அரசியல் பழகுங்கள் விஜய் அவர்களே!

இந்த தலைப்பை பார்த்ததும் விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஏகத்திற்கும் கோபம் வரலாம். அதை ஓரமாக வைத்துவிட்டு நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையை படியுங்கள், விஜயும் விஜயின் ரசிகர்களும் அடுத்த சீமான் அண்ட் தம்பிகளாக ஆகிவிட கூடாது என்கிற அக்கறையும் கலந்து எழுதப்பட்டதே தான் இந்த கட்டுரை.

அந்த அக்கறை உனக்கு எதுக்கு என்பீர்கள் என்றால்? இது தான் என்னுடைய பதில், “தமிழக அரசியலில் செல்வாக்கு மிக ஒரு புதுமுகம் தேவைப்படுகிறது. திராவிட கட்சிகளை வீழ்த்த அதிகமான ப்ரயத்தனமும், மக்களின் ஒற்றுமையும் எழுச்சியும் தேவை என்றாலும் அது அத்துணைக்கும் ஒரு முகம் தேவைப்படுகிறது.

அந்த முகம் அறிமுகம் ஆகும் பொழுதே கேலிக்கு உள்ளாக்கப்படும் நிலைக்கு தன்னை தள்ளிக்கொண்டது துரதிஸ்டவசமானது.

முதலில் நீங்கள் (விஜய்) ஒரு முக்கியமான தீர்மானத்திற்கு வர வேண்டும். எல்லாவற்றிக்கும் அறிக்கை கொடுத்து கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை என்பதை நீங்கள் தெளிந்து கொள்ளவேண்டும். முன்னம் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாம் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது போல், நம்முடைய நடிகர்கள், அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் என்று எல்லோரும் எல்லாவற்றிக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்கிற நிலையை அரசியல்வாதிகளும் ஊடகமும், மிக குறிப்பாக மாநில கட்சிகளும் ஊடங்களும்ஏற்படுத்தி வைத்து இருக்கின்றார்கள். தெருவில் நின்று கூச்சல் இட்டு கொண்டிருப்பதால் எதுவுமே மாறிவிடாது, அது வெறும் attention seeking stunt (மக்களுக்காக தாங்கள் ஏதோ செய்வது போல காட்டி கவனம் ஈர்ப்பது) . திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக அதையே தான் செய்துவந்திருக்கின்றார்கள். இந்த அரசியல் சூழல் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற நிர்பந்தங்களுக்காகவும் நீங்கள் உங்களை ஒரு முழுநேர அரசியல்வாதியாக அறிவித்து கொண்டதற்காகவும் எல்லாவற்றிக்கும் உங்கள் இருப்பை அரசியல் களத்தில் காட்டுவதற்காகவும் அறிக்கை விட்டு கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை. அப்படி நீங்கள் எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் அதற்கும் விமர்சனங்கள் எழுமே என்று அஞ்ச வேண்டியதுமில்லை.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் தலைமை பண்பு பற்றி பேசும் பொழுது,”மக்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்வது தலைவர்க்கு அழகாகாது” என்னும் பொருளில் பேசியிருப்பார். எல்லோருக்கும் பொதுவான தலைவராய் ஓர் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் பொழுது, நிர்வாக அமைப்பில் கடைநிலையில் இருப்பவர்கள் பெரிய புரிதல்களின்றி குழுக்களாக பிரிந்து, நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் இதைத்தான் பேசியிருக்க வேண்டும் என்கிற நிர்பந்தங்களை எல்லாம் ஏற்படுத்துவார்கள். இப்படி சூழல்கள் ஏற்படுத்துகின்ற நிர்பந்தங்களுக்கு வளைந்து கொடுப்பது தலைமை பண்புக்கு அழகாகாது.

வெளிப்புற நிர்பந்தங்களாலேயே நீங்கள் வெளியிட்டதாக தெரியும் இரண்டு அறிக்கைகளில் இரண்டாவது அறிக்கை எல்லா தரப்பினராலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.குடியுரிமை சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் தி.மு.க.வினர் சிலரும் கூட உங்கள் கருத்தை எதிர்க்கும் வண்ணம் உங்கள் அறிக்கை அமைந்தது தான் முரண்.

இந்த அறிக்கையை வெளியிட்டவர் உங்கள் விஜய்

 

 

கவனமாகவே நீங்கள்( விஜய்) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கவன குறைவான விஷயங்களே அதிகம் இருக்கின்றது.

நாம்,இந்த பாஜக, திமுக, காங்கிரஸ், சமத்துவம்,வலது சாரி இடது சாரி என்பதையும் தற்போது நீங்கள் முழுநேர அரசியல்வாதி என்பதையும் ஒதுக்கி விட்டு அரசாங்கம் என்பதை ஒரு சிஸ்டமாக பாவித்து சில விஷயங்களை ஆராயலாம்.

இந்த அரசாங்கமானது எந்த ஒரு திட்டத்தையோ சட்டத்தையோ முன்மொழிய அதற்கு ஒரு நோக்கம் அல்லது இலக்கு தேவைப்படுகிறது. அதாவது objective. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்னவெல்லாம் objective ஆக இருக்க முடியும்.

உங்களுக்கு யூசப் யோஹன்னா தெரியுமா? பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்த கிறிஸ்துவ நம்பிக்கை கொண்ட வீரர். சில காரணங்களால் அவர் முகம்மது யூசுப் ஆகிறார். அந்த சமயத்தில் மற்ற எல்லாவற்றையும் விட கிரிக்கெட் தான் தனக்கு முக்கியம் என்றும் கூட சொல்லியிருந்தார்.மற்றொரு முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, அவர் சந்தித்த மத ரீதியிலான பாகுபாடுகளைப் பற்றி பொதுவெளியில் பேசியிருந்தார். இந்தியா மதச்சார்பற்ற நாடு தான், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் மதசார்பற்ற நாடு இல்லை என்பதை நினைவூட்டும் நிகழ்வுகள் தான் இவை.

இப்படியான மதப்பாகுப்பாட்டினால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் இந்தியாவிற்குள் வந்து இந்தியாவில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சுலபமான ஒரு வழிமுறையை ஏற்படுத்தி தருவது தான் இந்த சட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது.

இது ஏன்?

புலம்பெயர்ந்து இந்தியாவிற்குள் வந்து தொங்கிக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்கள் எத்தனை பேர்? யாராலும் சரியான எண்ணிக்கையை சொல்லிவிட முடியாது. புலம்பெயர்ந்து வருவது ஒருவகை என்றால், ஊடுருவல் மற்றொரு வகை. இந்தியாவிற்குள் எவ்வித முறையான அனுமதியும் இல்லாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள், அதை தெரிந்து கொள்ளவே தேசிய பதிவேடு முக்கியமானதாகிறது.ஒரு சில லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அத்தனை பேரையும் நாடு கடத்துவதிலும் கூட சிக்கல் இருக்கின்றது.இதை சில வழிகளில் முறைபடுத்த வேண்டும். சில வழிகளை எளிமைப்படுத்த வேண்டும். அப்படி எளிமைப்படுத்துவது இந்தியாவிற்கு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.அதனால், மிக கவனமாக அரசாங்கம் ஒரு படி எடுத்துவைத்திருக்கின்றது.அண்டை நாடுகளில் (அதாவது இந்தியாவின் அங்கமாக இருந்து தங்கள் மதத்திற்காகவே தனி நாடு கேட்டு பிரிந்த நாடுகளையும் சேர்த்த அண்டை நாடுகளில்) மதம் சார் பாகுபாடுகளால் நடக்கும் இன்னல்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு தகுதியுடையர்களாக ஆக்குகிறது. இந்த முன்னெடுப்பு, புலம்பெயர்தவர்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறது, அவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் அல்லது அவர்கள் நாடுகளுக்கு திரும்பலாம். இதில் அவர்கள் நாடுகளுக்கு திரும்ப முடியவைத்தார்களாக இருப்பவர்கள் மதம் சார்ந்த பாகுபாடுகளால் ஆன இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

முறையான ஆவணங்கள் இல்லாமல் சில லட்சம் புலம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைக்கலாம்.

இதில் இஸ்லாயமியர்கள், இலங்கை தமிழர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தனியான ஒரு விவாதத்திற்கானது.

எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்கப்படாமல் இருந்தால் இந்த பிரச்சனைகளும் சிக்கல்களும் இப்படியே தான் இருக்க போகிறது.சட்டவிரோத ஊடுருவல்கள் தொடர்பாக யாரோ ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்க போகிறார்.அந்த வழக்குகளுக்கு ஆயிரங்களிலும் லட்சங்களிலும் இருக்கும் ஊடுருவலுக்கு 100 கணக்கானவர்களை நாடு கடத்தியதாக அரசாங்கம் பதிலளித்துக்கொண்டிருக்கும்.

முறையற்று கிடக்கும் ஒரு பெரும் பிரச்சனையை முறைப்படுத்த முனையும் பொழுது அதில் சில குறைபாடுகள் இருக்கலாம் அது சார் வாதங்கள் வரவேற்க பட வேண்டியது தான். ஆனால், மொத்தமாக அந்த முன்னெடுப்பை குறை கூறுவது அபத்தமானது. விஜய்யின் அறிக்கையும் அத்தனை அபத்தமானதாக இருப்பதாலேயே தான் எல்லா தரப்பினரும் கேலி செய்யும் படியாக அமைந்துவிட்டது.

தமிழகத்தில் இந்த சட்டத்தை நடைமுறை படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். இங்கே ஆட்சியாளர்கள் என்று தி.மு.க வினரை மட்டும் சுட்டியதாக தி.மு.கவினர் ஒரு பக்கம், சட்ட திருத்தத்தை எதிர்ததற்காக பாஜகவினர் ஒரு பக்கம்,இடையில், விஜய் ரசிகர்கள் சம்பாதித்துக்கொடுத்த விஜய் கேட்டர்ஸ் ஒரு பக்கம் என்று எல்லோரும் வச்சு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

முதலில், இந்த இந்தியர்களின் ஒற்றுமைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை.இந்த சட்டம் முறையற்ற முறையில் இந்தியாவில் தங்கி கொண்டிருக்கும் வெளிநாட்டினர் பற்றியது. ரஜினி endorse செய்தது போல், இந்தியாவில் இருக்கின்ற இந்திய முஸ்லிம்களுக்கு இது எந்தவித பாதிப்பையும் செய்யப்போவதில்லை. இதில் பிளவுவாதம் எங்கிருந்து வந்தது எங்கிருந்து வந்தது என்கிற கேள்வியை புறம் தள்ளிவிடலாம்.

இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்திற்கு அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்; நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்த்தோமேயானால் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. அப்காஹனிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களில் எத்தனை பேர் கன்னியாகுமரியில் இருப்பார்கள்.ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக பங்களாதேஷில் இருந்து ஊடுருவியவர்கள் சம்பந்தப்பட்ட சில குற்றச்செயல்கள் மட்டுமே செய்திகளாக வருகிறது. புலம்பெயர்ந்தவர்களோ ஊடுருவியவர்களோ குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வந்து தமிழகத்திற்குள் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக குறைவாகவே இருக்கும் எம் கருத்து. அப்படியிருக்கையில் தமிழகத்தில் இந்தச் சட்டம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கை தமிழர்கர்ககளை பொறுத்த வரையில் இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கி இலவச கல்வி எல்லாம் கூட கொடுத்து வந்திருக்கின்றது. பிரச்சனை வடக்கு மாநிலங்களுடையது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களுடையது.

இதிலிருக்கும் சிக்கல்களை ஓரளவிற்கு உணர்ந்து இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, “சட்ட விதிகளில் நல்ல விஷயங்கள் இருந்தால் ஆதரிப்போம், நாட்டுக்கு எதிரான விஷயங்கள் இருந்தால் எதிர்ப்போம், மக்கள் அமைதி காக்க வேண்டும் வந்ததிகளை நம்ப கூடாது” என்று சொல்லியிருக்கின்றார். எல்லோருக்குமான தலைவராக தங்களை முன்னிறுத்தி கொள்பவர்களும் நாட்டின் பாதுகாப்பு சார் அம்சங்களில் சமரசம் செய்து கொள்ளாதவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் தலைவர்களும் இத்தனை கவனமாகவே தான் வார்த்தைகளை தேர்வு செய்ய வேண்டும்.மம்தா அதைத்தான் செய்து இருக்கின்றார்.

இதைத்தான் விஜய் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஊடுருவல் சார் விஷயங்களின் தீவிரத்தன்மையை மேற்கு வங்க அரசியல் தலைவர்கள் எல்லோருமே உணர்ந்திருப்பார்கள்.

ஒரு கட்சி தலைவராக நாம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கு வழக்கு தொடர்ந்து இருக்கின்றது. அவர்களை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் அந்த வழக்கில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள். விஜயும் கூட தன்னுடைய கட்சியை அந்த வழக்கில் இணைத்து கொள்ளலாம்.

வெளியில் தி.மு.க போன்ற அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற பீதியை எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் வழக்கறிஞர்கள் கூட வாதங்களாக வைத்ததாக தெரியவில்லை. அப்படி கட்சிகள் பரப்பிய வந்ததியை எடுத்துக்கொண்டு அறிக்கை தயாரித்தது போன்று இருக்கின்றது.

யாரை இந்த சட்டம் பிளக்கிறது என்பதை, விஜய் தன்னுடைய கட்சியில் சட்ட நிபுணர்கள் இருந்து கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வைக்கப்பட்ட சில வாதங்கள் கவனிக்கப்பட வேண்டியது. அரசியல் அமைப்பு சட்டம் வரைவு 14ஐ குறித்து, இந்தியாவின் ஆளுகைக்கு உட்டபட்ட பகுதிகளில், சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் என்று வாதிட்டு இருப்பதாக தெரிகிறது. எல்லோருக்கும் என்பது இந்தியாவின் ஆளுகைக்கு உட்டபட்ட பகுதியில் இருக்கும் எல்லா மதத்தையும் சேர்ந்த வெளிநாட்டவர்க்கும். அப்படியென்றால் இந்த சட்டத்திருத்தம் அரசியல் அமைப்பு சட்டம் வரைவு 14ஐ மீறுகிறதா? அது தான் இப்பொழுது ஆய்விற்கும் வாதத்திற்கும் உட்டப்படுத்தபட்டு இருக்கின்றது.

அதோடு அஸ்ஸாம் இயக்கத்தலைவர்கள் அரசாங்கத்தோடு முன்னம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் படி குடியுரிமை சட்டத்தின் பிரிவு “a ” 24 மார்ச் 1971க்கு வரை இந்தியாவில் அஸ்ஸாமிற்குள் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது. தற்போது இயற்றப்பட்டிருக்கும் இந்த புதிய திருத்தமானது 2014 வரை குடியுறேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இது அஸ்ஸாம் மாநில மக்களை பாதிக்கலாம். ஆனால், அங்கும் சில இடங்களில் இந்த புதிய சட்ட திருத்தும் பொருந்தாது.

குடியுரிமை சட்டம் பிரிவு ‘A’, அரசியல் அமைப்பு சட்டம் வரைவு 14, குடியுரிமை சட்டத்திருத்தம் 2019 இது மூன்றுக்கும் இருக்கும் முரண்பாட்டை தான் நாம் ஆக்கபூர்வமான வகையில் விவாதித்து  முறையற்ற குடியேற்றங்களை முறைபடுத்துவோ அல்லது அவர்களை நாடு கடத்தவோ செய்ய வேண்டும். அதை விடுத்து. இது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது நாட்டை பிளவுபடுத்துவது, ஒற்றுமை குலைப்பது என்று வராதீர்கள், இத்தகைய வந்ததிகளும் அறியாமையும் தான் நாட்டை பிளவுபடுத்தும்.

அரசியல் ஆழமானது, ஆழ்ந்து அறிந்து களமாடுங்கள் நடிகர் விஜய் அவர்களே இல்லையென்றால் இந்த ஊடகமும் திராவிட கட்சிகளும் உங்களையும் அரசியல் கோமாளி ஆக்கிவிடும். உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் எங்கள் குழுவின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *