நம்ம ஊருக்கு கம்யூனிஸ்டுகள் தேவை தானா?

மீபமாக ஒரு செய்தி கண்ணில் பட்டது. அந்த செய்தியை கடந்தது முதல் இந்த கட்டுரை எழுதிவிடவேண்டும் என்று எண்ணம் கொண்டு, இன்று தான் அது சாத்தியப்பட்டது.

2019 தேர்தலின் பொழுது நடந்த நிகழ்வையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் மீது எழுந்த விமர்சனத்திற்கு அந்த கட்சியை சேர்ந்த பெ.சண்முகம் அவர்கள் அளித்த விளக்கம் தான் நாம் சமீபத்தில் கடந்த வந்த செய்தி, செய்தி ஜூலை மாதம் வந்திருந்தது. நமக்கு எழுதுவதற்கான சரியான இடமும் நேரமும் தான் அமையவில்லை.

தி.மு.கவின் 2019ம் ஆண்டின் தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது, அதன் மூலம் தி.மு.கவின் கூட்டணி கட்சியான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு. 10 கோடி ரூபாய் கொடுத்தது தெரியவந்திருந்தது.

செலவுக்காக திமுகவிடம் பணம் வாங்கப்பட்டது, அதில் ஒரு சிங்கிள் டீ கூட மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சித் தொண்டன் குடிக்கவில்லைஎன்று பெ. சண்முகம் சொல்லியிருந்தார்.

இந்த செய்தி, இந்த பதில் பல கேள்விகளை, பல எண்ணங்களை நமக்குள் எழுப்புகிறது. “யார் இவர்கள்? இந்த கட்சியின் நோக்கம் என்ன? தேர்தல் அரசியலில் இவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? இவர்கள் இந்த மாநிலத்திற்கு இந்த தேசத்திற்கு தேவை தானா?”

சிறு வயதில், நாங்கள் குடியிருந்த பகுதியில், ஒவ்வொரு தெரு முற்றத்திலும் ஒரு கரும்பலகை இருக்கும் அதில், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஏதேனும் எழுதி வைத்திருப்பார்கள்.தேர்தல் சமயங்களில் வாக்கு சீட்டுகள் கொண்டு வந்து தருவார்கள். ஒவ்வொரு வருடமும் விலை வாசி ஏறும் பொழுது, அரசை வன்மையாக கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள். இப்படியான போஸ்டர்களில் கார்ப்பரேட்களை ஏகத்துக்கும் சாடியிருப்பார்கள்.

ஒரு சிந்தனை வருகிறது. நீங்கள் ஒரு நகையோ இடமோ வாங்குகிறீர்கள்,ஒரு வீட்டை கட்டுகிறீர்கள், அதன் மதிப்பு நாளடைவில் அதிகரிக்க வேண்டும் என்பது தானே நம்முடைய எண்ணமாக இருக்கும், நாம் சேமிக்கின்ற பணத்திற்கும் எந்த வங்கியில், எந்த திட்டத்தில், அதிகம் வட்டி கிடைக்கிறது என்று தானே எல்லோரும் ஆராய்கிறோம்.

 

உண்மையில் விலைவாசி உயர்வை எல்லா காலமும் நாம் எல்லோரும் சாடிக்கொண்டிருந்தாலும், எல்லோரும் ஒருவகையில், விலைவாசி உயர்வைத் தான் விரும்புகிறோம், நாளை விடிந்ததும் தங்கம் கிராம் ஒரு ரூபாய் என்றால், என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள். பொத்தாம் பொதுவாக ஒரு சாமானியனை போல், எப்போதும் விலைவாசி உயர்வை கண்டிப்பதை மட்டுமே ஒரு அரசியல் கட்சி செய்துகொண்டிருக்க கூடாது. ஆனால், எல்லா கட்சிகளும் அதைத் தான் செய்கிறது. அதை கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் கூடுதலாக செய்வார்கள். தேவையில்லாத ஆணியை புடுங்குவது என்பது இது தான்.

 

ஆனால், இந்த விலைவாசி ஏற்றத்தை எப்படி எதிர்கொள்வது?வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு முதலீடுகள் தேவைப்படும், கம்யூனிஸ்ட்களின் கருத்தின் படி கார்ப்பரேட்களை ஒழித்து விட்டு அரசே முதலீடு செய்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கும் மக்களிடம் தான் வரி கேட்க வேண்டும். கம்யூனிஸ்ட் சித்தாந்தம் வரிக்கு எதிரானது என்று கொள்ள முடியாத அதே சமயத்தில், இந்த வரி பெறுவது, அவர்கள் சித்தாந்திற்குள் வருவது இல்லை. அதோடு, கம்யூனிஸ்ட்கள் ஆளுங்கின்ற நாடுகளிலும் மாநிலங்களிலும் கூட தனியார் முதலீடுகளும் தான் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.

 

எல்லோருக்கும் எல்லாமும் பொது, எல்லோரும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களின் விதி. இப்பொழுது ஒரு விமானம் செய்ய வேண்டும், அதற்கு தேவையான அலுமினியம் போன்ற உலோகங்களை பிரித்து எடுக்கின்ற வேலையை ஒருவர் செய்கிறார். ஒருவர் பெயிண்ட் தயாரிக்கிறார். இப்படி ஆளுக்கொரு வேலை செய்து எல்லோரும் பலனை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் நமக்கு புரிந்த கம்யூனிச சித்தாந்தம், இது நம் கலாச்சாரத்திற்கு முழுதும் வேறுபட்ட ஒரு சித்தாந்தம், உலக இயற்கை விதிகளுக்கே புறம்பானது.

 

 எல்லோருடைய உழைப்பையும் ஒரு தட்டில் வைப்பது எப்படி சரியாகும்!? சிறு வயதில் படிப்பதற்கான வாய்ப்பு இருந்து படிப்பதற்கு பெரிய முயற்சி எடுக்காமல் சாதாரண வேலைக்கு செல்கிறவருக்கும்; சிறு வயது முதல் படிக்கச் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி படிக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டு, ஒரு white காலர் வேலைக்கு செல்லுகிறவர்க்கும் ஒரே மாதிரியான வசதிகள் கிடைக்க வேண்டும் என்பது தான் கம்யூனிசம் என்று இந்த கம்யூனிசம் பல மாதிரியாக புரிந்து கொள்ளப்படுகிறது,

 

சிறப்பு ஒவ்வா   செய்தொழில் வேற்றுமை யான் என்றும், முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்றும், அவர் அவர் முயற்சிக்கு ஏற்ற பலனை அவர் அவர் பெறுவது தான் இயற்கை, அதை வள்ளுவர் ஆமோதிக்கிறார்.

 

சாமானியர்களுக்கான இயக்கம் என்று தங்களை முன்னிறுத்தி கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவம் சாமானியர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியாகவும் இல்லை, அப்படி புரிந்து கொண்டாலும் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் இல்லை.

 

உலகத்தில், இப்படியொரு இயக்கம் தேவை தானா என்றால், நிச்சயம் தேவை. உழைக்கும் மனிதர்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் தேவை. கொரோனா காலத்தில், நான் பொறியாளராக இருந்த ஒரு திட்டத்தில், என் கட்டுப்பாட்டில் சில தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்கள், ஒரு 30மீட்டர் டேங்கின் மீது வேலை செய்து கொண்டிருந்த பொழுது, இடி மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இறங்கி வந்தார்கள்.4 மணி ஆனது, வானிலையில் ஒரு மாற்றமும் இல்லை. அவர்களுக்கு ஒரு 10 நிமிட வேலை தான்.மீண்டும் 30 மீட்டர் அவர்கள் மேல் ஏறி எல்லாவற்றையும் தயார் செய்து வேலையை தொடங்குவதற்குள் மழை குறுக்கிட்டால் என்ன செய்வது!? மறுநாள் கூட அந்த வேலையை செய்ய முடியும்.அவர்களும் ஐந்து மணிக்கு கிளம்ப வேண்டும் என்றார்கள். சரி கிளம்புங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டேன்.எங்களுடைய வாடிக்கையாளர் பக்கம் இருந்த மேலாளர் அந்த பத்து நிமிட வேலையை இன்றே முடிக்கச் சொல் என்று என்னை அழைத்து சொல்கிறார், அவர்களை அனுப்பிவிட்டேன் இன்று முடியாது என்றேன். அதை அவர் பிரச்னையாக்கி விட்டார். மறுநாள் கொரோனாவின் பொருட்டு அரசு லாக் டவுன் அறிவித்து இருந்தது, இது அந்த மேலாளருக்கு ஐந்து மணிக்கு தெரிய வந்திருக்கலாம். அந்த வேலையை அன்றே முடிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர் முதலாளியும் கிடையாது.ஆனால், அவர் கட்டளையின் கீழ் வேலை செய்பவர்களைப் பற்றி சிறிதும் கவலை படாமல், வேலையை முடித்து, அவர் பெயரோ பணமோ சம்பாதித்துக்கொள்ள நினைக்கிறார் இல்லையா? இந்த மாதிரியான அரக்கன் ஒருவன் நம் எல்லோருள்ளும் இருக்கிறான். இன்று தொழிலார்களாக இருக்கும் நாம் யார் ஒருவரும் நாளை முதலாளி ஆகலாம் அப்பொழுது நாம் பெரிதும் நம்முடைய நலனை தான் அங்கே முன்னிறுத்துவோம்.

அந்த அரக்கத்தனத்தை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட்கள் நாட்டிற்கு மட்டும் இல்லை, இந்த உலகத்திற்கே தேவைப்படுகிறார்கள் தான். குறிப்பிட்ட வேலை மற்றும் அதில் வரும் லாபத்தை கடந்து வேலை செய்கின்றவரின் நலனை யோசிக்கும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்கள் தான்.

 

நம் ஊரில்,நிகழ்காலத்தில், கம்யூனிஸ்ட்கள் இதைத்தான் செய்கிறார்களா என்றால் இல்லை.கம்யூனிசத்தை கொள்கையாக கொண்ட நாடோ அரசாங்கமோ இயக்கமோ என்ன செய்ய வேண்டுமென்றால், எல்லோருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி தந்து, அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் அவர் எடுக்கும் முயற்சிக்கு ஏற்ப ஏற்றம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

எந்த உழைப்பு முயற்சியும் இல்லாதவருக்கு கூட எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதோ  பேசுவதோ அல்லது வெவ்வேறு விதமான முயற்சிகளுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதோ பேசுவதோ  கம்யூனிசம் ஆக இருக்க கூடாது.

நம் ஊருக்கு கம்யூனிஸ்ட்கள் தேவை தானா? என்கிற கேள்வி ஏன் எழுகிறது.

கட்சி அளவில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பளித்து முயற்சியின் அடிப்படையில் பதவிகளை வழங்காமல், கார்ப்பரேட் போன்று செயல்படும் கட்சிகளோடு கூட்டணி அமைத்துக்கொண்டு,தேர்தல் செலவினங்களுக்கும் அந்த கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை உருவாக்கி முயற்சிகளுக்கு ஏற்ப ஊதியம் அளிக்கும் கார்ப்பரேட்களை விமர்சிக்க மட்டும் எதற்கு கம்யூனிஸ்ட்கள்.

பெ.ஷண்முகம் அவர்கள் சொன்னது போல, நிச்சயமாக அந்த கட்சியின் தொண்டன் ஒருவனும், அந்த பணத்தில், ஒரு டீ கூட குடித்திருக்க வாய்ப்பில்லை தான், பணம் சம்பாதிப்பதற்கோ, பதவி போன்ற அதிகார சுகங்களை அனுபவிப்பதற்கோ வாய்ப்புகள் இல்லாத கட்சிக்கு தொண்டனாக இருக்கின்ற யார் ஒருவரும் அப்படி பணத்தில், டீ குடிக்க மாட்டார்கள் தான். ஆனால், தேர்தலை சந்திக்க பெரும் செல்வாக்கும் பண பலமும் தேவைபடுகிற சூழலில், அவை இல்லாத கம்யூனிஸ்ட்கள் தேர்தல் அரசியலில் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது?ஒரு கட்சியிடம் பணம் பெற்ற பின் அந்த கட்சிக்குள் நடக்கும் உழைப்பை சுரண்டலை உங்களால் கேள்வி கேட்க முடியுமா?

ஒரு பக்கம் கார்ப்பரேட்களை விமர்சித்து விட்டு, கார்ப்பரேட்களை விட மோசமான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்பது என்ன  மாதிரியான கொள்கை நிலை.

நம் நாட்டில், இன்னமும், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு சரியான நிதிப் பாதுகாப்பு இல்லை. அநேகமான நிறுவனங்கள், வேலை நேரம் தாண்டி பணி செய்யும் நேரத்திற்கு கூடுதல் நேர ஊதியம் வழங்குவதில்லை.  இது பற்றிய சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கலாம்.

இப்படியான முயற்சிகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் எடுக்குமேயானால், மக்கள் ஆதரவு தர ஆரம்பிப்பார்கள்.இயக்கம் தானாக வளரும், கார்ப்பரேட் கட்சிகளை சார்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற நிலை மாறும். மாறாக நாட்டின் காலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை பேசிக்கொண்டும்  கூட்டணிக்கட்சிகளை குளுமைப் படுத்த அவ்வப்பொழுது மத வெறுப்புகளை பரப்பிக்கொண்டும் இருந்தால், எப்போதும் தேர்தலை சந்திக்க கார்ப்பரேட் கட்சிகளை தான் சார்ந்திருக்க வேண்டும், அதற்கு தனியாக ஒரு இயக்கம் தேவை இல்லை.

உழைப்புச் சுரண்டலை தடுக்கும் கம்யூனிச சித்தாந்தம் எல்லோர் மனதிலும் இருக்க வேண்டும் தான் அது தேவை தான். ஆனால், நிகழ்கால நம் ஊர் கம்யூனிஸ்ட்கள் நமக்கு தேவையற்றவர்கள் என்கிற தோற்றத்தை தான் தருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *