டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவர்கள் , டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட கையிருப்பு இல்லை என வேதனை தெரிவித்துள்ளார் என்று செய்தி வந்தது. அதனை ஊடகங்களும் விவாதத்துக்கு உட்படுத்தி வந்தது.

டெல்லி முதல்வர் சொன்னதாக அறியப்படும், “டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட கையிருப்பு இல்லை” என்கிற வாதம்  டெல்லி நிர்வாகம் தடுப்பூசி செலுத்துவதில் மிக வேகமாக செயல்பட்டு வருவதாகவும் ஆனால், மத்திய அரசாங்கம் தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்தவில்லை என்பது போன்று மறைமுகமாக ஒரு குற்றசாட்டை வைப்பது போன்ற அணுகுமுறை. இது மக்கள் முன்னிலையில் தன்னையும் தன் கட்சியையையும் நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் முயற்சியே தவிர இதில் நிர்வாக ரீதியிலான ஆழ்ந்த பார்வையில்லை என்பதே நிதர்சனம்.

டெல்லி முதல்வர் அவர்களின் கருத்துக்கு ஹரியானா முதல்வர் அளித்த பதில் அறிக்கையில்,“டெல்லி அரசு நாள்தோறும் 2 லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகளை விரைவாக செலுத்தியதால் அங்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஹரியானாவில் 50 முதல் 60 ஆயிரம் வரையே தடுப்பூசி செலுத்துகிறோம். அதனால், எங்களுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது” என்று சொன்னதாக மட்டும் தமிழ் ஊடகங்கள் மற்றும்  சமூக ஊடங்களில் வலம் வரும் சமூக சீர்திருத்தவாதிகளான அறிவாளி மீம் க்ரியேட்டர்களும் பரப்பிவருகிறார்கள்.இது அலட்சியமான கருத்து என்றும் பரப்பப்படுகிறது.

ஹரியானா முதல்வர் சொன்னதாக,  இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் இருந்து அறியப்பட்ட  செய்தியின் சாராம்சம் பின்வருமாறு,

“எங்களாலும் கூட ஒரு நாளைக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த முடியும் அப்படி செய்து கையிருப்பு தீர்ந்துவிட்டது என்று பேச முடியும். ஆனால்,எங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி கிடைக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் அதன் காரணமாக நாளொன்றுக்கு  நாங்கள் 50-60 ஆயிரம் தடுப்பூசிகள் தான் செலுத்திவருகிறோம் அப்படி செலுத்துவதால் கையிருப்புக்கு தகுந்தாற் போல தொடர்ந்து எங்களால் தடுப்பூசி செலுத்த முடிகிறது.இந்நாள் வரை மத்திய அரசாங்கமே தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கிவருகிறது (இன்னும் எந்த மாநிலத்தாலும் தடுப்பூசிகள் மருந்து நிறுவனங்களிலிருந்து நேரடியாக  கொள்முதல் செய்யப்படவில்லை) மக்கள் தொகை அடிப்படையில், டெல்லியில் 2 கோடி மக்களும்  ஹரியானாவில் 2.9 கோடி மக்களும் இருக்க டெல்லிக்கு 51 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது.எங்களுக்கு 58 லட்சம் மட்டுமே வந்திருக்கின்றது. டெல்லிக்கு அனுப்பப் பட்டிருக்கும் விகிதத்தை கருத்தில் கொண்டால் எங்களுக்கு 75 லட்சம் தடுப்பூசி வந்திருக்க வேண்டும். ஆக, டெல்லி இதுவரை அதிகமாகவே பெற்று இருக்கின்றது. கையிருப்பில் இருக்கும் தடுப்பூசி நாடு முழுதும் மக்களுக்கு சென்றைடைய வேண்டும் டெல்லிக்கு மட்டுமே கொடுக்க முடியாது. நாடு முழுதும் பெறுவதற்கு, சார்பு விகித அடிப்படையில் தடுப்பூசி பகிர்ந்தளிக்க பட வேண்டும்”.

மேலே ஹரியானா முதல்வர் சொன்னதாக அறியப்படும் கருத்தை எப்போதும் போல எதிர்க்கட்சியினர் அரசியலாக்க மறந்துவிடவில்லை.

தடுப்பூசி விவகாரத்தில் இதுவரை நடந்ததை எல்லாம்  கொஞ்சம் அலசுவோம்,

சென்ற ஆண்டு பெருந்தொற்று இந்தியாவில் பரவ தொடங்கி இந்தியா மற்ற நாடுகளை விட முதல் அலையை சிறப்பாக சமாளித்தது என்று சொல்லக் கூடிய வகையிலேயே தான் சமாளித்து இருந்தது.

இரண்டாம் அலையின் பெரிய தாக்கத்தை நாடு உணருவதற்கு முன்னதாக சீரம் நிறுவனம் கடைசி கட்ட ஆய்வு முடிவுகளுக்கு காத்திருக்காமல் தன்னிச்சையாக தடுப்பூசி தயாரிப்பை  தொடங்கியிருந்தார்கள். அரசாங்கம் அதற்கு முன்பிருந்தே தடுப்பூசி மற்றும் கொரோனாவிற்கு எதிரான மருந்து பயன்பாடு குறித்து பல்வேறு நிலைகளில் சில நடவடிக்கைகளையும் முடிவுகளையும் எடுத்துவந்தது.

  1. அரசாங்க நடவடிக்கை: ஜனவரி மாதம்-2021, இந்திய தயாரிப்பான இரண்டு தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்து இருந்தது.

அரசியல்வாதிகளின் எதிர்வினை : இது அவசரமான முடிவு என்றும்  அபாயகரமான முடிவு என்றும், 3ம் கட்ட பரிசோதனைகள் முடிவுறாமல் எடுத்திருக்கும் இந்த முடிவு மக்களின் பாதுகாப்பை கேள்விகுட்படுத்தும் என்றும் விமர்சித்து இந்திய தடுப்பூசி மீது சந்தேகத்தையும் அச்சத்தையும் எதிர்கட்சிகள் பரப்பியது.

மேலே சொன்ன எதிர்வினை பற்றிய செய்திகளில் ஒன்று

https://www.indiatoday.in/coronavirus-outbreak/vaccine-updates/story/-premature-dangerous-congress-leaders-over-approval-to-bharat-biotech-vaccine-without-phase-3-trials-1755441-2021-01-03

இந்திய தயாரிப்பான இரண்டு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டின் ஒப்புதலுக்கு இந்தியா இன்னும் சில காலம் எடுத்து இருந்தால். தடுப்பூசிக்கு முழுமையாக மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்திருக்கும், அதோடு அந்நிய நாட்டு தடுப்பூசிகளின் திறனை கேள்விகள் இல்லாமல் அங்கீகரிக்க இந்தியா நிர்பந்திக்கப்பட்டிருக்கும்.

  • அரசாங்க நடவடிக்கை: இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின்க்கு அவசர கால அனுமதி அளித்த சில நாட்களுக்கு பின் ஜனவரி 16 இல் இருந்து  முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பித்த தாக அறிகிறோம்.

அரசியல்வாதிகளின் எதிர்வினை : ஜனவரி 16ல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே,மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பிரதமர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்கள்.

மேலே சொன்ன எதிர்வினை பற்றிய செய்திகளில் ஒன்று

https://www.business-standard.com/article/current-affairs/pm-modi-should-take-coronavirus-vaccine-first-to-allay-doubts-ncp-121011101280_1.html

இது போன்ற கருத்து அரசியல் ஆதாயங்களுக்காக வைக்கப்படும் கருத்துக்களே. இத்தகைய கருத்துக்கள் தடுப்பூசி மீதான நம்பிக்கையை குறைக்கவே செய்யும். அந்த நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசி மீது முழுமையான நம்பிக்கை வராமல் இது போன்ற கருத்துக்கள் கவனமாக பார்த்துக்கொண்டது.

  • அரசியல் நோக்கர்களின்  குற்றசாட்டு : பைசர் (pfizer) போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகளை அங்கீகரிப்பதில் இந்தியா காலம் தாழ்த்துகிறது என்கிற குற்றசாட்டு சில அரசியல்வாதிகளாலும் அரசியல் விமர்சகர்களாலும் வைக்கப்பட்டு வருகின்றது. மற்ற நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியை அங்கீகரிக்க ஏன் தாமதிக்க வேண்டும் என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

உண்மை நிலவரம்: இரண்டாம் அலையின் பாதிப்பை உணர்ந்த பின்னரே பைசர் (pfizer) தடுப்பூசிக்கு  அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதலை பிரிட்டன் வழங்கியது. அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெற்ற பின், இது முன்கள பணியாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்குமே செலுத்தப்படும். ஜப்பான் பைசர்,தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய பின்னர் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பக்க விளைவுகளை பற்றி ஆராய்ந்து அதன் பின்னரே அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தியதாக தெரிகிறது. அதனால் அந்நிய மருந்துக்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் எந்த நாடும் அங்கீகரிப்பதில்லை. அதோடு, இந்திய சந்தையில் பைசர் விற்பனை செய்ய அவர்கள் அனுமதி கோரியிருந்து விண்ணப்பித்த போது அரசாங்கம், இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர்கள் தடுப்பூசியின் பாதுகாப்பையும் திறனையும் உறுதி செய்யவேண்டும் என்ற நிலையில் அவர்கள்,விண்ணப்பத்தை பிப்ரவரியில் திரும்ப பெற்றுக்கொண்டார்கள்.

இந்திய அரசாங்கம் உள்நாட்டில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தாமல் வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க தயங்குவதில் காரணம் இல்லாமல் இல்லை. பைசர் போன்ற தடுப்பூசிக்கு அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பெற்றால் இதை காரணம் காட்டி மற்ற தடுப்பூசி நிறுவனங்களும் அதே வழியில் ஒப்புதல் பெற முனைய வாய்ப்பிருக்கின்றது அதோடு இது தவறான முன்னுதாரணமாகி எதிர்காலத்தில் இந்திய மக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் செய்யவும் வாய்ப்பிருக்கின்றது. உதாரணமாக,தடுப்பூசியை இந்தியாவில் விற்க நினைக்கும் அந்நிய நிறுவனம் முழுமையான பரிசோதனைகள் செய்யாமல் இந்தியாவில் கொண்டு சேர்க்க முற்படலாம். அவர்களின் பரிசோதனை நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை அறியாமல் உள்நாட்டு சோதனைகளுக்கு உட்படுத்தாமல் ஏற்கனவே சில தடுப்பு மருந்துகள் அனுமதிக்க பட்டிருக்கின்றது என்று காரணம் காட்டி அதற்கும் ஒப்புதல் அளித்தால் அது ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கின்றது, இங்கே நாம் பல்வேறு நாடுகளின் அரசுகளால் அனுமதிக்கப்பட்டிருக்கும் பைசர் என்ற ஒரு தடுப்பூசியின்  நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தவில்லை. மாறாக இந்திய அரசாங்கத்தின் தயக்கத்திற்கான காரணத்தையே விளக்கியுள்ளோம்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் ஏன் இன்னும் உற்பத்தி தொடங்கவில்லை என்ற பரப்புரை பற்றி:

சமீபத்தில் நம் மாநில முதல்வர் அந்த மையத்தை மாநில அரசு குத்தகைக்கு எடுத்து நடத்த அனுமதி தர வேண்டும் என்று கேட்டிருந்தார்.சரியான, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்து மாநில அரசு உற்பத்தியை தொடங்க விரும்புவதாகவும் அறிவித்து இருந்தார்.

சமீபத்தில், (02/06/21 அன்று) அவரின் முகநூல் பக்கத்தில் கீழ் வருமாறு பதிவிட பட்டிருந்தது.

.”தமிழ்நாட்டின் மக்கட்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து #CovidVaccine வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்”.

இந்த அறிக்கைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் முன்னதாக,செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் தொடர்பாக வந்த செய்திகளை அலசலாம்.

*இந்த உற்பத்தி மையம் 2012 இல் 600 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டு, 100 ஏக்கர் பரப்பளவில் ரேபிஸ் போன்ற இன்னும் சில நோய்களுக்கான தடுப்பு மருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

* பிரிண்ட் ஊடகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட, இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) துணைத்தலைவர் பழனிச்சாமி அவர்கள் அளித்த பேட்டியின் படி, உள்ளூர் எதிர்ப்பு காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்றும். ஆனாலும்,2019 இல் கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்து அங்கே எந்த உற்பத்தியும் நடைபெறவில்லை. தற்போது, அங்கே பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது என்றும் அறியப்படுகிறது.

*கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டப்பணியின் மதிப்பு 904 கோடி ஆக உயர்ந்து இருக்கின்றது. (போராட்டங்களின் சில எதிர்மறையான விளைவுகளில் ஒன்றாக இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம்).

*9 வருடங்ககளாக செயல்படாமல் இருக்கின்றது என்று பரவும் செய்திகளில் உண்மை இல்லை 2013இல் கட்டுமான பணிகள் தொடங்கி 2018இல் முடிக்கப்பட்டதாக தெரிகிறது.

* செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பற்றி ஏப்ரல் 23, 2021-ல் அன்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.

* மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஜனவரியில் நேரில் பார்வையிட்டு சென்று இருக்கின்றார்.

* செய்திகளின் படி,   செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்படுத்தி தடுப்பூசிகள் தயாரிக்க ஜனவரி மாதமே தனியார் நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு மார்ச் மாதத்தில் டெண்டருக்கான அழைப்பு விடுக்கப்பட்டு இருந்திருக்கின்றது.

* டெண்டருக்கான அழைப்பை காரணம் காட்டி உற்பத்தியை தொடங்காமல் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்னும் குற்றசாட்டு வைக்கப்படுகிறது.

*மே 10 அன்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏ.எஸ்.ஜி ஆர் சங்கரநாராயணன்) நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அறியப்படும் தகவலின் படி, இது போன்ற உற்பத்தி மையங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் முறை தெரியாது. டெண்டருக்கான அழைப்பு விடுக்கப்பட்டும் எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.

* மூத்த வழக்கறிஞர் தி.மு.க வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்கள், மாநில மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் படி (மத்திய விஜிலென்ஸ் கமிஷன் ஃபார் சென்டர் மற்றும் டி.என் வெளிப்படைத்தன்மை டெண்டர் சட்டம் 1998), அவசர காலங்களில் ஒற்றை டெண்டர் அல்லது நேரடியாக ஒரு நிறுவனம் மூலம்  கொள்முதல் செய்ய செல்லலாம் என்னும் கருத்தை முன் வைத்திருக்கின்றார். அதன் படி தகுதியான நிறுவனத்தை நேரடியாக உற்பத்தி செய்ய கேட்டு உற்பத்தியை தொடங்க முடியும் என்பதாக அவரின் கருத்து இருக்கின்றது.

* மூத்த வழக்கறிஞர் தி.மு.க வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் எடுத்து சொன்ன கருத்தை, தமிழகம் தடுப்பூசி கொள்முதல் விஷயத்தில் எடுத்துக் கொண்டிருந்தால் சிறப்பாக இருக்கும். தற்போதைய நிலையில் 3 நிறுவனங்களின் தடுப்பூசி அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த 3 நிறுவனங்களிடம் இருந்தும் தனித்தனியாக சில  கோடி டோஸ் கொள்முதல் செய்திருக்கலாமே ஏன் தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் விடுக்கப்பட்டு இருக்கின்றது என்று மக்கள் மத்தியில் கேள்வி எழாமல்  இல்லை.

*தற்போது இருக்கும் நிலையில் உற்பத்தியை தொடங்க மேலும் 150 கோடி முதலீடு வேண்டியதிருக்கும் என்று பிரிண்ட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

* ஹிந்துஸ்தான் டைம்ஸ் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்  வெளியிட்ட செய்தியின் படி, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் உற்பத்தி தொடங்க அதிக முதலீடு தேவைபடும் அதனால் தனியார் நிறுவனங்கள் குறைவான விலைக்கு உற்பத்தி மையத்தை குத்தகைக்கு எடுக்க நினைப்பதாவாகவும் அதன் காரணமாகவே டெண்டர். அழைப்பிற்கு பெரிதாக அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கின்றது.

https://www.thehindubusinessline.com/news/national/tn-ready-to-revive-vaccine-complex-of-hll-biotech/article34652093.ece

* தி பிரிண்ட் (The Print) ஊடகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட, இந்திய தொழிற்சங்கங்களின் மைய (சிஐடியு) துணைத்தலைவர் பழனிச்சாமி அவர்கள் அளித்த பேட்டியில் “அரசு உற்பத்தி மையங்ககளில் உற்பத்தி செய்தால் குறைவான விலைக்கு விற்க நேரிடும் என்று தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை” என்று சொல்லி இருக்கின்றார்.

*ஏற்கனவே உற்பத்தி மையத்தை தொடங்குவதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இதுவரை எந்த தனியார் நிறுவனமும் ஏலத்தில் ஆர்வம்   காட்டாத நிலையில் தமிழக அரசு அந்நிறுவனத்தை குத்தகைக்கு எடுக்க தன் விருப்பத்தை தெரிவித்து இருந்தது. பின்னர் தற்போது மத்திய அரசை உடனடியாக தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றது. இது ஒரு வகையில் கவன ஈர்ப்பு அரசியல் என்று ஒரு சாரரரும்.மத்திய அரசிற்கு தரும் அழுத்தம் என்று எதிர்தரப்பும் வாத பிரதிவாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றது.

இந்திய அரசாங்கம் தடுப்பூசி உற்பத்தியை பெருக்க ஏப்ரல் 17 அன்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்தியன் இம்யூனோலாஜிகல்ஸ் லிமிடெட், உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் உள்ள பாரத் இம்யூனோலாஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிகல்ஸ் லிமிடெட் (பிஐபிசிஎல்) மற்றும் மும்பையைச் சேர்ந்த ஹாஃப்கைன் நிறுவனம் ஆகியவற்றுக்கு கோவாக்சின் தயாரிக்க அனுமதி அளித்து இருக்கின்றது. மிகவும் பாதுகாப்பான உயிரியல்பாதுகாப்பு நிலை 3 (பிஎஸ்எல் 3) உற்பத்தி வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே கோவாக்சின் தயாரிக்க முடியும். இந்தியன் இம்யூனோலாஜிகல்ஸ் லிமிடெட் மட்டுமே பி.எஸ்.எல் 3 வசதிகளைக் கொண்ட ஒரே அனுபவம் வாய்ந்த உற்பத்தியாளர் ஆகும். அவர்கள் கோவாக்சின் தயாரிக்க ஆறு மாதங்கள் ஆகலாம் என்றும் மற்ற இரண்டு நிறுவனங்ககள்  கோவாக்சின் தயாரிக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறியப்படுகிறது. இந்த பி.எஸ்.எல்  வசதியில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பற்றி தகவல்கள் இல்லை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரு நிறுவனங்களுக்கே  கோவாக்சின் தயாரிக்க ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை தேவைபடும் நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்.

ஹரியானா முதல்வர் கூறியிருக்கும் கருத்தில் அலட்சியமோ அரசியலோ இருப்பதாக தெரியவில்லை. சில விஷயங்கள் அதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளவே செய்யும்.உலகத்தில் உள்ள வளர்ந்த நாடுகளால், அவர்கள் தற்போது தடுப்பூசி செலுத்தும் வேகத்தை விட , இன்னும் விரைவாக அதிகம் பேருக்கு செலுத்த இயலும். ஆனால், இந்தியாவையும் சேர்த்து எல்லா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளும் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. உலகத்தில் அநேகமான நாடுகள் இந்த பாதிப்பில் இருக்கும் போது  தனித்து யாரும் மீண்டு விட முடியாது என்பதன் காரணமாகவே எல்லா நாடுகளும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கென்று தங்கள் உற்பத்தியில் ஒரு பகுதியை மற்ற நாடுகளுக்கு ஒதுக்குகிறது.அதோடு, எல்லா நாடுகளை   சேர்ந்த தடுப்பூசி நிறுவனங்களும் உலகத்தின் தேவையை ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யும் அளவிற்கு திறன் கொண்டிருக்கவில்லை அதோடு தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களுக்கும் ஏற்படும் தட்டுப்பாடுகளை சரி செய்யவும் நாடுகள் ஒருங்கிணைந்து முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றது.அது போலவே நம் அரசாங்கம் தற்போது இருக்கும் உற்பத்தி திறன் மற்றும் கொள்முதல் செய்ய முடிந்த அளவு கையிருப்பின் அடிப்பைடயில் தடுப்புமருந்துகளை பகிர்ந்தளித்து வருகிறது.

எல்லா தடுப்பூசி நிறுவனங்களும் தங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வேலையை தொடங்கியிருக்கின்றது. இப்போதிருக்கும் சூழலில் எல்லார்க்கும் தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்பதை நோக்கியே நம்முடைய அரசையும் சேர்த்து எல்லா அரசுகளும் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தின் கடைசியில் தான்  இந்த மருந்துகள் கடைசி கட்ட பரிசோதனைகளுக்கு அருகில் வந்தது. சூழல் இப்படியிருக்க அரசை  குறை கூறி அரசியல் ஆதாயம் தேடும் போக்கு எப்போதும் போல் இந்த பெருந்தொற்று காலத்திலும் நடப்பதும் மக்கள் அதை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் இந்தியாவின் வருத்தங்ககளில் ஒன்று. இந்த பெருந்தொற்றை பொறுத்தவரையில் மருத்துவ வசதியில்  வளர்ந்த நாடுகளை விட கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்த நாடுகளே அதிலிருந்து மீண்டு வந்து இருக்கின்றது. நாம் அதில் தவறி இருக்கின்றோம். ஒரு சமூகம் ஏதேனும் ஒருவகையில் ஒரு பின்னடைவை சந்திக்குமானால் அதற்கு யாரோ ஒருவரை மற்றும் குறை கூறி கொண்டிருந்தால் அந்த பின்னடைவில் இருந்து மீண்டு வருவது சிரமமே. எப்போதும் காரண காரியங்களை ஆராய பழக வேண்டும் அரசியல்வாதிகளின் வெறுப்பு அரசியல் ஆட்டத்தில் நாம் பகடையாக கூடாது. துரதிர்ஷ்டவசமாக அதுவே எப்போதும் நடந்து வருகிறது.

கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவதே இல்லை. நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்ற புரிதல் நமக்கு வந்து அரசியல்வாதிகளால் நடத்தப்படும்  பகடை ஆட்டத்தில் நாம் சிக்காமல் இருக்கும் நாளே உண்மையான விடியலை கொண்டு வரும் நாளாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *