விகடன் செய்தி

சமீபத்தில் விகடன், மிஸ்டர் கழுகு பகுதியில் பின்வரும் செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

“ஆமாம்… பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது ஏககடுப்பிலிருக்கிறார் ஸ்டாலின். அமைச்சரின் ‘லூஸ் டாக்’ பேட்டிகளால், கட்சியின் பெயர் டேமேஜ் ஆவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே ஸ்டாலினிடம் வருத்தப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, பழனிவேல் தியாகராஜனை அழைத்துக் கண்டித்த ஸ்டாலின், ‘பட்ஜெட் கூட்டத்தொடரில் உங்கள் திறமையைக் காண்பியுங்கள். ட்விட்டரிலும், மீடியாக்கள் முன்பாகவும் ஜம்பம் காட்ட வேண்டாம்’ என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்” என்றபடி கிளம்பத் தயாரான கழுகார்”

 மேலே படித்த செய்தியை தொடர்ந்து, நாம், அந்த ‘டாக்கில்’ என்னவெல்லாம் ‘லூஸ் டாக்’ என சொல்லப்படும் அளவிற்கு இருக்கும் விஷயங்கள் என ஆராய தொடங்கினோம்.

சமீபத்தில் வலைப்பக்கங்களில் அதிகம் பகிரப்படும்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசிய விஷயங்களில் நாம் ஆய்ந்து அறிந்து கொண்டவைகள்.

நிதியமைச்சர் பேசியதின் சுருக்கம்

செய்தியாளர், “பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி குறைக்கப்படுமா என்னும் கேள்வியை கேட்கின்றார்”. அதற்கு பதிலளிக்கும் விதமாக  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைவர் கலைஞர் இரண்டு முறை குறைத்து இருக்கின்றார் என்று ஆரம்பித்து.

வளர்ந்த நாடுகளில் நேரடி வரியே அதிகம் இருக்கும்;மறைமுக வரி குறைவாக இருக்கும்;பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் வரிகளில் கலால் வரி குறைக்க பட்டு செஸ் வரி அதிகரித்து இருக்கின்றார்கள்; கலால் வரி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது அதை குறைத்து விட்டார்கள் என்று அடுக்கு அடுக்காக மத்திய அரசின் மீது குற்றசாட்டை வைத்த அவர்.செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்ததாக தெரியவில்லை.பெட்ரோல் மீதான வரி பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற வகையில் பேசியிருந்தார்.

நிதிமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு

பெட்ரோல் மீதான வரி குறைப்பு சாத்தியமா?

நம் நாட்டின் மொத்த செலவினங்களில் பெட்ரோல் மீதான வரி மூலம் வரும் வருமானம் என்பது பாதிக்கும் குறைவு. தற்போதைய இந்தியாவின் மொத்த பட்ஜெட் 34 லட்சம் கோடி இதில் பெட்ரோல் மீதான வரி மூலம் வரும் வருமானம் என்பது 1.4 லட்சம் கோடியில் இருந்து 1.7 லட்சம் கோடி இருக்கும் என்று அறியப்படுகிறது டீசல் மீதான வரியையும் சேர்த்தாலும் இது 3-4 லட்சம் கோடி அளவிலேயே இருக்கின்றது.இந்த வரியை மேலும் குறைப்பதால் வருமானத்தில் ஏற்படும் பாதிப்பை சரிக்கட்ட அரசு மீண்டும் ஏதேனும் ஒரு வகையில் மக்களிடம் வரி வசூல் செய்ய நேரிடும்.
அது பற்றி விரிவாக அலசலாம்.

தி.மு.க. வின் தேர்தல் வாக்குறுதி

முதலில் நாம் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் 504வது வாக்குறுதியில் பெட்ரோல் விலையில் ரூபாய் 5ம் டீசல் விலையில் ரூபாய் 4ம் குறைப்பதாக சொல்லியிருந்தார்கள்.செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நிதிமைச்சர் அவர்கள், நாங்கள் எங்கள் வாக்குறுதியில் சொல்லியிருப்பது போல விரைவில் பெட்ரோல் மீதான மாநில வரியை குறைப்போம் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால், பெட்ரோல் மீதான வரிவிதிப்பையும் வரிவிதிப்பு முறையையும் அனேகத்திற்கு சாடியிருக்கின்றார்.

சென்ற வருடம்(2020) மே மாத செய்திகளின் படி பெட்ரோல் மீதான மாநில வரிவிதிப்பு முறை மாற்றப்பட்டு இருக்கின்றது.

பெட்ரோலைப் பொறுத்தவரை, முன்பு இருந்த மாநில வரி விகிதம்  34சதவீதத்தில்  இருந்து 15% + 13.02 ரூபாய் என்றும்  . அதேபோல், டீசல் விஷயத்தில், 25சதவீதத்தில்  இருந்து, 11% +  9.62 ரூபாய் ஆகவும் மாற்றப்பட்டு இருந்து இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே தி.மு.க.வின் வாக்குறுதியும் அமைந்திருக்ககூடும் 

உதாரணமாக,

அடிப்படை விற்பனை விலை லிட்டருக்கு = 32.28என்று வைத்துக்கொண்டால் 32.28+ 32.90(மத்திய அரசின் வரி சேர்த்து) + 9.77 +13.02 (15% +13.02 மாநில வரி) டீலர் கமிஷன் சேர்க்காமல் 87.97 என்று இருப்பதை. தி.மு.க. அவர்களின் வாக்குறுதி படி 5 ரூபாய் குறைத்தால்  அடிப்படை விற்பனை விலை  = 32.28, 32.28+ 32.90(மத்திய அரசின் வரி சேர்த்து) + 9.77 +13.02 (15% +8.02 மாநில வரி) டீலர் கமிஷன் சேர்க்காமல் 82.97 ஆக குறையும்.

இந்த முறையில் குறைக்கப்படும் போது,அடிப்படை விலை அடுத்தடுத்து ஏற்றம் காணும் போது மக்களுக்கு பயனுள்ளதாக அமையாது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் கூற்று படி பெட்ரோல் மீதான வரி குறைக்கப்படவேண்டுமாயின் தி.மு.க.வின் வாக்குறுதியில் மாநிலம்  விதிக்கும் வரியை குறைக்கும் போது சதவீத அடிப்படையில் குறைக்க வாக்குறுதி அளித்து இருக்க வேண்டும்.

இதை நாம் சுட்டிக்காட்டுவது தி.மு.கவை குறை கூற வேண்டும் என்கிற நோக்கத்தோடு அல்ல. எல்லா கட்சிகளுக்கும் பெட்ரோல் மீதான வரி விதிப்பை குறைப்பதில் உள்ள நிர்வாக சிக்கல்கள் பற்றி தெரியும் இருந்தாலும் கட்சிகள், மக்களின் கவனத்தை ஈர்க்க அதை பேசுபொருளாக செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறை நமது நிதியமைச்சர் இந்தியாவின் வரிவிதிப்பு கொள்கையை பற்றியே பெரும் குற்றசாட்டை வைத்து இருக்கின்றார்.

நேரடி வரி மற்றும் மறைமுக வரி

வருமான வரி, கம்பெனிகளுக்கான கார்ப்பரேட் வரி, சொத்து வரி போன்றவைகள் நேரடி வரி.
கலால் வரி,சேவை வரி,மதிப்பு கூட்டு வரி இவையெல்லாம் மறைமுக வரி.
OECD என்று நிதியமைச்சர் குறிப்பிடும் நாடுகள் 37 நாடுகளை உறுப்பினர்களை கொண்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு. இந்த 37 நாடுகளும் வளர்ந்த நாடுகள்,அவர்களோடு ஒப்பீடும் போது, நம் நாட்டில் தனிநபர் வருமான வரி செலுத்துவோர் 6% சதவீதத்தினரே இருக்கின்றனர். அதுவே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் 42-45% சதவீதம் மக்கள் தனிநபர் வருமான வரி செலுத்துகின்றவர்களாக இருக்கின்றார்கள்.அதோடு அவர்கள் நாடுகளில் ஒரு நபரின் சராசரி வருமானம்(per capita income) என்பது நம் நாட்டோடு ஒப்பீடும் போது அதிகமாக இருக்கின்றது. இதன் காரணமாக இயல்பாகவே வளர்ந்த நாடுகளில் வரி வருமானத்தில் நேரடி வரியின் பங்கு அதிகமாகவும் மறைமுக வரியின் பங்கு குறைவாகவும் இருக்கும்.

தற்போது இருக்கும் வருமான வரி உச்ச வரம்பின் படியும் 2016-2017 தரவுகளின் படியும் 8.5 கோடி பேர் இந்தியாவில் வருமான வரி செலுத்துகின்றார்கள் என்று தெரிகிறது.இன்னும் அதிகமான மக்களை இந்த வரம்பிற்குள் கொண்டு வருவதும் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். அதுவே இந்த 8.5 கோடி பேர் மீதான வரியை இன்னும் அதிகரித்தால் அது அவர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தும் இது போன்று அணுகுமுறை எப்போதும் போல நடுத்தர வார்த்தையே அதிகம் பாதிக்கும். இருந்தபோதிலும், வரி வருமானத்தில் நேரடி வரியான வருமான வரியின் பங்கு 25% சதவீதமாக வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வரி வருமானத்தில் தனிநபர் வருமான வரியின் பங்கு ஆண்டு வாரியாக பட்ஜெட் ஆவணங்களை அடிப்படையாக கொண்டு TOI வெளியிட்டது

மறைமுக வரியான சேவை வரியை பொறுத்தவரையில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை திறனை பொறுத்தும் வரி வருமானத்தில் அதன் பங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. அதோடு இந்தியாவின் சந்தை வளர்ந்த நாடுகளை விட மிக பெரிய சந்தையாக இருப்பதன் காரணமாகவும் வரி வருமானத்தில் மறைமுக வரியான சேவை வரி போன்ற point of sales taxன்பங்கு அதிகமாக இருக்கும்.

நேரடி வரியில் கார்ப்பரேட் வரி எனப்படும் கம்பெனிகளுக்கான வரியையும் குறிப்பிட்ட அளவிற்கு மீறி அதிகரிக்க முடியாது. அது முதலீடுகளை ஈர்ப்பதில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதோடு பொதுத்துறை நிறுவனங்களின் சுமையை அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது.

நமது நாட்டில் அநேகமான வருடங்களில் வரி வருமானத்தில் மறைமுக வரியின் பங்கு தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றது.ஜி.எஸ்.டி. யின் அறிமுகத்திற்கு பின்னர் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு இருந்த வரி ஜி.எஸ்.டி யின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன்பின், மத்திய அரசின் வரி வருமானத்தில் மறைமுக வரியின் பங்கு அதிகமானதும் இயல்பானதே.ஜி.எஸ்.டி. யின் அறிமுகத்திற்கு முன் இந்த மறைமுக வரிகள் இல்லை என்பது இல்லை அவை மாநிலங்களின் கணக்கில் இருந்து வந்தது.வளரும் நாடுகளில்; சராசரி தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில்; மக்கள் தொகையில் சார்பு விகிதம்(dependency ratio) அதிகமாக (சுமார் 48%) கொண்ட நாடுகளில்; பரந்த நிலப்பரப்பிற்கான கட்டமைப்பை உருவாக்க தேவைப்படும் நிதியை நேரடி வரிகளின் மூலம் திரட்ட முடியாத சூழல் கொண்ட நாடுகளில் இதுவே இயல்பாக இருந்திருக்கின்றது. அதை தான் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பெரிய குறையாக சுட்டிக்காட்டி வரி விதிப்பு முறையை மொத்தமாக குறை கூறி இருக்கின்றார்.

கலால் வரி  மற்றும் செஸ் பற்றி

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடிய கலால் வரி காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக இருந்ததாகவும் தற்போது அதை குறைத்து விட்டார்கள் என்றும். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத செஸ் ஐ அதிகரித்துள்ளார்கள் என்றும் கூறியிருந்தார் நம் மாநில நிதியமைச்சர்.

கலால் வரியில், அடிப்படை கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி என்று மூன்று வகை இருக்கின்றது.இதில் கூடுதல் கலால் வரி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க படவேண்டியது.நிதியமைச்சர் சொன்னது போல பெட்ரோல் மீதான செஸ் 30 ரூபாய் ஆக்கப்பட்டிருப்பது முழுதும் சரி இல்லை அதோடு,போக்குவரத்துக்கு செலவு அதிகரிக்கும் போது விலைவாசி உயரும் என்ற புது கண்டுபிடிப்பை பற்றியும் நம் நிதியமைச்சர் விளக்கி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதை சமாளித்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்து போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
ஆனால், பெட்ரோல் மீதான மத்திய அரசின் தற்போதைய வரி 2.90ரூபாய் மாநிலங்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்க கூடிய கலால் வரியாகவும், மாநிலங்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்க முடியாத சிறப்பு கூடுதல் கலால் வரி 12 ரூபாய் மற்றும் செஸ் 18 ஆகவும் இருக்கின்றது.
1930 முதல் பெட்ரோல் மீதான வரி வருமானம் கொண்டே சாலைகள் இடப்பட்டு வந்தது. வாஜ்பாய் அவர்கள் காலத்தில் முன்னெடுக்க பட்ட சாலை மேம்பாட்டு திட்டங்கள் பெட்ரோல் மீதான செஸ் கொண்டும் கடன்களின் மூலமும் செயல்படுத்தப்பட்டது. பின்னர் காங்கிரஸ் ஆட்சியிலும் பெட்ரோலின் விலை ஏற்றம் கண்டிருந்தது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகம் என்று வாதாடினாலும். வாஜ்பாய் முன்னெடுத்த சாலை மேம்பாட்டு திட்டங்களை தொடரவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் பெட்ரோல் மீதான செஸ் ஐ மட்டும் நம்பாமல் சுங்க சாவடிகளை அறிமுகப்படுத்தினார்கள். பெட்ரோல் மீதான வரி காங்கிரஸ் ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது போல் பிம்பத்தை ஏற்படுத்தும் நிதி அமைச்சர். சுங்க சாவடிகளை மறந்து விட்டார். பெட்ரோல் மீதான வரி மட்டும் போக்குவரத்துக்கு செலவுகளை அதிகரிப்பதில்லை. இதற்காக காங்கிரசை குறை கூற முடியாது.நாட்டின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்த ஏதேனும் ஒரு வகையில் வருமானத்தை பெருக்க வேண்டிய தேவை நம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. நாம் வாகனம் வாங்கும் போது செலுத்தும் சாலை வரி என்பது மாநில அரசின் கணக்கின் கீழ் வருவது.அதோடு மத்திய அரசின் பட்ஜெட்டில் மாநிலங்களின், கிராமப்புறங்களின் சாலை மேம்பாட்டுக்கென வருடந்தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. இப்படி நேரடியாக அல்லாமல் வேறு வழிகளில் மத்திய அரசு மூலம் மாநிலங்களுக்கு வரும் நிதி அந்த மாநிலத்தின் மக்கட்தொகை மற்றும் பரப்பு அளவை பொறுத்தே அமையும் . உதாரணத்திற்கு ஒரு சிறிய மாநிலத்தின் சாலை மேம்பாட்டுக்கு பெரிய மாநிலத்தை விட அதிகமாக நிதி ஒதுக்க முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே ஒதுக்க முடியும். அதனால், நம் மாநில நிதியமைச்சர் பேசுவது போல வரி வருமானத்தை மத்திய அரசே வைத்துக்கொள்கிறது என்கிற குற்றசாட்டு ஏற்புடையதல்ல. அதிலும்,பெட்ரோல் மீதான 18 ரூபாய் செஸ் சாலை மேம்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பிற்கும் சாலை வசதிகளை எதிர்கால தேவைக்கு ஏற்ப மேம்படுத்த சுங்க சாவடிகளும் பெட்ரோல் மீதான செஸ்ஸும் தான் உதவுகிறது. இத்தனை பெரிய தேவையை நேரடி வரி மூலம் பூர்த்தி செய்து கொள்ளமளவிற்கு இந்தியா இன்னும் வளரவில்லை என்றே கூற முடியும்.

எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நேரடி வரி அல்லது மறைமுக வரி எதுவாக இருந்தாலும் அது அந்த நாட்டின் மக்களிடம் அந்த நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வசூலிக்கப்படுவதே விலைவாசி உயர்வு,வரி உயர்வு, போன்றவைகள் எல்லா காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருக்க கூடியதே.எந்த ஒரு காலத்திலும் இது பின்னோக்கி செல்வதற்கு வாய்ப்பில்லை.
மக்களுடைய பிரச்சனை விலைவாசி உயர்வு இல்லை. அவர்களின் வேலைவாய்ப்பும் வருமானமும்.விலைவாசிக்கும் அவர்கள் குடும்ப வருமானத்திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு குறைந்திருக்கிறது; அதன் நிலை எப்படி இருக்கின்றது,ஒரே மாதிரியான தகுதி படைத்த எல்லாரும் ஒரே மாதிரியான ஊதியம் பெருகிறார்களா? இப்படியான விஷயங்களே கவனிக்கபட வேண்டும்.
மொத்தத்தில் நிதிஅமைச்சரின் அறிவார்ந்த பேச்சு விகடன் பத்திரிகையில் சொல்லியிருப்பது போல பல குறைகளையே கொண்டிருக்கின்றது. அந்த பேச்சு அரசியல் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே தெரிகிறது.வரி குறைக்கப்படுமா? என்கிற கேள்விக்கு வரி குறைக்கப்படும் அல்லது குறைக்க முடியாது என்ற பதிலோடு மாநிலத்திற்கான அவரின் திட்டங்கள் பற்றி பேச வேண்டிய இடத்தில் மத்திய அரசை பற்றி குறை பேசியதை மக்களும் விரும்பவில்லை, தளபதி ஸ்டாலின் அவர்களும் விரும்பவில்லை என்று விகடன் செய்தி மூலம் தெரிகிறது.
பொருளாதாரம் அல்லாமல், ஏப்ரல் மாதத்தில் தளபதி அவர்கள் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்திற்கு பின் மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவான மாநிலங்களை தடுப்பூசி வாங்க அனுமதித்தை மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு என்று நிதியமைச்சர் விமர்சித்தது தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க கூடும்.தற்போது மீண்டும் மாநிலங்கள் தடுப்பூசி கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கலை கருத்தில் கொண்டு மத்திய அரசே தடுப்பூசி கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.இதுவும் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் கீழ் தான் பட்ஜெட்டில் இருக்கின்றது என்பதையும் மக்கள் தெரிந்துவைத்திருப்பதனால், மத்திய அரசு மாநிலங்ககளுக்கு தர வேண்டிய நிதியை மன்றாடி பெற வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது என்கிற நம் மாநில நிதிஅமைச்சரின் கூற்றை அவர்கள் ஏற்கவில்லை.

தன் கட்சியின் பிரதான அமைச்சராக இருந்தாலும் நிதிஅமைச்சரின் தவறான அணுகுமுறையை முதல்வர், தலைவர், தளபதி ஸ்டாலின் கண்டித்ததாக வெளிவந்த செய்தி கண்டு மக்கள் நெகிழ்ந்தே போயிருக்கின்றார்கள். மெய் பொருள் தேடும் மக்கள் நெகிழ்ந்தே போயிருக்கின்றார்கள்.நிதி அமைச்சரின் வெற்று ஜம்பம் மக்களிடமும் பலிக்கவில்லை தலைவரிடமும் பலிக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *