அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் தி.மு.க கூட்டணி ஆட்சியின் போது முன்மொழியப்பட்ட மருத்துவ பட்டபடிப்பிற்கான பொது நுழைவத் தேர்வை அதே கட்சிகள்  தீவிரமாக எதிர்த்து வந்ததோடு பொது நுழைவு தேர்வுக்கு  எதிரான பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து, பொது நுழைவுத் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்திவிட்டது. இந்த சூழலில்  பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்னும் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க. பொது நுழைவுத் தேர்வு ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஆராய அமைத்த குழுவானது,மிக கவனமாக பொது நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது தான் என்கிற வாதங்களையும்  எடுத்துவைத்து இருக்கின்றது.  குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூடுமான வரையில் ஒரு சமநோக்கு பார்வை இருந்தாலும் கூட பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற நோக்கத்தை நியாயப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியதும் வெளிப்படுகிறது.

எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு குறித்த தாக்கத்தை, ஒரே ஒரு மாநிலம் மட்டும் ஆராய்ந்து, நீட் தேர்வு அந்த மாநிலத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று முன் வைக்கப்படுகின்ற வாதங்களை கொண்டு மட்டும் நீட் தேர்வு, சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது(சமூக நீதிக்கு எதிரானது) என்கிற முடிவிற்கு வந்துவிட முடியாது. அத்தகைய முடிவை முன்னிறுத்தியே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது போன்று இருக்கின்றது.

இந்த தேர்வு என் மாநிலத்தை பாதிக்கிறது என்கிற வாதத்தை முன்வைத்தால்  சமூகத்தின் எல்லா நிலை மாணவர்களுக்கும் ஒரே தரத்திலான கல்வியை அளிக்க முடியாத மாநில அரசாங்கம் தான் சமூக நீதிக்கு எதிரானதாக இருக்கின்றது என்று எடுத்துக்கொள்ள முடியுமே தவிர பொது நுழைவுத்  தேர்வை சமூக நீதி எதிரானது என்று கொள்ள முடியாது.

நீட் விலக்கு  என்பதைத் தாண்டி, பள்ளி கல்வியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களையும் கிராமப்புற மாணவர்கள் தொழில்முறை பட்டப்படிப்பில் சேர்ப்பதற்கு அவர்களின் பன்னிரண்டாம் மதிப்பெண் மட்டுமல்லாமல் அவர்களின் பின்னணியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்றும் பரிந்துரை செய்திருப்பது,வெவ்வேறு கல்வி சூழலில் வளரும் மாணவர்களை  பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் கல்லூரியில் சேர்ப்பதும் கூட அநீதி தான் என்பதை குழு கருத்தில் கொண்டிருக்க கூடும் என்பதை காட்டுகிறது. கிராமப்புற மாணவர்களின் கல்வி சூழல், நீட் வருகைக்கு முன்னரே அவர்களின் வாய்ப்புகளை பறித்துஇருக்கின்றது என்பதை நீட் பற்றிய  நம் கதிர்விஜயம் குழுவின்  முந்தைய செய்தி ஆய்வில் குறிப்பிட்டு இருந்தோம். அந்த கட்டுரயை வாசிக்க இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

https://kathirvijayam.com/neet_conspiracy

நீட் தேர்வை சமூக நீதிக்கு எதிரானது என்று தீர்மானிக்க, வாதங்களை வைக்கும் இந்த அறிக்கை மற்றும் இதில் இருக்கும் தரவுகள், கல்வி முறையில் இருக்கும் சமூக அநீதியையே காட்டுகிறது. நீட் தான் பிரச்சனை என்கிற, பொது நுழைவுத் தேர்வை மட்டும்  குற்றம் சாட்டும் வகையில் வைக்கப்பட்ட  சில வாதங்கள்,   தர்க்க ரீதியிலாக பார்க்கும் பொழுது மாநிலத்தின் கல்வி தரத்தில் உள்ள குறைபாடுகளையும் கல்வியில் இத்தனை காலமாக தொடர்ந்து வரும் சமூகஅநீதியையுமே காட்டுகிறது.

அறிக்கையில் உள்ள எந்த வாதமும் நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை தர்க்க ரீதியிலாக நியாயப்படுத்தவில்லை. எந்த ஒரு திட்டமும் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் நிச்சயம் அதை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற அறிக்கையில் உள்ள வாதங்கள், நீட் தேர்வு மற்றும் அது சார்ந்து நடக்கும் மருத்துவ சேர்க்கையில் கொண்டுவரப்பட வேண்டிய மேம்பாடுகளை பரிந்துரைக்க வேண்டுமென்றால் சரியாக இருக்குமே தவிர பொது நுழைவுத் தேர்வு நடத்துவதே  சமூக நீதிக்கு எதிரானது என்பதை நியாயப்படுத்தும் வாதங்களாக அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அறிக்கையில் உள்ள வாதங்களை கொண்டு; நீட், சமூக நீதிக்கு எதிரானது; கிராமப்புற மாணவர்களின் கனவுகளை கலைப்பது என்று கூறுவோமேயானால் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்விலும் அதே அநீதி இழைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொண்டதன் காரணமாகவே நீதியரசர் ஏ.கே.ராஜன் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணோடு மாணவர்களின் பின்னணியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்கிற பரிந்துரையை முன்வைக்கின்றார்.

இதே பரிந்துரையை நீட்  அடிப்படையில் மருத்துவப்படிப்பிற்காக சேர்க்கும்  போது கிராமப்புற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதோடு அவர்களுக்கான தகுதி மதிப்பெண்களையும் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற வகையில் வைப்பதற்கு  இங்கே இடம் அளிக்கப்படவில்லை. காரணம், இங்கே  முழுமுதற்நோக்கமும் நீட்க்கு எதிரானதாகவும் நீட் விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்பதிலேயே தான் இருக்கின்றது.

  1. அறிக்கையில் முன்வைக்கப்பட்ட முக்கியமான வாதமாக கொள்ளப்படுகின்ற, நீட் தேர்வு வந்த பின்னர் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரும் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்னும் வாதம் புள்ளியியல் அடிப்படையில் உண்மை என்றாலும் கூட அந்த புள்ளியியலில் நாம் கவனிக்க வேண்டியது தமிழ்வழி கல்வி கற்போர் விகிதாசாரம் குறைந்து வருகின்றது என்பதையே. தமிழ்வழி கல்வி பயல்வோரின் விகிதாசாரம் குறைய தொடங்கியதும் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் எண்ணிக்கை நீட் வருகைக்கு முன்னரே குறைய தொடங்கியது என்னும் வாதமே சரியாக இருக்க முடியும்.
  2. அறிக்கையில் சுட்டிக்காட்டிய புள்ளியிலில் சில விவரங்கள் கவனமாக தவிர்க்கப்பட்டிருப்பதை  அல்லது விவரமாக அலசப்படாததை  காண முடிகிறது. அதில் முக்கியமானவைகள்
    • அரசு பள்ளியில் அறிவியலை விருப்ப பாடமாக படித்த  மாணவர்களில் எத்தனை பேர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மருத்துவப்படிப்பிற்கு சேரும் அளவிற்கு கட் ஆப் பெற்று இருந்தார்கள்.
    • மருத்துவப்படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர்? அரசு பள்ளி மாணவர் எத்தனை பேர்? என்கிற ஒப்பீடு
    • கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் எண்ணிக்கை என்பது எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. கிராமத்தில் இருந்து நகர்புறத்தில் இருக்கும் பள்ளியில் படிப்பவர்களா?அல்லது கிராமப்புற அரசு பள்ளிகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா? அல்லது கிராமங்களில் உள்ள தனியார் பள்ளிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா? என்பதை பற்றிய தெளிவுகள் அறிக்கையில் இல்லை.
    • நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்க முடியும். சமூக நீதியை காரணம் காட்டி நீட் விலக்கு  என்பதை முன்வைக்கும் முன்னர், எத்தனை தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாணவர், நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப்படிப்பில் சேர தகுதி பெறுகிறார்.எத்தனை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாணவர், நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப்படிப்பில் சேர தகுதி பெறுகிறார் என்பவை கருத்தில் கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது.
    • நீட் தேர்வுக்கு முன்னரும் கூட தனியார் பள்ளி  மாணவர்களே மருத்துவ படிப்பில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து இருக்கின்றார்கள் என்பது அறிக்கையில் இருக்கின்ற புள்ளிவிவரங்களை பார்த்தால் தெரியும். ஆனால், அதிலும் 2010-2011 இல் இருந்து 2013-14 வரை தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்தார்கள் என்கிற தரவு அளிக்கப்படவில்லை.
    • தனியார் பள்ளிகள் அதிகரிக்க தொடங்கிய காலத்திலேயே கிராமப்புற மாணவர்கள் அல்லது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் எண்ணிக்கை குறைந்துவிட்டதை பற்றிய தரவுகளும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.

மேற்சொன்ன விஷயங்கள் விரிவாகவும் தெளிவாகவும் அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டு இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் பொது நுழைவு தேர்வை மட்டும் சமூக நீதிக்கு எதிரானதாக காட்டியிருக்க முடியாது.

3. சமச்சீர் கல்வி என்ற திட்டம் கொண்டு வரப்பட்ட போதே அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அதனைத்தொடர்ந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்CBSE வட்டத்திற்குள் தங்களை இணைத்து கொண்டதும் நடந்தேறியது.இயல்பாகவே CBSE மாணவர்கள் அதிகரித்த காலத்திற்கு பின் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட CBSE  மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரும் எண்ணிக்கை அதிகரித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் வட்டத்திற்குள் இருந்து CBSE பள்ளிகளாக மாறிய தனியார் பள்ளிகள் அல்லது ஆரம்பத்தில் இருந்தே CBSE பள்ளிகளாக இருந்த தனியார் பள்ளிகள் என்று தனியார் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் விகிதம் நீட் தேர்வுக்கு வெகு காலம் முன்னரே அதிகரிக்க தொடங்கிவிட்டது எனும் போது. நீட் தேர்வு வந்த பின்னர் CBSE மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை மட்டும் சுட்டிக்காட்டி நீட் தேர்வு CBSE மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதாக சொல்வது தர்க்க ரீதியிலாக  ஏற்புடையது அல்ல. காரணம், நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசுப்பள்ளிகளின் தரத்திற்கு எளிமையாக்க பட்டால் அது தனியார் பள்ளி மாணவர்களுக்கே மேலும் சாதகமாக முடியும். அது மட்டுமல்லாமல் CBSE பள்ளிகளை கருத்தில் கொள்ளும் போது மற்ற மாநிலங்களின் தரவுகளோடு ஒரு ஒப்பீடு இருந்திருக்க வேண்டும்.

4. நீட் எதிர்ப்பாளர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்த கவிதையில் சொல்லப்பட்டது போன்று, ஜாதிய அடிப்படையில் யாருடைய உரிமையும் நீட் தேர்வு பாதிக்கவில்லை என்பதை காட்டும் தரவுகளும் அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றது. கீழே உள்ள அட்டவணை நமக்கு உணர்த்துவது என்னவெனில் இடஒதுக்கீடு என்பதில் சில மேம்பாடுகளை கொண்டு வர வேண்டிய இடத்திற்கு நாம் வந்துவிட்டதையே. எல்லா சமூகத்திலும் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டியதை பற்றி நாம் பேச தொடங்கவேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

  • கோச்சிங் சென்டர்கள் அதிகரித்து விட்டது அதில் படிக்கும் மாணவர்களுக்கு  தான் நீட் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அத்தகைய கோச்சிங் சென்டர்களில் பெறப்படும் கட்டணம் பற்றிய விவரங்களும் அறிக்கையில் இருந்தது. காலம் காலமாகவே கணிதபாடத்திற்கு டியூஷன் செல்லும் வழக்கம் இருக்கின்றது தனியார் பள்ளிகள் அதிகரிக்க தொடங்கியபின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்த பள்ளிகளின் கௌரவத்தை காட்ட பயன்பட ஆரம்பித்த பின், பாடத்திற்கு ஒரு டியூஷன் என்று டியூஷன் கள் டியூஷன் சென்டர் களாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. TNPSC தேர்வுகளுக்கு கூட கோச்சிங் சென்டர்கள் இருக்கின்றது. ஒருவேளை தேர்வுகளே இல்லாமல் போனால் கோச்சிங் சென்டர்கள்  இல்லாமல் போகலாம்.நிலைமை இவ்வாறு இருக்க கோச்சிங் சென்டர்களை காரணம் காட்டி நீட் விலக்கு கோருவதும் ஏற்புடையதாக இல்லை. பன்னிரன்டாம் வகுப்பு பொதுதேர்வில் வெற்றி பெறவும் கூட நடுத்தர வர்க்க குடும்பத்தினர் தனியார் பள்ளிகளையும் கோச்சிங் சென்டர்களையும் தேடாமல் இல்லை. அதற்காக பள்ளி பொதுத்தேர்வை ரத்து செய்துவிட முடியுமா?
  • சில மாணவர்கள் போலியாக தமிழக மாணவர்கள் என்னும் சான்றிதழோடு  85% சதவீத மாநில ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பிற்கான இடத்தை பெற்று உள்ளார்கள்; அது தொடர்பாக சில வழக்குகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.இதற்கு பொது நுழைவு தேர்வை குறை சொல்ல முடியாது. மாநில நிர்வாக்தின் குறைபாடுகளை இது காட்டுகிறது. அதோடு, மற்ற மாநிலங்களில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த தமிழக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றதா? அந்த மாணவர்களின் பொருளாதார பின்னணி பற்றிய தரவுகள் விவரிக்கப்படவில்லை.

முடிவாக, ஏற்கனவே இருக்கும் சட்டத்தை கொண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை நடத்த மாநில அரசு நீட் தேர்வை ரத்து செய்யலாம். அல்லது புதிய சட்டம் நிறைவேற்றி அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கூட நேரடியாக பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் சேர்க்கை நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பரிந்துரைஅளிப்பதற்கு ஒரு சட்டநிபுணர்குழு போதுமானது. நீட் பற்றிய ஆய்வு குழு அவசியமில்லை.ஆனால், ஆய்வுக்குழு கொடுத்திருக்கும் அறிக்கை குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உதவுக்கூடும் எனும் காரணத்தால் குழு அமைக்கப்பட்டிருக்கலாம்

ஆனால்,குழு கொடுத்த அறிக்கையில் உள்ள தரவுகள் கல்வி தரம் மேம்பட வேண்டும் என்பதையும் இடஒதுக்கீடு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்பதையுமே காட்டுகிறது.பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மூலம் நடைபெறும் மாணவர்சேர்க்கையிலும் கூட மாற்றம் தேவைப்படுகிறது என்பதையே காட்டுகிறது.மாற்றங்களையும் மேம்பாடுகளை முன்னெடுக்காமல் நீட் தேர்வு ரத்து செய்வதில் முனைப்பு காட்டும் அரசியலானது, “என் மாநிலத்தின் அரசு பள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்கள் ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டிபோட முடியாமல் இருக்கின்றார்கள். இதில் புதிதாக நீட் வந்து எங்கள் அரசு பள்ளிகளின் தரத்தையும் மாநிலத்தில் கல்வியில் இருக்கும் சமூக அநீதிகளையும் மேலும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது அதன் காரணமாக எங்களுக்கு நீட் வேண்டாம்” என்பதாகவே இருக்கின்றது.

நிச்சயமாக நீட் தேர்வு விலக்கி கொள்ளப்படவேண்டிய தேவையை விட மேற்சொன்ன மாற்றங்களே மாநிலத்திற்கு தேவையானதாக இருக்க; மாநிலத்தின் அத்தனை குறைபாடுகளையும் நீட் தேர்வு மீது சுமத்தி அதை ரத்து செய்ய நாங்கள் முயற்சி செய்தோம் என்கிற அரசியலையே தமிழகத்தின் இரு பெரும் இயக்கங்கள் இதுவரை செய்து இருக்கின்றது.

நீட் தேர்வு ஒருவேளை ரத்து செய்யப்படுமாயின் அது பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தையே பாதிக்கும் என்பது மட்டும் திண்ணம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *