நாம் எப்போதும் ஏகத்துக்கும் விஜய்யைப் புகழ்ந்து பேசியதில்லை. விஜய் என்ன செய்தாலும் ஏற்று அதை அப்படியே நம்பி, விஜய் தரப்பில் பிழைகள் இருந்தாலும் முட்டுக் கொடுக்கும் சில விஜய் ரசிகர்களைப் போன்றும் இருந்ததில்லை. கடைசியாக விஜய்க்கு வாக்களிக்கச் சொல்லி நாம் எழுதிய கட்டுரையிலும்கூட விஜய் தரப்பு குறைகளை, பிழைகளை நாம் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
அப்படியான இந்தக் கட்டுரையின் தலைப்பாக இந்தப் பாடல் வரியைத் தேர்ந்தெடுத்தது, ஜெயித்ததும் அவர் புகழ் வெளிச்சத்தை நாம் கொஞ்சம் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இல்லை.
அந்தப் பாடல் வரி இன்று மெய்யாகி இருக்கிறது. நான் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பொழுது விமான நிலையத்தில் இருந்தேன். அப்போது, மதுரை மத்திய தொகுதி நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அண்ணே மதுரை மத்தியில் திமுக மூன்றாவது இடம் த.வெ.க முதல் இடம்” என்றார். துளியும் எதிர்பாராத முடிவு இது.
குடும்பப் பின்னணி, கட்சிப் பின்னணி, அறிவாலய அறிவாளிகளால் மெத்தப் படித்த அறிவாளி என்று விளம்பரப்படுத்தப்பட்ட, படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட பி.டி.ஆர். தியாகராஜன் மூன்றாவது இடம் என்பது எதிர்பாராத ஒன்றாகத்தானே இருக்க முடியும். அதே தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான சுந்தர் சி அவர்கள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரின் பிரச்சாரத்திற்குப் பின்னரும்கூட அரசியல் நோக்கர்கள் கடுமையான போட்டி இருக்கும் ஆனால், பி.டி.ஆர் தான் ஜெயிப்பார் என்று பேசி வந்தார்கள். த.வெ.க வேட்பாளரின் பெயர்கூடப் பெரிதாய் எங்கும் ஒலிக்கவில்லை. வாக்காளர்களில் பலருக்கு இன்று மதுரை மத்திய தொகுதியில் ஜெயித்த த.வெ.க. வேட்பாளரின் பெயர்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜய்க்குமேகூடப் பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்தது போல் த.வெ.க. வேட்பாளர்கள் யார் எவர் என்று தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இங்கே எல்லோருக்கும் தெரிந்த ஒரே பெயர் விஜய்.
விமானத்தில் இருந்து இறங்கியதும் செய்தியைத் தேடினால், த.வெ.க 100 இடங்களைத் தாண்டி முன்னிலை. அந்தச் செய்தியைப் பார்த்த நொடியில் என் மண்டையில் ஓடிய பாடல் வரிதான் அது. பல பேரின் முகமா நின்னு ஆடுற புலிதானே!
நீங்கள் வாக்களித்தவர்களைத் தற்குறி என்று சொல்லுங்கள். பெற்றோர்களைச் சாடுங்கள். நடிகன் நாடாள வந்துவிட்டான் என்று என்ன வேண்டுமென்றாலும் புலம்புங்கள். ஆனால், முகம் தெரியாத பேர் தெரியாத வேட்பாளர்கள் எல்லாம் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியின் பெயரால் இன்று சட்டமன்றம் செல்லக் காரணம் விஜய் என்கிற முகம்.
என்போன்ற எல்லா அரசியல் நோக்கர்களும் சுட்டிக்காட்டிய குறைகளைத் தாண்டி த.வெ.க ஜெயித்து இருக்கிறது. இன்றும் அந்தக் குறைகள் இல்லாமல் இல்லை.
திமுக, அதிமுகவிடம் கீழ்மட்டத்தில் வேலை செய்ய இருந்த படை பலம் இல்லை. அனுமதி பெற்ற பல இடங்களில் அவர் பிரச்சாரத்துக்குச் செல்லாமல் அதை ரத்து செய்திருந்தார். வாக்குறுதிகளைக் கூடத் தாமதமாகத்தான் வெளியிட்டார்கள். சரியான கொள்கை நிலைப்பாடுகூட இல்லை. நான் எப்போதும் கொள்கை மக்களுக்குத் தேவையில்லை என்று சொல்லிவந்து இருக்கிறேன். ஆனால் தேர்தல் வேலைகளைப் பார்க்கக்கூடப் போதுமான படைபலம் இல்லாத கட்சியைக் கொண்டு, ஒரு வகையில் உட்கார்ந்துகொண்டே ஜெயித்து இருக்கிறார் விஜய்.
இது அவரின் குறையில்லை. ஆளும் தரப்பின் மீதிருந்த வெறுப்பு. திமுக மீது எப்போதும் இருக்கும் வெறுப்புதான். அவர்கள் ஜெயித்த பொழுதெல்லாம் குட்டையைக் குழப்பித்தான் ஜெயித்து இருக்கிறார்கள். இந்த முறை அந்த வெறுப்பு அதிமுக பக்கம் செல்லாமல் பார்த்துக்கொண்டதற்குத் திமுகவின் பாஜக உள்ளே வந்துடும் பிரச்சாரம்தான் காரணம் என்று நான் பார்க்கிறேன். அதிமுகவை பலவீனப்படுத்தத் திமுக எடுத்த ஆயுதங்கள் திமுகவையும் சேர்த்தே பதம் பார்த்து இருக்கிறது.
அரசியல் அணுகுமுறையைப் பொறுத்தமட்டில் விஜய் திமுகவின் நீட்சியாக மறுஅவதாரமாகத்தான் இப்போது வரை நடந்துகொண்டிருந்திருக்கிறார். எப்படி உடன்பிறப்புகள் திமுக எது செய்தாலும் முட்டுக் கொடுப்பார்களோ அதையேதான் விஜய் ரசிகர்கள் இதுவரை செய்து வந்திருக்கிறார்கள்.
நாம் விஜய் கட்சியைத் தொடங்கிய முதல் நாளில் அவரை வாழ்த்தி எழுதிய கட்டுரையில் ஆட்சி மாற்றம் அவர் மூலமேனும் வரட்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதை அவர் மூலம் கொண்டு வர வாக்களித்த மக்களுக்கு என் நன்றிகள்.
நாம் முன்னம் சொன்னது போல் இந்தத் தேர்தலில் இந்த வெற்றியை த.வெ.க பெறாமல் இருந்திருந்தால் அந்தக் கட்சியால் அடுத்த தேர்தல் வரை நீடித்திருக்க முடியாமல் போய் இருக்கலாம். ஆட்சி மாற்றம் சாத்தியப்படாமல் போய் இருக்கலாம். சினிமா போகிற போக்கிற்கு அங்கிருந்து இனியொருவர் இப்படிச் செல்வாக்கு பெறப்போவதில்லை. அதனால் இந்த மாற்றத்தை இப்போது கொண்டு வந்த உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள்.
ஆனால், அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர விஜய் இன்னும் மேம்பட வேண்டும். விஜய்யின் ஆதரவாளர்களும் மேம்பட வேண்டும். கடைசி நேரத்தில் மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களை அள்ளி போட்டு தேர்தலை சந்தித்தது கை கொடுத்துவிட்டது என்று இல்லாமல். இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்க வேண்டும்.அது நடக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
நடிகனுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள் என்று நொந்து கொள்கிறவர்கள், இந்த வெற்றியைப் பொறுக்க முடியாமல் பொறுமுகிறவர்கள் ஒன்றைச் சிந்தியுங்கள். தலைவனாகத் தகுதியுடைய சாமானியனைத் தேடி அவனை மக்கள் முன் கொண்டு சேர்த்துச் செல்வாக்கு பெற்றுத் தருகிற வேலையை ஏதேனும் ஒரு கட்சியாவது செய்கிறதா? நாம் தமிழர் உட்பட ஒரு கட்சியும் அப்படிச் செய்யவில்லை. எல்லாக் கட்சித் தலைவர்களும் தங்களையும் தங்கள் குடும்பங்களையுமேதான் முன்னிறுத்துகிறார்கள். அப்படியிருக்கத் தேர்தலுக்குத் தேவையான செல்வாக்கை அரசியலுக்கு வெளியில் தந்து கொண்டிருந்தது சினிமா மட்டும்தான்.
காலத்தாலும் தடுக்க முடியாத இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மாற்றம் வேறு எப்படியும் சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
சீமான் கத்துகிறார் அவருக்கு ஓட்டுப் போடவில்லையென்று கேட்பீர்கள், போடமாட்டார்கள். அரசியல் என்றில்லை மக்கள் முன் ஒன்றைக் கொண்டு சேர்க்கும் போது அது எல்லாருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல், தெலுங்கர்கள் ஆளக்கூடாது, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, தலித் பாதுகாவலன் என்றெல்லாம் தங்களைச் சுருக்கிக் கொண்ட கட்சிகளை மக்கள் எல்லாருக்குமான கட்சியாக ஒருநாளும் பார்க்கமாட்டார்கள். இந்த விஷயத்தில், எந்த வாக்குக் கூட்டமும் நமக்கு எதிராக இருக்கக் கூடாது என்று விஜய் கவனமாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மக்கள் எழுச்சியால் உருவான கட்சிக்கு மக்களில் இருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்காமல் மகன் பேரன் என்று இருந்தது. வாரிசு அரசியலை ஒதுக்கிய கட்சியை நான் நீ என்று அதிகாரச் சண்டை போட்டு உடைத்தது. தேசிய எண்ணங்களையும் உணர்வுகளையும் அருவருக்கத்தக்கதாக மாற்றிவிட்ட மாநில அரசியல், சித்தாந்தங்களை விட வெறுப்புரைகளை அதிகம் பேசியதன் விளைவு எல்லாம் சேர்ந்து எளிமையான வெற்றியைத் தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கொடுத்து இருக்கிறது.
ஒரு வகையில் விஜய் அதற்குப் பாத்திரமானவர்தான். அவர் முகம் மட்டும்தான் அந்த வெற்றியைத் தந்து இருக்கிறது. அவர் முகம் மட்டுமேதான் இந்தக் கட்சியெனத் தொடருமானால், காலம் விஜய்க்கும் ஒரு பதில் சொல்லும்.
எனக்கு ஒரு 100 சகோதரிகள் இருக்கிறார்கள் என்றால் 100 பேரும் விஜய்க்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். மாற்றம் விஜய்யின் முகத்தைக் கொண்டேனும் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த அவர்களைத் தற்குறிகள் என்றுவிட முடியாது. வாரிசு அரசியலுக்கும் வெறுப்பு அரசியலுக்கும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதுதான் தற்குறித்தனம்.
அவர் முகம் மட்டும்தான் அந்த வெற்றியைத் தந்து இருக்கிறது. அவர் முகம் மட்டுமேதான் இந்தக் கட்சியெனத் தொடருமானால், காலம் விஜய்க்கும் ஒரு பதில் சொல்லும்.
ஆட்சி மாற்றம் கண் முன்னே தெரிகிறது. அரசியல் மாற்றம் கொண்டு வர விஜய்யும் அவருக்கு வாக்களித்தவர்களும் மேலும் அரசியல் தெளிவு பெற வேண்டும். இந்த நாளைக் கொண்டாடி அந்த நாளை நோக்கி அடியெடுத்து வைப்போம்
-ஆசிரியர்
கதிர் விஜயம்