எது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்!

இந்த கட்டுரையை எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. இந்த கட்டுரையை எழுத தூண்டிய செய்தியை தொட்டு அத்தனை விஷயங்கள் பின்னிக்கிடக்கிறது. இதை நாம் மோகன் வீட்டில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும். மோகன், ஒரு நாளின் அநேகமான நேரத்தை பணியிடத்தில் தான் செலவு செய்து வந்தார். அவரின் உழைப்பால் அவர் ஒரு நல்ல வீட்டை கட்டி அதில் தனியாக வாழ்ந்து வந்தார்.

தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், வீட்டில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக நினைத்த அவர், களைப்பில் அதை பெரிது படுத்தாமல் இருந்தார். ஒரு நாள், அவர் அல்லாமல் வேறு யாரோ ஒருவர் அந்த வீட்டில் இருக்கிறார்களோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. ஒரு வேலை பேய் பிசாசு எல்லாம் உண்மை தானோ?! என்கிற சந்தேகமும் மோகனுக்கு ஏற்பட்டது.

நண்பரிடம் அதைப்பற்றி சொல்கிறார், மோகனின் நண்பரோ, தனிமையில் இப்படியான எண்ணங்கள் எழுவதுண்டு சீக்கிரமாக ஒரு திருமணம் செய்துகொள், நான் வேண்டுமென்றால், உன்னோடு சில நாட்கள் உன் வீட்டில் வந்து தங்குகிறேன் என்கிறார். மோகன் அதற்கு சம்மதித்து, “நான் சீக்கிரம் வேலைக்கு கிளம்பிருவேன்! இந்தா! இந்த சாவியை நீ வச்சுக்கோ” ஒரு சாவியை நண்பரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுகிறார்.

அதற்கு அடுத்த நாள், மோகன் பணியில் இருக்கும் பொழுது, மோகனுக்கு அவர் நண்பரிடம் ஒரு இருந்து ஒரு அழைப்பு வருகிறது. “நீ! உடனே கிளம்பி வீட்டுக்கு வா!” என்கிறார் நண்பர். மோகனின் பதில் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அந்த அழைப்பு துண்டிக்கப்படுகிறது.
மோகன் அவசரமாக வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றால், அங்கே நண்பர் இன்னும் சில நண்பர்களோடு இருக்க, ஒருவரின் கைகள் கட்டப்பட்டு கீழே அமரவைக்கப்பட்டிருந்தார். மோகனின் நண்பர்கள் ஒரு சேர, “உன் வீட்டுல இருந்த பேய் இது தான்” என்றார்கள். மோகனின் வீட்டிற்குள் மோகனுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அங்கே ஒருவர் வசித்து வந்து இருக்கிறார். கைகள் கட்டப்பட்ட படியே அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல புறப்படுகிறார்கள். அப்போது, பக்கத்து வீட்டு ராம் அங்கிள், “என்னப்பா! யாரு இது” என்கிறார். அவரிடம் விஷயத்தை எடுத்து சொல்லுகிறார்கள். அதற்கு ராம் அங்கிள், “அதுக்கு ஏன் பா! கையை கால் எல்லாம் கட்டி கூட்டிட்டு போறீங்க” என்று கேட்கிறார்.
அப்படி ராம் அங்கிள் கேட்ட அந்த நொடியில், அவர் தன்னையறியாமல், “என் வீட்டில் இது போன்ற ஒரு தவறோ திருட்டுத்தனமோ நடந்தால், அப்ப அவருக்கு பிரச்சனை இல்ல போல டா” என்று சொன்ன நண்பனை இழுத்துக்கொண்டு மோகனும் நண்பர்களும் காவல் நிலையம் புறப்பட்டார்கள். இது என்ன கதை இப்படியெல்லாம் நடக்குமா? நடந்து இருக்கிறது, ஒரு நாட்டில், பெண் ஒருவர், அவர் வீட்டை ஒரு தொழிலதிபருக்கு விற்றுவிட்டு, அவருக்கு தெரியாமல் அதே வீட்டில், சில பல வருடங்கள் வாழ்ந்து வந்து இருக்கின்றார். ஒரு நாள், அந்த வீட்டின் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறையை சுத்தம் செய்துவைத்தால் நண்பர்கள் வந்தால், பயன்படுத்துவார்கள், என்று அதை திறந்த பொழுது, அதன் வழியே வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் ஒரு பகுதிக்கு செல்லும் வழி என்று அவருக்கு தெரிந்து அதில், தனக்கு வீட்டை விற்ற பெண் வசித்து வந்ததும் தெரிந்து இருக்கிறது. அதன் பின், அந்த பெண் மீது அந்த தொழிலதிபர் வழக்கு தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறச் செய்து இருக்கிறார். இந்த உலக செய்தியை எல்லாம் நமக்கு எதுக்கு!

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு செய்திகளை உலகில் உள்ள எல்லோருக்கும் கடத்துகிறது. சாதாரணமான நிகழ்வுகளே சாதாரணமாக ஒரு செய்தியை கடத்தும் என்கிற பொழுது, அமெரிக்கா ஒரு செய்தியை உலகிற்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே தீர்மானமாக தீர்க்கமாக ஒன்றை நடத்தியிருக்கிறது, சட்டவிரோதமோக குடியேறிய வெளிநாட்டவர்களை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவது என்பது தான் அது. அவர்கள் நாட்டு சட்ட திட்டத்தின் படி, சட்டத்திற்கு புறம்பாக அங்கு வசிப்பவர்களை, அவர்கள் எப்படி வெளியேற்றுவார்களோ  அதே நடைமுறையைத் தான் இப்போதும் பின்பற்றி இருக்கிறார்கள். உலகின் எந்த ஒரு நாடும் இந்த செயலுக்காக அமெரிக்காவை கண்டிக்க முடியாது. அப்படி கண்டிக்க முற்படும் நாடுகள் அவர்கள் நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை என்ன செய்வார்கள்?

சரி! சட்ட விரோதமாக குடியேறினார்கள்! அவர்களை வெளியேற்றலாம்! எதற்காக விலங்கிட்டு வெளியேற்ற வேண்டும். ஒரு சட்டமோ ஒரு ஒழுங்கோ ஏற்படுத்தப்பட்டு அது பின்பற்றபடாமல் இருந்தால் அது நகைப்புக்குள்ளாகிவிடும். இந்தியாவில் சட்டங்களையும் ஒழுங்குகளையும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்கள் போக்கிற்கு வளைத்து கொள்ள ஏதுவாக எந்த சட்ட ஒழுங்குகளையும் சரியாக நடைமுறைப்படுத்தாமல் சட்டங்களை பின்பற்றாதது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிற மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் அப்படியில்லை. அங்கிருக்கும் மக்கள்களும் அங்கிருக்கும் அரசியலுக்கு பழகிவிட்டதால் அவர்களுக்கு சட்டம் நகைப்புக்குரியது கிடையாது. என்னுடைய நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி வசிப்பவர்களை நான் இப்படி தான் நடத்துவேன் என்று நானே ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு நானே இவர் என்னுடைய நண்பரின் நாட்டில் இருந்து வந்தவர் இவர் என்னுடைய சம்பந்தி தேசத்துகாரர் என்று எல்லாருக்காகவும் சட்டங்களை வளைத்து கொண்டிருந்தால் அந்த சட்டம் எதற்கு?

பாராளுமன்றத்தில் நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர்  திரு.ஜெய்ஷ்ங்கர் அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா விலங்கிட்டு அனுப்படுவது தொடர்பான கேள்விக்கு இது தான் அவர்களின் நடைமுறை இதற்கு முன்னர் 2008-09 லும் கூட இதே போல் இந்தியர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளார்கள் விலங்கிட வேண்டாம் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தப்படும் என்று பதிலளித்திருந்தார்.

இதற்கிடையில், பாரதப்பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கிறார். ஆனால், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிப்பவர்களை விலங்கிட்டு வெளியேற்றுவது தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்த சமயத்தில்,ஊடகத்துறையில், பல வருட பாரம்பரியம் கொண்ட விகடன் என்ன செய்கிறது? பாரதப்பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி முன் விலங்கிட்டு இருப்பது போன்ற ஒரு சித்திரத்தை வெளியிடுகிறது. இதன் விளைவாக விகடன் வலைத்தளம் முடக்கப்பட்டு இருக்கிறது.

உடனே இந்தியாவில் என்ன நடக்கும்? கட்சித்தலைவர்கள் எல்லோரும் ஒரு சேர ஒரு குரலில், இது ஜனநாயகத்திற்கு எதிரானது, இது பாசிசம் என்று முழுங்குவார்கள் அதுவே தான் நடந்தும் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று சொல்லி இருக்கிறார். நடிகர் விஜய் இது பாசிசம். பாசிசம் எந்த வடிவில் இருந்தாலும் மக்களோடு நின்று த.வெ.க. தீர்க்கமாக எதிர்க்கும் என்று ட்வீட் தட்டியிருக்கிறார். ‘தமிழர்கர்களை தமிழர்கள் தான் ஆள வேண்டும்’ என்னும் நிலைப்பாடு கொண்ட சீமான், வெளியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு போடப்பட்ட விலங்கு பிரதமருக்கு போடப்பட்ட விலங்காக தான் பார்க்கப்பட வேண்டும் என்று பேசுகிறார்.

நாளை, பிரதமர் மோடி முன்பு முதல்வர் ஸ்டாலின் விலங்கிட்டு இருப்பது போல ஒரு சித்திரம் வெளியிடப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஜனநாயகம்; கருத்து சுதந்திரம் என்று அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?! நிச்சயமாக கூடாது. அப்படி ஒன்று நிகழும் பொழுது மாநில மக்களின் முதன்மை பிரதிநிதி அவமதிக்கப்பட்டதாக எடுத்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் முதன்மை பிரதிநிதியை அவமதிப்பது என்பது, மக்களை அவமதிப்பதை போன்றது. ஒரு நிகழ்வின் எல்லா அம்ஸங்களை ஆராய்ந்து தெளிந்து செய்தியோ கேலிச் சித்திரமோ வெளியிடாமல், தான் தோன்றித்தனமாக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் பேசலாம் என்பது, நிச்சயமாக கருத்து சுதந்திரம் ஆகாது.

சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டவர்களுக்காக சட்டத்தின்படி நடக்கும் மொத்த பாரத சமூகத்தையும் இழிவுபடுத்தியதற்கு விகடனுக்கு தான் எல்லோரும் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும்.

ஜனநாயகத்தில்,பெருமான்மை மக்கள் தேர்ந்து எடுக்கிறவரை தானே பிரதிநிதிகள் ஆக்குகிறோம். அது தானே ஜனநாயகம், அந்த பிரதிநிதிகள் அவமதிக்கப்பட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எப்படி ஜனநாயகத்தின் அச்சுறுத்தலாக இருக்கும்! அது எப்படி பாசிசமாக இருக்கும்.தலைவர்களாக இருக்கிறவர்கள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சீமானும் விஜய்யும் நாளை அவர்களே முதல்வராகவோ பிரதமராகவோ வந்து அப்போது ஒரு ஊடகம் தான் தோன்றித்தனமாக பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என்று சிந்திக்க வேண்டும். இல்லை! நாங்கள் யார் என்ன பேசினாலும்! கருத்து சுதந்திரம் என்று வேடிக்கை பாப்போம் என்று இருப்பார்கள் என்று சொல்வார்களானால், அப்படியான தலைவர்கள் எப்படி ஒரு சமூகத்தில் பொய்யான செய்திகளையோ அல்லது பொறுப்பற்ற செய்திகளையோ அல்லது சமூகத்தில் நிலவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செய்திகளையோ தடுப்பார்கள்.

கொரோனா பரவிய காலத்தில், குறிப்பிட்ட மதத்தினரை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது, திருச்செந்தூர் கோவில் திருவிழாவில், சாதிய குறியீடுகள் கொண்ட கயிறுகள் கட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.இதெல்லாம் ஏன் செய்கிறார்கள்?இதெல்லாம் சுதந்திரத்திற்கு எதிரானது இல்லையா?

ஒரு கருத்து தேசத்தின் இறையாண்மையை கேலிக்குள்ளாகிறது, தேசத்தை அவமதிப்பதாக இருக்கிறது, ஒரு சாராரை புண்படுத்துகிறது, என்றால் அப்படியான கருத்துக்கள் மீதெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், முதல்வர் ஸ்டாலினே கூட அவதூறு வழக்குகள் எல்லாம் தொடர்ந்து இருக்கின்றார். கருத்து சுதந்திரத்திற்கு இடம் கொடுத்த சட்டம் தான் அவதூறு வழக்குகள் தொடர இடம் தருகிறது, பொய்யான செய்திகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க இடமளிக்கிறது.

எது சுதந்திரம் என்பதை சமூகத்தில் உள்ள ஒவ்வொரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு செய்தி ஊடகம், நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் பாராளுமன்றத்தில், “இது தான் அவர்கள் நடைமுறை, இதற்கு முன்னரும் இது போல் நடந்து இருக்கிறது,விலங்கிடாமல் அனுப்ப வலியுறுத்தப்படும்” என்று தெளிவுபடுத்திய பின்னரும் இப்படி நம் நாட்டின், நாட்டு மக்களின் முதன்மை பிரதிநிதியை மற்றொரு நாட்டின் தலைவர் முன்பு விலங்கிட்டு இருப்பது போன்ற கேலிச்சித்திரம் வெளியிடுகிறது என்றால், அது எந்த மாதிரியான செய்தி ஊடகம்? அறிவை புட்டத்தில் வைத்திருக்கும், மூன்றாம் தர ஊடகங்களும் கூட இப்படி ஒன்றை செய்ய துணியாது. எந்த ஒரு நாடும் மற்ற நாட்டின், சட்டதிட்டங்களில் மூக்கை நுழைக்க முடியாது, மூக்கை நுழைக்க கூடாது, உங்கள் வீடு எப்படி இருக்க வேண்டும், உங்கள் வீட்டில் யாரை வைத்திருக்க வேண்டும், யாரை அனுமதிக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். அதில், அடுத்தவர் தலையிட முடியாது, கூடாது. அது தெரிந்து தான், வெளியுறவுத் துறை அமைச்சர் வலியுறுத்தப்படும் என்று சொன்னார், அமெரிக்காவின் இந்த செயலை கண்டிக்கவில்லை, வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கின்றவற்கு தெரியும், நாளை இந்தியாவும் இதே முறையில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியே அனுப்பலாம் என்று, அதன் பொருட்டே அவர் இது தான் அவர்களின் நடைமுறை என்று தெளிவுப்படுத்தி அதே வேளையில் விலங்கிட வேண்டாம் என்று வலியுறுத்தப்படும் என்றார். இந்தியாவின் சார்பில் அந்த வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், ஆனால், முடிவு அமெரிக்கா உடையது.வேண்டுகோள் விடுப்பத்தை தாண்டி இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் சட்டத் திட்டங்களுக்குக்குள் தலையிட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

சிங்கப்பூரின், முன்னாள் பிரதமர் ஒரு பேட்டியில், “நீங்கள் ஒரு தலைவரை கேலி செய்கிறீர்கள் அதற்கு அவர் எந்த எதிர்வினையும் ஆற்றக்கூடாது என்றால் அவர் எப்படி இந்த சமூகத்தின் மீது ஆளுகை செலுத்த முடியும் நான் என்னுடைய எதிரிகளை அவமானப்படுத்துவத்துவதோ அவர்கள் மீது அவதூறு பரப்புவதை செய்வதில்லை!” என்கிறார்.மேலே அவர் சொன்னதாக குறிப்பிட்டது, அவர் ஆங்கிலத்தில் பேசியதில் இருந்து, எனக்கு நினைவிருக்கும் வரை, எனக்கு தெரிந்த அளவில் மொழி பெயர்த்தது. தீர்க்கமான சிந்தனையை தூண்டும் கருத்து.

ஜனநாயகத்தில், யார் ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்கின்றோமோ, அவரை நாம் மதிக்க வேண்டும். ஒரு அணியின் கேப்டனாக ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவரை கேலி செய்வதால், அணிக்கு எந்த நன்மையையும் நடக்கப்போவதில்லை. தலைவராக அவரின் செயல்பாடுகளை நாம் கேலி செய்வதும் அவர் மீது அவதூறு பரப்புவதும் தான் ஜனநாயகத்திற்கான அச்சுறுதல்.

அப்படியென்றால் விமர்சனம் என்பதே வைக்க கூடாதா என்றால்? நிச்சயமாக வைக்கலாம். ஆக்கப் பூர்வமான விமர்சனங்களை வைக்கலாம். ஒரு விஷயத்தை கையிலெடுக்கும் எந்த ஒரு செய்தி நிறுவனமும் அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை பற்றி பேசலாம்.அரசாங்கம் எதை செய்யத்தவறியிருக்கிருக்கிறது என்பதைப் பற்றி பேசலாம். கட்சித் தலைவர்கள் மீதான வெறுப்புரைகளை பரப்பவுது செய்தி ஊடகங்களின் வேலையில்லை. அதை செய்வதற்கு கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் மீதான விமர்சனங்களும் கூட ஆக்கபூர்வமானதாக தார்மீக கோபமும் சமூக அக்கறையும் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் என்ன செய்திருக்க முடியும் என்று விகடன் குழு நினைக்கிறது? அமெரிக்காவிடம் நீங்கள் உங்களின் இந்த நடைமுறையை மாற்றிக்கொண்டு சட்டவிரோதமாக உங்கள் நாட்டில் வசிக்கும் எங்கள் நாட்டவரை தக்க மரியாதையுடன் திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று சினிமாவில் வருவது போன்ற வசனங்களை கண்டன அறிக்கையாக வெளியிட்டு இருக்க வேண்டும் என்று விகடன் நினைக்கிறதா ?

நட்பு நாடுகள் தான் அமெரிக்கா பொருட்கள் மீது அதிக வரி விதிக்கிறது என்று டிரம்ப் நம்மை சுட்டி பேசியிருந்தார், அவர் முன்னர் ஜனாதிபதியாக இருந்த பொழுதும் இதே பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது,அவர்கள் நாட்டு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை கூட்டுவதும் குறைப்பதும், டிரம்ப் கையில் இல்லை, அவர் நம்மை வலியுறுத்த முடியும், நம்மை பொருளாதார ரீத்தியில் நிர்பந்திக்க முடியும்; ஆனால், முடிவு நம்முடையுது. அதே போன்று விலங்கிட்டு திருப்பி அனுப்பப்படும் நடைமுறையில், இந்தியாவும் முடிவு எடுக்க முடியாது.விகடன் போன்ற செய்தி நிறுவனங்களுக்கு இதைப்பற்றிய அறிவு இருந்திருக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் திரைப்படங்களுக்கு மதிப்பெண் அளிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பழைய அரசியல் தலைவர்கள் பற்றி நமக்கு தெரிந்ததுதான். தி. மு.க.வும். வை.கோ.அவர்களும், இன்று பா.ஜ.க வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் அவர்களின் கருத்து மாறுபட்டதாக இருந்திருக்கலாம். நம்முடைய புது வரவு விஜய், விகடனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பது கவலையளிக்கிறது. வெள்ளம் போகிற போக்கில் போகிறவன் எப்படி தலைவன் ஆக முடியும்! அரசியல்வாதிகள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற மாய வளைக்குள் சிக்கியிருக்கின்ற ஊடகமும், ஊடகங்களை அப்படியே நம்பும் மக்களும் இழுக்கும் போக்குக்கெல்லாம் செல்லுகிறவர் எப்படி இது தான் சரி! என்று மக்களுக்கு வழிகாட்டுகின்ற தலைவராக இருக்க முடியும்?ஊடங்களும் மக்களும் இழுக்கும் போக்கிற்கெல்லாம் ஒரு தலைவர் சென்றுகொண்டிருக்க கூடாது, என்பதை சிங்கப்பூரை கட்டியெழுப்பிய அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சொல்லியிருக்கின்றார்.தமிழகத்தை விஜய் அப்படி கட்டியெழுப்பி விடுவார் என்று ஒரு சாரார் நம்பிக்கொண்டிருக்கும் பொழுது, விஜய்யோ எப்போதும் அப்போதைய சூழலில் வெள்ளம் போகிற போக்கிற்கு போகிறவராக இருக்கிறார். விஜய் எதிர்காலத்திலும் இப்படியான தலைவராக தான் இருப்பார் என்றால், அவர் வீட்டிலேயே இருக்கலாம். வீட்டில் இருப்பதற்காக யாரும் அவரும் அவரை கேள்வி கேட்காதீர்கள்.

இந்தச் சம்பவத்தில், இந்தியர்களும், இந்திய தலைவர்களும் சிந்திக்க வேண்டியது என்ன?
அமெரிக்கர்கள் இந்தியாவில் வேலை செய்கிறார்களா? அவர்கள் இந்தியாவில் சட்ட விரோதமோக குடியேறி வசித்துக்கொண்டிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. காரணம் அவர்களுக்கு அதற்கான அவசியம் ஏற்படவில்லை. இந்தியாவில்,சட்டவிரோதமாக குடியேறியவர்களாக பங்களாதேஷிகள் இருக்கிறார்கள். இந்தியா அவர்களின் நாட்டை விட வளர்ந்த நாடாக இருப்பதும், அவர்களுக்கு வேலைக்கான வாய்ப்புகள் அவர்கள் நாட்டை விட இந்தியாவில் இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது.எப்போதும், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு ஒருவர் செல்லும் பொழுது, அவர்கள் நாட்டில் இல்லாத வாய்ப்பை தேடியே தான் அங்கே செல்லுகிறார்.இந்தியர்கள் இந்தியாவிலேயே இருந்தாலும் அநேகமாக வெளிநாட்டு முதலாளிகளுக்கு தானே உழைத்துக்கொண்டிருக்கிறோம் இதெல்லாம் தான் மாற வேண்டும். அதை நோக்கி தான் பாரத சமூகம் நகர வேண்டும். அதை விடுத்து, செய்யும் தவறுகளுக்கு சப்பு கட்டிக்கொண்டு வரக்கூடாது.பாவ புண்ணியங்கள் பார்த்து, தவறுகளை செல்லாதது ஆக்குவது, மகிமைப்படுத்துவது, இவையெல்லாம் தான் ஒரு ஜனநாயக நாட்டிற்கான அச்சுறுத்தல். இவற்றையெல்லாம் தான் நம் சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *