நாம் எழுதி வந்த திருவாசகத் தொடரில் முந்தைய பகுதி எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. திருவாசகம் பற்றி எழுதுவதெல்லாம் தானாக நடக்க வேண்டும். நாம் திருவாசகம் பற்றி எழுத ஆரம்பித்த பொழுது, முதல் பகுதி அப்படித் தானாக ஒரு நாள் நடந்ததுதான். திட்டமிட்டு, தேடிப் படித்து, அர்த்தம் தெரிந்துகொண்டு எழுதுவதில்லை.

வீட்டில் அப்பா ஒரு திருவாசகப் புத்தகம் வைத்து இருந்தார். பல வருடங்களாகக் கண்ணில் படவில்லையென்றாலும், ஏதேனும் பெட்டிக்குள் இருக்கும் என்று அதைத் தேடவில்லை. இன்றைய நவீன உலகில் எல்லாம் விரல் நுனியில் கிடைக்கிறது. நான் தேடவில்லை என்றாலும்கூட, அந்தப் புத்தகத்தை எப்படியும் கண்டுவிட வேண்டும் என்கிற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. திருவாசகம் இணையத்தில் கிடைத்துவிடும் தான். ஆனால், அப்பா வைத்திருந்த திருவாசகப் புத்தகம் – நான் முதன்முதலில்,

“கழற்சே வடிகள் கழுமத் தழுவிக் கொண்டெய்யா தென்றன் தலைமேல் வைத்து எம்பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயால் அரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற்றரசே ஆசைப்பட்டேன்”

என்கிற வாசகத்தைப் படித்துச் சிலிர்த்த அனுபவத்தைத் தந்த அந்தப் புத்தகத்தை மனம் தேடத்தானே செய்யும்? கீதை, திருவாசகம், பைபிள் என எல்லாம் வாசித்தாலும் கூட, சில பிணைப்புகள் மாயை என்று அறிவால் அறிந்திருந்தாலும், மனம் இந்தப் பழைய புத்தகத்தின் மீது கொண்டுள்ள செண்டிமெண்ட் போல சில விஷயங்களின் மீது பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. இந்தப் பிணைப்புகளில் இருந்து நம்மை விடுவிக்க வல்லவன் இறைவன் ஒருவன் தான்.

இந்த இறைவன் மிகச் சமீபத்தில் என்ன செய்துவிட்டான்? அம்மாவை உலகப் பிணைப்புகளில் இருந்து விடுவித்துவிட்டான். எப்படித் திருவாசகம் விரல் நுனியில் கிடைக்கும் என்றாலும் பழைய புத்தகத்தை மனம் தேடியதோ, அதேபோல ‘அம்மா இதற்கு மேல் கஷ்டப்படாமல் விடுதலை கிடைத்தால் போதும்’ என்று நினைத்த மனது, அம்மா மறைந்ததும் “அம்மா எங்கே?” என்று ஏங்குகிறது.

கிழிந்த சட்டைகளை மாற்றிக்கொள்வது போல, பழைய உடல்களை விட்டுவிட்டு ஆன்மா புது உடல்களை மாற்றிக்கொள்கிறது என்று கீதையில் படிக்கிறோம்; புரிகிறது. ஆனாலும், இங்கே இந்த உலகில், இந்த உடலில் சிக்கிக்கொண்டிருக்கும் பொழுது, அதை நம்மால் ஏற்க முடிவதில்லை. அம்மா கஷ்டப்பட்டது போதும் என்று நினைத்த அதே மனது, ஆன்மா இல்லாத அம்மாவிடம் உட்கார்ந்து கொண்டு “எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டீர்கள்?” என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

அம்மா தனது 53 வருட வாழ்க்கையில் 36 வருடம் குடும்பத்திற்காக ஓடிக்கொண்டிருந்திருப்பார். இந்த உழைப்புக்கான பலன்களை அறுவடை செய்யும் காலத்தில் அவர் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை அடைந்துவிட்டார். அப்பாவும் அதே கதை தான். அம்மாவின் முறை வந்த பொழுது மனம் கொஞ்சம் வளர்ந்திருந்தது, ஆனாலும் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அறிவுக்கு இருக்கின்ற ஞானம் மனதிற்கு இருக்குமா என்று தெரியவில்லை. புத்தர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் எப்படியிருந்தார்கள் என்று தெரியவில்லை. சித்தர்கள் கூடத் தடுமாறியதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

வீட்டில் இருந்த திருவாசகப் புத்தகம் எப்படி இருக்கும் என்பது அம்மாவிற்குத்தான் தெரியும். இனி அம்மாவிடமும் கேட்க முடியாது என்று ஆகிவிட்டது. வேலைக்காக மீண்டும் ஊர் திரும்பும் பொழுது, மனைவி ஒரு புதிய திருவாசகப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார். மனம் இருந்த நிலையில், “பாம்பு கடித்தவர்களையெல்லாம் நாயன்மார்கள் சிவன் அருள் கொண்டு உயிர்ப்பித்ததாகச் சொல்கிறார்கள், நமக்கு ஒன்றும் அப்படி நடக்கவில்லையே” என்கிற விரக்தியில் அந்தப் புத்தகத்தை வாங்கிய பொழுது “என்னத்தை…” என்று இருந்தது.

ஊர் வந்து சேர்ந்ததும் சில நாட்கள் அந்தப் புதிய புத்தகம் அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்தது. நல்ல புத்தகங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பது கூட நல்லது தான். ஒரு நாள் யாரோ எப்போதாவது ஒரு வரி படிக்கலாம். அந்த ஒரு வரி வாசிக்கும் நபரை ஏதேனும் நல்ல விதத்தில் மாற்றலாம்.

வேலை முடிந்து வந்து, பேசுவதற்கு ஆள் இல்லாமல், சலிப்பான மனநிலையில் இருந்த பொழுது, போனைத் தள்ளிக் கீழே வைத்தேன். அலமாரியைத் திறந்தேன். அப்பா வைத்திருந்ததை விடத் தடிமனான புத்தகம். ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்தேன். 230-வது பாடலாக இந்த வாசகம் இருந்தது:

“பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன் தன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.”

“பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை” – இந்த வரி படித்ததும் அப்படியே மனம் நின்று விட்டது. மாணிக்கவாசகருக்கும் நமக்கிருந்த அதே பிரச்சனை இருந்திருக்கிறது.

இறைவன் புண்ணியத்தில், உற்றார் சுற்றாரின் பேருதவியால் நமக்கு இந்த வேலை கிடைத்தது. வேலை கிடைத்த முதல் நாளில் நமக்கிருந்த தேவையை விடவும் பன்மடங்கு அதிகமான சம்பளம். ஆரம்ப வருடங்களில், “நான் எதுக்குச் சம்பாதிக்கிறேன்? அப்பா இல்லையே” என்கிற எண்ணம் உறுத்திக் கொண்டே இருந்தது. “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் ஒரு பக்கம் மண்டைக்குள் ஓதுகிறார்.

வீட்டை விற்கக் கூடாது என்றும், வேலையை விட்டுவிடக் கூடாது என்றும் அம்மா பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்தில், நானே இதெல்லாம் தேவை தான் என்று உணர்ந்து கொண்ட ஓராண்டில், தன் கடமை முடிந்தது என்று அம்மா சிவனிடம் சென்றுவிட்டார். வாழ்க்கை எப்படியிருக்கிறது பாருங்கள்! நான் வேலைக்குச் செல்கிறேன், சம்பாதிக்கிறேன், ஆனால் தேவைகள் அதை விடப் பெரிதாகியிருக்கிறது.

வளர்ந்ததும் ஒன்று புரிந்தது, யாரும் யாருக்கும் கைமாறு செய்ய முடியாது. இறைவன் நினைத்தால் மட்டுமே ஒருவர் மூலம் உதவி கிடைக்கும். பெற்றோர்களுக்கு அவர்கள் தந்த அதே சந்தோஷத்தை நம்மால் திருப்பித் தர முடிவதில்லை. நாமாகச் சிலருக்கு உதவ நினைத்தாலும், யாருக்கு எப்போது உதவி கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் தான் நம்மால் உதவ முடிகிறது.

விலங்குகளின் வாழ்க்கை எளிமையானது. ஆனால் மனிதர்கள் யாருக்காகச் சம்பாதிக்கிறார்களோ, அவர்களுடன் செலவழிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள். “இந்தக் காசுக்காக இப்படி ஓடுகிறோமே, எதுக்கு?” என்று மனம் அனத்திக்கொண்டுதான் இருக்கிறது. மாணிக்கவாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின் நினைக்கிறார்: “வீணாக இந்தச் செல்வத்தை மெய்யென்று தேடிக் கொண்டிருந்தேன், அவன் வந்து என்னை ஆட்கொண்டுவிட்டான்” என்கிறார்.

மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட பின் அதை நினைத்து வருந்துகிறார். நமக்கோ, இறைவனால் ஆட்கொள்ளப்படாமலேயே இந்த எண்ணம் வருகிறது. ஆனாலும், என்னையும் வந்து ஆட்கொள் இறைவா என்று கேட்கிற தைரியம் இல்லை. உலக வாழ்க்கையில் அத்தனை அழுந்திக்கிடக்கிறோம்.

செல்வம் பொய்யானது சரி, ஆனால் உலக வாழ்க்கைக்குத் தேவைப்படுகிறது. ஆனால் நாமோ அதில் அழுந்தி, நம்மைச் சுற்றி நாம் ஏற்படுத்திக்கொண்ட மாயத் தேவைகளுக்காகத் நாள்தோறும் அதில் மூழ்கிக் கிடக்கிறோம். இதுதான் ‘Realization’. நாம் உணர்ந்து என்ன செய்ய, இவ்வுலகில் இருக்கிற வரை ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது. நாளை வேலைக்குச் செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *