‘Hitting below the belt’ என்று ஆங்கிலத்தில் மரபுத்தொடர் இருக்கிறது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் கேட்டு இருப்பீர்கள். ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் கூட நம் ஊர் மகாபாரத கதை தெரிந்திருக்கும்.

பாரதப்போரின் இறுதியில், பீமன் யுத்த தர்மத்தை மீறி துரியோதனனின் இடுப்புக்கு கீழ் தாக்கி அவனை வீழ்த்தி இருப்பான். எப்போதேனும் சிந்தித்து இருக்கிறீர்களா? அதர்மங்களை செய்து வந்த துரியோதனன் ஏன் அப்படி சிந்திக்கவில்லை. தர்மத்திற்காக போர் புரிந்த பீமன் யுத்த தர்மத்தை மீறி அப்படித் தாக்கினான் என்று?

பலராமரிடம் பயிற்சி பெற்றிருந்த துரியோதனனுக்கு அவனுடைய போர் திறமையின் மீது அத்தனை பெரிய நம்பிக்கை;  நியாயமான ஒரு கதாயுத சண்டையில் அவனை பீமனால் வீழ்த்த முடியாது என்கிற நம்பிக்கை.

கிருஷ்ணருக்குத் தெரியும் எது பீமனின் பலம், எது துரியோதனனின் பலம் என்று. நிச்சயம் ஒரு நியாயமான போரில் பீமனால் துரியோதனனை வீழ்த்த முடியாது என்றும் அவருக்கு தெரியும் . அதன் பொருட்டு அவர் பீமனுக்கு அவனுடைய சபதத்தை நினைவுபடுத்துகிறார்.

என்ன சபதம் அது? ஒரு பெண்ணை பலவந்தமாக அவன் மடியில் அமரச் சொன்னது. துரியோதனன் இப்படி பல அதர்மங்களைச் செய்திருக்கிறான். இப்பொழுது அவன் மீண்டும் இந்தப் போரில் வென்றுவிட்டால், அதர்மமே தழைத்தோங்கும் ஒரு அதர்மியை வீழ்த்தித் தர்மனுடைய ஆட்சியை கொண்டு வர அதர்ம வழியைக் கையிலெடுக்க வைத்தார் கிருஷ்ணர்.

சரி! துரியோதனன் ஏன் அதர்மியாக இருந்தான்? அவனுடைய அகம்பாவம். போரில் பீமனால் தன்னை வீழ்த்த முடியாது என்கிற அகம்பாவம் தான் அதர்ம வழியில் பீமனை ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு எழாமல் பார்த்துக் கொண்டது.

இதுவரை இந்தக் கட்டுரையை திராவிட அறிவாளிகள் யாரும் படித்தார்களானால் சங்கிகளின் கதை அதர்மமான செயல்களுக்குச் சப்பைக்கட்டு கட்டுவதாக தான் இருக்கும் என்று பேசுவார்கள்.

நன்மையின் பொருட்டு பொய் சொல்லலாம் என்று வள்ளுவர் சொன்ன அதே கருத்தின் படிதான் அதர்மியான துரியோதனை அதர்மம் கொண்டே வீழ்த்தினார்கள்.

தர்மனின் ஆட்சியை; ஒரு நல்ல மாற்றத்தை; தர்மத்தின் ஆட்சியை கொண்டு வர அதர்ம வழியில் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது என்றால் நிச்சயமாக செய்யலாம்.

நிகழ்கால அரசியலில் பெரிய சில கட்சிகள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுகவை நாம் துரியோதனனுடன் ஒப்பிடலாம். அவர்களுக்கு அவர்களின் வாக்கு வங்கியின் மீதும் அவர்களின் அசைக்கமுடியாத கட்சி கட்டமைப்பின் மீதும் அப்படியொரு நம்பிக்கை. எப்படியும் அவர்களை யாரும் வீழ்த்த முடியாது என்கிற மமதையில் இருந்தார்கள்.

அதோடு வாக்குகள் சிதறாத படிக்கு அவர்கள் சேர்த்துக்கொண்ட சில்லறை கட்சிகளை கொண்ட கூட்டணி அவர்கள் நம்பிக்கையை இன்னமும் அதிகப்படுத்தியிருந்தது.

எப்படி பீமனிடம் ஒப்பீட்டளவில் உடல் வலு அதிகமாக இருந்து துரியோதனனை விட திறமை கம்மியாக இருந்ததோ அதே போலவே தான், இப்போது ஸ்டாலினும் குறிப்பிட்டு இருப்பது போல், பூத் முகவர்களை கூட ஒழுங்காக நியமிக்காதவர்கள், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.

என்னைக் கேட்டால், சமூக வலைதளம் மூலம் மக்களின் மூளையை சலவை செய்ய அவர்கள் பெரும் பணம் செலவழித்து இருந்தாலும்கூட, களத்தில் இருந்த சூழல் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது அதோடு பீமனின் உடல்வலு போல விஜய்யின் முகம் என்று  எல்லா காரணிகளும் சேர்ந்து அவர்களை வெற்றி அடைய செய்திருக்கிறது.

திமுகவினர், இந்தச் சமூக வலைதளத்தில் த.வெ.க.வினர் போலியாக பல விஷயங்களை பரப்பி இந்த வெற்றியை அடைந்திருக்கிறார்கள் என்று குறைபட்டு கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் உருவாவதற்கு முன்னம் இருந்தே மக்கள் மத்தியில் போலியான பிம்பங்களையும் கதைகளையும் உருவாக்கி மக்கள் மனதில் புகுத்தி வெற்றி பெறும் யுக்தியை; திமுக, தாத்தா காலத்தில் இருந்து செய்து வருகிறது.

அந்த விஷயத்தில், த.வெ.க திமுகவை இப்போது மிஞ்சியிருக்கிறது. அதுதான் இங்கே திமுக தரப்புக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்க வேண்டும்.

நாம் எப்போதும் , ரஜினி வரவில்லை- அரசியல் மாற்றம் உடனடியாக சாத்தியமில்லை. ஆனால், ஆட்சி மாறினால் அரசியல் மெல்ல மாறும் என்னும் கருத்தை நிறுவி வந்தோம். இருமுனை போட்டியாக இருக்கும் அரசியல் களம் மாற மூன்றாவது தேர்வை வாக்காளர்கள் பலப்படுத்த வேண்டும் என்று எழுதியிருக்கிறோம்.

விஜய்க்கு வாக்களிக்கச் சொன்ன கட்டுரையில் கூட, விஜய் தரப்புத் தவறுகளையும் குறைகளையும் மறுக்காமல் விஜயை விட யாரும் உத்தமர் இல்லை என்றே எழுதியிருந்தோம். இப்படி துரியோதனாதிகள் எப்படியும் வீழ்த்தப்பட வேண்டும் அப்படி வீழ்த்தப்பட்டுவிட்டால் இருமுனை போட்டியாக இருக்கிற களம் மும்முனை போட்டிக்கொண்ட களமாகும் அரசியல் கட்சிகள் அவர்களை எதிலெல்லாம் திருத்திக்கொள்ள வேண்டும் என்று சற்றே தங்களை திருத்திக்கொள்ளும் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.ஆனால், அது எதுவுமே நடக்கவில்லை.

முதலில் துரியோதனாதிகள் வீழ்த்தப்பட்டும் இங்கே ஒன்றும் தர்மனின் ஆட்சி நிறுவப்படவில்லை. இன்னமும் கூட பொய் பிம்பங்களை கட்டமைத்துக்கொண்டிருக்கும் கட்சியின் ஆட்சி தான் நடந்துகொண்டிருக்கிறது. காலம் காலமாக இதைச் செய்துவந்த திமுகவினர் இப்போது அந்த பொய்களை பொய்கள் என்று நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக அதிகாரச் சண்டையில் ஒரு பக்கம் அழிந்துகொண்டிருக்கிறது மறுபக்கம் த.வெ.க. அதிமுகவைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. தலைமையில் நடக்கும் குழப்பங்கள் காரணமாக அடிமட்ட குழுக்கள் த.வெ.க. பக்கம் சாய்ந்துகொண்டிருக்கிறது. த.வெ.க.விற்கு ஆதரவு அளித்ததற்கு கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கை எடுத்த எடப்பாடியாரிடம், வாங்கிய காசை கொடுத்து விட்டு நீக்கச் சொல்லுங்கள் என்கிறார் லாட்டரி குடும்பத்தை சேர்ந்த லீமா ரோஸ்.

சிந்தித்துப் பாருங்கள், மன்னார்குடி தினகரன், கூவத்தூரில் உறுப்பினர்களை பாதுகாக்கும் அளவு செலவு செய்ய முடிந்த அதிமுக; இவர்களிடம் இருந்தெல்லாம் உறுப்பினர்களை கபளீகரம் செய்ய முடிகிற அளவு இந்த கட்சியில் பணம் புரள்கிறது. இதில் தூய்மை எங்கே இருக்கிறது?!   அடிமட்ட அதிமுக குழுக்கள் கூட த.வெ.க. பக்கம் சாய்ந்துகொண்டிரு ப்பதெல்லாம் நம் கண் முன்னே தான் நடந்துகொண்டிருக்கிறது. புது கட்சியில் நமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த சாமானியர்களுக்கு பிம்பிளிக்கா பிலாப்பி தான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பூனே வாரியர்ஸ் ஆனதுபோன்று, அதிமுக மெல்ல த.வெ.கவாக ஆகிக்கொண்டிருக்கிறது. இது மீண்டும் நம்மை ஒரு இரு முனை போட்டிச் சூழலுக்குள் தள்ளும். அப்படி தான் நடந்துகொண்டிருக்கிறது. எடப்பாடி உட்கட்சிப் பூசலோடு போராடிக்கொண்டிருக்கிறார். திமுக த.வெ.கவின் பொய்களைத் தோலுரித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம் பலவீனங்களைச் சரி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் அழைத்திருக்கிறார்.திமுக அதிமுக என்று நாம் ஆடிக்கொண்டிருந்த உள்ளே வெளியே ஆட்டம் த.வெ.க. திமுக என்று மாறும் என்பதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகிறது.

இனி இருக்கின்ற இந்த இரண்டு கட்சிகள் அவர்களுக்குள்ளும் வெளியும் எல்லோரையும் இடுப்புக்கு கீழ் தான் தாக்குவார்கள். த.வெ.க. ஏற்கனவே அப்படித் தான் செய்துகொண்டிருக்கிறது.

இங்கே 90களில் இருந்தே அரசியல் கட்சிகளுக்கு ஒரு பயம் இருந்தது. “ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவாரோ!” என்கிற பயம்.அதன் பொருட்டு,  ரஜினியை யாராவது மூன்றாவது நபரை வைத்தே திமுக தாக்கி வந்தது. ஆனால், அவர்களும் கூட இத்தனை கீழ்த்தரமாக நடந்து கொள்ளவில்லை. அதோடு திமுகவிற்கு ஒரு காரணம் இருந்தது, அரசியலுக்கு ரஜினி வர கூடாது என்கிற காரணம். அவர்கள் தொடர்ந்து ரஜினி கன்னடன் அவருக்குச் செல்வாக்குக் குறைந்து விட்டது என்று மட்டும் தான் பரப்பி வந்தார்கள்.

ஆனால், இன்று இந்தியாவின் வடமாநிலங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்கிரமித்து மூளைச் சலவை செய்யத் தொடங்கியிருக்கும் த.வெ.கவிற்கு என்ன காரணம் இருக்குமோ தெரியவில்லை! அரசியலில் இல்லாத ரஜினியையும் அவர்களை எதிர்பவர்களையும்  character assassination (அவதூறு பரப்பி நற்பெயரைக் குலைத்தல்) செய்துகொண்டிருக்கிறார்கள்.

திமுக எப்படி அவர்கள் செய்வதையெல்லாம் நியாயப்படுத்தி மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு வந்ததோ அதையே தான் த.வெ.க. திமுகவை விடப் பலமாகச் செய்துகொண்டிருக்கிறது. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த ஐயாயிரம் பேர்களிடமும் அனுமதி சீட் இருக்க வேண்டும், முக்கியஸ்தர்கள் யார் எங்கு அமரவேண்டும் என்பது முதற்கொண்டு திட்டமிடப்பட்டு இருந்தது. முந்தைய நாள் மாலை வரை கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதம் பெறவில்லை, இதற்கிடையில் ரஜினி கமலை அழைத்தார்கள் அவர்கள் பொறாமையில் வரவில்லை என்று பரப்பினார்கள்.காங்கிரஸ் முதல்வர் பதவியேற்புக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் செல்லவில்லை என்கிற ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகள் வந்தும் யாரும் எங்கும் பேசவில்லை. ஆனால், உறுதி செய்யப்படாத தகவலை வைத்துக்கொண்டு இந்த அணில்களை விட்டு ரஜினிக்கு பொறாமை என்று கடித்துக்கொண்டிருந்தார்கள்.

இங்கே தற்குறிகள் என்று அறியப்படுபவர்கள் ஒருவரும், “ஏன் தன் குடும்பத்தை அழைக்காமல் கூட்டியாந்தவளை அழைத்து முன்வரிசையில் அமர்த்தியிருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பவில்லை. அப்படி கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகவே தான் ரஜினியை இவர்கள் character assassination செய்துகொண்டிருந்திருப்பார்கள்.character assassination (அவதூறு பரப்பி நற்பெயரைக் குலைத்தல்) செய்கிறவர்களின் தரம் குறித்து நாம் கேள்வியெழுப்பினால் கூட நம் தரம் தாழ்த்துவிடும் போலிருக்கிறது.வாசகர்களிடம் இதற்கு நாம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

ரஜினி இன்றும் கமலை தன்னை விட உயர்வாகத் தான் பேசுகிறார். இன்னமும் அமிதாப்பை அதே மரியாதையோடு தான் நடத்துகிறார் பேசுகிறார் எவ்வளவு உயரம் தொட்டாலும் அதில் அவர் மாறுபடவேயில்லை.

விஜயைக் கவனியுங்கள், ஆரம்ப காலகட்டத்தில், கூச்சம் தயக்கம் ஏதுமின்றி ரஜினியை தலைவர் என்று சொல்லிவந்தார். கொஞ்சம் வளர்ந்ததும் அதே சரளமாய் ‘தலைவர்’ என்று அவருக்கு அழைக்க வந்திருக்காது. வளர்ந்ததும் அண்ணனை விட பிஸ்தா ஆகிவிட்டதாக நினைக்கும் genz தம்பிகளின் மனப்பாங்கு இது . மெர்சலுக்கு பின் பொதுவில் எங்கும் தலைவர் என்று விஜய் சுட்டியிருக்க மாட்டார். இது தான் பொறாமை; இது தான் பாதுகாப்பற்ற உணர்வு. சர்க்கார் படப்பிரச்சனை முதல் ஜனநாயகன் வரை விஜய்க்காக ரஜினி குரல் கொடுத்த எந்த இடத்திலும் விஜய் ரஜினிக்கு நன்றி தெரிவித்ததில்லை. தேர்தல் வெற்றிக்கு ரஜினி வாழ்த்தியிருந்த பொழுதும் ஒரு வாரம் கழித்து வந்து நன்றி சொன்னார் விஜய். ஆளுநர்கள் ஜனாதிபதிகள் பிரதமர்கள் எல்லாம் கூட அன்பின் நிமித்தமாய்த் தலைவா என்று விழிப்பதில் தயக்கம் காட்டியதில்லை, ரஜினியை காட்டி வளர்ந்த விஜய்க்கு தலைவா என்று சொல்ல வரவில்லை. கட்சி தொடங்கி பிறந்த வாழ்த்து அறிக்கைகள் விட்டுக்கொண்டிருந்த பொழுதும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லியது இல்லை. முதல்வர் ஆன பின் தான் சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த்-க்கு நன்றி என்று விஜய்க்கு சொல்ல வருகிறது. ரஜினியை விட பெரிய வியாபாரம் கொண்டிருக்கும் ஷாருக்கான் தயக்கமில்லாமல் அவர் தான் சூப்பர்ஸ்டார் என்று சொன்னார். காரணம், அப்படி சொல்வதால் அவர் தரம் குறைந்து விட போவதில்லை என்று அவருக்கு தெரியும். அதே வேளையில் குமுதம் சர்வே தொடங்கி என்னை யாரேனும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லுங்கள் என்று ஏங்கிக்கொண்டிருந்த விஜய்யால் சரத்குமார் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை மறுத்து பேச முடியவில்லை. பொறாமை எங்கே இருக்கிறது? யாரிடம் இருக்கிறது?

முதல்வர் பதவி வேண்டாம் என்பதை பகிரங்கமாக அறிவித்தவரை பொறாமை பிடித்தவர் என்று பொய்யாக பரப்புவதில் குடும்பத்தை விட்டுவிட்டு கூட்டியாந்தவளை முன்னிறுத்தும் ஒருவருக்கு என்ன சுகம் கிடைக்குமோ! அதை அப்படியே ஏற்று பரப்புகின்ற இந்த சமூகத்தை தான் நொந்துகொள்ள வேண்டும்.

ரஜினி சொன்னது போல் வெறும் ஆட்சிமாற்றம் அரசியல் மாற்றத்தை கொண்டு வராது. துரியோதனாதிகளை வீழ்த்த துரியோதனாதிகளை கொண்டு வந்து இருக்கிறோம் நாம். பழ கருப்பையாவோ தமிழருவிமணியனோ ஒரு மேடையில் பேசும்பொழுது காந்தி அழைத்த பொழுது நாட்டில் உள்ள நல்லவர்கள் எல்லாம் சென்றார்கள், கருணாநிதி அழைத்தபொழுது திருடர்கள் எல்லாம் சென்றார்கள் என்று பேசியிருந்தார்கள்.அது போல் இன்று  த.வெ.க ஏதோ ஒரு வழியில் கிடைத்த பணத்தை கொண்டு வாய்ப்பு கிடைக்காத ஊழல்வாதிகளுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது.

சமூகம் வாசிப்பு பழக்கம் இல்லாமல்; 30 வினாடி குறும்படத்தில் மூழ்கி, சிந்திக்கும் திறனில்லாமல் ஒருவனை எது செய்தாலும் அப்படியே ஏற்று நம்புவது தான் இந்த அவலத்திற்குக் காரணம். நயினார் பேசிய பொழுது விஜய் மீது அவதூறு பரப்பப்படுகிறது என்றார்கள். ராதிகா வாழ்த்தும் பொழுது திரிஷாவே ஏற்றுக்கொள்கிறார். அதையெல்லாம் கேள்வி கேட்காமல் பொறாமையும் வன்மமும் யாரிடம் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்தாலும் அதுகாறும் சிந்திக்க அறிவில்லாமல் நல்லவர்களை character assassination செய்து சுகம் காண்கிறார்கள். நல்ல ஒரு அரசியல் மாற்றம் இப்படியொரு சமூகத்திற்கு தேவையில்லை என்றெண்ணி காலம் நல்ல ஒரு அரசியல் மாற்றத்தை நிகழ்த்தாமல் இருக்கிறது போலும்.

இப்படியொரு மாற்றம் வந்திருக்க தேவையில்லை. துரியோதனனிடம் இருந்த நல்ல விஷயங்களும் நாகரீகமும் கூட இல்லாதவர்களை கொண்டு வந்த இப்படியொரு மாற்றம் உண்மையில் நிகழ்ந்திருக்க வேண்டியதில்லை என்று நொந்து கொள்ளும் படி இருக்கிறது தற்போதைய அரசியல். ஆனால், இப்போது வேறு வழியே இல்லை. ஒரு குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளிடம் தான் மாட்டிக்கொண்டுள்ளோம். சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுக சொன்னால், ஏன் என்ன பிரச்சனை அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்றெல்லாம் சிந்திக்காமல் ஆம் ஒழிப்போம். நீட் வேண்டாம் என்று திமுக சொன்னால், இத்தனை நாள் நீட் தேர்வினால் பயன்பட்டவர்கள் பற்றி சிந்திக்காமல் ஆம் வேண்டாம். மும்மொழி வேண்டாம் என்று திமுக சொன்னால், மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மூன்று மொழிகள் படித்துக்கொண்டு தானே இருக்கிறார்கள் அரசு பள்ளி மாணவர்கள் படித்தால் என்ன என்று சிந்திக்காமல் ஆம் மும் மொழி வேண்டாம் என்று கூட்டத்தில் கோவிந்தா போடும் கூட்டத்திடம் தான் மாட்டிக்கொண்டு உள்ளோம்.

தரம் தாழ்ந்த இணையவழி தாக்குதல்கள் செய்வதில் த.வெ.க. மற்ற எல்லா கட்சிகளையும் விடவும் திறன்மிகுந்ததாய் முன்னோடியாய் இருக்கிறது. ஆனால், அவர்கள் செய்வது துரியோதனனே அதர்ம வழியில் போர் செய்வது போல இருக்கிறது. தர்மன்களுக்கு இதுவரை இங்கே இடமில்லாமில்லாமல் தான் இருக்கிறது. விஜய் தரப்பு இப்படி ஆயுதங்களை ரஜினிக்கு எதிராக கிளப்பும் பொழுதெல்லாம் அவரே தான் அதை தீர்த்து வைக்க பொதுவில் விளக்கம் கொடுக்கிறார் அதையும் இவர்கள் அவருக்கு எதிராக திருப்பி சுகம் காண்கிறார்கள். கிருஷ்ணர் இடுப்புக்கு கீழே தாக்க சொன்னார். ஆனால், சாத்வீக குணம் கொண்ட வாமனனும் ராமனும் அதை செய்திருப்பார்களா தெரியாது.அவர்களைப் போல் ரஜினியும் இந்த விஷயத்தில் வெள்ளைக்கொடி காட்டிக்கொண்டிருக்கிறார்.

ரஜினி வரப்போவதில்லை. அண்ணாமலை போன்றவர்கள் வந்தால் பா.ஜ.க. பெயரை சொல்லி பூச்சாண்டி காட்ட போகிறார்கள்.இப்படியிருக்க தமிழ் சமூகம் மாறாமல் ஆட்சி மாற்றம் வந்தாலும் அது இருக்கின்ற துரியோதனாதிகள் முகமூடிகளை மாற்றிக்கொள்வது போன்ற மாற்றமாக தான் இருக்கும். அரசியல் மாற்றமாக இருக்காது.

ரஜினியென்றாலே வழுக்கிகொண்டு வாயை அடிவயிற்றிக்கு கொண்டு செல்லும் புதிய அரசியல் கூட்டம் போல் தமிழக அரசியலையும் தர்மத்தையும் சூது கவ்விகொண்டே இருக்கிறது, தர்மம் எப்போது தான் வெல்லும் என்று காத்துகொண்டு இருக்கிறோம் நாம்.தர்மம் எப்படியும் வெல்லும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *