காலம் எல்லாம் மாற்றங்களையும் செய்கிறது. காலத்திற்கு தேவையான மாற்றங்களையெல்லாம் காலம் செய்கிறது. நாம் அடுத்த நிலைக்கு தயாராகி நிற்கும் பொழுது நமக்கான இடத்தை அது உருவாக்குகிறது. நாம், ‘சரி’ என்று நினைத்து கொண்டிருக்கும் விடயங்களில் இருக்கும் பிழைகளை உணர்த்துகிறது. பிழையான பார்வையோடு ‘தவறு’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் விடயங்களில் உள்ள நல்விஷயங்களை தெளிவுபடுத்துகிறது.
இப்படி எல்லா அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் காலம் நம்முடைய சில கனவுகளை மட்டும் கனவு நிலையிலேயே கட்டி நிறுத்தி வைத்துவிடுகிறது.”நிஜத்தில் கனவுகள் பலிக்காதா?” என்ற ஏக்கதோடேயே நம்மை இருக்கச் செய்கிறது.இது எத்தனை பெரிய ஏமாற்றம்!
சாமானியர்கள் அரசியலுக்குள் காலூன்ற வாய்ப்பே இல்லாத இந்த சிஸ்டத்தில், மேல் மட்டத்தில் இருந்து ஒருவன் வந்து,
“என் கையை பிடித்து கொள்ளுங்கள் நேர்மையானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அரசயிலில் நான் வாய்ப்பு தருகிறேன்;
கட்சியில் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு மேல் பதவி கிடையாது;
தேர்தல் பணிகள் போன்ற கட்சி பணிகள் இல்லாத நேரத்தில் அவசியமற்ற கட்சி பொறுப்புகள் கலைக்கப்படும்;
கட்சி நிகழச்சிகள் தவிர்த்து எந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுதும் கட்சி கொடியையோ கட்சி வேட்டியோ பயன்படுத்தக்கூடாது.
கட்சி உறுப்பினர்கள் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழப்படிந்து நடக்க வேண்டும்” என்பது போன்ற கண்ணியமான நெறிமுறைகளோடு எந்த பின்புலுனும் இல்லாத சாமானியர்களுக்கு வாய்ப்பளிக்க போவதில்லை.புதிதாக முளைத்த கட்சி உட்பட எந்த கட்சியும் எந்த கட்சியின் தலைவர்களும் அதற்கு தயாராக இல்லை.
இங்கே ஒரு கட்சியை நிர்வகிக்க செல்வாக்கான முகமும் , பெருஞ்செல்வமும் தேவைப்படுகிறது.
“மக்கள் பணத்தைக்கொண்டு சிறைச்சாலைகள் நடத்த முடிகிற பொழுது கட்சி நடத்தகமுடியாதா?” -மதுரையில் கட்சி தொடங்கிய பொழுது கமலஹாசன் சொன்ன வார்த்தைகள். கட்சி நடத்த மக்கள் நன்கொடை தருவார்கள் என்கிற நம்பிக்கையிலோ அல்லது கட்சி நடத்த காசு வேண்டும் அது உங்களிடம் இருந்து தான் வர வேண்டும் என்பதை மக்களுக்கு புரிய வைக்கவோ கமலஹாசன் உதிர்த்த வார்த்தைகள்.
விஜயகாந்தை தவிர்த்து சரத்தகுமார், டி.ராஜந்தர், கருணாஸ் போன்ற நடிகர்கள் எல்லாம் தன்னளவில் அவர்களுக்கு ஒரு சட்டமன்ற தொகுதியோ பாராளுமன்ற தொகுதியோ அல்லது பதவியோ கிடைத்தால் போதும் என்பதற்காகவே கட்சி நடத்தியது போலத்தான் இருக்கும். அதில் உண்மையும் இருந்தது. சமூத்தில் ஓரளவு பிரபலமான கொஞ்சம் பணம் படைத்த இவர்களுக்கே ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க இவர்கள் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அவர்களுக்கென்று இருக்கும் இரசிகர் பலத்தையோ ஜாதி பலத்தையோ காட்டித்தான் அந்த வாய்ப்பைப் பெற வேண்டி இருந்தது.
ஒரு சீட்டுக்காக அவர்கள் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிக்குள் உறுப்பினராக இருந்திருத்தால்,அந்த அந்த கட்சிக்குள் நிலவும் பெரும் போட்டி அவர்களுக்கு அந்த ஒரு சீட்டு கிடைக்கவிடாமல் செய்து இருக்கும்.
சாமானியர்கள் மட்டும் என்று இல்லை. ஒரளவு பணமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கான அரசியல் வாய்ப்புகளும் கூட அத்தனை பிரகாசமாக இல்லை. ஒரு சீட்டுக்காக குட்டிககரணம் போடாத குறையாக பாடுபட்டவர்களும் இருக்கிறார்கள்.
உங்களையும் என்னையும் உள்ளடக்கிய இந்த சமூகம் எப்படியானாதாக இருக்கிறதோ அதில் இருந்து வரும் அரசியல்வாதிகளும் அப்படியானவர்களாகத்தான் இருப்பார்கள்.
சாதிய பின்புலம் துளியும் உதவாத யாரும் பிரபலமாக இருந்திருந்தால் ஒரு நபர் ஒரு சீட்டு கட்சி ஒன்றை தொடங்கியிருந்தாலும் அவருக்கு ஒரு சீட்டும் கிடைத்திருக்காது. கிடைத்திருந்தாலும் நிலைத்திருக்காது.
உண்மையில சமூகத்தில் நாம் கூட்டம் கூட்டமாக பிரிந்து தான் கிடக்கின்னோம். நம் அறிவின் அளவில் பிரிந்தே கிடக்கின்றோம்.
சாதி சார் மதம் சார்ந்த கட்சிகளையும் வசைபாடி ஒன்று ஆவதற்கு இல்லை.
அதிலும் கூட பெரிய ஒற்றுமையில்லை ஒரே மதத்தின் ஓரே சாதியின் பெயரால் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கட்சிகளும் இருக்கிறது. அந்த அளவில் இந்த சமூகம் தன் அறிவின் அளவில் தெளிவாய் பிரிந்து கிடக்கிறது.
இதையெல்லாம் கவனிக்கும் பொழுது மக்களை கவரும் நடிகர்களால் மட்டுமே தான் (commercial mass actors) மக்களை ஒரு புள்ளியில் இணைக்க முடிகிறதோ என்று நினைக்க வைக்கிறது. நிச்சயமாக அது எல்லா நடிகர்களுக்கும் சாத்தியமில்லை தான்.
சமீபத்தில் விஜய் தொடங்கியதும் விழிப்புநிலை சாமானியர்களும் கூட தங்களை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை காண முடிகிறது. அந்த கட்சி என்ன செய்யும் அவர்களால் அந்த கட்சிக்கு என்ன செய்ய முடியும் என்பதெல்லாம் தனிக்கதை.சாதி மதம் அல்லாமல் இந்த கூட்டத்தை ஒரு புள்ளியில் இணைக்க முடிகிற ஆற்றலை சினிமா கொண்டிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அங்கும் ரசிகர் சண்டைகள் இருந்தாலும் சாதி மத வேறுபாடுகள் இல்லை என்பதை ஏற்க வேண்டும்.
புதிதாக கட்சி தொடங்கும் பொழுது குறிப்பிட்ட கூட்டத்தை திருப்பதிப்படுத்தினால் வெற்றி அடைந்து விடலாம் என்கிற எண்ணம், முக்கியமான கேள்விகளை மட்டும் படிக்கும் பள்ளிக்குழந்தைகளின் மனநிலையை ஒத்தது. நாம் தமிழர், பாமக, விசிக போன்ற கட்சிகளால் திமுக அதிமுகவிற்கு மாற்றாக தங்களை வளர்த்துக்கொள்ள முடியாமல் போனதற்கு அது தான் காரணம்.
கட்சிகள் சமூகத்தில் பிரிந்து கிடக்கும் கூட்டங்களை சார்ந்து தான் இயங்குகிறது என்றாலும் அவை கூடுமான வரையில் எல்லோருக்கும் பொதுவனதாக இருப்பதோடு ஜனநாயகத்தில் சாமானியர்களும் சட்டமன்றங்கள் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்கிற குறைந்த பட்ச நம்பிக்கையை வழங்குவதாக இருக்க வேண்டும்.சாமானியர்கள் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் பொழுது காட்டும் ஆர்வத்திற்கு அதுவே தான் காரணமாக இருக்கிறது.
திமுகவில் அந்த வாய்ப்பு நிச்சயமாக இருந்ததேயில்லை. அதிமுகவில் ஒரு ஐம்பது சதவீத வாய்ப்பு இருந்தது, இப்பதோ அதிமுகவிற்கே அந்த ஐம்பது சதவீத வாய்ப்பு இல்லை.
திராவிட கட்சிகளின் உதந்துதலால் தொடங்கப்பட்டதோ அல்லது திராவிட கட்சிகளுக்கு உண்மையான மாற்றாக இருக்க முனைந்து தொடங்கப்பட்டதோ ஆண்டவர்க்கே வெளிச்சம். அப்படி என்ன காரணத்திற்காக என்று புரியாமல் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யமும் ஒரு நபர் ஒரு பதவி கட்சியாக ஆகி நிற்கிறது. அந்த ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை கமல் தானே வைத்துக்கொள்ளவே தான் அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அவர் இதைப்படித்தால் வீம்புக்கு சந்தான பாரதி போன்றவரிடம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அரசியல் எல்லோருக்குமானது. அது எல்லோருக்குமானதாக இல்லாமல் போனதற்கு இங்கு இருக்கும் இரண்டு கட்சிகள் பிரதானமான காரணமாக அமைந்துவிட்டது. அரசியல், அந்த இரண்டே இரண்டு கட்சிளில் அதிகாரமிக்கவரகளாய்இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை.முதலில் அந்த இரண்டு கட்சிகளையும் அந்த கட்சிகளுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த கட்சிகளையும் சேர்த்து நாம் விலக்க தொடங்க வேண்டும். அதற்கு என்ன விலை கொடுக்க நேரிட்டாலும் நாம் அதை செய்தே தான் ஆக வேண்டும்.
மாற்றத்திற்கான முதல் படியில் காலெடுத்து வைக்க தமிழகம் தயாராக வேண்டும்.மாற்றத்தின் முதல் படியை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைக்க வானுயர்த்திற்கு கால்களை உயர்த்த வேண்டியதில்லை.
தமிழக தேர்தல் வரலாற்றில் சட்டமன்றத்தில் அதிமுககவின் கையும் நாடாளுமன்றத்தில் திமுகவின் கையுமே தான் ஓங்கியிருந்திருக்கிறது.சட்டமன்றத்தை விடுங்கள் இந்த இரு கட்சிகளில் இருந்து நாடளுமன்றத்திற்கு சென்றவர்களால் என்ன பெரிய அதிசயம் நடந்துவிட்டது.
தி.மு.க பாஜக ஆட்சியில் இருந்த பொழுதும் சரி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுதும் சரி மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்டிருந்திருக்கிறது. அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட அரசியல் சூழல், இன்று அவர்களை பாஜகவோடு கூட்டணி சேரவிடாமல் செய்து இருப்பதால் அவர்களால் மத்திய ஆட்சியில் பங்கு கொள்ளும் சுகத்தை அனுபவிக்க முடியவில்லை. அதன் காரணமாக மட்டுமே தான் அதிகம் கூச்சலிட்டு கொண்டிருக்கிறார்கள். பாஜக மிக்ஸர் சாப்பிட்டு கொண்டிருக்கிறது என்கிற அவர்களின் வெற்று கூச்சல்கள் எல்லாம் அவர்களுக்கு அந்த மிக்ஸர் கிடைக்கவில்லை என்பதன் வெளிப்பாடு மட்டுமே தான்.
சாமிக்கும் எனக்கும் இடையில் எதற்கு பூசாரி என்று கேட்கும் கடவுளை நம்பாத இந்த திராவிட கூட்டம் தான் தேசிய கட்சிகளுக்கு மக்களுக்கு இடையில் பூசாரி வேலையை பார்த்துக்கொண்டு மக்களிடம் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது நெறிக்கப்படுகிறது என்கிற நாடகங்களை
அரங்கேற்றி கொண்டிருக்கிறது.
இவர்கள், எந்தவொரு முக்கிய பிரச்சனைகளையோ முன்னெடுப்புகளையோ பற்றி பொய் பரப்புரைகள் செய்திருக்கிறார்களேயன்றி அந்த பிரச்சனைகளிலும் முன்னெடுப்புகளிலும் உள்ள உண்மையான குறைகளை சரியான முறையில் நாடாளுமன்றகளில் பேசியிருக்கின்றார்களா? என்று ஆராய்ந்தோமானால்; இவர்களின் attendance and performance ஐ தேடிப்பார்தால்; அதிலை எல்லாம் ஒன்னுமில்லை கீழ போட்டுடு என்கிற கதையாகத்தான் இருக்கும்
சரி என்ன செய்யலாம்?
குப்பைகளுக்கு நடுவே மாசற்ற மாணிக்கத்தை கண்டுத்துவிட முடியாது.மாணிக்கமாகவே இருந்தாலும் அது மாசடைந்து தான் இருக்கும் அரசியல் மட்டும் இல்லை. இந்த சமூகமே குப்பையாகத்தான் இருக்கிறது.
அதனால் இது நொட்டை அது நொட்டை என்று பிதற்றிக்கொண்டிருக்காமல் , இனிமேல் நாம் நாடாளுமன்ற தேர்தல்களில் மட்டுமாவது தேசிய கட்சிகளின் வேட்பாளர்களை மட்டும் தான் ஆதிரிக்க வேண்டும்.
பாஜக உள்ள வந்துடும் என்கிற பூச்சாண்டிகளை தூக்கியெறியுங்கள். பாஜக எப்பதோ உள்ளே வந்துவிட்டது. தமிழக தேர்தல் வரலாற்றில் திராவிட கட்சிகளின் துணை இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்திக்க தொடங்கிவிட்டது. நிச்சயமாக கணிசமான வாக்குகளை அது பெற்றும்விடும்.
நாம் காங்கிரஸைத்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது.அளும் கட்சியாக இருந்த பொழுதும் அவர்களை வீழ்த்திய திமுகவின் தயவால் ஆட்சியை பற்றிக்கொண்டு திமுகவிற்கு தலையாட்டிக்கொண்டும் செயல்பட்டு வந்து இப்போதும் அதை பற்றிய அக்கரை இல்லாமல் எப்போதும் போல் கோஷ்டி மோதல்களுக்குள் சிக்கிக்கிடக்கிறது.
தேசிய அளவில் ஒரு தேசிய கட்சி இத்தனை பெரும் அளவில் வலுவிழந்து போனதற்கு ஆரம்ப புள்ளியாக திமுகவே தான் இருந்தது. பாஜகவை பிரிவினைவாத சக்தி என சொல்லிக்கொண்டு இருக்கும் திமுகவின் பிரிவினைவாத பேச்சுக்கள் தான் காங்கிரஸை வலுவிழுக்கச்செய்தது.தேசிய உணர்வுகளை வலுவிழக்கச் செய்தது.
திமுகவைத்தொடர்ந்து மாநிலத்திற்கு ஒரு பிரிவினைவாத கட்சிகள் மாநிலங்களுக்கென்றே தொடங்கப்பட்டது. சாதி கட்சிகளுக்கு சற்றும் குறைந்ததில்லை இந்த கட்சிகள்.
நூறு பேர் உள்ள கூட்டத்திற்கு தன்னை தலைவனாக்கி கொள்ள முடியாதவன் தன்னை தலைவனாக்கிக் கொள்ள துப்பு இல்லாதவன். கூட்டத்தை பத்தாக பிரித்து அதில் ஐந்து பேரை தன் பக்கம் வைத்துக்கொண்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்தி அவர்களை சுரண்டிக்கொண்டிருப்பான். மாநில உரிமைகளுக்காக என்று தொடங்கப்பட்ட அநேகமான கட்சிகள் அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றது. இந்திய அளவில் புதிதாக ஒரு கட்சி உருவெடுத்து காங்கிரஸ் பாஜவை மீறி பெரும் வளர்ச்சி பெறுவதற்கு இன்னும் ஒரு யுகம் ஆகலாம். அதனால்,நம்மிடம் இந்திய அளவில் இருப்பது இரண்டு வாய்ப்புகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய கட்சியோ மாநில கட்சியோ மக்களின் நன்மதிப்பை பெற்று தேர்தலில் வெற்றிபெறுகிறவர்கள் தான் நாடாளுமன்றம் செல்ல போகிறார்கள்.
அதனால், நம் வாக்குகள் வருங்காலங்களில் தேர்தல் களத்தை மாற்றுவதாக அமைய வேண்டும். நாடாளுமன்ற தேர்தல்களில் மட்டுமேனும் கூடுமான வரையில் மாநில கட்சிகளுக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் கூடுமான வரையில் தேசிய கட்சியின் களமாக இருக்க வேண்டும்.நீங்கள் பாஜக உள்ள வந்திரும் என்கிற பூச்சாண்டிகளுக்கு பயப்படுகிறவராக பாஜகவை வெறுக்கின்றாரவர்களாக இருந்து கொள்ளுங்கள்; காங்கிரஸின் நிலைமையை சிந்தியுங்கள். பாஜகவில் கூட இரண்டு மூன்று வேட்பாளர்களின் பெயர் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.காங்கிரஸ்,தமிழகத்தில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பது கூட நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது தி.மு.க. கூட்டணியில் ஒரு கட்சி என்கிற அளவில் மட்டுமே தான் மக்களின் கவனம் இருக்கிறது. அது தான் மாற வேண்டும்.
காங்கிரஸ் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கேனும், தமிழகத்தில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அத்தனை பேரும் ஜெயிக்க வேண்டும். அவர்கள் நல்லவர்களாக? கெட்டவர்களாக? காங்கிரசின் கடந்த காலம் இதையெல்லாம் ஆராய்ந்து என்ன ஆகப் போகிறது. மத்தியில் மீண்டும் பாஜகவே தான் ஆட்சிக்கு வர கூடும் என்கிற நிலை இருப்பதை காங்கிரஸும் அறிந்த ஒன்று தான். தற்போதைய நிலையில் நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான 10 சதவீத உறுப்பினர்களை கூட ஒரு தேசிய கட்சி கொண்டிருக்கவில்லை. அதற்கு காரணம், தி.மு.க போன்ற கட்சிகளால் வீழ்த்தப்பட்ட காங்கிரசானது திமுக போன்ற மாநில கட்சிகளையே தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் இடத்தில் வைத்திருப்பது தான் அதற்கு காரணம்.
இந்த நிலை மாற வேண்டுமென்றால், மக்களாகிய நாம் களத்தை தேசிய கட்சிகளின் பக்கமாக திருப்ப வேண்டும். பெரும் பண பலமும் ஊடக பலமும் கொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தை மட்டுமே வளர்த்துக்கொண்டு மாநில கட்சிகளின் பக்கம் இருந்து நம் கவனம் தேசிய கட்சிகளின் பக்கம் திரும்ப வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒரு பெரிய தேசிய கட்சி உருவாவதற்கான சாத்தியங்கள் இல்லாமல் இருக்கின்ற சூழலில். மாநிலத்தில் தேசிய கட்சிகள் வளர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்தியாவின் பிரதமாவதற்கான சாத்தியங்கள் ஏற்படும்.
நாடளுமன்ற தேர்தல்களை சந்திக்க மாநில கட்சிகளை தேசிய கட்சிகள் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத சூழலை மக்களே தான் உருவாக்க வேண்டும்.
தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் ஒன்பது இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்.
அந்த ஒன்பது இடங்களை விட குறைவான இடங்களிலேயே மட்டும் தான் திமுகவின் வெற்றி சாத்திய பட வேண்டும்.மற்றொரு பக்கம் தேசிய கட்சியான பாஜகவின் வழியில்லாமல் அமைத்துக்கொண்ட கூட்டணியில் இருக்கும் அமுமுக பாமக போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கப்பதற்கு பதிலாய் சுயேட்சைகளுக்கு வாய்ப்பளிக்கலாம். மாநிலங்களில் இப்படியான கட்சிகளோடு தேசிய கட்சிகள் கூட்டணி வைத்த கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கும் அரசியல் சூழலே தான் ஏற்படுத்தி இருக்கின்றது.
இது தான் சரி, இந்த கட்சி இப்படி தான் என்கிற தீர்மானங்களை தூரமாக வைத்துவிட்டு தேசிய கட்சியின் நேரடி வேட்பாளர்களை ஆதரிப்பது தான் தமிழகத்திற்கு நன்மையை செய்யும்.இத்தனை காலம் மாநில கட்சிகளை நாடாளுமன்ற அனுப்பி ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.பெரும் ஆதாயங்களுக்காகவும் பதவிக்காகவும் மாநில கட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களையும் அவர்களின் வாரிசுகளை விடவும் 0.1 சதவீத அளவிற்கேனும் தேசிய கட்சிகளின் வெற்றிக்கு பெரிய இடமில்லாத தமிழகத்தில் உள்ள தேசிய கட்சியின் வேட்பாளர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்று நாம் அனுமானித்துக் கொள்ளலாம். முன்னமே சொன்னது போல, குப்பைகளுக்கு நடுவே மாசற்ற ஒன்றை நீங்கள் கண்டெடுக்க முடியாது.
வாக்காளர்களாக நாம் ஒரே தீர்மானத்தில் இல்லாமல் கால சூழல்களை ஆராய்ந்து நம்மிடம் இருக்கும் வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு இருக்கின்ற சாய்ஸ் இல் எது சரி என்று வாக்களிக்க பழக வேண்டும். மிக முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கத்தை குறைத்தே ஆக வேண்டும். தேசிய கட்சியின் வேட்பாளர்களும் நம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் என்கிற எண்ணம் வர வேண்டும்.
எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைந்திருந்தாலும் தேசிய கட்சிகளின் நேரடி வேட்பாளர்களை நாம் ஆதரிக்க தொடங்குவது தான். தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை உருவாக்குவதற்கான முதல் படியாக அமையும். அன்றி மீண்டும் மாநில கட்சிகளுக்கே நாடளுமன்ற தேர்தலிலும் பெருமான்மை வெற்றியை கொடுத்து வந்தோமானால் அங்கு சென்று காஷ்மீர் beautiful காஷ்மீர் என்று பாட்டு பாடுவதையும் கருணாநிதி புகழை பேசுவதையும் தான் நாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர், இந்த முறை இல்லையென்றாலும் இனி வருங்காலங்களில் சாத்தியப்பட, நாடாளுமன்ற தேர்தல் களம் முழுக்க முழுக்க தேசிய கட்சிகளுடையதாக இருக்க வேண்டும். அதை நாம் தான் சாத்தியப்படுத்த வேண்டும். செய்வீர்களா? சொல்லுங்கள் செய்வீர்களா?