பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.முன்னாள் முதல்வர் அமரர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், அவருக்காக நடத்தப்பட்ட விழா.
அந்த விழாவில் அன்பிற்கும் பண்பிற்கும் உரிய ரஜினிகாந்த் அவர்கள்.
ஒரு நிமிடம்!
அன்பிற்கும் பண்பிற்கும் என்று மேடைகளிலும் கடிதங்களில் சம்பிரதாயத்துக்கு பயன்படுத்தப்படும் சொற்றொடரை, வேற்று புகழ்ச்சிக்காக மட்டும் இங்கே பயன்படுத்தவில்லை.
உண்மையாகவே அன்பிற்கும் பண்பிற்கும் உரிய ரஜினிகாந்த் அவர்கள், அதே அந்த விழாவில், அன்போடும் பண்போடும் பேசியது என் நினைவில் இருக்கும் படி, “முதல்வர்க்கு நிறைய வேலை இருக்கும். அவங்களுடைய நேரத்தை நாம வீணடிக்க கூடாது” அந்நாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு திரையுலகினர் நடத்தியதாக அறியப்படும் அந்த விழாவில் திரையுலகினரை நோக்கி சொல்வது போல், அன்போடும் பண்போடும் முதல்வர் கருணாநிதிக்கு ரஜினி வைத்த குட்டு அது.
இன்று அந்த முன்னாள் முதல்வருக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்பபட்டு, அதற்காக இந்நாள் முதல்வர் தன் நேரத்தை செலவிட்டு கொண்டு இருக்கின்றார்.
தன் காலத்திற்கு பிறகும் தன் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று அங்குலம் அங்குலமாக சிங்கப்பூரைச் செதுக்கி வைத்திருக்கும் லீ குவான் யூ விற்கு அங்கே இது போன்று எந்த விழாவும் எடுக்கப்பட்டு அதில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கவில்லை.நாம் முன்னம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, அவருக்கு அப்படியான விழாக்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிங்கப்பூரின் வளர்ச்சியை கண்டு மெச்சும் ஒவ்வொரு கண்களுக்கும் அந்த பேர் தெரியும். ஓடிக்கொண்டே இருக்கின்ற அந்த நாட்டின் உயிர் நாதமாக அவரின் பெயரே தான் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.அதன் காரணமாக அவருக்கு தனியாக விழா எடுக்க வேண்டிய அவசியமில்லை.
கருணாநிதி அவர்கள் தன்னை முதல்வர் ஆக்கி கொள்ள காரணமாக இருந்த தி.மு.க. என்னும் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பொழுது என்ன நிலைப்பாட்டோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை அவரின் இந்த நூற்றாண்டு கொண்டாடத்திற்கு மத்தியில் நினைவுகூற வேண்டும்.
ஈ.வே.ரா. விடம் இருந்து வேறுபட்டு; ஈ.வே.ரா. விடம் இருந்து விலகி, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்னும் திருமந்திரத்தில் சொல்லப்பட்ட கொள்கையை முன்னிறுத்தி; கடவுள் இல்லை என்னும் நிலையில் இருந்து மாறுபட்டு. எல்லா மக்களுக்கும் பொதுவான கட்சியாக அது ஆரம்பிக்கப்பட்டது.
அண்ணா ஆரம்பித்த அந்த இயக்கத்தின் செல்வாக்கை, எம்.ஜி.ஆர். அவரோடு எடுத்துக்கொண்டு போன பின், அண்ணா முன்னிறுத்திய திருமந்திர வாக்கை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், அவர் கைப்பற்றிக்கொண்ட கட்சியும் மறந்து போனது.
அன்றிலிருந்தே தி.மு.க. பெரும்பான்மையினரிடம் இருந்து விலக தொடங்கியிருந்தது. மக்களுக்கு பொதுவான பிரதிநிதிகளை முன்னிறுத்தும் உருவாக்கும் எந்த ஒரு கட்சியும் சிறுபான்மை பெரும்பான்மை என்கிற பேதமில்லாமல், எல்லார்க்கும் பொதுவாய் இருக்க வேண்டியது, அந்த இயக்கத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது. சிறுபான்மை ஆதரவை உணவாகவும், தன் பிரதான எதிர்க்கட்சியின் கோஷ்டி பூசல்களை சத்து மாத்திரைகளாகவும் எடுத்துக்கொண்டே வெற்றி பெற்று வரும் தி.மு.க. ;சமூகநீதி பேசும் தி.மு.க., அவர்களின் இந்த தவறை உணர்ந்த்தாக தெரியவில்லை.
எல்லாருக்கும் பொதுவாக கட்சி இருக்க வேண்டும் என்பதாலேயே தான் அண்ணா அவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையை உதறிவிட்டு வந்தார்.
காலத்தாலும் கருணாநிதி அவர்களாலும் அண்ணாவின் கொள்கையில் இருந்து மாறுபட்டு விட்ட திமுக நடந்தும் இந்த நூற்றாண்டு விழாவில் திருமாவளவன் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள், “கடல் தாண்டி கூட செல்ல முடியும் கருவறைக்குள் செல்ல முடியாது”
அரசியல் களத்தில் பட்டியிலன சமூகத்திற்காக ஏதேனும் ஒரு வகையில் பாடுபடும் திருமா போன்றவர்களுக்கான தேவை இருக்கவே செய்கிறது. ஆனால், அவரைப் போன்றவர்களாலும் கூட அந்த மக்களின் முழு ஆதரவையும் முழுதாக பெற முடியவில்லை. தேர்தலில் வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.அதற்கு அவர்களே தான் காரணமாகவும் இருக்கின்றார்கள்.
இந்து மதத்தை இழிவுப்படுத்துவது. ஒரு அரசியல் தலைவராக மக்கள் எல்லோருக்குமான பொதுவான பிரச்சனைகளை பேசாமல், தன் சார்ந்த சமூகத்தை மேம்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும் என்கிற நகர்வுகளை நோக்கி தன்னை செலுத்தாமல், மத நம்பிக்கைகளில் தலையிடுவதே வாடிக்கையாக வைத்திருப்பது கூட பட்டியலின சமூகத்தின் முழு ஆதரவையும் அவர் பெற முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம்.ஒரு பொதுவான தலைவராய் அவர் உருவெடுக்க முடியாமல் போனதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம்.
இன்றைய நிலையில் சாமானியர் ஒருவர் தமிழகத்தில் இருந்து கொண்டு; தேசிய கட்சியில் இணைந்து, ஒரு நாள் இந்திய நாட்டின் பிரதமராக கூட ஆகிவிட 100ல் 1 சதவீத வாய்ப்பிருக்கின்றது. அதே இந்த தமிழக்தில் இருக்கும் ஒரு சாமானியரால் மாநிலத்தின் பிரதான கட்சியில் இணைந்து மாநில முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு கூட 100 இல் 1 சதவீத வாய்ப்பு கூட இல்லாமல் இருப்பதைப் பற்றி பேசியிருக்க வேண்டிய விழாவில், இன்னமும் இரண்டுக்கு இரண்டடி இருக்கும் கருவறைக்குள் போக முடியவில்லை என்று பேசிக்கொண்டு இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகிறது.
ஒரு சாமானியனுக்கு,பட்டியலின சமூகத்தை சேர்ந்தவனுக்கு, கருவறைக்குள் இருப்பவர்களின் அடுத்த தலைமுறைக்கு, வேறு ஒரு மதத்தை தழுவி விட்டவனுக்கு, இறை நம்பிக்கையே இல்லாதவனுக்கு, எனக்கு உங்களுக்கு என்று நம் யாருக்கும் கருவறைக்குள் சென்று புடுங்க ஒரு ஆணியும் இல்லை. அதே வேளையில் உருப்படியாக எதையும் புடுங்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எந்த ஆணியும் புடுங்குவதில்லை, அவர்கள் புடுங்கும் ஆணிகள் எல்லாம் திருமா அவர்களின் இந்த கூற்று போல தேவை இல்லாத ஆணிகளாகவே தான் இருக்கின்றது.
இதே அரசியல் களத்தில், தேர்தலில், தி.மு.க அ.தி.மு.க தவிர்த்து யாரும் வென்று விடக்கூடாது என்று “அண்ணே வரார் வழிய விடுங்க” என்பது போல் இரண்டு கழகங்களுக்காகவே வேலை செய்பவர் போல தோன்றினாலும் அண்ணன் சீமான் அவர்கள் வைக்கும் சமரசமில்லாத காட்டமான விமர்சனங்களை திருமா போன்றவர்கள் வைப்பதில்லை. சீமானின் அத்தகைய விமர்சனங்களும் கூட அரசியல் நாடகங்களின் அங்கமாக இருக்கலாம், அதே அந்த நாடகங்கள் நடைபெறும் அரசியல் மேடையில் திருமா அவர்கள் அத்தகைய இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்ள தவறிவிட்டார்.
திரௌபதி அம்மன் கோவிலுக்கு ஒரு சாராரை அனுமதிக்க மறுத்த இடத்தில், கோவில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதை கண்டித்து, “யாரை அங்கே அனுமதிக்கவில்லையோ அவர்களை கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்வதே சரியான அணுகுமுறை; அதை விடுத்து கோவிலை அடைப்பது எப்படி சமூக நீதியாகும்” என்று சீமானின் விமர்சனம் ஒரு பக்கம் செய்தியாக வந்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் திருமா கருவறையை சுற்றிக்கொண்டிருந்த செய்தியும் நம் கண்ணில் படுகிறது.
பலதரப்பட்ட மக்கள் வாழும் பல நாடுகளில் ஒரு இனத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே இடத்தில் அந்த அரசாங்கம் இடம் ஒதுக்குவதில்லை. ஆனால், மேடைகளில் கோவில்களுக்கு எதிராக சத்தமாக ஒலிக்கும் சமூக நீதி குரல்கள் இருக்கும் தமிழ்த்திருநாட்டில் ஒவ்வொரு சமூகமும் தனித்தனியாக ஒரு இடம் பார்த்து வீடுகளை அமைத்துக்கொள்ளும் நிலையே இன்னும் பல இடங்களில் தொடர்கிறது. ஊர்களையும் தெருக்களையும் வைத்தே மக்களை பிரித்து அடையாளம் காணும் நிலை இன்னும் இருக்கவே செய்கிறது. இந்த நிலை மாறாத வரை சமூகத்தில் ஒரு சாரார் ஒதுக்கப்பட்டவர்களாகவே தான் இருப்பார்கள். பரந்த இந்த சமூகம் கோவில்களில் வாழ்வதில்லை. இந்த சமூகம் இருக்கின்ற இடத்திற்கு மத்தியில் தான் கோவில் இருக்கின்றது.ஒப்பீட்டளவில் கருவறைக்கு வெளியேயும் கோவிலுக்கு வெளியேயும் அனேமான திருத்தப்பட வேண்டிய சமூக நீதி பிரச்சனைகள் கலைஞர் பிறந்து இந்த நூறாண்டுகளும் நம்மோடு தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஒப்பீட்டளவில்,கருவறை பிரச்சனையை கடுகு அளவு கூட எடுத்துக்கொள்ள முடியாது.
நாளைக்கே சிறப்பு தரிசன டிக்கெட் கொடுத்து எல்லோரையும் இரண்டுக்கு இரண்டு கருவறைக்குள் அனுமதித்தாலும் எட்டாவது வரை கட்டாய பாஸ் என்றது போல,வேதம் கற்று இருக்காதவர்கள், மத நம்பிக்கைகளில் இருக்கும் சம்பிரதாயங்களை பின்பற்றாதவவர் எவராக ஆகினும் அவர் எல்லாம் அர்ச்சகர் ஆகி விடலாம் என்கிற நிலை வந்தாலும். அது யாருக்கும் எந்த விதத்திலும் பிரயோஜனமாக இருக்க போவதில்லை.விரைவில் Artificial intelligence அர்ச்சகர்கள் கூட வர வாய்ப்பிருக்கின்றது. AC யில் உட்கார்ந்துகொண்டு இலட்சங்களில் சாம்பாதிக்க வழி இருக்கும் பொழுது,எதிர் வரும் காலங்களில் அந்த கருவறை வேலையை கட்டிக்கொண்டு விட மாட்டேன் என்று யாரும் இருக்க போவதில்லை.
இப்படியான சூழலில், இப்படி ஒரு விழாவிற்கு என்ன அவசியம் என்கிற கேள்வியை மக்கள் மனதில் ஏற்படுத்தக்கூடிய ஒரு விழாவில்,அவசியமே இல்லாத ஒரு கூற்றை திருமா போன்ற தலைவர்கள் பேசுவது தவிர்க்கப் பட வேண்டியது.
அவசியமே இல்லாததை பேசியதை பற்றி இத்தனை பெரிய கட்டுரை தேவையா? என்று கேட்டால் தேவை தான். சமூகத்தில் திருமா போன்ற அரசியல் தலைவர்களுக்கான தேவை இன்னமும் இருக்கவே செய்கிறது. அத்தகைய பொறுப்பான இடத்தில் இருக்கின்ற தலைவர்கள் தங்களை நகைப்புக்குள்ளவர்களாகவும் வெற்று வெறுப்புக்களை சம்பாதித்துக்கொள்கின்றவர்களாகவும் ஆக்கிக்கொள்ள கூடாது என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டதே இந்த கட்டுரை.
தி.மு.க வும் திருமா போன்றவர்களும் அரபியும் உருதுவையும் ஏற்றுக்கொண்டது போல கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தை சீண்டாமல் இருப்பது போல சமஸ்கிருதத்தையும் ஏற்றுக்கொண்டு ஹிந்து மத நம்பிக்கைகளில் தலையீடாமல், பொது பிரச்சனைகள் சார்ந்து பேசுவதும் சிந்திப்பதுமே சரியாக இருக்கும்.சரி தானே!?