நான் முதலில் மனிதன், பிறகு இந்தியன், பிறகு தமிழன். ஆனால் என்றும் திராவிடன் இல்லை!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் “நான் முதலில் இந்தியன்” என்கிற உணர்வோடு இருப்பதிலோ, அல்லது அந்தத் தேசிய உணர்வை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முறைமைகளைப் பின்பற்றுவதிலோ என்ன பிழை இருக்க முடியும்? தேசம் என்பது வெறும் எல்லைகளால் வரையறுக்கப்படும் நிலப்பரப்பு அல்ல; அது அந்த எல்லைக்குள் வாழும் கோடிக்கணக்கான மக்களின் கூட்டு உணர்வில் கட்டமைக்கப்படுவது.

இந்த கட்டுரையை எழுதும் பொழுது மதுரை முத்து அவர்கள் ஒரு மேடையில் சொன்ன வரிகள் இன்று மிகப்பொருத்தமாக நினைவுக்கு வருகின்றன

“இந்தியாவிற்குள் இருப்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் அல்ல; இந்தியா யாருக்குள் இருக்கிறதோ அவர்களே உண்மையான இந்தியர்கள்.”

துரதிர்ஷ்டவசமாக,  திமுக போன்ற பிராந்திய கட்சிகள் தலையெடுத்த பொழுதே தேசிய உணர்வை மழுங்க செய்து தான் தலையெடுத்தது. அப்படி கட்சிகள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காகத் தேசிய உணர்வை மழுங்கடித்து, பிரிவினைவாதப் பரப்புரைகள் மூலமே தங்களை வளர்த்துக் கொண்டன.

நிர்வாக அளவில் ‘ஒன்றிய அரசு’ (Union Government) என்ற அரசியலமைப்புச் சொல்லைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், “இந்தியாவே ஒரு நாடு அல்ல” என்கிற ஆபத்தான சித்தாந்தத்தை நோக்கித் தமிழ் சமூகத்தை இவர்கள் பாதி நகர்த்திவிட்டார்கள் மீதியை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றபோது, “இந்திய ஒன்றியப் பண் பாடப்படும்” என்று யேம்சு வசந்தன் குறிப்பிட்டார். இதெல்லாம் திராவிட கூடாரத்தின் திட்டமிட்ட தேசிய விலகல் முயற்சிகளில் ஒன்று.

இத்தகைய பிரிவினைவாதக் கருத்துகளோடு கைகோர்த்து, தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிச் சென்றதே தேசிய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம். காங்கிரஸ் மீண்டும் மீண்டெழ வேண்டுமானால், அது முதலில் பிராந்தியக் கட்சிகளின் பிடியிலிருந்து விலகி, தன் தேசிய அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும்.

தேசியப் பாடல்களும் போலி மொழிப்பற்றும்

பிராந்தியக் கட்சிகளால் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கும் பெரும் முயற்சிகாலில் ஒன்று தான் , அரசு நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதம் முதலில் பாடும் முறைமை என்று நமக்கு புரிகிறது.

இதை எதிர்த்து, மொழிப்பற்றைக் கேடயமாகப் பயன்படுத்துபவர்களின் ஆட்சியில் தான், தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைப் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் எழுத்துப்பிழைகள் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கு ஏற்ப, தொழில்நுட்பச் சொற்களைத் தமிழில் உருவாக்கி மொழியை அறிவியல் பூர்வமாக வளர்க்கும் தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் இவர்கள் செயல்படுத்தி நடைமுறையில் இருந்ததா? அப்படி இருந்திருந்தால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப முறையான சரியான தமிழ் வார்த்தைகளை நாம் உருவாகியிருப்போம் தானே. இன்று பல்வேறு புது தமிழ் வார்த்தைகள் எல்லாம் வகைதொகை இல்லாமல் யார் யாரோ தனிநபர்கள் அவர்களுக்கு சரியென்பட்ட படி புகுத்திய வார்த்தைகள் தான்.இவர்களின் மொழிப்பற்று வெறும் தேர்தல் அரசியலோடு முடிந்துவிடுகிறது.

இப்படி பிரிவினை பேசுவது தேசிய கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அரசியலில் இவர்களுக்கு சாதகமான பலன்களை செய்கிறது. அது தான் இவர்களின் இந்த அற்ப அரசியலுக்கு காரணம்.

அம்பேத்கரின் வழியும் அற்ப அரசியலும்

பன்முகத்தன்மை என்பது அழகு, ஆனால் ஒருமைப்பாடு (Integrity) என்பதுதான் நாட்டின் அஸ்திவாரம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் (Preamble) “Fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the Nation” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிராந்திய அடையாளம் என்பது தேசிய அடையாளத்திற்கு உட்பட்டதே தவிர, அதற்கு இணையானதோ அல்லது அதை மீறியதோ அல்ல.தேசிய உணர்வு பலவீனமடைந்தால், பன்முகத்தன்மை என்பது பிரிவினைவாதமாக மாறிவிடும் ஆபத்து உண்டு.

அரசியலமைப்பை தந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் அசைக்க முடியாத தேசியவாதி. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரைத் தங்களின் வழிகாட்டியாகக் காட்டும் விசிக தலைவர் திருமாவளவன் போன்றவர்கள், ‘வந்தே மாதரம்’ பாடப்படும் முறைக்கு முந்திரிக்கொட்டைத் தனமாக விளக்கம் கேட்டு அறிக்கை விடுவது அற்ப அரசியலின் உச்சம்.

பட்டியலின மக்களின் உரிமைகளைப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, கடந்த ஆட்சியில் கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டிய பிரச்சனைகளில், அவர்களில் எஜமான கூட்டணி கட்சியின் உயிர் மெய் நோகாத படி விமர்சனம் வைத்தவர், இது ஒரு பிரச்சனை என்று விளக்கம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அவருக்கான விளக்கம் கட்டுரையின் முதல் வரியிலேயே .கொடுக்கப்பட்டுவிட்டது.

தேசிய உணர்வுக்கு எதிராகவே எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும்,திருமா போன்ற அரசியல்வாதிகளுக்கும் கட்சி சாரா வாக்காளர்கள் சார்பாக நாம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்:

இங்கே நாங்கள் முதலில் இந்தியர்கள்; அதன் பிறகே மொழி அல்லது மற்ற அடையாளங்கள். தேச ஒற்றுமையை வளர்க்கும் இந்த உன்னத எண்ணத்தில் நீங்கள் என்ன பிழை கண்டீர்கள் ? வந்தே மாதரத்தை முதலில் பாடுவதால் என்ன குறைந்துவிடும். நீங்கள் கொடுத்த இரண்டு சீட் ஆதரவு குறைந்து விடுமா குறைத்துவிட்டு போகட்டும்.மக்கள் மத்தியில் தேசிய உணர்வு விழித்தெழும் போது, இத்தகைய அற்ப விமர்சனங்களை வைக்கும் கட்சிகள் தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்படுவது உறுதி.

தேசிய ஒற்றுமையா? பிராந்தியப் பிரிவினையா?

புதிதாக அரசியல் களம் கண்டிருக்கும் விஜய் போன்றவர்கள், இந்த போலித் திராவிடக் கூட்டத்தின் விமர்சனங்களுக்குப் பயந்து, “தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும்” என்று தன் நிலையை மாற்றிக் கொள்வாரானால், அது அவரின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற கோட்பாட்டிற்கே எதிரானது. அது தேசிய ஒற்றுமையை விட, “நான் தமிழன், நீ கன்னடன், நீ மலையாளி” என்கிற பிரிவினைவாத உணர்வுகளைப் போற்றி வளர்ப்பதாகவே இந்தியர்களால் பார்க்கப்படும்.

ஒருபுறம் ஸ்டாலின் ராகுல் காந்தியைச் சகோதரர் என்கிறார்; இப்போது விஜய் ராகுலை உறவு கொண்டாடுகிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தலைவர்களுக்கிடையே இந்த உறவும் உரிமையும் எங்கிருந்து வந்தது? அவர்கள் அனைவரும் “இந்தியர்கள்” என்கிற ஒற்றைப் புள்ளியில் இருந்துதானே வந்தது?

ஒரு மாநில விழாவில் அல்லது பொது மேடையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாடலை முதலில் பாடுவது என்பது தேசிய இறையாண்மைக்கு (National Sovereignty) நாம் தரும் உச்சகட்ட மரியாதை. மாநில அடையாளங்கள் தேசிய அடையாளத்தின் கீழ் தான் பாதுகாப்பாக இருக்க முடியும். தேசிய உணர்வை விட பிராந்திய மொழி உணர்வு பெரியது என்று பேசுவது சுயநல அரசியலே தவிர உண்மையான மொழிப்பற்றல்ல.

மரபு மண்ணாங்கட்டி என்று இவர்களின் அற்ப அரசியல் நோக்கம் கொண்ட விமர்சனங்களை எல்லாம் மக்கள் புறந்தள்ள வேண்டும்.

அரசியலமைப்பு நிர்ணய சபையின் (Constituent Assembly) தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1950 ஜனவரி 24 அன்று அறிவிக்கும் போது: “தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தும் மரியாதையும் வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்கப்படும்” என்று வரலாற்றுப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.இந்திய அரசியலமைப்பின் படி நடக்கும் அரசு விழாவில், இந்திய உணர்வை ஊட்டும் தேசிய பாடல்கள் முதலில் பாடுவதில் ஒரு பிழையும் இல்லை.

அதனால், தேசியப் பாடல்கள் தான் முதலில் பாடப்பட வேண்டும்;அப்படித்தான் பாடுவோம். என்ன செய்ய முடியும் என்று மக்கள் இவர்களை கேட்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *