பூச்சாண்டிகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? இல்லாத பூச்சாண்டிகளை இருப்பதாக சொல்லி குழந்தைகளுக்கு சோறு ஊட்டலாம். அதைத்தாண்டி பூச்சாண்டிகளால் என்ன பயன்?

நல்லதுக்கு இந்த பூச்சாண்டிகளால் ஒரு பயனும் இல்லை என்றாலும், அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கும் இது நிறையவே பயன்படுகிறது.

சமீபத்தில் நம் முதல்வர் சட்டமன்றத்தில், என் மேஜையில் இருக்கும் கோப்புகளை திறக்க வைத்து விடாதீர்கள் என்று வீர வசனம் பேசியிருந்தார். எனக்குக் கோபம் வராது? என்கிற வடிவேல் நகைச்சுவை போன்று இருக்கிறது. அதே மன்றத்தில், கோபம் வந்தால் என்ன செய்வ என்கிறதைப் போல, கோப்புகளைத் திறங்கள் தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

திமுக ஒன்றும் ஜெயலலிதா இல்லை, பரம்பரை நகைகள், அம்மாவின் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துகளையெல்லாம் சரியாகக் கணக்கு காட்டாமல் குற்றவாளியாக நிற்பதற்கு. திமுகவினர் அவர்கள் காலத்தில் அரசியலில் சம்பாதித்ததைக் கூட சட்ட சிக்கல் இல்லாமல் செய்ய முடிந்த அறிவாளிகள்.

அவர்கள் நிச்சயம் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால், அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் முதல்வர் சரியான தகவலும் ஆதாரங்களும் இருந்தால் நடவடிக்கை எடுப்பது தானே முறை. பைல்களைத் திறக்க வைக்காதீர்கள் என்று பூச்சாண்டி காட்டுவது எதற்கு 50 ரூபாய் கொடுத்து இந்த விர்ச்சுவல் வாரியர்ஸை ரீல்ஸ் போட வைப்பதற்கா?

இதே பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் அண்ணாமலையும் செய்து கொண்டிருந்தார். ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன், வருகிறேன் என்று பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். வழக்கு போட வேண்டியது தானே என்றால், ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வியைத் திருப்பிவிட்டார். நானே தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டுமா என்று பேசி மழுப்பினார்.

இப்பொழுதும் அதே அண்ணாமலை தி.மு.க அமைச்சர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பான ஆடியோ இருக்கிறது என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார். (மூலக்கட்டுரையில் ‘த.வெ.க அமைச்சர்கள்’ என்றுள்ளது – இது தகவல் பிழை)

அண்ணாமலை ஆகட்டும், விஜய் ஆகட்டும், பாஜக ஆகட்டும். தவறு நடந்திருப்பது குறித்து உங்களுக்குத் தெரிகிறது என்றால் அதை வைத்து ஏன் நடவடிக்கை எடுக்காமல் அரசியல் செய்கிறீர்கள்?

அண்ணாமலை ஏதோ ஒரு அப்பாவி தனிநபர் போல் தன்னைக் காண்பித்துக் கொள்வார். எந்தவொரு அப்பாவி தனிநபருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆடியோ ஆதாரங்கள் போன்ற ரகசியத் தகவல்கள் கிடைப்பதில்லை. தேசியக் கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக இருந்து கொண்டு திமுகவின் ஊழல் குறித்து ஊடகங்களில் பேசியதோடு சரி ஒரு நடவடிக்கையும் இல்லை.

மக்கள் பணத்தை தொட மாட்டேன் தொட்டவர்களை விட மாட்டேன் என்ற முதல்வர். கோப்புகளைத் திறக்க வைக்காதீர்கள் என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். தன் தோழிக்காக உதயநிதியின் கழிவறைக் கதவை திறப்பதில் காட்டிய வேகத்தை அந்த கோப்புகளைத் திறப்பதில் காட்டுவதற்கு என்ன தயக்கம்.

பாண்டே ஒரு இடத்தில் பேசும் பொழுது பாஜக மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்று பெருமை பேசினார். நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில், எந்த மாமன் மச்சானுக்குக் கடன் கொடுக்க சொல்லி மோடி அரசின் அமைச்சர்கள் பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸ் அப்படி கொடுத்த கடன்களை மீட்டு இருக்கிறோம் என்று சொன்னார்.

எல்லாம் சரி! தவறு செய்தவர்கள் மீது உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ஏன் இன்னும் முடித்துத் தண்டனை பெற்றுத்தர முடியவில்லை?

சமீபத்தில் விவேக் இன்ஃப்ராகான் நிறுவனத்திற்காக சுபாஷ் சந்திரா அளித்த தனிநபர் உத்தரவாதத்தின் (Personal Guarantee) பொருட்டு தொடரப்பட்ட வழக்கில், ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹைதராபாத் சொத்துக்களை, வாரியம் மற்றும் பங்குதாரர்களின் அனுமதியின்றி, விளம்பரதாரர்களுக்குச் சொந்தமான எஸ்செல் (Essel) குழுமத்தின் கடனுக்காக அடமானமாகப் பயன்படுத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT), ஜீ குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா தனது ₹22,006.57 கோடி கடன் பொறுப்புகளுக்குப் பதிலாக வெறும் ₹6.5 கோடி மட்டும் செலுத்திக் கடனைத் தீர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு 99.97% தள்ளுபடி (Haircut) வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ₹100 கடனுக்கு வெறும் 3 பைசா மட்டுமே வங்கிகளுக்குத் திரும்பக் கிடைக்கும்.

காரணம், சுபாஷ் சந்திராவை திவாலானவராக அறிவித்தால் இதைவிடக் குறைவான தொகையே கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சுபாஷ் சந்திரா பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர். இதை ஊழல் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது என்றாலும், நாங்கள் அப்பழுக்கற்றவர்கள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்று மார்தட்டி கொள்கிறவர்களால், இன்னமும் சில நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாமல் போவதை தவிர்க்க முடியவில்லை. இவர்கள் இறுக்கும் சட்டங்கள் சாமானியர்களின் பரிவர்தனைகளுக்குத் தான் அதிக சுமை ஏற்படுத்துகிறதே அன்றி பெரிய பெரிய பொருளாதார குற்றங்களை இன்னமும் கட்டுப்படுத்த முடியாமலும், அப்படி குற்றங்கள் நிகழ்ந்தாலும் அதில் தடமறிந்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத படியும் தான் இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் யாரும் இதை பெரிதுபடுத்தியதாக தெரியவில்லை. அப்படியே செய்தாலும் வெற்று ஊழல் கோஷங்கள் எழுப்புவர்களேயேன்றி அமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் செய்ய வேண்டிய தேவையைப் பற்றி பேசமாட்டார்கள்.

அந்தச் சுணக்கம் தான் சில ஊழல் வழக்குகளை நீட்டித்துக் கொண்டே போகிறது. , விஜய் கோப்புகளைத் திறந்தாலும் அதை வைத்துக்கொண்டு ஒருவருக்கும் தண்டனை பெற்றுத் தர முடியாத நிலைதான் இருக்கும்.

இதெல்லாம் சட்டங்களையும் நெறிமுறைகளையும் நாம் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதைத் தான் காட்டுகிறது. வெற்றுப் பூச்சாண்டிகள் காட்டுவதன் மூலம் எந்த ஊழலையும் ஒழிக்க முடியாது.

ஊழல் வழக்குகளை அரசியல் காரணங்களுக்காக மந்தப் படுத்தி வைத்திருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.பாஜக அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. அது பற்றி எதிர்க்கட்சிகள் பேசமாட்டார்கள். காரணம், வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களாக எதிர்க்கட்சியினரே தான் இருப்பார்கள்.

அரசியல் விளைவுகளைப் பற்றி கவலையில்லாமல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கின்ற அரசியல் கட்சியும் அரசியல் தலைவர்களும் தான் இந்த சமூகத்திற்குத் தேவை. எல்லா அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு பெரிய நிறுவனம் மூலம் ஆதாயம் பெறுவதால் பொருளாதார குற்றங்களை தவிர்ப்பதற்கு ஏதுவாக இவர்கள் விதிமுறைகளை எவ்வளவு இறுக்கினாலும் கொஞ்சம் இடம் கொடுத்தே தான் இறுக்குவார்கள் என்று படுகிறது.

இந்தப் பூச்சாண்டிகளுக்கு எப்போது விடிவு வருமோ? சீக்கிரம் வந்தால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *