நானும் ஆசிரியர் விஜியும் கதைக்கும் பொழுது எங்கள் உரையாடல்கள் நேரக்கணக்கின்றி நீண்டு கொண்டிருக்கும். எங்கள் உரையாடலின் மையமாக இதுதான் இருக்கும் என்று சொல்ல முடியாது. நாங்கள் இது செய்ய வேண்டும், அது செய்ய வேண்டும் என்று பல திட்டங்களைத் தீட்டி, அதில் வெகுசில மட்டுமே நடந்தேறியிருக்கிறது.
நான் ஆசிரியர் விஜியிடம், “நாம், நமது தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டால் கூட நிறைய பேர் கேட்பார்கள், பெரிய தாக்கங்களை உண்டு செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், அதில் இருந்த சிக்கல்கள், என்ன எப்படி இருக்க என்று ஆரம்பித்து, நிகழ்கால அரசியல்வாதிகளை வசைபாடி, சினிமா பக்கம் போய் திருவாசகம் வந்து நிற்போம். இதில் அரசியல் பேச்சுக்களைக் கத்தரிக்காமல் வெளியிட்டால், எல்லாக் கட்சித் தொண்டர்கள் எங்கள் வீடு தேடி வர வாய்ப்பிருந்தது. அதன் காரணமாய் அதைச் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. எங்களின் பல திட்டங்கள் போல் அதுவும் இயல்பாய்க் கிடப்பில் போடப்பட்டது.
இப்படி எங்கள் பேச்சின் இடையில் ஒரு நாள் அவர் இந்த ‘வன்புலால் வேலும் அஞ்சேன்‘ திருவாசகத்தைப் பற்றி கேட்டார். என்ன கேட்டார் என்பது சரியாக நினைவில்லை. அதென்ன வன்புலால் வேல் என்று கேட்டாரா இல்லை ஏன் வன்புலால் மட்டும் குறிப்பிட்டு கேட்டாரா என்று நினைப்பில் இல்லை. நான் எல்லாம் தெரிந்தவன் அதனால் அவர் என்னிடம் சந்தேகம் கேட்டார் என்றெல்லாம் இல்லை. எங்களுக்கு இப்படி எழும் சந்தேகங்களைப் பற்றியும் எங்களுக்குள் பேசிக்கொள்வோம். எங்கள் பேச்சின் இடையிலேயே யாருக்கேனும் ஒருவருக்குத் தெளிவு பிறந்துவிடும். சில சமயங்கள் அப்படி நடக்காமலும் போகும்.
என்னை விடத் தமிழ் இலக்கணம் கொஞ்சம் அதிகம் அறிந்தவர் என்கிற முறையில், இரு தினங்களுக்கு முன் நான் அவரிடம்,
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்”
என்கிற குறளில் மன்னன் என்கிற எழுவாய் எப்படி கெடும் என்கிற விகுதி பெறும் என்று கேட்டேன். இன்று வரை எங்களுக்கு நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் கிடைக்கவில்லை. இலக்கணம் தாண்டி கெடும் என்று முடித்ததற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்றெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறோம். இது இரு தினங்களுக்கு முன் நடந்தது.
ஆனால், வன்புலால் வேலும் அஞ்சேன் வாசகம் பற்றி பேசி நிச்சயம் ஓராண்டுக்கும் மேலாக இருக்கும். ஒரு விளக்கத்தை எடுத்துப் பேசிவிட்டு, திருவாசகம் பற்றி எழுதி நாளானது, நீ இந்த வாசகத்தை நினைவுப்படுத்திவிட்டாய், அடுத்து இதை எழுதலாம் என்று சொல்லி மாதங்கள் பல ஆகிவிட்டது.
ஒருவன் வேலொடு வருகிறான் என்றாலே அவனுக்கு அஞ்ச வேண்டும் தானே? அது என்ன வன்புலால் வேல்? ஒருவர் வேல் கொண்டு உங்களைத் தாக்க வருகிறார் என்றால் உங்களுக்கு பயம் ஏற்பட்டுவிடுமா? பயம், அந்த வேல் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தது. வலிமையான தசைகளை உடைய ஒருவன் வேல் கொண்டு தாக்க வந்தால் தான் பயம் வரும். வேல் அளவு மட்டுமே இருக்கும் ஒரு நோஞ்சான் வேல் கொண்டு தாக்க வந்தால் நமக்கு எப்படி பயம் வரும்?
ஆனால், மாணிக்கவாசகர், நம் நடிகர் சரத்குமார், அர்னோல்ட் மாதிரி (body builders) வலிமையான தசைகள் கொண்ட ஒருவர் வேல் கொண்டு தாக்க வந்தாலும் அஞ்ச மாட்டேன் என்கிறார். என்ன தைரியம் இந்த ஆளுக்கு?
அவரிடம் தைரியம் இருந்ததா? அவர் அந்தப் பாடலை எப்படிப் முடித்தார் என்பதில் தான் பதில் இருக்கிறது.
வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
வன்புலால் வேலும் அஞ்சேன்-புரிகிறது. வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் – “ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை” என்கிற நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் நமக்கு ஞாபகம் வருகிறது. ஒரு பெண் ஒரு ஆணைத் திரும்பி கடைக்கண்ணால் பார்த்தால், அது அவனை என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் மாற்றும் என்று எந்தப் பெண்ணுக்கும் ஒரு ஆணால் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஆண்கள் இந்த வரியைப் புரிந்துகொள்வார்கள். வளைக்கையார் கடைக்கண் அஞ்ச வேண்டிய ஒன்றுதான். ஆனால், அதற்கும் அஞ்ச மாட்டேன், ‘நெக்ஸ்ட்’ என்கிறார் மாணிக்கவாசகர். யாருக்குத் தான்யா நீ பயப்படுவ?
அன்பு இல்லாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் மாறே. அது ஏன் அப்படி?
வலுவான தோற்றம் கொண்டவர்களைப் பார்க்கும் பொழுதே நமக்கு இயல்பில் ஓர் அச்சம் ஏற்படும். எனக்கு ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி முதல் நாள், நல்ல உயரம், நல்ல உடல் வாகு, கல்லூரிக்கு வந்த முதல் நாளே அடர்த்தியான தாடியுடன் ஒரு உருவத்தை என் வகுப்பில் பார்த்ததும், ‘யாரு இவன் பெரிய மனுஷனாட்டம் இருக்கான், எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருப்போம்’ என்று நினைத்தேன். கிரிக்கெட் விளையாடச் சென்ற பொழுது ஒருவன் கைலியோடு வந்தான், அவனைப் பார்த்தும் ஒரு தயக்கம், தள்ளி தான் இருக்க வேண்டும் என்கிற அச்சமும் இருந்தது. இதில் இந்த அடர் தாடிக்காரன், நம் நண்பனான பின் நம்மிடம் சொன்ன வார்த்தைகள், “மச்சான் ஃபர்ஸ்ட் நாள் உன்னைப் பார்த்து யாருடா இவன் இவ்வளவு உயரமா இருக்கான், அடிச்சா திருப்பி அடிச்சுருவான் போல என்று நினைச்சேன்”.
அவனுடைய உடல்வாகிற்கு நான் அவனை அடிக்க வாய்ப்பிருப்பதாய் அவன் விளையாட்டுக்கு நினைத்திருந்தால் கூட அதில் நியாயமில்லை. இருந்தாலும் அவனுக்கு அப்படியொரு நினைப்பு இருந்திருக்கிறது. நாயைப் பார்த்து நாம் பயந்தால், நாய் நம்மைப் பார்த்துப் பயப்படும். அந்த அனுபவம் பெற்றவர்களுக்கு இது என்ன மாதிரியான சூழல் என்று பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். நாமும் ரவுடி முகம் கொண்டவராகத் தான் இருக்கிறோமோ என்னவோ?!
இன்று நாங்கள் எல்லோரும் நண்பர்கள்.
போர்க்குணம் கொண்ட வலிமையான உடலைப் பெற்ற ஒருவன் இருக்கிறான் என்றால் அவனைக்கண்டு நான் ஏன் அஞ்ச வேண்டும்? அவனிடமும் அன்பு இருக்கும் தானே, அவனைச் சுற்றியும் மனைவி, மக்கள், நண்பர்கள் இருப்பார்கள் தானே. நான் அவன் மீது அன்பு செய்தால் அவன் என் மீது அன்பு செய்யப் போகிறான். அவனைக்கண்டு நான் ஏன் அஞ்ச வேண்டும்? எனக்கும் , என் நண்பனுக்கும் இருந்த அச்சம் எதைப்பற்றியதாக இருந்தது? கோபம் பற்றியதும் சண்டை பற்றியதுமாய் இருந்தது. இப்படி உடல்வாகு கொண்ட ஒருவனிடம் வம்பு வைத்துக்கொண்டால் என்ன ஆகும்? இத்தனை உயரமாக இருக்கிறவனோடு சண்டை வந்தால் என்னவாகும்? என்கிற எண்ணங்கள் தான் அச்சத்தைத் தருகிறது. இன்றுவரை அடித்துக்கொள்ளும் அளவிற்கு எங்கள் இருவருக்கும் சண்டை வந்ததில்லை. காதலர்களுக்கு இடையில் வரும் ஊடல் போன்ற சில கோபங்கள் இருந்திருக்கிறது. சமாதான முயற்சிகள் நடந்து இருக்கிறது. இந்த இடத்தில் உடல் வலு ஒரு வேலையும் செய்யவில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த அன்பு தான் எல்லா வேலைகளையும் செய்கிறது. கோபம், சமாதானம் என்று நடந்த எல்லாவற்றிலும் அன்பு தான் இருந்தது. அன்பு இருக்கின்ற இடத்தில் அச்சத்திற்கு என்ன வேலை?
இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில், நாயகனை மிரட்ட நாயகியின் தந்தை ஒரு ரௌடியை அணுகுவார். கொலைகள் செய்யக்கூடிய கதாபாத்திரம் (மாணிக்கவாசகர் மொழியில் சொன்னால் வன்புலால் வேல் வீரர்). நாயகன் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அந்த ரௌடியிடம் அன்பு காட்டுவார், மெய்யான அன்பு காட்டுவார். அந்த அன்பு என்ன செய்யும்? உயிர்களைக் கொல்லும் அந்த கதாபாத்திரம், தன் மீது அன்பு காட்டிய நாயகனுக்காக உயிர்விடும். கதைதானே என்பீர்கள் என்றால், நிஜத்திலும் இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது.

நீங்கள் இந்த உலகத்தின் மீது அன்பு செய்யுங்கள், இந்த உலகமே உங்களுக்காகச் சண்டை செய்யும்.
இந்த வாசகத்தில் அதுதான் மையம்.
வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்கிறாரே, காமம், காதல், இவையெல்லாம் ஒரு மனிதனின் மற்ற நோக்கங்களைக் குறுக்கி அதன் பின்னே அவனை ஓடச் செய்யும். அதையும் கூடக் கடந்து விடலாம். அங்கும் அன்பு இருந்தால் பின்னால் ஓடினாலும் அவன் மற்ற நோக்கங்களுக்குப் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
எலும்பெல்லாம் உருக நோக்கி அம்பலத்தில் ஆடுகின்ற என் பொலாமணியை (இறைவனை) துதித்து, அவன் திருவருளைப் பெறாத அன்பில்லாதவர்களைக் கண்டால் அஞ்சுமாறே.
இறைவனை வணங்காதவரைக் கண்டால் அஞ்சுவோம் என்று சொல்லியிருக்கலாம், அல்லது அன்பில்லாதவர்களைக் கண்டால் அஞ்சுவேன் என்று சொல்லியிருக்கலாம். எதற்காக இரண்டையும் முடிச்சுப் போடுகிறார்? அன்பு இருக்கிற ஒருவனால், நம் மீது அருள் செய்கிற இறைவன் பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்க முடியாது. அன்பு எங்கு இருக்கிறதோ அதுவே தான் இறைவன். ‘அன்பே சிவம்’ என்று யார் சொல்லியிருக்கிறார்கள்? கமல்ஹாசனா! இல்லை. திருமூலர்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
எலும்பெல்லாம் உருக அருள் செய்கிறவன் என்று பல இடங்களில் சொல்கிறார் மாணிக்கவாசகர். நீங்கள் உங்கள் மீது யாராவது அன்பு செய்யும் தருணங்களை நினைத்துப் பாருங்கள், உங்கள் இறுக்கம் தளர்ந்து நெகிழ்ந்து குழைந்து போவீர்கள். சாதாரணமான நம்மோடு நெருங்கிப் பழகுகிறவர்கள் செய்கிற அன்பே நம்மை அப்படி குழையச் செய்கிறது என்றால், இறைவனின் நிலையோடு நம்மை ஒப்பிட்டால் நாம் ஒரு தூசுகூடக் கிடையாது. அந்த இறைவன், ஒரு தூசு அளவு கூடப் பெறுமானம் இல்லாத நம் மீது அருள் செய்யும் பொழுது, நம் உடலில் கடினமானதாக இருக்கும் எலும்பும் உருகும் என்கிறார். இது ரஜினிகாந்த் மாதிரியான ஓர் ஆளுமை இறங்கி வந்து அவர் ரசிகர்களுடன் கைகுலுக்குவதைப் போன்றது; உங்கள் முதலாளி உங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்து வேலைகளைச் செய்வதைப் போன்றது, நீங்கள் மெச்சிப் பார்த்த ஓர் ஆசிரியர் உங்களைப் பெரிதும் மெச்சுவதைப் போன்றது. இந்தத் தருணங்களிலெல்லாம் எப்படி நெகிழ்ந்து குழைந்து போகிறோம்! அதை விட மேலான அருளாக இறைவனின் அருளைச் சுட்டவே தான் ‘எலும்பெல்லாம் உருக அருள் செய்த’ என்பதை அநேகமான இடங்களில் சொல்கிறார் மாணிக்கவாசகர்.
வீரம், கோபம், வலிமை கொண்டவரிடத்திலும் கூட அன்பு இருந்தால் அஞ்ச வேண்டியதில்லை. அன்பே இல்லாதவர்களிடம் கோபமும், வீரமும், வலிமையும் இல்லாவிடினும் கூட நாம் அஞ்ச வேண்டும். காரணம், அன்பில்லாதவர்கள் இறைவனுக்கு அஞ்சுவதும் இல்லை, அவன் அருளை நினைத்துப் போற்றுவதும் இல்லை.
அன்பு செய்து சேர்ப்போம் நமக்கான ஒரு படையை!