“எந்திரி டா!

ஓய் கேக்குதா!

எல்லாம் நான் பாத்துக்குறேன்! நான் பாத்துக்கிறேன் சொன்ன..இப்ப என்ன, எந்திரிக்க போறீயா இல்லையா..

எந்திரி! எந்திரி!”

இப்படியெல்லாம் நான் கத்தி மூஞ்சில அறைஞ்சு என்னென்னவோ செஞ்சும் எந்திரிக்கல.எங்க அப்பா தான்.

தீடீர்னு ஒரு நாள் சாயந்திரம், என்ன நடந்துட்டு இருக்கு எங்களுக்கு புரியுறதுக்குள்ள, பக்கத்துக்கு வீட்டு அண்ணா வந்து அப்பாவ தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனோம். அங்க, டாக்டர் ஒன்னும் இல்லையே னு சொல்லிட்டார்.எங்க வீட்ல, நான் தான் அந்த வார்த்தையை முதல கேக்குறேன். அம்மா வருவாங்க, கொஞ்ச நேரத்துல, என்ன சொல்லுவேன் தெரியாது. வீட்டுக்கு போனா தங்கச்சி இருக்கும், என்ன சொல்லுவேன் தெரியாது. ஒன்னும் பேச வரல.

 அங்க இருந்து இன்னொரு ஹாஸ்பிடல்க்கு கொண்டு போனோம், அங்க இருக்க டாக்டர் மாத்தி சொல்லிட மாட்டாரா னு.கொண்டு போற வழில  தான் என்னோடு மொத்த கோவத்தை அப்படி கொட்டினேன். இருந்தாலும் இறந்தாலும் அவர் என் அப்பா தான. நான் அடிச்சாலும் வாங்கிக்கிட்டாரு அவ்வளவு உரிமை. அவருக்கு 55 வயசு தான். கொரோனா கிடையாது, சிக்கரெட் பழக்கம் குடி எதுவும் கிடையாது. எனக்கு அப்ப 24 வயசு.எவ்வளவோ கனவு எதிர்பார்ப்பு, எல்லாம் கொஞ்ச நேரத்துல இடிஞ்சு போச்சு. என்ன செய்றது! ஒன்னும் செய்ய முடியாது.

இங்க இருக்க நிறைய பேருக்கு முதல் ஹீரோ அவங்க அப்பா தான்.  என் பார்வையில எண்பதுகளில் இருக்கும் ரஜினிகாந்த் ஓட ஹேர்ஸ்டைல் எங்க அப்பாவோடது மாதிரி தெரிஞ்சுச்சு.நான் பொறந்தது என்னவோ 90ல. அப்ப டி.வி.ல போஸ்டர்ல இருக்க ரஜினி அப்படி தான் இருப்பார்.ரஜினி என் மனசுக்குள்ள வந்தது இப்படி தான்.யாருமே தங்களோட ஹீரோ தோக்கறத விரும்ப மாட்டாங்க. அப்பாவும் சரி; ரஜினியும் சரி; இங்க அவங்க அவங்களோட அப்பாவும் எல்லார்க்குமான ரஜினியும் தோக்குறது யாருக்குமே பிடிக்காது.

இன்னிக்கு எனக்கு 30 வயசு. 3 நாள் முன்னாடி போன் ல ட்விட்டர்  நோட்டிபிகேஷன் பார்த்து உள்ள போன அப்ப, என்னோட 24வயசு ல அப்பாவ இழந்த அந்த சில நிமிடங்கள் எப்படி இருந்ததோ அப்படி தான் இருந்துச்சு. கத்தனும் போல திட்டணும் போல , அசிங்கம் அசிங்கமா திட்டனும் போல.ஆனால் , இந்த முறை என் அப்பா இல்லை அப்பாவோட உருவகமா பார்த்த என் ஹீரோ. அடிக்க முடியல திட்ட முடியல எதுக்கும் உரிமையும் இல்லை. காரணம், இனிமே ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை னு ஒரு பயம். அந்த பயம், சோகம் இங்க நிறைய பேருக்கு இல்லை

நிறைய பேருக்கு சந்தோசமா இருக்கு;நிறைய பேருக்கு விளையாட்டா  இருக்கு;நிறைய பேர் பெரு மூச்சு விட்டுக்குறாங்க.

“எல்லார்க்கும் விளையாட்டா  இருக்கா” னு கேட்டா வேற என்ன பண்ண முடியும் கேக்குறாங்க?

ஆமா,வேற என்ன பண்ண முடியும். அப்பாவ  எங்க போய் தேடுறது நான்; என் முன்னாடி தான் படுத்து இருந்தார். ஆனா, அவர் எங்க அப்பா இல்லை, அது வெறும் உடம்பு னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு.இன்னிக்கு நான் எங்க போய்  தேடுவேன் ரஜினிகாந்தை. அப்பாவோட இழப்புக்கு அப்புறம் நிறைய விஷயத்தில ரஜினியோட செயல்கள் தான் ஒரு உத்வேகமா இருந்து தைரியத்தை கொடுத்திருக்கு.அந்த ரஜினியை; அப்பாவுக்கு அடுத்ததா நான் பார்த்த ஹீரோவ எங்க போய் தேடுறது! போயஸ் கார்டன் ல இருக்கிறது வெறும் சிவாஜிராவ், ரஜினிகாந்தை எங்க போய் தேடுறது! The hero of millions-One and only Rajinikanth, எங்க போய் தேடுறது!

இந்த நாட்டுல எதாவது மாற்றம் நடக்காதா னு என்னோட சின்ன வயசுல இருந்து ஏங்கிருக்கேன். அப்பாவோட இழப்புக்கு அப்புறம் அந்த ஏக்கம் ஒரு வெறியா கூட மாறிடுச்சு. காரணம், ஒரு குடும்பத்தை நடத்தி கொண்டு போறதுல இருக்க சிக்கலுகளுக்கு காரணம் அரசியல் அப்படினு எனக்கு புரிஞ்சுச்சு.ஆனாலும், நான் ரொம்ப சாதாரணமானவன் என்னால என்ன பண்ண முடியும்!

என்னோட18 வயசுக்கு முன்னாடியே ரஜினி அரசியலுக்கு வரணும் னு ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு.அது இங்க இருக்க ரசிகர் கூட்டத்தில் சேராத ஆளுங்களுக்குமே இருந்திருக்கும். காரணம், அடிப்படையில எல்லாரும் ரஜினி ரசிகர் தானே.ஆனா, நீங்க(ரஜினி) வரவே இல்லை.

2017ல் நீங்க வர போறதை பற்றி சொல்ல போறீங்க கேள்விபட்டப்ப வேணாம்னு நினைச்சோம். வந்தா எல்லோரும் விமர்சனம் பண்ணுவாங்க, எங்களால எடுத்துக்க முடியாதுனு நினைச்சோம். ஆனாலும், வருவது உறுதி சொன்னப்ப  வந்துச்சு பாருங்க ஒரு சந்தோசம் யப்பா! அடி மனசுல இருந்த ஆசை அது தானே.

இதுக்கு இடையில கலைஞர் இல்லை, ஜெ.ஜெ. இல்லை, இந்த நேரத்துல இளைஞர்கள் அரசியலுக்கு வந்தா மக்கள் சேர்ந்து ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுருவாங்க னு ஒரு நெனப்பு எனக்கு. அந்த நேரத்துல நீங்க கட்சி ஆரம்பிச்சா எங்களால ஜெயிக்க முடியாது னு நினச்சு உங்களுக்கு டீவ்ட் எல்லாம் போட்டேன், இளைஞர்கள் அரசியலுக்கு வர சப்போர்ட் பண்ணுங்க, உங்க செல்வாக்கு பயன்படுத்தினு.

60 வயசுக்கு அப்பறம் நீங்களும் கமலும், இதுக்கு அப்புறமும் அரசியலுக்கு வரலைன்னா அந்த குற்றவுணர்ச்சி எங்களை சும்மா விடுமா னு கேட்டப்ப,  நமக்கு சின்ன  வயசுலயே அப்படி உணர்வு  வந்தும் ஒன்னும் பண்ண  முடியல உங்களுக்கெல்லாம் இப்ப தான் வருது னு நான் நினச்சேன்.

ஆனா,ஐயா தமிழருவி மணியன் மாதிரி, எதாவது நடக்காத- ஒரு மாற்றம்; அரசியல் ல  ஒரு மாற்றம்; அது எப்படி நிகழந்தாலும் பரவாயில்லை. அதுக்கான வழி எது னு பார்க்கும் போது, நீங்க ரெண்டு பேர் தான் சரியான தேர்வு னு தோணுச்சு. எல்லாரும் நீங்க ரெண்டு பேரும் சேர்த்து நிக்கணும் னு பேசினாங்க ஒருத்தர் ஆளும் கட்சியாவும் ஒருத்தர் எதிர் கட்சியாவும் இருக்கிறது தான் சரி நான் நினச்சேன்.

அவர்(தமிழருவி மணியன்) பாவம், அவரையும் அர்ஜுன மூர்த்தியையும் வச்சு ஊடகங்களை சந்திச்ச அப்ப அவருக்கு அப்படி ஒரு பூரிப்பு ஆரம்பிக்காத கட்சி,அதிகாரம் இல்லாத ஒரு பதவி, அதுக்காகவா அவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்.அவரை புரிஞ்சிக்காம இங்க ஒரு கூட்டம் கொள்கை மாத்திகிட்டே இருக்காரு னு கிண்டல் பண்றாங்க. அவரை பார்க்கிற அப்ப எனக்கு தோணுறது, எனக்கும் அவருக்கும் ஒரே  லட்சியம் தான்.ஒரு மூணாவது சக்தி உருவாகனும், அந்த சக்தி ஜெயிக்கணும், மாற்றத்திற்கான முதல் படி அது மட்டும் தான். அதை சாத்தியப்படுத்த யாரால முடியும் னு தேடுறார். இது புரியாம அவரை விமர்சனம் பண்ண ஒரு கூட்டம். அவருடைய வருத்தத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது. அதே வலில தான் நானும் இருக்கேன்.

ஆனால், சீமான் மாதிரி ஆளுங்களை வச்சு, அந்த மூணாவது இடத்துக்கு வருகிறவர்கள்  மேல தான் எல்லாம் வெறுப்பும் பரப்பப்படுது.

சீமானுக்கு என்ன தான் பிரச்சனை னு தெரியல. ஐயா நல்லக்கண்ணு   மாதிரி நல்ல தலைவர் யாரு இருக்கா  னு கேக்குறவர். விஜயகாந்த் தலைமைய மக்கள் நல கூட்டணி தேடி போய் ஏற்பதற்கு முன்னால் ஐயா நல்லக்கண்ணு தலைமையில் இரு பெரும் கட்சிகளுக்கு எதிரா ஒரு சக்திவாய்ந்த கூட்டணி அமைக்க முற்பட்டிருக்கலாம். ஆனால் ,அவரோ விஜயகாந்த் கையில ஆட்சி கொடுத்துட்டு இருப்போம் நினைக்கிறீங்களா னு மேடைல வசனம் பேசிட்டு இருந்தார். எப்பவும் மூணாவது இடத்துக்கு போட்டி போட்டு போகாத ஊருக்கு பொய்யா வழி சொல்லிக்கிட்டு இருக்கார். அவரு பின்னாடி இருக்க கூட்டம் தமிழ் படிக்கிற மாதிரி எல்லாம் தெரியல,ஒன்லி மீம்ஸ் அண்ட் சமூக வலைத்தள வீடியோஸ். இன்னும் மூணு தேர்தலுக்கு அப்புறம் அவங்க அண்ணனுக்கும் 70 வயசு ஆயிடும் அது வரை இப்படியே தான் இந்த வண்டி ஓடும்னு யாருக்கும் புரியல.

இப்படி கூட்டத்திற்கு முன் ஐயா தமிழருவி மணியன் மட்டுமில்லை,பதவி கிடையாது; பணம் சம்பாதிக்க முடியாது; நான்(ரஜினி) முதலமைச்சர் இல்லைனு இவ்வளவும் சொன்ன பின்னாடியும் உங்களுக்காகவோ நாட்டுக்காகவோ  வேலை பார்த்தவங்க, பேசினவங்கனு எல்லாரும் தலை குனிச்சு நிக்கிறோம்.அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.

போர் வரமா இல்லை. நீங்க அரசியலுக்கு வருவது உறுதி னு சொன்னப்பவே சொல்ல போனா அதுக்கும் முன்னாடியே நம்ம மேல, இந்த அன்பு சாம்ராஜ்யம் மேல தாக்குதல் நடக்க ஆரம்பிச்சுருச்சு.3 வருஷமா நீங்க வந்தா நல்லது நடக்கும் னு நம்பின ஒவ்வொருத்தரும் சண்டை செஞ்சுகிட்டு தான் இருக்கோம். வேங்கை மவன் தனியா நின்னீங்க. ஆனால், தனி ஆளா நிக்கல.you left us in the middle of battle. எங்களுக்கு இழப்பு ஏற்பட கூடாது அதுனால விலகுறேனு காரணம் சொல்றீங்க. தமிழகம் இழக்க ஒன்றுமில்லை. கடந்த 25 வருடங்களில் ரஜினி வந்தா மாற்றம் வரும்னு நம்பிட்டு இருந்த ஒவ்வொருத்தரோட நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமா உடைச்சு மூணு நாளு  முன்ன மொத்தமா  முடிச்சு விட்டுருக்கீங்க.

மக்களுக்கு தான் புரியனும் அரசியலுக்கு வருவேனு ஒருத்தர் சொன்னவரை திட்டினவங்க எல்லாம் இன்னிக்கு சந்தோச படுறாங்க அவர் அரசியலுக்கு வரணும்னு ஆசைப்பட்ட நம்ம அவரை திட்ட ஆரம்பிச்சுருக்கோம் அப்ப,

 அவர் இல்லைனா;

ரஜினி இல்லைனா;

 அரசியல் அப்படியே தான் இருக்க போகுது னு புரிஞ்சுக்கணும். ஆனா, இனி யார்கிட்ட போய் புரிய வைக்கிறது, உங்க ரஜினி இருக்காரானு கேட்பாங்க.காரணம், எங்க ரஜினி ஜெயிச்சு மட்டும் தான் அவரை வெறுக்குறவங்க கூட பாத்து இருக்காங்க.விளையாடாமையே விலகுறது எப்படி ரஜினியா இருக்க முடியும்!

நீங்க, அரசியலுக்கு வருவது உறுதி சொன்ன நாள்ல  இருந்து உங்க நடவடிக்கை திட்டம் எல்லாம் கேட்டு, இது தான் எனக்கு வேணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்படி ஒரு பார்வை; அப்படி ஒரு நிதானம்;அப்படி ஒரு திட்டமிடுதல். உங்க ஒவ்வொரு நகர்வுகளையும் பார்த்து சிலிர்த்து போனேன்.

என்னைய மாதிரி இளைஞர்கள் அரசியலுக்குள்ள கால்  வைக்கவே முடியாது நினைச்சப்ப ,NRIs எல்லாம் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வேணாம்  னு உதறி தள்ளிட்டு வர காத்திருக்காங்க சொல்லி உங்க மூலம் ஒரு வாய்ப்பு வரும் னு எதிர்பார்க்க வச்சீங்க. இப்ப நீங்களே அதை இல்லை னு ஆக்கிட்டீங்க.இது நம்பிக்கை துரோகம் இல்லையா.இப்ப எந்த குற்றஉணர்ச்சியும் இல்லாம இருக்க முடியாம உங்களால?

இன்னிக்கு மூணாவது நாள் ,உயிர்த்து எழுந்து வாருங்கள் ரஜினியாரே!

நீங்க வந்தா மட்டும் போதும்.வீட்டுக்குள்ளயே இருந்து வழி நடத்தினா போதும். நீங்களா இறங்காம நீங்க காட்டுற எந்த கட்சிக்கும் ஓட்டு விழுகாது.நீங்க முதலமைச்சர் வேட்பாளரா இருக்க மாட்டேன் வேற சொன்னீங்க. ஆனா, நீங்களும் அமைச்சர்களில் ஒருவரா உள்ள வந்தா தான் மாற்றம் சாத்தியப்படும் நீங்க காட்டுற முதலமைச்சர் வேட்பாளர் மேல ஒரு நம்பிக்கை வரும் வரை நீங்க கூட வந்தா மட்டும் போதும்.

கிருஷ்ணராக இருங்கள் எங்களுடன்.அர்ஜுனர் அர்ஜுனனாகவே இருக்கட்டும்.நான் தர்மனாக வர தயாரா இருக்கேன்.என்னை போல் இன்னும் பல இளைஞர்கள் நீங்க சொன்ன அந்த சின்ன ஹோப் க்காக காத்துகிட்டு இருக்காங்க.

போரில் இவ்வளவு நாள் போராடின ரசிகர்கள் விரும்புவது,மூன்று நாள் முன்னதாக மரித்துப்போன எங்களின் ஒரே ஒரு ராஜா மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து அவர்கள் முன் தோன்றினார் என்கிற செய்தியையே.

Pirates of Caribbean திரைப்படத்தில் ஒரு காட்சி, அந்த தண்ணிய குடிச்சா நீண்ட நாள் உயிரோடு இருக்கலாம்னும் அது இருக்கும் இடமும் உங்களுக்கு தெரியும். அப்பறம் ஏன் நீங்க அதை தேடி போகலை னு மகன் கேட்பான். அதற்கு தந்தை , எத்தனை  வருடம் உயிரோடு இருந்தோம் என்பதை விட எத்தனை வருடம் நாம் நாமாகவே இருந்தோம் என்பது தான் முக்கியம் என்பது போல பதிலளிப்பார்.

 மூன்று நாள் முன்னர் வரை ரஜினி, ரஜினியாகவே தான் இருந்தார்.இன்று மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து வாருங்கள் ரஜினியாரே!ஏனென்றால், ரஜினியால் மட்டுமே முடியும். உயிர்த்து எழுந்துவருவதற்கும் மாற்றத்தை சாத்தியப்படுத்துவதற்கும்.

44 ஆண்டுகாலம் உங்களை வெற்றி பெறச் செய்த தமிழகம் தோற்று கொண்டே இருக்கின்றது.ஒரே ஒரு முறை ரஜினியாக உயிர்த்தெழுந்து வந்து தமிழகத்தை ஜெயிக்க வைத்துவிட்டு நீங்கள் சிவாஜி ராவாக இன்னும் 100 வருடம் மகிழ்வுடன் இருங்கள். அப்படிச்செய்தால் தமிழகம் இருக்கும் வரை ரஜினிக்கும் சிவாஜி ராவிற்கும் முடிவென்பதே இருக்காது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *