண்டும். பின் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கலை அவருக்கு எப்படி கைவருகிறது என்று கேட்க வேண்டும்.
பாஜக என்று எழுதி வைத்தாலே எதிர்க்கும் மனநிலையை இங்கே ஏற்படுத்தி, அநேகமானவர்கள் இங்கே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். அப்படி யாரையும் மொத்தமாக எதிர்க்கவோ வெறுக்கவோ செய்யும் கூட்டத்தில் சேராத நானும் கூட, “ஜி கவுந்துராதீங்க” என்கிற வசனம் கேட்டு கொஞ்சமாய் சிரித்துவிட்டேன்.
ஒருவர் மேல் நாம் வெறுப்பு கொண்டிருக்கும் பொழுது அவரை யார் என்ன நய்யாண்டி செய்தாலும் நமக்கு சிரிப்பு வரும், இது அத்தகையது அல்ல என்பதை சொல்லவே அந்த விளக்கம். கண்டிப்பாக அது டப்பிங் இல் சேர்க்க பட்ட வசனமாக இருக்கலாம் என்பது எம் எண்ணம். நிகழ்கால தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு நையாண்டி அவ்வவளவே அது. அதில் எந்த வெறுப்பும் இல்லை. அதோடு அது திணிக்கப்படவும் இல்லை. கதையோடு காட்சியோடு ஒன்றி போகிறது.
சார்புநிலை இல்லாமல்,நடுநிலை வகிப்பது என்பது முள் மேல் நிற்பது போன்றது முள் கொஞ்சம் ஒரு பக்கம் சாய்ந்துவிட்டாலும் நம் மீது ஒரு முத்திரை குத்தி விடுவார்கள். அரசியலை விடுங்கள், வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், “அக்காவிற்கு தான் நிறைய செய்வீங்க?” என்று பெற்றவர்களை குறை சொல்லும் குழந்தைகள்.
“நீ உங்க அம்மா பேச்சைத் தான் கேட்ப” என்று கணவரை குறைப்பட்டுக்கொள்ளும் மனைவி, “மனைவியின் பேச்சை தான் கேட்ப” என்று மகனை சலித்துக்கொள்ளும் தாய் இப்படி எல்லோருடைய குறையும் சுட்டிக்காட்டிவிட்டு எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது மிகவும் சிரமமான ஒன்று. முள் நிற்பது சிரமமாக இருக்கிறதா? நான் நடந்து காண்பிக்கிறேன் பார் என்று நடந்து காண்பித்து இருக்கிறார் சிம்புதேவன்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்குள் இரண்டு மனநிலை இருக்கிறது.
ஒரு பக்கம் எல்லோருள்ளும் இருக்கும் ஊர் பாசம் அதே வேளையில் இது ஊர் நான் மட்டும் தான் அதிகாரம் செய்வேன் என்பது தவறு என்கிற எண்ணம்.
“ஊருக்கு சொந்தக்காரன் ஊருக்கு வெளிய நின்னான் பேருக்கு சென்னைக்காரன் ஏதோ ஏதோ சட்டம் சொன்னான்” என்கிற பாடல் வரிகளை முதல் முதலில் கேட்ட பொழுது கண்ணில் நீர் கசியும் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டேன்.
மறுபக்கம் சிந்தித்தால், நான் மதுரை, தாத்தா காலத்துல வேறு ஒரு ஊர். அதற்கும் பல தலைமுறை முந்தையவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று தெரியாது. ஒரு ஊரில் நீங்கள் பிறந்து வளர்ந்து விட்டாலே உங்களுக்கு அந்த ஊரோடு ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், எல்லோருக்கும் அதே ஊர்களிலேயே பிழைப்பு அமைவதில்லை. இடம் பெயர்தலும் புலம் பெயர்தலும் எல்லா காலமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.
நான் ஒரு ஊருக்கு பிழைப்பு தேடிச் செல்லுகிறேன் என் ஊருக்கு ஒருத்தன் பிழைப்புத் தேடி வாரான்.
இது எல்லா காலமும் நடந்து கொண்டே இருக்கின்றது. இதில், எல்லா ஊர்களும் நாடுகளும் பிழைப்புத் தேடி வருகிறவர்களை விரட்டினால் என்ன ஆகும். எல்லார்க்கும் எல்லாமே இருக்கின்ற இடத்திலேயே கிடைக்கிறதா?
என் ஊரு நான் தான் ஆழ்வேன் என்கிற அரசியலை நான் எப்போதும் ரசித்ததில்லை. இந்த பிரச்னையை கதைக்குள் எடுத்துக்கொண்ட சிம்புதேவன் யாரையும் குறை சொல்லவில்லை. என்ன குறை என்பதை ஒரு வசனத்தில் சொல்லிவிட்டார். எனக்கு அப்படியே நினைவில் இல்லை, என் நினைவில் உள்ளது படி எழுதுகிறேன் “நீ என் ஊருக்கு வர என்ன விட சம்பாரிச்சு பெரிய உயரத்துக்கு போற எல்லாம் உன் திறமை உன் உழைப்பு நான் பொறாமை படலை குறை சொல்லலை ஆனா அந்த இடத்துக்கு வந்துட்டு என்னையவே நீ அசிங்கமா பார்க்கிற பாரு அதான்” கோபம் வருகிறது என்றோ கேவலமாக இருக்கிறது என்றோ அந்த வசனம் முடியும்.
This is Chimbudeven.
சுதந்திர காலத்திற்கு முன்பில் இருந்து இப்போது வரை, நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை அந்நிய சக்திகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுதுகிறார்கள் என்பதை ஒரு பிரேமில் காட்டியிருக்கின்றார்.
“பிரிட்டிஷ்காரன் தான் அதை பண்ணான் இதை பண்ணான்” என்று பிதற்றிக்கொண்டிருப்பவர்களுக்காகவே ஒரு உரையாடல்.
“நல்ல வேளை பிரிட்டிஷ்க்காரனால தப்பிச்சோம்
அவன் உயிர் காப்பாத்திக்க நம்மள ஊறுகாய் ஆக்கிருக்கான் ”
பிரிட்டிஷ்காரர்களின் துப்பாக்கி ஒருவகையில் இரண்டாம் உலக போரின் பொழுது இந்தியாவிற்கும் பாதுகாப்பாக இருந்தாலும், அவர்களின் பாதுகாப்பிற்காக இந்தியர்களை ஊறுகாயாகத்தான் வைத்திருந்தார்கள். இப்படி அவர்கள் இந்தியாவிற்கு செய்த நன்மைகள் எல்லாம் அவர்களுக்கு கிடைத்த பெரும் நன்மை கருதியே அதை இந்தியர்களே அதிகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் வருத்திற்குரிய விஷயம்.
”The last Samurai” என்கிற ஆங்கில படத்தை எல்லா இந்தியர்களும் பார்க்க வேண்டும் என்று நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு. காரணம், அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. நாம் யார் என்று மறந்து விட்டு வளர்வதிலும், நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு நாம் வேறு ஒருவராய் வளர்வதிலும் எந்த அர்த்தமும் இல்லை. ‘கோவில்களைப் பற்றி தெரிந்துகொண்டு நீ அதற்கு உரிமை கொண்டாட வேண்டும்” என்று போட் திரைப்படத்தில் வருகிற வசனம் “The last samurai” திரைப்படத்தின் மையக் கருத்தை ஒத்ததாக எனக்குப் படுகிறது.
ஓவ்வொருவரின் செயல்களை பொறுத்தும் வேறுபாடுகள் இருக்கவே தான் செய்யும். இயல்பில் இந்த வேறுபாடு இருக்கவே தான் செய்கிறது. எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால், முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ப ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே தான் செய்யும் என்பதைத் தான் கீதை சொல்கிறது; திருவள்ளுவர் சொல்கிறார்; நம் இந்திய மரபில் தோன்றிய தத்துவ நூல்கள் சொல்கிறது. இதைப்பற்றிய புரிதலில் நம்மிடம் சரியான தெளிவு இல்லை. கதையில் வரும் ஒரு வசனம், இயக்குனர் இதை புரிந்துகொண்டு, நமக்கும் கொஞ்சம் புரிய வைக்க முயன்றிருப்பதை காட்டுகிறது . நாம் இவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று இருக்கிறோம், மேற்கத்தியர்கள் மொத்தமாக நம்மை தாழ்ந்தவர்களாக பாவிக்கிறார்கள். அவர்கள் அவர்களின் ராஜாவிற்கு தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதை இன்னும் எத்தனை விளக்கினாலும், எல்லோரையும் சமமாக நடத்தும் குணம் எல்லோரிடமும் வளரப் போவதில்லை. அதோடு ஏற்றுதாழ்வுகள் இயற்கையில் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதையும் யாரும் புரிந்துகொள்ளப்போவதில்லை. ஒரு கூட்டம் அதை தவறாக புரிந்து கொண்டு நாங்க தான் உசத்தி என்று இருக்கிறது. மற்றொரு கூட்டமோ அதுவும் தவறாகவே புரிந்து கொண்டு, நீங்க எழுதி வச்சு தான் அடிமையாக்கி விட்டீர்கள் என்று எதிர் தரப்பை கூடுமானவரையில் மட்டம் தட்டிக் கொண்டிருக்கின்றது.
சிரித்துக்கொண்டே சிரிக்கவைத்த படியே இரண்டு கூட்டங்களில் கன்னங்களிலும் ஒரு அறை கொடுத்து இருக்கிறார் சிம்புதேவன் ( சிம்புதேவன் mind voice : இந்த பயலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவன் நம்மள வம்பு ல இழுத்து விட்ருவான் போல)
கதை சொல்லுகிறவர்கள், எழுதுகிறவர்கள், அவர்கள் தெரிந்துகொண்ட நுட்பமான சில விஷயங்களை கதையின் போக்கில் நமக்கும் சொல்லுவார்கள் அப்படி சில விஷயங்களும் கதையில் இருக்கிறது.
இன்னும் எழுதிக்கொண்டே இருக்கலாம். யாரையும் பொதுமைப்படுத்தி குற்றம் சொல்லாமல் சமூக குறைகளை கதைக்குள் வைப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் சிம்புதேவன்.
தனிப்பட்ட முறையில், அரசர்கள் அவர்களின் அதிகாரத்திற்கு பங்கம் வந்த பொழுது வெகுண்டதெல்லாம் சுதந்திர போராட்டம் ஆகாது என்பது எண்ணம். ஆனால், வரலாறும் கதைகளும் நமக்கு அப்படி ஒரு கோணத்தில் அதை கற்றுக்கொடுக்கவில்லை. இந்த ஒரு இடத்தில், படத்தில் சொல்லப்பட்ட கருத்தில் நான் உடன்படவில்லை.
படம் எனக்கு பிடித்திருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும். யாரும் “படம் நல்லா இல்லை” என்று சொல்ல முடியாது.
நடிகர் M.S.பாஸ்கர் அவர்கள் எப்போதும் போல் தனியாக கதையின் அந்த பாத்திரமாகவே மனதில் நின்றுவிடுகிறார். அவர் இருந்தாலும் படம் பார்கலாம் என்கிற சூழல் இந்நேரம் ஏற்பட்டு இருக்க வேண்டும், இனி அவர் இருக்கும் படங்களின் விளம்பரங்களில் அவர் மையப்படுத்தப்படலாம்.(I recommend)
படம் தன்னளவில் ஒரு வெற்றியும் அடைந்துவிட்டதாகவே தான் கருதுகிறேன். இயக்குனர் சிம்புதேவனுக்கும் ‘போட்’ திரைப்பட குழுவிற்கும் கதிர்விஜயம் குழு சார்பாக என் வாழ்த்துக்கள்.
வெற்று பாராட்டுகளை விட வியாபார வெற்றி தான் ஒரு படைப்பாளிக்கு நாம் தரும் சரியான வெகுமதி. நமக்கு கிடைக்கும் increment bonus போன்று. அதனால், போட் திரைப்படத்தை எல்லோரும் திரையரங்கு சென்று காண வேண்டும் என்பதை என் தனிப்பட்ட வேண்டுகோளாக வைக்கிறேன்.
Democracy இல் இருக்கும் பெரும் குறையை சுட்டியது என்று இன்னும் எழுதிக்கொண்டே இருக்கலாம், நாளைக்கு நேரத்திற்கு எழுந்து வேலைக்கு கிளம்ப வேண்டும் என்பதால் அவசரமாக இப்படியே இந்த கட்டுரையை முடித்து வைக்கிறேன்