ஒருவன் எப்போது வலிமை பெறுவான்? தன் குறைகளை தானே கண்டறிந்து;தானே களைந்து; தானாகவே ஒரு மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக்கொள்ளும் பொழுது தான் அவன் மேலும் வலிமை அடைவான். இது ஒரு தொடர் பயிற்சியாக இருக்க வேண்டும்.இதை தொடர் பயிற்சியாக கொண்டவர்களே வலிமையானவர்களாக எப்போதும் இருக்கின்றார்கள்.
ஒரு சமுதாயமும் வலிமையான சமுதாயமாக உருவெடுக்க அது தொடர்ந்து தன் குறைகளை கண்டுகொண்டு களைவது அவசியமாகிறது.ஆனால், இங்கே குறைகளை கண்டு கொள்வதென்பதே சிக்கலாக இருக்கின்றது.
உட்சமுதாய மோதல்கள் என்பது பல விதங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று வரை தொடர்ந்து வருகின்றது.சரி, உட் சமுதாய மோதல் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?
பாரதம் முழுவதையும் ஒரு சமுதாயமாக எடுத்துக்கொண்டால் மாநிலங்களுக்கு இடையேயான வார்த்தை மோதல்கள்; மனதளவிலான வேற்றுமை எண்ணங்கள் கூட உட்சமுதாய மோதல்களே. ஒரு மாநிலத்தை எடுத்துக்கொண்டால் அதே மாநிலத்தை சேர்ந்த மக்கள் குழுக்களுக்குள் இருக்கும் பிரிவினை எண்ணங்களும் அது சார்ந்து எழும் கருத்து மோதல்களும் கூட உட்சமுதாய மோதல்களே.இந்த மோதல்கள் சினிமா வரை நீண்டு இருக்கின்றது.
சமீப காலங்களில்,சமூகத்தின் ஏதேனும் ஒரு குழுவை சார்ந்த படங்கள் எடுக்கப்பட்டுவருவதும் அது சார்ந்த கருத்து மோதல்களும் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றது.இங்கே சில இயக்குனர்கள் மீது, இவர் படத்தில் ஜாதி பற்றிய விஷயங்களை மட்டுமே பேசுவார் என்னும் விமர்சனங்களும் கூட வைக்கப்படுகின்றது. அதோடு, ஒரு திரைப்படம் மற்றும் அந்த திரைப்படத்தின் கதையமைப்பு எப்படி உள்ளது என்பதை எல்லாம் விட்டு விட்டு இரு குழுக்களாக நின்று அந்த திரைப்படத்தை கொண்டாடுவதும் எதிர்ப்பதுமாகவே தான் நாம் இருக்கின்றோம்.
உதாரணமாக, இயக்குனர் ரஞ்சித் அவர்களின் படங்களை எடுத்துக்கொண்டால், படம் எப்படி என்பதையும், கதையின் போக்கும் எப்படி இருக்கின்றது என்பதையும் விடுத்து, ஒரு சாரார் அவர் திரைப்படம் எப்படி இருந்தாலும் கொண்டாடுவதும் மற்றொரு சாரார் விமர்சித்து வெறுத்து ஒதுக்குவதையும் பார்க்க முடிகிறது.
இயக்குனர் ரஞ்சித் அவர்களின் எல்லா திரைப்படங்களையும் நான் ரசித்தது இல்லை. நான் ரசிக்காத அவரின் திரைப்படங்களையும் பலர் வியந்து பல வகைகளில் பாராட்டி பேசுவதையும் எழுதுவதையும் என்னால் பார்க்க முடிந்தது.அதே வேளையில் வெறுத்து ஒதுக்கும் ஒரு சாராரையும் என்னால் பார்க்க முடிகிறது.
இது இரண்டுமே, ஒரு வகையான சார்பு நிலை மனநிலையே ஆகும். ஒருவரை அழைத்து ஒரு படத்தை காண்பிக்கும் முன் இந்த படத்தை பற்றி 100 நல்ல விஷயங்களை நீங்கள் சொல்ல வேண்டும் என்று சொன்னால் படத்தை பார்த்து விட்டு வரும் போது நிச்சயமாக அவர் அந்த படத்தின் ரசிகனாகி இருப்பார்.அதே நபரிடம் படத்தை காண்பிக்கும் முன் படத்தை பற்றி 100 கெட்ட விஷயங்களை சொல்ல வேண்டும் என்றால் படம் முடிந்து வரும் போது நிச்சயம் அந்த படத்தின் மீது அவருக்கு வெறுப்பு உண்டாகி இருக்கும்.
எந்த ஒரு முன்முடிவுமின்றி ஒரு படத்தை நாம் காணும் போது படத்தை பார்க்கின்ற அந்த நேரத்தில் நம்மை அந்த படம் என்ன செய்தது என்பதில் தான் ஒரு கதை அல்லது திரைப்படத்தின் வெற்றி என்பது இருக்கின்றது.
இயக்குனர் ரஞ்சித் அவர்களின் படங்களில் ஒரு முழு திரைப்படத்தையும் அயர்ச்சி இல்லாமல் ரசித்தேன் என்றால் கபாலி திரைப்படத்தை சொல்லலாம். மெட்ராஸ் திரைப்படத்தில் பல விஷயங்கள் ரசிக்கும் படியாகவும் சில காட்சிகள் அயர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்தது.
பொழுதுபோக்கு அம்சம் குறைவான; நீளமான; கதையின் போக்கில் தொய்வை கொண்ட படங்களால் இருந்தாலும் குறிப்பிட்ட கருப்பொருளை சார்ந்தே எடுக்கப்படும் அவரின் திரைப்படங்கள் சமூகத்திற்கு அவசியம் என்றே தோன்றுகிறது.அதற்கு காரணமும் இருக்கின்றது.
நாம் எல்லோரும் சமம் என்று வெளிப்பார்வைக்கு பேசிக்கொண்டு திரிந்தாலும் நாம் கவனிக்காமல் கடந்து செல்லும் விஷயங்களை அவர் படங்கள் நமக்கு எடுத்து காட்டுவதால் அவர் படங்கள் சமூகத்திற்கு அவசியமானதே.
நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவராக வேண்டும் இருந்தாலும் நிச்சயம் அங்கே பெரிய பணக்காரர்கள்,உயர்மத்திய வர்க்கத்தினர் அதிகம் வாழும் பகுதியையும் ஏழைகள் முக்கியமாக துப்பரவு பணியாளர்கள் வாழும் பகுதியையும் அடையாளம் கண்டுவிட முடியும். கே.கே. நகர் அண்ணா நகர் போன்ற பகுதிகளின் சாலை வசதிகளுடன் ஒப்பிடும் போது சமூகத்தின் ஒரு பகுதியினர் வசிக்கும் இடங்களில் ஆட்டோ செல்வதற்கு கூட வழியிருக்காது. இது போன்ற நிகழ்கால வேற்றுமைகளை சுட்டிக்காட்டும் படங்கள் நிச்சயம் சமூகத்திற்கு அவசியமானதே. ரஞ்சித் அவர்களின் படங்கள் அந்த வகையை சார்ந்ததாகவே இருக்கின்றது. அதே வேளையில் அது போன்ற படங்கள் அதிகம் வர வேண்டும் என்கிற கோஷமும் ஆசையும் மடத்தனமானது.
சமூகத்தில் இருக்கும் குறைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு திரைப்படம் எடுக்கும் போது,பெரும்பாலான நேரங்களில் அது வெகுஜன மக்களை கட்டிபோடுகிற திரைப்படமாக அமைவதில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன் ஜெய் பீம் படம் பார்த்தேன்.இரண்டே முக்கால் மணி நேரம் என்னை மொத்தமாக கட்டி போட்டு வைத்து இருந்தது.
நான் படித்த இடத்தில், கலியமூர்த்தி என்று ஒரு விரிவுரையாளர் இருந்தார். அவர் கற்றுக்கொடுக்கும் பாடத்தில்,சுவாரசியமாக எடுத்து சொல்ல எதுவும் இருப்பதில்லை. துளியும் சுவாரஸ்யமில்லாத ஒன்றை எடுத்து சொல்லும் போது எல்லோரையும் கட்டிப்போட்டு கவனிக்க வைப்பதை விட கடினமான பணி எதுவும் இருக்க முடியாது.ஆனால்,அவர் செய்தார். இனியும் செய்வார்.”இங்க என்ன நடக்குது நான் என்ன சொல்லறேன்னு கவனி” என்று சத்தமிடுவார். அந்த சத்ததில்லேயே அனைவரது மனமும் ஒடுங்கிவிடும். ஒரு நாள் 200 பேர் கொண்ட வகுப்பில் அவருடைய குரல் மட்டுமே எல்லோர் மனதிலும் ஓலித்து கொண்டு இருந்தது.கட்டிபோடுவது என்பதில் இங்கே மனதை கட்டிபோடுவதை தான் குறிப்பிடுகின்றோம்.
அவரிடம் ஒரு கோபம் இருக்கும், நம் கற்றுக்கொடுப்பதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை அவரிடம் இருக்கும். இது எல்லாம் சேர்ந்து அவரிடம் இருந்து வெளிப்படும் ஆற்றல் 200 பேர் என்ன ஆயிரம் பேரை கூட கட்டிப்போட்டு கவனிக்க செய்யும்.
இயக்குனர் T.J.ஞானவேல் அவர்களிடமும் அந்த கோபமும் அக்கறையும் இருக்கின்றது.”இங்க என்ன நடக்குது னு பார்” என்று நாமும் இருக்கும் இதே நிலத்தில் நமக்கு அருகில் நடந்த விஷயத்தை; இன்றும் கூட மாறாத விஷயங்களை; அவர் சொன்ன விதம் நம்மை அதட்டி உட்கார வைத்து சொன்னது போலவே தான் இருக்கின்றது.
படம் பார்த்தவுடன் படத்தை பற்றி எதுவும் பேசவோ எழுதவோ தோன்றவில்லை. படம் ஏற்படுத்திய தாக்கம்; T.J.ஞானவேல் அவர்கள் கதை சொன்ன விதம் அத்தகையது.குறிப்பிட்ட சமூகம் சார்ந்த படமாகவோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தை குறை கூறும் படமாகவோ இந்த படத்தை வரையறை செய்துவிட முடியாத வகையில் படத்தை எடுத்ததற்காக அவருக்கு நம் குழுவின் வணக்கங்கள்.
ஆனாலும், அப்படி வரையறுத்து விமர்சிப்பதையும் சிலர் செய்துகொண்டு தான் இருக்கின்றார்கள்.
அவர்களையும் சேர்த்து நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது,”ஜெய் பீம், சமுதாயத்தின் மிக பெரிய குறையையே தான் சுட்டிக்காட்டி இருக்கின்றது. இத்தகைய குறைகளை களையாமல் ஒரு சமுதாயம் வலிமையான சமுதாயமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை”என்பதை தான்.
நம்முடைய சமுதாயத்தில் இப்படியும் மக்கள் இருக்கின்றார்கள் அவர்கள் இத்தனை கஷ்டங்களை கொண்டிருக்கின்றார்கள் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதை ஒருவர் சுட்டிக்காட்டும் பொழுது நிச்சயம் அதை நாம் ஒதுக்கிவிடக்கூடாது.
ஒரு திரைப்படமாக, “படத்தில் இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு” என்று படம் பார்க்கும் எவரின் கவனமும் தனித்தனியே எதையும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை கட்சிதமாக இசை, ஒளிப்பதிவு என்று அத்தனையும் கதையோடு ஒன்றியிருக்கின்றது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அத்தனை பேர் நடிப்பும் சிறப்பாகவே இருந்தது.அதில் நிச்சயம் நடிகர் மணிகண்டன் அவர்களையும் சூர்யா அவர்களையும் தனியாக எடுத்து சொல்லலாம்.
நடிகர் சூர்யா இந்த கதையை தேர்வு செய்தாரா? அல்லது இயக்குனர் அவரை தேர்வு செய்தாரோ? தெரியவில்லை.சூர்யாவின் குரல் அந்த வக்கீல் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தி அத்தனை வலு சேர்த்து இருக்கின்றது. “குரு” திரைப்படத்தின் climax காட்சியை நான் பெரிதும் ரசித்து இருக்கின்றேன். அதற்கு மிக முக்கிய காரணம், அந்த காட்சியின் வசனத்திலும்; அந்த வசனத்தை உச்சரிக்கும் குரலிலும் இருந்த கனம். நம்முடைய குரலுக்கு அத்தனை சிறப்பும் கனமும் இருக்கும் பொழுது அதை எதற்காக பயன்படுத்துகிறோம் என்னும் கவனம் அவசியமாகிறது.நடிகர் சூர்யா அவர்கள் எதிர்காலத்தில் இன்னும் கவனமாக அவரின் குரலை பயன்படுத்துவார் என்று நம்புகிறேன்.
லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் அவர்கள் இந்த படத்திற்காக தங்களையே மாற்றிக்கொள்ள முன்வந்ததற்கு நம் பாராட்டுக்கள். அவர்களின் நடிப்பு பயணம் மேம்படவும் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
அரசாங்கத்தை, அரசியல்வாதிகள் மட்டுமே நடத்துவதில்லை என்பதையே இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.வலிமையான சமூகமானது, தொடர்ந்து தன் குறைகளை தானே கண்டு களையும் சமூகமாகவே இருக்க முடியும். ஆனால், இங்கே நமக்கு நம் குறைகள் என்னவென்றே தெரியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.ஜெய் பீம் சமூகத்தின் குறைகளை காட்டி அதில் இருந்து மீள்வதற்கான பாதையையும் காட்டுகிறது.அந்த வகையில் ஜெய் பீம் என்றால் வலிமையை மெருகேற்றிக்கொள்வது என கொள்ளலாம்.
“மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? “
என்று பாரதி பாடிவிட்டு சென்று இத்தனை காலங்களுக்கு பின்னும் நம்மை சுற்றியிருக்கும் மனிதர்கள் என்ன நிலையில் இருக்கின்றார்கள் என்பதையே நாம் கவனிக்காமல் இருக்கும் பொழுது, அவர்களின் நோவு நமக்கு எப்படி புரியும்!
அரசாங்கத்தை நடத்துவதில் முதன்மையாவனர்களான அரசியல்வாதிகள், ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக கவனம் ஈர்க்கும் அரசியல் ஆதாயங்களை செய்யும், சில நல திட்டங்களையும் உதவிகளையும் செய்வதை தாண்டி, காவல்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதில் சரியான திட்டமிடலுதையும் அந்த திட்டவரைவுகளில் உள்ள குறைகள் தொடர்ந்து களைய ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். சமூக வேற்றுமைகளை களைவதிலும் நீண்ட கால பயன் தரும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நம் சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் படங்கள், கதைகள் வரவேற்க படவேண்டியதே ஆனால்,அத்தகைய படங்களும் கதைகளும் அதிகம் வர வேண்டும் என்று நினைப்பது மடத்தனமானது. அவ்வாறு நடந்தால் நாம் நம் குறைகளை திருத்திக்கொள்ளவே இல்லை இனியும் திருத்திக்கொள்ளாமல் பேசிக்கொண்டு தான் இருப்போம் என்பது தானே அர்த்தம்.
216 total views , 1 views today