வருடம் 2014, தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிரதமரான நேரம். தூய்மை பாரதம் என்கிற முழக்கத்தை முன்னெடுத்தார். சில திட்டங்களைக் கொண்டுவந்தார். அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஆங்காங்கே பெருக்குவது போல போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வேலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவரிடம் நான் கேட்டேன், “இந்தத் தூய்மை பாரதம் முழக்கம், அது சார்ந்த திட்டமெல்லாம் சரி!, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த அரசு ‘குப்பைகள் போடாதீர்கள், சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்கிற அறிவுறுத்தல்களைத் தருவதற்குப் பதிலாக, குப்பை போடுவதைத் தவிர்க்க சட்டம் கொண்டு வரலாம், அபராதம் விதிக்கலாம். இதையெல்லாம் ஒரு அரசால் செய்ய முடியும் என்கிறபொழுது, ஏன் இந்த அரசு அதையெல்லாம் செய்யாமல் மக்களுக்கு அறிவுறுத்தல்களைத் தந்துகொண்டு இருக்கிறது?” என்று கேட்டேன். அந்த நண்பர், மிகுந்த முதிர்ச்சியுடன், “அது அப்படியில்லை, புதிதாக ஒரு திட்டத்தை மக்கள் முன் வைக்கும்பொழுது, இதை நீ செய்தே ஆகவேண்டும் என்று திணிக்க முடியாது. முதலில் அறிவுறுத்த வேண்டும், படிப்படியாகத்தான் இந்த மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றார். என்ன ஒரு கண்ணோட்டம், எப்படி ஒரு முதிர்ச்சி பாருங்கள்!ஆனால், இன்றுவரை படிப்படியான எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை.
இப்படியே பேசிக்கொண்டு நாங்கள் வேலைக்கு வந்துவிட்டோம். நாங்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் இருந்த ஒரு பிரதான சாலையில் பள்ளம் வெட்டி கேபிள் இழுத்துக்கொண்டிருந்தார்கள். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, அம்பானி நிறுவனம் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட பணி என்றார்கள். அந்தச் சமயத்தில், ‘யாரடா இவர்கள், இவர்கள்தான் சந்தையிலேயே இல்லையே’ என்று நினைத்துவிட்டு வேலையைக் கவனிக்கத் தொடங்கினேன்.
அப்படியே 2026-க்கு வந்தால், வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நண்பரிடம் பேசும்பொழுது அரசியல் சார்ந்த பேச்சுகளும் வந்தன. சமீபத்தில் இந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறுகிய காலத்தில் இந்தியா முழுதும் பிரபலமாகிவிட்டார். அவரைப் பற்றிய பேச்சு வந்தது. “இந்த மாதிரியான கேள்விகள், விமர்சனங்கள் ஒருவருக்கு நாயகப் பிம்பத்தைக் கொடுத்துவிடுகிறது” என்றேன். அவர், “நீ இதெல்லாம் சொல்லாதே” என்றார்.
சிங்கப்பூரில் நடந்த ஒரு விவாதம் பற்றி அவருக்கு என் நினைவில் உள்ளபடியும், நான் புரிந்துகொண்டபடியும் சொன்னேன். ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர், “ஒரு நிறுவனம் ஒருவரைப் பணியை விட்டு நிறுத்தினால், அந்தப் பணியாளர் என்ன செய்வார்? அதனால் அந்த நிறுவனம் அவருக்கு எத்தனை வருடம் பணி புரிந்திருக்கிறாரோ அத்தனை மாதச் சம்பளத்தை ஈட்டுத்தொகையாக வழங்க வேண்டும்” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அரசு, “நிறுவனங்கள் நஷ்டத்தில் இருக்கும்பொழுதும், பணப்புழக்கம் குறைவாக இருக்கும்பொழுதும், சந்தை மந்தமாக இருக்கும்பொழுதும் தான் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும். அப்படியான நேரத்தில் அவர்கள் விடுவிக்கும் பணியாளருக்கு இவ்வளவு ஈட்டுத்தொகை கொடுக்க வேண்டும் என்று சொன்னால், அது அந்த நிறுவனத்தை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும்” என்றது.
இதைச் சொன்னதும் அந்த நண்பர், “அந்தக் கேள்விக்கு அந்தப் பதில் சரிதான்” என்று நின்றார். ஆனால், நான் அவருக்கு இதைச் சொன்னதற்குக் காரணம், எதிர்க்கட்சி உறுப்பினர் வைத்த கோரிக்கை, மக்கள் பார்வையில் ‘அட, நமக்காகக் கேட்கிறாரே!’ என்பது போன்று இருக்கும்.அதை அரசு ஆமோதிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், என்ன நடக்கும்? அந்த நிறுவனம் மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும். ஆனால், ஒரு அரசு அப்படியிருக்கக் கூடாது. ஒரு அரசு, ஒரு சிக்கலை எல்லாக் கோணங்களில் இருந்தும் அணுக வேண்டும். அதை எடுத்துச் சொல்லவே நாம் இந்த உதாரணத்தை அவருக்குச் சொன்னோம். ஒரு நிறுவனம் சந்தை மந்தமாக இருக்கிறபொழுது தன்னை நிலைநிறுத்திக்கொண்டால் தான், அது மீண்டும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிற நிலைக்கு வரும். ஒரு அரசு இப்படி எல்லா விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொல்ல நாம் இதைச் சொன்னோம். ஆனால், அந்த நண்பர் நான் பா.ஜ.க.வைக் காப்பாற்றப் பேசுகிறேன் என்று நினைத்தார். வடிவேல் சொல்வதைப் போல, ‘நானே தவழ்ந்துகொண்டிருக்கிறேன், நான் எங்கு ஒரு தேசியக் கட்சியைக் காப்பாற்ற!?’ அப்படிச் காப்பாற்றப்பட வேண்டுமென்றாலும், காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் இருப்பது கம்யூனிஸ்டும் காங்கிரஸும்தான்.
எங்கள் பேச்சு தொடர்ந்தது, அவர் சிங்கப்பூர் உதாரணத்தைச் சொன்னதன் நோக்கத்தைப் புரிந்துகொள்கிற மனநிலையில் இல்லை. “எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனமும் 30 நாட்கள் மதிப்பு இருக்கும் ரீசார்ஜ் சேவையை வழங்குவதில்லை” என்றார். “தவறு அதில் இல்லை, நாம் அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்வி ’28 நாட்கள் மதிப்பு இருக்கும் ரீசார்ஜ் சேவையைத் தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குகிறது’ என்பது பற்றியதாக இருக்கக் கூடாது. விவாதம் நம்முடைய சம்பளம் பற்றியதாக இருக்க வேண்டும்” என்றதும், அவரோ, “நான் 5000 தான் சம்பளம் வாங்குகிறேன், எனக்கு ஏன் 30 நாள் தரவில்லை? நீ இப்படியெல்லாம் முட்டுக் கொடுக்காதே” என்றார்.
நான் பா.ஜ.க. ஆதரவாளன் இல்லை என்பதையும் அவர் ஏற்கத் தயாராக இல்லை. நான் அவருக்குப் புரியவைக்க முயன்றது என்னவென்றால், இங்குப் பொத்தாம் பொதுவாகத் திணிக்கப்பட்டிருக்கும் குருட்டுத்தனமான பா.ஜ.க. எதிர்ப்பைத்தான் நான் எதிர்க்கிறேன் என்பதைத்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. என்பது மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் பொம்மைகளாக இயக்கும் ஒரு ‘இல்லுமினாட்டி’ (Illuminati) அமைப்பு போன்றது என்று நான் என் வாதத்தைத் தொடங்க முற்பட்டேன். ஆனால், அவர் நான் சொல்லவந்ததை முழுதாகக் கேட்காமல் இடைமறித்துவிட்டார். நண்பரிடம் சொல்ல முடியாமல் போன அந்த வாதத்தைத்தான் இங்கே எழுத்தில் பதிவு செய்கிறேன். ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் நம் உணர்ச்சிகளை எப்படித் திட்டமிட்டுத் தூண்டுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம் சாத்தான்குளம் பென்னிக்ஸ் கொலை வழக்கு. அந்த வழக்கின்பொழுது, நம்முடைய மனநிலை எப்படியிருந்தது? காவல்துறையைத் திட்டி நான்கு பதிவு செய்ய வேண்டும், அ.தி.மு.க. வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அப்போதும் நாம் இது சிஸ்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றத்தைப் பற்றிப் பேசினோம். அந்தச் சமயத்தில், ஊடகங்கள் அந்தச் செய்தியை வைத்து நம் உணர்ச்சிகளை எப்படித் தூண்டினார்கள் என்று எழுதினோம்.
மக்களாகிய நாம் பென்னிக்ஸ் கொலை வழக்கை எதிர்கொண்ட அதே உணர்ச்சிப் பெருக்கோடு, திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கை எடுத்துக்கொண்டோமா? கிடையாது. (அஜித்குமார் என்பவரும் காவல் நிலைய விசாரணையின்போது மர்மமான முறையில் இறந்து போனார், ஆனால் அது பென்னிக்ஸ் வழக்கு அளவுக்கு ஊடகங்களால் பேசுபொருளாக்கப்படவில்லை). கலைஞரைக் கைது செய்தார்கள், அதை அராஜகம் என்பது போலக் காட்டினார்கள், நாமும் அதைப் பார்த்து அந்தச் சமயத்தில் தி.மு.க. மீது அனுதாபம் கொண்டோம். யாருமே, காவல் துறை கைது செய்ய வருகிறது என்றால், ஒரு தேர்ந்த அரசியல்வாதி, கைதி நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்திருந்தால் அதற்கு ஒத்துழைப்பு தந்து, அவர் மீது இருந்த குற்றச்சாட்டைச் சட்டபூர்வமாகத் தானே அணுகியிருக்க வேண்டும். ஆனால், அந்த கைது நடவடிக்கையை வைத்து அனுதாபம் தேடிக்கொண்டார்கள்.
இப்படி என்னுடைய மாநிலத்தில், இவர்கள் சம்பந்தமில்லாமல் ஒரு தேசியக் கட்சியின் மீது வெறுப்பைத் திணிப்பதைத் தான் எதிர்க்கிறேன். நாளை இவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மத்திய அமைச்சரவையில் பங்கு கொண்டால், இந்தச் சலசலப்பும் பா.ஜ.க. வெறுப்பும் தமிழகத்தில் இருக்காது. இந்திராவின் காலத்தில் காங்கிரஸ் வெறுப்பைத் தமிழகத்தில் விதைத்திருந்தார்கள். இப்போது அந்த வெறுப்பு எங்கே போனது? சோனியா காலத்திலேயே அது காணாமல் போனதே எப்படி!?
கண்மூடித்தனமான வெறுப்பு அரசியல் இங்கே படித்தவர்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வெறுப்பு நம்முடையது அல்ல, கட்சிகள் நம் மீது திணிக்கும் ஒன்று.இது என்னுள் ஒரு சீற்றத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவு தான் எழுத்துக்கள். தி.மு.க. அவர்களின் எதிரியாக பா.ஜ.க.வை முன்னிறுத்தி கொண்டதால், அவர்கள் திணிக்கும் இந்த கருத்துக்களை உடைக்கும் விதமாக நாம் எழுதுவதால் அந்த நண்பர் போன்ற பல உறவுகளுக்கு நாம் பா.ஜ.க. ஆதரவாளராக தெரிகிறோம் (எந்த அரசியல் கட்சிகளாலும் நமக்கு அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை)
நான் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அம்பானியின் கேபிள் இழுக்கும் பணி ஜியோ நிறுவனத்திற்கான வேலை. 2005-இல் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும் தங்களுக்குப் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி முகேஷ் தொலைத்தொடர்புத் துறை தொழிலில் ஈடுபடக் கூடாது என்று இருந்தது. 2010-இல் அதை முறித்துக்கொண்டார்கள். அதன்பின் 4ஜி சேவைக்கான கட்டுமானத்தை உருவாக்குவதில், முகேஷ் ஒரு சில வருடங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தார். 4ஜி வந்ததும், அதைச் சரியாகக் கொடுப்பதற்குத் திறன் மிகுந்த நிறுவனமாக ஜியோ தயாராக இருந்தது.இப்படி பி.எஸ்.என். எல் நிறுவனத்தின் கட்டுமானத்தை மேம்படுத்துவதில் அக்கறை அந்த சமயத்தில் இருந்த அரசு காட்டியதா என்றால்? உங்களுக்கே பதில் தெரியும்
அதானி 90-களில் நிலக்கரி விற்கத் தொடங்கி, பின் தனியாக ஒரு துறைமுகத்தை அமைக்க வாய்ப்புக் கிடைத்ததைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தத் துறைமுகத்தைக் கட்டமைத்து, தன் நிறுவனத்தையும் , அதன் சொத்துக்களையும் வளர்த்துக்கொண்டு வந்து, இன்று துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் நடத்துகிறார். அரசு துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் நடத்த தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடுகிறது என்றால், அதை நடத்தும் அளவு வளர்ந்து இருக்கிற வேறு நிறுவனங்கள் என்ன இருக்கிறது? 90-களில் இருந்து வளர்ந்துகொண்டே வந்த ஒரு நிறுவனம், அதே வருடத்தில் திருச்சியில் ஒரு கிராமத்தில் பிறந்த ஒருவனுக்கு மாதம் 2 லட்சம் சம்பளம் கொடுக்கும் அளவு வளர்ந்து இருப்பது நேர்மறையான விஷயம்தானே.
இங்கே கார்ப்பரேட்டுகளை எதிரியாகக் காட்டும் அரசியல்வாதிகளுக்கும் தெரியும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அதே கார்ப்பரேட்டுகள்தான் என்று. இந்த நிறுவனங்களை நாம் எந்தக் கட்சிகளோடும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாது. அம்பானிகள் இந்திரா காலத்தில் இருந்து இருக்கிறார்கள். ஜியோ தன்னுடைய முதல் ஒரு ரூபாயைச் சம்பாதிக்கும் முன் பல வருடங்களையும் கோடிகளையும் முதலீடு செய்திருக்கிறது. அதானியும் அதே கதைதான். இந்திரா இன்று இல்லை, ஆனால், அம்பானியின் நிறுவனம் இருக்கிறது. அதில் பலர் வேலை செய்கிறார்கள். அதேபோன்று நாளை மோடியின் காலம் முடியும், அதன்பின்னும் இப்படியான நிறுவனங்கள் இருந்துகொண்டு தான் இருக்கும்.மொத்தமாக இப்படி பெரு நிறுவனங்களை நாம் ஆதரிக்கிறோம் என்று இல்லை.அவர்களின் சில செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியது தான். அப்படி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அரசு மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் தான். சமூகத்தில் நீங்களும் நானுமே கூட ஒரு அம்பானியாகவோ அதானியாகவோ உருவெடுக்கலாம்.எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆம் ஆத்மி உறுப்பினர் கதைக்கு வருவோம். இங்கே 28 நாட்கள்தான் ரீசார்ஜ் சேவை வழங்கப்படுகிறது, 30 நாட்கள் தர வேண்டும் என்பது சினிமா பாணியில் மக்களுக்கான குரல் போன்று இருப்பதால் அது நம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சினிமாவில் கமர்ஷியல் படங்களைக் குப்பை என்று சொல்லிவிட்டு, அரசியலில் கமர்ஷியல் விஷயங்களை எதிர்நோக்கும் மனநிலை இது. முதலில் 30 நாட்கள் ரீசார்ஜ் சேவையும் தனியாக ஏற்கனவே வழங்கப்படுகிறதுதான்.அதோடு ராகவ் கோரிக்கையில், இன்கமிங் (incoming) சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்படக்கூடாது என்கிற கோரிக்கையை நானும் ஏற்கிறேன்.
சரி! நீங்களும் நானும் நாளை அரசை நடத்துகிறோம், எல்லாத் தொலைத்தொடர்பு நிறுவனமும் 30 நாள் ரீசார்ஜ் சேவை வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறோம். என்ன நடக்கும்? 28 நாட்களுக்கு 100 ரூபாய் என்றால் 30 நாட்களுக்கு 107 ரூபாய் என்பார்கள். ஏற்கனவே அப்படிச் சேவை இருக்கத்தான் செய்கிறது. இதைச் சொன்னதும், “இந்த அரசு பெட்ரோல் விலை, போன் ரீசார்ஜ் சேவை விலை எல்லாம் அந்த நிறுவனங்களை நிர்ணயிக்க விட்டு இருக்கக் கூடாது” என்றார். எண்ணெய் நிறுவனங்களில் பல பொதுத்துறை நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் உலகளாவிய அளவுகோலைக் கொண்டு பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானம் செய்கின்றன.அநேகமாக எல்லா நாடுகளிலும் இது தான் நடைமுறை.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடனை முந்தைய அரசு செலுத்தாமல் இருந்து அவர்களையும் நஷ்டத்தில் இயங்கச் செய்து, இப்போதுதான் அதையும் சரிசெய்துகொண்டு வருகிறார்கள்.
மொத்தத்தில், இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை என்றால், செலவு செய்ய அஞ்சும் மனநிலை, ‘நான் சம்பாதிப்பதெல்லாம் போகுதே!’ என்கிற மனநிலை, எல்லாவற்றிலும் சலுகை எதிர்பார்க்கும் மனநிலை. நாம் எதை எதிர்பார்க்க வேண்டும்? பெட்ரோல் என்ன விலை வேண்டுமானாலும் விற்கட்டும், சாதாரணமான வேலை செய்கிற ஒரு கூலித் தொழிலாளியால் தன் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிற அளவிற்கு அவருக்குச் சம்பளம் கிடைக்கிறதா? அதுதான் நம் கவனமாக இருக்க வேண்டும். 28 நாள் சேவை கொடுத்தால் என்ன! முப்பது நாள் சேவை கொடுத்தால் என்ன! மக்களிடம் வாங்கும் திறன் இருக்கும் அளவிற்கு அவர்களுக்கு வேலை இருக்கிறதா, சம்பளம் கிடைக்கிறதா என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்க வேண்டும்.
இதே இந்த ராகவ் (ஆம் ஆத்மி- உறுப்பினர்), சம்பளம் உயர்த்தப்பட வேண்டியது பற்றியும் பேசியிருக்கிறார். அது இங்கே மக்களின் கவனத்தைப் பெறவில்லை. ஆனால், சாலைகளில் இருக்கும் டோல்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறது என்று பேசியது பிரபலமாகி இருக்கிறது. அதிலும் அவர் சில நுணுக்கமான விமர்சனங்களை வைத்திருந்தார், அதற்கு அரசும் பதிலளித்திருந்தது. டோல்களில் ஐந்து நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது போன்ற விஷயங்களைப் பேசியிருந்தார். அதற்குப் பதிலளித்த அரசு, ஏற்கனவே ஃபாஸ்டேக் (Fastag) முறை இருக்கிறது, ஜி.பி.எஸ். மூலம் டோல் கட்டணம் பெற முயற்சி நடந்துகொண்டிருக்கிறது, இனி கொஞ்ச நாளில் டோல்களில் காத்திருக்கத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறது.
அந்த ஆம் ஆத்மி உறுப்பினர், இந்த டோல்கள் எல்லாம் கொள்ளையடிக்கிறது என்று சொன்னதை நான் மறுக்கிறேன். காரணம், பெட்ரோல் மீதான வரிகளையும் சாலை வரிகளையும் மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவின் சாலைகளை நாம் மேம்படுத்தியிருக்க முடியாது. அப்படியிருக்க, டோல் என்றாலே மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது என்பது போன்ற பார்வையை ஏற்கனவே அரசியல்வாதிகள் திணித்து வைத்திருக்கிறபொழுது, இந்த வார்த்தைப் பிரயோகம் அந்த எண்ணத்தை பலப்படுத்துவதாக இருக்கிறது. மக்களவையில் ஒரு உறுப்பினர் இப்படிப் பதத்தைப் பயன்படுத்தும்பொழுது, அது டோல்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும். ஆனால், அவர் சொன்ன ‘இந்த டோல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்’ என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
350 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய முடிகிறபொழுது எதற்கு உறுப்பினர்களுக்கு 3500-இல் இருந்து 9000 வரை தொலைபேசி கொடுப்பனவு (allowance) என்று கேட்டிருந்தார். உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் தொலைபேசி கொடுப்பனவு தனி ஒரு நபரின் தொலைபேசி பயன்பாட்டிற்குக் கொடுக்கப்படுவது அல்ல, அவர் தொகுதி அலுவலகத்திற்கு அதைப் பயன்படுத்தலாம். அதையெல்லாம் யாரும் பெரிதாகச் செய்யாததால் நமக்கு அது எதற்கு என்று தோன்றுகிறது.இந்த கொடுப்பனவுகளை பொறுத்தமட்டில், நிறுவனத்தில் பொறியாளர் நிலையில் இருக்கிறவருக்கும் மேலாளர் நிலையில் இருப்பவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பது நாம் அறிந்தது தானே! ஒருவரின் வேலை அது சார்ந்த பொறுப்புகள் குறித்து தான் சம்பளம் கொடுப்பனவு போன்றவைகள் அதிகமாக இருப்பதை தீர்மானிக்கிறது.
இதைப் பேசிக்கொண்டிருந்தபொழுது, இன்னொரு நண்பர், “இந்த அரசியல்வாதிகளுக்கு பென்ஷன் ஒரு கேடு” என்று சீற்றம் கொண்டார். நாம் செழிப்பான அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு பென்ஷன் தேவையில்லை என்று பேசுகிறோம். அதுவே உங்களைப் போன்றோ என்னைப் போன்றோ ஒருவர், தான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு தேர்தலில் நின்று ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகிவிட்டால், ஐந்து வருடம் கழித்து என்ன வேலை கிடைக்கும்? வேலை கிடைக்குமா? ஐந்து வருடத்தில் நிறைய மாறியிருக்கலாம். மீண்டும் தேர்தலில் ஜெயிக்க முடியாமல் போகலாம். இப்படிச் சூழலில் பென்ஷன் அவசியமாகிறது. நிறைய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் செழிப்பானவர்களாக இருப்பதில்லை என்றேன். அவர் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் இதில் சில மாற்றங்கள் கொண்டுவரலாம். குடும்ப வருமானம், சொத்துக் கணக்கு இவற்றைக் கணக்கில்கொண்டு, அதைப் பொறுத்து யாருக்கு பென்ஷன் வழங்கலாம், யாருக்குத் தேவையில்லை என்று வரையறுக்கலாம்.
நான் பா.ஜ.க.வை ஆதரிக்கவில்லை. இங்கே திணிக்கப்பட்டிருக்கும் குருட்டுத்தனமான பா.ஜ.க. எதிர்ப்பைத்தான் எதிர்க்கிறேன். ஒருவேளை இன்று தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து, மத்தியில் காங்கிரஸ் ஒப்பீட்டளவில் நல்ல ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தால், இங்கே காங்கிரஸ் வெறுப்பு திணிக்கப்பட்டிருக்கும். இப்படி நம் மீது செயற்கையாகத் திணிக்கப்படும் கருத்துருவாக்கங்களை நான் எதிர்க்கிறேன். உங்கள் எல்லோரிடமும் நான் எதிர்பார்ப்பது, அரசியலை ஒரு பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு நீங்கள் அணுக வேண்டும் என்பதைத்தான்.
இதையெல்லாம் நான் உங்களுக்கு ஒரு வரியில் சொல்ல முடியாமல் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அதைப் படிப்பதற்குப் பொறுமையில்லாமல் என்னை நீங்கள் ‘பா.ஜ.க. ஆதரவாளன்’ என்றும் ‘சங்கி’ என்றும் அழைப்பீர்கள் என்றால், நான் அதற்காகக் கவலைப்பட மாட்டேன். பொதுவான குருட்டுத்தனமான குற்றச்சாட்டுகள் அல்லாமல், தர்க்கரீதியான சரியான குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. மீதும் நான் வைத்திருக்கிறேன். அதைப் படிக்கும் பொறுமை சிலருக்கு இருந்திருக்காது. என்னுடைய கவலை எல்லாம், நீங்கள் எப்போது இப்படிப்பட்ட பரந்துபட்ட பார்வையோடு அரசியலை அணுகுவீர்கள் என்பதாகத்தான் இருக்கும்.