பொதுவாக ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் எல்லோரும் என்ன செய்வார்கள்?

பொய் சொல்வார்கள்.

ஏமாற்றுவதில் பிரதானமாக இருப்பது பொய் தான். அப்படியிருக்க இதென்ன ஏமாற்றும் உண்மைகள்!

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு ‘deception’. இந்த வார்த்தைக்கு ஏமாற்றுவது என்பதை விட, பொய்யை உண்மை என நம்ப வைப்பது என்னும் அர்த்தமே சரியானது.

ஒரு உண்மையைச்  சொல்லி, ஒரு பொய்யை, உண்மை என நம்ப வைப்பதற்கு பெயர் எதுவும் இருக்கின்றதா?

ஒரு பொய்யை உண்மை என நம்ப வைக்கும் அந்த உண்மையைத் தான்  நாம், ஏமாற்றும் உண்மைகள் என்று குறிப்பிடுகிறோம்.

Deceptive facts.

எதையும்  தெளிவாக புரிந்து கொள்ள நமக்கு உதவுவது, உதாரணம்.

இன்று நாம், deceptive facts க்கு நிறைய உதாரணங்களைப்  பார்க்க போகிறோம்.

சமூகத்தின் மீது வைக்கப்படும் பொதுவான ஒரு குற்றச்சாட்டு, “மக்கள் காசை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டார்கள்” என்பது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், R.J .பாலாஜி அண்ணண்  மாதிரியான அறிவாளி பிரபலங்கள், இன்னும் எத்தனையோ பேர் இந்த குற்றசாட்டை வைக்காமல் இல்லை. இந்த குற்றச்சாட்டை வைக்கும் பக்கத்து தெரு நாராயணன், அடுத்த தெரு நமச்சிவாயம் என்று  எல்லோரும் இரண்டு விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.

1.நாராயணன்,நமச்சிவாயம், R.J. பாலாஜி, அரசியல்வாதிகள்,ஊடகவியலாளர்கள்,என்று எல்லோரையும் உள்ளடக்கிய எல்லோருக்குமான பொதுப்பெயர் தான், ‘மக்கள்’ என்பதை மறந்துவிடுகிறார்கள்.

2.   ‘மக்கள் காசை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டார்கள்’ என்பது ஒரு deceptive fact.

எப்படி?

எப்படியும் வாக்களிக்கப்போகிற ஒருவனுக்கு காசை கொடுத்த்துவிட்டு அவன் காசு வாங்கிக்கொண்டு வாக்களித்தான் என்னும் பொழுது அது உண்மை தானே?

இந்த உண்மை சில பொய்களை  உண்மை என்று நிறுவுகிறது.

“காசு தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கின்றது;

மக்கள் வாக்களிக்க காசு வாங்குகிறார்கள்;

காசு வாங்கிக்கொண்டு யாரிடம் காசு வாங்கினார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களிக்கிறார்கள்.” இதெல்லாம் அந்த உண்மை நிறுவும் பொய்கள்.

காசு வாங்கியிருக்காவிட்டாலும் கூட மக்கள் வாக்களிக்கவே செய்வார்கள்.

தேர்தல் வெற்றியை பணம் நிச்சயமாக தீர்மானிப்பதில்லை, போட்டியிடும் கட்சிகளும்,காலச்சூழல்களும்,ஓட்டை பிரிக்கும் கட்சிகளுமே தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கின்றது.

காசு வாங்கியிருந்தாலும் கூட காசு கொடுத்தவர்களுக்கே தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை உண்மை என்று யாராலும் நிறுவ முடியாது.

இப்பொழுது அடுத்த உதாரணத்தை பார்க்கலாம்.

“chai with chitra” என்கிற பிரபலமான youtube நிகழ்ச்சியில். இயக்குனர் கரு.பழனியப்பன், ‘2G வழக்கே ஒரு பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையிலான வழக்கு; 2G ஏலத்தில் அரசுக்கு இத்தனை கோடி நட்டம் என்ற வினோத் ராய் இன்று வந்து மன்னிப்பு கேட்கிறார்.இப்ப வந்து மன்னிப்பு கேட்டு என்ன செய்ய? ஆட்சி மாறிடுச்சு எங்களை பல வருஷம் பின்னோக்கி கொண்டு போய்டுச்சு இந்த அரசு, இனி மன்னிப்பு கேட்டு என்ன செய்ய” என்றெல்லாம் பேசினார்.

அவர் பேசியதை யார் கேட்டாலும், 2G ஏலத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை தான் போலும், அரசுக்கு அதில் நட்டம் என்று குறிப்பிட்ட வினோத் ராய் கூட மன்னிப்பு கேட்டு இருக்கின்றார் என்றால். அரசுக்கு வருவாய் இழப்பும் கூட இல்லை போலும் என்று நினைத்து விடுவார்கள். கரு.பழனியப்பன் போல,இன்னும் பலர், வினோத்ராய் மன்னிப்பு கேட்டதை குறிப்பிட்டு இப்படியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

வினோத் ராய்,மன்னிப்பு கேட்டார் என்பது ஒரு deceptive fact- பொய்களை உண்மை என நம்ப வைக்கும் ஒரு உண்மை.

வினோத் ராய் மன்னிப்பு கேட்டாரா? கேட்டார்.

ஒரு நேர்காணலில்,வினோத் ராய் அவர்கள், காங்கிரசை சேர்ந்து சஞ்சய் நிரூபம் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து, 2G அலைக்கற்றை விவகாரம் சார்ந்த அறிக்கையில், பிரதமரின் பெயர் சேர்க்கக்கூடாது என்று எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என்று சொல்லியிருந்தார்.

அதனை தொடர்ந்து,சஞ்சய் நிரூபம் தொடுத்த அவதூறு வழக்கில் தான் வினோத் ராய் மன்னிப்பு கேட்டு இருந்தார். நேர்காணலில் இப்படியான விஷயங்களை பகிர்ந்துகொள்ள எந்த ஒரு சாட்சியும் ஆதாரமும் தேவை இல்லை, ஆனால், நீதிமன்றத்தில் நிச்சயமாக ஆதாரம் தேவைப்படும். அந்த தருணத்தில், வினோத் ராய் க்கு மன்னிப்பு கோருவதை தவிர வேறு வழி இருந்திருக்க வாய்ப்பும் இல்லை.

எந்த இடத்திலும்,வினோத் ராய், ‘2G ஒதுக்கீடு நியாமான முறையில் தான் நடந்தது; என்னுடைய தணிக்கை அறிக்கையில் நான் தவறு செய்துவிட்டேன்’ என்று கூறி மன்னிப்பு கேட்கவில்லை. அதோடு 2G வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றது.

அடுத்த உதாரணம், கரண்ட் ட்ரென்ட்க்கு(current trend) வருவோம்.

எப்பொழுதுமே கரண்ட் ட்ரெண்ட் இல் இருப்பது பெட்ரோல் விலை.

சமீபத்தில், பெட்ரோல் மீதான வரியை குறைத்த மத்திய அரசு மாநில அரசுகளை பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க கேட்டுகொண்டாதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து,எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் சொன்னது,“எப்போதும் மத்திய அரசு வரி குறைக்கப்படும்போது மாநில வரியும் தானாக குறையும். எனவே, மத்திய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு”. இதனால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு என்றும் பேசியிருந்தார்.

இதே கருத்தை தான், நிதியமைச்சர் தியாகராஜன் அவர்கள்,  இந்தியா டுடே க்கு அளித்த பேட்டியில் மூச்சு இறைக்க சொல்லி, தமிழகம் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகிறது. வரி குறைப்பதை பற்றியோ அதிகரிப்பது பற்றியோ மத்திய அரசு எங்களுக்கு அறிவுறுத்த வேண்டாம் என்றெல்லாம் காட்டமாக பேசியிருந்தார்.

ஆட்சிப்  பொறுப்பேற்றவுடன், மறைமுக வரிவிதிப்பையும் பெட்ரோல் மீதான வரிவிதிப்பையும் ஏகத்துக்கு சாடியிருந்த அவரே தான், பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை குறைத்தால் வருமானம் பாதிக்கப்படும் என்கிறார். அவரின் கூற்றுப்படி மத்திய அரசின் மறைமுக வரி பொருளாதாரத்தை பாதிக்கும், ஆனால்,மாநில அரசு மறைமுக வரிகளை குறைக்கவேண்டியதில்லை.

தமிழகம்,புள்ளியியல் அடிப்படையில், பணவீக்கம் போன்ற பல விஷயங்களில் முன்னனியில் இருக்கின்றது என்று பெருமை பேசும் அவரே தான் வருமான பற்றாக்குறைக்கு அ.தி.மு.க. அரசை சாடுகிறார்.

இரண்டுமே உண்மை என்றாலும் அவரின் கூற்றுப்படி தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு முந்தைய ஆட்சி காரணம் இல்லை வருமான பற்றாக்குறைக்கு மட்டும் முந்தைய ஆட்சி காரணம்.

மத்திய அரசு வரியை குறைத்தால் மாநில அரசின் வரியும் தானாக குறையும், 2014இல் இருந்ததை விட பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி அதிகமாகவே இருக்கின்றது என்றெல்லாம் பேசும் அரசியல்வாதிகள், நிச்சயம் உண்மையையே தான் பேசுகிறார்கள். 2014 இல் இருந்ததை விட மத்திய அரசு விதிக்கும் பெட்ரோல் மீதான வரி அதிகமாகவே இருக்கின்றது என்றும் சொல்லிகொள்ளவார்கள். அப்படி என்றால்,2014 இல் பெட்ரோல் மூலம் மாநில அரசுக்கு கிடைத்த வருமானத்தை விட தற்போது அதிமாக தானே கிடைக்கிறது.அதை ஏன் கொஞ்சம் குறைத்துக்கொள்ள கூடாது.

சரி, மத்திய அரசு வரி குறைத்தால் மாநில அரசின் பெட்ரோல் மீதான வரி எப்படி தானாக குறையும்.

பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் VAT =13%+11.52 ரூபாய்.

நாம் முன்னமே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல,பெட்ரோல் மீதான வரியை எந்த அரசும் பெரிதாக குறைக்காது, அது நிர்வாக சிக்கல்களை உருவாக்கும் அதன் காரணமாகவே, தி.மு.க. வாக்குறுதியில் கூட 13% என்பதை 10% அளவிற்கோ 12% அளவிற்கோ குறைப்போம் என்று குறிப்பிடாமல்,5 ரூபாய் குறைப்போம் என்று சொல்லி 3 ரூபாய் குறைத்து இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் இந்த 2014ம் வருடத்தை கணக்கில் கொண்டால், இந்த 3 ரூபாய் வரி குறைப்பு பெரிய வருமான இழப்பு இல்லை தான்.

இப்பொழுது, ஒரு புரிதலுக்காக, மத்திய அரசின் வரியை சேர்த்து பெட்ரோல் விலை 50 ரூபாய் என்றால்.

50 ரூபாயில் 13% 6.5 ரூபாய் +11.52 ரூபாய்=68.02

மாநில அரசின் வரி வருமானம்=18.02

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை உயர்த்தும் பொழுது, இந்த 50 ரூபாய் 60 ரூபாய் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், மாநில அரசின் வரி வருமானம், 19.32 என்று உயரும்.

மத்திய அரசு வரியை உயர்த்தினால், மாநில அரசிற்கு  பெட்ரோல் மூலமாக கிடைக்கும் வரி வருவாய் தானாக உயரும் அது போலவே குறைக்கும் போது தானாக குறையும்.

மத்திய அரசை பொறுத்தமட்டில்,சர்வ தேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் பெட்ரோல் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருப்பதை தவிர்க்கவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய கடன் பத்திரங்களுக்கான தொகையை கொடுப்பதற்கும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறையும் பொழுது வரியை உயர்த்தி, கடன் பத்திரங்களை ஈடு செய்தும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கூடும் பொழுது வரியை ஓரளவு குறைத்து, பெட்ரோல் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்களுக்கு இடம் தராமல் இருக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள்.நிர்வாகம் இப்படி தான் நடக்கின்றது.

இதில் மாநில அரசுகளை, வரியை குறைக்க சொல்லி கேட்டுக்கொண்டதில் தவறு ஏதும் இல்லை. மாநில அரசுகளை பொறுத்த வரையில் பெட்ரோல் மீதான வரி வருமானத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும். அதாவது,மத்திய அரசின் வரியை சேர்த்து 50 ரூபாய் பெட்ரோல் விலை என்று எடுத்துக்கொண்டால்,50 ரூபாயில் 13% 6.5 ரூபாய் +11.52 ரூபாய்=68.02

மாநில அரசின் வரி வருமானம்=18.02

மத்திய அரசின் வரியோடு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் பொழுது, வரி வருமானம், 18.02 ரூபாய் இல் இருக்கும் படிக்கு அவர்கள் வரியை குறைக்கலாம்.அதை வருமான இழப்பு என்று சொல்ல முடியாது.

2014க்கு பின்னர், மத்திய அரசு வரியை அதிகம் உயர்த்தி இருக்கின்றது என்ற குற்றசாட்டு உண்மை என்றால், மாநில அரசின் VAT சதவீதத்தில் எந்த மாற்றமும் செய்யாத மாநில அரசின் வரி வருமானமும் தானாக உயர்ந்து இருக்கின்றது என்று தானே அர்த்தம். இதை முதல்வரும், மாநில நிதி அமைச்சருமே கூட ஒப்பு கொண்டு இருக்கின்றார்கள். வரி வருமானத்தை சீராக வைத்து மாநில வரியை குறைத்து இருக்க முடியும் தானே!

இங்கே கவனிக்க வேண்டியது, வரிக்குறைப்பு எந்த ஒரு அரசுக்கும் சுமையையே தான் ஏற்படுத்தும், அரசை அரசியல்வாதிகள் நடத்தினாலும் அரசு மக்களுடையுது. இலங்கையின் இன்றைய நிலைக்கு வரி குறைப்பு தான் மிக முக்கிய காரணம்.

நிர்வாக சிக்கல்களை நேர்மையாக மக்களுக்கு எடுத்துச்ச்சொல்லி, ஆக்க பூர்வமாக என்ன செய்யமுடியும் என்று இல்லாமல், சில உண்மைகளை கொண்டே மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த TAX structure ஐ எப்படி எளிமைப்படுத்தலாம் என்கிற இந்தியா டுடே நிருபரின் கேள்விக்கு கடைசிவரை மாநில நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை.

படித்தவர்கள் எல்லாம் intellect இல்லை. intellects இல் பலர் படிக்காதவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். நம் நிதிஅமைச்சரை படித்த நிர்வாக திறனுள்ள intellect என்று நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அவர் தன்னுடைய வேலையில்  நேர்மையானவராகவும் வெளிப்டையானவராகவும் இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? என்னும் கேள்வியையே  அவருடைய அநேகமான பேட்டிகள் நமக்கு தருகிறது.

நிர்வாக சிக்கல்களை நேரடியாக மக்களுக்கு புரிய வைத்து, தங்களின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி ஆட்சி செய்யும் கட்சியாக அரசியல் கட்சிகள் மாறாத வரை சமூகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை.

ஆங்கிலம் பேசும் நிதியமைச்சர்,வெளிநாட்டு வங்கிகளில் வேலைபார்த்த நிதியமைச்சர் என்று பெருமைப் பட்டு கொள்வதில் என்ன இருக்கின்றது. 2014ஐ விட மத்திய அரசின் வரி அதிகம் தான் என்றால், மாநில அரசின் வரி வருமானமும் அதிகரித்து தானே இருக்கின்றது என்கிற கேள்வியை தான் நாம் வைக்கவேண்டும். ஒப்பீட்டளவில், அதிகரித்த வரி வருமானத்தை விட இந்த 3 ரூபாய் வரி குறைப்பு மாநில அரசிற்கு இழப்பு என்று கூறுவது சரியா என்கிற கேள்வியை வைக்க வேண்டும். நமக்கு பா.ஜ.க. பிடிக்காது என்பதற்காகவும்,அவர் சொல்லும் DATA  உண்மை என்பதற்காகவும்,ஆங்கில ஊடகங்ளின் விவாதத்தில் aggressive ஆக பேசுகிறார் என்பதற்காகவும் மட்டும் அவர் பேசும் எல்லாம் சரி என்று ஆகி விடாது.

உண்மைகள் வைத்து உங்களை ஒருவர் ஏமாற்ற இடம் தருவது மேல் சொன்ன காரணிகளே.

Do not fall for a deceptive fact. ஏமாற்றும் உண்மைகள் தொடரில் இது போன்ற இன்னும் பல விஷயங்களை அலசலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *