இன்றும் நினைவில் இருக்கிறது, அந்த மறக்க முடியாத தருணங்கள்..

அவசர அவசரமாக என்னை தயாராக்கி தண்ணீர் பாட்டில் திண்பண்டங்கள் என பைகளில் வைத்து எடுத்துக் கொண்டு என் அம்மா என்னை முதன்முதலில் அழைத்துக்கொண்டு சென்ற திரைப்படம் தர்மசக்கரம். நான் விவரம் அறிந்து திரையில் பார்த்த முதல் திரைபடம். அரங்கம் அதிர மிகப்பெரிய ஆரவாரங்களுக்கும் கரகோஷங்களுக்கும் காதை பிளக்க,அவரின் முகம் கம்பீர நடையுடன் சிங்கம் அதன் காட்டில் பவனி வருவது போல் மெய்சிலிர்கக வைக்கும், அந்த அறிமுக காட்சி.

அது முதல் அவரின் மிகப்பெரிய ரசிகன் நான்.காக்கி என்றால் அவர், அவர் என்றால் காக்கி. திரைப்படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் தவற்றை தட்டி கேட்கும் மக்கள் நாயகன்.

போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்திய விஜயகாந்த்

கபடமில்லா சிரிப்பு, எரிமலை போல் வெடிக்கும் ரௌத்திரம் கேப்டனின் குணாதிசயங்கள். நீண்ட வசனங்களை தடுமாற்றம் இல்லாமல் உணர்ச்சியுடன் வெளிப்படுத்துவதில் கேப்டனுக்கு இணை கேப்டனே. திரையுலகின் அக்ஷய பாத்திரம். நாடு, மக்கள் என்ற வார்த்தைகள் கூறாத அவரின் திரைப்படங்கள் மிக சொற்பம்.

பிராந்திய பிரிவினைகள் பேசும் தற்போதைய படங்களிக்கிடையே, தன் படங்களில் தேசியத்தை மட்டுமே பேசியவர். தேசிய துயரங்களில் முதல் ஆறுதலும் நிவாரணமும் கேப்டனிடம் இருந்தே வரும்.திரைப்படத்தில் கிடைத்த நியாயமும் நன்மையும் நிஜத்தில் கிடைக்க அவருக்கு முதல் ஓட்டை பதிவு செய்த என்னை போன்ற நண்பர்கள் ஏராளம்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விரும்பாதவர்களில் நானும் ஒருவனாக இருந்தால் கூட அவரின் அரசியல் வருகையில் மகிழ்ந்தவன் நான். அரசியல் வருகிறார் என தெரிந்த உடன் பீதியில் உறைந்த கட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம்.அசிங்கமான தற்போதைய அரசியலில் வளைந்து நெளிந்து செல்ல அவரின் தன்மானம் தடுத்திட பல அரசியல் திருடர்களுக்கு எதிரி ஆகி போனார். தலைப்பு பண்பு, அற்பணிப்பு மக்களின் அன்பு, இவரை எதிர்கட்சி சிம்மாசனத்தில் அமரச் செய்தாலும் வயிற்று பிழைப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே மக்கள் மனதில் விஷத்தை ஏற்றி அவரின் மாண்பை அழித்து ஆளுங்கட்சி சிம்மாசனத்தில் அமர விடாமல் செய்தது. அந்த பாவத்தின் பலனை இன்று தமிழகம் அறுவடை செய்து கொண்டிருக்கிறது. கடைசி காலங்களில் காமராஜர் போலவே தான் நேசித்த மக்களாலே தள்ளி வைக்கப்பட்டார்.

கள்ளமில்லா தலைவா எங்கள் உள்ளத்தில் என்றும் இருப்பாய். இறைவனின் காலடியில் உங்கள் ஆன்மா இளைப்பாறட்டும்🙏🙏🙏

இப்படி என்றும் உன் ரசிகன்

பாலாஜி பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *