ஜனநாயகன் திரைப்பட வெளியீடு தேதி அறிவிக்கப்படாமல், ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் எல்லாப் பக்கமும் இதைப் பற்றியே தான் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகன் படம் வெளிவராத கடுப்பிலோ அல்லது திராவிடக் கூட்டம் கொண்டாடுகிறது என்கிற காரணத்தினாலோ என்னவோ பராசக்தி திரைப்படத்தின் மீது ஒரு பக்கம் வெறுப்புரைகள் பரப்பப்பட்டு வருகிறது.
பராசக்தி திரைப்படத்தைத் திராவிட உடன்பிறப்புகள் கொண்டாடும் விதமும் கூடப் பெரிய நகைமுரணாக இருக்கிறது. அந்தச் சமயத்தில், ஆளும் காங்கிரஸை எதிர்த்து மக்களும் மாணவர்களும் போராடிக்கொண்டிருந்த பொழுது, ஹிந்திக்கு எதிராகப் போராடுகிறவர்களைச் சாடி திராவிட இயக்கத்தைத் தொடங்கிய ஈ.வே.ரா கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். திராவிடக் கழகத்தில் இருந்து விலகிப் புது இயக்கம் ஆரம்பித்து, தேர்தல் அரசியலில் களம் கண்டிருந்த அண்ணா அவர்கள், போராட்டத்தின் பலனை அறுவடை செய்துகொண்டார்.
தனிப்பட்ட முறையில், ஹிந்தி மீது எனக்குப் பெரிய பற்று ஒன்றும் இப்போது வரை ஏற்படவில்லை. என் பார்வையில் அது ஒரு கலப்பட மொழி. இந்தியாவின் பழமையான மொழிகளாக நாம் கருதுவது, பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது தமிழும் சமஸ்கிருதமும் தான். இங்கே வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஒரு வடக்கு (ஆரியம்), தெற்கு (திராவிடம்) என்று ஒரு மொழிப் பிரிவினையை உண்டு செய்துவிட்டார்கள்.
ஆனால், திருக்குறள் முதலான நம் நூல்களில் சமஸ்கிருத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றில் எல்லாம் சமஸ்கிருத சப்தங்கள் மற்றும் வார்த்தைகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. நாம் முன்பு சில கட்டுரைகளில் குறிப்பிட்டது போல, சிவனும், சமஸ்கிருதமும், தமிழும் தான் இந்தப்பரந்துபட்ட பாரத தேசத்தின் இணைப்புப் புள்ளிகள்.
நம்முடைய அரசியலமைப்பை வடிவமைத்த அம்பேத்கர், ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்கிற வாதங்களை மறுக்கிறார். அதோடு இந்த மண்ணில் வடக்கையும் தெற்கையும் மொழியியல் ரீதியாக இணைக்கும் இணைப்புப் புள்ளியாக இருப்பது சமஸ்கிருதம் என்று அவர் பார்த்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்களே, மொழிப் பூசல்களுக்குத் தீர்வாகச் சமஸ்கிருதத்தை இந்தியாவின் அலுவல் மொழியாக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டார் என்பது வரலாறு. அவர் மொழித் துவேஷத்தை விட, தேசத்தின் ஒருங்கிணைப்பையே பிரதானமாகக் கருதினார். நம்முடைய இந்த மொழிப்போர் சில கட்சிகளின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்பட்டதைத் தவிர்த்து, மொழிக்கு என்ன பெரிதாக ஆதாயத்தைத் தந்துவிட்டது?
1950, 60களில் பெரும்பான்மையான நம் மக்கள் ஆங்கிலப் புலமையும் கூடக் கொண்டிருக்கவில்லை. ஆங்கிலம், ஹிந்தி எதுவென்றாலும் நாம் புதிதாகத் தான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்த மொழிப்போரானது வாகாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டது. கேட்டால், அது உலக மொழியாகிவிட்டது என்பார்கள்.
நம்மை விடத் தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றுத் தன்னிச்சையாகச் செயல்படும் அளவில் வளர்ந்த ஆசிய நாடுகளான ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் வெகுகாலம் வரை ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் கொரியாவில் ஆங்கிலம் தலைதூக்கவே இல்லை. ஜப்பானிய நிறுவனங்களின் பெருமுதலாளிகள் ஆங்கிலம் தெரியாதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் எல்லாம் கூட எல்லா மக்களும் ஒரே மொழியைப் பேசிக்கொண்டிருக்கவில்லை. சீன மொழி வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த அரசுகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஒருங்கிணைக்கப்பட்டு, மக்கள் ஒரு தேசிய இனமாக இணைந்திருக்க வேண்டியதன் அவசியம் கருதி அவர்கள், இதுதான் நம் தேசிய மொழி என்று எல்லோரையும் கற்றுக்கொள்ளச் செய்தார்கள்.
நாம் மொழியைக் காப்பாற்றத் தான் போராடினோமா? அந்த நேர அரசியல் சூழலில் நமக்குள் விதைக்கப்பட்டிருந்த மொழி வெறுப்புகளால் தான் நம் மொழியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தோம் என்பது சரியாக இருக்கும்.
மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்ததே ஒரு தவறான அணுகுமுறை. அந்தத் தவறான அணுகுமுறைக்கு வித்திட்டது காங்கிரஸும் இந்தியாவின் மகாத்மாவும் தான். அவர்கள் சுதந்திரத்திற்கு முன்னராகவே காங்கிரஸின் நிர்வாகக் குழுக்களை மொழிவாரியாகப் பிரித்து வைத்து இருந்தார்கள்.
மொழிப்போரை நாம் இழிவுபடுத்தத் துணிகிறோம் என்று சிலர் நினைக்கலாம். நாம் எப்போதும் சொல்வது போல், அந்த அந்த கால அரசியல் சூழல்களுக்கு ஏற்ப அரசியல்வாதிகள் அவர்களின் ஆதாயத்திற்காக நமக்குள் விதைக்கும் உணர்ச்சி தீவிரங்களுக்கு மக்கள் இரையாகிறார்கள். அதைக் குறித்துத் தான் நம் விமர்சனம் இருக்கிறது.
சமஸ்கிருதமோ, தமிழோ, ஹிந்தியோ ஏதேனும் ஒரு இந்திய மொழி இந்தியர்களை இணைக்கும் மொழியாக இருந்திருக்க வேண்டும். தமிழ் படித்த சாலமன் பாப்பையா அவர்கள் தனக்கு ஹிந்தி மீது இருந்த வெறுப்பை அறியாமை என்று பேட்டியில் ஒப்புக்கொள்கிறார்.
ஹிந்தி மீதான வெறுப்பு என்றில்லாமல், நம் மொழி மீதான பற்று தான் நம்முடைய அன்றைய உணர்ச்சி தீவிரத்திற்குக் காரணம் என்றால் நாம் நம்முடைய மொழியை எப்படி வளர்த்திருப்போம்?!
ஆஸ்திரேலியாவில் இருந்த பழங்குடியினர் ஒருவரிடம் கங்காருவைக் காட்டி ‘இது என்ன‘ என்று ஒரு ஆங்கிலேயர் கேட்டு இருக்கிறார். அந்தப் பழங்குடி ஆள், ‘தெரியாது‘ என்று அவர் மொழியில் ‘கங்காரு‘ என்று சொல்லியிருக்கிறார். இந்தக் கங்காருவை நீங்கள் எப்படித் தமிழ்ப்படுத்துவீர்கள்?
வேற்று மொழியில் இருக்கும் பெயர்ச்சொற்களை நாம் மொழிபெயர்க்க வேண்டியதில்லை.ஆனால், இங்கே நாம் பல பெயர்ச்சொற்களை மொழிபெயர்துக்கொண்டிருக்கிறோம்.அதோடு இன்னும் மோசமான சில மொழிபெயர்ப்புகள் இருக்கிறது.
சைக்கிளை மிதிவண்டி என்று மொழிபெயர்த்து வைத்து இருக்கிறோம். மிதிவண்டி இயக்கம் ஒரு சுழற்சியின் அடிப்படையில் இருந்ததால் அதை அவர்கள் சைக்கிள் என்றார்கள். நாம் அதை மிதிவண்டி என்று மொழிபெயர்த்து வைத்து இருக்கிறோம். காரும் கூட மிதித்துத் தான் இயக்குகிறோம். ஸ்கூட்டர், மொபெட், பைக் என்று இயக்க வடிவத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை அவர்கள் இத்தனை வகைப்படுத்தி இருக்கிறார்கள். நாம் எப்படி மொழிபெயர்த்து வைத்து இருக்கிறோம்? இருசக்கர வாகனம்.
நம் இணை ஆசிரியர் விஜி எப்போதும் சொல்வார், ஒரு மொழி தனித்துத் தான் இயங்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை என்று. அதன் பொருட்டே தொல்காப்பியம் வடமொழி சொற்களை எப்படித் தமிழில் எழுத வேண்டும் என்று இலக்கணம் வகுத்து வைத்து இருக்கிறது. அந்த இலக்கணம் கொண்டு எல்லா வேற்று மொழி சொற்களையும் நாம் தமிழில் எழுத முடியும். ஆனால், நாம் அதைச் செய்வதில்லை. பஸ் என்கிற ஒரு சொல், வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் ஏதேனும் வஸ்துக்களை எடுத்துக்கொண்டு அதை வேறு வேறு இடங்களுக்குக் கடத்துவது என்று பொருள். மின்சாரத் துறையில் இருக்கும் ‘பஸ்‘ (Bus) என்பதற்கும் இந்த அர்த்தம் பொருந்தி போகிறது. நம்முடைய மொழிபெயர்ப்பான பேருந்து என்பதை நாம் மின்சாரத் துறையில் இருக்கும் பஸ்க்குப் பொருத்திக் கொள்ள முடியாது.
காபியைக் கொட்டை வடிநீர் என்று மொழிபெயர்த்துப் பரவலாக்கிக் கொண்டிருக்கும் அபத்தங்களை எல்லாம் நம் இணை ஆசிரியர் நம் குழுவின் விவாதங்களின் பொழுது கேள்வியெழுப்பி இருக்கிறார். கொட்டை வடிநீர் என்றால் மாங்கொட்டை வடிநீரா?
புது வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்வதிலோ, வேற்று மொழி வார்த்தைகளை மொழிபெயர்ப்பதிலோ என்று
மொத்தத்தில் மொழியை வளமைப்படுத்துவதில் எந்தவொரு சீர்மையும் நேர்மையும் ஒருங்கமைப்பும் இல்லை. ஆங்கிலத்திற்கு ஆக்ஸ்போர்டு அகராதி தான் ஒரு மையமாக இருக்கிறது. அவர்கள் மொழியில் புது வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளச் சில வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் எதையும் சரியாக வளர்த்து இருக்கிறோமா? மொழிப்போருக்குச் சொந்தம் கொண்டாடும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அப்படி எதுவும் நடந்து இருக்கிறதா?
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் அரப்பளீஸ்வரர் என்று இருக்கிறது. மதுரையின் கள்ளம்பட்டி அரசுப் பேருந்துகளில் கல்லம்பட்டி ஆகியிருக்கிறது. பொதுவாக, ஆங்கிலம் நம்மை ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இதில் நாம் தமிழை எங்கே வளர்த்து இருக்கிறோம்? பெரும்பான்மை சமூகம் ஹிந்தி, ஆங்கிலம் என்கிற இரண்டும் கற்றுக்கொள்ளாமல் இருந்த சமயத்தில் மொழி ரீதியாகத் தேசத்தை ஒருங்கிணைக்கக் கொண்டு வந்த ஒரு நடைமுறையை எதிர்த்து நாம் ஒரு பயனும் அடையவில்லை.
அதைக் கொண்டு வந்த காங்கிரஸோடு கூட்டணி வைத்துத் திராவிடக் கட்சிகள் தான் காலத்திற்கேற்ற அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்துகொண்டிருக்கின்றன.
சென்சார் விஷயத்திற்கு வருவோம்.
இங்குச் சென்சார் அமைப்பு ஏதேனும் ஒரு படத்திற்குச் சில கட்டுப்பாடுகளை முன்மொழிந்தால் உடனே கருத்து சுதந்திரம் என்று கொடி பிடிக்கும் வழக்கம் சமூகத்திடம் மாற வேண்டும். சி.பி.எப்.சி (CBFC) என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு (Statutory body). அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சமூக ஒழுங்கு மற்றும் சட்ட விதிகளைப் பின்பற்றியே செயல்பட முடியும். அது தன்னிச்சையாக சில சிக்கல்களை ஏற்படுத்த வேண்டுமென்றாலும் அதற்கு சட்டபூர்வமான ஒரு வழி வேண்டும்.
சினிமா ஒரு வியாபாரம், இந்தியாவில் எடுக்கப்படும் படங்கள் எல்லா நாடுகளிலும் வெளியாகின்றன. சில நாடுகள் அவர்கள் நாட்டுச் சட்டப்படி குழந்தைகள் பார்க்கக் கூடிய படமில்லை என்று வரையறுத்து விட்டால், அதற்கு நாம் எந்த மறுப்பும் சொல்ல முடியாது.
தமிழில் எடுக்கப்படுகின்ற ஒரு படம், சிங்கப்பூரில் குழந்தைகள் பார்க்க அனுமதி இல்லை என்கிற வகைக்குள் வரையறை செய்யப்படுகிறது. அதே படம் இந்தியாவில் பெற்றோர் அனுமதித்தால் பார்க்கலாம் என்கிற வகைக்குள் வரையறுக்கப்படுகிறது. கூலி படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லாத போதும் அதற்கு ‘ஏ‘ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி குழந்தைகளை அந்தப் படம் பார்க்க அழைத்துச் சென்றதையும், திரையரங்குகள் அதை அனுமதித்ததையும், அனுமதிக்காத இடங்களில் வாக்குவாதம் நடந்ததையும் நாம் பார்த்தோம்.இது சமூகத்தின் ஒழுங்கின்மையின் வெளிப்பாடு.
இங்கே திரைப்படங்களுக்குத் தரச்சான்றிதழ் வழங்கும் சி.பி.எப்.சி. அமைப்பானது பல நேரங்களில் சினிமாக்காரர்களுக்குச் சாதகமாகத் தான் இருந்திருக்கிறது. வெளிநாடுகளில், 15 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட பீஸ்ட் போன்ற திரைப்படங்களுக்கு இங்கே இவர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். அதை மீறி ஜெயிலர் போன்ற திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் கிடைத்தாலும் கூடத் திரையரங்குகள் குழந்தைகளை அனுமதிக்க எந்த மறுப்பும் தெரிவித்ததாகத் தெரியவில்லை.இது சமூகத்தின் ஒழுங்கின்மையின் வெளிப்பாடு.
சான்றிதழ் கோருவது, வழங்குவது, திரையரங்குகள் பார்வையாளர்களை அனுமதிப்பது என்று எல்லா இடங்களிலும் வியாபாரம் தான் முதன்மையானதாக இருக்கிறதே தவிரச் சமூக அக்கறை ஒன்றும் இல்லை. குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், அந்தத் திரைப்படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என்கிற கவலை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்றாலும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? மித மிஞ்சிய வன்முறையும் கவர்ச்சியும் இருக்கின்ற திரைப்படங்களுக்கு “ஏ” சான்றிதழ் வழங்கிவிட்டு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கலாம்.
பராசக்தி, ஜனநாயகன் படங்களைப் பொறுத்தவரையில், பராசக்தி படத்திற்கு 25 இடங்களுக்கு மேல் கத்தரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதை மறுத்து, பராசக்தி திரைப்படக்குழு அவர்களாகவே டிசம்பர் மாதத்தில் மறுஆய்வு குழுவுக்குச் (reviewing/revising comittee) சமர்ப்பித்து இருக்கிறார்கள். பராசக்தி திரைப்படத்தைப் பொறுத்தவரையில், சென்சார் போர்டைக் கொண்டு அந்தப் படத்தை ஒடுக்க வேண்டிய அவசியம் தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.விற்கு இல்லை. அந்தத் திரைப்படம் அவர்களின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைப் பற்றிப் பேசுவது.
ஆனால், சி.பி.எப்.சி.யின் வேலை ஒரு திரைப்படம் சமூகத்தில் இருக்கும் ஒழுங்கைப் பாதித்து விடும் படி அமைந்துவிடக்கூடாது என்பதில் கருத்தாக இருப்பதும், அந்தத் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்க அனுமதிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதும் தான் . தரச்சான்றிதழ் தரும் வேலையில் நிச்சயமாகச் சி.பி.எப்.சி சினிமாக்காரர்களின் வியாபாரத்திற்குத் தான் சாதகமாக இருக்கிறது. ஆனால், உணர்வுகளைத் தூண்டும், குறிப்பிட்ட குழுக்களையோ அமைப்புகளையோ சீண்டும் கருத்துகளைச் சரியாகக் கவனத்தில் கொண்டு திருத்தச் சொல்ல வேண்டிய கட்டாயம் சி.பி.எப்.சிக்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனநாயக நாடுகளில் மட்டுமில்லை, முடியரசு நாடுகளிலும் கூட இப்படி ஒரு அமைப்பு திரைப்படங்களைத் தணிக்கை செய்வதற்கென்று இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் உங்களை யாராவது திட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா? சில படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வந்த பின்னும் சில அமைப்புகளால் அந்தப் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி சமூகத்தில் சலசலப்புகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். எல்லோருடைய உணர்வுகளையும் கருத்துகளையும் மதிக்க வேண்டிய பொறுப்பு ஒரு அரசாங்கத்திற்கு இருக்கிறது. அது குடியரசோ முடியரசோ, நல்ல அரசாங்கமும் அது சார்ந்த அமைப்புகளும் இதைச் சரியாகச் செய்ய வேண்டும்.
பராசக்தி திரைப்படக் குழு அவர்களாகவே மறுதணிக்கைக் குழுவிற்கு அனுப்பி, ஒரு வழியாக ஒரு உடன்பாட்டிற்கு வந்து திரைப்படத்தை வெளியிட்டுவிட்டார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தைப் பொறுத்தவரையில், அந்தப் படம் டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, ஐந்து பேர் குழு அதை 22 டிசம்பர் அன்று பார்த்துவிட்டுச் சில இடங்களைக் கத்தரிக்கச் சொல்லி அதைச் செய்தால் யு/ஏ கொடுக்கலாம் என்று பரிந்துரைத்து இருக்கிறார்கள். 24ஆம் தேதி படக்குழு, தணிக்கைக் குழுவின் பரிந்துரையின் படி படத்தில் மாற்றங்கள் செய்து மீண்டும் சமர்ப்பித்து இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் குழு எடுத்த முடிவில் தணிக்கைக் குழுவில் இருந்த ஒருவர் மட்டும் இதற்கு உடன்படவில்லை. உத்தேசமாக 24ஆம் தேதி மறுசமர்ப்பிப்பு செய்த பின் 29ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று சி.பி.எப்.சி தரப்பு சொல்லியிருக்கிறார்கள். இது சாதாரணமாக எல்லா அலுவலகங்களிலும் கிடைக்கும் பதில்.
இதற்கிடையில், தணிக்கைக் குழு எடுத்த முடிவில் உடன்படாத அந்த ஒருவர் தணிக்கைக் குழு தலைவருக்குப் புகார் அளித்து இருக்கிறார். குழுவில் இருந்தவர்கள் அவர் சொன்ன விஷயங்களையும், சில நடைமுறைகளையும் கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் அந்தப் புகார். அதன் அடிப்படையில் தான், அதை மறு தணிக்கைக் குழுவிற்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். அதை ஏற்காத படக்குழு நீதிமன்றம் சென்றது.
நீதிபதி, குழுவில் நான்கு பேர் ஒரு முடிவு எடுத்த பின் ஒருவர் மட்டும் தாமதமாக அளித்த ஒரு புகாரின் பெயரில், சான்றிதழ் கொடுப்பதைத் தாமதப்படுத்துவது என்பது சட்டரீதியாகச் சரியானதாக இல்லை என்று சான்றிதழ் வழங்கச் சொல்லித் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதை நிச்சயமாக எந்த ஒரு அமைப்பும் அப்படியே ஏற்காது, ஏற்க வேண்டிய தேவையும் இல்லை. அப்படி ஏற்பதாக இருந்தால், இந்த விவகாரம் நீதிமன்றம் சென்று இருக்காது. இந்த வழக்கு அவசரகதியில் விசாரிக்கப்பட்டது என்கிற வாதத்தை ஏற்று மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நீதிமன்றங்கள், சான்றிதழ் வழங்கச் சொல்லி கட்டளையிட முடியாது என்பது இங்கே ஒரு வாதமாக எடுத்துவைக்கப்படுகிறது. அந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதும்தான்.
24ஆம் தேதி சமர்ப்பித்த பின் விடுமுறை நாட்களைக் கழித்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்துத் தணிக்கைக் குழு பார்த்திருக்கலாம். புகார் வந்து ஒரு நாள் கழித்து 5ஆம் தேதி படக்குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டு இருக்கலாம். முதல் சமர்ப்பிப்பு நடந்த 22ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், அதிலும் 6 விடுமுறை நாட்களை ஒதுக்கிவிட்டால், 9 நாட்களில் எல்லாம் நடந்து இருக்கிறது.
இதில் அடக்குமுறை எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தனிமனிதருக்கு எதிராக எந்த அரசாங்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. சாமானியன் ஒரு பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழோ சாதிச் சான்றிதழோ வாங்குவது என்பது 9 நாட்களில் நடப்பதில்லை. 29ஆம் தேதி சான்றிதழ் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்கள் எனும் பொழுது, 29ஆம் தேதி கிடைக்கவில்லை என்கிற பொழுதே படக்குழு மீண்டும் சி.பி.எப்.சி.யை அணுகியிருக்கும்.சாதாரணமான சட்ட நடைமுறைகளை தவிர இங்கு வேறேதும் நடக்கவில்லை .
சூழல் அப்படியிருக்க இங்கே திமுகவினரும் அவர்கள் சார்ந்த டிவி நெறியாளர்களும், “ஜெயலலிதாவிடம் கெஞ்சியது போல் ஏன் கெஞ்சவில்லை, தி.மு.கவை தீய சக்தி என்பது போல மோடியை ஏன் பேசவில்லை” என்கிற அபத்தமான வாதங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த சமயத்தில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெரிய அளவில் செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஜெயலலிதா இருந்த பொழுது அவருக்கு எதிராக நேரடியாக அவர் பெயர் சொல்லிப் பேசத் துணிவில்லாத தி.மு.ககாரர்கள், 1995-1996 இல் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்த்துப் பேசிய ரஜினியின் பின் நின்று கொண்ட தி.மு.க காரர்கள் ஜெயலலிதாவிற்கு எதிரான விஜயினுடைய துணிவைக் கேலி செய்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
மறுபக்கம், இன்னமும் சினிமாக்காரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள், எப்போதும் போல் ரஜினியை வம்புக்கு இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினியைப் பொறுத்தவரையில், சட்டப்பூர்வமாகவும் அறத்தின் படியும் எது சரியோ அதை எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறார். தணிக்கை செய்யப்பட்ட பின் சர்க்கார் படத்திற்குச் செயற்கையாக அரசியல்வாதிகள் உருவாக்கிய பிரச்சனைக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து இருக்கிறார். ஊரே கேலி செய்த உங்கள் விஜயின் புலி படத்தில் நடித்ததற்கு விஜயைப் பாராட்டியிருந்தார்.
இது “ஐயோ விஜயை நசுக்குறாங்க” என்பதைப் போன்ற விவகாரமே அல்ல. தலைவா, சர்க்கார், காவலன் போன்ற படங்களுக்கு வந்த பிரச்சனைகள் போன்றதும் இது இல்லை. இது ஒரு சட்டச் சிக்கல். ரசிகர் கூட்டத்தையும் உள்ளடக்கிய இந்தச் சமூகம் சி.பி.எப்.சி. நடைமுறையில் இன்னமும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கலாம். படக்குழுக்கள், மறு தணிக்கை செய்வதற்கு ஆகும் கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு வெளியீட்டுத் தேதியைத் தீர்மானிக்கலாம். இதெல்லாம் தான் இங்கே பிரச்சனை.
இங்கே எல்லோருக்கும் பல ஊகங்கள் இருக்கின்றன. தி.மு.க காரர்களின் ஊகத்தின் படி மோடி அரசாங்கம் தான் கூட்டணியில் இழுக்க விஜய் படத்தை நிறுத்தி வைத்து இருக்கிறது, ஆனாலும் விஜய் மோடிக்கு எதிராகப் பேசமாட்டார் என்பது ஒன்று. விஜய் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில், “ஐயோ எங்க விஜய்க்கு எதிராக மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன, எங்களை ஒடுக்குகிறார்கள், நசுக்குகிறார்கள்” என்பது ஒன்று. விஜயையும் பாஜவையும் சேர்த்தே வெறுக்கிறவர்கள், விஜயும் பாஜகவும் சேர்ந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் பலப்படுத்த, அதோடு படத்தைத் தனித்துவமாகத் தள்ளி வெளியிட நினைத்து இப்படிச் செய்திருக்கலாம் என்பது மற்றுமொரு ஊகம்.
சி.பி.எப்.சி. மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது என்றாலும், புகார் செய்த ஒருவரைத் தி.மு.க.வால் வாங்கியிருக்க முடியாது என்பது ஒரு ஊகம். ரஜினியைச் சீண்டும் விஜய் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இப்படியான ஊகங்களுக்கெல்லாம் ரஜினி இல்லை, அவருடைய ஒரு முடி கூட அசையாது. சமூகமும் அப்படித்தான் பிரச்சனைகளை அணுக வேண்டும். இதில் இருக்கின்ற சட்டச் சிக்கல்கள் என்ன? எதிர்காலத்தில் இதை மேம்படுத்தத் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அரசு தரப்பில் என்ன செய்ய வேண்டும்? இதையெல்லாம் தான் சமூகம் விவாதிக்க வேண்டும்.
ஆனால், இங்கே ஊடகங்கள் எல்லாம் கட்சி சார்புடைய ஊடகங்களாக ஆகிவிட்டதன் காரணமாய் ஒரு பக்கம் விஜய் கோழை என்றும், மறுபக்கம் ஐயோ எங்க விஜயை நசுக்குறாங்க என்றும் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. அறிவார்ந்த சமூகத்திற்கு இது அழகு அல்ல.