தினமும் பார்க்கும் அதே வேலையை பார்த்துக்கொண்டு, நீங்கள் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது; உங்களை ஒரு சோர்வு தொற்றிக்கொண்டிருக்கும் பொழுது; ஏதோ நினைவில் நீங்கள் உங்கள் mobile phone ஐ எடுத்து உங்கள் பெருவிரல் கொண்டு அந்த மொபைல் screen ஐ தடவிக்கொடுக்கும் பொழுது; ஒரு துண்டை எடுத்து உதறுவது போல்; உங்களையே உதறி, சோர்ந்த உங்கள் கண்களையும் காதுகளையும் பெரிதாக்கி, “என்ன பாட்டு இது!” என்று கவனிக்க செய்வது மாதிரியான பாடல்களை, நிச்சயமாக எப்போதாவது கேட்டு இருப்பீர்கள்.
நமக்கு பிடித்த மாதிரியான விஷயங்கள் எல்லாம், இப்படியான எதிர்ப்பாராத சந்தர்ப்பங்களில் நிகழும் பொழுது தான் அது நம் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும்.
அப்படித்தான் எனக்கும் நடந்தது. whatsapp இல், status பார்த்துக்கொண்டு இருந்த பொழுது, சட்னு ஒரு பாட்டு என்னை நிறுத்தியது.அந்த பாடலில் அந்த பாடகரின் குரல் ஆரம்பிக்கும் அந்த நொடி!அந்த நோட்! நம் சோர்வை தட்டி, நம்மை எழுப்புகிற விதமாய் தான் அமைந்து இருக்கும். அதை அப்படியே அனுபவிக்க முடிந்தவர்கள் பாக்கியவான்கள்.
சித்ராவின் குரல்! Singer with zero haters.
திரையில் பாடிய பாடல்களை எப்போது எந்த மேடையில் பாடினாலும், improvement என்கிற பெயரிலும் உற்சாகம் என்கிற பெயரிலும் அந்த பாடலின் அழகை குழைக்காமல் பாடும் ஒரே பாடகர்.
கடவுளே ஒரு மழலையாக இருந்து பாடினால் எப்படி இருக்கும்! குழந்தை சார் அவங்க.
அந்த குழந்தை, வாரிசு படத்துக்காக பாடிய பாடல் தான் அது.
எது எப்படியோ இருக்கட்டும்! இந்த குரலை, அதுவும் இந்த பாடலை, பெரிய அரங்கில், சின்னதான ஒரு எதிரொலி இருக்கும் theatre effect இல் கேட்டுவிட வேண்டும்; அதற்காகவே படத்துக்கு செல்ல வேண்டும்.
ஆனால், இந்த படத்துக்கு போயே ஆகணுமா என்கிற எண்ணம் ஒரு பக்கம். நாட்டாமை ஏற்படுத்திய கடுப்பும், திரைக்கு வெளியில், பொதுத்தளத்தில் இளைய தளபதி கிளம்பிய வெறுப்பும் தந்த தயக்கம் ஒரு பக்கம்.
என்னோடு சேர்த்து வீட்டில் எல்லோரும் ரஜினி ரசிகர்கள் என்னைத் தவிர எல்லோரும் விஜய் ரசிகர்கள், இப்படியான சூழலில் உங்களால் விஜய் படத்தை தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தவிர்க்கவே முடியாது.
bike தண்ணியில ஏறி, திரையில் தண்ணீர் தெரித்ததற்கே அத்தனை ஆரவாரம்,இதில் இனிமேல் தான் இளைய தளபதியின் அந்த இளைய முகத்தை காட்டுவார்கள்.
இவன் இப்படித்தான் என்கிற தீர்மானங்கள், நம்மை ஒரு வட்டத்துக்குள் நிறுத்திவைத்துவிடுகிறது.Vijay ன்னா dance என்கிற இந்த சமூகத்தின் தீர்மானம் ஆடியே தீர வேண்டும் என்கிற சுமையை விஜய் மீது வைத்து இருக்கின்றது. அந்த மனுஷனும் 48 வயதில் ஒரு beat மாறாமல் ஆடுகிறார்.ஆனால்,கொக்ர கொக்கரக்கோ பாடலில் லேசாக அந்த தோள்பட்டையை ஒரு சிலுப்பு சிலுப்பி முகத்தின் ஓரத்தில் ஒரு புன்னகையை காட்டி, ஆகா! என்ன dance யா என்று நம்மை ரசிக்க வைத்த அந்த அழகு!? அதை கொஞ்சம் தேட வேண்டியதாய் இருக்கிறது.
நான் போய் கொக்கர கொக்கரக்கோ பாட்டு பார்த்துட்டு வரேன்.
நாம் தியேட்டர்க்கு இதற்காகவா வந்தோம்!
நம்ம பாட்டு இன்னும் வரலை. ஒரு பாடலை அதிகமாக ரசித்து, அதை எப்படி காட்சி படுத்தியிருப்பார்கள் என்கிற பெரும் எதிர்பார்ப்புடன் சென்று பலமுறை ஏமாந்து இருக்கின்றேன். அனால், இந்த முறை?
ஒரு கவிதையை கவிதையாகவே காட்சிப்படுத்துவது என்பது கலையின் உச்சபட்ச சாத்தியங்களுள் ஒன்று அதை சாத்தியப்படுத்தி இருக்கின்றார் வம்சி.
எல்லோருக்கும் தெரியும், பிள்ளை வீட்டை விட்டு போய்ட்டான்,அவன் திரும்பி வரணும்ன்னு அம்மா ஏங்குறாங்க, எப்படியும் அவன் வந்திருவான்.
இப்போ!எல்லோருக்கும் இது தெரியும். இதில் எந்த surprise element உம் இல்லை. பாடல் முன்னமே வெளியான பாடல்.கேட்டு பழகிய பாடல்.இத்தனையும் மீறி அந்த காட்சிக்குள் உங்களை ஒன்றை செய்கிறார் இயக்குனர்.
I was stuck!.உண்மையாக இதை எப்படி எழுத்தில் விவரிப்பது! தெரியவில்லை! I was really stuck.
திரையில் எதை காண்பிக்கிறோமோ அது தான் திரைக்கதை. hero வின் car ஐ வில்லன்கள் துரத்துகிறார்கள். இது தான் கதை என்றால்.அது எப்படியெல்லாம் நடக்கிறது என்று காட்டுவது தான் திரைக்கதை.
மெதுவாக gate க்கு வெளிய ஒரு taxi வருகின்றது. அம்மா மகன் தான் வந்து இருக்கின்றான் என்று வெளியில் வருகிறார் பாடலும் மெதுவாகவும் மென்மையாகவும் ஆரம்பிக்கின்றது.
“கால் தடம் வீழவே
நான் துடித்தேன்”
இந்த வரி வரும் பொழுது தான் நீங்கள் கொஞ்சம் சுய நினைவுக்கு வருவீர்கள். முதல் முதலாய் நடக்கும் ஒரு குழந்தையின் பாதம் பூமியில் மொத்தமாய் அழுத்தமாய் பதியும் பொழுது, அது எத்தனை மெதுவாக எத்தனை அழகாக பதியும்,அப்படி அந்த கால்கள் அந்த வீட்டிற்குள் பதியும். மொத்த திரையிலும் அந்த வரி வரும் பொழுது அந்த கால் தடம் ஆக்கிரமித்து இருக்கும்.
அடுத்தவரி,
“உனை தாய் மடி ஏந்துதே
தாலோ!”
இந்த வரியில் அப்படியே மொத்தமாக அந்த வீட்டின் பரப்பை காண்பித்து, அந்த பரப்பின் மேல் அம்மா பிள்ளை என்று இரண்டு குழந்தைகள் நிற்பதை காண்பித்து மனுஷன் என்னை ஏதோ செய்துவிட்டார்.
அந்த வீடு தான் தாய் மடி, அது அவர்களை ஏந்துது என்று காட்சி வடிவில் ஒரு கவிதை எழுதி இருப்பார் வம்சி.
எனக்கு அந்த வீடியோ வேணும் சார்!
இப்படி காட்சி படுத்துததில் படம் நெடுகிலும் பல கவிதைகளை எழுதி இருக்கின்றார்.
எல்லா கலைகளும் ஏதேனும் வகையில் உணர்வுகளின் பிரதிபலிப்பாய் தான் இருக்கின்றது. உயிர்கள் எல்லாவற்றிக்கும் பொதுவான உணர்வு-அம்மா!
பழக்கப்பட்ட ஏரியாவுல பத்து வயசு தாண்டின பையன், வழி மாறி போய் அம்மாவ காணோம் நம்ம வீட்டுக்கு போவோம் ன்னு போனா,அவனை ஊரெல்லாம் தேடிட்டு வந்து, அந்த அம்மா அந்த பையனை பார்க்கும் அந்த தருணம்; அப்போது அந்த தாயின் கண்களில் வெளிப்படுகின்ற உணர்வு! அதே போன்ற உணர்வை கடத்தும் பாடல்.
பிள்ளையை தேடும் அம்மா! இந்த பாடல் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் சார்!
வெகு காலமாகவே தமிழ்ப்படங்களில் பாடல்களுக்கான lead சரியாக அமைவதில்லை. அரிதிலும் அரிதாக அந்த படத்தில் ஒன்று இந்த படத்தில் ஒன்று என்ற ரகமாகவே தான், பாடல்கள் கதையின் ஓட்டத்தோடு பொருந்தி போகும். இந்த படத்தில், அறிமுக பாடல், ரஞ்சிதமே பாடல் இது இரண்டைத் தவிர அத்தனை பாடல்களுக்கும் கதைக்குள்ளே இடம் இருந்தது. பாடல் வரப்போகிற அந்த தருணங்களும் அழகாக இருந்தது.
ரஞ்சிதமே பாடலுக்காகவே ஒரு காட்சி வைத்து அந்த பாடலை திணித்தது போல் இருந்தது.
இருந்துட்டு போகட்டுமே அதனால என்ன! ஆமா! அதனால என்ன? தன்னை மறந்து ஆடுறான் சார்! விடிஞ்சா வேலை, மறுபடி ஓடணும். அவனை தனியா கூப்பிட்டு தம்பி ஆடு ன்னு சொன்னா ஆட மாட்டான்.
அத்தனை பேர் மனங்களில் அத்தனை பெரிய மகிழ்ச்சியை ஒரு பாடல் தருமானால், இது போன்று எத்தனை பாடல்களை திணித்தால் தான் என்ன?
சினிமா ஒரு கலை என்றால்,அதில் ஜனரஞ்சகமான படம் அந்த கலையின் விஸ்வரூப வடிவம். அந்த முயற்சியில் எல்லாமே எல்லா நேரங்களிலும் சரியாக அமைய வேண்டியதில்லை அப்படி அமையவும் செய்யாது.
நாட்டாமை மீதும் இளைய தளபதி மீதும் கடுப்பில் போன என்னையே முதல் பாதி கதையோடு ஒன்ற வைத்துவிட்டார் வம்சி.
அப்பா வேணாம் என்று சொன்ன பையன்;தன்னிடம் பேசாத அப்பா, அவரே வந்து பேசி வீட்டில் ல இரு என்று சொல்லியும் கேட்காம வெளிய போன பையன்;
இனி வேணாம் என்று சொல்ல கூட அப்பா இருக்க மாட்டார் என்று தெரிந்துகொண்டு, போன வேகத்தில் வீடு திரும்புவதை அதே வேகத்தில் காட்சி படுத்தி; வீட்டிற்கு வந்த நொடியில் தூரமாக நின்று அப்பாவும் மகனும் பார்த்துக்கொள்கிற மாதிரி காட்சி.
நம்முடன் இருந்தவர்கள், இனி நம்முடன் இருக்க போவதில்லை என்று நமக்கு தெரிய வரும் அந்த நொடியில், நம்மால் எதுவும் செய்ய முடியாது என்கிற பொழுது நம் நரம்புக்குள் ஏற்படும் நடுக்கம், நம்மை சில நொடிகள் அசைவின்றி வைத்து இருக்கும், நம் உடலை அசைக்கும் பொழுது அந்த நடுக்கம் வெளிப்படும். ஆனால், நாம் அதை கட்டுப்படுத்துவோம். இந்த உடல் மொழியை இப்படியே திரையில் காண்பித்து இருக்கின்றார் விஜய்.
நம் நரம்புகளில் ஏற்படும் அந்த நடுக்கத்தை அப்படியே violin நரம்புகளுக்கு கடத்தி,STrings ஐ வைத்து அந்த காட்சியின் தாக்கத்தை பின்னணி இசையால் நமக்குள் கடத்துகிறார் தமன். பிண்ணனி இசை எல்லா இடங்களிலும் அருமை💥💥💥
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பாத்ரூமுக்குள் சென்று அழுகும் விஜய். நடு ஹாலில் நின்று அழுக முடியாமல்,தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அப்பாவை பார்த்து, உணர்ச்சி தீவிரத்தில், “என்ன மயிரு வாழ்க்கை யா வாழ்ந்த!” என்றெல்லாம் அப்பாவை திட்டனும், ஆனால் திட்ட முடியாமல் அந்த மகன், “என்னப்பா!” என்று உடைந்து நிற்பது போல பார்க்கும் ஒரு பார்வை; அப்படி பார்க்கும் பொழுது, அந்த பக்கம் நாட்டாமை ஒரு பார்வை பார்க்கிறார்!
யோவ்! நாட்டாமை you deserve oscar வச்சுக்கோ.
அந்த காட்சியில் இரண்டு பேருடைய நடிப்பும்!நம்மை காட்சிக்குள் கொண்டு செல்கிறது.
அதோடு இடைவேளை! ஒரு கதையை இடைவேளையோடு முடிக்க கூட முடியும். அப்படி முடிக்கப்பட்ட கதை தான் பாஞ்சாலி சபதம். “உன் தொடையை கிழித்து அந்த ரத்தத்தை என் கூந்தலுக்கு பூசிக்கொள்ளாமல்,கூந்தலை அள்ளி முடிய மாட்டேன்” என்று பாஞ்சாலி சபதம் இடும் காட்சியே ஒரு climax தான்.
எந்த ஒரு கதையும் அப்படியான இடைவெளிக்கு பின் மீண்டும் ஆரம்பிக்கும், சபதத்தை நிறைவேற்ற அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று. அப்படி ஆரம்பிக்கும் பொழுது கதை மாந்தர்கள் அவர்களின் தன்மையில் இருந்து மாறுபடாமல் இருக்க வேண்டும் இல்லை என்றால் கதை சறுக்கி விடும்.
இடைவெளிக்கு பின்னான ஆரம்பத்தில் கதை அத்தகைய சறுக்கல்களை சந்திக்கிறது.அதுவரை கதை பயணித்து வந்த தளத்தில் இருந்து கீழ் இறங்குகிறது.
இந்த இந்த காட்சிகளை நீக்கியிருக்கலாமோ என்று தோன்றியது, ஆனால், கதை ஒரு புள்ளியில் அழகாக முடியும் பொழுது அந்த காட்சிகளை நீக்கியிருந்தால் வேறு எப்படி இந்த கதையை இந்த இடத்திற்கு கொண்டு வந்து இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது? அதற்கு நிச்சயமாய் என்னிடம் பதில் இல்லை.
இடைவேளைக்கு பின்னான கதையின் சில சறுக்கல்கள் சண்டை காட்சிகளில் மனதை ஒன்ற விடவில்லை.
மனம் ஒரு விஷயத்தில் லயித்து இருக்கும் பொழுது, யாரேனும் இடையூறு செய்தால் ஒரு எரிச்சல் வரும்; ஒரு கோபம் வரும். உங்க மனைவி சேலை கட்ட மடிப்புகளை சரிபார்க்கும் பொழுது இடையூறு செய்து பாருங்கள்😀😀😀😜
மாஸ்டர் படம்- இரண்டு சிறுவர்கள் இறந்து போனதற்கு தானும் ஒரு காரணமாக அமைந்ததை எண்ணி மனம் உடைந்து போய் இருக்கும் ஒருவனின் அந்த சோக உணர்வுக்குள் இடையூறாக சிலர் வரும் பொழுது, அந்த மனிதன் தன்னுடைய அத்தனை கோபத்தையும் காட்டி ஒருவனை அடிக்க; அவன் பறந்து போய் விழுவான்.அங்கே ஒரு இசை இன்னும் கோபமாய் ஒலிக்கும்.நம் மனம் அந்த காட்சியின் ஓட்டத்தில் அதை ஏற்றுக்கொள்ளும்.(This is mass)
அப்படியான தேவைகள் இல்லாத போது, அப்படி ஒருவன் பறந்து போனால்,அந்த சினிமா, மேதாவிகள் விமர்சிக்கும் வெற்று மசாலா படமாக ஆகிவிடும்.
இடைவேளைக்கு பின், அதுவரை தான் பயணித்த வந்த அதே அழகியிலோடு பயணிப்பதா? இல்லை! வேறு பாதையில் பயணிப்பதா என்கிற குழப்பத்தில் கதை ஆங்காங்கே சில சறுக்கல்களை சந்திக்கின்றது.
முழுக்க முழுக்க காட்சிகளின் கவிதையாக மட்டுமே இருந்திருக்க வேண்டிய படம்.ஆனால், அது அப்படி மட்டுமே இருந்திருந்தால் நிச்சயம் அது விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு போதுமானதாக இருந்திருக்காது. அது சில விஷயங்களை புகுத்த வேண்டிய கட்டாயத்தை கொடுக்கின்றது.(it’s all fate).
national crush ராஷ்மிகவ பற்றி? (வரேன் இருங்க!)
கவர்ச்சியும் அழகியல் தான். ஆனால், அது பல சந்தர்ப்பங்களில் காசு பணம் துட்டு money என்கிற அச்சத்தில் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என்கிற மாதிரி ஆகி விடுகிறது. ஜிமிக்கி பொன்னு பாடலை, ஒரு montage song ஆக வைத்து இருவரும் காதல் பழகுவதாக காட்டி இடையிடையே நடனம் வைத்து இருக்கலாம்.கவர்ச்சி வேணுமா கவர்ச்சி இருக்கி என்பதற்காகவே அந்த பாடலை அப்படி காட்சி படுத்தின மாதிரி ஆகிடுச்சு. பிரியாணி நல்லா இருக்கும் என்று அதை சட்டியோடு கவுத்துனா மூஞ்சில அடிச்ச மாதிரி இருக்கும். வியாபாரத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்ட கவர்ச்சியாக வந்து போகிறார். சோகமான காட்சியில் கூட skirt கையில பிடிச்சுக்க வேண்டிய பரிதாப நிலை national crush ராஷ்மிக்காவுக்கு.
படத்தை விஜய் மட்டும் தாங்குகிறார் ஆனால், படம் குப்பை என்கிற விமர்சனங்களை காதில் கொள்ளாதீர்கள். அது விமர்சனமே இல்லை.
sentiment காட்சிகளில் விஜய் மட்டும் நல்லா நடிச்சு உடன் நடிக்கும் நடிகர்கள் காமெடி பண்ணா காட்சி எப்படி எடுபடும்.மோசமான விமர்சனங்களை வைத்துவிட்டு வசவுகளில் இருந்து தப்பிக்க இவர்கள் தரும் excuse அவர் மட்டும் படத்தை தாங்குறார்.
படம் வேற level ! வெறித்தனம்! பங்கம் பண்ணிட்டாய்ங்க என்பார்கள். அதையும் காதில் கொள்ளாதீர்கள். ஆழ்மனதில் விஜயின் தீவிர ரசிகர்கள் என்று தன்னை நினைத்துக்கொண்டு இருப்பவர்களிடம் இருக்கும் அன்பின் வெளிப்பாடு அது. அதுவும் விமர்சனம் இல்லை.
நிச்சயமாக கதையின் சறுக்கல்களாக வரும் சில காட்சிகளும் வசனங்களும் படத்தில் இருக்கத்தான் செய்கிறது அது நம்மை நெளிய வைக்காமல் இல்லை.
படத்தில் twist இல்லை என்பார்கள் அவர்கள் கையில் ஒரு ஜிலேபியை கொடுங்கள்.
எல்லா கதைகளிலும் நாம் twist களை எதிர்ப்பார்க்ககூடாது. twist தான் வேண்டுமென்றால் ஜிலேபியில் தேடுங்கள் கதைகளில் தேடாதீர்கள்.
எத்தனை பெரிய ஓவியராக இருந்தாலும், அவரின் எல்லா ஓவியங்களும் masterpiece ஆகிவிடாது.முன்னம் சொன்னது போல, சினிமா கலை என்றால், ஜனரஞ்சகமான படம் அதன் விஸ்வரூபம்.அது, எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாது.பாடல்கள் சண்டைகள் என்று எல்லாவற்றிக்கும் கதைக்குள் இடம் தருவது, தர முடியாமல் போகிற இடங்களில் கொஞ்சம் கதையை நெருக்கி அவைகளுக்கு இடம் தருவது இது தான் ரொம்ப நல்ல commercial படத்திற்கும், கொஞ்சம் நல்ல commercial படத்திற்கும் உள்ள வித்தியாசம்.இது உங்களுக்கு எப்படி படம் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
சரி! படம் நல்லா இருக்கா ன்னு நீ சொல்லு டா? என்று கேட்பீர்கள்,
படம், படம் நல்லா இருக்கு . படம் தான் நல்லா இருக்கு.கதையில் சில சறுக்கல்களும் இருக்கு.
இன்றைய கால கட்டத்தில் cinema எனும் கலையின் விஸ்வரூபமான commercial படங்களை கையாண்ட பல படங்களில் அந்த சறுக்கல்கள் இருக்கவே செய்கிறது. so,டைம் கிடைச்சா பாருங்க! இல்லைன்னா விடுங்க😃😃😀
ஆனா, அந்த பாட்டு மனசுக்குள்ள ஓடிகிட்டே இருக்கு. அதுவும் பாடலின் முடிவில் குழந்தையின் அழுகை pattern இல் வரும் அந்த humming
ஆ…. அ அ. ஆ அஅ….
அந்த பாடலில் சித்ரா செய்த மாயங்களை பற்றி மட்டுமே ஒரு கட்டுரை எழுதலாம் ஆனா எனக்கு டைம் இல்லை😀
அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். சீக்கிரமே! அதுவும் மீண்டும் அரசியல் கட்டுரையில்!
Excellent Use of words which induces anxiety to read further.
And I like the way how u were conscious to not to reveal the story.
Yov captain….Vikatan la I used to read Cinema vimarsanam and match articles. Inimel ungal vimarsanamum padika vendum. So cinema and match ku neram oduki எழுதுவீர்களாக.ஒவ்வொரு line um padikum bodu anga movie mandaila screen aagi odudu ya. வாழ்த்துக்கள் captain.