வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.
நானும் என் நண்பன் விஜயனும் நிறைய விஷயங்கள் பேசுவோம்.விஜயன், அவன் படித்த புத்தகங்கள் பற்றியும்,அவன் பழைய பார்த்த பழைய திரைப்படங்களை பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இது வழக்கமான ஒன்று.
ஒரு நாள், திருவாசகத்தில் இருந்த ஒரு வாசகம் பற்றி அவன் சொன்ன விஷயம், இதை இப்படியும் அர்த்தம் கொள்ளலாமா! என்ற ஆச்சரியத்தை தந்தது.வாசகத்திற்கு வாசகம் ஆச்சரியங்களை கொண்டதன் காரணமாக தானே அதனை திருவாசகம் என்கிறோம்.
ஆச்சரியமான அந்த வாசகத்தைப்பற்றி எழுத நினைத்தபொழுது மற்றொரு நண்பனின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது.
2012ம் வருடம் என்று நினைக்கின்றேன்.அப்பொழுது தான் android போன்களின் புழக்கம் அதிகரிக்க தொடங்கியிருந்தது.
நாங்கள் நண்பர்கள், எல்லோரும் வேலை தேட தொடங்கிய காலம் அது.வேலை தேடுவதில் இருக்கும் பெரிய வேலை, resume தயார் செய்வது. நீங்கள் வேலைக்கே இன்னும் செல்லாமல் இருக்கும் பொழுது அந்த resume இல் ஒன்றரை பக்கத்திற்கு மேல் உங்களால் என்ன புராணம் எழுதிவிட முடியும்! ஆனாலும், ‘இது இப்படி இருக்க கூடாது; அது அப்படி இருக்க கூடாது ‘என்று உங்கள் resume ஐ பார்பவர்களெல்லாம் சில பரிந்துரைகளை கொடுப்பார்கள்.அத்தனையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் எல்லோரும் வேலை தேடி சில மாதங்கள் வரை எந்த வேலையும் அமையவில்லை. நான் சொன்ன அந்த இன்னொரு நண்பன், அவனுடைய ஊருக்கே சென்றுவிட்டான்.அங்கே அவனது ஊரில்,ஒரு வேலை சம்மந்தமான ஒரு விளம்பரத்தை காண்கிறான்.அந்த விளம்பரத்தில் இருந்த நிறுவனத்தின் பெயரை அவன் முன்னமே கேள்விப்பட்டு இருக்கின்றான். எங்களிடமும் கூட சொல்லியிருக்கிறான்.
நாங்கள் படித்த படிப்பிற்கும் அவன் பார்த்த அந்த விளம்பரத்தில் இருந்த வேலைக்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லை.அது ஒரு IT நிறுவனம். தானும் IT நிறுவனத்தில் சேர்ந்து விடலாம் என்று எண்ணிப் படிக்கும் பொழுதே சில course களில் சேர நினைத்தான். ஆனால்,சில காரணங்களால் சேர முடியாமல் போனது. அதோடு முழுமனதோடு அவன் அந்த course களில் சேர நினைக்கவில்லை.
அந்த விளம்பரத்தை அவன் பார்த்த மாத்திரத்திலேயே அந்த நிறுவனத்திற்கு செல்ல தீர்மானித்து இருப்பான் என்று எங்களுக்கு நிச்சயமாக தெரியும். கண்டிப்பாக அங்கே வேலைப்பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவன் அங்கே சென்றிருக்க மாட்டான்.
ஒரு சனிக்கிழமை,விளம்பரத்தில் குறிக்கப்பட்டிருந்த தேதியில், வேலைக்காக ஒரு நேர்காணலுக்கு செல்கிறேன் என்று யாரிடமும் சொல்லாமல், கிளம்பிச் செல்கிறான். அவனுக்கு அந்த நிறுவனத்தின் பெயர் மட்டும் தான் தெரியும்.விளம்பரத்தில் இருந்த முகவரியை google map இல் தட்டி ஒரு வழியாக அந்த முகவரியை அடைந்த பொழுது அவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள். அங்கே வெளியில் இருந்து பார்ப்பதற்கு சினிமாக்களில் காட்டும் ஆடம்பர வீடு போல ஒரு தோற்றம் கொண்ட ஒரு வீட்டை காண்கிறான். அது தான் அவன் கூகிளில் தேடிய முகவரி. அங்கு தான் அந்த நிறுவனம் செயல்ப்பட்டு கொண்டிருந்தது.
உள்ளே சென்ற அவனை, மேலே மாடிக்கு அனுப்பி வைத்தார்கள்.அவனைப்போலவே ஆண்கள், பெண்கள் என்று இன்னும் நிறைய பேர் அங்கே வந்து இருந்தார்கள்.அத்தனை பேர் இருந்தாலும் யாரைப் பற்றியும் அவன் சட்டை செய்யவில்லை.
வீட்டில் இருந்து கிளம்பியது முதலாகவே அருகில் யார் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு கவனமும் அவனுக்கு இருக்கவில்லை.
அவனைச்சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருந்தது.திரும்பி யார் இருக்கின்றார்கள் என்று கூட அவன் பார்க்கவில்லை.
அவனுடைய கண்களும் கழுத்தும் துளியும் அசையவில்லை; ஆனால், அவனுடைய கவனம் சுற்றியும் அவளையே தேடிக்கொண்டு இருந்தது.
அவனைச்சுற்றி இல்லாமல் இருந்த அவனுடைய கவனம் அவளைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் தான் இருந்தது.அந்த கவனம் சுற்றியும் அவளை மட்டுமே தேடிக்கொண்டு இருந்தது. அவன் வேலை தேடி அங்கே செல்லவில்லை. அவளைத்தேடியே சென்றிருந்தான்.
பள்ளிப்பருவத்தில் இருந்தே அந்த பெண்ணுடன் தொடர்ந்து நட்பில் இருக்க வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு. ஆனாலும் அப்படியான ஒரு வாய்ப்பு அமையவே இல்லை. இடையில் சில நாட்கள் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் அவள் இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்ததைப் பற்றி அவன் தெரிந்துகொண்டான். அந்த சில நாட்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் தொடர்பில் இல்லை.
அப்படி சூழலில் தான்,வேலை கிடைக்கிறதோ இல்லையோ. அங்கு சென்றால் ஒருவேளை அவளைப் பார்த்துவிடலாம் என்கிற எண்ணத்தில் கிளம்பிச்சென்றான்.
முதல் சுற்று எழுத்து தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களிடம் ஒரு படிவம் தரப்பட்டது.அந்த படிவத்தில் சுயவிவரங்களோடு அந்த நிறுவனத்தில் பணி செய்யும் யாரையும் தெரியுமென்றால் அவர்கள் பெயரை குறிப்பிடச் சொல்லி கேட்டு இருந்தார்கள்.
இவனுக்கும் அந்த படிவம் கொடுக்கப்பட்டது. அதுவரையிலுமே அவனுடைய கவனத்தில் அவள் சிக்கவேயில்லை.
திரும்பிப்பார்க்காமலேயே எப்படி தெரியும்?
அவனுக்கு தெரியும்.
படிவத்தை முழுதும் பூர்த்திசெய்து விட்டான். இன்னும் ஒரு விவரம் மட்டும் எழுதப்படாமல் இருந்தது. ஒரு பெயர் எழுத வேண்டும். அதனை எழுதிவிட வேண்டும் என்று அத்தனை ஆசை.ஒரு வெற்று காகிதத்தை கொடுத்து அந்த பெயரை எழுத சொல்லியிருந்தால், அவனுடைய கை போதும் என்று சொல்லும் வரையில் அந்த பெயரை எழுதியிருப்பான்.
அவனுக்குள் ஒரு தயக்கம்,அவனுக்கு தான் அவளோடு நட்பு பாராட்ட ஆசை. ஆனால், அவளைப் பொறுத்தவரையில், அவனை அவளுக்கு தெரியும் அவ்வளவே.அவனுக்கு தான் அவளைப் பிடிக்கும் ஆனால் அவளுக்கு? இவனை ஞாபகம் இருக்குமா? என்று கூட தெரியாது.
இப்படியிருக்க அந்தப் படிவத்தில் அவளுடைய பெயரை எந்த உரிமையில் அவனால் எழுத முடியும்.
இரண்டாவது சுற்றுக்கு இரண்டாவது மாடியில் இருந்து முதல் மாடியில் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். இடையில் அவன் படியில் இருந்து இறங்கி முதல் மாடியில் அடி வைத்த பொழுது அவனுக்கு வலது புறத்தில் ஒரு கண்ணாடி கதவு.
உள்ளே செல்ல வேண்டுமென்கிற ஆசை. நின்று ஒரு நொடி உள்ளே பார்க்க வேண்டுமென்கிற ஆசை.
அவன் ஒரு நொடி கூட அங்கு நிற்காமல், இரண்டாவது சுற்றுக்கு அடுத்த அறைக்கு தன்னை அழைத்து சென்றவரை பின் தொடர்ந்தான்.
நீங்கள் ஏன் இந்த வேலைக்கு வந்தீர்கள் என்று அவனை கேட்கிறார்கள். அவன் உண்மையும் சொல்லவில்லை பொய்யும் சொல்லவில்லை.
வேலை தேடி வரவில்லை என்கிற உண்மையையும் அவன் சொல்லவில்லை.இந்த துறையில் வேலைப் பார்க்க வேண்டுமென்பது தன்னுடைய கனவு என்பது போன்ற பொய்களையும் அவன் சொல்லவில்லை.
“நைஸ் மீட்டிங் வித் யு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்கள்.ஆனால்,அவன் எதிர்பார்த்த நைஸ் மீட்டிங் நடக்கவே இல்லை.
மாணிக்கவாசகர் கதைக்கு வருவோம்.
(மாணிக்கவாசகர்: அது இருக்கட்டும்,இவ்வளவு நேரம் சொன்னது உங்க நண்பர் கதை? அப்படிதான?ம்ம்? மேல சொல்லு)
இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொள்கிறார். அது முதலாய் மாணிக்கவாசகர் இறைவன் மீது காதல் கொண்டு இறைவனை தேடுகிறார். எல்லாவற்றுள்ளும் இறைவனை கண்ட அவர்.இறைவனுடனே இருக்க வேண்டுகிறார்.
அந்த கதையில் வந்த பையனிடம் இருந்த தயக்கம் எதுவும் மாணிக்கவாசகரிடம் துளியும் இல்லை.
அந்த பையனுக்கு இருந்த தயக்கத்துக்கு காரணம், அவனுக்கு பிடிக்கும், அவளுக்கு? தெரியாது.
மாணிக்கவாசகருக்கு இறைவனை பிடிக்கும். இறைவனுக்கு?
இறைவனுக்கு தான் எல்லோரையும் பிடிக்குமே.
பின்ன என்ன தயக்கம் வேண்டி கிடக்கு!
மாணிக்கவாசகர் google map எல்லாம் தட்டமால். தனக்குள் தட்டுக்கிறார்.காண்பதில்லெல்லாம் இறைவனை தேடுகிறார்.
அவர் ஒரு resume தயார் செய்கிறார். அதில் தன் புராணம் பாடாமல் சிவ புராணம் பாடுகிறார்.
இறைவனோடு இருக்க வேண்டும், இறைவனைச் சேர வேண்டும். என்ன செய்ய வேண்டும்?
சாதாரணமாக ஒரு துறையில்(field) வேலைக்கு சேர வேண்டுமென்றால் கூட அந்த துறையைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும்.இறைவனையே சேர இறைவனை தெரிந்திருக்க வேண்டும் தானே! யார் referral ?என்று கேட்டால். அதற்கும் இறைவனையே கைகாட்டுவார் மாணிக்கவாசகர்.
இறைவனை மாணிக்கவாசகர் அளவிற்கு உரிமை கொண்டாடியவர்கள் இல்லை.
நாம் அதிகமாக யாரிடம் உரிமை கொண்டாடுவோம் அப்பா; அம்மா;
நம்முடைய அப்பாவும் அம்மாவும் கூட நமக்கு மட்டுமே உரித்தானவர்கள் இல்லை. அவர்களை உரிமை கொண்டாட கூடிய மற்ற உறவுகளும் அவர்களுக்கு இருப்பார்கள். நாம் யார் மீது உரிமை பாராட்டினாலும் இதைப்பற்றி நினைப்பதே இல்லை.மாணிக்கவாசகர் நினைக்கிறார்.
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா! போற்றி”
என் நண்பன் விஜயன் இந்த வாசகத்தைப்பற்றித் தான் என்னிடம் பேசினான்.
முதலும் முடிவும் இல்லாத இறைவனை, இவர் எங்க ஊர் காரர் என்று சொல்வது எப்படி நியாயமாக இருக்க முடியும்! சிவன் அவதரித்த இடம், நாடு என்று எதையும் சுட்ட முடியாது! பிரபஞ்சமே இறைவனுடைய சொத்து தான். தென்னாடு மட்டும் இறைவனுடையது என்றும் சொல்ல முடியாது! இதையெல்லாம் நான் சொன்ன பொழுது
தான் விஜயன் சொன்னான், என்னுட்டு சிவன் என்பது தான் அந்த வாசகத்தின் அர்த்தம் என்று.
அவன் மற்றொன்றும் சொன்னான், “எங்க ஊர்ல சிவன்”.நான் மலைத்து போனேன்.
அந்த வாசகத்தில் தென்னாடுடைய இறைவா போற்றி எந்நாட்டவர்க்கும் சிவனே போற்றி என்று எழுதினால் பொருட்பிழை ஆகிவிடும் என்றா இப்படி எழுதியிருப்பார்.
நாம் அம்மா என்று உரிமை கொண்டாடும் அதே ஜீவன் ஒருவருக்கு அக்கா என்றும், இன்னொருவருக்கு பிள்ளை, இப்படி இருக்கும் பொழுது. இறைவன்!
இறைவன்!? அவனும் ஒருத்தன் தான். ஒவ்வொரு ஊரிலும் ஒரு பேர் சொல்லி அழைக்கின்றார்கள்.எங்க ஊர்ல அவனை சிவன் என்று கொண்டாடுகிறோம்.
இந்த வாசகம் போற்றித்திரு அகவல் பகுதியில் வருகிறது.
அதற்கும் முந்தைய பகுதியான சிவ புராணத்திலும்,இறைவனை தென்பாண்டி நாட்டானே விழிக்கின்றார்.
“தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே”
நாம் இன்று பார்த்த கதையில் வந்த அந்த நண்பனை மனிதர்களுக்கும், அந்த பெண்ணை இறைவனுக்கு ஒப்புமைப்படுத்தலாம்.
பல வெளிகாரணிகளால் மனிதர்களும் இப்படித்தான் இறைவனுடனான தொடர்பை இழக்கின்றார்கள். இறைவனை தேடும் பொழுதும் கூட சிறு சிறு ஆசைகளுக்காக தான் தேடுகிறார்கள். இறைவனை அடைய வேண்டும் என்று தேடுவதில்லை.அப்படி தேடும் பொழுதும், ஒரு வித தயக்கத்தோடு, உண்மைக்கு பொய்க்கும் இடையில் நின்று கொண்டு தான் தேடுகிறார்கள்.
அந்த நண்பனை, “நைஸ் மீட்டிங் வித் யு ” என்று சொல்லி அந்த நிறுவனம் திருப்பி அனுப்பியது போல நம்மையும் இறைவன், பிறவி கடலுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்றான்.
மாணிக்கவாசகர், தாயார் செய்த resume ஐ(சிவ புராணத்தை-திருவாசகத்தை ) சிவபெருமானே எழுதி கையெழுத்திடுகிறார்.
நம் புராணம் பாடும் resume இல் ஒரு பெயர் தானே இருக்கும் திருவாசகத்தில் (சிவ புராணத்தில்) அத்தனை பெயர் சொல்லி அழைக்கின்றார்.
அதில் ஒரு இடத்தில என்னுடைய மற்றொரு நண்பன் பெயர் வந்தது.
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்.
விமலன்,நிமலன்,அமலன்,-இந்த மூன்று பெயர்களும் கிட்டத்தட்ட ஒரே பொருள் தரக்கூடிய பெயர்களே, மலங்களற்றவன்,தூய்மையான மலத்தை உடையவன்.
ஆணவம்,கன்மம்,மாயை என்கிற மூன்றும் அற்றவன். இந்த பெயர்களை மட்டும் இங்கு சொல்ல ஒரு காரணம் இருக்கின்றது. இறைவனை அடைய வேண்டுமென்றால்; ஆணவம், கன்மம், மாயை அற்ற இறைவனுடைய நிறுவனத்தை அடைய வேண்டுமென்றால் இதையெல்லாம் வச்சுக்கிட்டு எப்படி போக முடியும்? உள்ளையே விடமாட்டார்.
விடைப்பாகா என்பது நேரிடையாக காளை மேல் அமர்ந்தவனே என்கிற அர்த்தத்தில் இல்லை.
நம் எண்ணங்கள் காளையோடு ஒப்புமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதுவாக அடங்கினால் தான் உண்டு. ஆனால், நம் எண்ணங்களை நாம் அடக்கி ஆளும் பொழுது இறைவனோடு ஒன்றிவிடுகிறோம்.
“வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க”
மனஓட்டத்தை தடுக்க வல்லவன் இறைவன் என்பதை உணர்த்தவே காளை வாகனமாக கொண்டவனாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றது.
இப்பொழுது இறைவனுடைய நிறுவனத்தில் சேர்ந்து இறைவனோடு இருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதையும் மாணிக்கவாசகர் சொல்கிறார்.
மேலே உள்ள வாசகங்கள் தான் சிவபுராணத்தின் declaration பகுதி.
திருவாசகத்தில் உள்ள சிவபுராணத்தின், ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் உணர்ந்து சொல்பவர்கள் எல்லோரும் வணங்கித் துதிக்க தக்க சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. இது வெற்று நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டது அல்ல. அந்த பகுதியில் உள்ள வார்த்தைகளின் உட்பொருள் நமக்கு புலப்படுமாயின் அந்த உட்பொருளை அறிந்து அதனை மீண்டும் மீண்டும் அசைபோடுவதற்கு ஏதுவாய் அதை துதிப்பவர்கள், நிச்சயமாக மும்மலங்களை வென்று இறைநிலையை அடைந்து விடுவார்கள் மாணிக்கவாசகர் போல்.
அன்று நேர்காணலில் அவன், உண்மையை சொல்லியிருந்தால் என்ன நடந்து இருக்கும்? போய் பார்த்தல் போதும் என்று நினைக்காமல், எப்படியும் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்கிற உறுதியோடு இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும். ஒரு வேளை, அவள் அவனைப்பார்த்து இருந்தால் என்ன நடந்து இருக்கும்?
நாமாக ஏதேனும் முயற்சி செய்தாலும்,எந்த முயற்சியும் செய்யாமல் போனாலும் இறைவன் நினைத்தால் தான் நம்மால் இறைவனை அடைய முடியும் அதையும் திருவாசகத்தில் சொல்லியிருக்கின்றார் மாணிக்கவாசகர்.
நம்மிடம் இருக்க வேண்டியது உண்மை,இறைவன் மீது தயக்கமில்லாத அன்பு, 100% commitment.
ஆனால் நாம் , ‘பார்த்தால் போதும்’ என்று அந்த பையன் நினைத்தது போல, ‘கடன் அடைச்சா போதும், கல்யாணம் ஆனா போதும், வேலை கிடைச்சா போதும்’ என்பதற்காகவே இறைவனை தேடுகிறோம்.நம்முடைய ஒவ்வொரு பிறவியும் ஒரு நேர்காணல், ஒவ்வொரு முறையும் வெளிப்புற மாயைகளால் கடவுளை அடைவதில் தயக்கம் காட்டுகின்றோம்.