நாம் எல்லோருக்கும் கோபம் வருகிறது. ஆனால், எல்லா சமயங்களிலும் வருவதில்லை; எல்லோர் மீதும் வருவதில்லை.மிக முக்கியமாக சரியான விஷயங்களுக்காக சரியான நேரத்தில் வருவதேயில்லை. அநேகமான சமயங்களில் நம்முடைய கோபம் யாரோ ஒருவர் குளிர் காயும் நெருப்பாக இருந்துவிடுகிறது.

சில நாட்களாவே எழுத நினைத்து எழுதாமல் விட்ட இந்த கட்டுரையை, நான் உங்கள் எல்லோர் மீதும் உள்ள கோபத்தின் வெளிப்பாடாகவே தான் எழுதுகிறேன்.

எனக்கிருக்கும் கோபம் அநேகமானவர்களிடம் கொஞ்சமும் கூட வெளிப்படவில்லை என்னும் எண்ணம் என்னை இன்னும் அதிகமாக கோபம் கொள்ளச்செய்கிறது.அந்த கோபம் வெயிலை விடவும் வெப்பானதாக இருக்கின்றது.

சித்திரை வெயிலை விடவும் கடுமையான ஒரு கோபம் யார் ஒருவருக்கு இருந்தாலும் அது வெறுப்பு எனும் தீப்பந்தத்திற்கு எண்ணெய் ஊற்றுவதாக இருந்துவிடக்கூடாது. அந்த எண்ணம் கூட இந்த கட்டுரையை எழுத தொடங்குவதை தாமதப் படுத்தியிருக்கலாம். இந்த கட்டுரை நம் சமூகத்தின் மீதான வெறுப்பாக அல்லாமல் நம் சமூகத்தின் அறியாமையை போக்கும் ஒளியாக இருக்க வேண்டும் என்கிற கவனமும் கூட என்னை கொஞ்சம் அதிகம் நேரம் எடுத்துகொள்ளச் செய்தது.

ஏன் இத்தனை கோபம்?

நீங்களும் நானும் சிரித்து பேசிப் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் என்னிடம் வந்து, “நீ தான் உசத்தி, உன்னை வச்சு அவன் அவனுக்கு காரியம் சாதிச்சுகிறான்” என்றெல்லாம் சொன்னால், “ஆகா! நம்மள பத்தி பெருமையா சொல்றார் ” என்கிற பெருமிதத்திற்கு இடம் தராமல் அப்படி பேசுகிறவர் மீது எனக்கு கோபம் வர வேண்டும்.ஆனால், நமக்கு அப்படி கோபம் வருகிறதில்லை.

ஆடுகளுக்கு இடையிலான சண்டையில் நடுநிலைமை வகிப்பதாக ரத்தம் குடிக்கும் நரிகளின் வேலையை தொன்றுதொட்டு செய்து வரும் கட்சி ஒன்று, இன்னமும் கூட, “அந்த ஆடு முட்டி தான் உனக்கு இத்தனை காயம்” என்று ஆட்டு மந்தைகளாக இருக்கும் நம்மை நம்ப வைத்துக்கொண்டிருக்கின்றது. நாமும் சக ஆடுகளின் மீது தான் கோபம் கொள்கிறோம்

படிக்காத தற்குறிகளாயினும் அரசியல்வாதிகள் நரிகளாகவே தான் இருந்துகொண்டு இருக்கின்றார்கள். படித்த தற்குறிகளான நீங்களும் நானும் இன்னும் மந்தை ஆடுகளாகவே தான் இருந்துகொண்டு இருக்கின்றோம். நம்முடைய கோபம் நரிகளின் மீது திரும்பவதேயில்லை.

ஒரு அரசியல்வாதி வந்து நம்மிடம் இந்த அரசாங்கம் வரியை உயர்த்தி மக்களின் சுமையை அதிகரித்து இருக்கிறது என்றதும் நாமும் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்கிறோம்.ஆட்சியில் இருக்கும் கட்சியை தூக்கி எறிகிறோம் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருகிறது மீண்டும் அதே காட்சிகள் அரங்கேறுகிறது.மீண்டும் ஆட்சியில் இருக்கும் கட்சியை தூக்கி எறிந்துவிட்டு எதிர்க்கட்சியை ஆட்சியில் அமர்த்துகிறோம். நாம் இந்த சுழலில் மாட்டிக்கொண்டுள்ளோம். இதில் இருந்து எப்படி வெளிவருவது?

அதற்கு நம் சிந்தனைகள் மாற வேண்டும். அரசியல் மீதான நம் அணுகுமுறை மாற வேண்டும். எதார்த்தத்தில் என்னவெல்லாம் செய்தால் மாற்றம் சாத்தியப்படுமோ அதைச் செய்ய வேண்டும்.

தேசிய அளவில் காங்கிரஸ் பாஜக தவிர்த்து ஒரு மாற்றுக்கட்சி உருவாகி, ஒரு பத்து மாதத்தில் வளர்ந்துவிட முடியுமா? என்னைப் போன்றவர்களாலோ உங்களைப் போன்றவர்களாலோ அதை சாத்தியப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியாது.

என்ன செய்ய முடியும்? சிந்தனையில் அணுகுமுறையில் எண்ணங்களில் முதலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாற்றம் இன்னும் நூறாண்டுகளுக்கு சாத்தியப்படாது என்கிற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். நம்முடைய demands என்ன என்பதை சரியாக எடுத்துவைப்பதற்கு பிரச்சனைகளை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

சிந்தனை மாற்றம் என்றால் என்ன?

ஒரு வெள்ளை நரி மைக்கை எடுத்துக்கொண்டு வந்து தமிழக மக்களின் நிதியில் தான் வடமாநிலங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்பது போன்ற கருத்தை உங்கள் ஆழ் மனதில் பதிப்பதற்கெனவே தமிழகத்தில் இருந்து செல்லும் வரிப்பணத்தில் மத்திய அரசாங்கம் ஒரு ரூபாய்க்கு 28 பைசா மட்டுமே தான் திருப்பி தருகிறது என்றவுடன். நாம் பெருமிதத்தில் மிதக்கிறோம். வட மாநிலங்கள் எல்லாம் நம்முடைய உழைப்பில் மட்டுமே தான் வாழ்வது போன்ற கர்வம் நம்மை பற்றிக்கொள்கிறது.

இந்த கருத்து, உண்மைகளை கொண்டு பொய்களை நிறுவும் ஏமாற்றும் உண்மை.

அரசியல் கட்சிகளை நீக்கிவிட்டு நிர்வாக அரசியலை அணுகினால் மட்டுமே தான். எது பிரச்சனை? என்ன பிரச்சனை என்பதையே நாம் புரிந்துகொள்வோம்.

ஆனால்,உணர்ச்சிகளுக்கு இரையாகும் நாமோ,நரம்புகள் புடைக்க பேசும் சீமான் பின்னால் பத்து பேர், தமிழகம் ஏமாற்றப்படுகிறது என்று நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் திமுக பின்னால் பத்து பேர் என்று அணி அணியாய் பிரிந்து கிடக்கின்றோம். தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்கிற கோஷத்தை தனக்கு அதிகார பகிர்வு கிடைத்தகாத போதெல்லாம் திமுக கையில் எடுத்திருக்கிறது. இந்தியாவில் பிரிவினை கோஷங்களுக்கு தங்க முலாம் பூசி விற்பனை செய்யும் வேலையை எப்போதும் திமுக செய்து கொண்டே தான் இருக்கின்றது.

ஒரு நாடாக; ஒரு சந்தையாக; ஒரு குடியரசாக இயங்கி கொண்டிருக்கும் இந்தியா, ‘தமிழகத்தை ஏமாற்றுகிறது’ என்கிற கோஷம் நமக்கு எத்தனை பெரிய கோபத்தை ஏற்படுத்த வேண்டும்! இத்தனை காலத்தில் அந்த கோபக்கனலில் அந்த கோஷங்களும் அதை ஏற்படுத்தியவர்களும் சாம்பல் ஆகியிருக்க வேண்டாம்?

நம்முடைய புரிதலும் தெளிவும் சில விஷயங்களில் தீர்க்கமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லாமல் இருந்தாலும் கூட எல்லோரும் ஒன்றாகவே தான் முன்னேறுகிறோம். ஒரு சந்தையாக ஒரு குடியரசாக இருக்கும் இந்தியா மட்டும் இல்லை மொத்த உலக சமூகத்திற்கும் இது பொருந்தும்.

சூரிய குடும்பத்தில் வியாழன் இல்லாவிடில், மற்ற கோள்கள் சிதறி போகலாம். பூமியில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு வியாழனும் கூட மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஏதோ ஒரு நாட்டில், போர் நடந்தால், கூடுமான வரையில் அது உலக பொருளாதாரத்தை பாதிக்கிறது. everyone one of us are connected in the way we are not aware of.

சரி! வரி பகிர்மானத்தில் என்ன நடக்கிறது? மாநிலங்களோடு பகிர்ந்த கொள்ள கூடிய மத்திய அரசாங்கத்தின் வரியில். அதாவது மத்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தில் 41% சதவீதத்தை மாநிலங்களுக்கு எப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை பொருளாதார கமிஷன் முடிவு செய்யும். வரி பகிர்மானத்தில் எந்த மாநிலத்திற்கு எத்தனை சதவீதம் ஒதுக்கப் பட வேண்டும் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ள கூடிய இந்த 41 சதவீத வரிவருமானத்தில் அதிகமான பங்கு, அதிக மக்கள் தொகையை கொண்ட,  ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களுக்கு கிடைக்கிறது. இப்படியான ஏற்பாட்டின் நோக்கம் இந்தியா எனும் ஒரு சந்தையில் ஒரு சமநிலையை உருவாக்குவதும். ஒரு தேசமாய் இந்தியாவில் இருக்கும் பொருளாதார வேறுபாடுகளை களைவதுமே ஆகும்.

நான் வேகமாக முன்னேறிவிட்டேன் உன்னை யாரு அப்படியே இருக்க சொன்னா என்று கேட்பீர்களானானால், நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் ஒரே வீட்டில் வளரும் பிள்ளைகள் கூட ஒரே மாதிரியாக வளர்வதில்லை. காரணம் ஒவ்வொரு பிள்ளைகளும் வெவ்வேறு சூழல்களையும் வெவ்வேறு சவால்களையும் சந்திக்கிறது. அது போலவே தான் எல்லா மாநிலங்களுக்குமான சவால்களும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை.

மத்திய அரசின் வரி வருமானத்தில் மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளும் இந்த 41% சதவீதத்தில் வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது ஒரு சமநிலையை ஏற்படுத்தவே தான். “அப்ப, ஒப்பீட்டளவில் முன்னேறிவிட்ட மாநிலங்களும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களும் இளிச்சவாயர்களா?” நிச்சயமாக இல்லை.

வரி வருமானத்தையும் மற்ற வருமானங்களை சேர்த்த மத்திய அரசின் மொத்த நிதியில் இருந்து, வருவாய் பற்றாக்குறை மானியம் என்று ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. அது மாநிலங்களின் வருவாய்க்கும் செலவிற்கும் உள்ள இடைவெளியை குறைக்க மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி. வரி பகிர்மானத்தில் அதிக பங்கை பெறும் சில மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம்9revenue deficit grant) கிடைப்பதேயில்லை.

இது அல்லாமல், எல்லா மாநிலத்திற்கும் பொதுவாக மத்திய அரசின் கீழ் இயங்கும் சேவைகள் அதற்கான செலவினங்கள். அதோடு தமிழ்நாடு மின்வாரியம் மத்திய மின்பகிர்மான கழகமான பவர் க்ரிட்க்கு செலுத்த வேண்டிய 21399 கோடி எல்லாம் சேர்த்து கணக்கீட்டால் இங்கே எந்த மாநிலமும் எந்த மாநிலத்திற்கும் பிச்சை இடவில்லை என்பதும் எந்த மாநிலமும் எந்த அரசாங்கத்தாலும் வஞ்சிக்கப் படவில்லை என்பதும் புலப்படும்.

இங்கு யாரும் தனித்து இயங்க முடியாது. எல்லாரும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டு இருக்கின்றோம். இதை எதையும் பேசாமல், மேம்போக்காக ஒருவன் வந்து, “நாம ஒரு ரூபாய் கொடுத்த அவைங்க 28 பைசா தான் தாராய்ங்க” என்று பேசுகிறான் என்றால், அவன் நம்மை எத்தனை முட்டாளாக நினைத்துக்கொண்டிருக்கின்றான்!?

வல்லுநர்களை கொண்ட, அரசியல் அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கமிஷனின் பரிந்துரைகளில் மாற்றுக்கருத்து இருந்தால் அதை ஆரோக்கியமான முறையில் சரியான இடத்தில் எடுத்து பேசுவதற்கே தான் நாம் பிரதிநிகளை தேர்ந்தெடுக்கின்றோம். அவைகள் என்ன செய்கிறது? என்ன செய்ய வேண்டுமோ அதை விட்டுவிட்டு நம்மிடம் வந்து கதை அளந்து கொண்டிருக்கிறது.

மிக முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மத்திய அரசாங்கம் என்பது உதவாக்கரைகளாக நாம் அனுப்பிக்கொண்டிருக்கும் மாநில கட்சியின் 39 உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அமைப்பு தான். ஒவ்வொரு நாடாளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசின் அங்கம் தான். மத்திய அரசையும் தேசிய கட்சிகளையும் ஏன் இந்தியர்கள் என்கிற உணர்வையும் கூட நமக்கு அந்நிய படுத்திவிட்டார்கள் இந்த பாதகர்கள்.அதனால், நாம் இந்தியா, மத்திய அரசாங்கம் தேசிய கட்சி என்பதையெல்லாம் ஏலியன் என்று நினைக்க பழகிவிட்டோம்.

நாம் அரசியல்வாதிகளின் மேம்போக்கான கதைகளுக்கு இடம் தராமல் இருக்க வேண்டும். அதற்கு நாம் நிர்வாக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸோ பாஜகவோ, தமிழர்கள் தேசிய கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்க வேண்டும். இரண்டுமே நல்ல கட்சி இல்லை என்பீர்கள் என்றால். நீங்கள் அந்த கட்சிகளில் சேருங்கள். உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். கூடுமான வரையில் நாடாளுமன்ற தேர்தல் களத்திலேனும் தமிழகம் தேசிய கட்சிகளின் பக்கம் திரும்ப வேண்டும்.

தேசிய அளவிலான அரசியலில் நேபோட்டிசம் தலைகாண்பித்தாலும் தலை தூக்கவில்லை. செல்வாக்கு உள்ளவர்களாலும் கட்சி தொடங்கி தொடர்ந்து நடத்தமுடியாத அரசியல் சூழலில், எல்லாருக்குமான வாய்ப்பை தேசிய கட்சிகளால் தான் கொடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர கைகளில் இருக்கும் வாய்ப்பைத் தான் பற்றிக்கொள்ளவே வேண்டுமே தவிர இல்லாத வாய்ப்பை வானத்தில் தேடிக்கொண்டிருக்க கூடாது.

தலைப்புக்கு வருகிறேன். அரசியல்வாதிகளின் வன்ம வாந்திகளை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டு, “எல்லாத்துக்கும் வரி என் வரி ல வடக்கன் வாழுறான் மூக்கன் வாழுறான்” என்று யாரேனும் உங்கள் அருகில் மூக்கு சிந்திக்கொண்டிருப்பார்கள் என்றால் அவர்களிடம் இந்த கதையைச் சொல்லுங்கள்.

விவசாயம் மட்டுமே நடந்து கொண்டிருந்த கிராமத்திற்கு, பெரியவர் ஒருவர் ஒரு பணமூட்டையுடன் வருகிறார். அவர் அந்த கிராமத்தில் ஒரு பள்ளியை நிறுவுகிறார், சாலைகளை அமைக்கிறார். அந்த பெரியவரின் முதலீட்டால் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் அவர் மனைவிக்கும் வேலை கிடைக்கிறது. அவர்கள் பிள்ளைகள் அதே பள்ளியில் இலவசமாக படிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து உயர்ந்த நிலைக்கு வந்ததும் அந்த கிராமத்திற்கு பண மூட்டையுடன் வந்த பெரியவர், “இன்னிக்கு இவ்வளவு சம்பாரிக்கிறீங்களே தம்பி கொஞ்சம் நிதி கொடுங்கள், கிராமத்தின் தேவைகள் அதிகரித்துவிட்டது” என்கிறார். அவர் தொடங்கிய இலவச பள்ளியின் மூலம் வேலைவாய்ப்பையும் கல்வியையும் பெற்ற குடும்பத்தில் இருந்து வந்த அந்த குழந்தைகள், “வாயா! உனக்கு கொடுக்கிறதுக்கு தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோமா? இந்த கிராமத்தில் என்ன இருக்கிறது ” என்று நொட்டை சொல்லி சலித்துக்கொள்வது எத்தனை அநியாயமோ அத்தனை அநியாயமானது தான் வரிகளுக்கு எதிரான சமூகத்தின் மனநிலை.

அந்த பெரியவர் தான் அரசாங்கம் என்னும் அமைப்பு. அவர் கொண்டு வந்த பணமூட்டை வரி கடன் சமூகத்தின் உழைப்பு எல்லாவற்றையும் அடக்கிய பொது நிதி.இன்று நாம் எத்தனை லட்சங்கள் ஈட்டினாலும் அத்தனை லட்சங்களுக்கு பின், சமூகத்தில் கடைசி நிலையில் இருக்கும் யாரோ ஒருவரும் கூட அந்த லட்சங்களை நாம் சம்பாரிக்க காரணமாக இருக்கின்றார் என்பதை நாம் தீர்மானமாக நம்ப வேண்டும்.நீங்கள் நம்ப மறுத்தாலும் அதுவே தான் நிஜம்.

உலகப்போர்கள் முடிவுற்ற பின் எல்லா நாடுகளும் ஒரே கோட்டில் இருந்து தங்கள் ஓட்டத்தை ஆரம்பிக்கவில்லை.இந்திய குடியரசானது ஒரு கிராமமாகவே தான் இருந்தது. பொது நிதியில் இருந்தோ பொது பணத்தில் இருந்தோ எழுப்பப்பட்ட பள்ளிகள் தான் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது. எல்லோரையும் கல்விகற்கச் செய்தது. இங்கே நாம் பொது நிதி என்று குறிப்பிட்டது இந்தியர்களுக்கு பொதுவான நிதி. நான் எல்லாம் மெட்ரிகுலேஷனில் காசு கொடுத்து படித்தேன் என்று வராதீர்கள். முதல் தலைமுறை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்களாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து தான் இந்த பாரத சமூகம் வளர்ந்து வருகிறது.
அதோடு வளர்ச்சி என்பது பயணத்தின் இலக்கு அல்ல வளர்ச்சி என்பது பயணம். தன்னளவில் ஒரு மூன்று தலைமுறைகளில் நம் குடும்பங்கள் எத்தனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சிந்தியுங்கள் அது தான் இந்தியாவின் வளர்ச்சியும் கூட. எதிர் கட்சி என்று ஒன்று எப்போதும் இல்லாமல் இருந்திருந்தால் அல்லது ஒரு நல்ல எதிர்க்கட்சி எப்போதும் இருந்திருந்தால் இந்த வளர்ச்சி இன்னும் வேகமாக கூட இருந்திருக்கும். ஆனால், நமக்கு வாய்த்த எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை பின்னோக்கி இழுப்பதாகவே தான் எப்போதும் இருக்கின்றது. “உன் காச புடுங்கி அவனுக்கு கொடுக்கிறாங்க” என்பது போன்ற கீழ்த்தரமான எண்ணங்களை விதைக்கும் கட்சிகளை வளர்த்துவிட்டது நம் பாவம்.

இன்று நான் மின்சார துறையில் ஒரு பெரிய நிறுவனத்தில்  வேலை பார்க்கிறேன் என்றால், எங்கோ யாரோ ஒருவருக்கு கிடைக்கும் இலவச மின்சாரம் அதற்கு காரணமாக இருக்கலாம்.அது தான் demand ஐ உருவாக்குகிறது. மின்சார கட்டணம் கட்ட முடித்தவர்களுக்கு மட்டும் தான் மின்சாரம் என்று இருந்திருந்தால் டிமாண்ட் எப்படி ஏற்பட்டு இருக்கும்.அந்த துறை எப்படி வளரும்!இல்லாதவர்களுக்கு கொடுக்கும் மானியங்கள் தான் இருப்பவர்களையும் சேர்த்து வளர்க்க்கிறது.மாநிலங்களுக்கு இடையிலான வரிப்பகிர்மானத்தின் அடிப்படை அது தான்.

இல்லாதவர்களோ இருப்பவர்களோ வளர்ந்த பின் இந்த சமூகத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய நிலுவை கடன் தான் வரி, அதை சலிப்பில்லாமல் நன்றியுடன் ஒவ்வொரும் செலுத்த வேண்டும்.

கார்பொரேட்களுக்கு அள்ளி கொடுக்கிறார்கள் என்று வராதீர்கள். பெரும் முதலீடுகள் தான் பெரும் வளர்ச்சியை சாத்தியமாகிறது.பெரும் முதலீடுகள், ஒரு நிறுவனத்திற்கோ தனிநம்பருக்கோ பெரும் ஆதாயம் தரும் அதே வேளையில் அதைவிட பெரிய ஆதாயத்தை சமூகத்திற்கு தந்து கொண்டு தான் இருக்கின்றது. லட்சங்களில் சம்பளம் வேண்டும் என்றால் அங்கே ஒரு பெரிய கார்போரேட்டின் முதலீடு தேவைப்படுகிறது.

நிர்வாக ரீதியில் வரிவிதிப்பு முறைகளில் மாறுதல்கள் இருந்து கொண்டே இருக்கிறது.அது இன்னும் எப்படியெல்லாம் மேம்பட வேண்டும் என்பதை எப்போதும் ஆலோசிக்கலாம். பொத்தாம் பொதுவாக இது தப்பு அது தப்பு எல்லாம் தப்பு என்று பேசுவது அறிவார்ந்த சமூகத்திற்கு அழகல்ல.

 

அரசியல்வாதிகள் இந்த வரிப்பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டும்  தனியாக பேசப்பட வேண்டிய வேறொரு தலைப்பு.நம்மிடம் இருக்கும் வாய்ப்புகளை கொண்டே அதையும் எப்படி சரி செய்யலாம் என்பதை நாம் சிந்திக்கலாம் விவாதிக்கலாம்.அதற்கெல்லாம் முன்னதாக,அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதும் அரசாங்கம் எப்படி இயங்குகிறது என்பதும் முற்றிலும் வேறு வேறு என்பதை புரிந்துகொண்டு நாம் அரசியலை அணுக வேண்டும். அதோடு அரசியல்வாதிகளும் இந்த சமூகத்தில் இருந்து தான் வருகிறார்கள் என்பதும் அவர்களை அரசியலில் நிலைத்திருக்க செய்வதும் உங்களையும் என்னையும் அடக்கிய இந்த சமூகம் தான் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பிரிவினை கோஷங்களுக்கு தங்க முலாம் பூசிக்கொண்டு வருபவர்களை நாம் நம் தெளிந்த எண்ணங்களையும் அணுகுமுறையும் கொண்டு நசுக்கி பொசுக்க வேண்டும்.இந்த கோபமாகவே வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *