வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.
“ஆசைகளை துறந்தால் தான் இறைவனை அடைய முடியுமா?” இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு எப்போதாவது எழுந்து இருக்கின்றதா?
இந்த ஆசைகளை எப்படி துறப்பது? அது தான் வளர்ந்துகொண்டே இருக்கின்றதே!
தவழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது நடக்க ஆசைப்படும் நாம்; நடக்க பழகிய பின் நடக்க விரும்புவதில்லை.
நான் நடை பழகியிருந்த புதிதில் , ஒரு நடை தூரத்தில் இருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு தினமும் செல்வது வழக்கம், வீடு திரும்ப 8 அல்லது 9 மணி ஆகிவிடும்.இரவு சாப்பிட்டு முடித்த பின், எல்லோரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் நான் தூங்கிவிட்டால், அப்பா தூக்கிக் கொண்டு செல்வார். சமயங்களில் அவர் தூக்கிக்கொண்டு நடக்கும் பொழுதுகளில் விழித்து கொள்வதால். என்ன நடக்கிறது என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. “தூங்கினா அப்பா தூக்கிட்டு போவார்”
அப்போது எனக்கு ஒரு 3 வயது இருந்திருக்கும். அது ஆசையா? அன்பா? என்று தெரியாது, அப்பா என்னை தூக்கிக்கொண்டுச் செல்ல வேண்டும் என்று தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தேன்.ஒரு நாள், “தூங்கிவிட்டான் தூக்கிட்டு போங்க” என்று என் அம்மாச்சி சொல்வது என் காதுகளில் தெளிவாக விழுந்தும் சிரிக்காமல் நடித்துக்கொண்டு இருக்கின்றேன். 3 வயதில் நம்முடைய ஆசை இத்தனை சிறியதாக தான் இருக்கிறது.ஒரு 30 வருடம் முடிந்து பிறகு ஒரு 30 car வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு இந்த ஆசை வளர்ந்து இருக்கின்றது.
அதே நான், 6ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபொழுது, ஹரி கிருஷ்ணன் என்று ஒரு நண்பன், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று எங்கள் வீட்டிற்கு வந்தான், நாள் முழுதும் எங்கள் வீட்டில் இருந்தான். “அம்மா நான் அவனை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு நானே கூட்டிட்டு வந்து விடுறேன்” என்றான்.
“அவங்க அப்பா விட மாட்டார் ப்பா” இது தான் அம்மா வின் பதில்.
இந்த அம்மா அப்பா எல்லோரும் இப்படித்தான். இப்பொழுது, நான் தங்கியிருக்கும் வீட்டிலும் ஒரு அம்மா அப்பா இருக்கின்றார்கள்.
நான் தங்கியிருக்கும் அந்த வீட்டில் ஒரு அறையில் நான், இன்னொரு அறையில் அந்த அப்பா அம்மா அவர்களுடைய 3 வயதிற்கும் குறைவான ஒரு பையன், இன்னொரு அறையில் ஒரு பாட்டி. பாட்டி தான் வீட்டிற்கு சொந்தக்காரர். இந்த வீட்டிற்கு வருவதற்கு முன் எனக்கும் அந்த பாட்டிக்கும், அந்த குடும்பத்திற்கும் என்று எங்களுள் யாருக்கும் யாருடனும் முன் ஜென்ம பந்தமோ இந்த ஜென்ம பந்தமோ கிடையாது.
அந்த பையன், திரிஷா நடிச்ச ‘ஜூனியர் horlicks’ விளம்பரத்தில் வரும் பையன் போல் ‘busy boy’ ரொம்ப சுட்டி.அந்த பையன், அந்த பாட்டியிடம் சென்று ஏதேனும் சேட்டை செய்ய ஆரம்பித்தால், “தர்ஷன் அங்க இங்க வா” என்று ஒரு சத்தம் வரும். சமயங்களில் அவன் அவர்களின் அறையை விட்டு வெளியே வந்தால், “அங்க போகாத” என்கிற சத்தம் வரும்.
குழந்தைகளோடு பொது இடங்களில் இருக்கும் யாரை கவனித்து இருந்தாலும், இந்த அதட்டலை கேட்டு இருப்பீர்கள். தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கும் தன் பிள்ளை குப்பை இருக்கும் பக்கம் ஓடினால், “அங்க போகாத இங்க வா!” என்று எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு சத்தம் வரும் அந்த மூலையில் இருந்து. அந்த குழந்தையின் அம்மா கவனித்து கொண்டு இருப்பார்.
குழந்தைகள் இப்படியே தான் வளர்கிறார்கள். நாமும் இப்படித்தான் வளர்ந்தோம்.
ஆனால், வளரும் சமயங்களில் அந்த குரலை மீறவே செய்து இருக்கின்றோம். தர்ஷன் எல்லா சமயங்களிலும் அந்த குரலை சட்டை செய்ததில்லை.
“அப்பா நம்ம friend வீட்டுக்கு கூட விட மாட்றாரு” என்று எனக்கும் தோன்றியிருக்கிறது. வீட்டில், ஆத்து பக்கம் விளையாட போக கூடாது என்பார்கள், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஓரிரு முறை அந்தப் பக்கம் சென்று விளையாடவும் செய்து இருக்கின்றேன்.
இது நம்முடைய இயல்பாகவே இருக்கின்றது.
அப்பறம், ஒரு நாள் வருகிறது. அப்பாவின் உடல் மட்டும் தான் வீட்டில் இருக்கின்றது. அப்பா இல்லை. இப்பொழுது நான் எங்கு சென்றாலும் அவர் என்னை தடுக்க போவதில்லை.
வெளியே வாசலில் உட்கார்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றேன். “அந்த உயிர் எங்க போச்சு!”
“இதை இனிமே மாத்தவே முடியாதா!”
இந்த எண்ணங்கள் என்னை சுற்றிக்கொண்டு இருக்கும் போதே அந்த பஞ்ச பூத உடலை பஞ்ச பூதங்களோடு சேர்த்துவிட்டு வந்துவிட்டேன்.
தெருவில் நடக்கும் பொழுதெல்லாம் தேடுகிறேன். “எங்க இருக்கார், என் கண்ணனுக்கு தெரியலையே” ( I was searching him in this space)
“யாரும் சொல்லவில்லை
வானம் தேடி
தானாய் போகுது கண்கள்.
அங்கு ஒன்றுமில்லை,
ஒன்றுமேயில்லை
“இதுல எங்கப்பா இருக்கீங்க?”
என்னும் சத்தம் தவிர
சத்தமும் கூட வானத்தில் இல்லை.
யாரும் சொன்னாலும் கூட
கேட்க போவதில்லை
என் கண்கள்.”
சமயங்களில் என்னை நானே குத்திக்கிழித்துக்கொள்ள வேண்டும் போல தோன்றும். “அப்படி செய்தால், அப்பாவிடம் செல்லலாமா?” என்று தோன்றும்.ஆனால், அவர் எங்கு இருக்கின்றார் என்பதே தான் தெரியாதே! நாம் உடலை விட்டாலும் அவரிடம் தான் செல்லவோம் என்பதும் தெரியாதே. ஆனாலும் அடிக்கடி அந்த எண்ணம் எழும்.
இந்த எண்ணங்களோடு திரிந்துகொண்டு இருந்த பொழுது, ஒரு நாளில் இரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.இந்த எண்ணங்களால் மூழ்கடிப்பட்டு இருந்த நான் வாசலில் நின்று கொண்டு பயணித்துக்கொண்டு இருந்து பொழுது, பலமாக என்னை யாரோ கீழே தள்ள முற்பட்டது போல இருக்க, சற்று தடுமாறி சுதாரித்துக்கொண்ட நான் கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டு வாசலைவிட்டு உள்ளே சென்றேன்.
இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் வாழும் காலம், உங்களை இந்த பிரபஞ்சம் இப்படித்தான் ஆட்டிவைக்கும். “தற்கொலை எண்ணத்தில் இருக்கின்ற ஒருவனை நான் உன்ன பிடிச்சு தள்ளிவிடுறேன் சாகுறியா என்று கேட்பது போல் அன்று நடந்தது”
காற்று பலமாக வீசியதில் கதவு வேகமாக என்னை தள்ளியிருக்கின்றதை உணர்ந்த என்னுள்,”சாகனும் நினைச்சுட்டு இருந்த இப்ப என்ன தீடீர்னு பயம்?” என்கிற கேள்வி எழுகிறது. இப்படி உங்களுக்குள் சமயங்களில் எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும் உங்களுடைய சிந்தனைகள் இல்லை.
It is this universe .It is God Thing.
அப்பா மேல் இருந்தது அன்பு இல்லை. அப்பாவிடம் செல்ல வேண்டும் என்கிற ஆசையில் நேர்மையும் இல்லை. அவர் மீது அன்பு இருந்து இருந்தால்.அவருக்கு ஒரு ஓய்வு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்திருக்க வேண்டுமே! தவிர அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று நினைத்துக்கொண்டு இருந்திருக்கக்கூடாது.
அன்பும் பொய்! ஆசையும் பொய்!. இந்த உலகத்தில் இருக்க வேண்டுமென்பது தான் நம் அனைவரின் உச்சபட்ச ஆசையாக இருக்கின்றது. அந்த ஆசையைத் தான் துறக்க வேண்டும். ஆனால், ஆசைப்பட வேண்டும்.
மாணிக்கவாசகர் அவரின் ஆசையை பத்துப் பாடல்களில் சொல்லிக் கெஞ்சுகிறார். அதில் ஒரு படலைப்பற்றி முன்னமே ஒரு பகுதியில் பார்த்தோம்.
“கருடக் கொடியோன் காண மாட்டாக்
கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட
பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கேவா
வென்றங் கேகூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே”
“இருளைத் துரந்திட் டிங்கேவா
வென்றங் கேகூவும்”
“இருளைத் துறந்து இங்கே வா என்று அங்கே கூவும்” (அந்த இருட்டை(உலகபற்று) விட்டுட்டு அம்மாட்ட வந்திரு!)
அந்த இருட்டுக்குள் போகாத இங்க வா! என்று ஒரு அம்மா தான் குழந்தையை கூப்பிட்ற மாதிரி நீ என்னை கூப்பிட மாட்டியா! எனக்கு ஆசையா இருக்கே! உனக்கு தெரியலையா!
இங்கு எல்லோரும் இறைவனின் குழந்தைகள், பூங்காவில் விளையாடும் தன் பிள்ளையை ஒரு மூலையில் இருந்து கவனித்து கொண்டு இருக்கும் ஒரு தாய் போல் இறைவன் கவனித்துக்கொண்டு இருக்கின்றார். ஆனால், அவர் நம்மை தடுப்பதில்லை, அழைப்பதில்லை. அவர் நம்மை அழைக்கவேண்டும் என்று நாம் ஆசைப்பட்டதும் இல்லை. மாணிக்கவாசகர் ஆசைப்படுகிறார்.
மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளை என்பு தோல்போர்த்த
குப்பா யம்புக் கிருக்ககில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என்னா ரமுதேயோ
அப்பா காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே
என்னை விட்டு விட்டு; தன் உடலை விட்டு போன அப்பாவை தேடி; அப்பாவுடைய உயிரை தேடி; “அப்பாவை பார்க்கணும்” என்கிற ஆசை இருந்த எனக்கு. இந்த உடல் மேலும் உலக வாழ்வின் மீதும் அதை விட பற்றும் ஆசையும் இருந்தது. ஒரு வகையில் “எனக்கு இதுவும் வேணும் அதுவும் வேணும்”
மாணிக்கவாசகர், தெளிவாகவே இருந்தார், அவருக்கு இறைவனை காண வேண்டும்.
“அப்பா காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே “
ஆனால், அவருக்கும் எங்க போறதுன்னு தெரியாது.
“எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என்னா ரமுதேயோ”
என் ஆரமுதே!(என் ராசா!) நீ இந்த உலகங்களையெல்லாம் கடந்து அப்பால இருக்க!
அவ்வளவு தூரம் எப்படி தனியா போறது! மாணிக்கவாசகருக்கும் பயம் இருந்திருக்கும். ஆனாலும், அவருக்கு இந்த உடம்பில் இருப்பதற்கு விருப்பமில்லை.
என்னைப் பார்! ஏதோ நரம்பெல்லாம் சேர்த்து கொச கொச ன்னு மொய்த்த மாதிரி, எழும்பு தோல் என்று இது ஒரு உடம்பு! குப்பை மாதிரி எனக்கு பிடிக்கலை!என்கிறார்.
“மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளை என்பு தோல்போர்த்த
குப்பா யம்புக் கிருக்ககில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ”
“கூவிக் கொள்ளாய் கோவேயோ” நீயே என்னை கூட்டிட்டு போ!.
தங்கள் பிள்ளைகளை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் பெற்றோர்களை கண்டு அவரக்ளின் பிள்ளைகள், இப்படித்தான் கெஞ்சும் அடம்பிடிக்கும்.”எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல உன் கூட இருக்க தான் பிடிச்சருக்கு நீ கூட்டிட்டு போக மாட்ற”
“சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ்
சிறுகுடி லிதுசிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே”
நான் எப்படி இருக்கேன் பார்! ஒரு சின்ன வீடு (உடம்பு) அதுவும் அழுக்கோடு!
“சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கோடு திரியும்
சிறு குடில் இது சிதைய”
அடுத்த வரிகளில் யப்பா படையப்பா! ராஜாதி ராஜா! மன்னா! என்று வடிவேல் ஒரு நகைச்சுவை காட்சியில் ரஜினியிடம் கெஞ்சுவது போல
“கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே”
தேவா! தேவருக்கு அரியோனே ! சிவனே !
கொஞ்சம் என் முகத்தைபார்த்து என்னை அழைத்துக்கொள்மாட்டாயா! ஆசையா இருக்கு!
“சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன்”
மாணிக்கவாசகரின் ஆசை மட்டும் தான் நியாயமானது. எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை எந்த இடத்திற்கும் சும்மா போகட்டும் என்று அனுப்ப மாட்டார்கள் தானே! அப்படி பிள்ளைகள் சென்றாலும் பெற்றவர்கள் அங்க போகாத என்று அதட்டி அழைப்பார்கள் தானே!
ஹரி கிருஷ்னன் என்னை வந்து அழைத்தது போல, இந்த மாயை-பாசம், பசு ஆகிய உயிரை அழைத்து போனது கண்டும். இந்த உலக மாயையைக்குள்(பாசம்) நம் உயிர்(பசு) கட்டப்பட்டு இருப்பது கண்டும் நம்மை அழைத்துக்கொள்ளாமல் இருக்கின்றானே!அப்படியென்றால் இந்த இறைவன் நம்மை அழைத்துக்கொள்ள வேண்டும் என்று தானே நாம் ஆசைப்பட வேண்டும்.
நான், அந்த பாட்டி, அந்த அப்பா அம்மா தர்ஷன் இவர்கள் எல்லோரும் எப்படி இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்னர் எந்த தொடர்பில்லாமல் இருந்தோமோ? இனி இந்த வீட்டை விட்டு சென்ற பிறகு எப்படி எங்களுக்குள் எந்த பெரிய பந்தமும் இருக்க போவதில்லையோ அதே தான் இந்த உலகமும், அதில் நம்மோடு இருப்பவர்களும்.
ஆனால், நம்முடைய ஆசைகள் எல்லாம் இந்த உலகத்தின் மீதும், இந்த உலகத்தில் நம்மோடு வாழ்பவர்கள் மீதும் அல்லவா! இருக்கின்றது.
ஏன்? இந்த திருவாசகம் பகுதியில் நீங்கள் சொல்லும் அனுபவ உவமைகள் பெரும்பாலும் சோகமாக இருக்கின்றது.
53 வயசு அப்பா 82 வயசு அப்பத்தா இறந்த பொழுது என்னையும் கூட்டிட்டு போ என்று விழுந்து புரண்டு அழுதார்.
அந்த ஓலத்திற்கு சற்றும் குறைவில்லாதது தான் திருவாசகம். மாணிக்கவாசகருக்கு பரம உண்மையை அறிந்துஇருக்கின்றார்.
அவருக்கு ‘அம்மா யாரு? அப்பா யாரு?’ எல்லாம் தெரிஞ்சு இருக்கு ! இறைவனிடம் இருந்து வந்து இந்த உலக இருளில் கிடக்கும் உயிர்கள் இறைவனிடம் தானே சேர வேண்டும்.இறைவன் தானே அம்மா! அப்பா! எல்லாம்.
உண்மையில் ஆத்மா இறைவனைத் தேடி புலம்பிக்கொண்டு தான் இருக்கும் அதை மாணிக்கவாசகர்கள் போன்றவர்கள் உணர்ந்து இருக்கின்றார்கள்.
நீ இங்க இரு! அம்மா வேலைக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துருவேன் என்று பொய் சொல்லி பிள்ளைகளை பள்ளியில் விட்டுச் செல்லும் பெற்றோர்களை அல்லது விடுதியில் விட்டுச் செல்லும் பெற்றோர்களை நினைத்து அவர்களின் பிள்ளைகள் எப்படி புலம்பம் அதற்கு சற்றும் குறைவில்லாதது திருவாசகம்.
மிடைந்தெலும் பூத்தைமிக் கழுக்கூறல்
வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
சோத்தம்எம் பெருமானே
உடைந்து நைந் துருகி உன்னொளி நோக்கி
உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே
உன்னை நினைத்து மெலிந்து வருகிறேன் நான்! அவ்வளவே அந்த பாடலின் emotion.
அடுத்த பாட்டில் எல்லா அன்பர்களையும் அழைத்துக்கொண்ட நீ என்னை மட்டும் இங்கே தவிக்க விட்டு சென்றதெப்படி! உன் சிரிப்பு இருக்கே! அதைப் பார்க்க ஆசையா இருக்கு!
எய்த்தேன் நாயேன் இனி யிங்கிருக்க
கில்லேன் இவ் வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா
மலர்ச் சே வடியானே
முத்தா உன் தன் முகவொளி நோக்கி
முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே
மெய்யான அன்பும் பற்றும் இறைவன் மீதானதாக தான் இருக்க முடியும். மற்றதெல்லாம் இந்த உடம்போடு இருக்கும் நமக்கு தோன்றும் மாயையையே.
நம்முடைய திருவாசகம் பகுதியில் பொம்மை காதல் போன்ற அனுபவங்களை நிறைய எழுத வேண்டும் என்று ஆசை. அம்மாவை தேடி அழுகின்ற பிள்ளைக்கு எதை தந்து சமாதானம் சொன்னாலும் அது அழுகையை நிறுத்தாது. அது மாதிரியாக இறைவன் அவனோடு தன்னை சேர்த்துக்கொள்ளும் வரை விடாது அழுது அடம்பிடித்து தீர்த்து இருக்கின்றார் மாணிக்கவாசகர். அவரின் அத்தகைய அந்த உணர்வின் வெளிப்பாடாகவே திருவாசகம் இருக்கின்றது.
“இனி யிங்கிருக்க
கில்லேன்”
அவருக்கு கார் வாங்க வேண்டும் என்கிற ஆசை இல்லை! அப்பா தூக்கிட்டு போக வேண்டும் என்கிற ஆசை இல்லை இறைவனே தூக்கிட்டு போக வேண்டும். இறைவனிடம் போக வேண்டும் அது தான் ஆசை!
“உன் தன் முக ஒளி நோக்கி
முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப் பட்டேன்”
எத்தனை பெரிய ஆசை! Literally Lord Shiva is Manikavasagar’s Crush. காதல் கவிதைகள் எல்லாம் திருவாசகத்திடம் தோற்று போகும். காதல் கடிதங்கள் எழுத திருவாசகம் நல்ல reference நூலாக இருக்கும். (I personally Love those lines)
நாம் வளரும் போது நம் ஆசைகள் வளரும். நம் ஞானம் வளரும் பொழுது அது இன்னும் பெரிதாய் வளரும்.
அதுவும் உடலில் இருந்து கொண்டே ஒரு மனிதனால் இறைவனை இத்தனை காதலித்து இத்தனை தூரம் தேடியிருக்க முடியுமா! இந்த உடம்பு பெண்களை கண்டால் ஆசைப்படுகிறது, அது உன்னை தேட மாட்டேனுது என்று உடம்பின் இயல்பான ஆசைகளை உடம்பில் இருந்துகொண்டே வெறுத்து, நீ வந்து கூட்டிட்டு போ! எனக்கு உன்னை பார்க்கணும் அது தான் ஆசை! என்று ஒருவரால் இருந்திருக்க முடியுமா! இப்படி கேள்விகள் உங்களுக்கு இன்னும் எழுமானால்?
இந்த window ஐ மூடுங்கள் google இல் ஆசைப்பத்து என்று தேடுங்கள்.
When You try to relate the human emotions with Thiruvasagam you will really get melted.
சத்தியமான வார்த்தைகள், “திருவாசகத்திற்கு உருகார் வேறு ஒரு வாசகத்திற்கு உருகார்”