திருமதி.லீலாவதி. நீங்கள் மதுரையை சேர்ந்தவர் என்றால், நிச்சயம் இந்த பெயர் உங்கள் காதுகளை எட்டியிருக்கும். அதற்கு நீங்கள் செய்திகளை வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருக்க வேண்டியதில்லை. உங்கள் ஊர் மதுரை என்றால்; ‘லீலாவதி’ என்கிற பெயர், நிச்சயம், உங்கள் நினைவின் ஒரு மூலையில் பதிந்து இருக்கும். அந்த பெயர், உங்களுக்குள் ஒரு பயத்தையும் கூட விதைத்து இருக்கும்.
சமூக ஊடங்களின் வளர்ச்சிக்கு முன்னர், சாமானியர்கள்; பொதுவில்; பொதுவெளியில் அரசியல் பேசக் கூட கூடாது என்கிற பயத்தை நம்மை அறியாமலே நமக்குள் விதைத்த பெயர்களில் ஒன்று, ‘லீலாவதி’.
எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும். காற்றுவாக்கில் என் காதுகளை எட்டிய செய்தி, ‘லீலாவதியை கொலை செய்து விட்டார்களாம்’.
சம்பவம் நடந்தது வில்லாபுரம் என்றாலும் மதுரை முழுவதும் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்திய சம்பவம் அது.
அன்று இந்த சம்பவம் எத்தனை காதுகளை எட்டியதோ? தெரியாது. ஆனால்,அந்த அத்தனை காதுகளும், அதற்கு முன்னர், லீலாவதியைப் பற்றி கேள்விப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்பது மட்டும் தெரியும். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெயரை மதுரை மக்களில் ஒருவரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.
என்னை போன்ற இன்னும் பல சிறார்களின் மனதில் அரசியல்வாதிகள் என்றாலே சினிமாக்களில் காட்டும் கொலைகாரர்கள் போல தான் இருப்பார்களோ என்கிற பயத்தை விதைத்த சம்பவத்தில் பலியான பெயர்-லீலாவதி.
திருமதி. லீலாவதி பற்றி, தெரியாதவர்களுக்கு சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மிகவும் சாதாரணமான பின்னணியில் இருந்து வந்து, தான் வசித்த பகுதியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் அரசியல் ரௌடிகளின் அராஜகத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க வை எதிர்த்து உள்ளாட்சி தேர்ததலில் போட்டியிட்டு, கவுன்சிலராக வெற்றிப் பெற்று, அந்த வெற்றியை அராஜகமாக பறிக்க நினைத்தவர்களுக்கு எதிராக போராடி கவுன்சிலராகி, 6 மாதத்திற்குள் அவர் வார்டில் தண்ணீர் கொண்டு வர குழாய் வசதி அமைத்து தந்த ஒரு மிக சாதாரணமான அசாதாரண பெண்மணி.
அசாதாரணமான பெண்மணியாக இருந்தாலும் அவர் சாதாரணமானவர் தானே! பெரிய அரசியல் பின்புலம் இல்லை. ஜாதிய பின்புலம் இல்லை.பண பலமும் இல்லை.இப்படியான சாதாரணமானவர்கள் வாக்காளர்களாக மட்டும் தானே இருக்க வேண்டும்! அது தானே நியாயம். இவர்கள் எல்லாம் கவுன்சிலர் ஆகலாமா?தேர்தலில் போட்டியிட நினைக்கலாமா?
இவரை போலவே சாமானியர்கள் அரசியல் பேசினால்? அரசியலில் ஈடுபட்டு ஜெயித்து விட்டால்? சாமானியர்களுக்கு இந்த ஜனநாயகத்தில் வாய்ப்பு இருக்கின்றது என்றும் சாமானியர்கள் நினைத்தாலும் பெரிய மாற்றம் வந்துவிடும் என்றும் மக்கள் நம்பிவிட்டால்? மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வைத்து நாம் எப்படி பணம் சம்பாரிப்பது என்று நினைத்தார்களோ என்னவோ? அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.வை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்படுகிறார் திருமதி.லீலாவதி.
ஆயுதம் ஏந்திய ஆறு பேர் சேர்ந்து ஆயுதம் இல்லாத ஒரு பெண்ணை, நடந்து கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையானதை வாங்க சென்ற ஒரு கவுன்சிலரை வெட்டிக்கொன்றார்கள்.
இன்று கார் இல்லாத திராவிட கவுன்சிலர்களை பார்ப்பது மிகவும் அரிது. இன்று,லீலாவதி போன்று அதே வேகத்துடன், பெரிய திராவிட இயக்கங்களை எதிர்த்து ஒரு சாமானியர் அரசியலில் ஈடுபட முடியுமா? முடிந்தாலும் செய்வாரா? நிச்சயமாக இல்லை. இவர்களை எதிர்த்து பொது வெளியில் சத்தமாக பேசினாலே நம்மை கொன்று விடுவார்களோ என்கிற அச்சம் நிச்சயமாக இருக்கின்றது. அந்த அச்சத்தை இது போன்ற அரசியல் கொலைகளே தான் நமக்குள் விதைத்து இருக்கின்றது.அந்த அச்சமே “நாமெல்லாம் அரசியல் பேசி என்ன மாறிவிட போகிறது” என்கிற எண்ணத்தை நமக்கு கொடுத்து இருக்கின்றது. இது இப்படி தான் இருக்கும் என்று நாம் எல்லோரும் நம்ப தொடங்கி விட்டோம். ஏன் மாறாது? என்கிற எண்ணமே நமக்கு வருவதில்லை.
இந்த குமுறலை தான் 90கள் தொடங்கி ரஜினி வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார். சாதாரணமானவர்கள் தேர்தல் நின்னு ஜெயிக்க முடியாத நிலை அந்த அளவு சிஸ்டத்தை கெடுத்து வைத்து இருக்கின்றார்கள் என்று.
லீலாவதி கொலை செய்யப்பட்ட போது, மக்களிடம் வெளிப்பட்ட எழுச்சி தான் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தது. அந்த எழுச்சியை தான், ரஜினி, மக்களிடம் எதிர்பார்த்தார்.
நம்ம தான், “அரசியல் பேசி என்ன ஆக போகுது? ரஜினி வந்த மாறிடுமா? இது இப்படி தான் இருக்கும்” என்று வியாக்கியானம் பேசிக்கொண்டு இருக்கின்றோமே.எழுச்சி எங்கிருந்து வரும் போதாக்குறைக்கு கொரோனா வேறு.
மக்களின் எழுச்சியால் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிப்பதற்காகவே 2008 ல் 1404 கைதிகளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. அரசு விடுவித்தது.இன்று கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணி வைத்திருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு பெண்ணை வெட்டிக்கொன்ற ஆறு பேரை தி.மு.க. விடுதலை செய்த அதே 2008ம் ஆண்டு , சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 2002 குஜராத் கலவரத்தில், கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 11 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கின்றது.
எந்தவொரு கலவரத்தையும் ஆரம்பிப்பதும் அதை நடத்துவதும், சமூக விரோதிகளாக தான் இருக்கின்றார்கள். அவர்களை இந்து என்றோ முஸ்லீம் என்றோ, தமிழன் என்றோ அடையாளப்படுத்துவதை விட சமூக விரோதிகள் என்று அடையாளப்படுத்துவதே சரி. அப்படி அடையாளப்படுத்தியதற்கும் இந்த அரசியல் உலகம் ரஜினியை கேலி செய்தது.
குஜராத் கலவரத்தை பொறுத்த வரையில், சமூக விரோதிகளால், ஒரு இரயில் எரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அதற்கு பழி வாங்கும் பெயரில், ஒரு சமூக விரோத கும்பல் இரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்பு இல்லாத குடும்பங்களை அழிக்கின்றது. லீலாவதி கொலையை விட கொடூரமான சம்பவம், இந்த கலவரத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு 2008 இல் தண்டனை வழங்கப்பட்டது. அந்த குற்றவாளிகள், மாநில அரசின் கொள்கை படி தாங்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கின்றார்கள். முன்னதாக இந்த வழக்கு குஜராத்தில் நடந்தால் இதில் அதிகார தலையீடு இருக்க கூடும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது, அதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசிற்கு இல்லை என்று குஜராத் அரசு குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரிக்கின்றது.
குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தை நாடுகின்றனர். உச்ச நீதிமன்றம், குற்றம் நடந்தது குஜராத் என்பதால், குஜராத் மாநில அரசின் 1992 நிவாரண கொள்கையின்(remission policy) படி குஜராத் அரசே முடிவெடுக்கலாம் என்கிறது. அந்த கொள்கையின் படி வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கும் ஒரு குற்றவாளி குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டால் அவரை விடுதலை செய்ய பரிந்துரைக்கலாம். இந்த கொள்கை 2014 இல் திருத்தப்படுகிறது, அதன் படி சில வழக்குகள் மற்றும் சில குற்றங்களில் ஈடுபடுவோரை மாநில அரசின் கொள்கையின் படி விடுதலை செய்ய முடியாது. அதில் வன்புணர்வு குற்றமும் அடங்கும்.2014 இல் திருத்தப்பட்ட கொள்கையின் படி இந்த 11 பேரை விடுதலை செய்து இருக்க முடியாது.
outlook செய்தியின் படி, இந்த குற்றவாளிகள் தண்டனை பெற்ற பொழுது, நடைமுறையில் இருந்த திருத்தப்படாத (1992)கொள்கையின் படியே இவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசை வழிகாட்டியதாக தெரிகிறது.
லீலாவதி கொலை வழக்காகட்டும், குஜராத் கலவரத்தில் வன்புணர்வில் ஈடுபட்ட இந்த குற்றவாளிகள் ஆகட்டும்,முன்னாள் பிரதமர் இராஜீவ் கொலை வழக்காகட்டும், குற்றவாளிகள், சட்டத்தின் படியே தான் தண்டனை பெற்றார்கள், சட்டத்தின் படியே தான் விடுதலை பெற்று இருக்கின்றார்கள். ஆனால், இதே இந்த சட்டத்தின் படி, குற்றவாளிகளிலும் சாமானியர்களாக இருக்கிறவர்களுக்கு இப்படி விடுதலை கிடைப்பதில்லை. சட்டம் மேற்சொன்ன ஒருவரையும் நிராபாரதி என்று சொல்லவில்லை. ஆனால், தண்டனை கொடுத்து தண்டனைக்கு முன்னரே விடுவிக்கவும் வழி வகுக்கின்றது.
இதில் ஒவ்வொரு விடுதலையையும் ஒவ்வொரு கூட்டம் கொண்டாடி இருக்கின்றது. கொண்டாடுகின்ற கூட்டத்தை கீழே இருக்கும், சாமானியர்களாகிய நாமும் அவர்களின் பின்னால் ஒவ்வொரு கூட்டமாக பிரிந்து கொண்டாடி கொண்டு இருக்கின்றோம். இது என்ன மாதிரி system ! இதை அரசியல்வாதிகள் தங்கள் லாபத்திற்காகவே தான் இப்படி கெடுத்து வைத்து இருக்கின்றார்கள். இதை ஒருத்தன் பேசினா அவன் தமிழனா என்று முறுக்கி கொண்டு நிற்கிறோம்.
இங்கு மாற்று கட்சிகள் இருக்கின்றதே தவிர மாற்று அரசியலை முன்வைக்கின்ற கட்சிகள் நிச்சயமாக இல்லை. தமிழக பா.ஜ.க. தலைவர், பேரறிவாளன் விடுதலையின் போது, “நீதிமன்றம் சட்டத்தின் படி ஒரு தீர்ப்பு அளித்து இருக்கின்றது. அதை நாங்கள் ஏற்கின்றோம். அதே வேளையில், அவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்கவில்லை” என்றார். இந்த குஜராத் கலவரத்தில் தொடர்புடைய 11 பேர் விடுதலைக்கும் அவர் இதே பதிலை தான் சொல்வார். சட்டத்தின் படியே நடந்த இந்த விடுதலைகளில் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடிய கட்சிகள்,லீலாவதி கொலை குற்றவாளிகளை விடுவித்து பதவி கொடுத்தாக அறியப்படும் கட்சிகள் சட்டத்தின் படியே விடுதலை செய்யப்பட்டு இருக்கும் 11 பேர் க்கு எதிராக போர் கொடி தூக்கி நிற்கின்றது.
ஒரு பக்கம் கொண்டாடுவதும்; ஒரு பக்கம் எதிர்ப்பதுமாக இருந்தால்,சட்டத்தில் உள்ள இந்த குறைகளை யார் தான் சரி செய்வது. என்ன தண்டனை பெற்றாலும், அரசியல் பின்புலம் இருந்தால் இப்படியான விலக்குகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சிகள், குற்றவாளிகளின் கூடாரமாகவும், அவர்களுக்கும் கேடயமாகவும் தானே இருக்கின்றது!
தமிழகத்தில் தி.மு.க.விற்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தி கொள்ளும் பா.ஜ.க. தி.மு.க.வின் வழியையே தான் பின்பற்றுகிறது.
வித்தாயசம் ஒன்று தான். தி.மு.க. ஹிந்துக்களுக்கு எதிரான, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான ,சாமானியர்களுக்கு எதிரான அராஜகத்திற்கு ஆதரவான கட்சி. பா.ஜ.க. ஹிந்துக்கள் பெயரை வைத்துக்கொண்டு அராஜகம் செய்பவர்களுக்கு ஆதரவான கட்சி.
இங்கே மக்களாகிய நாம்,மாற்று அரசியலை முன்வைக்கின்றவர்கள் பின்னால் எழுச்சி கொண்டு ஒரு அணியில் திரள தவறிவிடுகிறோம்.மாறாக அவர்களை தான் நாம் கேலிக்கு உள்ளாக்குகிறோம்.அரசியல் பேசுவதையே தவிர்க்கும் நாம் எப்படி எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு அணியாக எழுச்சி கொள்வோம்?
உடனே! மாற்று அரசியலை முன்னெடுக்க தான் அண்ணன் சீமான் இருக்கிறாரே என்று கிளம்பிவிடாதீர்கள் தம்பிகளே! திராவிட கட்சிகளின் நீட்சியாக திராவிட கட்சிகளுக்காக வெளியில் இருந்து வேலை செய்கிறவர் அவர் என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.
யாரைத் தான் ஆதரிப்பது என்று கேட்டால், விதியென்று இவர்களில் ஒருவருக்கு தான் நாம் வாக்களிக்க வேண்டும்.ஆனால், ஒரே கட்சியை எதற்கெடுத்தாலும் எதிர்க்கவோ, அல்லது ஒரு கட்சி, என்ன செய்தாலும் ஆதரிக்கவோ செய்யாதீர்கள். இந்த மனநிலை எல்லார் மனங்களிலும் வந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம் ஆகும்.