நீங்கள் ஒரு அரசாங்க பணியாளரா? அல்லது ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருப்பவரா?  இன்றே உங்கள் பணியை விட்டுவிடுங்கள் என்றால் நீங்கள் செய்வீர்களா?

 

சரி! என்னைவிட்டு தள்ளுங்கள். நான் சொல்லி நீங்கள் கேட்க வேண்டாம். வேலைப்பளு காரணமாக இந்த வேலையை இப்போதே விட்டுவிட வேண்டும் என்று நினைத்து; அதையும் மீறி அந்த வேலையில் தொடர வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றதா? நீங்கள் மாதச் சம்பளத்தை நம்பியிருப்பவர் என்றால்  நிச்சயமாக உங்களுக்கு இந்த நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கும்.

 

நீங்கள் யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம்; அரசாங்கத்திலோ அல்லது தனியார் துறையிலோ எங்கு வேண்டுமென்றாலும் பணி செய்கின்றவராக இருக்கலாம்; ஆனால், உங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் உங்களுடைய மாதச் சம்பளத்தைச் சார்ந்து இருக்குமென்றால், இன்றே உங்கள் வேலையை விட்டுவிடுங்கள் என்றால் நிச்சயம் உங்களால் முடியாது. இதுவே ஒரு வகையில் மன அழுத்தம் தான்.

இந்த மன அழுத்தம், உங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. திராவிட மாடல், குஜராத் மாடல், என்று பாரபட்சம் இல்லாமல் மொத்த இந்திய சமூகத்திற்கும் சொந்தமானது.

வேலை செய்கிறவர்கள் தங்களின் நலனுக்காக கூட நிறுவனங்களை நிர்பந்திக்க முடிவதில்லை, நிறுவனங்களால் பணியாளர்களை நிர்பந்திக்க முடியும். இப்படியான நிலைக்கு காரணம், நீங்கள் உங்கள் வேலையை விட்டு விட்டால் அதை நிரப்ப லட்சம் பேர் காத்துக்கொண்டு இருப்பது தான் .அந்த லட்சம் பேருக்கும் வேலை இருந்தால் நிச்சயம் இந்த சமூகம் மன அழுத்தம் கொண்ட சமூகமாக இருக்காது.

 

இந்தியா எந்த காலத்திலும் உபரி வேலைவாய்ப்பை உருவாக்கி விடவில்லை. உபரி வேலைவாய்ப்பு என்றால்?

 

100 பேர் இருக்கும் நாட்டில் வேலை செய்ய 200 பேர் தேவைப்பட்டால் அது தான் அந்த நிலை தான் உபரி வேலை வாய்ப்பு.இந்த உபரி வேலைவாய்ப்பானது எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும்.

 

வருடத்திற்கு லட்சம் பொறியாளர்களை உருவாகும் ஒரு மாநிலத்தில் பொறியாளர்களுக்கான வேலை இல்லாமல் குவாரியில் கல் உடைக்க லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள் என்பது உபரி நிலை ஆகாது.

 

Human resources -மனித வளம். பொன் முட்டை இடிக்கிற வாத்தைப் போல பாதுக்காக்கப் பட வேண்டியது.

 

சுதந்திர இந்தியாவில் இந்த மனித வளம் efficient ஆகவும் சரியாகவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. மாறாக அது எப்போது நசுக்கி பிழியப் பட்டு இருக்கின்றது.

 

வேலைவாய்ப்பு தொடங்கி எந்த ஒரு விஷயத்திலும் தன்னிறைவு அடையாதன் விளைவாய் 100 அப்பத்திற்கு லட்சம் பேர் அடித்துக்கொள்ளும் நிலையே இங்கு இருக்க, அந்த நிலையை இன்னும் மோசமடைய செய்வதற்கு ஏதுவாய், இந்த மனித வளத்தை இன்னும் நசுக்க தோதாய் தமிழக சட்ட மன்றத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

 

இந்த மசோதா குறித்து ஆக்கபூர்வமாக நடந்திருக்க வேண்டிய எந்த விவாதங்களும் சட்டப்பேரவையில் நடந்தாக தெரியவில்லை. மாறாக அங்கே ஐபில் டிக்கெட் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதிலும் பிரதான எதிர்க்கட்சியான  அ.தி.மு.க. சட்டப்பேரவையிலும் கூட அவர்களுக்கு அடித்துக்கொள்ளும் வண்ணமே உரையாற்றுகிறார்கள் தவிர இப்படியான மசோதாக்களில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்ட அவர் பெரிதும் லட்சியம் செய்யவில்லை.

 

சமீபத்தில் இந்திய அரசாங்கம் வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வர புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இருந்தது. அதன் படி வாரத்தில் நான்கு  நாட்கள் வேலை ஆனால், ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை.

 

இதனைத்தொடர்ந்து தான்  எட்டு மணி நேர வேலையை பன்னிரண்டு மணி நேர  வேலையாக மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றது தமிழக அரசு.

 

இதுகுறித்து  அமைச்சர்கள் சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு விளக்கம் அளித்ததாக தெரிய வருவது ,

“தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு தொழிலாளிகளுக்கும் எதிரானது அல்ல. எந்த ஓரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே 12 மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பமில்லை என்றால் இது நடைமுறைப்படுத்தப்படாது

வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத் திருத்தம் பொருந்தாது. விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தொழிலாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அதையும் மீறி 48 மணி நேரத்தையும் கடந்து தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று நிறுவனங்கள் வற்புறுத்தினால் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

 

மின்னணுவியல் தொழில் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் தயாரிக்கக் கூடிய தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என சில குறிப்பிட்ட நிறுவனங்களில் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். வாரத்தில் நான்கு நாட்கள் 12 மணி நேரம் பணியாற்றியவர்கள் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.தொழிலாளர்களுக்கு எதிரான எந்த செயலுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது”

 

அமைச்சரின் விளக்கம் குறித்து உங்கள் மனதில் எந்த கேள்வியும் எழவில்லை என்றால், நீங்கள் தி.மு.க.வின் ஆதரவாளராக இருக்கலாம், நீங்கள் தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்கவேண்டியதில்லை.

 

அரசு இதுவரை கவனம் கொள்ளாத அல்லது கண்டு கொள்ளாத வேலை நேரம் சார்ந்த பிரச்சனை அதிகம் இருக்கின்றது. அது எதையும் முறைப்படுத்த முற்படுத்தாத இந்த அரசு இயந்திரத்தை இயக்கும்  அரசியல்வாதிகள், இந்த மாற்றத்தை மக்கள் நலனுக்காக கொண்டு வந்தது போல் தெரியவில்லை. நாடாளுமன்றமோ சட்டமன்றமோ, இந்த இரண்டும் இந்த சட்ட திருத்தத்தைப் பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கருத்தில் கொண்டதாக தெரியவில்லை.

மசோதா நிறைவேற்றப்பட்டு எதிர்ப்பு கிளம்பிய பின் இதைப்பற்றி அலசி ஆராய கமிட்டி அமைக்க முதல்வர் உறுதியளித்துள்ளதாக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க ஆதரவில் தேர்தலில் நின்ற வெற்றிபெற்ற கூட்டணி கட்சிகள் தெரிவித்து இருக்கின்றது.

 

கமிட்டி அமைத்து சாதக பாதகங்களை அலச வேண்டுமென்றால் அதை மசோதா நிறைவேற்றும் முன்னதாக செய்து இருக்க வேண்டும்.

 

8 மணி நேரம் வேலை தான் நடைமுறையில்  இருக்கின்றது.ஆனால் இது எல்லா இடங்களுக்கும் பொருந்துவதில்லை அல்லது எல்லோரும் பின்பற்றுவதில்லை.

 

கடைநிலை ஊழியர்களுக்கு இது பொருந்துவதே இல்லை.சாதாரணமாக மாதச் சம்பளம் பெறும் ஒரு பேருந்து ஓட்டுனரை எடுத்துக்கொள்வோம் தவிர்க்க முடியதாக காரணங்களால், அன்று அவரின் பணி நேரம் ஒரு நாள் அவருடைய பணி நேரம் 10 மணி நேரத்தை தாண்டினாலும் அவருக்கு அதிகப்படியான நேரம் பார்த்த வேலைக்கென்று எந்த அதிகப்படியான சம்பளமும் கிடைக்கப்போவதில்லை. இது ஒரு உதாரணம் தான் இந்த நிலை தான் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்களின் நிலை.

வாரத்திற்கு 48 மணிநேரம் தான் இந்தியர்கள் பணிபுரிகிறார்களா என்றால் நிச்சயம் அதற்கு மேல் தான் வேலை செய்கிறார்கள்.

 

Overtime pay என்பது அநேகமான இந்தியர்களுக்கு பரீட்சியம் இல்லாத ஒன்றாகவே இருக்கின்றது. “எப்ப கூப்டாலும் வேலைப் பார்க்கணும் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் வேலை செய்ய வேண்டும் இல்லை என்றால் வேலையை காப்பாற்றிக்கொள்ள முடியாது”   இது தான் இந்தியர்களின் நிலையாக இருக்கின்றது.

கல்லூரிகளிலும் தனியார் பள்ளிகளிலும் வேலை செய்பவர்கள் சம்பளம் ஒழுங்கா வந்த போதும் என்கிற மனநிலையில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இத்தனை நாள் விடுமுறை அன்று வேலை செய்து இருக்கின்றேன் இத்தனை நாள் 8 மணி நேரதிற்கும் மேல் வேலை செய்து இருக்கின்றேன். அதற்கு எல்லாம் நிறுவனம் எனக்கு சம்பளம் தந்து இருக்கின்றதா என்று சிந்தியுங்கள்.இந்தியர்களில்  அனேமானவர்களுக்கு இந்த சிந்தனை எழுந்திருக்காது.

 

 

எதார்த்தம் முதலாளிகளுக்கு சாதகமாவே தான் இது வரை இருந்து இருக்கின்றது. அந்த முதலாளிகள் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றார்கள் அல்லது அவர்களின் கூட்டாளிகளாக இருக்கின்றார்கள்.

 

நிறுவனங்களில் வேலைபார்க்கும் தனிமனிதர்கள் தங்களுக்கு அந்த நிறுவனம் அநீதி இழைத்தால் தனியாக எதிர்க்க முடியாது என்று உருவாக்கப்பட்டது தான் தொழிற்சங்கங்கள். அந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகி வெகு நாட்கள் ஆகிவிட்டது.MNC நிறுவனங்களும் IT நிறுவனங்களும் எந்த தொழிற்சங்கங்களுக்கும் இடம் தருவதேயில்லை.

 

இப்படி முதலாளிகளுக்கு பெருமளவில் சாதகமான நிலை இருப்பதற்கு காரணம் கொட்டிக்கிடக்கும் மனிதவளம்.  இந்த நிலையில் அரசியல்வாதிகள் தொழிலாளர் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவான சீர்திருத்தங்களை செய்யாமல் பின்னோக்கி அழைத்துச் செல்லும், முதலாளிகளுக்கு இன்னும் சாதகமான நிலையை ஏற்படுத்தித்தரும் நடவடிக்கைகளை எடுத்து அதை சீர்சிருதிருத்தம் என்கிறார்கள்.காரணம் அரசியல்வாதிகளே தான் அந்த முதலாளிகளாக இருக்கின்றார்கள்.

 

அதான் வாரத்தில் 3 நாள் விடுமுறை கிடைக்குமே . பணியாளர்கள் விருப்பப்பட்டால் தானே 12 மணி நேர வேலை என்று நினைக்கவேண்டாம். நிறுவனங்களின் விருப்பம் எதுவோ அதுவே  தான் பணியாளரின் விருப்பம் என்பது எழுதப்படாத விதி.

 

ஒரு நாளில் வேலை மட்டும் 12 மணி நேரம். இதில் இடைவேளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் நீங்கள் 13 மணிநேரம் வேலையில் இருக்க வேண்டும்.

 

வீட்டு வாசலில் தொழில் நிறுவனங்கள் இருப்பதில்லை. நீங்கள் வேலைக்கு கிளம்பிச்  சென்றுவருவதற்கு இரண்டு மணி நேரம் வைத்துக்கொள்வோம். 14இல் இருந்து 15 மணி நேரம் ஒரு நாளில் உங்கள் வேலைக்காக நீங்கள் செலவிட வேண்டும்.

 

இது நிச்சயமாக ஆண்களை விட பெண்களை (working womens) இன்னும்  அதிகமாக பாதிக்கும்.

 

நீங்கள் உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள நேரமிருக்காது. உங்களுக்கான உணவுகளை தயாரித்துக்கொள்ள நேரமிருக்காது. தொடர்ந்து 12 மணி நேர வேலை என்பது   சதாரனமாகிவிட்ட பின், அதே நாளில் தேவையின் காரணமாக  நீங்கள் இன்னும் 1 மணி நேரம் அதிகம் வேலை செய்வது உங்களுக்கு பழகி போகலாம்.

 

இப்படி இன்னும் பல அபாயங்கள் இருக்கும் இந்த திருத்தத்தை தான் தொழிலார்களுக்கு எதிரானது இல்லை என்று இந்த அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்.முதலாளிகளாக இருக்கும் அவர்களுக்கு சாதகமாகவே தான் இந்த திருத்தங்கள் இருக்கின்றது.

எனக்கு வேல்முருகன் என்று ஒரு நண்பர் இருந்தார் அவர் ஒருமுறை இந்தியாவில் இத்தனை வேலை இல்லாமல் இருக்கும் பொழுது எதற்காக ATM machine கள் என்று கேள்வி எழுப்பினார். அவர் கேள்வியின் நோக்கத்தில் நியாயம் இருந்தாலும் கேள்வி தவறான கேள்வி காரணம். machine களின் வருகை  வேலைவாய்ப்பை பாதிக்கும் என்பது அவர் எண்ணம் ஆனால், machine களின் வருகை ஒரு வேலைவாய்ப்பை வேறு ஒரு வாய்ப்பாக மாற்றும்.

 

அவருடைய அந்த கேள்வி எனக்கு வேறு ஒரு எண்ணத்தை கொடுத்தது. “ஏன் அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் வேலை நேரத்தை 7 மணி நேரமாகவோ 6 மணி நேரமாவோ குறைத்து. நாள் ஒன்றுக்கு 3 shift இயங்கினால் என்ன?”

 

நினைத்து பாருங்கள்  நீதிமன்றம். வட்டாச்சியர் அலுவலகம், வங்கிகள், அரசு பள்ளிகள் கல்லூரிகள் எல்லாம், 6 மணி நேரம் 2 அல்லது 3 shift இயங்கினால்   எப்படி இருக்கும் 100 பேர் பணி செய்கின்ற இடத்தில்   200 அல்லது 300 பேர் தேவைப்படுவார்கள். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 100 பேருக்கு மட்டுமே இடம் கொண்ட அரசு கல்லூரியில் 200 அல்லது  300 பேர் படிக்க வழி கிடைக்கும். வேலை வேலை என்று ஓடிக்கொண்டு மன அழுத்தில் அழுந்தியிருப்பது கூட தெரியாமல் இருக்கும் இந்த இந்திய சமூகம் அதிலிருந்து மீண்டு இருக்கும்.வழக்குகள் நிலுவையில் இருக்காது.

 

ஆனால், இப்படியான வேலை நேரத்தை குறைத்து பணியாட்களை அதிகரிக்கும் சீர்திருத்தமானது.முதலாளிகளுக்கு ஒரு சுமையை ஏற்படுத்தும் அதை அரசியல்வாதிகள் எப்படி ஏற்றுக்கொள்ளவார்கள். காரணம் முதலாளிகளாக அவர்களே தானே இருக்கின்றார்கள். கட்சி பாகுபாடில்லாமல் இதில் எல்லா கட்சிகளும் ஒரே நிலையில் தான் இருக்கின்றது. எதிர்ப்பு காட்டிய கட்சிகளும் கூட இன்று வரை முன்னமே இருக்கும் சிக்கல்களை பற்றி இன்று வரை பேசியதும் இல்லை ஆளுங்கட்சிகளை அது சார் சீர்திருத்தங்களை செய்ய சொல்லி நிர்பந்தித்ததும் இல்லை.

 

வேலை நேரத்தை குறைப்பது தான் இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு அடுத்த கட்ட சீர்திருத்தமாக இருக்க முடியுமே தவிர மக்களை தொழிலாளர்களை இன்னும் மன அழுத்தத்திற்கு ஆளாக்க கூடிய வேலை நேரத்தை அதிகப்படுத்தியிருக்கும் இந்த திருத்தம் சீர்திருத்தமாகாது. இது சமூகத்தையும் நாட்டையும் பின்னோக்கித் தான் அழைத்துச்செல்லும்..

 

Dominantly this amendment will affect working Women, but it’s negative impacts are not restricted only to women

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *