இந்தியா ரஜினிகாந்தைப் போல் மாறிக்கொண்டு வருகிறது. வாசகர்கள் நீண்ட நாட்களாகக் கட்டுரையின் அளவைக் குறைக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இது அப்படியொரு கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது சிறிய கட்டுரையாக இருக்கலாம்; ஆனால், இது வெறும் சினிமாக் கட்டுரை இல்லை.
ஒருநாள், எப்போதும் போல் கைபேசியைப் பயன்படுத்திக்கொண்டிருந்த சமயத்தில், வீரப்பன் பேசிய காணொளி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. வீரப்பன் நல்லவரா, இரக்கமுள்ளவரா, தமிழர் நலன் சார்ந்தவரா போன்ற வாதங்களை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ நாம் இங்கு பேசவில்லை. ஆனால், சட்டத்தின் பார்வையில் குற்றவாளியாக இருக்கும் அவர், ரஜினியைப் பற்றிப் பேசும் பொழுது நெகிழ்ந்து போகிறார்; அவரைப் பாராட்டுகிறார்.என்ன விந்தை!
வீரப்பனால் கடத்தி வைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரோ, ரஜினியின் நெருங்கிய நண்பர். ரஜினி இங்கு பலரின் பார்வையில் கன்னடர், வேறு சிலரின் பார்வையில் மராத்தியர். தேடப்படும் குற்றவாளிகள் அல்லது தேசத்தால் தீவிரவாதிகள் என்று வகைப்படுத்தப்பட்டவர்கள் செய்யும் செயல்களுக்குக் கூட நியாயம் சொல்லும் சில கூட்டம் , ரஜினியிடம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக தேடிக் குறைசொல்ல கண்டிருக்கிறோம். அதே அந்த கூட்டமும் கூட , ரஜினியை நேரில் கண்டால் அளவளாவுவதையும், ரஜினியைக் காணாத பொழுதும் கூட அவரைப் பாராட்டுவதையும் நாம் கேட்டிருக்கிறோம்.
இவ்வளவு ஏன்!அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த கலைஞரும் ஜெயலலிதாவும், ஒரே நேரத்தில் ரஜினியைத் தங்களுக்கு நெருக்கமாகவே வைத்துக்கொண்டார்கள். தேசிய அரசியலின் இரு துருவங்களும் (காங்கிரஸ், பாஜக) ரஜினியின் வாசல் வந்து நின்றன; இன்னமும் அவரோடு இரண்டு தேசியக் கட்சிக்காரர்களும் நட்பு பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கலாநிதி மாறன் சொன்னது போல, இன்றும் (even today) இந்தியாவின் எந்த மாநில முதலமைச்சராக இருந்தாலும், ரஜினி அழைத்தால் உடனே அந்த அழைப்பை ஏற்கிறார்கள்.
இதில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்ற நாட்டுத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் அவரைப் புகழ்ந்து பேசுவது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், வீரப்பனும் கூட ‘ரஜினி நல்லவர், அவர் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும்‘ என்பது போன்று பேசியிருக்கிறார். அதைக் கண்ட நொடியில், ‘எப்படி இந்த மனிதனால் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முடிகிறது? எப்படி எல்லோரோடும் நட்பாகப் பழக முடிகிறது? தன்னை இகழ்ந்தவர்களையும் எப்படி அரவணைத்துக்கொள்ள முடிகிறது?’ என்று நான் வியந்தேன். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை இருக்கிறது ‘Phenomenon’ [அபூர்வமான ஆளுமை / நிகழ்வு]. ரஜினி ஒரு Phenomenon [அபூர்வமான ஆளுமை].
இன்று இந்தியா ஒரு நாடாக ரஜினியைப் போலத்தான் மாறியிருக்கிறது. ரஷ்யாவும் உக்ரைனும் போரிட்டுக்கொள்கின்றன. இதில், ரஷ்யா எப்போதும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் நின்று வருகிறது. வழக்கமான சர்வதேச அரசியலின்படி பார்த்தால், இந்த இடத்தில் உக்ரைனுக்கு நாம் எதிரியாக இருக்க வேண்டும். ஆனால், உக்ரைன் நாட்டுத் தலைவர், நம் பிரதமருக்கு இருக்கும் செல்வாக்கைச் சுட்டிக்காட்டி, ‘அவர் நினைத்தால் போரை நிறுத்தலாம்‘ என்கிறார்.
மறுபுறம், ஈரானும் இஸ்ரேலும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல் நம்முடைய நட்பு நாடாக இருக்கிறது. ஆனால், அது எந்த வகையிலும் ஈரான் உடனான நம் உறவைப் பாதிக்கவில்லை. சமீபத்தில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி, ‘இஸ்ரேலுடன் இருக்கும் ஒரே வலிமையான நாடு அமெரிக்காதான்; அதனால் இஸ்ரேல் தாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்‘ என்பது போலப் பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேல் பிரதமர், ‘அமெரிக்கத் துணை ஜனாதிபதி மீது மரியாதை இருக்கிறது, அதற்காக அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது; இந்தியா எங்களோடு இருக்கிறது‘ என்று பேசியிருக்கிறார். இந்தக் கூற்று அமெரிக்காவிற்கு நிகராக இந்தியா வலிமை கொண்டிருக்கிறது என்னும் பொருளைத் தருகிறது. அதேசமயம், இது எந்த வகையிலும் ஈரான் உடனான நம் நட்பையோ அல்லது வளைகுடா நாடுகளுடனான நட்பையோ பாதிக்கப்போவதில்லை.
இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமே தங்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு என்ற பிம்பத்தை உடைத்து, இந்தியா போன்ற வலிமையான மற்றும் நம்பகமான நட்பு நாடுகளும் தங்களுக்கு இருக்கின்றன என்பதை உலகிற்கும், குறிப்பாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேல் உணர்த்த முற்படுகிறது.
இதை இஸ்ரேல் இந்தியாவை அமெரிக்காவிற்குப் பதிலாக முன்னிறுத்துவதாக சொல்ல முடியாது. ஆனால்,இந்தியாவின் வளர்ந்து வரும் ராஜதந்திர முக்கியத்துவத்தை (Diplomatic Leverage) இஸ்ரேல் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது என்று சொல்லலாம்
மறுபக்கம்,அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வர்த்தகம் செய்யவும், சாபஹார் துறைமுகம் (Chabahar Port) வழியாக ஆசியப் பிராந்தியத்தில் தடம் பதிக்கவும், சீனாவை மட்டுமே சார்ந்திருப்பதை தவிர்க்கவும் ஈரானுக்கு இந்தியா மிக அவசியம். அதனால், இஸ்ரேல் உடனான இந்தியாவின் நெருக்கம் ஈரானுக்குச் சிறு நெருடலை ஏற்படுத்தினாலும், யதார்த்தமான அரசியல் தேவைகளுக்காக (Pragmatic necessity) அவர்கள் இந்தியாவுடனான உறவு தேவையாக இருக்கிறது.
இஸ்ரேல் பிரதமரின் கூற்றைச் செய்திகளில் பார்த்ததும் எனக்குத் தோன்றியது இதுதான்: India is becoming Rajinikanth – இந்தியா ரஜினிகாந்தைப் போல மாறிக்கொண்டு வருகிறது.
ஒரு நாடு வல்லரசாக இருப்பதை விட, நல்லரசாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உலக அரங்கில் இந்தியா உணர்த்திக்கொண்டு வருகிறது. Dominance will not give you power – ஆதிக்கம் உங்களுக்கு உண்மையான அதிகாரத்தைத் தராது. When you make one enemy, your strength becomes half. When you make friends, your strength gets multiplied – நீங்கள் ஒருவரை எதிரியாக்கும்போது உங்கள் பலம் பாதியாகிறது; நீங்கள் நண்பர்களை உருவாக்கும்போது உங்கள் பலம் பன்மடங்காகிறது. இந்தியாவும் மற்ற நாடுகளிடம் இருக்கின்ற குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இல்லை; ஆனால், இந்தியா அதை அந்த நாடுகளில் கடுமையான எதிர்மறையான அதிர்வலைகளை உருவாக்காதபடி லாவகமாகச் செய்கிறது.
பிரதமர் மோடியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இந்தியா சர்வதேச அளவில் இப்படி மாறியிருப்பதற்கு நாமும் அவரும் (மக்கள் – தலைவர் என்கிற முறையில்) பரஸ்பரம் பாராட்டிக்கொள்ள வேண்டும். நான் இதை அவரின் தனிப்பட்ட சாதனையாக மட்டும் பார்க்கவில்லை; நிச்சயமாக நாம் இந்த நிலையை அடைந்திருப்பதற்கு வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலரின் உழைப்பு பெருமளவில் இருந்திருக்கும். அதன் பொருட்டு, இதை இந்த தேசத்தின் கூட்டுச் சாதனையாகவே பார்க்கிறேன்.
ஆதிக்கத்தை விட நட்பை வளர்ப்பதுதான் நாட்டை வளர்க்கும்; அதுதான் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் நல்லது. இரண்டு நாடுகள் சண்டையிடுவது என்பது, உலகெங்கிலும் உள்ள நடுத்தர மாதச் சம்பளதாரர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது என்கிற பொழுது, நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களைக் கைவிட வேண்டும். [Everyone has to win the world with love and peace – ஒவ்வொருவரும் இந்த உலகத்தை அன்பாலும் அமைதியாலும் வெல்ல வேண்டும்]