வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்! இன்று இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த கட்டுரையை படிப்பதற்காக இந்த இணைப்பை நீங்கள் திறந்து இருக்கீன்றீர்கள் என்றால், நிச்சயமாக நீங்கள் இந்த ஒரு கேள்வியை கடந்து வந்து இருப்பீர்கள். “உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?” என்கிற கேள்வி தான் அது.
அந்த கேள்வியை நீங்கள் யாரிடமேனும் கேட்டு இருப்பீர்கள் அல்லது உங்களிடம் யாரேனும் கேட்டு இருப்பார்கள். கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால், அது முட்டாள்த்தனமான கேள்வியாகத் தான் தெரியும். சிந்தித்துக்கொண்டே இருந்தால், நாம் செய்யும் எல்லாமே முட்டாள்த் தனமாக தான் தெரியும். அதனால், அதிகம் சிந்திக்க தேவையில்லை வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துவிட்டு போகலாம்.
சரி! உங்களுக்கு யாரை பிடிக்கும்? அப்பாவை பிடிக்குமா? அம்மாவை பிடிக்குமா?
exceptional case களை தவிர்த்துவிட்டால் எல்லோரும் அம்மா அப்பா இரண்டு பேரையுமே தான் பிடிக்கும் என்று நினைத்து இருப்பீர்கள்.
சரி தான்! நம்முடைய அன்பு, நட்பு, காதல் என்கிற எல்லாவிதமான வஸ்துக்களும் அவர்களிடம் இருந்து தான் தொடங்கிறது, உறவு சார் அத்தனை நல்உணர்வுகளால் ஆன சக்கர வியூகத்தின் உட்புற முதல் நிலையில் அவர்கள் இருவரே தான் இருக்கின்றார்கள். அந்த இருவரிடம் இருந்து நம்மை பிரிக்கும் எதையுமே முதலில் நாம் விலக்கவே செய்கின்றோம்.
உங்களில் எத்தனை பேர் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் பொழுது எந்த பிடிவாதமும் செய்யாமல், கண்களை கசக்காமல் இருந்து இருக்கின்றீர்கள்? என்னிடம் இதை கேட்பீர்களெனில், சிவனைத் தேடி மாணிக்கவாசகர் உருண்டு புரண்டது போல், பள்ளியின் வாசலை மிதிக்காமல் இருக்க அத்தனை பிரயத்தனப்பட்டு இருக்கின்றேன்.
காலம் ஒரு மாதிரி மெதுவாகவும் இல்லாமல் வேகமாவும் இல்லாமல், வேகமாவே தான் சுழல்கிறது. போகவே மாட்டேன் என்கிற பள்ளிக்கெல்லாம் சென்று படிப்பை முடித்துக்கொண்டு இப்போது வேலைக்குச் சென்றுகொண்டு இருக்கின்றேன். யாரும் என்னை எழுப்ப வேண்டியதில்லை; யாரும் பலவந்த படுத்தவேண்டியதில்லை. தினமும் ஒரு ஐந்து நிமிடம் தூங்க வேண்டும் போலவே தான் இருக்கின்றது. அந்த நிமிட தூக்கத்தை தினமும் தியாகம் செய்து கிளம்புவதில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, ஊருக்கு சென்றிருந்தேன்.
“அம்மா! இன்னிக்கு லீவா?” கண்களை முழுதாய் திறப்பதற்கு முன்னதாவாகவே இந்த கேள்வியை நித்தியும் நிஹியும் கேட்டு விடுவார்கள். அப்பாவிற்கு வேலையில் இருந்து ஓய்வு கிடைவேயில்லை.எல்லா வீடுகளிலும் அம்மாவிற்கு ஓய்வு கிடைப்பதேயில்லை. அம்மாவிடம் பிள்ளைகளைவிட்டு விட்டு பிள்ளைகளுக்காக வேலை செய்யும் தங்கையின் குழந்தைகள் தான் நித்தியும் நிஹியும்.
என்னில் ஆரம்பித்து நித்தி நிஹி வரையில் தொடர்கிறது அம்மாவின் வேலை. தினமும் அவர்களை எழுப்ப வேண்டும். அதில் ஒருவர், காலையில் தான் வீட்டு பாடங்களைச் செய்வார், “சன்(சூரியன்) வந்திருச்சு எந்திரிங்க! ”
“அலெக்ஸ் வந்துட்டார்! (அவர் தான் அவர்களை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் ஓட்டுநர்) வந்துட்டார்! எந்திரி ப்பா!”
“அண்ணன் எந்திரிச்சு குளிக்க வந்துட்டான் பாரு”
“ஹோம் ஒர்க் வேற செய்யணும் எந்திரிப்பா!”
“இன்னிக்கு stage ல rhymes எல்லாம் சொல்லனும் வாங்க எந்திரிங்க” இப்படி எல்லா மந்திரங்களையும் ஓதி அவர்களை எழுப்ப வேண்டும். அவர்களை எழுப்பவதை விட, தூங்க வைப்பதற்கு தான் சமயங்களில் அதிக முயற்சி தேவைப்படும்.
நான் நித்தி நிஹி மூன்று பேரும் அந்த மெத்தையில் படுத்துவிட்டோம். “அம்மா! என்னோட தம்பி எங்க?” நிஹி கத்தினான். நித்தியுடைய தம்பி நிஹி, நிஹியோட தம்பி யாரு? “இந்தா!” என்று அம்மா ஒரு சிவப்பு நிற பொம்மையை தூக்கி நிஹியின் அருகில் வீசினார். “மாமா! அது என்னோடது அப்பறம் நிஹி கேட்டானா? நான் கொடுத்துட்டேன்! அது இப்ப அவன் தம்பி ஆகிடுச்சு!” என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தான் நித்தி. நிஹி தூங்க வேண்டுமென்றால், நிஹியின் தம்பியும் நிஹியோடு தூங்க வேண்டும். ஆனால், பொம்மை எப்படி தூங்கும்! நிஹியிடம் தான் கேட்க வேண்டும்.
அன்று நிஹியின் தம்பியும் அந்த மெத்தைக்கு வந்து சேர்ந்த பின்னர், அம்மா அவருக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் அந்த குழந்தைகளை சொல்ல வைத்து எல்லோரையும் காப்பாத்த சொல்லி எல்லா பிராத்தனைகளும் முடிந்த பின் என்னையும் அந்த பொம்மையையும் தவிர எல்லோரும் தூங்க தயாரானார்கள்.
அதிசயமாய் நம் மொழியில், தூங்கும் இடத்தை அல்லது படுக்கையையும் பள்ளி என்றே சுட்கிறோம். ஒரு அம்மா, குழந்தைகளை பள்ளியில் இருந்து எழுப்பி பள்ளிக்கு கிளப்ப கொஞ்சுவதும் கெஞ்சுவதுமாக இருப்பது போலவே தான் இறைவனை கொஞ்சவும் கெஞ்சவும் செய்கிறார் மாணிக்கவாசகர்.திருவாசகம் எத்தனை பெரிய மறைநூல், மாணிக்கவாசகர் எத்தனை பெரிய ஞானி, இவர் என்ன இறைவனை எழுப்பிக்கொண்டு இருக்கின்றார் என்று தோன்றியது. சரி தான்! பெருமாள் கோவில்களின் அமைப்பைபற்றி அதிகம் தெரியாது; ஆனால், சிவன் கோவில்களில் பள்ளியறை என்றே ஒரு அறை இருக்கும். தினமும் ஒரு பூஜை நடத்தி, “லோக சமஸ்தா சுகினோ பவந்து” என்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டி சாந்தி மந்திரங்கள் எல்லாம் ஓதி; ஊஞ்சல் ஆட்டி, இறைவனை தூங்க வைப்பதும் ஒரு சடங்காக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அதில் பெரிய முரண், எல்லோரையும் நலமாக பார்த்துக்கொள்ளும் வேலையை இறைவனிடம் கொடுத்துவிட்டு இறைவனை தூங்க வைப்பது.
சரி! நாமளே தூங்க வைக்கிறோம்! அப்ப எழுப்ப வேண்டியது தான். மாணிக்கவாசகரும் ஒரு பத்து பாட்டு எழுதியிருக்கார்.அதில் கீழ் வரும் பாடல்கள் எல்லாம், அம்மா நித்தி நிஹியை எழுப்பும் அதே நிலையில் இருப்பது போல் இருந்தது எனக்கு.
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே
எளிமையாக பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால், சூரியன் வந்திருச்சு! உன் மாதிரி வாசம் தருகின்ற தாமரை மலர்ந்திருச்சு, எங்களுக்கெல்லாம் அருள் தர ஆனந்த மலையே எந்திரிங்க!.
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயேபொருள்:பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான். இருள் முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள் வாயாக.
யாரையும் எழுப்பும் பொழுது, எப்படி எழுப்புவோம்! முதல் முறை எழுப்பும் பொழுது நாம் எந்த அவசரமும் காட்ட மாட்டோம்! “சன் வந்திருச்சு எந்திரிங்க!” என்ற பின்னும் பிள்ளைகள் எழுந்திருக்காத பொழுதே தான் அவசரப்படுத்த வேண்டியது இருக்கிறது. அவர்களுக்கு இருக்கின்ற வேலைகளை நினைவுப்படுத்த வேண்டியிருக்கின்றது. சூரியன் வருவார் ! அவர் இஷ்டத்துக்கு சீக்கிரமே வருவார். அதற்காக நாம் எந்திரிக்கணுமா! ஆனால், நேரமும் ஆகிவிட்டது இதைச் சொல்லி சிவபெருமானை எழுப்ப வேண்டும்.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
திருப்பள்ளியெழுச்சி பகுதியில் நான் மிகவும் ரசித்த பாடல் இது. கூவின பூங்குயில் கூவின கோழி, என்கிற வாசகத்தை இயல்பாக ஒலிக்கும் பொழுதே அதில் ஒரு அவசரம் தெரிகிறது. அவர்கள் எல்லாம் எழுந்துவிட்டார்கள் நீ எந்திரி! நேரம் ஆகிடுச்சு!.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
பறவைகள் எழுந்துவிட்டது. ஏழு மணி சங்கும் முழங்கப்பட்டுவிட்டது. And comes the science.
கீதாராணி மிஸ்ஸோ ரேவதி மிஸ்ஸோ எனக்கு சொன்ன விஷயம், “காலையிலையும் ஸ்டார்ஸ் இருக்கும், ஆனா சூரியனோட வெளிச்சத்தில் அதெல்லாம் நம் கண்ணுக்கு தெரியாது”
மாணிக்கவாசகர் நிச்சயமாக அந்தணர் இல்லை. பிரிட்டிஷ் கொண்டு வந்த ஸ்கூல் கல்வி முறையும் அவருக்கு தெரியாது. அவர் விஞ்ஞானியும் கிடையாது. ஆனால், அவருக்கு நிறையவே அறிவியல் ஞானம் இருந்திருக்கு. அதையெல்லாம் முந்தைய பகுதியிலேயே பார்த்தோம். space science தெரிந்த அவருக்கு அறிவியலின் பால பாடங்கள் தெரிந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது
நட்சத்திரங்களின் ஒளி மங்கி உதயத்தோடு ஒருபடுகின்றது என்கிறார்.
“சரி டா! இப்ப எந்திரிச்சு நான் என்ன பண்ணப் போறேன்?” இப்படி ஒரு கேள்வியை சிவ பெருமான் கேட்டால், கேட்பதற்கு முன்னமே மாணிக்கவாசகர் அதற்கு பதிலை சொல்லிவிடுகிறார். “எந்திரிச்சு உன் காலை காட்டுயா சாமி!”
விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
விடிந்துவிட்டது! எழுந்திருக்கவில்லை.
எல்லாரும் எழுந்துவிட்டார்கள் நேரம் ஆகிவிட்டது! எழுந்திருக்கவில்லை.
அப்போது நாம் என்ன செய்வோம் பிள்ளைகளை இன்னும் அவசரப்படுத்துவோம் “அலெக்ஸ் வந்து காத்துட்டு இருக்கார்! எந்திரி” என்பது போல். இதே தான் மாணிக்கவாசகர் செய்கின்றார், “இங்க பாரு! எல்லாம் வந்து உனக்காக நின்னுட்டு இருக்காங்க எந்திரி!” என்கிறார் இறைவனை.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
பார்! உனக்காக பாட்டு பாடிக்கொண்டு ஒருபக்கம், வேதம் (ரிக் -இருக்கு)ஓதிக்கொண்டு ஒரு பக்கம்; மாலைகளை(பிணைமலர்) வைத்துக்கொண்டு ஒருபக்கம்;உன்னைத்தேடி அழுதுகொண்டிருப்பவர்கள், உன்னை வணங்கி காத்துகொண்டு இருப்பவர்கள் எல்லோரும் வந்து நிக்கிறாங்க எந்திரி! Everybody is waiting for you; so for god ‘sake please get up. ஒருவரை எழுப்பவேண்டியதில் காட்ட வேண்டிய அத்தனை அவசரமும் இந்த பாடலில் இருக்கிறது.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
அத்தனை அவசரம் காட்டி ஒருவரை தூக்கத்தில் இருந்து எழுப்பும் பொழுது, தூக்கத்தில் இருப்பவரின் அந்த தூக்கம் கொஞ்சமாக கலைந்து அவர் எரிச்சல் கொள்ளும் அந்த சமயத்தில் நாம் என்ன செய்வோம்? கொஞ்சமாய் கொஞ்சுவோம் அதையே தான் பாடலின் இறுதியில் செய்கிறார் மாணிக்கவாசகர்.
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
இத்தனை அவசரம் காட்டி குழந்தைகள் எழுப்புவது போன்று சிவபெருமானை மாணிக்கவாசகர் ஏன் எழுப்ப வேண்டும்? அத்தனை பெரிய ஞானிக்கு தெரியாது! இறைவன் தூங்குவானா? எல்லாமுமாக எங்கும் இருக்கும் இறைவன் வானாகி மண்ணாகியும் நின்றவன். வானுக்கும் மண்ணுக்கு தூக்கம் என்று ஒன்று இருக்கின்றதா?திருப்பள்ளி எழுச்சி படிக்கும் பொழுதே எனக்கு இந்த கேள்விகள் எழுந்தது. பொம்மை எப்படி தூங்கும் என்பதைப்போன்ற கேள்வி தான் இதுவும்.
பொம்மையும் தன்னோடு சேர்ந்து தூங்க வேண்டும் என்கிற அன்பை போன்றது தான் இறைவனை தூங்க வைப்பதும் எழுப்புவதும். அவ்வப்பொழுது என் நினைவை உரசும் ஜான் மில்டன் எழுதிய ஒரு பாடல் வரி இப்போதும் நினைவிற்கு வருகிறது.
“God doth not needEither man’s work or his own gifts; who bestBear his mild yoke, they serve him best.